Showing posts with label விழுதுகள். Show all posts
Showing posts with label விழுதுகள். Show all posts

Thursday, June 27, 2013

விழுதுகள்

விழுதுகள்(http://vizhudugal.org/) அமைப்பை, நண்பர்கள் இணைந்து 2008 ஆம் ஆண்டு ஆரம்பித்தோம். கடந்த வருடங்களில் எங்களுக்கு ஊக்கமும், உறுதியும் அளித்து வரும் எங்கள் நண்பர்களுக்கு அன்பு நன்றிகள்.

எங்கள் விழுதுகள் அமைப்பை பற்றி எனது பதிவுகள்;
 விழுதுகள் - நனவாகியதொரு கனவு
ஒரு விருது

இந்த வருடத்தில் நாங்கள் கீழ்க்கண்ட கிராமங்களில் எங்கள் மாலை நேர வகுப்பை எடுத்து வருகிறோம்.

1. மாரம்பாளையம்
2. மாதம்பாளையம்
3. கள்ளிபாளையம்
4. ஜெ. ஜெ. நகர்
5. நேரு நகர்
6. எம். கவுண்டம்பாளையம்
7. பெரிய கொமாரபாளையம்

இந்த ஏழு மையங்களும், பு. புளியம்பட்டியை ஒட்டியுள்ள கிராமப்புற பகுதிகள். இன்னும் இரண்டு மூன்று ஊர்களில் மையங்களை ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம். இறையருளும், நண்பர்களின் ஆதரவும் எங்களை வழி நடத்திச் செல்லும்.

சில புகைப்படங்கள்:


   (புத்தக விழாவில்.. )

   (மாரம்பாளையம் மாணவர்களுடன்...)

    (நீலிபாளையம் மாணவர்களுடன்.. )

   (ஒருநாள் சுற்றுலாவில்.. பவானிசாகர் அணை)

   (சென்னையில் நடைபெற்ற விழாவில் ஆளுநருடன்...) 




Thursday, August 16, 2012

சுதந்திர தினம் - விழுதுகள்

எங்கள் விழுதுகள் அமைப்பு பற்றி ஏற்கனவே இந்தப் பதிவுகளில் எழுதியிருக்கிறேன். 

சுதந்திர தினமான நேற்று, விழுதுகள் மையங்களில் சிறப்பாக கொண்டாடினோம். அனைத்து மையங்களிலும் விழா நடத்த முடியாது என்பதால், கள்ளிப்பாளையம், ஜெ.ஜெ நகர் மற்றும் எம். கவுண்டம்பாளையம் ஆகிய மையங்கள் இணைந்து விழாவை, எம். கவுண்டம்பாளையம் பள்ளி அரங்கில் நடத்தினோம்.

விளையாட்டு, நாடகம், நடனம், பேச்சு என மாணவர்கள் அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பாக பங்கேற்றார்கள். சளைக்காமல் அவர்கள் பங்கேற்று பெற்ற மகிழ்ச்சி என்பதோடு அல்லாமல், எங்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டார்கள் எங்கள் மாணவர்கள்.

அங்கு எடுத்த புகைப்படங்கள்:










Saturday, July 21, 2012

பாலாஜி: வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி - இரண்டாம் பரிசு - தி ஹிந்து நாளிதழ்

பாலாஜியின் அறிவியல் முயற்சிகளைப் பற்றி எனது பதிவுகளில் நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.  அந்தப் பதிவுகள்;
ஓர் இளம் விஞ்ஞானி
பாலாஜியின் இன்னுமொரு முயற்சி

நேற்று(20/07/2012), புதிய தலைமுறையின் 'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி - 2012' கோவையில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில்,  பாலாஜி தனது கண்டுபிடிப்பான 'Eco Bike'-கை  இடம்பெறச் செய்திருந்தான். அவனின் முயற்சிக்கு கிடைத்த பலனாக, பாலாஜியின் கண்டுபிடிப்பு இரண்டாம் பரிசு பெற்றுள்ளது.  அதைப் பற்றிய செய்திக் குறிப்பு தி ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ளது.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article3664437.ece



பாலாஜியின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் பாலாஜியின் பெற்றோருக்கு எங்களின் நன்றிகள். 


Thursday, May 24, 2012

பாலாஜியின் இன்னுமொரு முயற்சி

மாணவன் பாலாஜியின் அறிவியல் ஆர்வத்தையும், அவனின் முயற்சியால் கண்டுபிடித்த சில கருவிகளைப் பற்றியும் 'ஓர் இளம் விஞ்ஞானி' என்கிற தலைப்பில் எழுதி இருந்தேன். ஆனந்த விகடனின் என் விகடனில் வெளியான வலையோசையில் பாலாஜியைப் பற்றிய இந்தப் பதிவும் இடம் பிடித்திருந்தது.

