Thursday, December 31, 2009

தொலைந்த எழுத்து

வெகு நாளாக
புரட்டாத புத்தகத்தில்
ஒரு பூச்சி
உயிர் விட்டிருந்தது...

உயிர் விட்டிருந்த
பக்கத்தில்
ஓர் எழுத்தை
மறைத்து கிடந்தது..

பூச்சியை
எடுத்த பின்
அவ்விடத்தில் இருந்த எழுத்தும்
காணவில்லை...

எந்த எழுத்தை
போட்டும் அவ்வாக்கியத்தை
நிரப்ப முடியவில்லை
அதன் உயிரைப் போல...

Tuesday, December 29, 2009

மோகமுள்

மோகத்தை அழித்துவிடு, இல்லால் என் உயிரை போக்கி விடு - என்கிறார் மகாகவி. மோகம், அனைத்தையும் வீழ்த்தி விடும். மோகத்தால் அழிந்தோரின் கணக்கு ராவணனிடமிருந்து ஆரம்பிக்கிறது.


மனித இனம் எப்பொழுது குடும்பம் என்கிற சிறைக்குள் அகபட்டதோ, அப்போதிருந்தே காமமும் அடக்கி வைக்கப் பட்டிருக்க வேண்டும். இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற நியதிகள் விதிக்கப்படுகின்றன. மீறியவர்களை ஊர் தவறாக சித்தரித்தது.


ஆணுக்கு பெண் தேடும்பொழுது கூட, அவனை விட வயது குறைந்த பெண்ணை தேடுவது வழக்கம். காதலிக்கும்போதும் ஒத்த அல்லது வயது குறைவான பெண்ணையே தேர்வதும் வழக்கம். தன்னை விட வயதில் மூத்த பெண்ணை காதலிப்பதும், அவள் மறுத்தும், அவளின் சம்மதம் வரும் வரையில் காத்திருக்கிறான், தி.ஜானகிராமன் அவர்கள் எழுதிய "மோகமுள்ளின்" கதாநாயகன். அவன்தான் பாபு , அவன் காதலிப்பது யமுனாவை.


பாபு தன்னுடைய சின்ன வயதில் இருந்தே, யமுனாவை அக்கா என்றே பழகி வருகிறான். அவனை விட பத்து வயது மூத்தவள். ஆனால் சில சமயங்களில் அவளின் அழகை அவன் ரசிக்க ஆரம்பிக்கிறான். அவளுக்கும் கல்யாணம் ஆகாமல் தடை பட, இவன் உள்ளத்தில் உள்ளதை அவளிடம் சொல்லுகிறான். முதலில் சம்மதிக்காத அவள், கால சக்கரத்தில் சுழன்று எட்டு வருடங்கள் கழித்து அவனிடம் சரி சொல்லுகிறாள். இந்த இடை பட்ட காலங்களில் நடக்கும் கதைக்கும் அவர்களின் உள்ளத்துக்கும் நம்மை கை பிடித்து அழைத்து செல்கிறார் தி.ஜானகிராமன்.


எட்டு வருடங்கள் கழித்து அவள் கேட்கிறாள்;
"நீ என்னை மறந்திருப்பேன்னு நெனச்சேன். மோகமுள் முப்பது நாள் குத்தும்.. அதுக்கு அப்புறம் மழுங்கிடும்பாங்க. எட்டின மோகம் மட்டும் இல்லை. எட்டாத மோகமும் அப்படிதான். நீ மாறவே இல்லையா பாபு" - யமுனா.


"பழைய காலத்திலே நெருப்பு பெட்டி கிடையாதாம். அதனால ஒவ்வொரு வீட்லயும் ஒரு குண்டான்ல நெருப்பு போட்டு மூடி வெச்சிருப்பாங்க. மறுநாள் காலமே கொஞ்சம் சுள்ளியும் வராட்டியும் போட்டு விசிறினால் போதும். அப்படி காப்பாத்திட்டு வந்தாங்க அக்கினிய" - என்கிறான் பாபு.

இவர்கள் இருவரை தவிர, பாபுவின் அப்பா, அம்மா, நண்பன் ராஜம், பாட்டு வாத்தியார் ரங்கா அண்ணா, யமுனாவின் அம்மா, காவேரி கரை என எல்லாவற்றையும் நேரில் பார்ப்பது போல நாவல் கொண்டு செல்கிறது.

எட்டாத மோகம் எட்டி விட்ட முடிவில் நாவலை முடிக்கிறார் தி.ஜானகிராமன் அவர்கள். ஒரு வரைமுறைக்குள் இருக்கும் ஊர் எதைத்தான் ஒத்து கொண்டது. மோகமுள் எல்லோரிடமும் எப்பவாவது குத்தி கொண்டுதானே இருக்கிறது. ஒரு ஓரத்தில் அதையும் ரசித்து கொண்டுதானே இருக்கிறோம் நாம், வலியைப் பொறுத்துக்கொண்டு.

