Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Tuesday, March 18, 2014

தேர்தலோ.. தேர்தல் !


மக்களால் மக்களுக்கு

பாடப் புத்தகத்தில்
இப்படித்தான் இருந்தது
மக்களால் மக்களுக்கு மக்களாட்சி..

ஒரு நாள்
சாரை சாரையாக வந்தார்கள்
வெள்ளை ஆடையில் நல்லவர்கள் ஆனார்கள்
உங்கள் வீட்டுப் பிள்ளை
உங்கள் காலடியில் கிடப்பேன்
என்றெல்லாம் சொல்லி ஓட்டுக் கேட்டார்கள்

வழக்கம் போல்
ஜெயிக்கவும் தோற்கவும் ஆனார்கள்

வெற்றி பெற்றவர்கள்
அவரவர் முடிந்ததை
அவரவருக்குத் தேவையான வரை
கக்கத்தில் கட்டிக் கொண்டார்கள்..

நேரமிருக்கும்போது மக்களைச் சந்தித்து
குறை கேட்பதோடு நிறுத்திக் கொண்டார்கள்
அல்லது சந்திப்பையே தவிர்த்தார்கள்

தேர்தல் நாள் அறிவித்தவுடன்
திரும்பவும் அந்த நாள் வந்தது
இந்த தடவை குத்தகை
யார் கைக்கு போகுமென்பது
எண்ணிக்கை முடிந்த பிறகு தெரியும்...

சொல்ல மறந்து விட்டேன்
பாடப் புத்தகத்தில்
இப்படித்தான் இருக்கிறது
மக்களால் மக்களுக்கு மக்களாட்சி....

தலைவர்கள் வருகிறார்கள்..

தேர்தலுக்கும்
இடைத் தேர்தலுக்கும்
வெள்ளம் வந்தாலும்
தீ வைத்துக் கொண்டாலும்
கட்சியினர் இல்லத் திருமணத்திற்கும்
உதவிகள் வழங்கவும்
கடைகள் திறப்பிற்கும்
எங்கள் தலைவர்கள்
அன்று ஒரு நாள் மட்டும் பார்க்க வருகிறார்கள்
நோயுற்றிருக்கும் நோயாளியை
பார்க்க வருவது போன்றும்
மீதியுள்ள நாட்களை மறந்தும்.... !

கட்சிகள்

அடர் கருமை நிறத்தில்
சாக்கடை..
அதன் ஓரத்தில்தான்
எம் மக்களின் இல்லங்கள்..
எம் குழந்தைகள்
அள்ளி விளையாடுவதும்
குளித்து மகிழ்வதும்
அங்கேதான்..
எல்லா சமையத்திலும்
கழிப்பதும் அங்குதான்..
அங்கேயும்
எம்மை
காக்க வந்த
ரட்சகர்களான
கட்சிகளின் கொடிகள்
மட்டும்
அழுக்கில்லாமல்
உயரத்திலேயே பறக்கின்றன !


Tuesday, December 10, 2013

அரவிந்த் கெஜ்ரிவால்

"சிறு ரத்தம் குடிக்கும் கொசுவை கொன்று விட முடிகிறது, பெரு ரத்தம் குடிப்பவர்களை ஒன்றும் செய்ய முடிவதில்லை." - என்று ஒருமுறை ட்விட்டரில் எழுதினேன். ஊழல் அற்ற ஆட்சியும், நேர்மையும் கிலோ என்ன விலை என்று கேட்ட கட்சிகளையே பார்த்திருந்த நமக்கு, இப்படி இரத்தத்தை உறிஞ்சி, உறிஞ்சி கொல்கிறார்களே என்ற கோபம்  இருந்தது.

இவ்வளவு ஆண்டுகளாய் அரசியலில் இருக்கும் காங்கிரஸ் மற்றும் பிஜேபி போன்ற கட்சிகளுடன் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே, இவ்வளவு இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது 'ஆம் ஆத்மி' கட்சி.

சரி, இவ்வளவு வெற்றி பெற்ற இவர்கள், வருங்காலத்தில் நல்ல ஆட்சியைக் கொடுப்பார்களா என்று நாம் நினைக்கலாம். அதைப் பின்னர் பார்க்கலாம்.

