Monday, June 28, 2010

யாரையோ...

"டேய் மாப்ள.. என்ன பார்த்து யார்னு கேட்டுட்டாடா" என புலம்பி கொண்டிருந்தான் ராசு ஒரு இரவு நேர பாரில்.

வெளியே எங்காவது போலாம் என நினைத்திருந்த போதுதான், ராசுவின் அழைப்பு மணி என் செல்போனில் ஒலித்தது. மனசு சரியில்லை என்றும், எதாவது பாருக்கு போலாம் என்றான். என்ன காரணம் எனக் கேட்க, அதெல்லாம் வந்து சொல்லுறேன், கெளம்பி வா என்றான்.

பாருக்கு போனதும் அவனே ஆர்டர் பண்ணினான். கொஞ்சம் உள்ளே போனதும், புலம்ப ஆரம்பித்தான். "டேய் இன்னைக்கு காலைல நதிய பாக்க போனேண்டா" நதி என்பது அவனின் காதலி நதியாவின் குறும்பெயர். "என்ன பார்த்து, யாருன்னு கேட்டுட்டாடா" என்றான். எனக்கு ஏதோ ஒரு பிரச்சினை என்று மட்டும் புரிந்தது.

நடு நிசி வரையில் புலம்பி கொண்டிருந்தவன் போதையில் தூங்கிப் போனான் அன்று. அடுத்த நாள் இருவரும் போனில் கொஞ்சிக் குலவியதை நான் பார்க்க நேர்ந்தது. ஊடலும் பின்னர் காதலும் எப்பொழுதும் இனிப்பானவை தானே ?.

நற்றிணை, பழந்தமிழ் இலக்கியம். அதை நேற்று படிக்க, கீழ்வரும் ஒரு பாடல் என்னைக் கவர்ந்தது;

நகுகம் வாராய் பாண ! பகுவாய்
அரிபெய் கிண்கிணியார்ப்பத் தெருவில்
தேர்நடை பயிற்று தேமொழிப் புதல்வன்
பூநாறு செவ்வாய் சிதைத்த சாந்தமொடு
காமர் நெஞ்சந் துரப்ப யான்தான்
முயங்கல் விருப்பமொடு குறுகினே மாகப்
பிறைவனப் புற்ற மாசறு திருநுதல்
நாறிரும் கதுப்பினெம் காதலி வேறுணர்ந்து
வெரூஉமான் பிணையின் ஓரிஇ
யாரையோவென் றிகந்து நின் றதுவே !

பாடியவர்: மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
திணை : மருதம்
துறை : புதல்வனோடு புக்க தலைமகன் பாணர்க்கு உரைத்தது

வேறொரு பெண்ணிடம் மையல் கொண்டிருந்த தலைவன், தன் வீடு வழியாக செல்லும்பொழுது தன் மகனைப் பார்த்து விட்டு, மனைவியிடம் பேசியதை பாணனிடம் கூறியது இப்பாடல்.

பாடலின் பொருள்: பாணனே, சிறுவாய் பிளந்த, மணிகளோடு கூடிய கிண்கிணி ஒலிக்க என் புதல்வன் தெருவில் தேர்நடை நடந்து கொண்டிருந்தான். மணம் கூடிய ஆம்பல் மலரை போன்ற வாய் கொண்டவனும், குழைத்து பூசிய சந்தனம் கொண்டவனுமான என் மகனை அள்ளி எடுத்துக் கொண்டு என் மனைவியை நெருங்க வீட்டினுள் சென்றேன். அழகிய நெற்றியும், கூந்தலையும் உடைய அவள், அஞ்சி விலகும் மான் பிணையை போல என்னைப் பார்த்து 'இங்கே வரும் தாங்கள் யாரோ?' எனக் கேட்டாள். இதை நினைத்து நாம் எண்ணி நகையாடலாம் வா !

காலங்கள் பல நூறு கடந்தும் காதலும், கூடலும் அப்படியேதான் இருக்கிறது.

Friday, June 25, 2010

செம்மொழி மாநாட்டில்....

இன்று நண்பர்கள் இருவர், செம்மொழி மாநாட்டுக்கு சென்றார்கள். கலைஞரின் புகழ்களை கேட்டு விட்டு, மதியம் முப்பது ரூபாய் குடுத்து உணவு வாங்கி இருக்கிறார்கள். தயிர் சாதம், புளி சாதம், சிப்ஸ், ஊறுகாயோடு இருந்தது ஒரு இனிப்பு அல்வா துண்டு...

