Showing posts with label கதைகள். Show all posts
Showing posts with label கதைகள். Show all posts

Monday, December 31, 2018

பாற்கடல் - லா.ச.ராமாமிருதம்

குடும்பம் ஒரு பாற்கடல். அதிலிருந்துதான் லட்சுமி, ஐராவதம், உச்சஸ்வரன் எல்லாம் உண்டாயின. ஆலகால விஷமும் அதிலிருந்து தான் உண்டாகியது. உடனே அதற்கு மாற்றான அமிருதமும் அதிலேயேதான்.

--

ஜகதா கல்யாணமாகிய புது மணப்பெண். கணவன் வீட்டில் இருக்கிறாள். கல்யாணம் முடிந்ததும், கணவன் உடனே வெளியூரில் வேலைக்குச் சேர்கிறான். வீட்டில் நடக்கும் எல்லாவற்றையும், தன் புதுக்கணவனுக்குச் சொல்ல கடிதம் எழுதுகிறாள். அந்தக் கடிதமே பாற்கடல். 

நான்கு தலைமுறைகள் ஒரே வீட்டில் வாழும் குடும்பம். கூட்டு வாழ்வுக்கே உரித்தான மன வருத்தங்கள், சிறு சிறு சலசலப்புகள் இந்தக் குடும்பத்திலும் உண்டு. ஆனால் எல்லாவற்றையும் ஜகதாவின் மாமியார் தாங்கிப்பிடிக்கிறார். எல்லாக் குடும்பத்திலும் அப்படி ஒருவர் உண்டுதானே. 

எதையாவது தெரிந்துகொண்டால் அதை எங்காவது எழுதிவைத்து விடும் பழக்கம் கொண்டவள் ஜகதா. "படித்த பெண் வேறு. அதனால் புருசனுக்கு கடிதம் எழுதுகிறாள்" என்று அவளைச் சொல்லுகிறார்கள். தன் அம்மா வந்ததை, தீபாவளிக்கு அழைத்ததை, புது அம்மாவான மாமியார் பேசுவதை, குடும்ப அங்கத்தினர்களை,  அவளின் ஏக்கத்தை, கண்ணீரை, ஒருநாள் மாமியார் அம்மா தன் கால்களைப் பிடித்து மருதாணி பூசியதை, கணவனின் பிரிவை 'கிணத்து தண்ணி எங்கேயும் போய்டாது' என்று மாமியார் சொன்னதை என ஒவ்வொன்றைப் பற்றியும் எழுதுகிறாள். 

அது தீபாவளி சமயம். மேல்மாடியில் படுத்த படுக்கையாயிருக்கும் பாட்டியைக் கீழே அழைத்து வந்து குளிக்க வைக்கிறார்கள். அதற்குப் பின்னர், ஒரு குழந்தையின் திடீரென்ற அழுகுரல் கேட்கிறது. எல்லோரும் அடித்துப்பிடித்து ஓடுகிறார்கள். அந்தக் குழந்தை, அந்த வீட்டின் இன்னொரு மருமகளான காந்தியைக் காட்டி 'அம்மா என்னை அடித்துவிட்டாள்' என்று அழுகிறது. மாமியார் மருமகளைத் திட்டுகிறாள். எதற்கு அடித்தாய் என்று கேட்டதற்கு, ஒரு மத்தாப்பு குச்சியைக் கொழுத்திக் கொண்டு என் முன்னால் வந்தான் பையன் என்கிறாள் மருமகள். 

தன் கணவன் பட்டாசுக் கடை விபத்தில் இறந்து போனதால், காந்திக்கு பட்டாசுகள் என்றாலே பிடிப்பதில்லை. அதனால்தான் குழந்தையை அடித்திருக்கிறாள். மாமியார் அவளிடம்,  'நல்ல நாளும் அதுவுமா எதுக்கு குழந்தைய அடிக்கிறே. என் பையன் போனதுக்கு குழந்தை என்ன பண்ணுவான். எனக்கு மட்டும் துக்கம் இல்லையா?. எல்லாத்தையும் மறந்துட்டு நான் இருக்கலையா' என்று கேட்கிறாள். உடனே காந்தி, 'உங்களுக்கு பிள்ளை போனதும் எனக்கு புருசன் போனதும் ஒண்ணாகிடுமா?' என்று கேட்கிறாள். அவள் கேட்ட கேள்வியால் எல்லோரும் வாயடைத்துப் போகிறார்கள். மாமியார் ஓடிப்போய் அவளைக் கட்டிக்கொண்டு அழுகிறாள். மருமகளைத் தேற்றுகிறாள். 

ஜகதா கடைசிப் பத்தியில் இப்படி எழுதுகிறாள்;
குடும்பம் ஒரு பாற்கடல். அதிலிருந்துதான் லட்சுமி, ஐராவதம், உச்சஸ்வரன் எல்லாம் உண்டாயின. அதிலிருந்து முளைத்துத்தான் நீங்கள் எனக்கு கிட்டினீர்கள். ஆலகால விஷமும் அதிலிருந்து தான் உண்டாகியது. உடனே அதற்கு மாற்றான அமிருதமும் அதிலேயேதான்..

--

ஜகதா இன்னும் கடிதத்தை முடிக்கவில்லை. குடும்பம் ஒரு  பாற்கடல் போல. அதனை ஒரு சிறு கடிதத்தில் அடைக்க முடியுமா. ஜகதா இன்னும் எழுதிக்கொண்டிருப்பாள். 

ஓரிடத்தில், 'இப்பொழுது நால்வராய் இருக்கிறீர்கள். முன்பு ஐவராய் இருந்தவர்கள்தானே?' என்று எழுதுகிறாள். தலையும் புரியாமல், வாலும் புரியாமல் படித்துக்கொண்டே வந்தால், இறந்து போன காந்தியின் கணவனோடு சேர்த்து அந்த வீட்டில் ஐந்து பிள்ளைகள் இருந்திருக்கிறார்கள். 

இணையத்தில் கதையைப் படிக்க;



Friday, July 4, 2014

இரு கதைகள்

எதார்த்த சிறுகதைகள் என்ற வரிசையில் 'சொல்வனம்' இதழில் சில கதைகள் வெளியாகி உள்ளன.

அறுபது வயதுக்கு மேல் ஒரு பெண்மணி, தன் கணவன், பிள்ளைகள் என அவர்களுடன் இருக்கவே விருப்பபடுவார்கள். தனியாக, தான் விரும்பியபடி வாழ அவர்கள் நினைக்கும்போது, வயதை காரணமாக வைத்து மற்றவர்கள் தடுப்பார்கள். பொருளாதாரம் ஒரு காரணமாக இருந்தாலும், இந்த வயதுக்கு மேல் எப்படி தனியே சென்று வாழ்வது என்ற பயமும் இருக்கும்.

அம்பை அவர்களின் 'அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு' கதையில் வரும் சந்தியாபாய், கணவன் மற்றும் பிள்ளைகளிடம், இந்த வீட்டில் எனக்கும் பங்கு இருக்கிறது, நானும் என் நகைகளைக் குடுத்து இருக்கிறேன், என் பங்கை எனக்கு கொடுங்கள். நான் எங்கள் கிராமத்துக்குச் சென்று என் தங்கையுடன் வாழ்கிறேன்.. என்று சொன்னதும் குடும்பத்தினர் ஆடிப் போகிறார்கள். புத்தி பிசகி விட்டது என்று எண்ணுகிறார்கள். சந்தியா பாயின், கணவரும் பிள்ளைகளும் மோசமானவர்கள் இல்லை, அவர்கள் எல்லோரும் இவரைத் தாங்குகிறார்கள். ஆனால், எதையே இழந்தது போல இருக்கும் இருக்கும் இந்த வாழ்க்கையை அவர் துறந்து, தான் நேசித்த தோட்டங்களும் பூச் செடிகளும் குருவிகளும் இருக்கும் தனது பால்ய கால இடத்துக்கு செல்ல ஆசைப்படுகிறார். அவரின் ஆசை நிறைவேறியதா?.. கதையைப் படித்து பாருங்களேன்.

------------

நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களின் 'மாரியம்மன் கஞ்சியும் அந்தோணிசாமியும்'  இந்தக் கதை, தான் பிறந்த மண்ணை விட்டு எங்கேயோ இருக்கும் அந்தோணிசாமியைப் பற்றிய கதை. வெளிநாட்டில், மாரியம்மன் கஞ்சி விழாவில்.. சொந்த மண்ணை விட்டுப் போன அந்தோணிசாமி, தன்னைப் போலவே இருக்கும் அந்தோணிசாமிகளைக் கண்டுகொள்கிறார்.

---------
இந்த இரண்டு கதைகளும் எனக்கு பிடித்திருந்தன.

Tuesday, January 28, 2014

யேசு கதைகள் - பால் சக்காரியா (தமிழில்: கே.வி. ஜெயஸ்ரீ)

பால் சக்கரியா அவர்களின் 'யேசு கதைகள்' படித்தபொழுது அம்மாவைப் பற்றிய நினைவுகளும் வந்து போனது. பிறப்பால் இந்துவாக இருந்தாலும், ஒவ்வொரு முறை சர்ச்சையும் சிலுவையையும் காணும் போது, அம்மா கையெடுத்து வணங்குவதை மறந்ததில்லை. எழுதப் படிக்கத் தெரியாத அம்மாவை, இயேசு எப்படி ஈர்த்தார் எனப் புரியவில்லை.

நான் பிறந்த சமயம், கொஞ்ச நாள் கிறித்துவ மருத்துவமனையில் தங்கியிருந்த போது பழகியிருக்கலாம். வாடிப்போன முகமும், குருதி வடியும் கைகளும், துயரமும் என அவர் சிலுவையில் தொங்கியிருந்த சிற்பங்களைப் பார்த்து, அட நம்மில் ஒருவர் என அம்மாவை நினைக்க வைத்திருக்கலாம். ஒவ்வொரு முறை பேருந்தில் போகும்பொழுதும், சர்ச்சைக் கடக்கும்போது வணங்கத் தவறவில்லை அம்மா.

இந்தக் கதைகளிலும், யேசுவைச் சுற்றி பெண்கள்தான் இருக்கிறார்கள். இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் குறிப்பிடுவது போல, யேசு பெண்களுக்கு நெருக்கமானவராக இருக்கிறார். தங்கள் துயரங்கள், சந்தோசங்கள் என அவரிடம் சொல்ல ஆயிரம் இருக்கின்றன பெண்களுக்கு.



*********

யாருக்குத் தெரியும் என்ற கதையில்,ஏரோது மன்னனின் உத்திரவுப்படி, குழந்தை யேசுவைக் கொல்ல அனுப்பப்பட்ட ஒரு படைவீரன், ஒரு வேசியின் இல்லத்தில் தங்குகிறான். அந்தப் பகுதிகளில், இரண்டு வயசுக்கு கீழ் உள்ள அனைத்து ஆண் குழந்தைகளையும் கொல்ல அவனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகளைக் கொன்ற குருதி வீச்சத்துடன் அந்தப் பெண்ணின் வீட்டில் தங்கி இருக்கிறான். அந்தப் பெண்ணுக்கும், படை வீரனுக்கும் நடக்கும் உரையாடலே கதை.

"குழந்தைகளுடன் உங்களுக்கு யுத்தமில்லை அல்லவா?"
அவன் சொல்கிறான், "படைவீரர்களுக்கு யாருடன்தான் யுத்தம்"

"இத்தனை ஆயிரம் குழந்தைகளின் குருதியினூடாகவா ஒரு ரட்சகன் வருகிறான்?"

"நான் வேசியாக இருப்பதும், இந்த ரட்சகன் குழந்தைகளின் குருதியினூடாக பிறக்க வேண்டும் என்பதும் விதியா?. இந்தக் குழந்தைகளின் குருதிச் சிதறலுக்கு அவன் என்ன பதில் சொல்லப் போகிறான்?"

ஆனால், அதே பெண்தான் யேசுவைக் காப்பாற்றி வைத்து அந்த இரவில் இன்னொரு இடத்துக்கு அனுப்புகிறாள். விடைபெறும்போது, தாயிடம் சொல்கிறாள்; "அவன் வளர்ந்து ராஜாவாகும் எங்களைக் காப்பாற்றச் சொல். அப்படியே அந்தப் படைவீரனையும் காப்பாற்றச் சொல்".

*********

அன்னம்மா டீச்சர் பற்றிய நினைவுக் குறிப்புகள் என்ற கதை, மிக முக்கியமான கதை. தன் சகோதர, சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைத்த டீச்சர் இன்னும் முதிர் கன்னியாக இருக்கிறார். திருமணம் செய்தால், அவர் தரும் வருமானம் நின்று விடும் என்று அவரின் பெற்றோர்கள் திருமணத்தை ஒத்திப் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

அன்னம்மா டீச்சர் இயேசுவை, தம்பி என்றே அழைக்கிறார். சிலுவையில் மரித்த பொழுது, இயேசுவின் வயதை விட இப்பொழுது தன் வயது அதிகம் என்பதால் அப்படிச் சொல்கிறார். ஓரிடத்தில், "இன்றைய உன் மகிமையை கனவு காணக் கூட உன்னால் முடிந்ததா?" என்று சொல்கிறார். 

ஒருநாள், அதுவும் புனித வெள்ளியன்றே ஒரு புல்வெளி மேல் இறந்து கிடக்கிறார் டீச்சர். இறந்த பின்னர், ஒரு இளைஞனை அன்னம்மா டீச்சர் சந்திக்கிறார். அந்த இளைஞன் இப்படிச் சொல்வதுடன் கதை முடிகிறது. "நன்றாக ஓய்வெடுத்துக்கொள் அக்கா. எனக்கு இன்றும்  சக்தியொன்றும் இல்லை. நீ தளர்வுற்று விழும்பொழுது தாங்குவதற்காக மட்டுமே நான் வந்திருக்கிறேன்."

*********

போந்தியஸ் பிலாத்து என்பவர் தான், யேசுவுக்கு தண்டனை வழங்கியவர்.  இந்த பிலாத்து தன் நண்பர், அன்தொனியஸ் என்பவருக்கு எழுதும் கடிதங்கள் இந்தப் புத்தகத்தில் குறுநாவலாக  இருக்கிறது. பிலாத்துவின் செயலாளர் யூதப் பெண் ரூத் மற்றும் பிலாத்துவின் மனைவி ஜூலியா இருவரும் இந்த கதைகளில் வருகிறார்கள்.

பிலாத்து தன் கடிதங்களில் இப்படிச் சொல்கிறார்;
"ஒரு கணம் மீட்பனாகவும், மறுகணம் மீட்கப் படுபவனாகவும் அவன் இருக்க முடியாது."

