Friday, May 24, 2019

கிருஷ்ணப் பருந்து - ஆ.மாதவன்

நீங்கள் ஒருவரை நல்லவன் என்றோ,கெட்டவன் என்றோ தீர்மானம் செய்யலாம். ஆனால்  நன்மையும், தீமையும் கலந்தவன் மனிதன்.  ஒரு கொலைகாரன் கோவிலுக்குச் செல்லும்போது அங்கே அவன் பக்தியுள்ளவனாக இருக்கிறான். ஒரு குழந்தையைப் பார்த்து சிரிக்கும்பொழுது அவன் அன்பை உணர்கிறான், அப்பொழுது அவன் கொலைகாரனாக இருப்பதில்லை. எப்படி அவன் கொலை செய்தவன் என்பது உண்மையோ, அதுபோலவே அவன் கோவிலுக்குப் போவதும், அன்பாய் இருப்பதும் உண்மை. மனிதர்களின் இந்த பண்பினை, தனது பெரும்பாலான கதைகளில் சொல்கிறார் ஆ.மாதவன். 



சாலைத்தெருவின் ஒரு ஓரத்தில் அந்த தோட்டவிளை அமைந்துள்ளது. குருஸ்வாமி அதன் சொந்தக்காரர். தாத்தா காலத்தில் அழிந்த சொத்துக்களோடு, அப்பாவும் சேர்ந்து அழிக்க, இந்த தோட்டம் மட்டும் எஞ்சியிருக்கிறது குருஸ்வாமிக்கு. அந்த தோட்ட வளாகத்தில் அவர் குடியிருக்கும் வீடு தவிர, ஒரு தேவி கோவில், தென்னை மரங்கள் மற்றும் சில குடியிருப்புகள் உண்டு. அந்த குடியிருப்புகளில் ஏழைப்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். அவர்களிடம் வாடகை என ஏதோ ஒரு பணத்தை குருஸ்வாமி வாங்கி கொள்கிறார். ஓவியம் வரையும், சாலைகளில் பாட்டுப் பாடும், பழைய பாத்திரங்களைச் சரிசெய்யும் குடும்பம் என எல்லோரும் சாதாரண மக்கள். அங்கு குடியிருக்கும் எல்லோருமே குருஸ்வாமிக்கு மிகுந்த மரியாதை கொடுப்பவர்கள். ஊரிலும் பெரிய மதிப்பு. எல்லாருக்கும் அவர் 'சாமியப்பா'.

குருஸ்வாமியின் மனைவி சுப்புலட்சுமி. இரண்டு குழந்தைகளைப் பெற்று இரண்டும் இறந்துவிட, மூன்றாவது பேற்றில் மனைவியும் இறந்துவிடுகிறாள். மனைவியுடனான வாழ்க்கையை அவர் எப்பொழுதும் நினைத்துக்கொண்டே இருக்கிறார். மறுமணம் செய்துகொள்ள மனமில்லை.புத்தக படிப்பும், கோவில் சிற்ப ரசனையும் போக மேல்மாடியில் அமர்ந்துகொண்டு உலகை ரசிப்பதுமாக நாட்கள் நகர்கின்றன. தூரத்தில் வந்தமரும் ஒரு கிருஷ்ணப் பருந்தை பார்த்துக் கொண்டே இருக்கிறார். சில நாட்கள் வரும் அந்தப் பருந்து சில நாட்கள் வருவதில்லை. அவருக்கு வீட்டு வேலைகளுக்கு உதவியாக பார்வதி என்ற கிழவி உண்டு. அந்த விளையில் உள்ள தேவி கோவிலைச் சுத்தம் செய்யும் பார்வதிக்கு சாமி வருவதுண்டு. 

சின்ன வயதிலேயே படிப்பு வராமல், குருஸ்வாமியின் அரவணைப்பில் வளர்பவன் வேலப்பன். அவனின் தந்தை, அந்த வளாகத்தில் வேலப்பனோடு குடியிருந்தார். தாய் இல்லை. வேலப்பன் வளர, வளர பால் கறப்பதில் தேர்ந்தவனாகிறான். ஒரு மாட்டுப்பண்ணையில் வேலைக்கும் சேர்கிறான். ஒரு நாயர் இனத்தைச் சேர்ந்தவன் மாடு, பால் கறவை என வேலைக்குப் போவது வேலப்பனின் தந்தைக்குப் பிடிக்காமல் அவர் எங்கேயோ போய்விடுகிறார். அவரைக் கண்டுபிடிக்க முடிவதில்லை. வேலப்பனுக்கு இனி குருஸ்வாமிதான் எல்லாம். 


