Wednesday, May 29, 2013

விஷ்ணுபுரம் - ஜெயமோகன் (நாவல்)

விஷ்ணுபுரம் நாவல் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தேன். விஷ்ணுபுரம் பற்றி நான் அறிந்த வரையில் அல்லது  படித்து புரிந்த வகையில் இந்த கடிதத்தை அவருக்கு எழுதி இருந்தேன். அவரும் பதில் எழுதி இருந்தார். நான் அவருக்கு எழுதியதும், அவருடைய பதிலையும் இங்கே கொடுத்துள்ளேன். 

**************************

அன்பின் ஜெயமோகன்,
நீண்ட நாட்களாக படிக்க வேண்டும் என்ற ஆவல் கொண்ட புத்தகம் விஷ்ணுபுரம். பல வருடங்களாக இணையத்தில் உங்களைத் தொடர்ந்து படித்து வந்த போதிலும், விஷ்ணுபுரம் படிக்கவே இல்லை.விஷ்ணுபுரம் மட்டும் அல்ல, இன்னும் கொற்றவை, பின் தொடரும் நிழலின் குரல், காடு.... என படிக்க வேண்டும். போன மாதம் விஷ்ணுபுரம் வாங்கி, இப்பொழுது படித்து முடித்து விட்டேன். இன்னும் பிரமிப்பு போகவில்லை, ஒரு கனவு உலகத்துக்குள் சென்று வந்தது போல இருக்கிறது.

அவ்வபொழுது வரும் கவிதையான வரிகள் படிக்கும் பொழுது நினைவில் இருக்கிறது. அடுத்த அத்தியாயம் போகும்பொழுது அது மறந்து விடுகிறது. திரும்ப திரும்ப படிக்க வேண்டும், நினைவில் நிறுத்த வேண்டும். "பூரணத்திலிருந்து, பூரணத்தை எடுத்த பிறகும் பூரணமே எஞ்சி இருக்கிறது" போன்ற வரிகள் மறப்பதில்லை.


விஷ்ணுபுரம் ஆரம்பிக்கும் பொழுதே, "சேயை அணையும் தாய் போல இந்த ஆறு படித்துறை தோறும் கை நீட்டிச் செல்கிறது", "இந்த மண்ணுக்கு உரிமைப்பட்ட எதையோ சுமந்து அலைகிறேன் போலும்" போன்ற வாக்கியங்கள் என்னை உள்ளே இழுத்து விட்டது. இரண்டாம் பாகத்தை கொஞ்சம் வேகமாகப் படித்தேன் என்றாலும், திரும்பவும் பொறுமையாகப் படித்து உள்வாங்க வேண்டும்.

எங்கள் வீட்டில் ஒரு சின்ன செம்பு சிலை இருக்கும். இரண்டு கை விரல்களைச் சேர்த்த அளவே உள்ள சிலை. இது எப்படி கிடைத்தது என்று  கேட்டால் , பாட்டியின் பாட்டி கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் எடுத்துக்கொண்டு மேலே ஏறும்பொழுது, மேலிருந்து குடத்துக்குள் இந்த சிலை வந்து விழுந்ததாகச் சொல்வார்கள். அது உண்மையா, பொய்யா என்றெல்லாம் யோசிக்க முடியாது அல்லவா?. தொடரும் நம்பிக்கைகள் தானே, அடுத்த தலை முறைகளுக்கு கடத்த படுகிறது.

நாவல் கனவுகளில் மிதந்து கிடப்பது போல இருக்கிறது. நம்மையும் அந்த கனவுக்குள் இழுத்துக் கொண்டு போவது போல இருக்கிறது. நமக்கு முன்னர் வாழ்ந்த மாந்தர்கள், எவ்வாறு அடுத்த தலைமுறைகளில் தொன்மங்களாக மாறி விடுகிறார்கள்.. சித்திரை, திருவடி போன்றவர்கள் அதற்கடுத்த தலை முறைகளில் வணங்கத் தக்கவர்களாக மாறி விடுகிறார்கள். இப்படியே நாம் பார்க்கப் போனால், நம் ஊர்களில் கோயில் கொண்டுள்ள ஒவ்வொரு சிலைக்கு பின்னும் ஒரு வரலாறு இருக்க கூடும்.

