Friday, March 30, 2012

எனது டைரியிலிருந்து - 5

எட்டுக்காலியும் நானும்

எட்டுக்காலியும் நானும் ஒண்ணு
இருவரும் பிழைப்பது
வாய் வித்தையால்.

எட்டுக்காலிக்கு எச்சில்
எனக்குப் பொய்

இருவரும் வலை பின்னுகிறோம்
அது எச்சிலைக்கூட்டி
நான் உண்மையைக் குறைத்து

எட்டுக்காலி வலை
ஜீவித சந்தர்ப்பம்
எனது வலை
சந்தர்ப்ப ஜீவிதம்

எட்டுக்காலிக்குத் தெரியும்
எச்சிலின் நீளமும் ஆயுளும்
எனக்குத் தெரியும்
பொய்யின் தடுமாற்றமும் அற்பமும்.

வாய் வித்தைக்காரர்கள் இருவரும்
எனினும் எட்டுக்காலி
என்னைவிட பாக்கியசாலி...
சொந்த வலையில் ஒருபோதும்
சிக்குவதில்லை அது.

-- சுகுமாரன் (ஆனந்த விகடன்)


குற்ற மனசு

ஆறாயிரத்துக்கு
விற்றுவிட்ட பிறகும்
ராவோடு ராவாக
புதிய எஜமானனின்
தொழுவத்துக் கயிற்றை
அறுத்துக்கொண்டு
பத்து கிலோ மீட்டர்
பயணம் செய்து
மூச்சிரைத்தபடி
வீட்டு வாசலில்
வந்து நிற்கிற
வெள்ளைப் பசுவைப் பார்க்கும்போது
உறுத்தத்தான் செய்கிறது
தனிக்குடித்தனம்
வந்தவனுக்கு.

--- ஜெ. முருகன் (ஆனந்த விகடன்)

திருத்தப்பட்ட வருத்தம்

இறந்தவன்
இறுதிப் பயணத்தில்
எத்தனை பேர் வருகிறார்கள்
என்று
ஒருமுறை கண்களைத்
திறந்து பார்த்தான்

வாழ்ந்ததற்கு
வருத்தப்பட்டு மறுபடியும்
கண்களை மூடிக்கொண்டான்.

-- தமிழன்பன் (ஆனந்த விகடன்)


Tuesday, March 27, 2012

வலி

காலை நேரம் பதினொரு மணி இருக்கும். கொஞ்சம் வெளி வேலையாக, வெளியே சென்றுவிட்டு தகிக்கும் வெய்யிலில் வண்டியில் வந்து கொண்டிருந்தேன். ஒரு சிறுபையன் வழியில் லிப்ட் கேட்டான். அவனுக்கு வயது பதினைந்துக்குள் இருக்கும். சட்டையும், அங்கங்கே கருப்பு மையுடன் கூடிய கால்சட்டையும் அணிந்திருந்தான்.

வண்டியை நிறுத்தி "எது வரைக்கும்?" என்றேன்.
"அம்பேத்கார் நகர் வரைக்கும்ணா" என்றான்.
"சரி ஏறு"
"போலாங் ணா" என்றான்.

"ஸ்கூலுக்குப் போறியா"
"இல்லீன்னா"

"அப்புறம் இப்போ எங்க போயிட்டு இருக்க"
"வீட்டுக்கு ணா... அம்மா எறந்திடுச்சு",  எனக்கு பக்கென்றது.

"எப்படி, ஒடம்பு சரியில்லாம இருந்தாங்களா"
"நல்லாதான்ணா இருந்தாங்க... என்னாச்சுன்னு தெரியல"

"இப்போ எங்க போயிட்டு வர்றே"
"வேலைக்கு ணா"

"என்ன வேலை"
"லேத் ணா"

"நீ ஒரே பையனா"
"இல்லன்னா.. தங்கச்சி ஒண்ணு இருக்குது"

"வீட்ல வேற யாரு இருக்கா..."
"பாட்டி இருக்குது"

"அப்பாவோட அம்மாவா"
"அம்மாவோட அம்மா ணா"

"ம்ம்.. அப்பா"
"அப்பா இல்லண்ணா"

"இங்கதாண்ணா... நிறுத்துங்க.. எறங்கிக்கிறேன்" . வண்டியை விட்டு இறங்கியதும், "தேங்க்ஸ் ணா.." என்றான். "பார்த்துப் போப்பா" என்பதைக் கூட கேட்க நேரமில்லாமல், சாலையைக் கடந்து சிமென்ட் ரோட்டில் ஓடிக்கொண்டிருந்தான்.