சொல்லாமல் சொல்லி விட்டார்கள் மாநாட்டை நடத்தியவர்கள்.. புரியாமல் நாம் மரமண்டைகளாக இருந்தால் அதற்கு அவர்கள் என்ன செய்வார்கள்.... :)

Friday, June 18, 2010

சிட்டி லைட்ஸ்



சார்லி சாப்ளினின் படைப்புகளில் மிக முக்கியமான படைப்பு சிட்டி லைட்ஸ். அடுத்தவனைப் பற்றி கவலை படாத மனிதர்களுக்கு மத்தியில், சக உயிர்களின் மீது அன்பு செலுத்துவதை பற்றி தம் படங்களில் போதித்தார். நகைச்சுவை என்பது சிரிக்க மட்டும் இல்லாமல் சிந்திக்கவும் செய்த மாபெரும் மனிதன். உலகை தனது நடிப்பின் மூலம் திரும்பி பார்க்க வைத்தவர்.

சிட்டி லைட்ஸ்:
ஓரிடத்தில் ஒரு கண் தெரியாத பெண்ணை சாப்ளின் பார்க்க நேரிடுகிறது. அவளை பற்றி மிகவும் கவலை கொள்கிறார் சாப்ளின். அந்த பெண் பூ விற்று தனது பாட்டியுடன் வாழ்க்கையை நடத்தி வருகிறாள் என்பதை அறிந்து கொள்கிறார்.

ஒரு நதியின் ஓரத்தில் அமர்ந்திருக்கும் பொழுது ஒரு பணக்காரன் தற்கொலைக்கு முயல, அதை தடுக்கிறார் சாப்ளின். அவரை காப்பாற்ற போய் சாப்ளின் தண்ணிக்குள் விழுவது, பிறகு இருவரும் சேர்ந்து விழுவது, எப்படியோ இருவரும் மேலே ஏறி வருவது... எப்படியோ இருவரும் மேலே வருகிறார்கள். பின்னர் அந்த பணக்காரன் தனது வீட்டுக்கு சாப்ளினை அழைக்க, அவரும் செல்கிறார். போதையில் இருக்கும்பொழுது எல்லாவற்றையும் அள்ளிக் கொடுக்கும் பணக்காரன், போதை தெளிந்ததும் சாப்ளினை யார் என்றே தெரியாது என்று சொல்லிவிடுகின்றான்.

அந்த பணக்காரன் வீட்டில் சாப்ளின் தங்கியிருக்கும் ஒரு நாள் காலையில், அந்த வீதி வழியாக அந்த பெண் பூ விற்று சென்று கொண்டிருக்கிறாள். அவளை பார்த்ததும் அவருக்கு எல்லா பூக்களையும் வாங்க வேண்டுமென்று ஆசை. செல்வந்தனிடம் சொல்ல அவனும் பணத்தை எடுத்து நீட்டுகிறான், அத்தனை பூக்களையும் அவரே வாங்கிக்கொள்ள அப்பெண் மிக்க சந்தோசபடுகிறாள். உடனே சாப்ளின் உன்னை என் காரில் வீட்டில் விட்டு விடுகிறேன் என்று கூற, அவளும் சரி என்று கூறுகிறாள். அப்பெண்ணை வீட்டில் விட்டு விட்டு திரும்பி விடுகிறார் சார்லி. தவறுதலாக அப்பெண், சார்லியை மிக பெரிய பணக்காரன் என்று நினைத்து, மிக்க மகிழ்ச்சியுடன் தனது பாட்டியுடன் அவனை பற்றி கூறுகிறாள்.

பணக்காரன் வீட்டுக்கு திரும்பி வந்தால் அவனுக்கு போதை தெளிந்து, சார்லியை விரட்டி விடுகிறார்கள். வேலை தேடி அலையும் சார்லியை, மீண்டும் பணக்காரன் சந்திக்கிறான். இப்பொழுது திரும்பவும் வீட்டுக்கு அழைக்க, இவர் மறுக்க, அவன் வற்புறுத்த திரும்ப அவன் வீட்டுக்கு செல்கிறார். அடுத்த நாள் போதை தெளிந்ததும் அந்த பணக்காரன் வீட்டில் இருந்து விரட்டபடுகிறார்.

