Friday, July 30, 2010

கதவின்றி அமையாது...


மரங்களின் தந்தை திரு. அய்யாசாமி அவர்களைச் சந்தித்துவிட்டு திரும்பும்பொழுது, அவர் வீட்டுக்கு பக்கத்துக்கு வீட்டில் சாத்தி இருந்த கதவைப் பார்க்க நேர்ந்தது. அந்தக் கதவை என் செல்லில் படம் பிடித்துக் கொண்டேன். அந்த இரவு அந்தக் கதவைப் பற்றிய நினைவுகள் வந்த வண்ணம் இருந்தன.

எங்கள் கிராமத்து வீட்டிலும் அதே போல் ஒரு கதவு வீட்டுக்குள் இருக்கிறது. மூன்று படிகள் வைத்து, சின்ன சின்ன பூக்கள் போட்ட கதவாக இருக்கும். ஒவ்வொரு படியிலும் ஏறி கதவைத் தள்ளி விட்டு விளையாடுவோம். கதவுக்கு மேலே ஒரு அட்டாரி இருந்தது. அட்டாரியில் எதாவது எடுக்க வேண்டும் என்றால் கதவு மேல் ஏறித்தான் எடுக்க வேண்டும்.

சாமி படங்கள், நடிகர்கள் படங்கள், இயற்கைப் படங்கள் என கதவுகளில் ஒட்டிக் கொண்டே இருப்பேன். புதிய படங்கள் கிடைத்தால், பழைய படங்களை கிழித்து விட்டு புதியதை ஒட்டி விடுவேன்.

கி.ரா. வின் 'கதவு' சிறுகதையில் ஒரு கதவுக்காக அழும் சிறுவர்களைப் பற்றி சொல்லியிருப்பார். தீர்வை கட்டாமல் இருந்ததற்காக கதவைத் தலையாரி பெயர்த்து கொண்டு செல்லுகின்றான். கொஞ்ச நாள்கள் கழித்து, அந்த கதவு வைத்திருந்த இடத்தை கண்டுபிடிக்கிறார்கள். கதவு மேல் படிந்திருந்த கரையானை இடித்து விட்டு, அக்கதவைப் பார்த்து அச் சிறுவர்கள் அடையும் சந்தோசத்தை கி.ரா. அவர்கள் எழுத்தில் கொண்டுவந்திருப்பார்.

உண்மையில் பார்த்தால் கதவுகள் இருக்கும் தைரியத்தில்தான் இரவில் பயமில்லாமல் நாம் உறங்குகின்றோம். தாளிட்டு விட்டு வெளியே சென்றால் நிம்மதியாக இருக்கின்றோம். கதவுகள் நம்முடன் வாழ்கின்றன. வீட்டுக்கும், வெளிக்கும் ஒரு பாலமாக கதவுகள் இருக்கின்றன.

2 comments:

  1. உங்களின் நினைவுகளை எப்பொழுதும் அசை போட்டுக் கொண்டு இருப்பீங்க போல..?

    ReplyDelete
  2. அப்படி எல்லாம் இல்லை பிரகாஷ், ஏதோ ஒன்றை பார்க்கும் பொழுது அது நான் பார்த்து வளர்ந்த மற்றவைகளை என் நினைவுக்கு கொண்டு வருகிறது. அம்மா என்று எங்கேனும் கேட்டால், அம்மாவின் முகாம் நினைவுக்கு வருவது போல.
    அந்தக் கதவை பார்க்காமல் இருந்திருந்தால், என் வீட்டு கதவு எனக்கு நினைவுக்கு வந்திருக்காது என்பதே உண்மை.
    நன்றி பிரகாஷ்

    ReplyDelete