அதற்குப் பின்னர் பேசிய இயக்குனர் சுகா அவர்கள், தனக்கும்
கவிதைகளுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி பேசியவர், புதுக் கவிதைகள் என்றாலே
என்னவென்றே தெரியாத தனக்கு, பிரமிளின்,
சிறகிலிருந்து பிரிந்த
ஒற்றை இறகு
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது
என்ற கவிதையின்
மூலம் புதியதொரு படைப்பை நோக்கி நகர்ந்தேன்.. என்று குறிப்பிட்டவர்,
'ஜெயமோகன் தேவதேவன் பற்றிச் சொல்லும்போது, அவர் எழுதிய கவிதைகளைப் பற்றிச்
சொன்னதை விட, தேவதேவன் என்ற மனிதரைப் பற்றி சொல்லியது அதிகம்' என்றார்.
மூத்த படைப்பாளிகளை அறிமுகப்படுத்தும் இது போன்ற விழாவை நடத்தும்
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தனது பேச்சை
முடித்துக்கொண்டார் இயக்குனர் சுகா.
இசை ஞானி அவர்கள் பேசும்பொழுது 'திரு. ராஜகோபாலன் அவர்கள்
பேசும்பொழுது கவிதைதான் முதலில் தோன்றியது எனக் கூறினார், ஆனால் இசைதான்
முதலில் தோன்றியது, பின்னரும் இசைதான் தோன்றியது... அதற்குப் பின்னரும்
இசைதான். பேசுவது இசை இல்லையா... இசை இல்லையா (இந்த இடங்களில் இசை போலவே
பாடியவாறு சொல்ல.. ஒரே கை தட்டல்தான்).. எனவே இசைதான் எல்லாவற்றுக்கும்
முதல்' என்று கூறியவர், தேவதேவனின் கவிதைகள் உண்மையானது, அவரைப் போலவே
என்று குறிப்பிட்டார்.
ஜெயமோகன் அவர்கள் பேசும்பொழுது, பால் சக்கரியாவின் கதை ஒன்றை மேற்கோள்
காட்டிப் பேசியவர், தேதேவனின் கவிதைகளைப் பற்றி கூறினார். பின்னர் கவிஞர்
தேவதேவன் அவர்கள் ஏற்புரை வழங்கினார். 'இந்த மேடையில், நான் அமர்ந்திருந்த
நாற்காலி இப்பொழுது காலியாக இருக்கிறது, அது இன்மையில் இருக்கிறது.. இந்த
அரங்கத்தில், உங்களுக்கு முன்னால் உட்கார்ந்திருப்பவர்களையும்,
பின்னால் உட்கார்ந்திருப்பவர்களையும் உங்களால் பார்க்க முடியாது'.. என்று
கவிதையாகவே பேசியவர், தனது சிறு வயது பற்றியும் 'தன்னால் சில வரிகளைக்
கூட நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை.' என்றும் குறிப்பிட்டார்.
விழாவைத் தொகுத்து வழங்கிய திரு.செல்வேந்திரன் அவர்கள் நன்றி கூற, விழா மிகச் சிறப்பாக நிறைவுற்றது.
விழாவில்
ஜெயமோகன் அவர்கள் எழுதிய 'ஒளியாலானது' புத்தகம் வெளியிடப்பட்டது.
விஷ்ணுபுரம் விருதை இசை ஞானி இளையராஜா அவர்கள், கவிஞர் தேவதேவன்
அவர்களுக்கு வழங்கினார்.
*******************************************
ஜெயமோகன் அவர்கள் தனது தளத்தில்,
தேவதேவனின் கவிதைகள் பற்றி எழுதும்பொழுது, அவரின் பல கவிதைகள் பற்றிச்
சொல்லி இருந்தாலும் எனக்கு பிடித்த இரண்டு கவிதைகள்;
’மரம் உனக்கு பறவைகளை அறிமுகப்படுத்தும்
அப்பறவைகள் வானத்தையும் தீவுகளையும்
வானமோ அனைத்தையும் அறிமுகப்படுத்திவிடும்’
’அசையும்போது தோணி
அசையாதபோதே தீவு
தோணிக்கும் தீவுக்கும் நடுவே
மின்னற்பொழுதே தூரம்... '
*******************************************
தேவதேவன் கவிதைகள் வலைத் தளம்:
தேவதேவன் கவிதைகள்
விஷ்ணுபுரம் விருது 2012 – நிகழ்வுகள்
தேவதேவனின் கவிமொழி
தேவதேவனின் படிமங்கள்
தேவதேவனின் கவிதைகளை ரசிப்பது பற்றி…
படங்கள்:
ஜெயமோகன்.இன் தளத்திலிருந்து - நன்றி