Friday, July 30, 2010

கதவின்றி அமையாது...


மரங்களின் தந்தை திரு. அய்யாசாமி அவர்களைச் சந்தித்துவிட்டு திரும்பும்பொழுது, அவர் வீட்டுக்கு பக்கத்துக்கு வீட்டில் சாத்தி இருந்த கதவைப் பார்க்க நேர்ந்தது. அந்தக் கதவை என் செல்லில் படம் பிடித்துக் கொண்டேன். அந்த இரவு அந்தக் கதவைப் பற்றிய நினைவுகள் வந்த வண்ணம் இருந்தன.

எங்கள் கிராமத்து வீட்டிலும் அதே போல் ஒரு கதவு வீட்டுக்குள் இருக்கிறது. மூன்று படிகள் வைத்து, சின்ன சின்ன பூக்கள் போட்ட கதவாக இருக்கும். ஒவ்வொரு படியிலும் ஏறி கதவைத் தள்ளி விட்டு விளையாடுவோம். கதவுக்கு மேலே ஒரு அட்டாரி இருந்தது. அட்டாரியில் எதாவது எடுக்க வேண்டும் என்றால் கதவு மேல் ஏறித்தான் எடுக்க வேண்டும்.

சாமி படங்கள், நடிகர்கள் படங்கள், இயற்கைப் படங்கள் என கதவுகளில் ஒட்டிக் கொண்டே இருப்பேன். புதிய படங்கள் கிடைத்தால், பழைய படங்களை கிழித்து விட்டு புதியதை ஒட்டி விடுவேன்.

கி.ரா. வின் 'கதவு' சிறுகதையில் ஒரு கதவுக்காக அழும் சிறுவர்களைப் பற்றி சொல்லியிருப்பார். தீர்வை கட்டாமல் இருந்ததற்காக கதவைத் தலையாரி பெயர்த்து கொண்டு செல்லுகின்றான். கொஞ்ச நாள்கள் கழித்து, அந்த கதவு வைத்திருந்த இடத்தை கண்டுபிடிக்கிறார்கள். கதவு மேல் படிந்திருந்த கரையானை இடித்து விட்டு, அக்கதவைப் பார்த்து அச் சிறுவர்கள் அடையும் சந்தோசத்தை கி.ரா. அவர்கள் எழுத்தில் கொண்டுவந்திருப்பார்.

உண்மையில் பார்த்தால் கதவுகள் இருக்கும் தைரியத்தில்தான் இரவில் பயமில்லாமல் நாம் உறங்குகின்றோம். தாளிட்டு விட்டு வெளியே சென்றால் நிம்மதியாக இருக்கின்றோம். கதவுகள் நம்முடன் வாழ்கின்றன. வீட்டுக்கும், வெளிக்கும் ஒரு பாலமாக கதவுகள் இருக்கின்றன.

Tuesday, July 27, 2010

சினிமா - ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட் (Schindler's List)


உலகின் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றான 'ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட்' படத்தை இந்த வாரம் பார்த்து விட்டேன். 'லைப் இஸ் பியுட்டிபுல்' படத்துக்கு நான் எழுதிய பதிவுக்கு பின்னூட்டம் இட்டிருந்த திரு.ஜெய் அவர்கள் இப்படத்தைப் பார்க்குமாறு பரிந்துரைத்தார். ஏற்கனவே படத்தைப் பற்றி கேள்விப்பட்டிருந்தாலும், படம் பார்க்க தூண்டிய திரு.ஜெய் அவர்களுக்கு என் நன்றிகள். நண்பர் திரு.முரளி பரிந்துரைத்த ' Boy with stripped Pyjama' பார்க்க வேண்டும்.

படத்தின் ஆரம்பத்தில் ஒரு மெழுகுவர்த்தி உருகி, அணைந்த பின்னர் வரும் புகையை மேலே காட்டி அப்படியே போய் ரயிலில் வரும் புகையில் போய் முடிகின்றது. கூடவே வண்ணத்தில் இருந்த காட்சிகள் கருப்பு, வெள்ளைக்கு மாறுகின்றன.

ஆறு மில்லியன் மக்கள் கொல்லப்பட்ட வருடத்துக்கும், இடத்துக்கும் படம் நம்மை இழுத்துச் செல்கின்றது. போலந்து நாட்டில் தங்கி இருந்த யூத மக்கள் குடியிருந்த வீடுகளில் இருந்து வெளியேற்றப் பட்டு, ரயிலில் நாஜி முகாம்களுக்கு அனுப்பி வைக்கபடுகிறார்கள். ஒவ்வொருவரும் தங்கள் பெயர்களைச் சொல்லி முகாம்களில் அடைக்கப் படுகிறார்கள்.