அங்கே இருந்து நானும் நகர்ந்தேன். ஏனோ தகிக்கும் வெயிலை விட.. மனது கனமாக இருந்தது. அவனுக்காக கடவுளிடம் வேண்டுவதை விட, வேறொன்றையும் செல்ல இயலவில்லை.

Thursday, March 22, 2012

உண்மை கலந்த நாட்குறிப்புகள் - அ. முத்துலிங்கம்

வாழ்க்கை எங்கே ஆரம்பித்து எப்படி முடியும் என்பதை யார் அறிவார். ஆனாலும், ஒவ்வொரு கணத்தையும் நேசித்து வாழ துறவிகளால் மட்டுமே முடிகிறது. எழுத்தாளர் அ.முத்துலிங்கம் கூட அப்படிதான் இந்த நாவலை எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன். ஒவ்வொரு கணத்தையும் இந்த மனிதர் என்னமாய் வாழ்ந்து பார்த்து, அதை நினைவில் வைத்துக்கொண்டு எவ்வளவு அற்புதமாய் எழுதியிருக்கிறார்.


அவர் இந்த நாவலைப் புனைவு என்று சொன்னாலும், ஒவ்வொரு அத்தியாயத்திலும், இது புனைவு இல்லை, நடந்தது என்றே நினைக்க வைக்கிறது அவரின் எழுத்து.

எத்தனை நாடுகள், எத்தனை வகைப்பட்ட மனிதர்கள், அவர்களின் பழக்கங்கள் என உலகத்தை சுற்றிக்காட்டுகிறது புத்தகம். அவரே சொல்வது போல, நாவலை எங்கே இருந்து வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். அவர் சென்ற ஊருக்கெல்லாம் நம்மையும் கூடவே கூட்டிக்கொண்டு போகிறார்.

அவரது தளத்தில் இருக்கிற இந்தப் பேட்டி முழுவதும் இந்த நாவலைப் பற்றியே இருக்கிறது.

அ. முத்துலிங்கம் - நேர்காணல்

அந்த நேர்காணலில் ஓரிடத்தில் இப்படிச் சொல்கிறார்; "பல சம்பவங்கள் என் மன அடுக்கின் அடியில் போய் கிடக்கும். அந்தச் சம்பவம் நடந்தபோது அது பெரிதாகத் தோன்றியிராது. வேறு ஏதோ ஒரு நிகழ்ச்சியின் போது அந்த ஞாபகம் திடீரென ஒரு மின்னல்போல கிளம்பி வெளியே வரும். மணலிலே புதைத்து வைத்த ஆமை முட்டை  சூரியனின் வெப்பம் கிடைக்கும் சரியான ஒரு தருணத்திற்கு காத்திருப்பதுபோல ஏதோ ஒரு கணத்தில் இலக்கிய சிருட்டி நடக்கும். ஒரு சிறு தூண்டலில் இது நிகழும். "

அனைத்துப் பக்கங்களிலுமே முத்திரை வரிகள் போல சில வரிகள் இருக்கின்றன. படித்துப் பாருங்களேன். முக்கியமாக சில இடங்களில், நமக்கு இதே போல நடந்திருக்கிறதே என்று நினைக்க வைக்கிறார்.  விமான நிலையங்களில் சப்பாத்துக்களைத் தூக்கிக் கொண்டு பயணிப்பதைப் பற்றிக் கூறுகிறார், அப்போது தான் எனக்கும் நினைவு வந்தது நாம் கூட, பெல்ட், பேனா, பர்ஸ் என்று அனைத்தையும் தூக்கி கூடையில் வைத்து நானும் நடந்திருக்கிறேன் என்பதை. யாருக்காக, எதற்காக இடுப்பில் ஒரு பெல்ட்டை கூட போட முடியாமல், ஏதோ ஒரு நாட்டில், இப்படி கையை மேலே தூக்கி கொண்டு போக நான் என்ன தப்பு செய்தேன்?.

சில வேளைகளில் இலக்கியம் எனபது, நமது வாழ்க்கையையும் சேர்த்தே விவரித்து விடுகிறது.