இரவில் பணக்காரன் வீட்டுக்கு செல்வதும், காலையில் அடித்து விரட்டுவதுமாக போகின்றன நாட்கள். ஒருநாள் அப்பெண் குடியிருக்கும் வீட்டுக்கு வாடகை கட்டாததால் வீட்டை காலி செய்ய நோட்டீஸ் குடுத்து விட்டு போய்விட்டார்கள். பாட்டி அதை அப்பெண்ணிடம் சொல்லாமல் மறைத்து விடுகிறார். அப்பொழுது அங்கே வரும் சார்லி, அதை பார்த்து விட்டு எல்லாவற்றையும் நான் பார்த்து கொள்கிறேன் என்கிறார். கூடவே, ஒரு கண் டாக்டர் ஊருக்கு வந்திருப்பதாகவும், அவரிடம் கூட்டி சென்று பரிசோதித்து கண் குறைபாட்டை போக்க தான் உதவுகிறேன் என்றும் சொல்கிறார் சார்லி. அவர்தான் பெரிய பணக்காரர் ஆயிற்றே என்று அப்பெண்ணும் மகிழ்ச்சி அடைகிறாள்.

ஒரு வேலைக்கு செல்ல, அங்கே இருக்கும் ஆள் துரத்தி விடுகிறான். சரியென்று ஒருவன் பாக்சிங் விளையாட்டுக்கு கூப்பிட, ஒல்லி உடம்பை வைத்து கொண்டு பணத்துக்காக சரி என்கிறார். கடைசி வரை முட்டி மோதியும் அதிலும் தோல்வி. பாக்சிங் காட்சிகளில் நீங்கள் நிச்சயமாக சிரிப்பிர்கள். அப்படி சிரிப்பு வரவில்லை என்றால் தக்க மருத்தவரை பார்க்கவும் !!!

பணம் தேவைப்படுவதை பணக்காரனிடம் சொல்ல அவனும் பணம் தருகிறான். ஆனால் அங்கு நடந்த குழப்பத்தில், இவர் பணத்தை திருடி விட்டு போவதாக போலீஸ் சந்தேகபடுகிறது. குடிகார பணக்காரன் போதையில் உறங்கி விட்டான். வேறு வழி இல்லாமல், பணத்துடன் தப்பி விடுகிறார் சார்லி. அப்பெண்ணின் வீட்டுக்கு வந்து அப் பணத்தை கொடுத்துவிட்டு, இதை ஆபரேஷன் மற்றும் வீட்டு செலவுக்கு வைத்துகொள், நான் சீக்கிரமாக திரும்ப வருவேன் என்று கூறிவிட்டு சிறை செல்கிறார் சாப்ளின்.

சிறை வாசம் முடிந்ததும் அப்பெண் பூ விற்று கொண்டிருந்த பழைய இடத்துக்கு வருகிறார் சாப்ளின். அங்கே அப்பெண் இல்லாததை கண்டு வீதியில் நடக்க ஆரம்பிக்கிறார். அழுக்கான உடை, பார்த்தால் பைத்தியம் போலிருக்கும் அவரை சீண்டுகிறார்கள் தெரு பையன்கள். அப்பொழுது கீழே கிடந்த ஒரு ரோஜா பூவை எடுக்கிறார் சார்லி.

இதை பக்கத்துக்கு கடையில் இருந்து ஒரு பெண் பார்த்து சிரித்து கொண்டிருக்கிறாள். அவள்தான் அக்கடையின் முதலாளி. கடைக்கு வரும் பணக்காரர்கள் ஒவ்வொருவர் முகத்திலும் சார்லியை தேடி கொண்டிருக்கிறாள் அப்பெண். அவள் வேறு யாருமல்ல, சாப்ளின் உதவிய அதே பெண்தான். அப்பெண்ணுக்கு இப்பொழுது பார்வை திரும்பி விட்டது.