ஆனந்த விகடனில் வெளியான செய்தியை பாலாஜியுடன் பகிர்ந்து கொண்ட பொழுது, இந்த வாரத்தில் சோலார் உதவியுடன் இயங்கும் கார் ஒன்றை இப்பொழுது செய்திருப்பதாகவும், அவசியம் அதைப் பார்க்க வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தான். எனவே, நாங்கள் போன ஞாயிறு அன்று பாலாஜியின் வீட்டுக்குச் சென்றோம்.


சின்ன கார் பொம்மையில் ஏற்கனவே இருந்த பேட்டரியைக் கழட்டிவிட்டு, சோலார் பேனல் பொருத்தி, சூரிய ஒளியுடன் இயங்குமாறு மாற்றியுள்ளான் பாலாஜி. அவன் கையில் இருந்த ரிமோட்டில் கார் அங்குமிங்கும் அழகாகத் திரும்பியது. சின்ன குழந்தைகள் உட்காரும் கார் என்பதால் குழந்தைகள் போட்டி போட்டுக் கொண்டு காரை ஒட்டினர்.

மின்சாரத் தட்டுப்பாடு நிலவி வரும் இப்பொழுது, மாற்று சக்திகளை பயன்படுத்தும் பாலாஜியின் திறமை வியக்க வைக்கிறது. பாலாஜியின் அனைத்து முயற்சிகளுக்கும் தோள் கொடுக்கும் பெற்றோர், சகோதரன் என அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.



வருங்காலத்தில் பாலாஜி போன்ற மாணவர்களே இந்த உலகை மாற்றப் போகிறவர்கள். 

பாலாஜிக்கு எங்களின் நல்வாழ்த்துக்கள்.

Monday, May 9, 2011

ஓர் இளம் விஞ்ஞானி

போன வாரத்தில் ஒரு நாள் பாலாஜி என்னும் சிறுவன் சில அறிவியல் கருவிகளைக் கண்டுபிடித்து, அதற்கு பரிசுகள் பெற்றுள்ளதாகவும், அந்த சிறுவனுக்கு சில உதவிகள் தேவைப் படுவதாகவும், நேரம் இருக்கும்போது நேரில் அவனைச் சந்திக்க வாருங்கள் என்றார்கள் நண்பர் ஒருவர். அன்று மாலையே நானும், கமலக்கண்ணனும் அப்பையனின் வீட்டுக்குப் புறப்பட்டோம்.

கோவை அருகிலுள்ள, அன்னூரில் இருந்து தென்னம்பாளையம் செல்லும் வழியில் வாகரயாம்பாளையம் என்னும் சிறு ஊரில் இருக்கிறது பாலாஜியின் வீடு. அப்பாவுக்கு நெசவுத் தொழில். பாலாஜி ஒன்பதாம் வகுப்பும், அவனின் தம்பி ஹரிஹரன் எட்டாம் வகுப்பும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அவர்கள் வீட்டுக்குப் போனதும், அவன் வாங்கிய சான்றிதழ்கள், கேடயங்களைக் கொண்டு வந்து காண்பித்தான் பாலாஜி.

நாங்கள் வருகிறோம் என்று தகவல் சொல்லியிருந்ததால் ஓரத்தில் ஒரு ஸ்டூலின் மீது, ஒரு கருவி மாதிரி வைத்திருந்தான். அதைப் பற்றி பேச ஆரம்பித்தான்.


(தம்பி ஹரிஹரனுடன், பாலாஜி - கருவியைப் பற்றி விளக்குகிறான்)

"இதுக்கு பெயர் கார்பநேட்டர். அதாவது தமிழில் புகைநீக்கி, இதைப் பயன்படுத்தி நாம் காற்றில் கலந்துள்ள மாசுவைக் குறைக்கலாம். புவி வெப்ப மயமாதலைக் குறைக்க முடியும். கார்பநேட்டர் என்பது கார்பன்-டை-ஆக்சிடை(CO2) சோடியம் ஹைற்றாக்சைடின் (NaOH) உதவியுடன் சோடியம்-பை-கார்பனேட் (NaCO3)ஆக மாற்றும் கருவியாகும்.

இதன் அமைப்பு ஆங்கில எழுத்தாகிய T -ஐ தலைகீழாக கவிழ்த்த வடிவமாகும். இதன் மேல் உள்ள புனல் மூலம் NaoH-ஐ ஊற்றும்போது, CO2-வை கரைத்து NaCO3 ஆக மாறுகிறது. இதனை நாம் குளிர்வித்து வெளிக்காற்றின் மூலம் CO2 ஐ தனியாக பிரித்து -72 C ல் குளிர்ரூட்டும் போது நமக்கு உலர் பனிக்கட்டி கிடைக்கிறது. இதனை நாம் கடலுக்கு அடியில் செலுத்த வேண்டும். இது கடல் நீரில் கரையாது.

இதன் மூலம் காற்று மாசுபடுதல் குறைகிறது. புவி வெப்ப மயமாதல் குறைகிறது." என்று கூறி முடித்தான். இந்த மாடலுக்கு, ஒரு கல்லூரியில் நடந்த அறிவியல் விழாவில் "பெஸ்ட் மாடல்" விருது கிடைத்திருப்பதாக கூறினான்.