Saturday, March 17, 2012

சினிமா: காந்தி(Gandhi)

என் சிறுவயதில், வெள்ளிக்கிழமை காலை வேளைகளில் ரேடியோவில் 'சத்திய சோதனை செய்தவரே, ஒரு சரித்திர சாதனை புரிந்தவரே' என்ற பாடலுடன், நம் தேசத் தந்தை மகாத்மாவின் சத்திய சோதனையைப் படிப்பார்கள். அதற்குப் பின்னர், ஒரு போட்டியில் வெற்றி பெற்றதற்காக 'சத்திய சோதனை' புத்தகத்தை எனக்குப் பரிசாகத் தந்தார்கள். மகாத்மாவின் சிறுவயதிலிருந்து, அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பி விடுதலைப் போரில் பங்கேற்றது வரை அதில் எழுதியிருப்பார். இப்படி அங்குமிங்குமாக, மகாத்மாவைப் பற்றி தெரிந்து கொண்டிருக்கிறேன்.



அது மட்டுமில்லாமல், எங்கள் அப்பா ஒரு கைத்தறி நெசவாளர் என்பதால் காந்தியின் மீது சிறுவயதில் இருந்தே ஒரு பற்று இருந்தது. அன்று எங்கள் ஊருக்கு யாராவது  வந்தால், கையால் தயாரித்த நூல் மாலையைத்தான் போடுவார்கள். அத்தனை பேர் வீட்டிலும் கைத்தறி சத்தம் கேட்ட ஊரில், இன்று ஓரிருவரைத் தவிர வேறு யாரும் நெய்வதில்லை. அது கிடக்கட்டும்.

கொஞ்ச நாட்களுக்கு முன்னர், விஜய் டிவியின் 'நீயா நானா' நிகழ்ச்சியில், கோபிநாத் 'எத்தனை பேர் காந்தி படத்தைப் பார்த்திருக்கிறீர்கள்?' எனக் கேட்க, ஒரே ஒரு மாணவன் மட்டும் கை தூக்கினான். அப்பொழுதுதான் நினைத்து பார்த்தேன், நானும் காந்தி படத்தைப் பார்க்கவில்லை என்பதை. கண்டிப்பாக காந்தி படம் பார்த்தாக வேண்டும் என்று முடிவு செய்துகொண்டு, பார்த்தும் விட்டேன்.


தென்னாப்பிரிக்காவில் ரயிலில் இருந்து அவரைக் கீழே தள்ளிவிடும் இடத்திலிருந்து படம் ஆரம்பித்து அவரின் இறுதி ஊர்வலத்தில் முடிகிறது. எந்த தேச விடுதலைக்காகப் பாடுபட்டாரோ, அதே தேசம் பிரிவினை கலவரத்தில் வன்முறையை கைவிட, கல்கத்தாவில் வன்முறை ஓயும் வரை உண்ணா விரதம் இருந்த காட்சிகளையும் விவரிக்கிறது படம். தேசத்தின் விடுதலைக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல், அன்றும் ராட்டையில் நூல் நூற்றுக் கொண்டிருக்கிறார். அவரின் தேவைகள் எப்பவுமே குறைவு. ஆடைகள் உட்பட. தனக்கான வேலையைத் தானே செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் மகாத்மா.



இதுவரைக்கும் நீங்கள் இந்தப் படத்தைப் பார்க்காவிட்டால், நிச்சயம் ஒருமுறை பாருங்கள்.











Thursday, March 15, 2012

வரைதல் என்பது

ஓவியப் பீரியட் என்றால் எங்கள் எல்லோருக்கும் ஒரே சந்தோசமாக இருக்கும். ஆஜானுபாகுவான தோற்றத்தில் இருக்கும் ஓவிய ஆசிரியர், கிளாசுக்கு வந்தவுடன் சாக்பீஸை எடுத்து கரும்பலகை முழுவதும் சித்திரங்களாக வரைவார். சின்ன கோடுகள், பெரிய கோடுகள் இணைந்து ஒரு விலங்காகவோ, பறவையாகவோ மாறும். சுமார் முப்பது படங்கள் இருக்கும் ஓவிய புத்தகத்தில் அவர் வரும்பொழுது, அடுத்த வாரம் மூன்று படங்கள் வரைந்து கொண்டு வர வேண்டும் எனச் சொல்லுவார். 