"தன் வலையில் தானே வீழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நேர்மையானவன் என்று நான் உணர்ந்தேன். ஆனால், நான் முதலில் சொன்னது போல தப்பிக்கச் சம்மதிப்பவர்களைத்தானே, நாம் தப்ப வைக்க முடியும்"

*********

சிலுவை மலை மீது, கண்ணாடி பார்க்கும் வரை மற்றும் ஒரு கிறிஸ்துமஸ் கதை போன்ற கதைகளும் இந்த தொகுதியில் இடம் பெற்றுள்ளன.

மதத்துக்கு அப்பால், யேசுவைப் பற்றி ஒரு சிறு வெளிச்சத்தையாவது இந்த கதைகள் நமக்கு காட்டுகின்றன.


Wednesday, September 11, 2013

பேருந்து நிலையமும் ஒரு சிறுமியும்

நூறு நிமிடத்தில் கோவையை வந்தடையும் ஈரோ-100 பேருந்து ஈரோடு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. பயணச் சீட்டை வாங்கிக் கொண்டு உள்ளே சென்று அமர்ந்தேன்.

கொஞ்ச நேரத்தில் ஒரு சிறுமி, கையில் சிறிய ஜெராக்ஸ் தாள்களுடன் ஏறினாள். எண்ணெய் காணாத தலையும், அழுக்கு உடையுமாக இருந்தவள், எல்லோரிடமும் அந்தத் தாள்களை நீட்டிக் கொண்டிருந்தாள். ஒரு சிலர் வாங்கிக் கொண்டார்கள். சிலர் முகத்தை திருப்பிக் கொண்டார்கள். எனக்குப் பக்கத்து இருக்கையில் இரண்டு இளைஞர்கள் இருந்தார்கள்.  அவர்களிடம் தாளைக் கொடுத்தவள், அப்படியே பின்னால் சென்றாள்.

திரும்பி வரும்பொழுது, இந்த இரண்டு இளைஞர்களும் ஒரு பத்து ரூபாய்த் தாளை அவளுக்கு கொடுத்தார்கள். இந்தப் பக்கம் திரும்பியவள், என்னிடமும் அந்த தாளைக் காட்டினாள். நான் இல்லை என்று மறுக்க, உடனே அவள் எழுதி இருந்ததைக் காட்டினாள். வழக்கம் போல, வாய் பேச முடியாத சிறுமி இவள், இவளுக்கு உதவி செய்யுங்கள் என்ற வாசகத்தோடு, நன்கொடை ரூ.10, ரூ.20, ரூ.50 என்று இருந்தது.

என்னிடம் இல்லை என்றேன். திரும்பவும் வயிற்றைத் தொட்டுக் காட்டி கேட்டாள். நான் தலையாட்டிக் கொண்டே இருக்க, அவள் என் தாடையைப் பிடித்து கொஞ்சினாள். நானும் அவளின் கன்னத்தில் ஒரு தட்டு தட்டிவிட்டு திரும்ப இல்லை என்றேன். கை ஜாடையிலேயே தனக்குப் பேசத் தெரியாது என்றாள். 

எனக்குத் தெரியும், எவனோ ஒருத்தன்(அ)ஒருத்திக்கு இவள் சம்பாதித்துக் கொடுக்கிறாள். அவன் எங்கேயோ ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு, இவள் பிச்சை எடுத்து வரும் காசை செலவழிக்கக் கூடும். இவளுக்கு  சோறாவது வாங்கிக் கொடுப்பார்களா என்பது சந்தேகம் தான். இந்தச் சிறுமிக்கு நாம் காசு கொடுக்கும் பொழுது, மீண்டும் மீண்டும் இவளை நாம் இந்த நரகத்துக்கே தள்ளிக் கொண்டிருக்கிறோம் எனத் தோன்றவும் செய்தது.

தொடர்ந்து மீண்டும் காலைத் தொட்டாள். நிமிர்ந்து என்னைப் பார்க்கும்பொழுது, இப்பவாவது இவன் குடுப்பானா என்று நினைத்திருப்பாள் போலும். அந்த இரண்டு இளைஞர்களும், 'நீங்க குடுக்காதீங்க' என்றார்கள். நான் தலையை ஆட்டிக்கொண்டே, 'ஸ்கூல்ல கொண்டு போய் விடுறேன், என் கூட வந்துறியா' என்றேன். அந்த சிறிய முகத்தில் ஒரு மூர்க்கம் வந்தது. என்ன நினைத்தாளோ, என் கன்னத்தில் ஓங்கித் தட்டிவிட்டு அடுத்த சீட்டுக்கு ஓடிப் போனாள். 

இந்தச் சிறுமிக்கு நான் ஒரு பத்து ரூபாய் கொடுத்து இருக்கலாம். ஆனால் அது அவளுக்குப் போய்ச் சேரப் போவதில்லை. முன்னரே சொன்னது போல, இவளுக்குப் பிச்சை போடுவதன் மூலம் மீண்டும் மீண்டும் அவளை இந்த நரகத்துக்கே நாம் அனுப்பி வைக்கிறோம். இந்தச் சமூகத்தில் ஒருவனாய், ஆட்சி செய்யும் அரசுகளுக்கு ஓட்டுப் போட்ட ஒருவனாய் நான் தலை குனிந்து தூங்கத் தொடங்கினேன்.



Friday, September 6, 2013

ஈராறுகால்கொண்டெழும் புரவி

எழுத்தாளர் ஜெயமோகனின் ஐந்து கதைகளும், ஒரு குறுநாவலும் கொண்ட தொகுப்பு 'ஈராறு கால் கொண்டெழும் புரவி'.


ஈராறு கால் கொண்டெழும் புரவி(குறுநாவல்):

சாஸ்தான்குட்டிப்பிள்ளை தமிழ் ஆசிரியர். பேறுகாலத்தில் மனைவி இறந்து விட, தனி மரமாகிறார். சித்தர் ஞானம், சித்தர்கள் பாடல் என்று தணியாத ஆர்வம். இரண்டு வேம்பு குசிச்களை மட்டும் வைத்துக்கொண்டு, நிலத்துக்கடியில் ஊற்றை எப்படி கண்டறிகிறார்கள் என்று யோசிக்கிறார். தள்ளாத வயதில், ஒரு மலை மேல் சென்று குடில் அமைத்து 'சாமியார்' என அறியப்படுகிறார். அங்கே அவர் நட்டு வைத்த மாமரம், வளர்ந்து ஒரு காய் கூட பிடிக்காமல் இருக்கிறது. கொஞ்ச வருடங்கள் கழித்து, ஊருக்கு வருகிறார். அங்கே தான் அறிந்த, ஞானமுத்தனின் மருகளிடம் நீர் அருந்தி உயிர் துறக்கிறார். அவரின் சாம்பலை அந்த மாமரத்தின் அடியில் போட்டவுடன், அந்த வருடம் முதல் மாமரம் காய்த்து தொங்குகிறது.


இந்நாவலைப் பற்றி ஜெயமோகன்:
"என் படைப்புகளிலேயே மிக முக்கியமான சிலவற்றில் ஒன்று என நான் நினைப்பது ஈராறு கால் கொண்டெழும் புரவி. சித்தர் ஞானம் என்பதன் மீதான ஒரு விளையாடல் அது. அர்த்தமற்ற விளையாட்டல்ல. பல்வேறு மூல நூல்களின் வரிகள் அதில் பகடியாக திருப்பப்பட்டுள்ளன. திரிக்கப்பட்டுள்ளன.  அந்த விளையாட்டு வெறும் கேலி அல்ல. என்னைப் பொறுத்தவரை அது ஒருவகை பொருள் கொள்ளலே. எல்லா வாசகர்களுக்கும் நூல்களும் மொழியும் மாறி மாறி கவ்வி ஆடும் அந்த விளையாட்டு பிடி கிடைக்காது போகலாம்."
சில வரிகள் நாவலில் இருந்து;
"ஓடுவது மண்ணிலன்னா என்ன, மண்ணுக்கு அடியிலண்ணா என்ன"

"மொத்தம் ரெண்டு பூலோகம் இருக்குதுன்னு ஒரு மண்புழு நெனச்சுட்டு. ஒண்ணு அது திங்கப்போற மண்ணு. இன்னொண்ணு அது தின்னு வெளிக்கெரங்கின மண்ணு"

"ருசிச்சது உம்ம பசி அய்யா. பசிக்கப்பால் உள்ள ருசியென்ன?"



அலை அறிந்தது:

வீடு வீடாகச் சென்று அத்தர் விற்கும் 'அத்தர் பாய்' பற்றிய கதை. அலை என்பது மேலேயும் போகும், கீழேயும் போகும். மேலே போன அலை கீழே இறங்க  வேண்டும் என்பது விதி. ஒரு காலத்தில், அத்தர் பாயின் தாத்தா மிகுந்த செல்வத்துடன் இருந்திருக்கிறார். ரம்ஜான் அன்று, சக்காத்து பணத்தை ஏழை மக்களுக்கு வாரி வீசிய குடும்பமாக இருந்திருக்கிறார்கள். அவ்வளவு செல்வாக்குடன் இருந்து, இப்பொழுது வீடு வீடாகச் சென்று அத்தர் விற்கும் பாய் சொல்கிறார்; 'அலை மேலேறினா கீழிறங்கணும்னு அல்லாவோட ஆணை.. கீழ எறங்குத நேரத்துல நாம வந்து பொறந்தாச்சு ... சக்காத்த வாரி எறிஞ்சு குடுத்த பாவத்துக்கு இன்னும் எத்தன தல மொற கஷ்டப்படணுமோ'.

களம்:

பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் அன்று அரங்கேற்ற நாள். தாங்கள் கற்ற கலைகளை அவர்கள் மன்றத்தின் முன்னால்  அரங்கேற்றிக் கொண்டிருந்தார்கள். நகுலன், பீமன் என முடிய.. துரோணர் அர்ச்சுனனை அழைக்கிறார். வில் விஜயனான அவன், பறந்து செல்லும் ஒரு குருவியின் தலையை வெட்டி வீழ்த்துகிறான் தனதம்பால். மகிழ்ந்த துரோணர் 'இவனைப் போல வில்லாளி யாருமே இந்தப் புவியில் இல்லை' எனக் கூற, அரங்கத்தினுள் கர்ணன் வருகிறான். பறந்து செல்லும் ஒரு குருவியின் ஒற்றைச் சிறகை அது அறியாமல் தன்  அம்பால் அறுத்து, கைக்கு கொண்டு வந்து தலைக்கு சூடிக் கொள்கிறான். அர்ச்சுனன் துடிக்கிறான். இருவரும் போர் புரிய முடிவு செய்கிறார்கள். கர்ணனின், குலம் என்ன என்று கேட்க, கோபம் கொண்ட துரியோதனன் 'இவன் என் நண்பன். எனக்குச் சொந்தமான அங்கத நாட்டுக்கு இவனை மன்னன் ஆக்குகிறேன்' என்கிறான்.


 அங்கே வரும் தேரோட்டி, தன் மகன் களத்தில் இருப்பதைப் பார்க்கிறான். கர்ணனிடம் மன்றாடி, போர் வேண்டாம் எனச் சொல்ல அவனும் சம்மதிக்கிறான். சூரியன் மறைந்ததால், சபை மரபுப் படி அரங்கம் கலைகிறது. அர்ச்சுனன், தர்மனிடம் "இவனைக் கண்டு நீங்கள் பயப் பட வேண்டாம். இவனை நாம் வெல்வோம்." எனக் கூற, தர்மனோ " தன் அறத்தால் இந்த சூதன் மகன் நம்மை நிரந்தரமாக வென்று செல்வான் தம்பி. இன்று அந்த சூதன் சம்மட்டியுடன் களத்துக்கு வந்த போது என் மனம் உவகை கொண்டது. நீயும் பீமனும் எல்லாம் உவகை கொண்டோம். ஆனால் அவன் ஒருகணம் கூட அவரை நிராகரிக்கவில்லை. அக்கணத்தில் விண்ணில் தேவர்கள் அவன் மேல் மலர் சொரிந்து விட்டார்கள்” என்கிறான்.

பழைய முகம்:

சினிமா உலகம் எப்பொழுதுமே மிகை அலங்காரத்தால் ஆனது. அந்த அலங்காரத்தை நீக்கி விட்டால், அவர்களுக்கும் காதல் உண்டு, பிள்ளைகள் உண்டு, பிரச்சினைகளும் உண்டு. தான் சிறு வயதில் பார்த்து வியந்த ஒரு நடிகையை சந்திக்க நேர்கிறது அதுவும் பாலியல் தொழில் புரிபவளாக. முதலில் அது தான் இல்லை என்று மறுக்கும் அவள்,  பின்னர் ஒத்துக் கொள்கிறாள். கூடப் பிறந்த சகோதரர்கள் தன்னை ஏமாற்றியது, கூட்டி வந்தவன் தன்னை ஏமாற்றிய கதை என எல்லாவற்றையும் சொல்கிறாள். கர்ப்பத்தை கலைக்கச் சொல்லி வாங்கிய அடிகள், பத்துக்கு மேற்பட்ட முறை கருக்கலைப்பு, கடைசியில் பிறந்த குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைபாடு என போய்க் கொண்டிருக்கிறது அவள் வாழ்க்கை. இரவு முழுவதும் அவள் நடித்த பாடல்களைச் சளைக்காமல் கேட்டுக் கொண்டே இருக்கிறாள் அந்த நடிகை.

மன்மதன்:

சிற்பங்களைப் பார்க்க ஒரு கோவிலுக்குச் செல்கிறான் கிருஷ்ணன். அங்கே ஒரே ஒரு பெண் மட்டும் பூக் கட்டிக் கொண்டிருக்க, அவளின் பேரழகை வியந்து நோக்குகிறான். அவளிடம், 'சிற்பங்களைப் பர்ர்க்க வேண்டும்' எனச் சொல்ல ஓடிப் போகும் அவள் ஒரு ஆளைக் கூட்டி வருகிறாள். அந்தப் பெண்ணின் கணவன்தான் அவன். கண் பார்வை அற்ற ராஜூ. ராஜூ சிற்பங்களைப் பற்றி விளக்குகிறான். ஒவ்வொரு சிலையையும் கைகளால் தொட்டே, அதன் அற்புதங்களைப் பற்றிச் சொல்கிறான். கொஞ்ச நேரத்தில், அந்தப் பெண் தான் சந்தைக்குப் போவதாகச் சொல்லிக் கொண்டு போகிறாள். அவளிடம் சரி என்று சொல்லி விட்டு, மீண்டும் தொடர ஆரம்பிக்கிறான் மன்மதன் சிலையைக் காட்டி, "மன்மதன் கிட்ட எந்த ஆயுதமும் கெடையாது சார்..அந்தக் கரும்பு வில்லும்.. மலரம்பும் மட்டும்தான்".