முகாம்களில் இருந்த மக்களை என்ன செய்வார்கள்?. சித்ரவதை செய்து இறுதியில் கொல்லுவார்கள், ஒரு சிலருக்கு முதல் நாளே தண்டனை கொடுக்கப் பட்டிருக்கிறது. முகாம்களுக்கு வர மறுத்தால், வீட்டிலேயே கொன்று விட்டு செல்வார்கள்.

இந்த நேரத்தில் 'ஷிண்ட்லெர்' என்னும் ஜெர்மன் நாஜி கட்சியை சேர்ந்த ஒருவன் போலந்து நாட்டில் இருக்கும் ஜெர்மன் அதிகாரிகளோடு பழகி, ஒரு தொழிற்சாலையைக் கட்டுகிறான். தனது நிறுவனத்துக்கு வேலை செய்ய ஆட்களை நாஜி முகாம்களில் இருந்து அழைத்து வருகிறான். நாஜிக்கள் உடனே விட்டு விடுவார்களா என்ன?. ஆகவே, அவன் அழைத்து வரும் யூத மக்களுக்கு இந்தத் தொழிலில் ஏற்கனவே அனுபவம் உள்ளது போல சான்றுகளைக் காண்பித்து அழைத்து வரப்படுகிறார்கள்.

எதற்காக 'ஷிண்ட்லெர்' அங்கே போய் ஒரு தொழிலை ஆரம்பிக்க வேண்டும், அதுவும் கொல்லபடவேண்டிய யூத மக்களை ஏன் தேர்வு செய்ய வேண்டும், அனுபவம் இல்லாதவர்களை ஏன் அவன் தேர்வு செய்தான், ஒரு நாஜியாக இருந்து கொண்டு யூத மக்களை ஏன் காப்பாற்ற வேண்டும். மனிதர்கள் மேல் உள்ளே பாசம் தவிர வேறெதுவும் இல்லை.

தங்கள் வீடுகளில் இருந்து, ஒரு யூதர் கெளம்பும்போது தனது வீட்டின் கதவில் பதித்த ஒரு சின்னத்தை பிடுங்கி செல்லும் பொழுது, மனிதனுக்கு மனிதன் தான் எதிரி எனத் தோன்றியது.

சின்னா பின்னமாகி கிடக்கும் தெருவில், அனைவரும் கருப்பு வெள்ளையில் நடக்க, ஒரு சிறுமி மட்டும் வண்ண உடையில் உலாவிக் கொண்டிருப்பாள். சில காட்சிகள் தாண்டி, அந்தக் குழந்தையும் கொல்லப்பட்டு தள்ளு வண்டியில் தள்ளிக் கொண்டு போவார்கள். அப்பொழுதும் அந்தக் குழந்தை வண்ண உடையில்தான் இருக்கும். அந்தக் குழந்தைக்கு மட்டும் ஏன் வண்ண உடை என எனக்குப் புரியவில்லை. தெரிந்தவர்கள் எனக்குச் சொல்லுங்களேன்.


ஒரு இன்ச் கூட விடாமல் எல்லோரையும் ரயில் பெட்டியில் அடைத்து வைத்து விட்டு, அவர்களைக் காப்பாற்ற ஷிண்ட்லெர் தண்ணீர்க் குழாயை பீச்சும் பொழுது, நாமும் இந்த உலகத்தில் ஒரு உயிரையாவது காப்பாற்ற வேண்டும் எனத் தோன்றும். ரயிலில் அம்மக்கள் செல்லும்பொழுது, தண்ணீருக்காக ரயில் பெட்டியில் மேலே உறைந்திருக்கும் பனியை உடைத்து ஒரு குண்டாவில் போட்டுக் குலுக்கும் போது நம் கண்களில் நீர் உறைந்திருக்கும்.

உடலில் ஒரு பொட்டுத் துணி கூட இல்லாமல், நாஜி மருத்துவர்கள் தேர்வு செய்ய வரிசையில் நிற்கும் கிழவர், கிழவிகள், ஆண்கள், பெண்கள்.. . என அனைவரும் நிற்கும் இடத்தில் கண்களில் நீர் கொட்டியது. இன்னொரு இடத்தில் எல்லாப் பெண்களையும் துணியில்லாமல், ஒரு அறையில் அடைத்து கதவை மூடி விடுகிறார்கள். விளக்கு அணைந்து, மீண்டும் எரிய அனைவரும் உயிர் பயத்தில் அலறிக்கொண்டு மேலே நீட்டிக் கொண்டிருக்கும் ஷவரை பார்த்துக் கொண்டிருக்க, அதில் இருந்து விஷ வாயு வருமா இல்லை வேறு எதாவது வருமா என அவர்கள் அடையும் கலவரத்தை முகத்தில் கொண்டு வந்திருப்பார்கள். சிறிது நேரம் கழித்து அதில் இருந்து தண்ணீர் வர, அவர்கள் அழும் அழுகையை விளக்கவே முடியாது.