இப்படியே ஒவ்வொரு வாரமாக, ஓவியப் புத்தகப் படங்கள் அனைத்தும் எங்கள் திறமையால்(!) நிரம்பி விடும். சில நேரங்களில் கதைகளும் சொல்லுவார். நாங்கள் வரைந்த ஓவியங்களுக்கு அவர் பத்துக்கு இவ்வளவு மதிப்பெண் என்று போடுவார். பெரும்பாலும் ஐந்து என்றே என் படங்களுக்கு விழும். ஒரு சில படங்களுக்கு அவர் v.good மற்றும் v.v.good என்று எழுதுவார். எனக்கு ஒரே ஒரு படத்துக்கு மட்டும் எட்டு மார்க் போட்டு v.good என்று கிறுக்கினார். "டேய் நீ கூட எட்டு மார்க் வாங்கிட்டியாடா" என்று பொறாமைப் பட்டான், எப்பொழுதும் எட்டுக்கு மேல் மார்க் வாங்கும் கண்ணன்.

பெரிய வகுப்புகளுக்குச் செல்லச் செல்ல ஓவிய பீரியட் வரவேயில்லை. வண்ணங்களும், கோடுகளும் அதோடு மறந்து விட்டது போலத்தான் இருக்கிறது.

நண்பன் வைத்தீஸ்வரன் தனது பேஸ்புக் பக்கத்தில் தான் வரைந்த ஓவியங்களை பகிர்ந்து இருந்தான். எங்கோ சிறுவயதில் தொலைத்த வண்ணங்களை மீண்டும் பார்த்தது போல இருந்தது. ஓவியங்கள் தவிர, காம்பவுண்ட் சுவரில் வரைந்து இருக்கும் படகு, கதவில் நீந்தும் மீன்கள் என எவ்வளவு அற்புதமாய் இருக்கின்றன.

இந்த ஓவியங்களை இங்கே பகிர்ந்து கொள்ள அனுமதி தந்த நண்பன் வைத்திக்கு எனது வாழ்த்துக்கள்.












Thursday, March 8, 2012

வழக்கம் போலவே..


இன்றைய கூட்டத்துக்கு வேண்டி
முந்தின நாள்
அழகு நிலையத்தில் போட்ட
ஒப்பனை அப்படியே இருந்தது..

பேச வேண்டியவைகள்
எல்லாவற்றையும் சுருக்கி
எழுதி வைத்தாகி விட்டது..

அனைத்து நிருபர்களுக்கும்
தகவல் சொல்லியாகி விட்டது..

நகரத்தின் முக்கிய
பெண்மணிகளுக்கு அழைப்பு
அனுப்பியாகி விட்டது..

சிற்றுண்டிக்கு கூட
ஏற்பாடுகள் நடந்து விட்டன..

இன்னும் ஒருமுறை
ஒப்பனை சரிபார்த்து விட்டு
மகளிர் தின கூட்டத்துக்கு
புறப்பட்டு விட்டார் அந்தப் பெண்...

 சாயம் போன சேலையில்
கொத்து வேலைக்கு
பூ வியாபாரத்துக்கு
வீட்டு  வேலைக்கு
எனப் புறப்படும் பெண்களுக்கு
வழக்கம் போல் 
இது மற்றுமொரு நாளே...  
  

Wednesday, March 7, 2012

சமூக வலை













மனதில் தோன்றுவதையும்
எடுத்த புகைப்படங்களையும்
சட்டென்று சமூக
வலைத் தளங்களில்
பகிர்ந்து கொள்ளத் துடிக்கும்
மகனைப்  பார்த்து,

"ஏன், எங்களிடம் நீ
ஒன்றையும் சொல்வதில்லை"
எனக் கேட்கும் தாயிடம்..

"நீயும் பேஸ்புக்ல
லாகின் பண்ணும்மா"
எனச் சொல்கிறான் மகன்.


(படம்: இணையத்தில் இருந்து - நன்றி) 

Thursday, March 1, 2012

ஊட்டி

சில வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் ஊட்டியில் பைகாரா அருகில் இந்த புகைப்படங்களை எடுத்தேன்.

வாட்டி எடுக்கும் இந்த வெயிலுக்கு, இப்படிப்பட்ட இடங்கள்தான் எவ்வளவு அழகு...