அதர்வம்:

தனக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்க வழி தெரியாமல் தவிக்கிறான் பாஞ்சால நாட்டு மன்னன் துருபதன். அதர்வ வேதம் அறிந்த யாஜரை அணுகுகிறார்கள். தனக்கு ஏற்பட்ட அவமானத்தை அழிக்கும் வல்லமையோடு ஒரு மகள் வேண்டும் என்கிறான் மன்னன். முதலில் மறுக்கும் அவர்கள், அவனிடம் "குரோதம் உப்புபோல மன்னரே, அது தானிருக்கும் பாண்டத்தையே முதலில் அழிக்கும்" என்று சொல்லிப் பார்க்கிறார்கள். மன்னன் மனம் மாறுவதில்லை. இதுதான் நடக்கும் என்பதை அறிந்த அவர்கள், யாகத்துக்குச் சம்மதிக்கிறார்கள். யாகம் முடியும் தருவாயில், தேவதையின் அனுக்கிரகம்  இருப்பதாகவும், அவளே குழந்தையாக பிறப்பாள் எனச் சொல்கிறார் யாசர். நீரில் அவள் முகத்தை காட்டுகிறார். பேரழகும், கருணையும், விவேகமும் உடையவளாக அந்த பெண் குழந்தை தோன்றுகிறது. துருபதன் 'இவள் பெயர் திரௌபதி, இனி இவள்தான் பாஞ்சாலி…' என்று நடுங்கிக் கொண்டே நீரைத் தொட, பிம்பம் கலைகிறது. யாக குண்டத்தில் இருந்து அக்னி மேலெழுந்து கொண்டிருக்கிறது.


படங்கள்: இணையத்தில் இருந்து - நன்றி.

Friday, April 5, 2013

மஞ்சள் நீராட்டு

முதன் முதலாக, மாரியம்மன் கோவில் திருவிழாவன்று சந்திரா அத்தையை புதிதாகப் பார்ப்பவர்கள் ஒரு மாதிரியாகத்தான் பார்ப்பார்கள். ஐம்பது வயதாகியும், சின்னஞ் சிறுசுகளுடன் சேர்ந்து கொண்டு மஞ்சள் தண்ணி சொம்பை தூக்கி எல்லோர் மேலும் ஊற்றும் அத்தையை அவர்கள் அப்படிப் பார்ப்பதில் தப்பொன்றும் இல்லை. ஊரில் உள்ளவர்கள் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். பழகிப் போனது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

பெண்கள் ஆண்களையும், ஆண்கள் பெண்களையும் துரத்திக் கொண்டு இருக்க, எந்த பேதமும் இல்லாமல் கிடைத்தவர்கள் எல்லோர் மேலும் தண்ணி ஊத்திக் கொண்டிருக்கும் அத்தை. சாமி நெரமனை எடுத்து வரும்போது முதலில் மஞ்ச தண்ணியை யாரோ ஒருவர் மேல் ஊற்றி ஆரம்பித்து வைப்பதும் சந்திரா அத்தை தான். திருவிழா ஆரம்பித்து, முடியும் அந்த ஒருவார காலத்தில் சந்திரா அத்தை அவ்வளவு அழகாக இருப்பாள். தினமும் தலைக்கு குளித்து, சிறு கதம்பத்தை வைத்துகொண்டு, மங்களகரமாக கோவிலையே சுத்தி வருவாள்.

சந்திரா அத்தை இப்படி இருப்பதை ஊர்க்காரர்கள் பார்த்தால்,  'இப்படியாவது அவ சந்தோச பட்டுக்கட்டும்'  என்று உச் கொட்டுவார்கள்.


த்தை என்றால், சொந்த அத்தையும் இல்லை, ஏதோ ஒருவகையில் அப்பாவுக்கு தூரத்து சொந்தம். அண்ணே, தங்கச்சி என்றுதான் இருவரும் கூப்பிட்டுக் கொள்வார்கள். அத்தை கூடப் பிறந்தவர்கள் என்று யாரும் உயிருடன் இல்லை. அத்தையின்  வயதான அம்மா மட்டும் துணை.
மிக இளைய வயதிலேயே கல்யாணம் ஆகி, புருஷன் வீட்டில் வாழ்ந்தது என்னவோ நாலு மாசம்தான். கட்டியவன் எங்கேயோ போய்விட, வாக்கப்பட்ட ஊரில் இருக்க பிடிக்காமல் சொந்த ஊருக்கே திரும்பி வந்துவிட்டது அத்தை.  அவ்வபொழுது யார் மூலமாகவோ புருஷன் உயிரோடு இருக்கிறான் என்கிற செய்தியை மட்டும் தெரிந்து கொள்ளுவாள் அத்தை.


ரண்டு மூன்று வருடங்களாக ஊர்த் திருவிழாவுக்கு செல்லவில்லை. இந்த வருடம் போனபோது, வழக்கம் போல் சாமி மக்களைத் தேடிக் கொண்டு வீதியில் வந்தது. சிறியவர்களும், பெரியவர்களும் மஞ்சள் சொம்பைத் தூக்கிக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தார்கள். சந்திரா அத்தையை காணவில்லை. அம்மாவிடம் கேட்க 'அவ எதுக்கு வர போறா.. அவ புருஷன் போய்ட்டான்..' என்ற பதில் வந்தது. 'எப்போ?', 'அது ஆச்சு நாலு மாசம்.. அது கெடக்கட்டும், அந்த வாழ எலைய இப்படி போடு..'.


பொழுது சாய, ஊருக்குள் நண்பன் கண்ணனைப் பார்க்க நடந்து கொண்டிருந்தேன். வீதி முழுவதும் மஞ்சள் பொடி காய்ந்து கிடந்தது. சந்திரா அத்தை வீட்டைத் தாண்டிதான் கண்ணன் வீட்டுக்குப் போக வேண்டும். திண்ணையில் உட்கார்ந்திருந்த சந்திரா அத்தை, என்னைப் பார்த்ததும் 'மருமவனே.. எப்படி இருக்கீங்க, எப்போ வந்தீங்க..' என்று நலம் விசாரித்தது. நானும் பதில் சொல்லிக் கொண்டே, அத்தையைப் பார்த்தேன். கட்டி இருந்த சாமியார் கலர் புடவையில் தப்பித் தவறி ஒரு பொட்டு மஞ்சள் கூட  இல்லை.


Wednesday, April 4, 2012

அது அப்படித்தான்

வெளியே பனி கொட்டிக் கொண்டிருந்தது. வெள்ளை வெளேர் என்ற சாரல். ஊரில் காணக் கிடைக்காத பனிமழை. இந்த பிரிட்டிஷ் நாட்டுக்கு வந்து நான்கைந்து மாதங்கள் ஆகி விட்டன. வாரம் முழுவதும் வேலையும், வெள்ளிக்கிழமை அன்று வெளியே செல்வதும்  கூட தங்கி இருப்பவர்களின் வழக்கம். நான் அங்கே போனதும், அவர்களுடன் செல்ல நானும் பழகிவிட்டேன்.

கண்டிப்பாக வெள்ளிக்கிழமை அன்று செல்வது 'பப்'(pub) ஆகத்தான் இருக்கும். முதல் நாள் சென்றபோது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. வந்தவர்களின் செல்ல நாய்களும், ஒரு சிலர் குழந்தைகளுடனும், குறை ஆடை அழகிகளும், போதை சிரிப்புகளும், இசையும், சிறு சிறு விளையாட்டுகளும் என தனி உலகமாக இருந்தது. சும்மா நின்று வேடிக்கை பார்த்தாலே நேரத்தை முழுங்கிவிடும். அடுத்த நாள் விடுமுறை என்பதால், பின்னிரவு நேரம் அறைக்கு திரும்புவதும் அடுத்த நாள் காலை பத்து மணிக்கு மேல் விழிப்பதும் பழகிப் போனது.

அந்த வார வெள்ளியும் அப்படித்தான் நேரமாகவே கிளம்பி விட்டோம். ஆளுக்கொரு பியருடன் நின்றும், நடந்தும், அமர்ந்தும் பேசிக்கொண்டே அருந்தினோம். ஒரு கோப்பையை குடித்து முடிக்க ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆனது. வழக்கமாக அங்கே வரும் ஒன்றிரண்டு பேர் நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள். வெறும் முகமன் மட்டும் சில சமயங்களில் பரிமாறிக் கொண்டு நகர்ந்து விடுவோம் பெரும்பாலும். அன்று மெக்கின்சன் என்பவன், கையில் கோப்பையுடன் அருகில் வந்து அமர்ந்து பேசத் தொடங்கினான்.

முதலில் எந்த ஊர், என்ன வேலை, குடும்பம் என பேசத் தொடங்கி மேலே போய்க் கொண்டிருந்தோம். திடீரென, 'உங்களுக்கும் பாகிஸ்தானுக்கும் என்னதான் பிரச்சினை?' என்றான்.

'இந்தியனாகிய எனக்கோ அல்லது பாகிஸ்தானிய மக்களுக்கோ இதில் எந்த சம்பந்தமும் இல்லை. எல்லாம் எங்கள் அரசியல்வாதிகள் செய்யும் வேலை' என்றேன்.

'எஸ்.. இட்ஸ் ஒன்லி பொலிடிகல்' என்றான் அவனும்.

'எனக்கு ஷில்பா ஷெட்டியைப் பிடிக்கும்' என்றான் கண்களைச் சுருக்கிக்கொண்டே. 'அவள் நடித்த படங்களைப் பார்த்திருக்கிறாயா?' எனக் கேட்டேன். 'சில படங்கள்' என்றான். 'நீங்கள் எத்தனை படங்கள் பார்த்திருக்கிறீர்கள்' எனக் கேட்டான்.
'ஷில்பாவின்  படம் ஒன்று கூட பார்த்தது இல்லை'.

'அப்படியென்றால், நீங்கள் படமே பார்ப்பது இல்லையா'
'இல்லையே, நிறையப் படங்கள் பார்ப்போமே'
 
'அப்புறம் ஏன் ஷில்பாவின் படங்கள் பார்த்ததில்லை'
'தமிழ்ல அவங்க நடிக்கறது இல்ல'
 
'தமிழா?'
'ஆமாம் தமிழ் சினிமாவில்'
 
'அப்படியென்றால், நீங்கள் ஹிந்தி படம் பார்க்க மாட்டீர்களா?' எனக் கேட்டான்.
'ஒரு சிலர் பார்ப்பார்கள், ஏனெனில் நாங்கள் தமிழர்கள். எங்களுக்கென்று தனியாக தமிழ் சினிமாக்கள் எடுப்பார்கள்' என்றேன்.

கையில் இருந்த கோப்பையை மேசை மீது வைத்துவிட்டு, 'ஓ கிரேட்.. இத்தனை நாட்களாக இந்தியா என்றால், ஹிந்தி சினிமா என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்... வெகு ஆச்சரியம் எனக்கு' என்றான்.

'தமிழ் மட்டுமில்லை.. மலையாளம், தெலுங்கு என நிறைய சினிமாக்கள் உண்டு'
'ஐ சீ...' என்றவாறே, கோப்பையைத் தூக்கி கையில் வைத்துக்கொண்டான்.

'உங்களுக்கு பெண் தோழிகள் உண்டா?' என்றான்.

'இல்லை'
 
'என்ன பெண் தோழிகளே இல்லையா?' எனத் திரும்பவும் ஆச்சரியப்பட்டான்.
'கல்லூரிக் காலத்தில் உண்டு.. இப்பொழுது இல்லை' என்றேன்.
 
'சரி, எப்பொழுது திருமணம் செய்வீர்கள்?'
'இன்னும் கொஞ்ச நாளாகும்'
'அப்படியென்றால்.. நீங்கள் பெண் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்'
 
'நான் எங்கே போய்த் தேடுவது, எல்லாம் என் பெற்றோர்கள் செய்வார்கள்'
'என்ன பெற்றோரா?' என்று வாயை பிளந்தான்.
 
'ஆம். என் பெற்றோர்தான் பெண் பார்ப்பார்கள்'
'அது எப்படி, பெற்றோர் உங்களுக்கு பெண் பார்க்க முடியும்'
 
'ஜாதகம் எல்லாம் பார்த்து என்னிடம் சொல்வார்கள், எனக்குப் பிடித்தால் கல்யாணம் நடக்கும்'
 
'என்ன... ஜாதகம் பார்த்து கல்யாணம் செய்வீர்களா.. அதன் மூலம் பெண் பார்க்கப் போவீர்களா?'
 
'ஆம்'
'அது எப்படி'
 
எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அவனிடம் இப்படிச் சொன்னேன்,
'அது அப்படித்தான்' .

**************************************

நீண்ட விடுமுறையில் ஊருக்குத் திரும்பி இருந்தேன். சித்தப்பாவிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது,அவர் எதேச்சையாக;

'ஏண்டா, அங்க கல்யாணம் எல்லாம் எப்படி?'

'அங்க எங்க கல்யாணம், கொஞ்ச நாள் சேர்ந்து வாழ்வாங்க. பிடிச்சதுன்னா கல்யாணம் பண்ணிக்குவாங்க. கல்யாணத்துக்கு முன்னாடி அங்க குழந்தை எல்லாம் பொறக்கும் சித்தப்பா..' என்றேன்.

'அது எப்படிடா.. கல்யாணம் ஆகாம கொளந்தை பெத்துக்குவாங்க'

அவரிடமும் இப்படித்தான் சொன்னேன்.. 
'அது அப்படித்தான்' .

Tuesday, January 24, 2012

வீடிலிகள்

அன்றும் அப்படிதான் அந்த ஆள் படிக்கட்டு அருகில் நின்று கொண்டு, வீதியை நோட்டமிட்டுக் கொண்டிருந்தான். அவன் என்று சொல்வது தப்பு, ஏனெனில் அந்த ஆளுக்கு ஐம்பது வயசுக்கு மேலிருக்கும். இந்த மேன்சனுக்கு வந்த இந்த ஒரு வருட காலத்தில், இது போன்ற வயதானவர்கள் தங்கி நான் பார்த்ததில்லை.