வேலப்பன் தான் வேலை செய்யும் பண்ணை முதலாளியின் மகள் ராணியை காதலிப்பதாக சொல்ல, இருவருக்கும் திருமணம் செய்து வைத்து வெளியூருக்கு அனுப்பிவிடுகிறார் குருஸ்வாமி. படிப்பு, வசதி என எல்லாவற்றிலும் கீழ்நிலையில் இருக்கும் வேலப்பனுக்கு ராணியை கட்டிக்கொடுத்து ஊரை விட்டே அனுப்பிவிட்டார் என அவள் குடும்பத்தார் பேசுகிறார்கள். ஒருமாதம் கழித்து அவர்களை அழைத்து தன் தோட்ட வளாகத்திலேயே வைத்துக் கொள்கிறார் குருஸ்வாமி. ஒரு குழந்தையும் பிறக்கிறது. 

வேலப்பன் ஒரு பால் சங்கம் அமைத்து அதன் மூலம் வருவாய் பார்க்க ஆரம்பிக்கிறான். வருமானம் பார்க்க ஆரம்பித்ததும் குடி, புகை என கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகிறான். அவன் சங்கத்தில் இருப்பவர்கள் கூடிப் பேசும்பொழுது, பணக்காரர்கள் நாம் எப்பொழுதும் ஏழையாகவே இருக்க விரும்புவார்கள்; நம் மேல் பாசம் காட்டுவது போல் நடித்து எல்லாவற்றையும் பிடுங்கிக் கொள்வார்கள்; அதற்கும் மேல் நம் வீட்டுப் பெண்களை அனுபவிப்பார்கள் என்றெல்லாம் பேச, வேலப்பனுக்கு பொறி தட்டுகிறது. குருஸ்வாமியின் மேல் ஐயம் கொள்கிறான்.

ஒருநாள் யதேச்சையாக சாமியப்பாவின் அறைக்கு வருபவன், அங்கே ஒரு பெண் நிர்வாணமாக இருக்கும் ஓவியத்தைப் பார்க்கிறான். வேலப்பன் அதன் பின்னர் அவரை மதிப்பதில்லை. ராணி அவரிடம் பேசினால், கோபம் கொண்டு அவள் அவருடன் படுக்கையைப் பகிர்வதாகச் சொல்கிறான். ராணி அழுது புலம்புகிறாள். வளாகத்தில் உள்ள அத்தனை மக்களும் அவன் போக்கை கண்டு, உலகத்தில் இப்படியும் ஆட்கள் உண்டோ என ஆச்சரியம் கொள்கிறார்கள். 

ஒருநாள் பார்வதி சாமி வந்து ஆடும் சமயம், வேலப்பன் அவள் கைகளில் சுடு பாயாசத்தைக் கொட்டி விடுகிறான். பார்வதியால் வேலை செய்ய முடியாததினால் ராணி குருஸ்வாமிக்கு கொஞ்சம் ஒத்தாசை செய்கிறாள். சாமியப்பாவுக்கு, இப்பொழுது ராணியின் மேல் பார்வை மாறுகிறது. சில நாட்களில் ஒரு சண்டையில், வேலப்பன் சிறை செல்ல நேர்கிறது. சாமியப்பா மனது வைத்தால் அவனை வெளியே கொண்டு வர முடியும். அவரோ அமைதியாக இருக்கிறார். 'நீ என்னை பிரசாதிக்கணும் ராணி' என்று அவளிடம் சொல்கிறார். 

பார்த்தால் எவ்வளவு பெரிய ஆள் இப்படிக் கேட்கிறார் என்று எண்ணலாம். அவரும் மனிதர்தானே. துறவி போல் வெளியே காட்டிக்கொண்டாலும் உள்ளேயும் அவருக்கு ஆசைகள் உண்டு. அல்லது அவரின் ஆசையை ராணி தூண்டியிருக்கலாம். அவள் கேட்கிறாள் 'சாமியப்பா வேலப்பனை வெளியே கொண்டு வந்துருவீங்களா நாளைக்கு'.  அவர் மலங்க மலங்க விழிக்கிறார். 'கொண்டுவர்றேன் ராணி' என்றவாறு தெருவில் இறங்கி ஓடுகிறார். 

சாமியப்பா அவரின் வீட்டு முற்றத்தில் இருக்கும் அம்மன் தேவியை வழிபாடு செய்பவர். அந்தக்கோவிலின் சுவரில் வரைந்திருக்கும் பிரும்மாண்டமான தேவி ஓவியத்தை அடிக்கடி பார்த்து ரசிக்கிறார். ராணி அவரைத் தழுவும்பொழுது இறைவியான தேவியின் நினைவு வந்திருக்கலாம். அவள் கேட்டவுடனே, இறங்கி ஓடுகிறார் ஒரு பக்தனைப் போல.