எங்களுக்கு மிகவும் ஆச்சரியம், இவ்வளவு சிறு வயதில் எப்படியெல்லாம் அறிவியலைப் புரிந்து கொண்டிருக்கிறான் என்று. தம்பி ஹரிஹரனும் அவ்வபொழுது அவனுக்கு உதவி செய்கிறான் என்றும் கூறினான். இருவரும் அதே ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.


பாலாஜியின் அப்பாவும், அம்மாவும் கூறும்பொழுது "எங்களுக்கு இவர்கள் சொல்வது, செய்வது ஒன்றும் புரிவதில்லை. அதைப் புரிந்து கொள்ளுமளவு கல்வியும் எங்களுக்கு இல்லை. நிறைய பரிசும், சான்றிதழ்களும் வாங்கியிருக்கிறான். இந்த நெசவுத் தொழிலை வைத்துக்கொண்டு இவனுக்கு தேவைப்படும் கருவிகளையோ, அல்லது மற்ற புத்தகங்களையோ எங்கு கிடைக்கும் என்பது கூட எங்களுக்குத் தெரியாது. சில சமயங்களில், ப்ரொவ்சிங் சென்டருக்குப் போய் இவனே நெட்டில் தேடி விசயங்களைப் புரிந்து கொள்வான். இப்ப கூடப் பாருங்க, சோலார் கார் மாடல் செய்ய வேண்டும் என்கிறான். அந்தப் பொருட்களை எல்லாம் எங்கு வாங்குவது, அதற்குத் தேவையான பணம் என நிறைய பிரச்சினைகள்" என்றார்கள்.

"என்ன பாலாஜி, சோலார் மாடல் செய்ய போறாயா?" என்றோம்.

"ஆமாங்க சார்" என்றான்.

"சரி. .அதுக்கு என்ன என்ன வேணும்னு தெரியுமா.. ?" என்று கேட்டதும், பாலாஜியின் அம்மா "அதெல்லாம் எழுதி வெச்சிருக்காங்க. பாலாஜி அத எடுத்துட்டு வா" என்றதும்.. ஒரு தாளை எங்கள் முன் நீட்டினான்.



12v சோலார் பேனல்
2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வீல்
12v பாட்டரி
காரின் தளம்
Driller
ஸ்பீடோ மீட்டர்
வோல்டேஜ் மீட்டர்
ஸ்டீரிங் செட்
Headlights, Indicators, Wire, Switches.

இவற்றில் எதுவும் புதிதாக கூட வேண்டாம். ஏற்கனவே உபயோகப் படுத்தியது, Second Hand என்றாலும் எனக்கு அது போதுமென்கிறான் பாலாஜி. மேற்கண்ட உபகரணங்கள் கிடைத்தால் பள்ளி விடுமுறையில் செய்து முடித்துவிடுவேன் என்றும் சொன்னான்.

"சரிப்பா.. நாங்கள், எங்களின் நண்பர்களிடம் கேட்டுப் பார்க்கிறோம்.. விரைவில் திரும்ப வருகிறோம்" என்று விடைகூறிப் புறப்பட்டோம். கிளம்பும்போது.. "பசங்க என்ன என்னமோ செய்யுறாங்க.. எல்லோரும் பாராட்டுறாங்க.. ஆனா, அவங்க வேணும்னு சொல்லுறத வாங்கிக் கொடுக்க கூட எங்களால முடியறதில்ல" என்று வருத்தப்பட்டார்கள் பாலாஜியின் அம்மாவும், அப்பாவும். "கவலைப்படாமல் இருங்கள்.." என்று சொல்லிவிட்டு நாங்கள் விடை பெற்றோம்.

சினிமா, விளையாட்டு, டிவி என பொழுதுபோக்கும் மாணவர்களுக்கு மத்தியில், அறிவியல் மீது ஆர்வம் கொண்ட சில மாணவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் ஆர்வத்துக்கு தீனி போட, சரியான வழிகாட்டுதல்கள் இல்லை.

அன்பு நண்பர்களே,
உங்களால் இந்த மாணவனுக்கு உதவ முடிந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்,
மேற்கண்ட உபகரணங்கள் உங்களிடம் உபயோகப் படுத்தாமல் இருந்தால் உதவுங்கள்,
அறிவியல் துறையில் நீங்கள் இயங்கிக் கொண்டிருந்தால், உங்களின் எண்ணங்களை இம்மாணவனுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி.

விழுதுகள்
29 , மறைமலை அடிகள் வீதி,
புன்செய் புளியம்பட்டி,
ஈரோடு மாவட்டம்.

