Friday, November 15, 2019

பட்டாம்பூச்சி - ஹென்றி ஷாரியர் (தமிழில் - ரா.கி.ரங்கராஜன்)

செய்யாத குற்றத்துக்கு தண்டனை பெற்ற கைதி, சிறையில் இருந்து தப்பிக்க போராடுவதே இந்நாவலின் களம். இந்நூல் பாப்பிலான் என்ற பெயரில் பிரெஞ்சில் வெளியாகி, தமிழில் ரா.கி.ரங்கராஜன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த நூலை மானிட சாசனம் என்று சொல்வதற்கு காரணம், எத்தனை துயரங்கள் வந்தாலும், தடைகள் வந்தாலும் மனித மனம் விடுதலை ஒன்றையே தனக்கான பெரும் சொத்தாக நினைப்பதை நாவல் விவரிக்கிறது. அந்தச் சுதந்திரத்துக்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க மனிதர்கள் தயாராகவே இருப்பார்கள். 

'விட்டு விடுதலையாகிப் பறப்பாய் இந்தச் சிட்டுக்குருவி போல ' என்று பாரதி சொன்னதுபோல் இந்நாவலில் வரும் நாயகன் பட்டாம்பூச்சி, விடுதலை ஒன்றையே நோக்கமாக கொண்டிருக்கிறான். செய்யாத குற்றத்துக்கு தான் தண்டனை அனுபவிக்க காரணமாக இருந்த ஜூரிகளை பழிவாங்க வேண்டும் என நினைக்கிறான் பட்டாம்பூச்சி. கடல் தாண்டி தான் சிறைக்கைதியாக இருக்கும் தீவிலிருந்து தப்பிக்க முயல்கிறான். எதற்கும் அவன் பயப்படுவதில்லை. கொஞ்சம் பணமும் மறைத்து வைத்திருப்பதால் அவனுக்கு அது உதவியாக இருக்கிறது. சில நண்பர்களையும் சேர்த்துக் கொள்கிறான். 

ஒரு முறையல்ல, எட்டு முறை தப்பிக்க முயற்சி செய்கிறான். சில முறை அவனின் முயற்சிகள் தோல்வியடைகின்றன. சில முறை வெற்றிபெற்று கடலைக் கடந்தாலும், அவன் சென்று சேர்ந்த நாட்டின் சட்ட திட்டங்களால் திரும்பவும் சிறைக்கு அனுப்ப படுகிறான். எப்படியும் அவனுக்கு யாராவது ஒருவர் உதவிக்கொண்டே இருக்கிறார்கள். அறிவும் பலமும் இருப்பதால் அவன் சொல்வதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். அநியாயத்தை தட்டிக்கேட்க அவன் தயங்குவதேயில்லை. 


ஒருமுறை பழங்குடிகள் வாழும் தீவில் வழி தவறி அடைக்கலம் கோர நேர்கிறது. யாரையுமே அனுமதிக்காத அவர்கள் பட்டாம்பூச்சியைப் பார்த்ததும் சேர்த்துக்கொள்கிறார்கள். அவன் அங்கே சில மாதங்கள் தங்கி இரண்டு பெண்களையும் மணக்கிறான். வாழ்க்கை நன்றாகவே செல்கிறது அந்தத் தீவில். ஆனால் அங்கே இருப்பதும் அவனுக்கு ஒரு சிறையாக இருக்கிறது. அங்கே இருந்து கிளம்புகிறான். 

மனிதர்கள் மேல் மிக்க அன்பு உள்ளவனாக இருக்கிறான் பட்டாம்பூச்சி. மற்றவர்களும் அவன் மேல் அன்புள்ளவர்களாகவே இருக்கிறார்கள். நாம்தான் இந்த சிறையில் அகப்பட்டு துயரங்கள் நிரம்பிய வாழ்க்கை விதிக்கப்பட்ட நிலையில், அதிலிருந்து பட்டாம்பூச்சியாவது தப்பிக்கட்டும் என நினைக்கிறார்கள் மற்ற சிறைவாசிகள். அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்கிறார்கள். நண்பர்கள் அவனுக்கு எப்போதும் துணையிருக்கிறார்கள். தப்பிச் செல்லும்போதும், சிறையில் இருக்கும்போதும் சில நண்பர்களை அவன் இழக்க நேர்கிறது. 