Monday, December 28, 2009

பேருந்துக்குள் தட்டான்

விரைந்து போன
பேருந்தில்
எப்படியோ உள்வந்த
தட்டான்
கண்ணாடி சன்னலில்
முட்டி மோதியது வெளியேற
கண்ணாடி சன்னலில்
சாய்ந்து தூங்கியிருந்த
பெண்ணின்
முகத்திலும்
அதே
சலனங்கள்...

Friday, December 18, 2009

புகைப்படங்கள்









































































































இவை யாவும் என்னுடைய அலை பேசியிலிருந்து எடுக்கப்பட்டவை..

மேட்டுபாளையம் ஆறு..

சென்னை, அண்ணா பல்கலைகழகம்

கொடைக்கானல்

பழனி

பழனி

ஊட்டி
ஊட்டி

ஒரு புன்னகை
அவினாசி கோவில்

அவினாசி கோவில்

பூக்களின் அழகு
இரவும் மலரும்

மற்றும் ஒரு புன்னகை

ஊட்டி

ஊட்டி

Sunday, December 13, 2009

பாரதியும் ரஜினியும்

டிசம்பர் 11 அன்று மகா கவி பாரதியின் பிறந்த நாள். ஊரும் உலகமும் மறைந்த அந்த கவியை நினைத்து பார்க்க நேரமில்லாமல் இருந்தனர். அக்னி குஞ்சாய் வலம் வந்த பாரதியை நினைக்கவும் ஆள் இல்லை. ஒரு சில வலை தளங்களில் மட்டும் பாரதியை பற்றிய கட்டுரைகள் காணக் கிடைத்தன.

அதற்கு அடுத்த நாள்....

பிறந்த நாளை முன்னிட்டு அவரின் திரை படங்கள் அனைத்து டிவி களிலும், ஊர் எங்கும் அன்ன தானங்கள், சிறுவர்களுக்கு சில பரிசளிப்புகள், அனைத்து நாளிதழ்களிலும் ஒரு பக்க வண்ண புகைப்படம், தலைப்பு செய்திகள், இடை விடாமல் அவர் புகழ் பாட எப்.எம். ரேடியோக்கள், பட்டாசு வெடிப்புகள்... இன்னும் நிறைய நடந்தது..

இதை எல்லாம் விட உச்ச பட்சம்.. அவருக்காக பால் குடம் எடுத்த ரசிக மக்களும், சிறப்பு பிரார்த்தனை நடத்திய மக்களும் தான்...

அவர் வேறு யாருமில்லை.. நமது சூப்பர் ஸ்டார் ரஜினி தான்..

ரஜினி கொண்டாட பட வேண்டியவர்தான்.. இல்லை என்று சொல்லவில்லை.. ஆனால் பாரதியின் பிறந்த நாள் அன்று ஊடகங்கள் எல்லாம் எங்கே சென்றன என்று தெரியவில்லை.. நம் மக்களும் பாரதியை நினைத்து என்ன ஆக போகிறது என்று நினைத்து இருக்கலாம்... காலையில் இருந்து பொழுது சாயும் நேரம் வரையும் ரஜினியை புகழந்து தள்ளிய இவர்களுக்கு, பாரதியை பற்றிய ஒரு சிறு குறிப்பு கூடவா கிடைக்கவில்லை.. ? அது சரி, ரஜினியை பற்றி நிகழ்ச்சி போட்டால் வருமானம் வரும், இந்த பாரதியை போட்டால் விளம்பரம் கூட கிடைக்காது.. சிட்டுக் குருவிக்கு போட அரிசி கூட வாங்க முடியாது என எல்லாரும் நினத்திருக்கலாம்... !!


இன்னும் சில காலங்களில், புதிய சூப்பர் ஸ்டார்கள் வரலாம். போகலாம். ஆனால் பாரதி போன்றவர்களை காலம் வெல்ல முடியாது

அவரே சொல்வது போல;

தேடி சோறு நிதந் தின்று சில சின்ன சிறு கதைகள் பேசி
மனம் வாடி துன்புற்று பிறர் வாட பல செயல்கள் செய்து
நரை கூடி கிழப் பருவம் எய்தி
கொடுங் கூற்றுக்கு இரையென பின்மாயும்
சில வேடிக்கை மனிதரை போல் நானும்
வீழ்வேன் என்று நினைத்தாயோ ?



காலனை எட்டி உதைக்க கூப்பிட்ட கவியே, உனக்கு மரணமில்லை....

