Showing posts with label துளசி ஜெயராமன். Show all posts
Showing posts with label துளசி ஜெயராமன். Show all posts

Monday, September 9, 2024

கங்கைப் பருந்தின் சிறகுகள் - லக்ஷ்மிநந்தன் போரா

அஸ்ஸாமிய நாவலான கங்கைப் பருந்தின் சிறகுகள், நவீனத்தால் ஏற்படும் மாற்றங்களையும், ஒரு காதல் - முக்கியமாக காதலித்தவள் படும் துயரங்களையும் சொல்லும் நாவல். 

போக்ராம் ஒரு சந்தை வியாபாரி. சணல் அறுவடை நடக்கும் காலங்களில் அதை வாங்கி விற்பான். மற்ற மாதங்களில் துணிகளை வாங்கி விற்பான். பக்கத்து ஊர் சந்தைகளில் அவன் வியாபாரம் செய்வதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானமே அவன் குடும்பம் நடத்த உதவுகிறது. வாரத்தின் எல்லா நாளுமே அவன் சந்தைக்குப் போய்விடுகிறான். போக்ராமுக்கு மனைவி, பிள்ளைகள், தங்கை வாசந்தி, வயதான தாய் என பெரிய குடும்பம். வறுமை இல்லை என்றாலும் குடும்ப சக்கரம் போக்ராமுடைய வருமானம் கொண்டே ஓடுகிறது. 



நாவல் முழுவதும் சோனாய் ஆறு கூடவே வருகிறது. அவர்கள் இருக்கும் கிராமம் சோனாய் பரியா என்ற ஊர். அந்த ஊரில் தனஞ்ஜெயன்  என்னும் இளைஞன் ஹோமியோபதி மருத்துவம் பார்க்கிறான். தன்னால் முடிந்த உதவிகளை அவன் அந்த ஊர் மக்களுக்குச் செய்கிறான். போக்ராமும் அவனும் நண்பர்களாக இணைகிறார்கள். வாசந்திக்கு தனஞ்ஜெயனை பிடித்து போவதால் அவனை காதலிக்கிறாள். இருவரும் வீட்டாருக்குத் தெரியாமல் சந்தித்துக் கொள்கிறார்கள். வாசந்தியின் அண்ணி தருலதாவுக்கு அது தெரிந்து போக, உன் அண்ணனிடம் சொல்லி அவனையே உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன், அது வரைக்கும் நீ பொறுமையாக இரு என்கிறாள். 

சரியான சாலை வசதிகள் இல்லாத அவர்களின் ஊருக்கு, நவீன சாலைகள் போடப்படுகிறது. நவீனம் என்பது வளர்ச்சிக்கான அறிகுறி என்று நாம் நினைக்கிறோம். ஆனால் சிலர் அதில் பாதிப்படைகிறார்கள். போக்ராம் இதுவரை கிராமத்தில் பொருளை வாங்கி பெரிய வியாபாரிகளுக்கு விற்று வந்தான். இப்பொழுது நவீன சாலைகள் மூலம் மோட்டார் வண்டிகள் வருவதால் பெரிய ஆட்களே நேரடியாக வந்து கொள்முதல் செய்து விடுகிறார்கள். சில சந்தைகளில் துணி விற்று வந்த போக்ராம் அதுவும் செய்ய முடிவதில்லை. போக்குவரத்து வசதி வந்துவிட்டதால் பெரிய கடைகளைத் திறந்து நிறைய துணிகளை கொண்டு வந்து மக்களை ஈர்க்கிறார்கள். இவனிடம் துணி வாங்க ஒருவரும் வருவதில்லை. அவனுக்கு அந்த நவீன சாலை, கொல்ல வந்த கருப்பு பிசாசு போல தோன்றுகிறது. வங்கி லோன் வாங்கி தொழில் செய்யலாம் என்றால்  அது நடைபெறாமல் போய்விடுகிறது. 



குடும்பத்தை நடத்த பணமில்லாமல் கஷ்டப்பட்ட போக்ராமுக்கு ஒரு அரசியல்வாதியின் நட்பு கிடைக்கிறது. அந்த நேரத்தில் தேர்தல் வர, அவருக்கு பிரச்சாரம் செய்கிறான் போக்ராம். எதிர் கட்சி வேட்பாளரை தனஞ்செயன் ஆதரித்து பிரச்சாரம் செய்கிறான். நண்பர்களாக இருந்த இருவரும் இப்போது எதிரிகள் ஆகிவிட, வாசந்தியின் காதல் கைகூடாமல் போகிறது. போக்ராம் ஆதரவு தெரிவித்தவரே தேர்தலில் வெல்வதால் அவனுக்கு வருமானம் வருகிறது. கூடிய விரைவிலேயே அவன் ஊரில் பெரிய பணக்காரனாகி விடுகிறான். 