ஆனால், இந்தத் தேர்தல், இந்திய திருநாட்டில் ஜனநாயகம் இன்னும் இருக்கிறது, மகுடிகளுக்கு மக்கள் எப்பொழுதும் மயங்க மாட்டார்கள் என இன்னுமொரு முறை உரக்க பறை சாற்றியிருக்கிறது.

அரசியல்வாதிகளே, அரசியல் சாக்கடையைத் தூர்வார நீங்கள் தயாராக இருந்தால், எங்கள் வாக்குகள் என்றும் உங்களுக்கே.

Wednesday, September 11, 2013

பேருந்து நிலையமும் ஒரு சிறுமியும்

நூறு நிமிடத்தில் கோவையை வந்தடையும் ஈரோ-100 பேருந்து ஈரோடு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. பயணச் சீட்டை வாங்கிக் கொண்டு உள்ளே சென்று அமர்ந்தேன்.

கொஞ்ச நேரத்தில் ஒரு சிறுமி, கையில் சிறிய ஜெராக்ஸ் தாள்களுடன் ஏறினாள். எண்ணெய் காணாத தலையும், அழுக்கு உடையுமாக இருந்தவள், எல்லோரிடமும் அந்தத் தாள்களை நீட்டிக் கொண்டிருந்தாள். ஒரு சிலர் வாங்கிக் கொண்டார்கள். சிலர் முகத்தை திருப்பிக் கொண்டார்கள். எனக்குப் பக்கத்து இருக்கையில் இரண்டு இளைஞர்கள் இருந்தார்கள்.  அவர்களிடம் தாளைக் கொடுத்தவள், அப்படியே பின்னால் சென்றாள்.

திரும்பி வரும்பொழுது, இந்த இரண்டு இளைஞர்களும் ஒரு பத்து ரூபாய்த் தாளை அவளுக்கு கொடுத்தார்கள். இந்தப் பக்கம் திரும்பியவள், என்னிடமும் அந்த தாளைக் காட்டினாள். நான் இல்லை என்று மறுக்க, உடனே அவள் எழுதி இருந்ததைக் காட்டினாள். வழக்கம் போல, வாய் பேச முடியாத சிறுமி இவள், இவளுக்கு உதவி செய்யுங்கள் என்ற வாசகத்தோடு, நன்கொடை ரூ.10, ரூ.20, ரூ.50 என்று இருந்தது.

என்னிடம் இல்லை என்றேன். திரும்பவும் வயிற்றைத் தொட்டுக் காட்டி கேட்டாள். நான் தலையாட்டிக் கொண்டே இருக்க, அவள் என் தாடையைப் பிடித்து கொஞ்சினாள். நானும் அவளின் கன்னத்தில் ஒரு தட்டு தட்டிவிட்டு திரும்ப இல்லை என்றேன். கை ஜாடையிலேயே தனக்குப் பேசத் தெரியாது என்றாள். 

எனக்குத் தெரியும், எவனோ ஒருத்தன்(அ)ஒருத்திக்கு இவள் சம்பாதித்துக் கொடுக்கிறாள். அவன் எங்கேயோ ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு, இவள் பிச்சை எடுத்து வரும் காசை செலவழிக்கக் கூடும். இவளுக்கு  சோறாவது வாங்கிக் கொடுப்பார்களா என்பது சந்தேகம் தான். இந்தச் சிறுமிக்கு நாம் காசு கொடுக்கும் பொழுது, மீண்டும் மீண்டும் இவளை நாம் இந்த நரகத்துக்கே தள்ளிக் கொண்டிருக்கிறோம் எனத் தோன்றவும் செய்தது.

தொடர்ந்து மீண்டும் காலைத் தொட்டாள். நிமிர்ந்து என்னைப் பார்க்கும்பொழுது, இப்பவாவது இவன் குடுப்பானா என்று நினைத்திருப்பாள் போலும். அந்த இரண்டு இளைஞர்களும், 'நீங்க குடுக்காதீங்க' என்றார்கள். நான் தலையை ஆட்டிக்கொண்டே, 'ஸ்கூல்ல கொண்டு போய் விடுறேன், என் கூட வந்துறியா' என்றேன். அந்த சிறிய முகத்தில் ஒரு மூர்க்கம் வந்தது. என்ன நினைத்தாளோ, என் கன்னத்தில் ஓங்கித் தட்டிவிட்டு அடுத்த சீட்டுக்கு ஓடிப் போனாள். 

