Tuesday, October 27, 2009

சினிமா

எங்கள் வாழ்க்கையில்
வராத வில்லன்களை
காட்டினீர்கள்

நாங்கள் பார்க்காத
குறையுடை காதலிகளுடன்
கொஞ்சி மகிழ்ந்தீர்

கனவில் கூட பார்க்காத
தூர தேசங்களில்
பாடி ஆடினீர்

பறந்து பறந்து
பகைவரை அடித்தீர்

எதை வைத்து
நீங்கள் நடிக்கும் தயாரிக்கும்
சினிமாக்கள் தான்
எம் வாழ்க்கையை
பிரதிபலிக்கும் படமென
விளம்பரம் தருகுரீர் ?

Saturday, October 10, 2009

ரோஸ்

"ஏய்... ரோஸ்.. ரோஸ்.. ச்ச்ச்ச்சு.... " என்றால் எங்கிருந்தாலும் ஓடி வரும். வளர்த்தது பக்கத்து வீட்டு ஆயாதான் என்றாலும் எங்கள் வீட்டுக்கு வெளியில் போட்டிருக்கும் சாக்கில்தான் எப்போதும் படுத்திருக்கும்.

"யார் ஊட்டுச் சோத்த தின்னுட்டு.. யார் ஊட்ல படுத்திருக்க..... ? " எனக் கேட்டவாறே அந்த ஆயா எங்கள் வீட்டுக்கு வரும் போதெல்லாம், கிழவியை திரும்பி பார்த்துவிட்டு திரும்பவும் தலையை சாக்கில் சாய்த்துக் கொள்ளும்.

வெள்ளை கலரில், அங்கங்கே பழுப்பு நிறத்தில் ஒல்லியாக இருக்கும். குரைப்பதை தவிர, யாரையும் கடித்ததில்லை. யாராவது வீட்டுக்கு வந்தால் வாசலிலேயே நின்று விடுவார்கள். "ஏங்க, இந்த நாயி கடிக்குமா? " எனக் கேட்பார்கள். " ஒன்னும் பண்ணாது.. வாங்க.. " என்று சொன்னாலும் பயந்து கொண்டேதான் வருவார்கள். ஒரு காவல் ஆள் போலவே இருந்தது ரோஸ்.

ஆண் நாய்க்கு எதற்கு, "ரோஸ்" அப்படின்னு பேரு வெச்சிங்க என்று அந்த ஆயாவிடம் கேட்டால் "அதெங்க.. நானா வெச்சேன்... பேரனுக வெச்சாங்க.... அப்படியே கூப்பிட ஆரம்பிச்சுட்டேன்.. " என்றது. ரொம்ப சாதுவாக இருக்கும். எந்நேரமும் எங்கள் வீட்டு முன்னாலயே இருப்பதால், எங்கள் வீட்டு நாய் என்றுதான் சொல்லுவார்கள் ஊரில்.

அம்மா எங்கே தனியாக போனாலும் கூடவே போகும். வீட்டில் இருந்து பஸ்ஸை பிடிக்க சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும். ரோஸ் எங்க கூடவே கெளம்பி பஸ் ஸ்டாப் வரை பின்னாலயே ஓடி வரும். திரும்பி ஒரு மிரட்டு மிரட்டி, வீட்டுக்கு போ என சொன்னால் திரும்பி நடக்க ஆரம்பிக்கும். ஒரு சில நாட்கள், ரோசை அம்மா திரும்பி போக சொல்லி விட்டு நடந்தால், அதுவும் திரும்பி போவது போல் பாவனை செய்து விட்டு, தொடர்ந்து பின்னாலயே வரும். வழியில் மற்ற நாயை கண்டால், உறுமி கொண்டே அல்லது குரைத்துக் கொண்டே வரும். பஸ் ஏறும் வரை இருந்து விட்டு, அப்புறமாய் வீட்டுக்கு ஓடி விடும்.

கிராமத்தில் ஒட்டு வீடு என்பதால் எலித் தொல்லை இருந்தது. தக்காளி, உடைத்த தேங்காய் என எதையும் பத்திரமாக வைக்க முடியாது. எனவே எலியை பிடிக்க எலி பொறி உண்டு வீட்டில். அதற்குள் தேங்காய், கருவாடு, தக்காளி, நில கடலை என எலி விரும்பும் எதையாவது உள்ளே, நூலில் மாட்டி கட்டி வைத்துவிடுவார் அப்பா. பெரும்பாலும் எலிகள் இரவில்தான் வரும் என்பதால் படுக்க போகும் நேரத்தில் மேல் சுவற்றில் வைத்து விடுவார். தீனியை இழுத்த எலிகள் வலையில் மாட்டி கொள்ளும்.