கல்லூரி செல்பவர்களும், வேலைக்குச் செல்பவர்களும் என வெளியூரிலிருந்து வந்து தங்கி இருப்பவர்களின் வயதைப் பார்த்தால் முப்பதுக்குள்தான் இருக்கும். இருவர் தங்கிக் கொள்ளும் அறையில் நாங்கள் தங்கி இருந்தோம். முப்பது ரூம்கள் இருக்கும் இந்த மேன்சனில், நாங்கள் இருந்தது இரண்டாவது தளத்தில் வலப்புறம். காலையில் போய்விட்டு இரவு வரும்பொழுது யாரையும் கவனிக்க முடியாது என்றாலும், இந்த புது ஆள் தினமும் காலையில் குறைந்தது இரண்டு மணி நேரம் பால்கனியில் நின்றும், நடந்தும் வீதியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

முதலில் மேன்சனில் தங்கி இருப்போரின், சொந்தமாகவோ, அப்பா அல்லது மாமாவாகவோ இருந்து, ஏதோ வேலையாக கொஞ்ச நாள் தங்கியிருந்துவிட்டுப் போய்விடுவார்கள் என்றுதான் நினைத்தோம். ஆனால், ரொம்ப நாள் கண்ணில் தட்டுப் பட்டுக்கொண்டே இருந்தார். ஒருநாள், எதேச்சையாக பேசிக் கொண்டிருக்கும் பொழுது "நாமதான், வேற வழியில்லாம இங்க வந்து தங்கி இருக்கோம், பக்கத்துல ஒரு பெருசு வந்து தங்கியிருக்குது" என்றான் ரவி.

"யாருடா அது, அதான் எப்பவும் காலையில பராக்குப் பார்த்திட்டு இருப்பாரே அவரா?" என்று கேட்க, "ஆமா அந்த ஆளுதான்" என்றான் அவன். 

"ஏண்டா அந்த ஆளு இங்க வந்து தங்கி இருக்காரு, வேலைக்கு போற மாதிரியும் தெரில" என்று அவனிடம் கேட்க, "எனக்கு மட்டும் என்ன தெரியும், அந்த ஆள்கிட்டேயே கேட்டுப் பாரு" என்று முடித்துக் கொண்டான் ரவி.

ஒரு விடுமுறை தினத்தன்று, கீழே டீ குடித்துவிட்டு மேலே ஏறிவந்த என்னைப் பார்த்து சிநேகமாக சிரித்தார். நானும் சிரிக்க, "எங்க வேலை பார்க்குறீங்க, தம்பி" என்று கேட்டு பரஸ்பரம் பேர் மற்றும் ஊர் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டு, இவரிடம் இதுக்கு மேல் பேசக் கூடாது என்று நழுவி விட்டேன்.


அடுத்து வந்த நாட்களில், "குட் மார்னிங்", "குட் நைட்" சொல்லிக் கொண்டோம். சில வேளைகளில் நாங்கள் சாப்பிடும் கடைகளிலும் தென்படுவார். "பழக் கடைக்குப் போனீங்கனா ரெண்டு பழம் வாங்கிட்டு வாங்க, கொஞ்ச தூரமா, அதனாலதான்" என்றார். "பரவாயில்லீங்க, நாங்க எப்படியும் போகப் போறோம், உங்களுக்கும் சேர்த்து வாங்கிட்டு வர்றோம்" என்றோம். பழத்தைக் குடுத்தவுடன் "ரொம்ப நன்றி தம்பி" என்றார்.

இவர் எதுக்காக இங்க வந்து தங்கி இருக்கார் என்பது எங்களுக்கு ஒரு புரியாத புதிராக இருந்தது. ஒரு நாள் இரவு பத்து மணி இருக்கும். நான் ரூமுக்கு வெளியே நின்றுகொண்டு செல்லில் பேசிக் கொண்டிருந்தேன். அவரும் அந்தப் பக்கம் நின்றுகொண்டிருந்தார். நான் பேசி முடித்தவுடன், "வீட்டுக்கா தம்பி போன் பேசுனீங்க" எனக் கேட்டார். "ஆமாங்க, அம்மாகிட்ட பேசுனேன்" என்றேன். "அப்படியா தம்பி, நான் கூட வீட்ல பேசி ரொம்ப நாளாச்சு" என்றார்.

நான், "அப்போ இங்க ஏதும் வேலையா வந்து இருக்கீங்களா?" என்று கேட்டேன்.

"இல்ல தம்பி. சொல்ல சங்கடமா இருக்கு. ஆனா உண்மையா மறைக்க முடியுமா, சொல்லுங்க தம்பி" என்று என்னைப்  பார்த்துக்கொண்டே, "ஏதோ, உங்ககிட்ட சொல்லலாம்னு எனக்கு தோணுது. எனக்கு ரெண்டு பொண்ணுக இருக்காங்க. ரெண்டும் பள்ளிக்கொடம் போகுதுங்க. செஞ்ச தொழிலு நஷ்டமாகிப் போயிருச்சு. பெரிய கடன் வேற. இருந்த வீடு கூட கடன்ல போயிருச்சு. கடைய அப்படியே ஒருத்தன் பேருக்கு மாத்தி கொடுத்துதான் மீதி கடன அடைச்சேன். மாமனார் ஊர் பக்கத்துல இருக்கு, பொண்டாட்டி புள்ளைக எல்லாம் அங்க இருக்காங்க. என்னையும் அங்க கூப்பிட்டாங்க. இத்தன வயசாகியும் மாமனார் வீட்டுக்கு போறது நல்லா இல்லீன்னுதான் இங்க இருக்கேன் தம்பி" என்றார். கண் கலங்கவில்லை என்றாலும், கண்ணில் கொஞ்சம் சிவப்பு எட்டிப் பார்த்து வார்த்தைகள் பிசிறடித்தது. 

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை, "பரவாய் இல்லீங்க, சீக்கிரம் சரியாப் போயிரும்" என்று சொல்ல, "அத விடுங்க தம்பி, உங்க கிட்ட போய் இதெல்லாம் சொல்லிட்டு இருக்கேன். நேரமாச்சு, போய்ப் படுங்க. குட் நைட்" என்று சொல்லியவாறே தளர்வாக அறையை நோக்கி நடந்தார்.

தீபாவளி நெருங்கிக் கொண்டிருந்தது. தொடர்ந்து காலை வேளைகளில் தெருவில் போவோர் வருவோரை பார்த்துக் கொண்டே பால்கனியில் நின்று கொண்டிருந்தார். தீபாவளி விடுமுறை முடிந்து, அறைக்கு வந்து சேர்ந்த இந்த ஒரு வார காலத்தில் அவர் கண்ணிலேயே தட்டுப்படவில்லை. மேன்சன் மானேஜரிடம் கேட்க, அறையை காலி பண்ணிவிட்டு சென்றுவிட்டார் என்பது பதிலாக வந்தது. அவர் குடும்பத்தோடுதான் வசிக்க, அறையை காலி செய்து சென்றிருப்பார் என நினைத்துக் கொண்டேன்.

சில காலை நேரங்களில், அந்தப் படிக்கட்டை கடக்கும்பொழுது,  இன்னும் அவர் அங்கே நின்று தெருவைப் பார்த்துக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.

படங்கள்: இணையத்திலிருந்து - நன்றி.

Friday, July 1, 2011

ராமன், லட்சுமணன் மற்றும் அனுமார்

நண்பர்கள் நாங்கள் நால்வர் ஒருநாள் வெளியே சுற்றி வரலாம் என்று கிளம்பினோம். முந்தின இரவில் மழை பெய்து குளிராக இருந்தது சாலை. போகும் வழியில், நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த சின்ன டிபன் கடை முன் வண்டியை நிறுத்தி, சாப்பிட உள்ளே சென்றோம்.

கடையின் முன் தோசை மாஸ்டர், உள்ளே ஒருவர், கல்லா அருகில் லுங்கி கட்டி முன்டாப் பனியன் அணிந்த ஒருவர் என சிறு கடை. சாப்பிட்டு முடித்து நாங்கள் வெளியே வரவும், ராம லட்சுமண அனுமார் வேஷம் போட்ட மூன்று பேர் கல்லாக் காரனிடம் ஒரு நோட்டை நீட்டிக் கொண்டிருந்தார்கள்.

ராமருக்கும், லட்சுமணனுக்கும் தலையில் கிரீடம். அனுமாருக்கு பிளாஸ்டிக் வாயும், வாலும். அண்ணன் தம்பிகள் இருவருக்கும் நீலக் கலர் முகம், கை என அப்பி இருந்தனர். அனுமாருக்கு கலர் இல்லை, சரி அவர் மனித இனம்தான் என நினைத்து அப்படியே விட்டிருக்கலாம். மூவருக்கும் காலில் சலங்கைகள். மடி மடியாக வைத்து தைக்கப்பட்ட பச்சை, மஞ்சள், சிவப்பு கலர் துணிகள். துவைத்து நெடு நாட்கள் ஆகியிருக்க வேண்டும். ராமர் கையில் மட்டும் ஜிகினா துணி சுற்றிய வில்.

"மொதலாளி இல்ல.. கெளம்புங்க.." என்றார் கல்லாக்காரர்.

"இல்லீங்க.. ஒவ்வொரு தடவ வரும்போதும் ஏதாவது கொடுப்பாங்க"

"கடைக்கு வர்றவங்களுக்கு சில்லற தர்ரதுக்கே சில்லற இல்ல.. இதுல நீங்க வேற"

"இருக்கறத குடுங்க" ராமர் விடவில்லை.

"மொதாலாளி தான் இல்லன்னு சொல்லுரமுள்ள.. இன்னொரு நா வாங்க" - தோசை மாஸ்டரும் சேர்ந்து கொண்டார்.

"அஞ்சு, பத்தாவது குடுங்க" லட்சுமணன் தன் பங்குக்கு பேசினார்.

"காலம் கார்த்தால வந்து வாதிக்கரிங்களே.." முனகிக்கொண்டே கல்லாப் பெட்டியில் ரூபாய் நோட்டுக்களைத் தேடிக் கொண்டிருந்தார் கல்லாக்காரர்.

ஒரு பத்து ரூபாய் தாளை எடுத்து, அவர்கள் நீட்டிய புத்தகத்தில் கடைப் பெயரையும், ஊரையும் எழுதி பத்து ரூபாய் என்று எழுதிக் கொடுத்தார் கல்லாக்காரர்.

வெளியே வந்த ராமரைப் பார்த்து, இதுவரைக்கும் வாயே திறக்காத அனுமார் "இங்கயே சாப்பிட்டு போயிரலாண்டா.. பசிக்குதுடா" என்றார். "காலாலே இருந்து இன்னும் முப்பது ரூபா கூட தேரல.. அப்புறம் பார்க்கலாம் வா" என்று முன்னாடி போய்க்கொண்டிருந்தார் லட்சுமணன்.

அவ்வளவு பெரிய மலையைத் தூக்கிய அனுமார், கடல் தாண்டி சென்ற அனுமார், அவர்கள் இருவரின் பின்னால் பசியுடன் போய்க் கொண்டிருந்தார்.

Monday, May 30, 2011

ஜோசியம்


"எட்டாமிடத்தில் சனி இருக்க துன்பம் போகுமப்பா
நாலாமிடத்தில் செவ்வாய் இருக்க"
எனப் பாடிக் கொண்டே சென்றார் ஜோசியர். அவருடைய பேர் என்னவென்றே எனக்கு தெரியாது. ஆனால் ஜோசியர் என்றால் ஊருக்கே தெரியும்.

சுற்றி உட்கார்ந்து இருந்த அனைவரும் அவரையே உற்று பார்த்து கொண்டிருந்தோம். கணீரென்ற குரல், வயதாகி விட்டதால் சற்று பிசிறடித்தது. கிருபானந்த வாரியாருக்கு அண்ணன் போலிருப்பார். நான் பார்த்த முதல் சுருட்டு பிடித்தவர் இவர்தான். பக்கத்தில் போனாலே சுருட்டு வாசம் வீசும். மனைவி மகன் இல்லாததால் தனியாகத்தான் இருந்தார். அவராகவே சமைத்து கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தார். பக்கத்துக்கு ஊரில் இருந்தெல்லாம் சிலர் வந்து ஜோசியம் கேட்டு விட்டு போவார்கள். ஒரு சிலர், பைக்கில் உட்கார வைத்து வீட்டுக்கே கூட்டிபோய் ஜோசியம் பார்த்துவிட்டு திரும்ப கொண்டு வந்து விடுவார்கள்.

எங்கள் வீட்டுக்கு மாமா அத்தை மற்றும் சில சொந்த காரர்கள் வந்தால் ஜோசியம் பார்க்க வேண்டும் என்பார்கள். உடனே என்னை அவருடைய வீட்டுக்கு அனுப்பி, அவரை வர சொல்லுவார்கள். நானும் போவேன்.

"அப்பா, ஜோசியம் பார்க்கனும்னாங்க... உங்கள ஊட்டுக்கு வரசொன்னாங்க... "

"சரி.. சரி.. வர்றேன் போ.. கொஞ்ச நேரத்துல வர்றேன்னு சொல்லு... " என்பார்.

கொஞ்ச நேரத்தில், கையில் ஒரு காக்கி பையுடன் வந்து சேர்வார். கெட்டியான பை, உள்ளே காகிதங்கள், பென்சில், பேனா, பஞ்சாங்கம் என்று திணித்து வைத்திருப்பார். அவர் வந்தவுடன் பாய் போடப்பட்டு, அவரும் உக்கார, அவரை சுற்றி எல்லாரும் உட்காருவோம். பார்க்க வேண்டிய ஜாதகத்தை கொடுத்தவுடன் தனியே ஒரு பேப்பரில், கட்டம் போட்டு, கூட்டல் கழித்தல் என சில நிமிடங்கள் கரையும்.



அதற்குள் காப்பி கொண்டுவந்து வைத்தால், குடித்து கொண்டே மெல்ல கனைப்பார். அப்படியே பாட ஆரம்பிப்பார். சில சமயங்களில் அவருடைய பாடல்கள் புரியும், சிலது புரியாது. ஆனால் பாட்டை முடித்து விட்டு, விளக்கமாக ஜோசியம் சொல்லுவார்.

தொழில் எப்படி நடக்கும், கல்யாணம் நடக்குமா, பொண்ணு எந்த திசையில் இருந்து வரும் என்று அவரிடம் வீசப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லுவார். கேள்விகள் தீர்ந்த பின், ஒரு கனத்த அமைதி நிலவும். பஞ்சாங்கம், பேனா என எல்லாவற்றையும் எடுத்து அவருடைய பையில் போட்டுகொள்வார். ஒரு தட்டில் வெத்தலை பாக்குடன் பணம் வைத்தால், வெத்தலையோடு சேர்ந்து பணத்தை எடுத்து மடியில் கட்டிக் கொள்வார்.