அவள் சாப்ளினை கூப்பிட, சார்லி திரும்பி அவளை பார்த்ததும் புரிந்து கொள்கிறார். அப்பெண் சாப்ளினை அழைத்து காசு கொடுக்க வேண்டாமென்று கூறிவிட்டு கடைக்கு ஓரத்தில் கூச்சமாக நிற்கிறார். அப்பெண் காசுடன் ஒரு ரோஜா பூவையும் எடுத்து கொண்டு வா என்று கூப்பிட, சார்லி தயங்கி தயங்கி நகர்கிறார். அப்பெண் சார்லியின் கையை இழுத்து, கையில் ரோஜாவையும் காசையும் வைக்கும் பொழுது ஏதோ தட்டுப்பட, அதிர்கிறாள் அப்பெண்; தொடுதல் மூலம் இது சார்லிதான் என்று புரிந்துகொள்கிறாள்

"You ? " - அப்பெண்
"You can see now.." - சார்லி
"Yes..i can see now.. " - அப்பெண்

இருவர் கண்களிலும் ஒரு ஒளி வந்தது போல இருக்கும் அக்காட்சியில். நமக்கு கண்ணில் நீர் வழிந்து கொண்டிருக்கும் போது படமும் முடிந்து விடுகின்றது.

காதலையும், காமெடியும் கலந்து நமக்கு ஒரு காவியத்தை படைத்து தந்த சாப்ளினுக்கு என்றும் தலை வணங்குவோம்.


Wednesday, June 16, 2010

செம்மொழி மாநாடு மற்றும் டாஸ்மாக் தாராளம்

புது சாலைகள், புது விளக்குகள், புது கட்டிடங்கள்... என கோலம்(!) கொண்டு நிற்கிறது கோவை, செம்மொழி மாநாட்டுக்காக.

மாநாடு நடந்து முடிந்த பின்னர்தான் தெரியும், தமிழ் எப்படி இருக்கிறதென்று. எப்படி இருந்தாலும் 'பை மா', 'ஹாய் டாடி', 'ஹொவ் ஆர் யு', 'வெரி குட்'..... போன்றவைகள் நம்மிடம் இருந்து மாற போவதில்லை. வரும் தலைமுறைக்கு தமிழை சொல்லி கொடுக்க போவதும் இல்லை. தமிழ் படித்தால் சம்பாதிக்க முடியாதென்று நம் மக்களின் மண்டையில் பதிந்து எவ்வளவோ நாட்களாகி விட்டன.

போன வாரம் இரண்டு குழந்தைகளை பார்த்தேன். இரண்டு குழந்தைகளின் பெற்றோரும் ஒரு நல்ல அலுவலகத்தில் வேலை செய்ய வேண்டும். அவர்களுக்கும் அந்த குழந்தைகளுக்கும் நடந்த உரையாடல்கள் இப்படித்தான் இருந்தன.

'Oh Dear.. dont do that', 'please ma...', 'why are you crying now?' இப்படித்தான்...
ஒரு குழந்தை போனில் சொல்லியது 'mom.. scolding me.. ' ....

எப்படியோ தமிழ் வளர்ந்தால் சரிதான்.

இன்றைய தினமலரில் ஒரு செய்தி;
கூடுதலா இருக்கு சரக்கு : தண்ணி தட்டுப்பாடு இல்லை

வழக்கத்தைவிட இருமடங்கு அல்லது 20 லட்சம் ரூபாய் கூடுதல் "சரக்கு' இருப் பில் வைத்திருக்க, கடை ஊழியர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
முக்கியமாக, தற்போது கடைக்கு வரும் சரக்கை விட இரு மடங்கு, அல்லது 20 லட்சம் ரூபாய் அளவுக்கு சரக்கை இருப்பில் வைத்திருக்க வேண்டும். கடைக்கு அருகில் அல்லது தெரிந்த பாதுகாப்பான இடத்தை குடோனாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர், உயரதிகாரிகள். செம்மொழி மாநாடு நடக்கும் நாட்களில் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=19966
(நன்றி: தினமலர்)

ஆகவே தமிழ் குடிமக்களே(!!!), உங்களால் தமிழ் வளரட்டும் !!!

Tuesday, June 15, 2010

ஜோசியம்

"எட்டாமிடத்தில் சனி இருக்க துன்பம் போகுமப்பா
நாலாமிடத்தில் செவ்வாய் இருக்க"
எனப் பாடிக் கொண்டே சென்றார் ஜோசியர். அவருடைய பேர் என்னவென்றே எனக்கு தெரியாது. ஆனால் ஜோசியர் என்றால் ஊருக்கே தெரியும்.