பல்லாண்டுகளுக்கு முன்னர், அப்பம் சுட்டு அடுக்கி வைத்து வருவோர் போவோருக்கு எல்லாம் வழங்கிய் ஊரில், இப்பொழுது ஒரு பாட்டி அப்பம் சாப்பிட முடியவில்லை. ஆயிரக் கணக்கான யானைகளும், குதிரைகளும் நடந்த வீதிகள் இன்று வெறிச்சோடிக் கிடக்கிறது. இன்பம்/துன்பம், வெறுப்பு/விருப்பு என்பது போல ஏற்றமும் தாழ்வும் நடந்து முடிகிறது. பாகற்காய் குழம்புக்குள் வெல்லம் போட்ட பின்னர், கசப்பும் இல்லாமல், இனிப்பும் இல்லாமல் ஒரு சுவை கிடைப்பது போல.. எதுவும் தன்னை அணுகாமல் அந்த பெருமூப்பன் அல்லது விஷ்ணு சிலை நீண்டு கிடக்கிறது.

அதிலும் அந்த கரிய நாய். எல்லோரையும், எல்லாவற்றையும்   உற்றுப் பார்த்துக் கொண்டே இருக்கிறது. எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டு, மெதுவாக அந்தப் பக்கம் நகர்ந்து போகும் அந்த நாய், அது தான் காலத்தின் கரமா?.

அக்னி தத்தன், விஷ்ணுபுரத்துக்கு வந்து  இந்த பெரிய கோவிலை நிர்வாகம் செய்கிறான். சோனா நதியில், மூழ்க இருந்த அவனை ஒரு பெண் காப்பாற்றுகிறாள். பல தலைமுறைகள் கடந்து அக்னி தத்தனின் வாரிசான, வேத தத்தனும் பிரளய காலத்தில்  ஆற்றில் கிடக்கிறான்.. அவனைக் காப்பாற்றப் போகும் பெண் நீரில் அடித்துப் போகிறாள். அக்னி தத்தனின் வாரிசு, பிரக்ஞை இன்றி அப்படியே ஒரு பாறை போல கிடக்கிறான். பிரளய காலத்தில், அவன் சோலைப் பைத்தியமாக இருக்க வேண்டும் என்பது முன்பே முடிவு செய்யப்பட்டது அல்லவா?.

இரண்டாம் பாகத்தில் நடக்கும் தருக்கங்கள் மிக நன்றாக ஊன்றிப் படிக்க வேண்டும் போல் இருக்கிறது. அனைத்து பிரிவினரும், அவரவர் சார்ந்த பிரிவின் கொள்கைகள் பற்றி விவாதம் செய்யும் பொழுது, "ஞானம் தருக்கத்துக்கு அப்பாற் பட்டது" என்று சித்தன் சொல்லும் இடம் எனக்குப் பிடித்து இருக்கிறது.

விஷ்ணுபுரத்தை முழுமையாக படித்து விட்டேனே என்றால், இல்லை என்றே சொல்வேன். முக்கியமாக இரண்டாம் பாகத்தை வேகமாகப் படித்தேன். இன்னும் ஒரு இரண்டு முறை படிக்க வேண்டும் போல இருக்கிறது.

வேறொன்றும் சொல்லத் தோணவில்லை. எழுத எழுத வந்து கொண்டே இருக்கும் போல இருக்கிறது. விஷ்ணுபுரம் பற்றி வெளியான விமர்சனங்களை இணையத்தில் படித்த பின்னரே, நாவலைப் புரிந்து கொள்ள முடிந்தது.

இவ்வளவு பெரிய நாவலை படைத்த தங்களுக்கு என் நன்றிகள்.

அன்புடன் 
இளங்கோ 
 
**************************

அன்புள்ள இளங்கோ

நன்றி.