தப்பிச் செல்லும்போது கடலில் காவலர்கள் என்னைச் சுட்டால், நான் சுதந்திரமானவனாகவே செத்தேன், சிறையில் அடைக்கப்பட்ட நாலு சுவருக்குள் இல்லையென மகிழ்ச்சியடைவேன் என்கிறான் பட்டாம்பூச்சி. தப்பும் முயற்சியில் தோல்வியுற்று திரும்பவும் சிறைக்கு வரும்போது அவனுக்கு அதிக தண்டனைகள் தரப்படுகின்றன. யாருமேயற்ற தனிமையான அறையில் அவன் அடைபட நேர்கிறது. யாருடன் பேசவும், பார்க்கவும் முடியாது. பூரான்களும், பல்லிகளும் நிரம்பிய அந்த அறையில் அவன் நம்பிக்கையை இழப்பதேயில்லை. கொடுமையான மனச்சிதைவுக்கு உட்தள்ளும் அந்த அறையில் இருந்துகொண்டு, நாளை நான் தப்பி விடுதலையடைவேன் என்றே நம்பிக்கையுடன் நாட்களை கடத்துகிறான். 

எல்லோரும் என்னை ஒரு கைதியாக நினைக்க கூடாது, நானும் ஒரு நல்ல மனிதன்தான். இந்த நாட்டின் சட்ட திட்டங்களால் தவறான தண்டனை பெற்ற எனக்கு அந்த சட்டதிட்டங்களால் எந்தப் பயனும் இருப்பதில்லை என்கிறான் பட்டாம்பூச்சி. பத்தாண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்ட அவன் இறுதி முயற்சியில் தப்பி விடுகிறான். பிரெஞ்சு தேசத்துடன் எந்த உறவும் இல்லாத வெனிசுலா தேசம் அவனை சேர்த்துக்கொள்கிறது. எனவே அவனை திரும்பவும் ஒப்படைக்க மாட்டார்கள். பட்டாம்பூச்சி இப்போது சுதந்திரம் பெற்றவன். எதற்காக அவன் இத்தனை வருடங்கள் துன்பப்பட்டானோ அதை அடைந்துவிட்டான். 
Friday, November 8, 2019

சுதந்திரத்தின் நிறம் - லாரா கோப்பா

காந்தியம் என்பது தன் நலனை விட ஏழைகளின் நலனே முக்கியம் என நினைக்க வைப்பது. அதற்காக எவ்வளவு இடையூறுகள் வந்தாலும் பின்வாங்காமல் அறவழியில் போராடும் குணம் கொண்டது. ஒரு செயலில் வெற்றி கிடைத்த பின்னர், ஓய்ந்து விடாமல் அடுத்து என்ன செய்யலாம் என சிந்திக்க வைப்பது. 

கிருஷ்ணம்மாள் - ஜெகநாதன் இருவருமே சுதந்திர போராட்ட வீரர்கள். காந்திய வழியில் நடப்பவர்கள்.  கிருஷ்ணம்மாளைத் திருமணம் செய்யும் முன்னர் ஜெகநாதன் அவரிடம் 'எனக்கென எந்த சொத்தும் சேர்க்க மாட்டேன், ஒரு ஊரில் நிலையாக இருக்க முடியாது. சமைக்கத் தேவையான பாத்திரங்கள் கூட மண் பாத்திரங்கள்தான், ஏனெனில் வேறு ஊருக்குச் செல்லும்போது அப்படியே போட்டுவிட்டு போய்விடலாம். சுமைகள் குறையும்.' எனச் சொல்கிறார்.


சுதந்திரம் பெற பாடுபட்டவர்கள், அதை பெற்ற பின்னர் மகிழ்ச்சி அடைய முடிவதில்லை. ஏனெனில், புதிய அரசானது ஏழைகளுக்கு ஏதாவது செய்யும் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஆமை வேகத்தில் நடக்கும் காரியங்கள் எரிச்சலை வரவைக்கிறது. அப்பொழுது காந்தியர் வினோபா அவர்கள், நிலங்களைத் தானமாக வாங்கி ஏழை மக்களுக்கு வழங்க பூதான இயக்கம் ஒன்றை ஆரம்பிக்கிறார். கிருஷ்ணம்மாள் - ஜெகநாதன் இருவரும் அவருடன் சேர்ந்து பணியாற்றுகிறார்கள். வினோபாவின் வழியில் தமிழ்நாட்டிலும் நிலங்களைத் தானம் பெற்று ஏழை மக்களுக்கு அளிக்கிறார்கள். 