Friday, December 4, 2009

மீண்டும் சில கொலைகள்

அன்புள்ள குழந்தைகளே,

எமது அரசாங்கம் தொலைக்காட்சி பெட்டி வழங்குவதிலும், சில முறைகேடுகள் செய்யவுமே நேரம் இருந்தமையால் உங்களையும் உங்கள் பள்ளிகள் பற்றியும் நினைக்க நேரம் இல்லை.

கும்பகோணத்தில் உங்கள் நண்பர்கள் நிறைய பேரை இழந்தும், அரசும் அதிகாரிகளும் கண்களை கட்டி கொண்டுதான் வேலை செய்கிறார்கள்.

இப்பொழுதுதான் தடை போடுவதாக பேசி கொண்டிருக்கிறார்கள், ஒவ்வொரு முறையும் நடப்பது தானே.. என்று நாங்களும் எங்கள் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டோம்..

வேதாரண்யத்தில் ஏற்பட்டது விபத்து என்கிறார்கள், உங்களுக்கு தெரியும் இது கொலை என்று... கல்வி வியாபாரம் ஆகிவிட்ட நாட்டில் நீங்கள் பிறந்து தொலைத்ததுதான் காரணமோ ?

எப்படியோ போகட்டும், அடுத்த விபத்து நடக்கும் போதும் தடைகள் போடுவார்கள் நிச்சயமாக... ...

எனது கண்ணீர் அஞ்சலிகள் உங்களுக்கு...
பிஞ்சு உள்ளங்களே எங்களை மன்னியுங்கள்....

Tuesday, October 27, 2009

சினிமா

எங்கள் வாழ்க்கையில்
வராத வில்லன்களை
காட்டினீர்கள்

நாங்கள் பார்க்காத
குறையுடை காதலிகளுடன்
கொஞ்சி மகிழ்ந்தீர்

கனவில் கூட பார்க்காத
தூர தேசங்களில்
பாடி ஆடினீர்

பறந்து பறந்து
பகைவரை அடித்தீர்

எதை வைத்து
நீங்கள் நடிக்கும் தயாரிக்கும்
சினிமாக்கள் தான்
எம் வாழ்க்கையை
பிரதிபலிக்கும் படமென
விளம்பரம் தருகுரீர் ?

Saturday, October 10, 2009

ரோஸ்

"ஏய்... ரோஸ்.. ரோஸ்.. ச்ச்ச்ச்சு.... " என்றால் எங்கிருந்தாலும் ஓடி வரும். வளர்த்தது பக்கத்து வீட்டு ஆயாதான் என்றாலும் எங்கள் வீட்டுக்கு வெளியில் போட்டிருக்கும் சாக்கில்தான் எப்போதும் படுத்திருக்கும்.

"யார் ஊட்டுச் சோத்த தின்னுட்டு.. யார் ஊட்ல படுத்திருக்க..... ? " எனக் கேட்டவாறே அந்த ஆயா எங்கள் வீட்டுக்கு வரும் போதெல்லாம், கிழவியை திரும்பி பார்த்துவிட்டு திரும்பவும் தலையை சாக்கில் சாய்த்துக் கொள்ளும்.

வெள்ளை கலரில், அங்கங்கே பழுப்பு நிறத்தில் ஒல்லியாக இருக்கும். குரைப்பதை தவிர, யாரையும் கடித்ததில்லை. யாராவது வீட்டுக்கு வந்தால் வாசலிலேயே நின்று விடுவார்கள். "ஏங்க, இந்த நாயி கடிக்குமா? " எனக் கேட்பார்கள். " ஒன்னும் பண்ணாது.. வாங்க.. " என்று சொன்னாலும் பயந்து கொண்டேதான் வருவார்கள். ஒரு காவல் ஆள் போலவே இருந்தது ரோஸ்.

ஆண் நாய்க்கு எதற்கு, "ரோஸ்" அப்படின்னு பேரு வெச்சிங்க என்று அந்த ஆயாவிடம் கேட்டால் "அதெங்க.. நானா வெச்சேன்... பேரனுக வெச்சாங்க.... அப்படியே கூப்பிட ஆரம்பிச்சுட்டேன்.. " என்றது. ரொம்ப சாதுவாக இருக்கும். எந்நேரமும் எங்கள் வீட்டு முன்னாலயே இருப்பதால், எங்கள் வீட்டு நாய் என்றுதான் சொல்லுவார்கள் ஊரில்.