கமலக் கண்ணன் - 75021 97899
இளங்கோ - 98431 70925


Thursday, March 17, 2011

ஒரு விருது


விழுதுகள் அமைப்பின் சிறந்த நிகழ்வுகளில் இன்னுமொரு நிகழ்வாக, கடந்த சனிக்கிழமை(12/03/2011 ) அன்று சென்னை நாரத கான சபாவில், எங்கள் நண்பன் கமலக்கண்ணனுக்கு, சிறந்த சேவைக்காக, 'மாணவ சேவா தர்ம சம்வர்தினி' யின் 12 - ஆம் ஆண்டு விழாவில் 'சற்குரு ஞானானந்தா நேசனல் அவார்ட்' வழங்கிச் சிறப்பித்திருக்கிறார்கள். இந்த விருதுடன் பத்தாயிரம் ரூபாய் உதவித் தொகையும் வழங்கியிருக்கின்றனர். இந்தியா முழுவதிலும் இருந்து கமலக்கண்ணன் உட்பட நால்வருக்கு மட்டுமே இந்த விருதை அளித்திருக்கின்றனர்.

இவ்விருதைப் பற்றி தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன், கமலக்கண்ணனுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வேளையில், விழுதுகளுக்கு உதவி வரும் அனைத்து நண்பர்களுக்கும் எங்களின் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

(புகைப்படத்தில் பெற்றோருடன் கமலக்கண்ணன்)




Monday, March 7, 2011

மரங்களின் தந்தை


திரு. கதிர் அவர்களின் வலைப்பக்கத்தில், மரங்களின் தந்தை திரு. அய்யாசாமி அவர்களைப் பற்றி எழுதி இருந்தார். நண்பனும் நானும் அவரைச் சந்திக்க சென்றிருந்ததைப் பற்றி இந்தப் பதிவில் மரங்களின் தந்தை - திரு.அய்யாசாமி எழுதி இருந்தேன்.

இன்று அவர் நம்மிடம் இல்லாமலாயிருக்கிறார். அவரின் குடும்பத்துக்கு எங்கள் விழுதுகளின் ஆழந்த இரங்கல்கள்.

(அவர் வளர்த்த மரங்கள் சாலை ஓரத்தில்)

மூவாயிரம் மரங்களுக்கு மேல் தனி மனிதராக வளர்த்திருக்கிறார். சாலைகளிலும், காடுகளிலும் மரங்களை அழித்து மொட்டை அடித்து வரும் சூழலில் மர வளர்ப்பு என்பது எவ்வளவு அரிதான சேவை. அதிலும் எந்த பிரதிபலனும் பாராமல்.

மேலே குறிப்பிட்ட பதிவில் நான் இறுதியில் இப்படி கூறி இருந்தேன்;

அவர் கொடுத்த விருட்சங்களின் விதைகள் என் கால் சட்டைப் பையில் கனமில்லாமல் இருந்தன. எண்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் திரு.அய்யாசாமி அவர்கள் பிரதி பலன் பார்க்காமல் மரங்களை நட்டு வளர்த்துள்ளார். அவர் கொடுத்த இந்த விதைகள் பல்கிப் பெருகி இந்த பூமியெங்கும் பசுமையாய் ஆகட்டும். ஆம், சில நேரங்களில் கனவுகளும் பலிக்கும். விண்ணை நோக்கி வளரும் விருட்சங்களின் விதைகள் என் கையில். சிறு விதைகளில் இருந்து தானே உலகின் அனைத்து மாற்றங்களும் நடக்கின்றன.



அவர் அவ்வளவு மரங்களைப் பாதுகாத்து வளர்த்தெடுத்து மறைந்திருக்கும் பொழுது, ஒரு மரமாவது நாம் வளர்ப்பதுதான் அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் .



Tuesday, November 23, 2010

சிறு துளிகள் (23/11/2010)

பதிவரும் எங்கள் நண்பருமான திரு.பிரகாஷ்(சாமக்கோடங்கி ...) அவர்கள், எங்கள் விழுதுகளின் செயல்பாடுகளில் மிக்க ஆர்வமும், அனைத்து வகைகளிலும் எங்களுக்கு உறுதுணையாக இருப்பவர். அவரிடம் மழைக் காலமாக இருப்பதால் மரங்கள் நட எண்ணியுள்ளோம் எனத் தெரிவித்ததும், நூற்றி ஐம்பது மரக் கன்றுகளை வாங்கித் தந்துள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று அவரும் வந்திருந்து ஆரம்பித்து வைக்க, இந்த வாரம் முழுவதும் அனைத்து மரங்களையும் நட்டு விடுவோம். நண்பர் பிரகாஷுக்கு எங்களின் நன்றிகளும் வணக்கங்களும்.

இடமும் நேரமும் இருப்பவர்கள் இப்பொழுது மரக் கன்றுகளை நட்டால் நன்றாக வளரும். எதைப் போட்டாலும் வளரும் அளவுக்கு மழை பெய்து மண் மிகவும் நெகிழ்வாக இருக்கிறது. மரங்களை நட இதுவே ஏற்ற தருணம்.