இந்தச் சிறுமிக்கு நான் ஒரு பத்து ரூபாய் கொடுத்து இருக்கலாம். ஆனால் அது அவளுக்குப் போய்ச் சேரப் போவதில்லை. முன்னரே சொன்னது போல, இவளுக்குப் பிச்சை போடுவதன் மூலம் மீண்டும் மீண்டும் அவளை இந்த நரகத்துக்கே நாம் அனுப்பி வைக்கிறோம். இந்தச் சமூகத்தில் ஒருவனாய், ஆட்சி செய்யும் அரசுகளுக்கு ஓட்டுப் போட்ட ஒருவனாய் நான் தலை குனிந்து தூங்கத் தொடங்கினேன்.



Wednesday, December 19, 2012

600 ரூபாய்

உங்களுக்குத் தெரியாது..
பத்துக்கு பத்துக்கு ஒரு அறை என்றால் கூட, வாடகை ஆயிரத்துக்கு மேல்..

உங்களுக்குத் தெரியாது..
என்னதான் அடித்து பிடித்து செலவு செய்தாலும்
மளிகைக்  கடையில் ஐநூறு  ரூபாய் பாக்கி நிற்கிறது
எல்லா மாதத்திலும்

உங்களுக்குத் தெரியாது..
விலை குறைவென்று பண்டிகைக்கு
வாங்கிய துணிகள்
சாயம் போயும், கிழிந்தும் போகின்றன

உங்களுக்குத் தெரியாது..
காய்ச்சல் சளி என்றால் கூட சமாளித்து விடலாம்
மேலதிக நோய் என்றால் மருத்துவர் கட்டணம் நூறுக்கு குறைவில்லை..

உங்களுக்குத் தெரியாது..
பேருந்து, ரயில் போன்றவைகளின்  கட்டணம்
நம் நாட்டில் இலவசம் இல்லையே..
அது போலவே கல்வியும்..

இதையெல்லாம் விட
நீங்கள் எப்போதெல்லாம் பெட்ரோல் விலை ஏத்துகிறீர்களோ
அப்போதெல்லாம் காய்கறிகள் உட்பட எல்லாம் விலை ஏறுகின்றன

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா
ஒரு சவத்தை அடக்கம் செய்யக் கூட
குறைந்த பட்சம் இரண்டாயிரம் ரூபாய் தேவை..

இவையெல்லாம் உங்களுக்கு எதற்கு தெரிய வேண்டும்...
மாடங்களில் இருந்து பாருங்கள்...
ஊரே செழிப்பாக இருக்கும்
அவை ஆறுகள் அல்ல
சாக்கடைகள் என்று ஒரு நாளும் நீங்கள் அறியப்போவதில்லை..

சொன்னதே சொன்னீர்கள்,
அந்த அறுநூறு ரூபாயில்
எப்படி ஒரு மாதத்தை தள்ளுவது என்று
பாவப்பட்ட எங்களுக்குச்
சொல்லிக் கொடுங்கள்....

வெகு விரைவில்
குறைந்த செலவில் 
நாம் வல்லரசாகி விடலாம்....




Thursday, November 3, 2011

நூலகம் தேவையா?


நூலகம் என்பது வெறும் பொழுதுபோக்கு இடம் என்றுதான் நிறைய பேர் நினைத்திருப்பார்கள் போலத் தெரிகிறது. அது பொழுது போக்கு இடம் இல்லை, அறிவு பொதிந்து கிடக்கும் இடம் என்பதை ஆள்பவர்களுக்கு எப்படி புரிய வைப்பது?.

நூலகம் தேவையா என்று கேட்டால், தேவை என்பது தான் என் நிலைப்பாடு. மருத்துவமனைகள் முக்கியமும் கூட, ஆனால் பரந்து கிடக்கும் சென்னை மாநகரில் அதற்கு ஓரிடம் கூடவா சிக்கவில்லை.