அம்மா எங்கே தனியாக போனாலும் கூடவே போகும். வீட்டில் இருந்து பஸ்ஸை பிடிக்க சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும். ரோஸ் எங்க கூடவே கெளம்பி பஸ் ஸ்டாப் வரை பின்னாலயே ஓடி வரும். திரும்பி ஒரு மிரட்டு மிரட்டி, வீட்டுக்கு போ என சொன்னால் திரும்பி நடக்க ஆரம்பிக்கும். ஒரு சில நாட்கள், ரோசை அம்மா திரும்பி போக சொல்லி விட்டு நடந்தால், அதுவும் திரும்பி போவது போல் பாவனை செய்து விட்டு, தொடர்ந்து பின்னாலயே வரும். வழியில் மற்ற நாயை கண்டால், உறுமி கொண்டே அல்லது குரைத்துக் கொண்டே வரும். பஸ் ஏறும் வரை இருந்து விட்டு, அப்புறமாய் வீட்டுக்கு ஓடி விடும்.

கிராமத்தில் ஒட்டு வீடு என்பதால் எலித் தொல்லை இருந்தது. தக்காளி, உடைத்த தேங்காய் என எதையும் பத்திரமாக வைக்க முடியாது. எனவே எலியை பிடிக்க எலி பொறி உண்டு வீட்டில். அதற்குள் தேங்காய், கருவாடு, தக்காளி, நில கடலை என எலி விரும்பும் எதையாவது உள்ளே, நூலில் மாட்டி கட்டி வைத்துவிடுவார் அப்பா. பெரும்பாலும் எலிகள் இரவில்தான் வரும் என்பதால் படுக்க போகும் நேரத்தில் மேல் சுவற்றில் வைத்து விடுவார். தீனியை இழுத்த எலிகள் வலையில் மாட்டி கொள்ளும்.

ஒரு சில எலிகள், உள்ளே வைத்திருப்பதை கொறித்து விட்டு ஓடிவிடும். எதாவது, எலி உள்ளே மாட்டி இருந்தால் அப்பா அதை கூண்டோடு வெளியில் கொண்டு வருவார். பெருத்தவை, சிறுசு என எல்லா வகை எலிகளும் பொறியில் மாட்டி கொள்ளும். அன்று எந்த எலி மாட்டி கொள்ளுமோ அந்த எலிக்கு மரணம் நிச்சயம். கூண்டை வெளியில் கொண்டு வந்தவுடன், ரோஸ் தயாராக இருக்கும். போருக்கு போகும் தயாராகும் ஒரு வீரனை போல், பொறியின் வாயை பார்த்து கொண்டேஇருக்கும். அப்பா, மேலே கதவை அழுத்தியவுடன், உள்ளிருந்த எலி துள்ளி குதித்து வெளியில் ஓடிவரும். ரோஸ் ஓடிப் பொய் தப்பாமல் பிடித்துவிடும். வீட்டை சுற்றி எலி ஓட ஆரம்பித்தால், இதுவும் பின்னால் ஓடி, செடி கொடிகளுக்குள் தேடி கண்டுபிடித்து வாயில் கவ்வி கொண்டு காட்டுக்குள் சென்று விடும். ஒரு சில நாள், ரோஸ் எலியை தவற விட, அப்பா இது சரிப்பட்டு வராதென, சாக்குப் பைக்குள் எலியை விட்டு அடிக்க ஆரம்பித்தார்.

ஆட்டுக் கறியோ, கோழி கறியோ வீட்டில் சமைத்தால், படியில் நின்று கொண்டு கதவை பார்த்தபடி நிற்கும். அம்மா, "எலும்ப கீழே போடாத.. தட்டத்துல வையி.. ரோஸ் திங்கும்" என சொல்லும். வெளியே எலும்பை கொண்டு வந்து வைத்தால் மற்ற எந்த நாயையும் பக்கத்தில் விடாமல் அத்தனையையும் தின்று விடும். ஒரு சில நாட்கள், பக்கத்து வீட்டு நாயையும் அனுமதிக்கும். பழைய சோறு, தயிர் என எதையாவது அம்மா வைத்து விடும். "எலும்பை போட்டே.. என்ற ரோசை மடக்கி.. உங்க ஊட்லயே வெச்சுக்குங்க.." என அந்த ஆயா சிரித்துகொண்டே சொல்லும். அந்த ஆயா எதாவது சாப்பிட கொடுத்தாலும், தின்று விட்டு எங்கள் வீட்டு வாசப்படிக்கு வந்துவிடும்.

நான் வெளிக்கு காட்டுக்கு போனால் பின்னாலயே வரும். "பேட்டேரிய எடுத்துட்டு போடா" என்பர் அப்பா. வெளியில் வந்து செருப்பை போட்டவுடன், ரோசும் எதோ தன் கடமை போல் கெளம்பி என் கூடவே வரும். வழியில் மற்ற நாய்கள் குரைத்தால், இதுவும் பதிலுக்கு குரைத்து விடும் என்பதால் பயமில்லாமல் போவேன். ரீங், ரீங் என்ற சத்தமும், நிர்மலமான இரவும், சுத்தமான காற்றும் வீசிய அந்த இரவுகளில் எனக்கு துணையாக இருந்தது ரோஸ்.