நாஜிக்களின் ஆட்சி முடிவுக்கு வந்த தினத்தில், ஷிண்ட்லெர் ஜெர்மனிக்கு புறப்படும் பொழுது, ஷிண்ட்லெர் காப்பாற்றி வைத்திருந்த யூத மக்கள், தங்கள் பரிசாக ஒரு பெரியவரின் பற்களில் இருந்து தங்கத்தை எடுத்து ஒரு மோதிரம் செய்து அளிக்கிறார்கள். அதை வாங்கிப் பார்த்த ஷிண்ட்லெர், 'இதோ இந்தக் கார், இந்தக் காரை Goeth- க்கு அளித்திருந்தால் அவன் இன்னும் பத்து மக்களை எனக்கு கொடுத்திருப்பான். ஏன் இந்த காரை நான் வைத்திருந்தேன்?. இது பத்து உயிர்களுக்குச் சமம். இந்த தங்க மோதிரம், இதை வைத்து இரண்டு பேரைக் காப்பாற்ற முடியாவிட்டாலும், குறைந்த பட்சம் ஒரு உயிரையாவது நான் காப்பாற்றி இருப்பேன். நான் இன்னும் நெறையப் பேரை காப்பாற்றி இருக்க வேண்டும்..' என அழுகும் காட்சியில், அந்த மாமனிதன் மனிதர்கள் மேல் வைத்த அன்புக்கு நாம் தலை வணங்க வேண்டும்.

'ஷிண்ட்லெர்' காப்பாற்றிய மக்கள் 'Schindler's Jews' என அழைக்கப்பட்டார்கள். ஷிண்ட்லெர் காப்பாற்றிய மக்களின் எண்ணிக்கை ஆயிரத்து நூறு. கருப்பு வெள்ளை காட்சி முடிந்து, படத்தின் இறுதியில், 'Oskar Schindler' என எழுதப்பட்ட ஒரு கல்லறையில், உண்மையான மனிதர்கள்(தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும், ஷிண்ட்லெர் காப்பாற்றிய யூதர்கள்) வரிசையாக யூத மக்களின் வழக்கப்படி ஒவ்வொருவரும் ஒரு கல்லை வைக்கிறார்கள். அதில் ஷிண்ட்லெர் மனைவி, திருமதி.எமிலி அவர்களும் வருவார்கள்.

'ஷிண்ட்லெர்' என்னும் மாபெரும் மனிதனை திரையில் அறிமுகப்படுத்திய 'ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்' பெயரும், படத்துக்கு உழைத்தவர்களின் பெயர்களும், கொல்லப்பட்ட யூத மக்களின் சமாதிகளின் மேல் ஒளிர்ந்து படம் முடிகின்றது. 'ஷிண்ட்லெர் லிஸ்ட்' - போரின் கொடுமையையும், உயிர்களின் அருமையையும் உணர்த்திய படம்.Monday, July 26, 2010

மரங்களின் தந்தை - திரு.அய்யாசாமி


புத்தகங்களிலும், வலைத் தளங்களிலும் சுமார் மூவாயிரம் மரங்களை வளர்த்த பெரியவர் திரு.அய்யாசாமி அவர்களைப் பற்றி படிக்கும் பொழுதெல்லாம், இவர் நம் ஊருக்கு பக்கத்தில் இருக்கிறார், போய்ப் பார்க்கவேண்டும் எனத் தோன்றும். அந்த எண்ணம் கடந்த சனிக் கிழமை அன்று நிறைவேறியது.