சுற்றி உட்கார்ந்து இருந்த அனைவரும் அவரையே உற்று பார்த்து கொண்டிருந்தோம். கணீரென்ற குரல், வயதாகி விட்டதால் சற்று பிசிறடித்தது. கிருபானந்த வாரியாருக்கு அண்ணன் போலிருப்பார். நான் பார்த்த முதல் சுருட்டு பிடித்தவர் இவர்தான். பக்கத்தில் போனாலே சுருட்டு வாசம் வீசும். மனைவி மகன் இல்லாததால் தனியாகத்தான் இருந்தார். அவராகவே சமைத்து கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தார். பக்கத்துக்கு ஊரில் இருந்தெல்லாம் சிலர் வந்து ஜோசியம் கேட்டு விட்டு போவார்கள். ஒரு சிலர், பைக்கில் உட்கார வைத்து வீட்டுக்கே கூட்டிபோய் ஜோசியம் பார்த்துவிட்டு திரும்ப கொண்டு வந்து விடுவார்கள்.

எங்கள் வீட்டுக்கு மாமா அத்தை மற்றும் சில சொந்த காரர்கள் வந்தால் ஜோசியம் பார்க்க வேண்டும் என்பார்கள். உடனே என்னை அவருடைய வீட்டுக்கு அனுப்பி, அவரை வர சொல்லுவார்கள். நானும் போவேன்.

"அப்பா, ஜோசியம் பார்க்கனும்னாங்க... உங்கள ஊட்டுக்கு வரசொன்னாங்க... "

"சரி.. சரி.. வர்றேன் போ.. கொஞ்ச நேரத்துல வர்றேன்னு சொல்லு... " என்பார்.

கொஞ்ச நேரத்தில், கையில் ஒரு காக்கி பையுடன் வந்து சேர்வார். கெட்டியான பை, உள்ளே காகிதங்கள், பென்சில், பேனா, பஞ்சாங்கம் என்று திணித்து வைத்திருப்பார். அவர் வந்தவுடன் பாய் போடப்பட்டு, அவரும் உக்கார, அவரை சுற்றி எல்லாரும் உட்காருவோம். பார்க்க வேண்டிய ஜாதகத்தை கொடுத்தவுடன் தனியே ஒரு பேப்பரில், கட்டம் போட்டு, கூட்டல் கழித்தல் என சில நிமிடங்கள் கரையும்.

அதற்குள் காப்பி கொண்டுவந்து வைத்தால், குடித்து கொண்டே மெல்ல கனைப்பார். அப்படியே பாட ஆரம்பிப்பார். சில சமயங்களில் அவருடைய பாடல்கள் புரியும், சிலது புரியாது. ஆனால் பாட்டை முடித்து விட்டு, விளக்கமாக ஜோசியம் சொல்லுவார்.

தொழில் எப்படி நடக்கும், கல்யாணம் நடக்குமா, பொண்ணு எந்த திசையில் இருந்து வரும் என்று அவரிடம் வீசப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லுவார். கேள்விகள் தீர்ந்த பின், ஒரு கனத்த அமைதி நிலவும். பஞ்சாங்கம், பேனா என எல்லாவற்றையும் எடுத்து அவருடைய பையில் போட்டுகொள்வார். ஒரு தட்டில் வெத்தலை பாக்குடன் பணம் வைத்தால், வெத்தலையோடு சேர்ந்து பணத்தை எடுத்து மடியில் கட்டிக் கொள்வார்.

எங்கப்பாவுக்கு ஜோசியம் தெரியும் என்பதால், ஜோசியம் சொல்லிவிட்டு "என்ன.. நான் சொல்லுறது சரிதானே.. " என்று அப்பாவை பார்ப்பார். அப்பாவும், சிரித்துகொண்டே "நீங்க சொன்னா.. சரிதான்" என்பார். அப்பாவுக்கு ஜோசியம் தெரியும் என்றாலும் அவர் அதை தொழிலாக செய்யவில்லை. அதை ஒரு பொழுதுபோக்காக கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு நல்ல நேரம் பார்த்துக் கொடுப்பது, நல்ல நாள் குறித்து கொடுப்பார். ஒருசிலர், ஜாதகத்தை கொண்டு வந்து அப்பாவிடம் பொருத்தம் பார்க்க சொல்லுவார்கள். மணி கணக்கில் அவர்களுடன் உட்கார்ந்து, ஒவ்வொரு கட்டத்தையும் அவர்களுக்கு விளக்கி சொல்லி விட்டு கடைசியில், "எதுக்கும்.. இன்னொரு ஜோசியரை பார்த்து கேட்டுக்கங்க.." என்பார். வந்தவர்களும் சரி என்பார்கள்.