எங்கே போனாலும் கூடவே ஓடி வந்து, ஒரு நண்பனை போலவே இருந்தது எங்கள் வீட்டில். காலங்கள் கடந்தது. முன்பு போல் ரோஸ் சாப்பிடுவதில்லை, பக்கத்து வீட்டு நாயை திங்க விட்டு விடுகின்றது. மெதுவாக முடிகள் கொட்ட ஆரம்பித்தன. எலும்பும், தோலும் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது. யாரோ கல்லால் அடித்ததில் முன்னங் காலில் ஏற்பட்ட காயம் ஆறாமல் இருந்தது. இழுத்து இழுத்து மூச்சு விட ஆரம்பித்தது. ஒரு நாள், வீட்டின் முன்னால் போட்டிருந்த சாக்கு ரோஸ் இல்லாமல் வெறுமையாக இருந்தது.

பக்கத்து காட்டுக்கு மாடு மேய்க்க போன சரசக்கா "ஏங்க.. ரோஸ் அங்க காட்டுல படுத்து கெடக்குது.. செத்து போச்சுன்னு நெனைக்கிறேன்.... மூச்சு வாங்கிட்டு கெடக்குது" எனக் கூற, அம்மாவும் "பாவம்.. வயசு ஆயுடிசுள்ள அதான்... அதெப்படி அவ்ளோ தூரம் காட்டுக்குள்ளே போச்சு.... " என்றது. அன்னைக்கோ அல்லது அடுத்த நாளோ ரோஸ் செத்து போயிருக்கும். "ரோஸ்.. ரோஸ்... ச்ச்ச்சுசுச்சு... " எனக் கூப்பிட இப்பொழுது ரோஸ் இல்லை.

வெறுமையாக இருந்த சாக்கில், இன்னொரு பக்கத்து வீட்டு நாய் மெல்ல மெல்ல படுக்க ஆரம்பித்தது. அதனுடைய பெயர் மணி. ரோஸ் போனதுக்கு அப்புறம், நான் எங்கே போனாலும் கூடவே வந்தது, ரோஸ் சொல்லி விட்டு போயிருக்குமோ ?.

Friday, September 25, 2009

சாக்கடை

நிலவில் நீர்
இருக்கலாம் என அறிய
ஒரு செயற்கைக்கோள் !

கண்டம் விட்டு கண்டம்
பாயும்
கணைகள் !

எத்தனையோ வசதிகள்
அறிவியலால்
கண்டோம் !

எப்போது தூக்கி
விட போகிறோம்

சாக்கடையில் இறங்கி
முழங் கால் சேற்றில் பதிய
சுத்தம் செய்யும்
மக்களை..

கைக்குட்டை பொத்தி
எட்டி நடை போட்டு
மூக்கோடு வாசனையை
மறைக்க நினைக்கும்
நமக்கு

அறிவியல் ஒரு வரம்தான் !

குற்றமும் தண்டனையும் (Crime and Punishment)

ஒரு குற்றத்தை செய்து விட்டு அதற்க்கான தண்டனையை அனுபவிக்க ஒரு மனசு வேண்டும். அல்லது தான் செய்த குற்றம் சரியே என நினைத்து கொண்டிருப்பது. தன்னுடைய நோக்கில், தான் செய்த கொலை அல்லது திருட்டு போன்றவற்றை சந்தர்ப்ப வசத்தால் நேர்ந்தது என்றும் கூட சொல்லலாம். ஊருக்கு தப்பாக தெரியும் ஒரு குற்றம், குற்றம் செய்தவனின் மனசில் நல்லதாக படலாம்.

ஒரு மாணவன், ஏதோ ஒரு நோக்கத்தில் ஒரு கொலையை செய்து விட்டு ஊரில் நடமாடி கொண்டு இருந்தால் எப்படி இருக்கும். அதுவும் அந்த கொலையை பற்றி துப்பு துலக்கும் நபர்களிடம் இவன் நட்பை வளர்த்து கொண்டு, அவர்களிடமே அந்த கொலையை பற்றி பேசி கொண்டிருந்தால் எப்படி இருக்கும் ?. அவனுடைய மனசாட்சி அவனை விடுவதில்லை. அவன் அவற்றை எதிர் கொள்ள தயார் ஆகின்றான். அப்படியும் ஒரு நப்பாசை, தப்பிக்கலாமா அல்லது கடைசி வரை மோதி பார்க்கலாமா என்று.

கடைசியில் அவன் தன் தங்கையிடம் சொல்கிறான். "குற்றமா ? எது குற்றம் ?, அந்த கிழவியினால் யாருக்கும் எந்த பலனும் இல்லை. மிகவும் கேவலமான பிறவி அவள். அவளை கொன்றது, நாற்பது பாவங்களுக்கு மன்னிப்பை தேடி கொண்டதுக்கு சமம்."