வாசந்தியின் அண்ணி தனது கணவனிடம் வாசந்தியின் காதலைப் பற்றிச் சொல்கிறாள். அவனோ இப்போது எதிரியாகி விட்ட தனஞ்செயனுக்கு என் தங்கையை குடுக்க மாட்டேன், வேறு இடத்தில் அவளை கட்டி வைப்பேன் எனச் சொல்கிறான். சொன்னது போலவே மதுரா என்னும் வரனை அவனுக்கு கொண்டு வருகிறான். முதலில் மறுக்கும் வாசந்தி பின்னர் தனது அண்ணியின் கட்டாயத்தின் பேரில் திருமண நிச்சயம் செய்ய சம்மதிக்கிறாள். தனது அப்பா மறைந்த பின் குடும்பத்தை தன் தோளில் சுமந்து, யாருக்கும் எந்த கஷ்டமும் கொடுக்காமல் இருந்த தன் அண்ணன் மேல் உள்ள பாசத்தால் அவள் சம்மதித்து மோதிரம் மாற்றிக் கொள்கிறாள். 

நிச்சயம் செய்த பின்னர் வாசந்தி தடுமாறுகிறாள். அண்ணனை மீறி எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறாள். கல்யாணத்துக்கு நாட்கள் நெருங்கி கொண்டிருக்கிறது. தனஜெயனிடம் இருந்து அவளுக்கு கடிதம் வருகிறது. நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம், நீ ஆற்றுத் துறைக்கு இரவில் வந்துவிடு, நாம் இந்த ஊரை விட்டுப்போய் நிம்மதியாக வாழலாம் என்று கடிதத்தில் கூறியிருக்கிறான். வாசந்திக்கு அண்ணன் காட்டிய வரனை திருமணம் செய்வதா அல்லது காதலனுடன் வீட்டை விட்டுப் போய் திருமணம் செய்வதா என்ற குழப்பத்தில் இருக்கிறாள். அன்றிரவு  தன் காதலன் வரச் சொன்னவாறு ஆற்றுக்கும் போய்விடுகிறாள். தூரத்தில் அவளுக்காக படகில் தனஜெயன் காத்திருக்கிறான். அப்பொழுது வாசந்தி தன் விரலில் போட்டிருக்கும் மோதிரத்தை பார்க்கிறாள், குடும்பத்துக்கு இழிவை தேடி தர துணிந்த பெண்ணாக நான் மாறி விட்டேன் என நினைத்தவாறு திரும்ப வீட்டுக்கே ஓடிப் போய் விடுகிறாள். 

வாசந்தி அன்று எடுத்த அந்த முடிவு அவளுக்கு வாழ்க்கையில் வேறு பாதையை காட்டுகிறது. அந்த பாதை கல்லும் முள்ளும் கலந்த கடினமான பாதையாக அவளுக்கு மாறிவிட்டது. கட்டிய கணவனின் சந்தேகம், அவள் கர்ப்பமாக இருக்கும்போது அவன் இறப்பு, பின்னர் குழந்தையின் இறப்பு என பல இன்னல்கள்.  அவள் எடுத்த முடிவால் வாசந்தி பல இன்னல்களுக்கு உள்ளாகிறாள். 

எல்லாவற்றுக்கும் மேலாக தான் ஒரு விதவையாக இருந்து தமது சமூகத்தின் மதிப்பையும், தனது இறப்புக்கு பின் சொர்க்கம் பெற வேண்டும் என அவள் நினைப்பதில்லை. தனஜெயனிடம் ஒரு கடிதத்தில், "இந்த உலக வாழ்க்கையில் இவ்வளவு துன்பங்களை எனக்கு வைத்த கடவுள், நான் இறந்த பின்னர் என்னை சொர்க்கத்தில் சுகமாக வைத்திருப்பார் என்பதை நான் எப்படி நம்ப முடியும்" எனச் சொல்கிறாள். அவள் சமூகம் போட்ட தடைகளை உடைத்து தனது மனத்தை வெளிப்படுத்துகிறாள். ஆனால் அவளின் பழைய காதலன், சாதாரண மனிதன் போல அவளைத் துறந்து அந்த ஊரை விட்டே போய்விடுகிறான், 

அவளின் மாமனார் வைத்திருந்த புத்தகங்களை தனது அறைக்கு மாற்றி படிக்கிறாள். ஒரு காதல் ஜோடி திருமணம் செய்து ஊரை விட்டுப் போக உதவுகிறாள் வாசந்தி. அந்த காதல் ஜோடியிடம் சொல்கிறாள்; "வாய்ப்பு என்பது ஒரு முறைதான் வரும். அதனை நீங்கள் தவற விட்டால் திரும்ப பெற முடியாது".  இழந்தவர்களுக்கு தானே அதன் வலி தெரியும். 

கங்கைப் பருந்தின் சிறகுகள் 

லக்ஷ்மிநந்தன் போரா 

நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா 

தமிழாக்கம் - துளசி ஜெயராமன்