ஒரு சில எலிகள், உள்ளே வைத்திருப்பதை கொறித்து விட்டு ஓடிவிடும். எதாவது, எலி உள்ளே மாட்டி இருந்தால் அப்பா அதை கூண்டோடு வெளியில் கொண்டு வருவார். பெருத்தவை, சிறுசு என எல்லா வகை எலிகளும் பொறியில் மாட்டி கொள்ளும். அன்று எந்த எலி மாட்டி கொள்ளுமோ அந்த எலிக்கு மரணம் நிச்சயம். கூண்டை வெளியில் கொண்டு வந்தவுடன், ரோஸ் தயாராக இருக்கும். போருக்கு போகும் தயாராகும் ஒரு வீரனை போல், பொறியின் வாயை பார்த்து கொண்டேஇருக்கும். அப்பா, மேலே கதவை அழுத்தியவுடன், உள்ளிருந்த எலி துள்ளி குதித்து வெளியில் ஓடிவரும். ரோஸ் ஓடிப் பொய் தப்பாமல் பிடித்துவிடும். வீட்டை சுற்றி எலி ஓட ஆரம்பித்தால், இதுவும் பின்னால் ஓடி, செடி கொடிகளுக்குள் தேடி கண்டுபிடித்து வாயில் கவ்வி கொண்டு காட்டுக்குள் சென்று விடும். ஒரு சில நாள், ரோஸ் எலியை தவற விட, அப்பா இது சரிப்பட்டு வராதென, சாக்குப் பைக்குள் எலியை விட்டு அடிக்க ஆரம்பித்தார்.

ஆட்டுக் கறியோ, கோழி கறியோ வீட்டில் சமைத்தால், படியில் நின்று கொண்டு கதவை பார்த்தபடி நிற்கும். அம்மா, "எலும்ப கீழே போடாத.. தட்டத்துல வையி.. ரோஸ் திங்கும்" என சொல்லும். வெளியே எலும்பை கொண்டு வந்து வைத்தால் மற்ற எந்த நாயையும் பக்கத்தில் விடாமல் அத்தனையையும் தின்று விடும். ஒரு சில நாட்கள், பக்கத்து வீட்டு நாயையும் அனுமதிக்கும். பழைய சோறு, தயிர் என எதையாவது அம்மா வைத்து விடும். "எலும்பை போட்டே.. என்ற ரோசை மடக்கி.. உங்க ஊட்லயே வெச்சுக்குங்க.." என அந்த ஆயா சிரித்துகொண்டே சொல்லும். அந்த ஆயா எதாவது சாப்பிட கொடுத்தாலும், தின்று விட்டு எங்கள் வீட்டு வாசப்படிக்கு வந்துவிடும்.

நான் வெளிக்கு காட்டுக்கு போனால் பின்னாலயே வரும். "பேட்டேரிய எடுத்துட்டு போடா" என்பர் அப்பா. வெளியில் வந்து செருப்பை போட்டவுடன், ரோசும் எதோ தன் கடமை போல் கெளம்பி என் கூடவே வரும். வழியில் மற்ற நாய்கள் குரைத்தால், இதுவும் பதிலுக்கு குரைத்து விடும் என்பதால் பயமில்லாமல் போவேன். ரீங், ரீங் என்ற சத்தமும், நிர்மலமான இரவும், சுத்தமான காற்றும் வீசிய அந்த இரவுகளில் எனக்கு துணையாக இருந்தது ரோஸ்.

எங்கே போனாலும் கூடவே ஓடி வந்து, ஒரு நண்பனை போலவே இருந்தது எங்கள் வீட்டில். காலங்கள் கடந்தது. முன்பு போல் ரோஸ் சாப்பிடுவதில்லை, பக்கத்து வீட்டு நாயை திங்க விட்டு விடுகின்றது. மெதுவாக முடிகள் கொட்ட ஆரம்பித்தன. எலும்பும், தோலும் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது. யாரோ கல்லால் அடித்ததில் முன்னங் காலில் ஏற்பட்ட காயம் ஆறாமல் இருந்தது. இழுத்து இழுத்து மூச்சு விட ஆரம்பித்தது. ஒரு நாள், வீட்டின் முன்னால் போட்டிருந்த சாக்கு ரோஸ் இல்லாமல் வெறுமையாக இருந்தது.

பக்கத்து காட்டுக்கு மாடு மேய்க்க போன சரசக்கா "ஏங்க.. ரோஸ் அங்க காட்டுல படுத்து கெடக்குது.. செத்து போச்சுன்னு நெனைக்கிறேன்.... மூச்சு வாங்கிட்டு கெடக்குது" எனக் கூற, அம்மாவும் "பாவம்.. வயசு ஆயுடிசுள்ள அதான்... அதெப்படி அவ்ளோ தூரம் காட்டுக்குள்ளே போச்சு.... " என்றது. அன்னைக்கோ அல்லது அடுத்த நாளோ ரோஸ் செத்து போயிருக்கும். "ரோஸ்.. ரோஸ்... ச்ச்ச்சுசுச்சு... " எனக் கூப்பிட இப்பொழுது ரோஸ் இல்லை.

வெறுமையாக இருந்த சாக்கில், இன்னொரு பக்கத்து வீட்டு நாய் மெல்ல மெல்ல படுக்க ஆரம்பித்தது. அதனுடைய பெயர் மணி. ரோஸ் போனதுக்கு அப்புறம், நான் எங்கே போனாலும் கூடவே வந்தது, ரோஸ் சொல்லி விட்டு போயிருக்குமோ ?.