புத்தகங்களிலும், வலைத் தளங்களிலும் சுமார் மூவாயிரம் மரங்களை வளர்த்த பெரியவர் திரு.அய்யாசாமி அவர்களைப் பற்றி படிக்கும் பொழுதெல்லாம், இவர் நம் ஊருக்கு பக்கத்தில் இருக்கிறார், போய்ப் பார்க்கவேண்டும் எனத் தோன்றும். அந்த எண்ணம் கடந்த சனிக் கிழமை அன்று நிறைவேறியது.
T.N. பாளையத்தில் நண்பனின் பெண் குழந்தையைப் பார்க்க நானும், நண்பன் கமலக்கண்ணனும் சென்றோம். கிளம்பும் போதே, கமலக் கண்ணன், 'அய்யாசாமி அய்யாவையும் பார்த்துட்டு வந்திரலாம், பக்கத்துலதான் அவர் வீடும் இருக்கு' என்றான். பிறந்த அன்று குழந்தையைப் பார்ப்பதில் உள்ள மகிழ்ச்சியை சொல்லித் தெரியவேண்டியதில்லை. புத்தம் புது மலர் போன்று இருந்த குழந்தையைப் பார்த்து விட்டு திரு.அய்யாசாமி அவர்களுக்கு செல்லில் அழைத்தோம். அவர் செல் அணைத்து வைக்கபட்டிருக்க, ஈரோடு கதிர் அவர்கள், பெரியவரின் பக்கத்துக்கு வீட்டில் குடியிருக்கும் நண்பர் திரு.விஜய் அவர்களின் எண்களைத் தன் வலைப் பக்கங்களில் குறிப்பிட்டிருந்தார். அவருக்கு செல்லில் அழைக்க, வழியைச் சொன்னார். அவருக்கும், ஈரோடு கதிர் அவர்களுக்கும் எங்கள் நன்றிகள்.
ஏலூரில் இருந்து உள்ளே செல்லும் பாதையில், வேட்டுவன் புதூர் என்னும் கிராமத்தில் பெரியவரின் வீடு அமைந்திருந்தது. அழகான கிராமம், நகரத்தின் எந்த ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக இருந்தது. இரண்டு, மூன்று பேரிடம் விசாரித்து வீட்டைக் கண்டுபிடித்த பொழுது நேரம் மாலை ஐந்து மணி ஆகியிருந்தது. அவருக்கு இன்னொரு பெயரும் இருந்தது, அது 'அப்பியா பாளையதுக்காரர்' என்பது. கிராமங்களில், அவரின் சொந்த ஊர் பேரை வைத்து கூப்பிடுவது வழக்கம். எங்கள் கிராமத்தில், இன்னும் 'ஆலாம்பாளையத்து ஆத்தா', 'காவிலிபாளையத்து ஆத்தா' என நிறைய ஆத்தாக்கள் உண்டு.
ஓடுகள் வேய்ந்த ஒரு சிறு வீடாக இருந்தது. எங்களைப் பற்றி அறிமுகம் செய்ததும், 'வாங்க.. உள்ள வாங்க. ' என்று அழைத்தார். அவர் மட்டும்தான் வீட்டில் இருந்தார். கயிறு வேய்ந்த ஒரு கட்டிலில் நாங்கள் அமர்ந்ததும், 'என்ன சாப்பிடுரிங்க' எனக் கேட்டார். ஒன்றும் வேண்டாம், இப்பொழுதுதான் டீ சாப்பிட்டு வந்தோம் என்றதும், சுவரில் மாட்டி இருந்த விருதுகளைப் பற்றியும், நாளிதழ்களிலும், புத்தகங்களிலும் வந்திருந்த செய்திகளைப் பற்றியும் சொல்ல ஆரம்பித்தார்.
பேச்சு நீண்டு கொண்டே சென்றது. 'இப்பொழுது கிராமங்களில் நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தில், மண்ணை அள்ளிக் கொட்டுகிறார்கள். அது செய்ய வேண்டிய வேலைதான், கூடவே ஒரு நாளைக்கு பத்து மரக் கன்றுகளை நட்டு வைத்து வளர்க்க செய்யலாம்' எனச் சொன்னார். அரசாங்கம் செய்யுமா என ஆதங்கத்துடன் கேட்டார்.
இன்னும் விறகு அடுப்பில்தான் சமைத்து கொண்டு இருக்கிறார்கள். ஊரில் மற்றவர்களுக்கெல்லாம் இலவச காஸ் அடுப்பு வந்து விட்டது என்றும், எங்களுக்கு மட்டும் இன்னும் கிடைக்கவில்லை. என்ன காரணம்னு தெரியல என்றார்.
நாங்கள் இந்த வருடம் 'விழுதுகள்' மூலமாக மரக் கன்றுகளை நடத் தீர்மானித்து உள்ளோம் எனக் கூறியதும் சந்தோசத்துடன், 'நல்லா செய்யுங்க.. ஏதோ என்னால முடிஞ்சது.. கொஞ்ச மரங்களை வளர்த்துட்டேன்.. உங்கள மாதிரி நெறைய பேரு வளர்க்கணும்..' எனக் கூறியவர் சில மரங்களின் விதைகளைக் கொடுத்தார்.