"அண்ணா என்ன சொல்லி கொண்டிருக்கிறாய் நீ. எப்படியானாலும் நீ ரத்தம் சிந்த வைத்திருக்கிறாய் என்பது உண்மைதானே ? " தங்கை.

"எல்லோரும்தான் ரத்தம் சிந்தி கொண்டிருக்கிறீர்கள், இந்த பூமியில் எப்போதுமே மனித குல வரலாற்றில் நாம் கடந்து வந்திருக்கிற எல்லா காலங்களிலும் ரத்தம் பிரவாகமாக ஓடி கொண்டுதான் இருக்கிறது. 'ஷம்பைனை' உடைத்து ஊற்றியது போல ரத்தம், இங்கே பெருக்கெடுத்து ஓடியிருக்கிறது !. அப்படி ஓட வைத்த மனிதர்கள்தான் தலை நகரங்களில் மன்னர்களாக முடி சூடி கொண்டிருக்கிறார்கள் ! பிற்பாடு அவர்களைத்தான் மனித குலத்தின் காவலர்களாக இந்த உலகம் அழைக்கிறது ! சந்தர்ப்ப வசத்தால் நான் மாட்டி கொண்டேன். இல்லையெனில், நானும் முடி சூட்டி கொண்டிருப்பேன்! ஆனால் இப்போது வலையில் வீழ்ந்து விட்டேன்."

ஒரு முறை நினைத்து பாருங்கள், ஒரு கொலையை செய்தவனுக்கு தண்டனை. கூட்டம் கூட்டமாக கொலை செய்பவர்கள் நாட்டை ஆள்கிறார்கள். அவர்களுக்கு பெயர் மன்னர், அதிபர், இத்யாதிகள். அவன் கேட்கும் ஒரே கேள்விக்கு நம்மால் யாராவது பதில் சொல்ல முடியுமா? . உலகின் எல்லா மூலையிலும் நடந்து கொண்டிருக்கும் கொலைகளுக்கு யார் பொறுப்பு. அவன் கொன்றது, ஒரு நல்ல மனிதனை இல்லை. அவன் நல்லவன்தான். வட்டிக்கு பணம் விட்டு மக்களை ஏமாற்றி கொண்டிருக்கும் ஒரு கிழவியை கொல்வது குற்றமா, அவள் நல்லவளாக இருந்திருந்தால் அவன் இந்த செயலை செய்திருக்க மாட்டான்.

பக்கம் பக்கமாய் உரையாடல்கள், மனதை படிப்பது போல. குற்றம் செய்தவனின் மன நிலைக்கு பக்கத்தில் நம்மை இட்டு செல்கிறது ரஷ்ய நாவலான, குற்றமும் தண்டனையும். பியாதோர் தஸ்தெவெஸ்கி எழுதியுள்ள இந்நாவலை, எம்.ஏ.சுசீலா அம்மையார் அவர்கள் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

மூன்று வாரங்களுக்கு மேல் இரவில் படித்து முடித்தேன். நான் படித்த நாவல்களில் பெரிய நாவல் இதுதான். நாவலில் வரும் அத்தனை கதை மாந்தர்களின் பேர்தான் ரஷ்ய மொழியே தவிர, அவர்களை நாம் நம்முடைய ஊரிலும் பார்க்கலாம்.

நாவலில் வரும், ரஸ்கொல்நிகொவ் தான் கதாநயகன். கொலையை செய்தவனும் இவனே. இவனின் அம்மாவாக வரும் பல்கேரியா, தங்கையாக வரும் துனியா, நண்பனாக வரும் ரசூமிகின், காதலியாக வரும் சோனியா... அடுக்கி கொண்டே போகலாம். பாத்திர படைப்பு என்றால், இப்படி இருக்க வேண்டும். ஒவ்வொருவரை பற்றியும் நமக்கு நன்றாக தெரிந்த பக்கத்து வீட்டு நபர்களை போல கொண்டு செல்கிறது நாவல்.

இதை தமிழில் மொழி பெயர்த்து என் போன்ற நபர்களை படிக்க தூண்டிய, சுசீலா அம்மா அவர்களுக்கு என்னுடைய நன்றிகள் பல. 550 பக்கங்களுக்கு மேலாக மொழி பெயர்த்த அவர்களின் உழைப்புக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

சுசீலா அவர்களின் வலை தளம் : http://masusila.blogspot.com/

புத்தகத்தை பெற,
Bharathi Book House,D-28, Corporation Shopping Complex,Periyar Bus Stand, மதுரை

Tuesday, August 11, 2009

தலைவர்கள் வருகிறார்கள்.....