எங்கப்பாவுக்கு ஜோசியம் தெரியும் என்பதால், ஜோசியம் சொல்லிவிட்டு "என்ன.. நான் சொல்லுறது சரிதானே.. " என்று அப்பாவை பார்ப்பார். அப்பாவும், சிரித்துகொண்டே "நீங்க சொன்னா.. சரிதான்" என்பார். அப்பாவுக்கு ஜோசியம் தெரியும் என்றாலும் அவர் அதை தொழிலாக செய்யவில்லை. அதை ஒரு பொழுதுபோக்காக கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு நல்ல நேரம் பார்த்துக் கொடுப்பது, நல்ல நாள் குறித்து கொடுப்பார். ஒருசிலர், ஜாதகத்தை கொண்டு வந்து அப்பாவிடம் பொருத்தம் பார்க்க சொல்லுவார்கள். மணி கணக்கில் அவர்களுடன் உட்கார்ந்து, ஒவ்வொரு கட்டத்தையும் அவர்களுக்கு விளக்கி சொல்லி விட்டு கடைசியில், "எதுக்கும்.. இன்னொரு ஜோசியரை பார்த்து கேட்டுக்கங்க.." என்பார். வந்தவர்களும் சரி என்பார்கள்.

எனவே, எங்கள் வீட்டில் எப்பொழுதும் பஞ்சாங்கம் இருக்கும். அதுவும் இருபது, முப்பது வருடத்திய பழைய பஞ்சங்கங்கள் ஒரு கயிற்றில் கட்டப்பட்டு அட்டாரியில் இருக்கும்.

சில சமயங்களில் ஜோசியரை கூட்டி செல்பவர்கள் வீட்டில் பஞ்சாங்கம் இருக்காது. இல்லை, அவருக்கு வேண்டியது பழைய பஞ்சாங்கமாக இருக்கும். உடனே, ஒரு காகிதத்தில் வருடத்தின் பெயரை குறிப்பிட்டு எங்கள் வீட்டுக்கு ஆளை அனுப்புவார். எங்கள் வீட்டு அட்டாரியில் இருந்து அந்த வருடத்தியதை தேடி எடுத்து குடுப்போம்.

ஒரு நாள் வீட்டுக்கு வெளியில் உட்கார்ந்து பேசி கொண்டிருந்தோம். அப்போது, ஜோசியரை வண்டியில் உட்கார வைத்து கூட்டிச் சென்றார்கள்.

"ம்ம்.. இன்னைக்கு ஜோசியர் காட்டுல மழைதான்"

"ஆமா.. வாங்குற பணத்தை என்ன பண்ணுவாரு .. அவரே ஒன்டிகட்டைதான்.." என்றது பக்கத்து வீடு.

"வாரமான கறி, தெனமும் சுருட்டுன்னு மனுஷன் இஷ்டத்துக்கு செலவு செய்யுறார்... மீதி பணத்தையெல்லாம் பொட்டில போட்டு வெச்சுகுவரோ என்னமோ... "

தள்ளாத வயதிலும், தனியாகவே சமைத்து கொண்டு வாழ்ந்து வந்தவர், உடம்பு முடியாமல் படுத்து அடுத்த இரண்டு வாரத்திலேயே போய் சேர்ந்து விட்டார். ஊருக்கெல்லாம் நல்ல நாள் பார்த்து சொன்னவர் எந்த நேரத்தில் இறந்திருப்பார் என்று தெரியவில்லை. மனிதன் பிறப்பதும், இறப்பதும் நல்ல நேரம் பார்த்து நடப்பது இல்லை. இதற்கு இடைப்பட்ட காலத்தில்தான் எல்லாவற்றுக்கும் நல்ல நேரம் தேவைபடுகிறது.

" தகர பொட்டில.. அரிசி பானையில.. எங்கே பார்த்தாலும் பணம் இருந்துச்சாமா.. " என்று ஊரே பேசி கொண்டது. எப்போதும் அவருடைய வீட்டை விட்டு தள்ளி உள்ள ஒரு திறந்தவெளி திண்ணையில் தான் அவர் ஜோசியம் சொல்லுவார். இப்பொழுது அந்த திண்ணை யாருமில்லாமல் வெறுமையாக இருந்தது. இன்னொரு ஜோசியர் அந்த திண்ணைக்கு வந்து ஜோசியம் பார்க்க சாத்தியமேயில்லை .

காலம் அங்கே தனது ஜாதகத்தை காற்றில் எழுதி கொண்டிருந்தது கூட்டல், கழித்தல்களுடன்.

இந்தப் பதிவு ஒரு மீள்பதிவு.

படங்கள்: இணையத்தில் இருந்து. நன்றி

Monday, April 25, 2011

சாப்பாடு

இந்தப் பெருநகரத்தில் உணவுக்கு அலைவதென்பது தினசரி வாடிக்கையாகி விட்டது. என்ன செய்தாலும் ஒரு நல்ல உணவகத்தை கண்டு பிடிக்க முடிவதில்லை. அப்படியே இருந்தாலும் மாதத்தில் பெரும் பணம் அதுக்கே கொடுக்க வேண்டிய அளவு விலைப்பட்டியல் இருக்கிறது. அப்படியே நமது பணம் காலியானாலும், அடுத்த நாள் நமது வயிறு ஓர் ஆட்டம் ஆடி நிற்பதை நாம் ஒன்றும் செய்ய முடியாது. இன்னும் மீறிப் போனால் மருத்துவமனைக்குச் சென்று காட்டக் கூடிய அளவு நிலைமை மோசம் ஆகலாம்.

சைவ, அசைவ உணவகம் என்று இல்லை. எல்லா இடத்திலுமே நாம் வாயைப் பிளக்கும் அளவுக்கு விலைகள். இதில் அசைவ உணவகம் பக்கம் சென்றால் இப்பொழுது இருக்கும் பெரிய ரூபாய் நோட்டு மதிப்பு இல்லாமல் ஒருவர் பசியாறுவது சிரமம். உணவக முதலாளிகளைச் சொல்லியும் குறையில்லை, குளிரூட்டப் பட்ட அறைகள், வாசலிலேயே சலாம் போடும் பணியாளன்(அந்தக் காலத்து ராஜா உடை முரண்), மேசைக்கு ஒரு ஆள், துடைக்க ஒரு ஆள், குழந்தைகள் விளையாட தனியாக ஒரு இடம், சிறு சிறு தொட்டி அழகுச் செடிகள், கிளம்பும் போது இலவசமாக வைக்கப் படும் வாழைபழம் (ரொம்ப சிறுசாக இருக்கும்), பீடா, இனிப்பு சோம்பு என அவ்வளவையும் அவர்கள் செலவில் செய்ய வேண்டியுள்ளது. இதற்கெல்லாம் சேர்த்து நம்மிடம் அவர்கள் விலைப்பட்டியல் நீட்டத் தானே செய்வார்கள்.



எனவே நண்பர்கள் பேசி, இனிமேல் வெளியில் சாப்பிடக் கூடாதென்றும், வீட்டிலியே நாமே சமைத்துக் கொள்ளலாம் என்றும் முடிவானது. சமைப்பது, பாத்திரம் கழுவுவது, கடைக்குப் போவது, காய்கறி நறுக்குவது என யார் யார் எந்த வேலை செய்வதென்றும் பிரித்துக் கொண்டோம். அறையுள் உள்ள நால்வரில், எல்லோருமே வேலைக்குப் போவதால் முறை வைத்து சமைப்பது என முடிவானது. ஒரு வாரம் சுமூகமாகப் போனது. உப்போ, காரமோ எதுவும் தெரியாமல் விழுங்கி வைத்தோம். ஆனால் என்ன, இப்போதெல்லாம் வயிறு கடமுடா இல்லை. நாமே சுத்தமாக செய்தது என்று நல்ல விசயங்களும் நடந்தன. இதையெல்லாம் விட, பணம் மிச்சமானது.

அடுத்த வாரத்திலிருந்து, ஒரு நாள் அவன் பாத்திரம் கழுவவில்லை என்பதால், இன்னொருவன் சமைக்கவில்லை என்றும்,.. இன்னொரு நாள் சமைக்க வேண்டியவன் இரவு தாமதமாக வந்ததால் அன்று... என மீண்டும் உணவகங்களை நோக்கி படையெடுத்தோம். ஒரு நாள் சாப்பிடப் போகும்போது, யானையை விட்டு நெற்போர் அடித்த நம் முன்னோரின் வாரிசுகள் நாம் எனச் சொல்ல, நண்பன் என்னை அடிக்க வந்தான். எப்படியோ நமக்கு நாமே திட்டம் கைவிடப்பட்டு, வழமை போல உணவகங்களில் தொடர ஆரம்பித்தோம்.

ஒருநாள், பக்கத்துக்கு அறை நண்பன் அடுத்த வீதியில் ஒரு அய்யர் வீட்டில் சாப்பாடு சுவையாக இருப்பதாகவும், போய் சாப்பிட்டு வாருங்கள் எனச் சொன்னதும் கிளம்பிப் போனோம். அன்று சனிக்கிழமை, அந்த அய்யர் வீட்டில் மதியம் மட்டும் சாப்பாடு கிடைக்கும் எனச் சொல்லியிருந்தான் நண்பன். நாங்கள் அங்கே போனதும் "கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க" என்றார் ஒருவர். பார்த்தவுடனே அவர்தான் நண்பன் சொன்னவர் என்று தெரிந்தது. உள்ளே இரண்டு சின்ன உணவக மேசையில் எட்டு பேர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் நாங்கள் உள்ளே சென்று அமர்ந்தோம்.




உள்ளே சென்று அமர்ந்ததும் தான் அந்தப் பெரியவரைப் பார்த்தேன். தனது பருத்த உடம்போடு அங்கேயும் இங்கேயும் என மெதுவாக நடந்து கொண்டிருந்தார். முன்னே சாப்பிட்டவர்களிடம் அய்யர் பணம் வாங்கிக் கொண்டிருந்தார், இந்தப் பெரியவர் வாழை இலையை எங்களுக்காக எடுத்து வந்தார். தலை வாழை இலையைப் பிரிக்க அவர் கஷ்டப்பட, நாங்களே அதை வாங்கி பிரித்து மேசையில் விரித்தோம். பக்கத்தில் தண்ணீர் குடுவையிலிருந்து தண்ணீர் தொளித்துக் காத்திருக்க, பெரியவர் பொரியல் எடுத்துக் கொண்டு வந்து பரிமாற ஆரம்பித்தார் மெதுவாக.

பணத்தை வாங்கி முடித்த அய்யர், திரும்பி வந்து இலையை நோட்டமிட்டார்.

"மாமா.. இங்க பாருங்கோ.. பொரியலை இந்த ஓரம்தான் வைக்கணும்.. அந்தப் பக்கம் வைக்கதிங்கன்னு எத்தன தடவ சொல்லுறது"

பெரியவரிடமிருந்து பதிலில்லை. மற்ற இலைகளுக்கும் பரிமாறி விட்டு அப்பளம் எடுக்கப் போனார். அதற்குள் அய்யரும் பரிமாற வந்து விட்டார். சாப்பாடு பிரமாதமாக இருந்தது. இரண்டு பொரியல், அப்பளம், சாம்பார் என வீட்டு சமையல்.

அதற்குள் நண்பன் புளிக்குழம்பு வேணுமென பெரியவரிடம் கேட்கப் போக, பெரியவர் ரச வாளியோடு வந்தார். அய்யர் அதைப் பார்த்து "மாமா.. அவர் கேட்டது புளிக் கொழம்பு.. ரசமில்ல" என்று ரச வாளியை வாங்கிக் கொண்டு, புளிக்குழம்பை எடுத்து வரும்போது முணுமுணுத்துக் கொண்டே வந்தார். பெரியவரைத் தான் பேசிக்கொண்டு வந்தார் என்பது நன்றாகவே தெரிந்தது. எதுவும் சொல்லாமல் பெரியவர் தள்ளாடிக் கொண்டே வெளியே வாசப்படி அருகில் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தார்.

நாங்கள் சாப்பிட்டு முடித்து ஏதோ ஒரு நினைவில் சாப்பிட்ட இலையை எடுக்க மறந்து, கைகழுவப் போக அய்யர் "சார்.. இலையை எடுத்துருங்க". என்றார். நாங்கள் இலையை எடுத்து வெளியே இருந்த கூடையில் போட்டுவிட்டு, கை கழுவி விட்டு வரும்போது பெரியவர் உள்ளே சென்று அடுத்த பந்திக்கான இலையை எடுக்க ஆரம்பித்தார்.

அய்யர் சாப்பிட்டு முடித்த எங்களிடம் பணம் வாங்கிக் கொண்டே பெரியவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் எனப் பார்த்துக் கொண்டே இருந்தார். பெரியவர் இன்னும் தள்ளாடி தள்ளாடிக் கொண்டே ஒவ்வொரு வேலையாகச் செய்து கொண்டிருந்தார். நாங்கள் பணம் கொடுத்துவிட்டு வெளியே கொஞ்ச தூரம் நடந்து கொண்டிருக்கும் போது திரும்பவும் கேட்டது அய்யரின் பேச்சு; "மாமா.. பொரியலை அந்தப் பக்கம் வைங்க.. இந்தப் பக்கம் வைக்காதீங்கன்னு எத்தன தடவ சொல்லுறது".

பெரியவர் நிச்சயமாக இதற்கும் பதில் சொல்லியிருக்க மாட்டார்.

படங்கள்: இணையத்திலிருந்து, நன்றி.

Wednesday, April 6, 2011

பசி













இரவு எட்டு மணிக்கு
மாநகரப் பேருந்துக்கு காத்துக் கொண்டிருந்த
எனை நோக்கி வந்த
ஒரு வயதான பாட்டியுடன்
கூடவே ஒரு சிறுவன்

'தம்பி' என்றார் பாட்டி
'ம்ம்' என்றேன் நான்
'தம்பி, வேல கெடைக்குமுன்னு
ஊர்ல இருந்து கெளம்பி வந்தோம்
ஒரு வாரமா வேல இல்ல
இது எம் புள்ளையோட பையன்
புள்ளைக்கு ஒடம்பு சரியில்ல
கொஞ்சம் காசு குடு சாமி'

அந்தப் பையனிடம்
'என்ன படிக்கிறே, எந்த ஊரு'
எனக் கேட்க, எல்லாவற்றுக்கும்
தலையை ஆட்டிக் கொண்டே இருந்தான்.