போன அரசு கட்டிய நூலகம் என்பதற்காக, நூலகத்தை இடம் மாற்றும் முடிவு சரியானதல்ல. இந்த நூலகத்தை விட, பெரிய நூலகம் மற்றும் வசதிகள் கொண்ட ஓர் இடத்துக்கு மாற்றினால் பரவாயில்லை. மருத்துவமனையாகவே மாற்றினாலும், அதற்கு தகுந்தது போல இருக்குமா எனத் தெரியவில்லை. புதிதாக கட்டும்பொழுது தேவைகளை அறிந்து கட்ட முடியும்.

எல்லாத்தையும் விட்டுத் தள்ளுங்கள், இவர்களுக்கு ஓட்டுப் போட்டு அமரவைத்த நம்மை என்ன செய்யலாம்?

எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் அவர்களின் பதிவு: சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றும் தமிழக அரசின் முடிவுக்குக் கண்டனம்


Tuesday, July 5, 2011

நாலணா

கவிஞரும், பதிவுகள் எழுதி வரும் திரு.மகுடேசுவரன் அவர்கள் தனது வலைத் தளத்தில் விலையின் தாழ்நிலை அலகுகள் என்ற பதிவில் இருபத்தைந்து பைசா நாணயம் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டதைப் பற்றி எழுதியிருக்கிறார். அதைப் படித்ததன் விளைவே இந்தப் பதிவு.

"காலணாவுக்கு தேறாதவன்" என்று நீங்கள் யாரோ ஒருவர் சொல்லிக் கேட்டிருக்கலாம். ஆனால், இப்பொழுது அந்தப் பைசாவே வழக்கத்தில் இல்லாமல் ஆகிவிட்டது. கடந்த சில வருடங்களாகவே, எந்தப் பொருளும் இருபத்தைந்து காசுகள் வைத்து விற்கப்படுவதில்லை. சில சமயங்களில் வெற்றிலை, வாழை இலை என சிலப் பொருட்கள் மட்டுமே அந்த விலையில் விற்கப்படுகிறது. தனியாக கேட்டால் 1.50 எனவும், நிறைய வாங்கினால் நூறு வாழை இலைகள் 125 ரூபாய் எனவும் மாறிவிட்டது.



சின்ன வயதில் இருபத்தைந்து காசுகள் கொடுத்து வெற்றிலை, பாக்கு என்றும், பால் ஐஸ், சேமியா ஐஸ் என்று வாங்கித் தின்றது நினைவுக்கு வருகிறது. நாலணாவுக்கு கடையில் வெற்றிலை கேட்கும் பாட்டிகளுக்கு இது தெரியுமா?

நான் இங்கிலாந்துக்கு சென்றபோது, கண்டு ஆச்சரியப்பட்டது இன்னும் அந்நாட்டில் சில்லறைக் காசுகள் இருப்பதைப் பார்த்து தான். அங்கே, ஒரு பென்னி, இரண்டு பென்ஸ் என காசுகளும், ஒரு பொருளை 67, 49, 99 காசுகள் என வாங்க முடியும். மீதி சில்லறைக் காசுகளை எண்ணிக் கொடுப்பார்கள்.

ஒரு நாணயம் ஒழிக்கப் படுகிறது என்றால், என்ன பொருள்.. இனிமேல் அந்தக் காசுக்கு எந்த ஒரு பொருளையும் நம்மால் வாங்க முடியாது. அது செல்லாக் காசு. உயர்ந்து வரும் விலை வாசியைக் குறைக்க எந்த வழியும் தெரியவில்லை.

கவிஞர் சொல்வது போல, இன்னும் கொஞ்ச நாளில் ஐம்பது காசு நாணயங்களும் நிச்சயமாக ஒழிக்கப்பட்டுவிடும்.

நூறு காசுகள் சேர்ந்து ஒரு ரூபாய் என்பது அழிந்து, நூறு ஒரு ரூபாய் சேர்ந்து நூறு ரூபாய் எனப் பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள். பேருந்து டிக்கெட்டுகளில் இனி "காசுகள்" என்ற வார்த்தைகள் இருக்காது.

பொருளாதார வேகத்துக்கு, நம்மை இழுத்துக் கொண்டு போகிறார்கள் நம் நாட்டின் அறிஞர்கள். அவர்களுக்கு விலைவாசியைப் பற்றி என்ன கவலை இருக்கப் போகிறது?.