T.N. பாளையத்தில் நண்பனின் பெண் குழந்தையைப் பார்க்க நானும், நண்பன் கமலக்கண்ணனும் சென்றோம். கிளம்பும் போதே, கமலக் கண்ணன், 'அய்யாசாமி அய்யாவையும் பார்த்துட்டு வந்திரலாம், பக்கத்துலதான் அவர் வீடும் இருக்கு' என்றான். பிறந்த அன்று குழந்தையைப் பார்ப்பதில் உள்ள மகிழ்ச்சியை சொல்லித் தெரியவேண்டியதில்லை. புத்தம் புது மலர் போன்று இருந்த குழந்தையைப் பார்த்து விட்டு திரு.அய்யாசாமி அவர்களுக்கு செல்லில் அழைத்தோம். அவர் செல் அணைத்து வைக்கபட்டிருக்க, ஈரோடு கதிர் அவர்கள், பெரியவரின் பக்கத்துக்கு வீட்டில் குடியிருக்கும் நண்பர் திரு.விஜய் அவர்களின் எண்களைத் தன் வலைப் பக்கங்களில் குறிப்பிட்டிருந்தார். அவருக்கு செல்லில் அழைக்க, வழியைச் சொன்னார். அவருக்கும், ஈரோடு கதிர் அவர்களுக்கும் எங்கள் நன்றிகள்.

ஏலூரில் இருந்து உள்ளே செல்லும் பாதையில், வேட்டுவன் புதூர் என்னும் கிராமத்தில் பெரியவரின் வீடு அமைந்திருந்தது. அழகான கிராமம், நகரத்தின் எந்த ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக இருந்தது. இரண்டு, மூன்று பேரிடம் விசாரித்து வீட்டைக் கண்டுபிடித்த பொழுது நேரம் மாலை ஐந்து மணி ஆகியிருந்தது. அவருக்கு இன்னொரு பெயரும் இருந்தது, அது 'அப்பியா பாளையதுக்காரர்' என்பது. கிராமங்களில், அவரின் சொந்த ஊர் பேரை வைத்து கூப்பிடுவது வழக்கம். எங்கள் கிராமத்தில், இன்னும் 'ஆலாம்பாளையத்து ஆத்தா', 'காவிலிபாளையத்து ஆத்தா' என நிறைய ஆத்தாக்கள் உண்டு.

ஓடுகள் வேய்ந்த ஒரு சிறு வீடாக இருந்தது. எங்களைப் பற்றி அறிமுகம் செய்ததும், 'வாங்க.. உள்ள வாங்க. ' என்று அழைத்தார். அவர் மட்டும்தான் வீட்டில் இருந்தார். கயிறு வேய்ந்த ஒரு கட்டிலில் நாங்கள் அமர்ந்ததும், 'என்ன சாப்பிடுரிங்க' எனக் கேட்டார். ஒன்றும் வேண்டாம், இப்பொழுதுதான் டீ சாப்பிட்டு வந்தோம் என்றதும், சுவரில் மாட்டி இருந்த விருதுகளைப் பற்றியும், நாளிதழ்களிலும், புத்தகங்களிலும் வந்திருந்த செய்திகளைப் பற்றியும் சொல்ல ஆரம்பித்தார்.

பேச்சு நீண்டு கொண்டே சென்றது. 'இப்பொழுது கிராமங்களில் நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தில், மண்ணை அள்ளிக் கொட்டுகிறார்கள். அது செய்ய வேண்டிய வேலைதான், கூடவே ஒரு நாளைக்கு பத்து மரக் கன்றுகளை நட்டு வைத்து வளர்க்க செய்யலாம்' எனச் சொன்னார். அரசாங்கம் செய்யுமா என ஆதங்கத்துடன் கேட்டார்.

இன்னும் விறகு அடுப்பில்தான் சமைத்து கொண்டு இருக்கிறார்கள். ஊரில் மற்றவர்களுக்கெல்லாம் இலவச காஸ் அடுப்பு வந்து விட்டது என்றும், எங்களுக்கு மட்டும் இன்னும் கிடைக்கவில்லை. என்ன காரணம்னு தெரியல என்றார்.

நாங்கள் இந்த வருடம் 'விழுதுகள்' மூலமாக மரக் கன்றுகளை நடத் தீர்மானித்து உள்ளோம் எனக் கூறியதும் சந்தோசத்துடன், 'நல்லா செய்யுங்க.. ஏதோ என்னால முடிஞ்சது.. கொஞ்ச மரங்களை வளர்த்துட்டேன்.. உங்கள மாதிரி நெறைய பேரு வளர்க்கணும்..' எனக் கூறியவர் சில மரங்களின் விதைகளைக் கொடுத்தார்.

வீடுகள் உள்ள பகுதிகளில் மரங்களை வைக்க வேண்டாம் எனச் சொன்னார். வேர் உள்ளே செல்வது ஒரு காரணமாக இருந்தாலும், ஒரு காலத்தில் வெட்டி விடுவோம். அதனால், பள்ளி, கல்லூரி, பள்ளத்து ஓரங்களில் நட்டு வையுங்கள் என்றார்.