இருவரையும் பக்கத்தில் இருந்த
கடைக்கு கூட்டிப் போய்
என்ன வேணும் எனக் கேட்க
'ஊட்டுக்கு கட்டிட்டுப் போயிடுறோம் ' என்ற பாட்டி
சரியென்று ஆன தொகையை
கொடுத்துவிட்டு நகரும்போது
'ரொம்ப நன்றியப்பா' எனச் சொன்னார்

இரண்டு மூன்று நாள் கழித்து
இரண்டு பேருந்து நிறுத்தங்கள் தாண்டி
அதே பையனும் பாட்டியும்
இன்னொருவரிடம் கை நீட்டி
கேட்டுக் கொண்டிருந்தனர்..

இந்த பெரும் பசியை
பிச்சை எடுத்தேனும்
அடக்க வேண்டியிருக்கிறது.

படம்: இணையத்தில் இருந்து, நன்றி.



Thursday, February 10, 2011

சுவரேறிக் குதிப்பது திருடன் மட்டுமில்லை

இரவு 9.40 - க்கு கோடம்பாக்கம் ரயில்வே நிலையத்தில், நிலை கொள்ளாத அவசரத்தில், நீண்டு கிடக்கும் கருந் தண்டவாளங்களில் எலெக்ட்ரிக் ரயிலின் முக வெளிச்சம் வருகிறதா என்று எட்டிப் பார்த்து நின்று கொண்டிருந்தேன். எப்போதும் இப்படி இருப்பதில்லை. எப்படியும் கால் மணி அல்லது இருபது நிமிடத்தில் ஏதாவதொரு வண்டி வந்து விடும். இன்று என்ன பிரச்சினையோ அரை மணி நேரம் ஆகியும் இன்னும் வரவில்லை. கலைந்து கிடக்கும் பயணிகள் கூட்டம் கூடி விட்டது. தொடர்ந்து செல் போனில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வேளை கணவனோ அல்லது மனைவியோ, குழந்தைகளோ, அப்பா அம்மாவோ 'இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறாய்' என நச்சரித்துக் கொண்டிருக்கலாம்.

என்னைப் போல இவர்களும் லேட்டாகப் போனால் அவர்களது வீட்டின் கேட் திறந்திருக்குமா?. ஆனால், எங்கள் வீட்டு உரிமையாளர் கண்டிப்பாக நடையைச் சாத்தியிருப்பார். இந்த மாநகரத்துக்கு வந்து ஒரு மாதம் தான் ஆகிறது. ஏற்கனவே நண்பர்கள் குமார், ரமேஷ் இருந்த குரோம்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில், மூன்றாவதாக நானும் சேர்ந்து கொண்டேன்.



நான் அங்கே பெட்டி, படுக்கையுடன் போனதும், எனது அலுவலக முகவரி, வீட்டு முகவரி, போடோவுடன் கூடிய அடையாளச் சான்று என நண்பன் வாங்கி வீட்டு உரிமையாளரிடம் கொடுத்து விட்டான். எதற்கு என்று கேட்டதற்கு, 'போலீஸ் வந்து கேட்டா, குடுக்கறதுக்கு அப்படின்னு சொன்னாரு' என்றான் நண்பன். அப்புறம் ஒவ்வொரு கன்டிசனாய் சொன்னார்கள். 'நைட் பத்து மணிக்குள்ள வந்துடனும், பத்தே காலுக்கு கேட் பூட்டிருவாங்க.. காலைல எட்டு மணிக்குள்ள குளிச்சிடனும், அதுக்கு மேல தண்ணி வராது.. வாரத்துல ஒரு தடவதான் தொவைக்கணும்.. ப்ரெண்ட்ஸ் யாரும் வந்து நைட் தங்க கூடாது..'. கேட்டதும் தலை கிர்ரென்றது.

இந்த ஒரு மாதமாக எப்படியும் அடித்து பிடித்து பத்து மணிக்குள் எப்படியும் கேட் முன்னாடி ஆஜர் ஆகிட்டேன். இன்னைக்குன்னு பார்த்து ப்ராஜெக்ட் ஹெட் எட்டு மணி ஆகியும் விடவில்லை. கிளம்புவதற்கு ஒன்பது மணி ஆனதென்றாலும், குரோம்பேட்டை போக எப்படியும் மீறிப் போனால் பத்து மணிக்குள்ளாக போய்விடலாம் என நினைத்து வந்தால், வண்டி இன்னும் வந்து சேரவில்லை. 9.40 ஆகியும் இன்னும் கோடம்பாக்கத்தில் நின்று கொண்டிருக்கிறேன்.

பத்து நிமிடம் கழித்து வந்து சேர்ந்தது வண்டி. வண்டியில் உள்ள கூட்டத்தை பார்த்தால், ஒவ்வொரு ஸ்டேசன்லயும் நிறுத்தி எடுக்க எப்படியும் மூணு நிமிசத்துக்கு மேல ஆகும். இன்னைக்கு எப்படியும் லேட் தான் என முடிவு பண்ணிக் கொண்டு குமாருக்கு கூப்பிட்டால், "நான் இன்னும் ஆபீஸ்ல தாண்டா இருக்கேன், ரூமுக்கு காலைலதான் வருவேன். நீ ரமேஷுக்கு கூப்பிட்டு சொல்லிடு. அவன் வீட்டு ஓனர் கிட்ட கேட் சாவி வாங்கி வெச்சிடுவான்" என்றான். ரமேஷுக்கு கூப்பிட்டால், செல் சுவிட்ச் ஆப் என்றது. திரும்ப குமாருக்கு கூப்பிட்டேன். "டேய்.. பேசாம கேட் ஏறிக் குதிச்சிடு.. நான் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி அப்படிதான் குதிச்சேன்.." என்றான். "சரி.. போன வை" என்று கட் பண்ணினேன்.

கிண்டி தாண்டியதும் கூட்டம் கொஞ்சம் குறைஞ்சிடுச்சு. படுபய, என்னமோ ஹார்லிக்ச அப்படியே சாப்பிடுவேன்னு சொல்லுற மாதிரி கேட்ட தாண்டிடு அப்படிங்கிறான். அவ்ளோ பெரிய கேட்ட எப்படி எட்டிக் குதிக்கிறது. அப்படியே குதிச்சு யாரவது பார்த்துட்டா, அடுத்த நாள் ஜெயில்ல தான் கம்பி எண்ணனும். சரி யாரும் பார்க்கலைன்னு வெச்சுகிட்டா கூட, அந்த நாய் வேற இருக்குது. எப்பவும் வரும் போதும், போகும்போதும் வள்ன்னு கத்தும். என்னதான் சங்கிலில கட்டி வெச்சிருந்தாலும், அது போடுற சத்தத்துல யாராவது வந்துட்டா?. இங்க வேலைக்கு வந்து இந்த கஷ்டத்தையெல்லாம் அனுபவிக்கனும் போல இருக்குதுன்னு நெனச்சிட்டு இருக்கும்போதே, பல்லாவரம் தாண்டிருச்சு. அடுத்து குரோம்பேட்டைதான்.

நேரம் 10.25 ஆகி இருந்தது. சரி எதுக்கும் ரமேசுக்கு கூப்பிட்டு பார்க்கலாம் என நினைத்து கூப்பிட்டால் ரிங் போனது. நெஞ்சு படபடவென அடித்துக்கொள்ள, "ஹலோ" என்றேன் நான். பதிலில்லை. திரும்பவும் "ஹலோ.. ஹலோ.." என்றேன். ம்ஹூம். தொடர்பைத் துண்டித்து, திரும்பவும் கூப்பிட்டால்.. 'நாட் ரீச்சபிள்' என்றது. அதற்குள் குரோம்பேட்டை வந்துவிட, இறங்கி படிகளில் ஏறினேன். 10.30 ஆகிவிட்டது.

திரும்ப அவனுக்கு முயற்சி செய்ய, அவன் "டேய்.. எங்கடா இருக்கே.." என்றான்.

"உன்னோட செல் என்னாச்சு.. சுவிட்ச் ஆப் னு வந்துச்சு.."

"இல்லடா.. பாட்டரி டவுன். அதுனால சார்ஜ் போட்டிருந்தேன். ஆபீஸ்ல இருந்து நானும் லேட்டா தான் வந்தேன். நீ கூப்பிட்டப்போ, உன்னோட வாய்ஸ் சரியா கேக்கல. சிக்னல் வேற கிடைக்கல" என்றான்.

"சரி எங்க இருக்கே?" என்றான்.

"எங்க இருப்பேன், ரூமுக்கு வந்துட்டு இருக்கேன். ஆமா, அந்த ஆள் கேட்ட பூட்டிட்டாரா?"

"அதெல்லாம் கரெக்டா, நீ சொல்லிருந்தா நான் சாவி வாங்கி வெச்சிருப்பேன்"
"போடா.. நீயும் உன்னோட செல்லும்.. இப்போ என்ன பண்ணுறது" என்றேன் நான்.

"சரி வா பார்த்துக்கலாம்.. நான் கீழ எறங்கி வர்றேன்"

"சரிடா" என்று போனை வைத்தேன்.

எப்போதும் பிசியாக இருக்கும் மார்கெட்டில், எல்லாக் கடைகளும் பூட்டி விட்டார்கள். கடைகளின் வாசலில் நாடோடிகள் போர்வையை விரித்துக் கொண்டிருந்தார்கள். ரெண்டு மூன்று மாடுகள் காய்கறி கடைகளின் கழிவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. பகல் பூராவும், சுவரொட்டிகளை மேயும் மாடுகளுக்கு கொஞ்சம் பச்சை இரவில்தான் கிடைக்கும் போல. மாரியம்மன் கோவிலுக்கு பெரிய கேட் போட்டு, மூன்று பெரிய பூட்டுகள் மேலிருந்து கீழாக தொங்கிக் கிடந்தன. காக்கும் சாமிக்கும் இவ்வளவு பெரிய கேட் தேவை என்றால், எங்கள் வீட்டு ஓனருக்கு கேட் தேவைதானே?

வீட்டுக்கு பக்கமாக வந்து விட்டேன். நாயின் சத்தம் தெரு முக்கு வரை கேட்டது. ரமேஷ் முழித்துக் கொண்டிருபதற்க்கு அறிகுறியாக, மேல உள்ள எங்கள் ரூமில் வெளிச்சம் இருந்தது. கீழே ஒரு சீரோ வாட்ஸ் பல்ப் மட்டும் தர்மத்துக்கு எரிந்து கொண்டிருந்தது. கேட் பக்கத்தில் இருக்கும் படிக்கட்டில் ரமேஷ் நின்று கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் கேட் பக்கத்தில் வந்தான். கேட்டின் இடைவெளியில், "ஏண்டா.. இவ்ளோ லேட்" என்றான்.

"அந்தக் கதைய அப்புறம் பேசலாம்.. மொதல்ல நான் எப்படி உள்ள வர்றது" என்றேன்.

"ஷூவக் கழட்டி உள்ள போட்டுட்டு..அப்புறம் மேல ஏறு.." என்றான். நாய் குலைத்த சத்தத்தில் இன்னும் ரெண்டும் மூன்று நாய்கள் தொடர ஆரம்பித்தன. நல்ல வேளை, தெருவில் யாரும் இல்லை. குனிந்து ஷூவைக் கழட்டி உள்ளே போட்டேன். சத்தம் கேட்டு நாயின் சத்தம் இன்னும் அதிகமானது. "அதக் கண்டுக்காதே" என்றான் ரமேஷ்.

கேட்டின் மேலே நீட்டிக் கொண்டிருக்கும் கம்பியைப் பிடித்து காலை கேட்டில் வைத்தேன். கீழே இருக்கும் விளிம்பில் காலை வைக்க வழுக்கிக் கொண்டு போனது. மீண்டும் தம் பிடித்து ஏறினேன். மீண்டும் வழுக்கியது. "என்னடா இது" என்றேன் கொஞ்சம் நடுக்கத்துடன். "உனக்கு ஏறத் தெரியலன்னு சொல்லு" என்றான் அவன். மேலும், ஒரு தடவை முயற்சி செய்ய கால் பெருவிரலில் வலி பரவியது.

என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டு பக்கத்தில் பார்த்தால், பக்கத்துக்கு வீட்டின் காம்பவுண்டு கண்ணில் பட்டது. அது இடுப்பு உயரம் உள்ள காம்பவுண்டு. எளிதாகத் தாண்டி செல்ல முடியும். அந்த வீட்டின் காம்பவுண்டில் ஒட்டி இருந்த ஒரு வேப்ப மரம் இரண்டு வீட்டின் பொதுக் காம்பவுண்டு சுவற்றின் மேல் கிடந்தது. "டேய்.. அந்தப் பக்கமா வர்றேன்" என்றேன். "பார்த்துடா.." என்றான் அவன்.

காம்பவுண்டை தாவி, மரத்தின் மேல் கால் வைத்து அந்தப் பக்கமாக எட்டிக் குதித்தேன். இன்னும் நாய் உறுமிக் கொண்டு நின்று கொண்டிருந்தது. சங்கிலி மட்டும் இல்லை என்றால், அதோ கதிதான். இன்னும் தெருவில் யாரும் வரவில்லை. அவன் முன்னே போக, பெருமூச்சுடன் மாடிப் படிகளில் ஏறி தாழிட்டேன். உள்ளே போனதும், ரமேஷ் "ஏண்டா லேட்" என திரும்பக் கேட்க, அவனிடம் ஒன்றும் சொல்லாமல் உள்ளே போய் ஒரு சொம்பு தண்ணியை அப்படியே குடித்து முடித்து ஹாலுக்கு வந்தேன். அவனிடம் இன்றைய கதையைச் சொல்ல ஆரம்பித்தேன். ஏனோ, சொந்த ஊரில் இருக்கும் வீட்டு நினைவு வந்து போனது.

படம் : http://lifemytake7.wordpress.com/ - தளத்தில் இருந்து, நன்றி.


Tuesday, January 11, 2011

ஒரு கூடு

அந்த காலை நேரத்தில் சென்ட்ரலில் இருந்து நுங்கம்பாக்கம் ஸ்டேசனில் இறங்கிய போது நகரம் கொஞ்சம் தான் விழித்திருந்தது. கண்ணனுக்கு செல்லில் கூப்பிட்டேன். வந்து கொண்டிருப்பதாகவும், மேல் படி ஏறி பிள்ளையார் கோவில் பக்கத்தில் நிற்கச் சொன்னான்.

