" ஹலோ பிரகாஷ் ” “ மச்சி , எப்படிடா இருக்க ?” “ நான் நல்லா இருக்கேன் , அப்புறம் நான் நாளைக்கு சென்னை கெளம்பனும் .. மண்டே நியூ கம்பெனில ஜாஇன் பண்ணனும் . உன்கிட்ட சொல்லனும்னுதான் கூப்பிட்டேன் டா ” “ ஓகே டா மச்சான் , ஆல் த பெஸ்ட் , போன் பண்ணு .. ஊருக்கு வந்தா கூப்பிடு என்ன ” “ சரிடா ..” என்று போனை வைத்தேன் . இந்த உரையாடல்தான் அவனிடம் நான் பேசிய கடைசி பேச்சாக இருக்குமென்று , இன்னும் என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை . ஒரு வருடத்துக்கும் முன்னால் , பிரகாஷ் , நான் மற்றும் சில நண்பர்கள் ஒரே கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தோம் . எனக்கப்புறம் வந்து சேர்ந்தவன் என்பதால் , முதலில் வாங்க , போங்க என்று கூப்பிட்டு பின்னர் வா , போ என சுருங்கி , கடைசியில் டாய் மச்சி வரை வந்து விட்டது எங்களின் நட்பு . இதில் கூத்து என்னவென்றால் , என் நண்பர்களை வாங்க , போங்க எனக் கூப்பிடுவான் . அவனிடம் கேட்டதற்கு , " டாய் மச்சான் நீ நம்ம ஆளு .. அவங்கள அப்படி கூப்பிட முடியல .. நீ அப்படி இல்லடா .." என்றான் . எனக...