உங்கள் வலைப்பூவையும் பார்த்தேன். விஷ்ணுபுரம் பற்றி நிறைய பேசி எழுதி விவாதித்துவிட்டோம் என்று ஒருபக்கம் நினைக்கையில் எங்கிருந்தோ ஒரு விரிவான கடிதம் முற்றிலும் புதிய வாசிப்புடன் வந்திருக்கும். நேற்றும் அப்படி ஒரு கடிதம். புரம் என்ற சொல் புருஷன் என்ற சொல்லில் இருந்து வந்தது. விஷ்ணுபுரம் ஒரு மனிதவாழ்க்கையின் குறியீடு. இளவயதின் கொண்டாட்டம் நடுவயதின் தத்துவத்தேடல் முதுமையின் சரிவு கடைசியில் மரணம் என அது செல்கிறது என்று அந்த கடிதம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு படைப்பு ஒரு கட்டத்துக்குமேல் வாசகர்களால் கூட்டாக கற்பனைசெய்து உருவாக்கப்படுகிறது என நினைக்கிறேன். விவாதங்கள் அதன் விளைவுகள்

ஜெ

**************************


விஷ்ணுபுரம் புத்தகம் இணையத்தில் வாங்க : உடுமலை.காம்  
Monday, May 6, 2013

மானசரோவர் - அசோகமித்திரன் (நாவல்)

சினிமா உலகம் என்பது அலங்காரங்களால் ஆனது. நாம் நினைப்பது போல் வெளிப் பார்வைக்கு அது சந்தோசமான உலகம் போல தோன்றினாலும், அது அப்படியில்லை. அசோகமித்திரன் அவர்களின் இந்த நாவல் ஒரு நடிகனுக்கும், சினிமாத் துறையில் இருக்கும் இன்னொருவருக்கும் இடையில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றிய நாவல்.

வட நாட்டு நடிகன் சத்யன்குமார். சத்யனுக்கு அவன் குடும்பத்தினர் யாரும் இல்லை. தமிழ்நாட்டில் சில படங்களுக்கு நடிக்க வரும்பொழுது, இங்கே வேலை செய்யும் கோபாலுடன் பழக்கம் ஏற்படுகிறது. அது நட்பாகத் தொடர்கிறது. சத்யன் குமார் சென்னை வந்தால், கண்டிப்பாக அங்கே கோபால் இருக்க வேண்டும். கோபாலுக்கு இலக்கியத்தில் விருப்பம் உண்டு என்பதால், அது சத்யனுக்கு பிடித்துப் போகிறது. இருவரும் சந்திக்க நேர்ந்தால் பேசிக் கொண்டே இருப்பார்கள். சத்யனுக்கு, கோபாலைப் பிடிக்கும் என்பதால் தயாரிப்பாளர்கள் கோபால் என்ன சொன்னாலும் கேட்பார்கள்.கோபாலுக்கு மனைவி, பையன் என குடும்பம் உண்டு. ஒரு பெண் பிள்ளையை கல்யாணம் செய்து, அனுப்பி விட்டார். மனைவி ஜம்பகம். அவளுக்கு கோபால் சினிமாத் துறையில் வேலை செய்வது பிடிப்பதில்லை. நேரம் கெட்ட நேரம் வெளியே போவது, வருவது  என்று இருப்பது பிடிப்பதில்லை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பெண்ணுடன் சுத்திக் கொண்டு வருவதாக சண்டை போடுவாள். சில சமயங்களில் பைத்தியம் பிடித்தது போல, கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து வீசுவாள்.