சென்னை, தி நகரில் ஒரு வேலைக்கான இன்டர்வியு இருப்பதால் ஊரிலிருந்து நேற்று இரவு ரயிலேறினேன். முன்னமே சென்னை வந்தால், 'ரூமுக்கு வாடா' என்று சொல்லி இருந்தான் கண்ணன். நேற்றிரவே அவனிடம் பேசி நான் வருவதை அவனிடம் சொல்லிவிட்டேன். மற்ற நண்பர்கள் இருந்தாலும், இண்டர்வியுவுக்குப் போவதற்குப் பக்கமாக இருக்கும் என்றுதான் அவன் அறைக்கு வருவதாக சொன்னேன். அவனுக்காக நின்று கொண்டிருந்தேன். அதோ வந்து விட்டான்.

"எப்படிடா இருக்க.. ஊர்ல எல்லாரும் எப்படி இருக்காங்க.. வேலை எப்படிப் போகுது.. " என இருவரும் பரஸ்பரக் கேள்விகளை அடுக்கிப் பதிலைப் பெறலானோம். ரொம்ப தூரம் நடந்து கொண்டிருந்தோம்.

"என்னடா.. ஊரைச் சுத்திக் காட்டுறியா.. ரூம் எங்கடா.." என்றேன்.

"இதென்ன.. வந்தாச்சு" என்று பக்கத்தில் இருந்த நான்கடுக்கு மேன்சன் கட்டிடத்தைக் காட்டினான். மேன்சன் என்பதால் பக்கத்தில் முனியாண்டி சாப்பாட்டு கடை, பெட்டிக் கடை, மளிகை கடை, சலூன் என அந்த வீதி நிரம்பிக் கிடந்தது. இரண்டாவது மாடியில் அவன் ரூம் இருந்தது. ஒவ்வொரு அறைக்கு முன்னாலும் இருந்த திண்டுகளில் கயிறுகள் கட்டப்பட்டு ஆடைகள் உலர்ந்து கொண்டிருந்தன.

கண்ணனின் அறைக்குள் உள்ளே போனதும் "அப்பாடா.. நல்ல வேல, வர்றப்போ வாட்ச்மென் இல்ல.. இருந்திருந்தா 108 கேள்வி கேட்டிருப்பான்.." என்றான் கண்ணன். அவன் அறையில் இன்னொருவரும் தங்கி இருக்கிறார். அறைக்கு இரண்டு பேர். இரண்டு கட்டில்கள் இரண்டு பக்கமும், ஓரத்தில் ஒரு டேபிளும் போட்டிருந்தார்கள். டேபிளில் புத்தங்கங்கள், பேப்பர்கள், பேனாக்கள் என ஒழுங்கின்றி குவிந்து கிடந்தன. உள்ளேயும் இரு ஜன்னல்களுக்கு இடையில் கயிறு கட்டப்பட்டு, துணிகள் தொங்கியிருந்தன. நீண்ட நாட்கள் சுத்தம் பண்ணாததால் ஒரு வித வாசம் அடித்தது. ஓரமாக ஒரு விளக்கு மாறும், இரண்டு பக்கெட்டுக்கள் குவளைகளோடு கிடந்தன.

"ஏண்டா.. முன்னாடியே சொல்லிருந்தா.. வேற யாரோட ரூமுக்காவது போயிருப்பேன்ல." என்றேன்.

"அதனால என்ன.. அவன் கெடக்கான்.. நீயே எப்பவாவது ஒரு நாள்தான் இங்க வர்றே.. உன்னை எப்படி இங்க வர வேண்டாமுன்னு சொல்லுறது.. இந்தா போய், பல்ல வெளக்கிட்டு வா.." என்று பேஸ்டைக் கொடுத்தான்.

பல்லை விளக்கி விட்டு வந்ததும், அவன் ரூமுக்கே வர வைத்திருந்த டீயைக் குடித்து முடித்தோம். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, "சரிடா.. நான் குளிச்சிட்டு வர்றேன்.." என்றதும், "இருடா.. பாத் ரூம் ப்ரீயா இருக்கான்னு பார்த்துட்டு வர்றேன்" என்று வெளியே போய்ப் பார்த்து விட்டு வந்து, "இந்தாடா குளிச்சிட்டு வந்திரு.. யாராவது கதவ தட்டுன்னா திறந்துடாத.. அந்த வாட்ச்மென் வந்தாலும் வருவான்" என்றான்.

ஒரு பக்கெட்டை தூக்கிக் கொண்டு அந்த இருளடைந்த குளியலறைக்குச் சென்றேன். 'காதல்' படத்தில் வருவது போல நீண்ட வரிசை நிற்கும் பாத் ரூம் இல்லை. ஒராளவு சுத்தமாகத்தான்இருந்தது. உள்ளே இருக்கும் வரையிலும் வெளியே அந்த முகம் தெரியாத வாட்ச்மென், கையில் ஒரு பிரம்புத் தடியோடு நின்று கொண்டு இருந்தாலும் இருப்பான் என்று நினைத்துக் கொண்டேன். குளித்து விட்டு வெளியே வந்தால், யாரும் இல்லை. ஒன்றிரண்டு பேர் பேப்பரும் கையுமாக வெளியே நடந்து கொண்டிருந்தார்கள்.

நான் கிளம்பியதும், கண்ணனும் என் கூடவே ஸ்டேசன் வரை வருவதாக கூடவே வந்தான். கீழே இறங்கும்பொழுது முதுகு திரும்பிக்கொண்டு, தலைக்கு ஒரு துண்டைக் கட்டிக்கொண்டு, காக்கி உடையில் வயதான் ஒரு ஆள் படிக்கு அருகில் உட்கார்ந்து இருந்தான். அந்த ஆளைப் பார்த்ததும் அவன்தான் வாட்ச்மேன் என்று தெரிந்தது. கண்ணனின் முகத்தைப் பார்க்க 'நேராப் போ.. ஒன்னையும் கண்டுக்காத..' எனச் சைகை செய்தான். இருவரும் அந்த ஆளைக் கடந்ததும், அந்த வாட்ச்மென் சுதாரித்து "தம்பி.. தம்பி.. நில்லு.." என்றான். கண்ணன் திரும்பிப் பார்த்து விட்டு "இருங்க.. ஸ்டேசன் வரைக்கும் போயிட்டு வந்துடுறேன்.." என்று வேக வேகமாக என்னை இழுத்துக் கொண்டு நடந்தான்.

நான் அவனிடம், "என்னடா.. அந்த வாட்ச்மேன் ஏதாவது சொல்லுவானாடா.. " என்று கேட்டேன்.

"அவன் என்ன சொல்லப் போறான். போய், இன்னைக்கி அவன் நைட் தண்ணி அடிக்கறதுக்கு ஐம்பதோ நூறோ குடுக்கணும். புதுசா ஒரு ஆள் வரக் கூடாது அவனுக்கு. " என்றவன், திடீரென்று என்ன நினைத்தானோ,

"ஏண்டா.. இந்த பாரதி சொன்னாப்ல சுத்திலும் தென்னை மரம், குருவி கிளி இருக்குற மாதிரி வீடு கூட வேண்டாண்டா. சொந்தக் காரங்களோ, நம்ம பசங்களோ வந்தா ஒரு ரெண்டு நாள் தங்கிட்டு, ஊரைச் சுத்திக் காட்டுற மாதிரி ஒரு வீடு இருந்தா எப்படி இருக்கும். பெரிய ஊருனுதான் பேரு. ரெண்டு நாள் சேர்ந்து தங்க வைக்க முடியறதில்ல.. ஏண்டா, நாமா எல்லாம் இங்க ஒரு வீடு வாங்க முடியுமாடா.. ஒரு நாள் இந்த சிட்டில வீடு வாங்கணும்டா.. " என்று புலம்பிக் கொண்டு வந்தான்.

ஸ்டேசன் வந்ததும், அவனே என்னை ஒரு ஓரமாக நிற்க வைத்து விட்டு தி.நகருக்கு டிக்கெட் வாங்கி வந்தான். பிளாட்பாரமுக்கு வரவும் எலெக்ட்ரிக் வண்டி வந்து நின்றது. "இன்டெர்வியு நல்லா பண்ணுடா.. ஆல் தி பெஸ்ட்.. பை டா.. " என்று விடை பெற்றுக் கொண்டோம்.

நகரம் என்பது வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு ஒரு மாயை போலத் தோன்றுகிறது. ஆனால், அதன் அடியில் எவ்வளவோ அடிகளும், வேதனைகளும் உறைந்து கிடக்கிறது. உள்ளே அமர்ந்து யோசித்து கொண்டிருக்கும் என்னைச் சுமந்த படி, ரயில் நகர்ந்து விட்டது.

Sunday, December 19, 2010

சலூன்


சுத்தற சேரும், மேல காத்தாடியும் இருந்த அந்த 'ராஜா' சலூனுக்குள் போகலாமா, வேண்டாமா என்று மனசுக்குள் ஒரே குழப்பம். சலூனுக்குள் போகவே பயமாக இருந்தது. வருவது வரட்டும்னு உள்ளே போயிட்டேன். உள்ளே போனால், ஒருவருக்கு முடி வெட்டிட்டு இருந்த கடைக்காரர் என்ன என்பது போலப் பார்த்தார். "கட்டிங் பண்ணனும்" என்றவுடன், "அங்க உட்காரு" என்றார். உட்கார்ந்த இடத்தில் இரண்டு மூன்று நியூஸ் பேப்பர்கள் கிடந்தன. டேப்பில் ஏதோ ஒரு பாட்டு பாடிக் கொண்டிருந்தது.

முன்னாடி, பின்னாடி எனப் பெரிய பெரிய கண்ணாடிகள சுவத்துல மாட்டி இருந்தன. காலி இடத்தில் ஒரு பக்கம் விஜயகாந்தும், இன்னொரு பக்கம் ரஜினி காந்தும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். நியூஸ் பேப்பரில் வந்த சில நடிகைகளின் படத்தை ஒரு இடத்தில் ஒட்டி வெச்சிருந்தாங்க. ஒரு இருபது நிமிசம் கழிச்சு, முடி வெட்டிட்டு இருந்தவர் கிளம்ப, என்னைப் பார்த்து "வாங்க.." என்று சேரைத் தட்டினார் கடைக்காரர்.

இது வரைக்கும் அந்த மாதிரி சேர்ல உக்காந்தது இல்ல, அதுனால ஒரு மாதிரியா இருந்துச்சு. ஏறி உட்கார்ந்ததும், கடைக்காரர் அழகா ஒரு பாட்டில்ல இருந்து தண்ணிய தலைக்கு அடிக்க ஆரம்பித்து, முடி வெட்ட ஆரம்பித்தார். தலை குனிஞ்சிருந்த எனக்கு அப்பா கூட நேத்து சண்டை போட்டது நினைவுக்கு வந்தது.

நேத்து அப்பா, "டேய்.. நாளைக்கு பள்ளிக்கோடம் முடிஞ்சு, முடி வெட்டிட்டு வந்திரு. கரடிக் குட்டி மாதிரி எத்தன முடி பாரு. பஸ் ஸ்டாண்ட்ல இருந்து சந்தைக்கு போற ரோட்ல, காப்பிக் கடை முக்குல இருக்குற பழனிச்சாமி கிட்ட வெட்டு. அவன்தான் அஞ்சு ரூவா வாங்குவான். மத்தவங்க எல்லாரும் அதிக ரூவா வாங்குவாணுக" என்றார்.

"போப்பா.. எனக்கு அந்தக் கடைய பிடிக்கவே இல்ல" என்றேன். போன வாரம், மூர்த்தி ஒரு கடைக்கு அவனுக்கு முடி வெட்டும்போது கூட்டிட்டுப் போனான். பெரிய கண்ணாடி, காத்தாடி அப்படின்னு அழகா இருந்துச்சு. அடுத்த தடவை முடி வெட்டுனா, அங்கதான் போகணும்னு முடிவு பண்ணிட்டேன் அன்னைக்கே. அந்த சலூன் பேரு 'ராஜா சலூன்'.

"முடி வெட்டுறதுல என்னடா.. பிடிக்கறது.. பிடிக்காதது. எதைச் சொன்னாலும் மூஞ்சிய ஒரு மாதிரி வெச்சுக்க" என்று ஒரு சத்தம் போட்டார்.

அடுத்த நாள் காலையில் மறக்காமல், பத்து ரூபாய் குடுத்தார். திரும்பவும் பழனிச்சாமி கடைக்கே போகச் சொல்ல, ஏதாவது சொன்னால் அடி விழுகும் என்று நினைத்து "சரிப்பா " என்றேன்.

கடைசிப் பீரியட் முடிந்து வெளியே வந்ததும், அந்தக் கடைக்கே போகணும்னு முடிவு பண்ணிட்டேன். போன தடவ வரைக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லாமத்தான் போச்சு முடி வெட்டுறது. வழக்கமா, மணியன் வீட்டுக்கு வந்து முடி வெட்டிட்டு போயிருவாப்ல, நான் சின்னப் பையன்ல இருந்து அவருகிட்டதான் வெட்டிட்டு இருக்கேன். வீட்டுக்கு வெளியே இருக்குற வேப்ப மரத்தடியில ரெண்டு முக்காலிகளப் போட்டு உட்கார்ந்து முடி வெட்டி விட்டுட்டுப் போயிடுவார். அதுவும் குனிய வெச்சு, பின்னாடி கழுத்துக்கு கீழே கத்தி படும்போது ஒரு மாதிரியா குறுகுறுப்பா இருக்கும். "ஆடாத தம்பி" என்று சொல்லிக்கொண்டே தலையை கெட்டியாப் பிடிச்சுக்குவார்.

பள்ளிக்கோடம் போனா பசங்க எல்லாம் முடி வெட்டுனத பார்த்து கிண்டல் அடிப்பாங்க. ஆனா, ஒண்ணு ரெண்டு வாரத்துல முடி வளர்ந்து 'கிராப்' சரியாப் போயிடும். இந்த கிண்டலுக்கு வேண்டியே அடுத்த தடவ மணியன் கிட்ட முடி வெட்டக் கூடாது அப்படின்னு நெனப்பேன், ஆனா அப்பா விட மாட்டார். ஏதோ ஒரு அதிசயம் போல, இந்த தடவ ஒரு மாசத்துக்கும் மேல ஊருக்குப் போன மணியன் திரும்பவே இல்ல. அப்பாவே வளர்ந்த முடியப் பார்த்துட்டு, டவுன்ல வெட்டிட்டு வரச் சொல்லிட்டார்.