தேர்தலுக்கும்
இடை தேர்தலுக்கும்
வெள்ளம் வந்தாலும்
தீ வைத்து கொண்டாலும்
கட்சியினர் இல்ல திருமணத்திற்கும்
உதவிகள் வழங்கவும்
கடைகள் திறப்பிற்கும்
எங்கள் தலைவர்கள்
அன்று ஒரு நாள் மட்டும்
பார்க்க வருகிறார்கள்
நோயுற்றிருக்கும் நோயாளியை
பார்க்க வருவது போலவும்
மீதியுள்ள நாட்களை
மறந்தும்.... !

Friday, July 17, 2009

கட்சிகள்

அடர் கருமை நிறத்தில்
சாக்கடை
அதன் ஓரத்தில்தான்
எம் மக்களின் இல்லங்கள்
எம் குழந்தைகள்
அள்ளி விளையாடுவதும்
குளித்து மகிழ்வதும்
அங்கேதான்
எல்லா சமையத்திலும்
கழிப்பதும் அங்குதான்
அங்கேயும்
எம்மை
காக்க வந்த
ரட்சகர்களான
கட்சிகளின்
கொடிகள்
மட்டும்
அழுக்கில்லாமல்
உயரத்திலேயே பறக்கின்றன !


Monday, July 13, 2009

பெயர்

நான்
எழுதிய
எல்லா கவிதைகளுக்கும்
பெயரிட்டு விட்டேன்
உன்னைத் தவிர !

Wednesday, June 17, 2009

அம்மா

கூரை மீது
வைத்த சோற்றுக்கு
வந்தமர்ந்த
காகங்களில்
எது என் அம்மாவென
எப்படி
கண்டுபிடிப்பேன் ?

Tuesday, May 12, 2009

Chicken Ala Carte

பசி... மனிதன் வெல்ல முடியாத நோய்...
பாரதி கூட, தனி மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்து விடுவோம் என்கிறார்.

ஒரு பக்கம் தட்டு தட்டாக ஆர்டர் செய்து விட்டு சாப்பிட முடியாமல் குப்பையில் கொட்டும் ஒரு கூட்டம், குப்பையில் கிடைத்ததையே உண்டு வாழும் ஒரு கூட்டம் என சமூக முரண்பாடுகள்.

Chicken Ala Carte குறும்படம் இதைத்தான் விளக்குகிறது. உணவின் மீது மரியாதையும், இல்லாதவர் மீது இரக்கமும் ஏற்பட்டால் அதுவே இப்படத்தின் வெற்றி.
http://www.cultureunplugged.com/play/1081/Chicken-a-la-Carte

Monday, May 4, 2009

தாயம்

தாயம் குறும்படத்தின் இணைப்பு
பகுதி 1 http://www.youtube.com/watch?v=25D3LgdURnY
பகுதி 2 http://www.youtube.com/watch?v=mJgmFjuumfk

Probability என்பதை கல்லூரியில் படித்ததோடு சரி.. அது வாழ்க்கையிலும் பின்னி பிணைந்து இருக்கும் என்பதை இப்பொழுதுதான் கற்றேன்....

இசை, நடிப்பு, இயக்கம் என அசத்தி விட்டார்கள்... வாழ்த்துக்கள் !

Saturday, April 11, 2009

குப்பையும் நானும்

கவிதை எழுதலாம்
என்றேன்
என்ன கவிதை எனக் கேட்டாய்
உன் பெயர் என்றேன்
என் பெயர்
குப்பை எனச் சொன்னாய்
'உன் பெயர்
குப்பைதான்
என்னைக் கசக்கி எறிந்து
உன்னுடனே
என்னையும்
குப்பையாக்கி விட்டாயல்லவா' என்றேன்
சிரித்துக்கொண்டே
தூரம் விட்டு தூரம் நகர்ந்து
காற்றோடு
கலந்து போனாய்
அன்று பெய்த மழை நாளில் !

Wednesday, April 8, 2009

ஒரு சுகம்

எனக்கு பிடித்த கவிதைகளில் ஒன்று இக்கவிதை.

ஒரு கட்டு
வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு
புகையிலை
வாய் கழுவ நீர்
பிளாஸ்டிக்
நிறைய ஐஸ்
ஒரு புட்டி
பிராந்தி
வத்திப்பெட்டி அல்லது சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்க்கு நீ
நண்பா
இந்த சாவிலும்
ஒரு சுகம் உண்டு.
-கவிஞர் நகுலன்

Friday, March 20, 2009

பூ

நீ தலையில்
சூடியிருக்கும்
பூவை
பார்த்த வண்டுகள்
எது பூவென
தெரியாமல்
தடுமாறுகின்றன !