அன்றொரு நாள் சத்யன் சென்னை வந்தபோது, ஜம்பகம் உடம்பு சரியில்லாமல் படுத்து இருக்கிறாள். பையனுக்கும் உடம்பு சரியில்லை. அவனை டாக்டரிடம் அழைத்துச் சென்று வருகிறான் கோபால். காய்ச்சல் குறைந்த பாடில்லை. அன்றிரவே, பையன் இறந்து விடுகிறான். ஜம்பகம் பைத்தியம் பிடித்தது போல இருக்கிறாள். அவளை மயக்க மருந்து குடுத்து படுக்க வைக்கிறார்கள். சென்னையில் இருக்கும் சத்யன், விசயத்தைக் கேள்விப்பட்டு கோபால் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க வருகிறான். அவனிடம் மட்டும் கோபால், பையன் காய்ச்சலால் சாகவில்லை என்றும், நான் பார்க்கும்போது முகத்தின் மீது ஒரு தலையணை கிடந்தது என்றும் சொல்கிறான்.

அதற்குப் பின்னர் ஜம்பகத்தை, அவளின் அம்மா ஊருக்கு கூட்டிக் கொண்டு போகிறாள். தனியாக இருக்கும் கோபால், சென்னை வீட்டை காலி செய்து விட்டு, ஒரு சாமியாரைத் தேடி கும்பகோணம் அருகில் உள்ள ஊருக்குச் செல்கிறான். பின்னர் சென்னை வரும் சத்யன், கோபாலைப் பற்றி எல்லோரிடமும் விசாரிக்கிறான். யாருக்கும் அவன் எங்கே சென்றான் எனத் தெரிந்திருக்கவில்லை. எப்படியோ தெரிந்து கொண்டு, கும்பகோணம் பயணிக்கிறான். அவனுக்கு இப்பொழுது உடல்நிலை வேறு நன்றாக இல்லை.


கும்பகோணம் பக்கத்தில் இருக்கும் அந்த ஊரில் கோபாலைச் சந்திக்கிறான் சத்யன். அப்பொழுது சாமியார் அங்கே வருகிறார். அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்பொழுது;

"நான் ஒன்றைச் சொல்ல வேண்டும்" என்கிறான் சத்யன்.

"எதை பற்றிச் சொல்ல வேண்டும். ஒரு நாள் கோபாலின் மனைவியை நீ கையை பிடித்து இழுத்தாய். அல்லது அவள் உன்னை இழுத்தாள். அதனை கோபாலின் பெண்ணும், பிள்ளையும் பார்த்து விட்டார்கள்"

"சுவாமிஜி.."

"இங்கே யாரும் சாமியில்லை... எல்லோரும் பூதம் தான்.. பே.. பே "  எனச் சிரித்து விட்டு சாமியார் செல்கிறார்.

கோபாலிடம், "அவனை இந்த ஆற்றில் குளித்து விட்டுப் போகச் சொல். அவனுக்கு இதுதான் மானசரோவர்".

சத்யன் அது என்னவென்று கேட்க;
"வடக்கே, இமையமலையில் மானசரோவர் என்ற ஏரி இருக்கிறது. சுத்தமான தண்ணீர். அதில் குளித்தால் உடம்பு சுத்தமாகும். பின்னர் மனதில் உள்ள அழுக்குகள் எல்லாம் போகும். உனக்கு இந்த ஆறுதான் மானசரோவர் என்கிறார் சாமி"

சத்யன் ஆற்றில் இறங்கி குளிக்கப் போகிறான்.

************************
நாவலில் இருந்து;
"மண்ணுக்குள் புதைத்த பின்னர் நாம் எல்லோரும் எட்டு ஆண்டுகளில் மண்ணோடு மண் தான். ஆனால், தோல் தொழிற்சாலையில் வேலை செய்பவனுக்கு மட்டும் கூடுதலாக ஒரு ஆண்டு ஆகும்"
"ஏன்?"
"அவன் தோல் ஏற்கனவே கொஞ்சம் பதப் படுத்தப் பட்டிருக்கும்"

---------------

"டாக்டர், கற்பனையில் நான் கொன்றவர்களை விட, நிஜத்தில் நீங்கள் கொன்றவர்கள் அதிகம்"
-------------

"சுவாமிஜி"
"இங்கே யாரும் சாமி இல்லை.. எல்லோரும் பூதம் தான்"
************************

புத்தகம் வாங்க: உடுமலை.காம்