நான் கொஞ்சம் வேப்பம் விதைகளை எடுத்து காய வைத்திருந்தேன். எப்படி நட்டு வளர்த்துவது எனத் தெரியவில்லை. அவரிடம் கேட்டதற்கு, 'முதல்ல மண்ணைக் கொத்தி அதுல விதைகளைப் போட்டு.. முளைத்து வந்ததும், கவர்ல எடுத்து வளர்த்துங்க.. அதுக்கு அப்புறம் நல்லா வளரும்' என்றார்.

திரும்பவும் 'என்ன சாப்பிடுரிங்க.. பக்கத்துல போய் எதாவது வாங்கிட்டு வரட்டுமா' எனக் கேட்டார். நாங்கள் 'வேண்டங்கப்பா.. இன்னொரு நாள் வர்றோம்.. நாங்க கெளம்புறோம்.. நீங்க வளர்த்த மரங்களை எங்க பார்க்கலாம்' எனக் கேட்க, வழியைச் சொன்னார். வெளியே வந்தவருடன் சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு விடை பெற்றோம்.

நாங்கள் வண்டியில் ஏறும் சமயம் 'நேரம் ஆயிருச்சு (மணி ஆறு முப்பது ஆகி இருந்தது).. இன்னொரு நாள் அந்த மரங்கள பார்த்துக்கலாம்.. நீங்க வீட்டுக்கு கெளம்புங்க... ' என்றார் ஒரு தந்தையின் பாசத்தோடு. அவரிடம் சரி என்று சொல்லிவிட்டு, மரங்களைப் பார்த்து விட்டுத்தான் வந்தோம்.
(நண்பன் கமலக்கண்ணன் அய்யாவுடன்)

அவர் கொடுத்த விருட்சங்களின் விதைகள் என் கால் சட்டைப் பையில் கனமில்லாமல் இருந்தன. எண்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் திரு.அய்யாசாமி அவர்கள் பிரதி பலன் பார்க்காமல் மரங்களை நட்டு வளர்த்துள்ளார். அவர் கொடுத்த இந்த விதைகள் பல்கிப் பெருகி இந்த பூமியெங்கும் பசுமையாய் ஆகட்டும். ஆம், சில நேரங்களில் கனவுகளும் பலிக்கும். விண்ணை நோக்கி வளரும் விருட்சங்களின் விதைகள் என் கையில். சிறு விதைகளில் இருந்து தானே உலகின் அனைத்து மாற்றங்களும் நடக்கின்றன.

Wednesday, July 21, 2010

ஏமாற்று வியாபாரிகள்

காய்கறி அங்காடியில்
பேரம் முடிந்து
விற்றவனும், வாங்கியவனும்
விலை அதிகம் எனவும்
குறைவு எனவும்
சிறு முணுமுணுப்புடன் விலகினர்...

இரண்டு சொத்தைக் காய்களைத்
தள்ளிவிட்டதில் விற்றவனும்
கிழிந்து போனதொரு பத்து ரூபாய்த் தாளை
மடித்துக் கொடுத்ததில் வாங்கியவனும்
உள்ளூர மகிழ்ந்த
கணத்தில்...

கடவுள்
தன் கையிலிருந்த
தராசையும் எடைக் கற்களையும்
வீசியெறிந்து விட்டு
நித்திரையைத் தொடர்ந்தார்.

Monday, July 19, 2010

சினிமா - லைப் இஸ் பியுட்டிபுல் (Life Is Beautiful)பரந்து விரிந்த இந்த பூமியில், எவ்வளவு மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஒவ்வொருவரின் பின்னாலும் மிக நீண்ட கதை இருந்திருக்கும். ஒரு சிலர் தங்கள் கதைகளை சொல்லிவிட்டு சென்றார்கள். மற்றவர்கள் மண்ணில் புதைக்கப் படும்போதே, அவர்களின் வரலாறும் சேர்ந்தே புதைக்கப்படுகிறது. சொல்லப்பட்ட கதைகளை விட, சொல்லாமல் விட்ட கதைகள் தான் அதிகமாக இருக்கும்.

உலகம் அழகானது. வாழ்க்கையும் கூட அழகானதுதான். ஆனால், வாழ்க்கையே போராட்டமாக மாறினால்?. 'Life Is Beautiful' படம் பற்றி நிறையத் தடவை கேள்விப்பட்டிருந்தாலும் நேற்றுதான் பார்க்க முடிந்தது. 'இது ஒரு சாதாரணக் கதை.. ஆனால் அவ்வளவு எளிதாக சொல்லிவிட முடியாது.. .' என படத்தின் ஆரம்பித்திலேயே சொல்லிவிடுகிறார்கள்.