ஓரிடம்

எங்கோ ஓரிடத்தில்
சந்திக்க
நேரும் போதெல்லாம்
கேட்கத்தான் தோன்றுகிறது

அகதியாய்
வந்த நாம்
எப்பொழுது திரும்புவோம்
என

நேற்று வந்திறங்கிய
கர்ப்பிணி பெண்ணை
பார்த்த பின்
தொண்டைக்குள்ளேயே
தங்கி விட்டது

Wednesday, March 18, 2009

வரிசை

அத்தனையும்
நகர்ந்து கொண்டிருந்தன
ஒரே வரிசையில்
காலுக்கு அடியில்
சிலது மிதிபட்டன
கையில் நசுக்கி
சிலது கொல்லப்பட்டன
உயிருள்ள
எவற்றுக்கும்
திரும்பி பார்க்க
நேரமில்லை
அத்தனையும்
நகர்ந்து கொண்டிருந்தன
ஒரே வரிசையில் !

Saturday, February 14, 2009

இத்தனைகிடையிலும் ...

போரினால் கொத்து கொத்தாய்
கொல்லப்பட்ட மனிதர்கள்
வன்முறைகள்
அரசியல்வாதியின் மாறாத
தந்திர பேச்சுக்கள்
போலிகளாக மாறிப்போன
காவிக் கறைகள்
ஊர்ப் பணத்தை கொள்ளையடிக்கும்
பெரிய தலைகள்
வியாபாரமான
கல்விக் கூடங்கள்
இத்தனை
நிகழ்வுகளுக்கிடையிலும்
நேற்றிரவு
மழை பெய்தது
பக்கத்து வீட்டில்
பெண் குழந்தை
பிறந்திருக்கிறது !

Sunday, January 25, 2009

அடுப்பு கரி

உஸ்.. உஸ் என
ஊதாங்குழலில்
அடுப்பு விறகை
ஊதிய சுப்பக்காளுக்கு அவசரம்
எட்டு மணிக்கு
பக்கத்து ஊட்டு டிவி பொட்டியில்
நாடகம் பார்க்க

பவுடர் பூசிய
பொம்பளைகள் அழுததை
பாத்து இவளும் அழுது
மூக்கை சிந்தி
முந்தானியில் தொடைகரப்பதான்
பார்த்தாள்
மூஞ்சியில்
அப்பியிருந்த அடுப்பு கரியை !

குருவி கூடு

எங்கிருந்தோ நாரெடுத்து
கிணற்றுக்குள்
தொங்கிய கிளையின்
அந்தரத்தில்
அழகாய் கூடு கட்டியது
குருவி

எப்படி வீடு கட்டுவெதன
படிக்கிறான்
மனிதன்

அரச மரத்தடி நடசத்திரங்கள்

கிளைவிட்டுப் பரவிய
அரச மரத்தை சுற்றிலும்
வெள்ளை நட்சத்திரங்களாய்
பறவைகளின் எச்சங்கள்
பூத்து கிடந்ததொரு நாளில்
ஊர்ப் பஞ்சாயத்து கூடி
வெட்டுவதென
முடிவு செய்தனர்

மரத்தின் வேர்
சுற்றியுள்ள வீடுகளில்
ஊடுருவுகின்றதாம்

மீண்டும் தழைத்து விடுமென
அடிமரத்தை தோண்டிய
குழியில்
உச்சியில் கட்டப்பட்டிருந்த
ஏதோவொரு பறவையின்
கூடும் முட்டைகளோடு புதைபட்டது

இடம் மாறிய பறவைகள்
இன்னொரு மரத்தடியில்
எச்சமிட்டு
கொண்டிருக்க கூடும் !

Sunday, January 4, 2009

என் கடவுள்

சிறப்பு வழியா, பொது வழியா
என தடுமாறி
நீண்ட வரிசையில்
காத்திருந்து
ஒதுக்கப்பட்ட சில கணத்தில்
பார்த்தது அய்யரின் முதுகா ?
இல்லை கடவுள் சிலையா ?
கடைசி வரை விளங்கவில்லை

பள்ளத்தில் கூமாச்சி
கல்லெடுத்து
நட்ட வெச்சுருக்கலாம்
பூவும் படையலும்
நானே படைச்சு
முடிந்தால்
என் சாமிக்கு
முத்தம் கூட கொடுத்திருக்கலாம் !

Saturday, January 3, 2009

பூவை போல்

செத்த பிணத்துக்கும்
கடவுளுக்கும்
பூவை போல்
ஒரே மாதிரி
சிரிக்க தெரியாத
பாவப் பட்ட
மனிதர்கள் !

மொழி

உன் எழுத்தை நானும்
என் எழுத்தை நீயும்
திட்டியது போதும்
எப்போது நிமிர்த்தலாம்
நம் சண்டையில்
தலை குனிந்த
மொழியை !