*******************************



போன வாரத்தில் ஒரு நாள் மருதமலைக்குச் சென்றோம். காலை நேர அபிஷேக பூஜை நடந்து கொண்டிருந்தது. விசேட நாள் இல்லை என்பதால் கோவிலில் கூட்டம் இல்லாமல் முருகனை நிம்மதியாகப் பார்க்க முடிந்தது. வெளிப் பிரகாரத்தில் என் செல்லில் இருந்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்த பொழுது, வேகவேகமாக வந்த ஒருவர் ரூபாய் பத்துக்கான கட்டணத் தாளை திணித்து, பத்து ரூபாயை பெற்றுக் கொண்டார். எம்பெருமான் முருகன் மயில் மீது ஏறி வந்திருந்தால் கூட அவ்வளவு வேகம் இருக்காது :).





*******************************

ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீபமன்று, வீட்டில் அண்ணாமலையார் வழிபாடு செய்வோம். இந்த வருடமும் கார்த்திகைத் தீபத்தன்று ஏழு வகைப் பொரியல், இனிப்புகள் என விசேடமாக முடிந்தது :).



*******************************
சிட்டுக் குருவிகளும், வண்ணத்துப் பூச்சிகளும் காண முடியாத தூரத்துக்குச் சென்று விட்டது போல கண்ணிலே பார்க்க முடிவதில்லை. மழை பெய்து கொஞ்சம் பூமி குளிர்ந்து இருப்பதால் அவ்வப்பொழுது அங்கங்கே தென்படுகின்றன. ATM வரிசையில் நின்றிருந்த பொழுது ஒரு வண்ணத்துப்பூச்சி என் செல்லில் சிறைப்பட்டது. மழை வாழ்க.






*******************************
எஸ்.எம். எஸ்.

என் செல்லுக்கு வந்த சில குறுஞ்செய்திகள்:

PM finally breaks silence: The only 2G i know is SoniaG and RahulG.. I dont know SpectramG
---------
ஐம்பது ரூபா குடுத்து ஒரு லிட்டர் Fanta குடிச்சு பிரைவேட் கம்பனிக்கு லாபம் தர்றத விட எழுபது ரூபா குடுத்து ஒரு குவார்ட்டர் வாங்கி அடிச்சு கவர்ன்மேன்ட்கு லாபம் தர்றது பெட்டெர்.

எப்படி எல்லாம் யோசிக்கறாங்க :) ?

Friday, September 10, 2010

விழுதுகள் - நனவாகியதொரு கனவு



இரண்டு குழந்தைகள் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. ஆனால் வேறு வேறு வீடுகள். வேறு வேறு சூழ்நிலைகள். ஒரு குழந்தைக்கு அரசுப் பள்ளி. இன்னொரு குழந்தைக்கு தனியார் பள்ளி. தனியார் பள்ளிகளில் படிக்கும் எல்லாக் குழந்தைகளும் பிரகாசிப்பதில்லை. ஆனாலும் அரசுப் பள்ளிகளுடன் ஒப்பிடும் போது நிறைய வேறுபாடுகள். கல்வியின் தரம், ஆசிரியர்களின் கடமை என நிறைய.

அதையெல்லாம் தாண்டி அரசுப் பள்ளிகளில் படித்தாலும் ஒரு சில மாணவர்கள் நன்றாகவே படிக்கிறார்கள். மாநில அளவில் மதிப்பெண்களை அள்ளுகிறார்கள். ஆனால் பல மாணவர்களின் நிலைமை கேள்விக்குறி தான். தொடக்கக் கல்வியிலேயே சரியான வழிகாட்டுதல்கள் இல்லை.

நான் மற்றும் எனது நண்பர்கள் எல்லாரும் அரசுப் பள்ளியில்தான் படித்தோம். எப்படியோ முட்டி மோதி மேலே வந்து விட்டோம். ஆனால் படிப்பை பாதியிலேயே விட்ட என் சக தோழர்கள் இப்பொழுது அதை நினைத்து வருந்திக் கொண்டிருக்கிறார்கள். பெயில் ஆனால், பள்ளி பிடிக்கவில்லை, வேலைக்கு போகச் சொல்கிறார்கள் எனப் பலர் பாதியில் படிப்பை நிறுத்தி விட்டார்கள்.இதற்கு காரணத்தை நாம் உற்று நோக்கினால் அவர்களுக்கு பெரும்பாலும் படிப்பை பிடிப்பதில்லை.

எனது நண்பன் கமலகண்ணன், நான் சென்னையில் தங்கியிருந்தோம். அப்பொழுது கமல் சமூக சேவையில் டிப்ளமோ படித்துக் கொண்டிருந்தான். ரொம்ப நாள் பேசி ஒரு அமைப்பை உருவாக்கினால் என்ன என நினைத்து, இன்னொரு நண்பனான சாரதியைச் சேர்த்து மூவருமாக 'விழுதுகள்' என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தோம்.