சத்தமாக சொல்லிக் கொள்ளலாம், எம் நாட்டில் சில்லறைகள் இல்லை என்று. மெதுவாக சொல்லுங்கள், இன்னும் எங்கள் நாட்டில் சோற்றுக்கும் வழியின்றி, உடைக்கும் வழியின்றி, உறங்க இடமின்றி தெருவோரங்களில் லட்ச லட்ச மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை.

படம்: இணையத்தில் இருந்து.. நன்றி

Thursday, April 7, 2011

அன்னா ஹசாரே



அரசியல்வாதிகளின் ஊழலைத் தடுக்க திரு. அன்னா ஹசாரே அவர்கள் டில்லியில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஊழல் பெருகி வரும் இந்தச் சூழலில் இவர்களைப் போன்றோரின் போராட்டங்கள் நமக்கு நிச்சயம் தேவை.

காந்தியவாதியான இவர், "அரசியல்வாதிகள் யாரும் வரவேண்டாம். எனக்கு ஆதரவு அளிப்பதாக போட்டோவுக்கு போஸ் கொடுக்க வேண்டாம்" என்று கூறியிருக்கிறார்.

அவருக்கு நமது ஆதரவைத் தெரிவிப்போம்.

நன்றி: தினமலர்
செய்திகள் :
ஊழலுக்கு எதிராக களம் இறங்கிய காந்தியவாதி : நாட்டுக்காக உயிர் விட தயார் என்கிறார்
ஊழலை எதிர்க்கும் காந்தியவாதி உண்ணாவிரதத்திற்கு அபார ஆதரவு


Monday, March 28, 2011

இதுவும்...

ஓட்டுப் பொத்தானை ஒரு அழுத்து அழுத்தி விட்டு இந்தப் பக்கம் வந்தால், கையைப் பிடித்திழுத்து கருப்பு மையை அழுத்தி வைப்பார்கள். அடுத்த ஐந்து வருடம் கழித்து தான் மை அப்புவார்கள். அதுவரைக்கும் எந்தக் கூட்டம் கொள்ளை அடித்தால் என்ன, ஊழல் செய்தால் என்ன, நமக்குத் தவறாமல் சன்மானமாக கருப்பு மையோடு, தொலைக்காட்சிப் பெட்டிகளும், மிக்சிகளும், செல்போன்களும் கொடுப்பார்கள்.

- தொழில்கள் வளர
- கல்விக் கட்டணங்களை குறைக்க
- அரசுப் பள்ளிகளில் வளர்ச்சிகள்
- விவசாயம் மேம்படுத்த
- மின்சாரம், நீர் ஆதாரம், சாலைகள் பற்றி
- ஏழை மக்கள் முன்னேற
- குழந்தை தொழிலாளர்கள் பற்றி
இவைகளைப் பற்றி எந்தத் திட்டமும் இல்லை. எல்லாமே இலவசமாய்ப் போய்க் கொண்டிருக்கிறது தேர்தல்.

"மீன் பிடித்துத் தருவதை விட, எப்படி மீன் பிடிப்பது எனக் கற்றுக்கொடுங்கள்" எனச் சொல்வார்கள். இவர்கள் சிறிய இலவச மீன்களைப் போட்டு பெரிய மீன்களைப் பிடிக்க காத்திருக்கிறார்கள் என்பது, இப்போது நடக்கும் அடிதடி ரகளைகளிலே தெரிகிறது.

அந்த ஒருநாளும் கடந்து போகத்தான் போகிறது. "எவ்வளவோ பண்ணிட்டோம், இதப் பண்ண மாட்டோமா" என்பது போல், அன்றும் வாக்களிக்கப் போகிறோம். கருப்பு மையோடு பின்னர் எல்லோரிடமும் கடமையைச் செய்ததாக பேசிக் கொள்ளுவோம்.

மகாகவி சொன்னதும் நமக்குத் தான்:

நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த
நிலைகெட்ட மாந்தரை நினைந்து விட்டால்
கஞ்சி குடிப்பதற்கு இலார் - அதன்
காரணம் இவையென அறியும் அறிவுமிலார்
நெஞ்சு பொறுக்கு திலையே...