உலகப் போரின்போது சித்திரவதை செய்யப்பட்ட யூத மக்களின் கண்ணீர் துளிகளில், ஒரு துளி இந்தக் கதை. பல வருடங்கள் ஓடியும் இன்னும் இந்த சமுதாயம் திருந்தவில்லை, அதற்கு சான்று இலங்கை. பட்டியில் அடைப்பது போல அடைக்கப்பட்ட மக்களின் குடும்பம் என்ன ஆனது, குழந்தைகள் என்ன ஆனார்கள், வயதான பெற்றோர் என்ன பண்ணியிருப்பார்கள். இதைவிடக் கொடுமை,யூதர்களை ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் எனப் பிரித்து அடைத்து வைத்து அழித்தொழிக்க அந்த மக்கள் என்ன பாவம் செய்தார்கள்.

'லைப் இஸ் பியுட்டிபுல்' படத்தின் நாயகன், கைடோ இத்தாலியில் புத்தக கடை வைத்து நடத்தி வருகிறான். படத்தின் முதல் பாதி முழுவதும் சிரிப்புடனே நகர்கின்றது. அங்குதான் அவனின் மாமாவும் இருக்கிறார். இவர்கள் யூதர்கள் என்பதால் அடிக்கடி அவமானப்படுத்த படுகிறார்கள். டோரா எனும் இத்தாலிப் பெண்ணுடன் காதல் ஏற்படுகிறது. டோராவின் அம்மா இன்னொருவருக்கு அவளை நிச்சயம் செய்ய முயற்சிக்க, கைடோ அவளைத் திருமணம் செய்துகொள்ளுகிறான். மகிழ்ச்சியான வாழ்கையில், அழகான ஒரு குழந்தை. பெயர் ஜோசுவா. நான்கு வயதான ஜோசுவாவின் பிறந்த நாள் அன்று, அவனின் பாட்டியான டோராவின் அம்மா அவனை வாழ்த்த வீட்டுக்கு வர விரும்புகிறார்.

பிறந்த நாள் அன்று காலையில், அம்மாவை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வரும் டோரா, வீட்டுக்குள் பொருட்கள் சிதறிக் கிடைப்பதை பார்த்து ஏதோ புரிந்து கொள்ளுகிறாள். நேராக ரயில் நிலையம் சென்று கைடோவும், மகனும் இருக்கும் ரயிலில் தன்னையும் அனுப்புமாறு அதிகாரியிடம் கேட்க, அவனும் அவளை இன்னொரு பெட்டியில் ஏற்றிவிடுகிறான். ரயில் ஒரு இடத்தில நிற்க, பெண்கள், ஆண்கள், முதியவர்கள் எனத் தனி தனியாகப் பிரித்து அந்த வளாகத்தில் அடைக்கிறார்கள். கைடோவும், ஜோசுவாவும் ஓரிடத்தில், டோரா இன்னொரு இடத்தில்.

அந்தக் குழந்தையை கைடோ சமாளிப்பதும், ஜோசுவா கேட்கும் கேள்விகளுக்கு போர், ரத்தம் என பயம் காட்டாமல் 'இது ஒரு விளையாட்டு' எனச் சொல்வதும், ஒரு தகப்பன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளம் கைடோ. மூவரும் என்ன ஆனார்கள் ?, படத்தைப் பாருங்களேன். எவ்வளவு அழகான வாழ்க்கை நமக்கெல்லாம் என்று தோன்றும்.கண்ணீர்த் துளிகள்;
துளி 1 :
'Dogs and Jewish are not allowed' என ஒரு கடையில் எழுதியிருக்கும். அதைப் பற்றி ஜோசுவாவும், கைடோவும் பேசும்பொழுது சிந்தியது. கவனிக்க, நம் நாட்டில் இன்னும் தீண்டாமை ஒழியவில்லை. எல்லா சாதியினர் வீட்டுக்குள், எல்லா சாதியினரும் செல்ல முடிவதில்லை என்பதை நினைத்துப் பார்க்கவும்.

துளி 2 :
தனியாக கடையில் அமர்ந்திருக்கும் ஜோசுவாவை அவன் பாட்டி பார்க்க வரும்பொழுது.

துளி 3 :
இப்படி அடைத்து வைத்திருப்பது, சாப்பாடு இல்லாமல் இருப்பது இதெல்லாம் எதற்கு என ஜோசுவா கேட்க 'இது ஒரு விளையாட்டு' என கைடோ சொல்லுமிடம். ஆம், ஆட்சியில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் ஒரு விளையாட்டு தானே என எனக்கு நினைவுக்கு வந்தது.