ஆனால் தானம் அளித்தவர்கள் நல்ல நிலங்களை வைத்துக்கொண்டு பாசன வசதியில்லாத நிலங்களைக் கொடுக்கிறார்கள். நிலம் கிடைத்தும் ஏழைகள் முன்னேற வழியில்லாமல் இருக்கிறது. கிருஷ்ணம்மாள் யோசித்துப் பார்க்கிறார். வினோபாவிடம் கேட்டால், ஒரு ஞானிக்கே உரிய பதிலாக 'இன்று இந்த நிலங்களைத் தருகிறார்கள். பின்னால் நல்ல நிலங்களைத் தானம் கொடுப்பார்கள்' என்கிறார். ஆனால், நல்ல நீர்ப்பாசன வசதியுள்ள நிலத்தால் மட்டுமே ஏழைகளுக்கு வருவாய் வரும் என்று உணர்கிறார் கிருஷ்ணம்மாள். 

எனவே நல்ல நிலங்களுக்கு உரிய பணம் தந்து வாங்கி அதை அவர்களுக்கு கொடுத்தால், அவர்கள் உழைத்து பொருள் ஈட்ட முடியும் என்பதை உணர்கிறார். ஆனால், அதற்கான பெரும் தொகை கடனாக யார் தருவார்கள் என முயன்று, அரசிடம் தனது கோரிக்கையை வைக்கிறார். அப்போதிருந்த காமராஜர் அரசு அதை ஏற்றுக்கொண்டு கடன் தருகிறது. சொன்னது போலவே அனைத்து நிலங்களின் கடன்களும் முன்னரே அடைக்கப்பட்டு நிலம் இப்பொழுது ஏழைகளுக்கு சொந்தமாகிறது. ஆனால், இதில் ஒரு முரணாக பூதான இயக்கத்தினர், நிலத்தை பணம் கொடுத்து வாங்குவது தங்களின் கொள்கைக்கு மாறானது என்று சொல்ல, தனது செயலில் புதுபாதையை கண்ட கிருஷ்ணம்மாள் அங்கிருந்து விலகுகிறார்.

சில நேரங்களில் நல்ல நோக்கங்களுக்கு போராடியும் கூட, எந்த அரசாங்கம் அமைய உயிரைக் கொடுத்து சுதந்திரம் வாங்கினார்களோ, அதே புதிய அரசாங்கம் அவர்களின் நோக்கங்களை புரிந்து கொள்ளாமல் இருப்பதை வேதனையுடன் சொல்கிறார்கள் கிருஷ்ணம்மாள் - ஜெகநாதன். 


எத்தனையோ நிலங்களைப் பெற்று ஏழைகளுக்கு வாழ்வளித்த  கிருஷ்ணம்மாள் - ஜெகநாதன் ஆகிய இருவரும் தாண்டிய தடைகள், அப்போதைய தலைவர்களுடன் இருந்த தொடர்புகள், சிறை வாழ்க்கை, உண்ணாநோன்பு போராட்டங்கள் என வரலாற்றைத் திரும்பி பார்க்கும் வண்ணம் இந்நூல் அமைந்துள்ளது. இந்நூலின் ஆசிரியர் காந்திய வழியில் ஆர்வம் கொண்ட இத்தாலி நாட்டைச் சேர்ந்த லாரா கோப்பா. கிருஷ்ணம்மாள் - ஜெகநாதன் ஆகிய இருவரையும் அம்மா அப்பா என்றே அழைக்கிறார் லாரா. இருவருடனும் ஆங்கிலத்தில் பேட்டியாக அவர்களின் கடந்த கால நிகழ்வுகளை சொல்லச் செய்து பின்னர் இத்தாலியில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். இந்நூலை அழகாக தமிழில் மொழி பெயர்த்தவர் B.R. மகாதேவன். அம்மா கிருஷ்ணம்மாள் கையெழுத்துடன் அனுப்பி வைத்த தன்னறம்-குக்கூ பதிப்பகத்துக்கு அன்பு நன்றிகள்.