வீடுகள் உள்ள பகுதிகளில் மரங்களை வைக்க வேண்டாம் எனச் சொன்னார். வேர் உள்ளே செல்வது ஒரு காரணமாக இருந்தாலும், ஒரு காலத்தில் வெட்டி விடுவோம். அதனால், பள்ளி, கல்லூரி, பள்ளத்து ஓரங்களில் நட்டு வையுங்கள் என்றார்.
நான் கொஞ்சம் வேப்பம் விதைகளை எடுத்து காய வைத்திருந்தேன். எப்படி நட்டு வளர்த்துவது எனத் தெரியவில்லை. அவரிடம் கேட்டதற்கு, 'முதல்ல மண்ணைக் கொத்தி அதுல விதைகளைப் போட்டு.. முளைத்து வந்ததும், கவர்ல எடுத்து வளர்த்துங்க.. அதுக்கு அப்புறம் நல்லா வளரும்' என்றார்.
திரும்பவும் 'என்ன சாப்பிடுரிங்க.. பக்கத்துல போய் எதாவது வாங்கிட்டு வரட்டுமா' எனக் கேட்டார். நாங்கள் 'வேண்டங்கப்பா.. இன்னொரு நாள் வர்றோம்.. நாங்க கெளம்புறோம்.. நீங்க வளர்த்த மரங்களை எங்க பார்க்கலாம்' எனக் கேட்க, வழியைச் சொன்னார். வெளியே வந்தவருடன் சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு விடை பெற்றோம்.
நாங்கள் வண்டியில் ஏறும் சமயம் 'நேரம் ஆயிருச்சு (மணி ஆறு முப்பது ஆகி இருந்தது).. இன்னொரு நாள் அந்த மரங்கள பார்த்துக்கலாம்.. நீங்க வீட்டுக்கு கெளம்புங்க... ' என்றார் ஒரு தந்தையின் பாசத்தோடு. அவரிடம் சரி என்று சொல்லிவிட்டு, மரங்களைப் பார்த்து விட்டுத்தான் வந்தோம்.
(நண்பன் கமலக்கண்ணன் அய்யாவுடன்)
அவர் கொடுத்த விருட்சங்களின் விதைகள் என் கால் சட்டைப் பையில் கனமில்லாமல் இருந்தன. எண்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் திரு.அய்யாசாமி அவர்கள் பிரதி பலன் பார்க்காமல் மரங்களை நட்டு வளர்த்துள்ளார். அவர் கொடுத்த இந்த விதைகள் பல்கிப் பெருகி இந்த பூமியெங்கும் பசுமையாய் ஆகட்டும். ஆம், சில நேரங்களில் கனவுகளும் பலிக்கும். விண்ணை நோக்கி வளரும் விருட்சங்களின் விதைகள் என் கையில். சிறு விதைகளில் இருந்து தானே உலகின் அனைத்து மாற்றங்களும் நடக்கின்றன.
ரொம்ப நல்ல காரியம் பண்ணியிருக்கீங்க
ReplyDelete// ஈரோடு கதிர் said...
ReplyDeleteரொம்ப நல்ல காரியம் பண்ணியிருக்கீங்க//
கதிர் அண்ணா, எனது பதிவையும் வந்து வாசித்தமைக்கு தங்களுக்கு நன்றி..
அவரைப் பற்றி எங்களுக்கு அறிமுகப் படுத்தியதில் உங்களுக்கும் நாங்கள் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்...
அஹா.. இவரைக் கண்டிப்பாகப் பார்க்கணும்.. நன்றிகள் இளங்கோ..
ReplyDelete//பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said... அஹா.. இவரைக் கண்டிப்பாகப் பார்க்கணும்.. நன்றிகள் இளங்கோ..//
ReplyDeleteகண்டிப்பாக பிரகாஷ்.. சுயநலம் வளர்ந்து வரும் இந்த காலத்தில், கண்டிப்பாக திரு. அய்யாசாமி போன்றவர்களை நான் சந்திக்க வேண்டும்..
//பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said... அஹா.. இவரைக் கண்டிப்பாகப் பார்க்கணும்.. நன்றிகள் இளங்கோ..//
ReplyDeleteகண்டிப்பாக பிரகாஷ்.. சுயநலம் வளர்ந்து வரும் இந்த காலத்தில், கண்டிப்பாக திரு. அய்யாசாமி போன்றவர்களை நாம் சந்திக்க வேண்டும்..
வணக்கம் இளங்கோ. உங்கள் வலைதளம் சுவாரஸ்யமாய் இருக்கிறது.
ReplyDeleteஎனக்கு பிடித்த இலக்கணமாய் வாழ்ந்த இந்த முதியவரைப் பற்றிய பதிவை
வலைச்சரத்தில் இணைத்திருக்கிறேன். நன்றி :)
கீழிருக்கும் சுட்டி வலைச்சரத்தில் இணைத்த பதிவுக்கானது.
http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_25.html
@Shakthiprabha
ReplyDeleteநன்றிங்க
நல்ல பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்.