துளி 3 :
கைடோ தான் கொல்லப்படும் சமயம், பையனுக்கு தெரியாமல் இருக்க வீர நடை நடந்து போகும் பொழுது.

துளி 4 :
போட்டியில் வெற்றி பெற்றால் பையனுக்கு ஒரு 'Tank' கிடைக்கும் எனச் சொல்லியிருந்தான் கைடோ. இறுதியில் 'Tank' மேலமர்ந்து வரும் வீரர், ஜோசுவாவை தூக்கி வைத்துகொள்ள அவன் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ளும்பொழுது.

முடிவாக, 'அன்பே சிவம்' படத்தின் இறுதியில் 'இந்த உலகத்தில் மறைந்து கிடக்கும் ஆச்சரியங்கள் ஏராளம்' என ஒரு வரி வரும். அந்த ஆச்சரியங்களை பார்த்து ஆனந்தப் படாமல், மனிதர்களை காவு வாங்க வைக்கும் போர்களை நடத்தும் மனிதர்களை என்ன செய்யலாம்?.


Wednesday, July 14, 2010

மரங்களில்லா வாழ்வு.. ? (ஒரு கேள்விக்குறி)


நாம் இருக்கும் அலுவலகம், வீடு என எல்லாமே ஒரு காலத்தில் மரங்கள் சூழ்ந்த காடுகளாகவும், விவசாய நிலங்களாகவும் இருந்தது தான். அழிக்க மட்டும் முடிந்த நம்மால் ஒரு சிறு மரத்தை நட்டு பாதுகாக்க முடிவதில்லை.

கோவை - மேட்டுப்பாளையம் சாலை அகலப்படுத்தும் பணிக்காக, சாலையின் இருபுறமும் இருந்த புளிய மரங்கள் வெட்டப் பட்டுக் கொண்டிருக்கின்றன. மரமா, மனிதனா என்று கேட்டால் மனிதன் தான் முக்கியம் எனச் சொல்லும் மனிதர்கள் உள்ள இந்த காலத்தில் மரங்கள் அழிவதை எப்படித் தடுக்க முடியும். மரங்களைப் பற்றி யாருக்கு என்ன கவலை, எல்லாவற்றுக்கும் சட்டத்தில் வழி உண்டு.

நண்பர் திரு.பிரகாஷ் அவர்கள் தனது வலைத்தளத்தில் இது பற்றி எழுதியிருந்தார். http://saamakodangi.blogspot.com/2010/07/blog-post.html. அவருக்கு எனது நன்றிகள் பல. அந்த மரங்களுக்கு அருகில் இருந்தவன் என்பதனால் எனக்கு மிக்க வருத்தம்.

எல்லா மரங்களையும் வெட்டி விட்டு சுவாசக் காற்றுக்கு வரிசையில் நிற்க வேண்டி வந்தாலும் வரலாம். நம் சந்ததிகளுக்கு எதை கொடுக்க போகிறோம்?. வாடகைக்கு அறைகள் கட்டும் இடங்களில், கொஞ்சம் மரங்கள் வளர்க்கவும் இடம் ஒதுக்கலாம். ஓங்கி வளர்ந்த அழகு மரங்களை வளர்க்கும் நமது IT நிறுவனங்கள், கொஞ்சம் வேப்ப மரம் போன்றவற்றையும் வளர்க்கலாம்.

இந்த உலகில் இருந்து எவ்வளவோ பெற்று கொண்ட நாம் ஒரு மரத்தை நட்டு வைத்தால் என்ன நண்பர்களே..

நாளை சாலைகள் இருக்கும். அந்த மரங்கள் இருக்காது.
பூமி இருக்கும். சுவாசிக்க காற்றுதான் இருக்காது.மரத்திற்கு;

தாய், செல்வம் என எப்படி உங்களை அழைப்பது?. தாய் என்றால், என் தாய்க்கும் முன்னால் இருந்து நீங்கள் இருந்தீர்கள். செல்வம் என்றால், உங்களை செல்வம் என எப்படி அழைப்பது, நீங்கள் கொடுத்தது கொடை அல்லவா ?. ஆகையால் நீங்கள் கடவுள்கள்.

கடவுள்களே, நாங்கள் சுவாசிக்க காற்று தந்தீர், கனி தந்தீர், நிழல் தந்தீர், மழை தந்தீர். ஆனால் நாங்களோ, உங்களுக்கு மரணத்தைப் பரிசளிக்கிறோம். எங்களை மன்னியுங்கள். இரக்கமற்ற பாவிகள் நாங்கள்.