எனவே, எங்கள் வீட்டில் எப்பொழுதும் பஞ்சாங்கம் இருக்கும். அதுவும் இருபது, முப்பது வருடத்திய பழைய பஞ்சங்கங்கள் ஒரு கயிற்றில் கட்டப்பட்டு அட்டாரியில் இருக்கும்.

சில சமயங்களில் ஜோசியரை கூட்டி செல்பவர்கள் வீட்டில் பஞ்சாங்கம் இருக்காது. இல்லை, அவருக்கு வேண்டியது பழைய பஞ்சந்கமாக இருக்கும். உடனே, ஒரு காகிதத்தில் வருடத்தின் பெயரை குறிப்பிட்டு எங்கள் வீட்டுக்கு ஆளை அனுப்புவார். எங்கள் வீட்டு அட்டாரியில் இருந்து அந்த வருடத்தியதை தேடி எடுத்து குடுப்போம்.

ஒரு நாள் வீட்டுக்கு வெளியில் உட்கார்ந்து பேசி கொண்டிருந்தோம். அப்போது, ஜோசியரை வண்டியில் உட்கார வைத்து கூட்டிச் சென்றார்கள்.

"ம்ம்.. இன்னைக்கு ஜோசியர் காட்டுல மழைதான்"

"ஆமா.. வாங்குற பணத்தை என்ன பண்ணுவாரு .. அவரே ஒன்டிகட்டைதான்.." என்றது பக்கத்துக்கு வீடு.

"வாரமான கறி, தெனமும் சுருட்டுன்னு மனுஷன் இஷ்டத்துக்கு செலவு செய்யுறார்... மீதி பணத்தையெல்லாம் பொட்டில போட்டு வெச்சுகுவரோ என்னமோ... "

தள்ளாத வயதிலும், தனியாகவே சமைத்து கொண்டு வாழ்ந்து வந்தவர், உடம்பு முடியாமல் படுத்து அடுத்த இரண்டு வாரத்திலேயே போய் சேர்ந்து விட்டார். ஊருக்கெல்லாம் நல்ல நாள் பார்த்து சொன்னவர் எந்த நேரத்தில் இறந்திருப்பார் என்று தெரியவில்லை. மனிதன் பிறப்பதும், இறப்பதும் நல்ல நேரம் பார்த்து நடப்பது இல்லை. இதற்க்கு இடைப்பட்ட காலத்தில்தான் எல்லாவற்றுக்கும் நல்ல நேரம் தேவைபடுகிறது.

" தகர பொட்டில.. அரிசி பானையில.. எங்கே பார்த்தாலும் பணம் இருந்துச்சமா.. " என்று ஊரே பேசி கொண்டது. எப்போதும் அவருடைய வீட்டை விட்டு தள்ளி உள்ள ஒரு திறந்தவெளி திண்ணையில் தான் அவர் ஜோசியம் சொல்லுவார். இப்பொழுது அந்த திண்ணை யாருமில்லாமல் வெறுமையாக இருந்தது. இன்னொரு ஜோசியர் அந்த திண்ணைக்கு வந்து ஜோசியம் பார்க்க சாத்தியமேயில்லை .

காலம் அங்கே தனது ஜாதகத்தை காற்றில் எழுதி கொண்டிருந்தது கூட்டல், கழித்தல்களுடன்.




Tuesday, June 1, 2010

வாழ்க்கைப் பயணம்

ஒரு சனிக்கிழமை காலையில், தாம்பரம் செல்வதற்காக குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன். சனிக்கிழமை என்பதாலும், அலுவலக நேரத்தை தாண்டி விட்டதால் கூட்டம் அதிகமில்லை. மின்தொடர் வண்டி வந்து சேர்ந்ததும் பெட்டியில் ஏறினேன். பெட்டிக்குள் நான்கைந்து பேர்களே இருந்தார்கள். காலியாக இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தேன்.