அப்படித்தான் நண்பர்கள் இணைந்து விழுதுகள்(http://www.vizhudugal.org) என்ற அமைப்பை எங்களின் ஊரான ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டியில் ஆரம்பித்து இரண்டு வருடங்கள் நிறைந்து விட்டன. எங்கள் விழுதுகள் அமைப்பின் சார்பாக, கிராம புற பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு தினமும் பாடம் எடுத்து வருகின்றோம். பள்ளி பாடங்கள் தவிர, Value based education எனப்படும் தனி திறமைகளை வளர்த்தல், நல்ல பழக்க வழக்கங்களை சொல்லித் தருதல், சேவை மனப்பான்மையை வளர்த்தல், வாரந்தோறும் போட்டிகள் நடத்தி பரிசுகள் அளித்தல் என பணியாற்றி வருகிறோம். ஒவ்வொரு கிராமப் பகுதிகளிலும் ஒரு ஆசிரியரை நியமித்து, ஊரின் பொதுவான இடத்திலோ அல்லது அரசுப் பள்ளியிலோ இந்த மையங்களை நடத்தி வருகின்றோம். இது தவிரவும் கண் சிகிச்சை முகாம் நடத்துதல், மரக் கன்றுகள் நட்டு வைத்தல், கணிப்பொறி பயிற்சி அளித்தல் என பிற துறைகளிலும் பங்காற்றி வருகின்றோம்.

இப்பொழுது நாங்கள் ஏழு மையங்களில் வகுப்புகளை நடத்தி வருகிறோம். ஏழு மையங்களுக்கும் உண்டான செலவுகளை எங்களின் ஒவ்வொரு நண்பரும் ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் இல்லாவிட்டால் நாங்கள் விழுதுகளை வெற்றிகரமாக நடத்த முடியாது. ஒவ்வொருவர் பெயரையும் சொன்னால் நீண்டு விடும். அவர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றி.

பதிவராக எனக்கு அறிமுகமாகி எங்களில் ஒருவராகி விட்ட திரு.பிரகாஷ் (சாமக்கோடங்கி ...) எல்லா விதத்திலும் எங்களுக்கு உதவியாக இருக்கிறார். பல தடவை எங்கள் மையங்களுக்கு வந்து குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை வகுப்புகளை எடுத்திருக்கிறார். அவருக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்.

ஏழு மையங்கள்: காந்தி நகர், நேரு நகர், ஜெ.ஜெ. நகர், மாரம்பளையம், மாதம்பாளையம், கள்ளிப்பாளையம், நல்லகாளிபாளையம்.

வரும் ஞாயிறு அன்று எங்கள் நண்பன் கமலுக்கு திருமணம். அடுத்த நாள் திங்கள் அன்று வரவேற்பு அன்னூர், சிவன் கோவிலில் நடக்கிறது. அனைவரையும் வந்திருந்து வாழ்த்துங்கள் என விழுதுகள் சார்பாக வரவேற்கிறோம்.

சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக;

(இந்தப் புன்னகைதான் எங்களுக்கு உரம்)


(ஜெ.ஜெ. நகர் தொடக்க விழாவில்)

(ஒரு மையத்தில்..)


(நேரு நகர் மையத்தில்)

(நேரு நகர் மையத்தில்)

(ஜெ.ஜெ. நகர் மையத்தில்)



(ஜெ.ஜெ. நகர் மையத்தில்)


(கடந்த சுதந்திர தின விழாவன்று)

Monday, July 26, 2010

மரங்களின் தந்தை - திரு.அய்யாசாமி


புத்தகங்களிலும், வலைத் தளங்களிலும் சுமார் மூவாயிரம் மரங்களை வளர்த்த பெரியவர் திரு.அய்யாசாமி அவர்களைப் பற்றி படிக்கும் பொழுதெல்லாம், இவர் நம் ஊருக்கு பக்கத்தில் இருக்கிறார், போய்ப் பார்க்கவேண்டும் எனத் தோன்றும். அந்த எண்ணம் கடந்த சனிக் கிழமை அன்று நிறைவேறியது.

T.N. பாளையத்தில் நண்பனின் பெண் குழந்தையைப் பார்க்க நானும், நண்பன் கமலக்கண்ணனும் சென்றோம். கிளம்பும் போதே, கமலக் கண்ணன், 'அய்யாசாமி அய்யாவையும் பார்த்துட்டு வந்திரலாம், பக்கத்துலதான் அவர் வீடும் இருக்கு' என்றான். பிறந்த அன்று குழந்தையைப் பார்ப்பதில் உள்ள மகிழ்ச்சியை சொல்லித் தெரியவேண்டியதில்லை. புத்தம் புது மலர் போன்று இருந்த குழந்தையைப் பார்த்து விட்டு திரு.அய்யாசாமி அவர்களுக்கு செல்லில் அழைத்தோம். அவர் செல் அணைத்து வைக்கபட்டிருக்க, ஈரோடு கதிர் அவர்கள், பெரியவரின் பக்கத்துக்கு வீட்டில் குடியிருக்கும் நண்பர் திரு.விஜய் அவர்களின் எண்களைத் தன் வலைப் பக்கங்களில் குறிப்பிட்டிருந்தார். அவருக்கு செல்லில் அழைக்க, வழியைச் சொன்னார். அவருக்கும், ஈரோடு கதிர் அவர்களுக்கும் எங்கள் நன்றிகள்.