போய் வாருங்கள் கடவுள்களே....
குறிப்பு:
எங்கள் விழுதுகள் மூலமாக இந்த வருடம் மரக் கன்றுகளை நட எண்ணியுள்ளோம்.
மேலே இருக்கும் பசுமையான படங்கள் போன வருடம், அதே சாலையில் எடுத்தவை.

Wednesday, July 7, 2010

களம்

அவனுக்கும் இவனுக்கும் பகை
களத்தில் நின்றார்கள்

ஒருவன் ஐநூறு என்றும்
ஒருவன் ஐந்தாயிரம் என்றும்
கொன்றார்கள் பகைவர்களை

இறுதியில்
ஐந்தாயிரம் கொன்றவனே
வெற்றி பெற்றவன் ஆனான்

அவனே நாயகனும்
அவனே பாட்டுடைத் தலைவனும் ஆனான்
அதிகம் கொன்றவனே
அரியணையிலும் அமர்ந்தான் !!

Sunday, July 4, 2010

மாட்டி வைத்து என்ன பயன்?


உண்டு, உடை, உறை என் மனிதனுக்கு மூன்று தேவைகள். இதில் முதல் இரண்டுக்கும் உறுதுணையாக இருப்பது விவசாயமும், நெசவும். எங்கள் கிராமத்தில் நெசவும் உழவும் இரண்டும் இருந்தன ஒருகாலத்தில். இன்று இரண்டுமே அழிவின் விளிம்பில்.

ஊர் முழுவதும் முப்பது கைத் தறிகள் நெய்த காலம் போய், இன்று இரண்டு தறிகள் மட்டுமே எஞ்சி இருக்கின்றன. இன்னும் நெய்து கொண்டிருப்பவர்களில் எங்கள் அப்பாவும் ஒருவர். கைத் தறி என்றால், சர்வோதயா சங்க வேட்டி(இப்பொழுது கிடைக்கிறதா எனத் தெரியவில்லை). வேட்டியில் கூலி குறைவாக இருந்ததால், பத்து வருடங்களுக்கும் மேலாகவே அப்பா கைத்தறி கொசுவலை நெய்து கொண்டிருக்கிறார்.

அடுத்த தலைமுறையில் யாருமே நெசவைக் கற்றுக்கொள்ளவில்லை. கற்றுக்கொள்ள பிரியபடவும் இல்லை. அப்படியே இந்த தொழில்களை செய்தாலும் குடும்ப வருமானம் தினமும் இருநூறு ரூபாயைத் தாண்டாது. அந்த காலத்தை விட இப்பொழுது கூலி அதிகம் என்கிறார்கள். இதற்கு குடும்பத்தில் மூன்று பேர் உழைக்க வேண்டும். அதே மூன்று பேர் வேறு வேலைக்கு சென்றால், பக்கத்தில் இருக்கும் திருப்பூர் பனியன் கம்பெனிக்கு சென்றால் அறுநூறு ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பார்கள்.

முறை வைத்து 'பாவை'க் காயவைத்து தறி நெயதவர்கள் இன்று இல்லை. பாவு ஓடிய அந்த தூண்கள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. அன்று அந்த கற்களுக்கு மரியாதை இருந்தது, பாவடி கல் என்று. இன்று அந்த வழியாக செல்லும் பழையவர்கள் நினைத்துப் பார்க்க கூடும்.

தறிகளின் சத்தத்தில் பிறந்து, வளர்ந்து இன்று அதை எங்கே கேட்பதென தெரியவில்லை. இன்னும் சில வருடங்கள் கழித்து, எங்கள் வாரிசுகளுக்கு அறிமுகபடுத்த கூட முடியாது போல இருக்கிறது.

ஒரு ஜவுளி கடையில், ஒரு பாஷன் புடவைக்கு இருக்கும் மரியாதை சாதாரண நூல் புடவைக்கு கிடைப்பதில்லை. அப்படியே இருந்தாலும் அது 'பிராண்ட்' காக இருக்குமே ஒழிய, அதை நெய்தவனுக்கு அதன் பலன் போய்ச் சேர்வதில்லை.

இந்த தேசத்தில் ஒரு மகாத்மா ஒரு ராட்டையை கொண்டு தனது வலிமையை உலகுக்கு உணர்த்தினார். ராட்டையில் நூல் நூற்று கொண்டு, அவர் அமர்ந்திருக்கும் அந்த படத்தை மட்டும் நம் நாட்டு அலுவலகங்களில் மாட்டிக் கொண்டார்கள். மாட்டி வைத்து என்ன பயன்?