அப்பொழுதுதான் கவனித்தேன், எனக்கு எதிராக இரண்டு இருக்கைகள் தள்ளி, ஐம்பது வயது உள்ள ஓர் அம்மா அமர்ந்திருந்தார். அவருக்கு பக்கத்தில் நல்ல உடம்புடன் ஒரு இருபத்தி ஐந்து வயசுள்ள பையன் உட்கார்ந்திருந்தான். ஒண்ட வெட்டிய தலையுடன், சிரித்து கொண்டே வந்தான். சட்டையும், டவுசரும் மட்டுமே அணிந்திருந்தான். பார்த்த கொஞ்ச நேரத்திலயே மன நிலை குறைபாடுள்ளவன் என்று தெரிந்தது. அந்த அம்மா சோகமே உருவாக அமர்ந்திருந்தார். வாழ்வில் எண்ணற்ற துயரங்களையும் பார்த்த சுருக்கம் முகத்தில் படர்ந்திருந்தது. அவன் அவ்வபொழுது முகத்தை திருப்பி சிரிப்பதும், மெதுவாக கையால் அம்மாவை செல்லமாக அடிப்பது போல் செய்து கொண்டே வந்தான். அந்த அம்மாவும் அவன் கையை பிடித்தும் விடுவதும் போலிருந்தார். ஆனால் முகத்தில் ஒரு சிறு புன்னகை கூட இல்லை. காலையில் சாப்பிட போன கடையில் சாம்பாரில் உப்பு அதிகமாக இருந்தால் கவலைப் படுபவர்களுக்கு மத்தியில் இத்தகைய துன்பங்கள் எப்படி இருக்குமென்று சொல்ல தேவையில்லை.

தொடர் வண்டி சானிடோரியம் தாண்டி சிக்னலுக்காக நின்றது. அந்த அம்மா எழுந்து படிக்கட்டு ஓரமாக நின்று கொண்டார். அவன் என்ன நினைத்தானோ, அவனும் எழுந்து பின்னாலயே வந்து நின்று கொண்டான். அந்த அம்மா, அவனது கையைப் பற்றிக்கொண்டார். இன்னொரு கையில் துணிப்பை வைத்திருந்தார்.

சிக்னல் தாண்டி தாம்பரம் வந்ததும் இருவரும் இறங்கி கூட்டத்தோடு கலந்து போனார்கள். வாழ்க்கை என்பது அவ்வளவு எளிதாக யாருக்கும் அமைந்து விடுவதில்லை. போராட்டமாய் ஒரு சிலருக்கு அமைந்து விடுகின்றது.

அந்த அம்மாவை பற்றி நினைத்துக் கொண்டே ரயில் நிலைய படிகளில் நடக்க தொடங்கினேன். மேலே நடைபாதையில் நடக்கும்பொழுது, இன்னொரு படிப்பினை எனக்கு காத்திருந்தது. ஒரு சின்ன பெண், ஏழு அல்லது எட்டு வயதுக்குள் இருக்கும். அவள் கையில் ஒரு குச்சி. அந்த குச்சியின் மறுமுனையில் கண் குறைபாடுள்ள ஒருவரின் கையில். அவரின் தோள்களை பற்றிக் கொண்டு இன்னொரு பெண். இவர்களுக்கு முன்னால் நம்முடைய வாழ்கையில் சாதித்தவைகள் எல்லாம் கேள்விக்குறியாக இருக்கிறது.

மெல்ல மெல்ல அச்சிறு பெண்ணை பின் தொடர்ந்து ஓரமாக போய்க் கொண்டிருந்தார்கள். இது எதையும் கவனிக்காமல் ஒரு கூட்டம் அவசரமாக ஓடி கொண்டிருந்தது.

வாழ்கையில் ஏற்படுகின்ற எல்லா முடிச்சுகளையும் நம்மால் அவிழ்த்து விடவோ, தீர்வு காணவோ முடியாது. அதனாலதான், கணியனார் கூட "நீர்படு புணை போல் ஆருயிர்" என்றார். அதாவது நீரின் போக்கிலேயே செல்லும் படகை போன்றதே வாழ்க்கை என எடுத்துக் கொள்ளலாம். எப்படி வாழவேண்டும், அப்படி இருக்க வேண்டும் எனக் கனவுகள் இவர்களுக்கும் இருக்கும். ஆனால் வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்று கொண்டவர்கள்.

அந்த பையனுக்கு அந்த அம்மாவும், இந்த பெற்றோர்களுக்கு அச் சிறுமியும் தெய்வங்கள் போல. நாம் செல்லும் பாதைகளில் அந்த தெய்வங்களும் கடக்க கூடும், முடிந்த உதவிகளையும்.. உதவி இல்லையெனில் அவர்களுக்கு வழி விடுங்கள்.. பேருந்தில் இருக்கையை கொடுங்கள்... நீங்களும் கடவுளுக்கு அருகில் இருக்கலாம்.