ஏலூரில் இருந்து உள்ளே செல்லும் பாதையில், வேட்டுவன் புதூர் என்னும் கிராமத்தில் பெரியவரின் வீடு அமைந்திருந்தது. அழகான கிராமம், நகரத்தின் எந்த ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக இருந்தது. இரண்டு, மூன்று பேரிடம் விசாரித்து வீட்டைக் கண்டுபிடித்த பொழுது நேரம் மாலை ஐந்து மணி ஆகியிருந்தது. அவருக்கு இன்னொரு பெயரும் இருந்தது, அது 'அப்பியா பாளையதுக்காரர்' என்பது. கிராமங்களில், அவரின் சொந்த ஊர் பேரை வைத்து கூப்பிடுவது வழக்கம். எங்கள் கிராமத்தில், இன்னும் 'ஆலாம்பாளையத்து ஆத்தா', 'காவிலிபாளையத்து ஆத்தா' என நிறைய ஆத்தாக்கள் உண்டு.

ஓடுகள் வேய்ந்த ஒரு சிறு வீடாக இருந்தது. எங்களைப் பற்றி அறிமுகம் செய்ததும், 'வாங்க.. உள்ள வாங்க. ' என்று அழைத்தார். அவர் மட்டும்தான் வீட்டில் இருந்தார். கயிறு வேய்ந்த ஒரு கட்டிலில் நாங்கள் அமர்ந்ததும், 'என்ன சாப்பிடுரிங்க' எனக் கேட்டார். ஒன்றும் வேண்டாம், இப்பொழுதுதான் டீ சாப்பிட்டு வந்தோம் என்றதும், சுவரில் மாட்டி இருந்த விருதுகளைப் பற்றியும், நாளிதழ்களிலும், புத்தகங்களிலும் வந்திருந்த செய்திகளைப் பற்றியும் சொல்ல ஆரம்பித்தார்.

பேச்சு நீண்டு கொண்டே சென்றது. 'இப்பொழுது கிராமங்களில் நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தில், மண்ணை அள்ளிக் கொட்டுகிறார்கள். அது செய்ய வேண்டிய வேலைதான், கூடவே ஒரு நாளைக்கு பத்து மரக் கன்றுகளை நட்டு வைத்து வளர்க்க செய்யலாம்' எனச் சொன்னார். அரசாங்கம் செய்யுமா என ஆதங்கத்துடன் கேட்டார்.

இன்னும் விறகு அடுப்பில்தான் சமைத்து கொண்டு இருக்கிறார்கள். ஊரில் மற்றவர்களுக்கெல்லாம் இலவச காஸ் அடுப்பு வந்து விட்டது என்றும், எங்களுக்கு மட்டும் இன்னும் கிடைக்கவில்லை. என்ன காரணம்னு தெரியல என்றார்.

நாங்கள் இந்த வருடம் 'விழுதுகள்' மூலமாக மரக் கன்றுகளை நடத் தீர்மானித்து உள்ளோம் எனக் கூறியதும் சந்தோசத்துடன், 'நல்லா செய்யுங்க.. ஏதோ என்னால முடிஞ்சது.. கொஞ்ச மரங்களை வளர்த்துட்டேன்.. உங்கள மாதிரி நெறைய பேரு வளர்க்கணும்..' எனக் கூறியவர் சில மரங்களின் விதைகளைக் கொடுத்தார்.

வீடுகள் உள்ள பகுதிகளில் மரங்களை வைக்க வேண்டாம் எனச் சொன்னார். வேர் உள்ளே செல்வது ஒரு காரணமாக இருந்தாலும், ஒரு காலத்தில் வெட்டி விடுவோம். அதனால், பள்ளி, கல்லூரி, பள்ளத்து ஓரங்களில் நட்டு வையுங்கள் என்றார்.

நான் கொஞ்சம் வேப்பம் விதைகளை எடுத்து காய வைத்திருந்தேன். எப்படி நட்டு வளர்த்துவது எனத் தெரியவில்லை. அவரிடம் கேட்டதற்கு, 'முதல்ல மண்ணைக் கொத்தி அதுல விதைகளைப் போட்டு.. முளைத்து வந்ததும், கவர்ல எடுத்து வளர்த்துங்க.. அதுக்கு அப்புறம் நல்லா வளரும்' என்றார்.

திரும்பவும் 'என்ன சாப்பிடுரிங்க.. பக்கத்துல போய் எதாவது வாங்கிட்டு வரட்டுமா' எனக் கேட்டார். நாங்கள் 'வேண்டங்கப்பா.. இன்னொரு நாள் வர்றோம்.. நாங்க கெளம்புறோம்.. நீங்க வளர்த்த மரங்களை எங்க பார்க்கலாம்' எனக் கேட்க, வழியைச் சொன்னார். வெளியே வந்தவருடன் சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு விடை பெற்றோம்.

நாங்கள் வண்டியில் ஏறும் சமயம் 'நேரம் ஆயிருச்சு (மணி ஆறு முப்பது ஆகி இருந்தது).. இன்னொரு நாள் அந்த மரங்கள பார்த்துக்கலாம்.. நீங்க வீட்டுக்கு கெளம்புங்க... ' என்றார் ஒரு தந்தையின் பாசத்தோடு. அவரிடம் சரி என்று சொல்லிவிட்டு, மரங்களைப் பார்த்து விட்டுத்தான் வந்தோம்.
(நண்பன் கமலக்கண்ணன் அய்யாவுடன்)

அவர் கொடுத்த விருட்சங்களின் விதைகள் என் கால் சட்டைப் பையில் கனமில்லாமல் இருந்தன. எண்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் திரு.அய்யாசாமி அவர்கள் பிரதி பலன் பார்க்காமல் மரங்களை நட்டு வளர்த்துள்ளார். அவர் கொடுத்த இந்த விதைகள் பல்கிப் பெருகி இந்த பூமியெங்கும் பசுமையாய் ஆகட்டும். ஆம், சில நேரங்களில் கனவுகளும் பலிக்கும். விண்ணை நோக்கி வளரும் விருட்சங்களின் விதைகள் என் கையில். சிறு விதைகளில் இருந்து தானே உலகின் அனைத்து மாற்றங்களும் நடக்கின்றன.

Wednesday, July 14, 2010

மரங்களில்லா வாழ்வு.. ? (ஒரு கேள்விக்குறி)


நாம் இருக்கும் அலுவலகம், வீடு என எல்லாமே ஒரு காலத்தில் மரங்கள் சூழ்ந்த காடுகளாகவும், விவசாய நிலங்களாகவும் இருந்தது தான். அழிக்க மட்டும் முடிந்த நம்மால் ஒரு சிறு மரத்தை நட்டு பாதுகாக்க முடிவதில்லை.

கோவை - மேட்டுப்பாளையம் சாலை அகலப்படுத்தும் பணிக்காக, சாலையின் இருபுறமும் இருந்த புளிய மரங்கள் வெட்டப் பட்டுக் கொண்டிருக்கின்றன. மரமா, மனிதனா என்று கேட்டால் மனிதன் தான் முக்கியம் எனச் சொல்லும் மனிதர்கள் உள்ள இந்த காலத்தில் மரங்கள் அழிவதை எப்படித் தடுக்க முடியும். மரங்களைப் பற்றி யாருக்கு என்ன கவலை, எல்லாவற்றுக்கும் சட்டத்தில் வழி உண்டு.

நண்பர் திரு.பிரகாஷ் அவர்கள் தனது வலைத்தளத்தில் இது பற்றி எழுதியிருந்தார். http://saamakodangi.blogspot.com/2010/07/blog-post.html. அவருக்கு எனது நன்றிகள் பல. அந்த மரங்களுக்கு அருகில் இருந்தவன் என்பதனால் எனக்கு மிக்க வருத்தம்.

எல்லா மரங்களையும் வெட்டி விட்டு சுவாசக் காற்றுக்கு வரிசையில் நிற்க வேண்டி வந்தாலும் வரலாம். நம் சந்ததிகளுக்கு எதை கொடுக்க போகிறோம்?. வாடகைக்கு அறைகள் கட்டும் இடங்களில், கொஞ்சம் மரங்கள் வளர்க்கவும் இடம் ஒதுக்கலாம். ஓங்கி வளர்ந்த அழகு மரங்களை வளர்க்கும் நமது IT நிறுவனங்கள், கொஞ்சம் வேப்ப மரம் போன்றவற்றையும் வளர்க்கலாம்.

இந்த உலகில் இருந்து எவ்வளவோ பெற்று கொண்ட நாம் ஒரு மரத்தை நட்டு வைத்தால் என்ன நண்பர்களே..

நாளை சாலைகள் இருக்கும். அந்த மரங்கள் இருக்காது.
பூமி இருக்கும். சுவாசிக்க காற்றுதான் இருக்காது.



மரத்திற்கு;

தாய், செல்வம் என எப்படி உங்களை அழைப்பது?. தாய் என்றால், என் தாய்க்கும் முன்னால் இருந்து நீங்கள் இருந்தீர்கள். செல்வம் என்றால், உங்களை செல்வம் என எப்படி அழைப்பது, நீங்கள் கொடுத்தது கொடை அல்லவா ?. ஆகையால் நீங்கள் கடவுள்கள்.

கடவுள்களே, நாங்கள் சுவாசிக்க காற்று தந்தீர், கனி தந்தீர், நிழல் தந்தீர், மழை தந்தீர். ஆனால் நாங்களோ, உங்களுக்கு மரணத்தைப் பரிசளிக்கிறோம். எங்களை மன்னியுங்கள். இரக்கமற்ற பாவிகள் நாங்கள்.

போய் வாருங்கள் கடவுள்களே....




குறிப்பு:
எங்கள் விழுதுகள் மூலமாக இந்த வருடம் மரக் கன்றுகளை நட எண்ணியுள்ளோம்.
மேலே இருக்கும் பசுமையான படங்கள் போன வருடம், அதே சாலையில் எடுத்தவை.