எந்தக் கடைக்கு போகலாம்னு ஒரே கொழப்பமா இருந்துச்சு, 'ராஜா' சலூன்ல பணம் அதிகம் வாங்கிட்டா என்ன பண்ணுறது. அப்பா திட்டுவாரேன்னு பயம் வேற. ஆனா, இன்னைக்கு மட்டும் அந்த முக்கு கடைக்கு போகவே கூடாது. மூர்த்தி கிட்டயாவது எவ்ளோ பணம் ஆகும்னு கேட்டிருக்கலாம், அவன் கிட்டயும் கேட்கல. அவன் இன்னைக்கு லீவு. பத்து ரூபாதான் இருக்குதுல்ல, அதுக்கு மேல கேட்க மாட்டாங்க அப்படின்னு எனக்கு நானே நெனச்சுட்டு, 'ராஜா' கடைக்குள்ளே வந்தாச்சு.

'ராஜா' கடைக்காரர், எனக்கு முடி வெட்டிட்டு இருந்தார். மேல போர்த்துன துண்டு, சுத்திலும் கண்ணாடி, டேப் பாட்டு அப்படின்னு நல்லாத்தான் இருந்தாலும், எவ்ளோ பணம் கேப்பாங்களோ அப்படின்னு பயம்தான். பத்து ரூபாய்க்கு உள்ளே கேட்டா பரவா இல்ல, பத்து ரூபாய்க்கு மேல கேட்டா என்ன பண்றது. வெட்டி முடிச்சுட்டு, இன்னொரு துண்டால முடிய தட்டி விட்டார் கடைக்காரர். "எந்திரி தம்பி.. இந்தா சீப்பு" என்று ஒரு சீப்பை கையில் கொடுத்து சீவச் சொன்னார். சீவி முடித்ததும், மேலே இருந்த முடிகளை தட்டி விட்டேன். அப்பவும் சட்டையில் இருந்து ஒரு சில முடிகள் போகவே இல்ல.

கொஞ்சம் பயமாகவே "அண்ணா.. எவ்ளோங்க.. " என்றேன். "ஏழு ரூவா தம்பி" என்றார். "அப்பாடா" என மனசுக்குள் நினைச்சிட்டு, மீதி சில்லறைய வாங்கிக் கொண்டு "நான் வர்றேனுங்க.." என்று சொல்லி விட்டு வீட்டுக்கு கிளம்பினேன். பஸ்ல வரும்போது அப்பா கிட்ட என்ன சொல்லுறதுன்னு பயம் வேற.

வீட்டுக்கு வந்ததும் "முடி அப்படியே இருக்கு.. இன்னும் ஒண்ட வெட்டச் சொல்லி இருக்கலாம்ல... எங்கடா முடி வெட்டுன.. " என்று கேட்டார் அப்பா.
"ராஜா சலூன்ல" என்றேன்.
"அது என்ன பழனிசாமி கடையா? "
"இல்லப்பா.. இது வேற கடை"
"நெனச்சேன்.. நீ அங்க போக மாட்டேன்னு.. இவன் எவ்ளோ வாங்குனான்.."
"ஏழு ரூவாப்பா.. "
"ம்ம்... பத்து ரூபாயையும் குடுக்காம வந்தியே. அதுவரைக்கும் நல்லது"
"ஏங்க.. அவனப் போய்த் திட்டிட்டு.. நான் வெந்தண்ணி காய வைக்கிறேன்..." என்று துணைக்கு வந்தார் அம்மா.

அதோடு பிரச்னை முடிந்தது. அடுத்த தடவை முடி வெட்டிட்டு வரும்போது எவ்ளோ ஆச்சு என்று அப்பா கேட்கவே இல்லை. பல வருடங்கள் கழித்து வெளிநாட்டில் ஆறு மாதம் தங்க நேர்ந்த போது முடி வெட்ட குடுத்த காசு, இந்திய மதிப்பில் சுமார் அறுநூறு ரூபாய் என்பது அப்பாவுக்கு இன்னும் தெரியாது.

படம்: http://www.lonelyplanetimages.com தளத்தில் இருந்து. நன்றி.

Friday, December 10, 2010

பனைமரத்து நிழலின் சிரிப்பு


குறிப்பு: கொஞ்சம் நீண்ட கதை. ரொம்ப வருடங்கள் முன்னர் எழுதியது. பழைய காகிதங்கள் கிடைக்க வலையில் ஏற்றி விட்டேன். !

*********************************

ஏதாவதொரு காலைப்பொழுது எனக்கு பனைமரத்தின் கீழ்தான் விடியும். அப்படிப்பட்ட நாட்கள் அநேகமாக சித்திரை மாத வெயில் சுழற்றி அடிக்கும் நாட்களாக இருக்கும். ஊரிலிருந்து சொந்தக்காரர்கல் யாராவது வந்தாலோ, இல்லை அம்மா ஊருக்குப் போனாலோ “நொங்கு” இருக்கும். ஏதொ பிள்ளையார் கோயிலில் பொங்கல் வாங்கற மாதிரி விடிஞ்சும் விடியாத காலங்கார்த்தால பெரிய போசியோட நொங்கு வாங்கப் போயிரணும்.

ஊரில் எத்தனையோ பேர் நொங்கு எடுத்தாலும், எங்க அம்மாவுக்கு ஊமையனிடம் தான் வாங்க வேண்டும் என்ற வைராக்கியம். அதற்கு காரணம், மத்தவங்க ஒரு ருபாய்க்கு இரண்டு நொங்கு என்றால் இவன் மூன்று போட்டுக் கூடவே நாலைந்து சேர்த்தும் தருவான். சீசன் சூடு பிடிக்கும் நாட்களில் கூட ஒன்றிரண்டு கொரைப்பானே தவிர மத்தபடி போசியை நப்பியே தருவான் என்பதால் அம்மாவுக்கு சந்தோசம். அதனால், எங்க ஊட்டு கிழிந்த துணிகளும், பழைய கொழம்பும் கொஞ்சம் தள்ளி இருக்கிற அவனின் குடிசைக்குள் தஞ்சமடையும்.

பட்டப்பேரு தான் ஊமையனே தவிர, அவனோட பேரு கருப்புசாமி. பேச முடியாது என்பதால்தான், அவனுக்கு முன்னால் ஊரார் அப்படிக் கூப்பிட மாட்டார்கள். ஆனால், ஊமையன் என்பது அவனுக்கு சுட்டுப் பெயராகவே மாறிவிட்டது. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே சண்டையும், சச்சரவும் நிரம்பிய குடிசையாகத்தான் ஊமையனின் குடிசை இருக்கும். குடிசையைப் பிய்த்துக் கொண்டு, கருப்பனின் குலசாமி கருப்பராயன் கொட்டியதில் அவனுக்கு என்னவோ ரெண்டு பையனும் நாலு புள்ளையும் தான். மூத்த பொண்ணுங்க இரண்டையும் சொந்தத்திலேயே கட்டிக் கொடுத்துவிட மீதி ரெண்டு பையனும் ஒரு புள்ளையும் தான் சத்துணவுக்காக பள்ளிக்கோடத்துக்கும், விளையாட்டுக்காக அப்பனுக்கும், ஆத்தாளுக்கும் உதவிக் கொண்டிருந்தார்கள்.

கருப்பன் பொண்டாட்டி பேரு காளியம்மா. பேரு மட்டும் தான் காளியம்மா, மத்தபடி கோவமெல்லாம் வராது. புள்ளைங்க போடற சண்டையைத் தீர்த்து வைக்கவே அப்பப்போ காளியாத்தா அவதாரம் எடுப்பா. கருப்பட்டி கூடையைத் தூக்கி தலையில் வைத்துக்கொண்டு சந்தைக்குப் போகும் போது கூடவே ஒரு புள்ளையையும் கூட்டிக் கொண்டு போவாள். அதற்கும் யார் அவள் கூடப் போவது என்று சண்டையாகவே இருக்கும்.

நொங்கு வாங்கப் போறன்னிக்கு, சேவக் கூவுற நேரத்துல கெளம்பிடணும். இல்லாட்டி கருப்பன் நொங்க எடுத்துட்டு சைக்கிள்ல பக்கத்து டவுனுக்குப் போயிருவான்.

பல்லு கூட வெளக்காம, அன்னிக்கு எந்தக் காட்டுல அவன் நொங்கு எடுக்கறானோ அங்க போயிரணும். அவன் வீட்டில் வளரும் எலும்பு நாய் உட்பட கூப்பன் கார்டில் உள்ள அத்தனை பேரும் அந்த காட்டுல இருகிறதால, காடே திருவிழா கண்ட இடம் போல இருக்கும்.

கயிற்றை காலில் கட்டிக்கொண்டு, பனை மரத்தில் சரசரவென ஏறி குலை குலையாய் தொங்கும் காய்களில் பதம் பார்த்து வெட்டி போடுவான் ஊமையன். மரமேறும் போதே, கை சாடையிலேயே எல்லாரையும் தள்ளிப் போகச் சொல்லிருவான். மேலிருந்து குலை விழுந்த வேகத்தில் காய்கள் தனியாக பிரிந்து நாலாப் பக்கமும் உருண்டோடும். ஒவ்வொரு மேலிருந்து குலையை கயித்தில் கட்டி கீழே இறக்குவான். அப்போது காய்கள் தனியாக ஓடாது. காளியம்மாளும், அவளின் வாரிசுகளும், காடு பூர எறைஞ்சு கெடக்கும் குலைகளையும், காய்களையும் ஒரே இடத்தில் போட்டு வெப்பாங்க.


முனியப்பன் கோவிலில் கெடா வெட்டும்போது ஒரே வீச்சில் வெட்டற அருவா மாதிரியே ரெண்டு மூணு அருவாள கருப்பன் வெச்சிருப்பான். பாறையில அரச்ச மண்ணுல தான் அந்த அருவாள பட்டை தீட்டுவான். அப்படியே வெளக்கி வெச்ச குத்து வெளக்கு மாதிரி தகதகன்னு இருக்கும் பட்டை தீட்டுனதுக்கு அப்புறம். தொட்டாலே சீவிருமோ அப்படிங்கற பயம் அந்த அருவாளப் பாத்தாலே வந்திரும்.

குமிச்சு வெச்ச பனங் குலைகள தனித் தனிக் காய்களா மொதல்ல பிரிச்சிட்டு, அருவாளக் கையில எடுத்தா அப்புறம் முடியற வரைக்கும் விசுக்.. விசுக்.. அப்படிங்கற சத்தம்தான் கேக்கும். காய எடுத்து அப்படியே ஒரு சுத்து உருட்டி, குல்லா போட்ட மாதிரி இருக்கற தொக்க எடுத்துட்டு, அளந்து வெச்ச மாதிரி சுத்தியும் மூணு வெட்டு. அத அப்படியே திருப்பி வெச்சு, கைப்புள்ளையோட கன்னத்த தட்டற மாதிரி மூணு வெட்டு வெட்டி நெம்புனா நொங்கு வெளியில எட்டிக் குதிச்சிரும். அத அப்படியே பனை ஓலை வெச்ச கூடையிலே போட்ருவான் கருப்பன்.

இதுல என்னன்னா, நொங்கு ஒடையாம எடுக்கரதுலதான் இருக்கு எல்லாமே, நொங்கு உடைஞ்சு தண்ணி வெளியில வந்துட்ட அதக் கழிச்சு உட்ருவாங்க அப்படிங்கரதாலே, உடைஞ்சதுகள வேடிக்கை பாத்துட்டு இருக்கற எங்களுக்கு குடுத்துருவாங்க. இது ஒருபுறமிருக்க, அவன் ஊட்டு கத்துக் குட்டிகளெல்லாம் மொண்ண அருவாள வெச்சுட்டு பிஞ்சுக் காய்களா வெட்டிட்டு இருப்பாங்க. பிஞ்சுக் காயிலிருந்து நொங்கு எடுக்க முடியாது, மேலே ஒரு வெட்டு வெட்டி கொடுத்தா, பெருவிரல உட்டு, வாய் பக்கத்துல வெச்சு உறிஞ்சுனா, காலைல சோறே நொங்குதான் . சூப்பிப் போட்ட பிஞ்சுப் புருடைகளப் பொடிப் பொடியா வெட்டி மாட்டுக்கு போட்ருவாங்க. மாடுகளும் அதத் தின்னு அசை போட்டு சீரணிக்கும். ஒரு கண்ணு ரெண்டு கண்ணுள்ள நொங்க விட மூணு கண்ணுள்ள நொங்கு எடுக்கறது சுலபம்.



இப்படித்தான் போயிட்டிருந்துச்சு அவங்களின் பொழப்பும். நொங்கு சீசனெல்லாம் முடிஞ்சு போயி தெளுவு எறக்கிட்டு இருந்தான் கருப்பன். நொங்கு வாசம் போயி கருப்பட்டி மணக்க ஆரம்பிச்சது அவனோட சாலைல. அப்பா நடந்ததுதான் இது.

"ஏண்டி, அந்தப் பொடாக்காநில தண்ணி ஊத்தச் சொன்னேனே? ஊத்துனியா ? இந்தா உங்கப்பனுக்கு இந்த காப்பித் தண்ணிய குடுத்துட்டு வெரசா வா" அப்படின்னு கத்திட்டே வந்த கெழவிதான் கறுப்பனப் பெத்த ஆத்தா. பல்லுப் போனாலும் சொல்லுப் போகாதும்பாங்க மாதிரி கெழவிக்கு நாக்கு மட்டும் அப்படியே இருக்கு. வாயில வர்றதெல்லாம் மொளகாப் பொடி தடவுன மாதிரி காரசாரம்தான் இருக்கும்.

"கொண்டா" அப்படின்னு, தூக்குப் போசிய வாங்கிட்டு போறவதான், அடுத்த கண்ணாலத்துக்கு காத்துட்டு இருக்கற கருப்பனோட மூணாவது புள்ள ஈசுவரி. தெளுவு எறக்கிட்டு இருந்த அப்பனுக்கு காப்பி கொடுக்கப் போனவ, பக்கத்துக் காட்டுல மரம் ஏறிட்டிருந்த குப்பன்கிட்ட மனசக் கொடுத்துட்டா.

அவ பண்றது ஒண்ணும் தப்பில்லைதான். ஆனா கருப்பனும், குப்பனோட அப்பனும் கீரியும் பாம்பும் மாதிரி. அவன் போறபக்கம் இவனும், இவன் போறபக்கம் அவனும் போக மாட்டாங்க. அதென்ன பகையோ, என்னமோன்னு ஊருக்கே மறந்து போச்சு. ஆனா சிறுசுக ரெண்டு பேருக்கும் பகையும் தெரில, சொந்தமும் புரில. பெருசுக ரெண்டும் வானத்தையும், பூமியையும் பார்த்துட்டு நிக்க இவங்க ரெண்டு பேரும் மனசப் பரிமாறிட்டாங்க.

இப்படித்தான் ஒரு நா, ஊரே தூங்கி எந்திரிக்காத வேளையில மசமங்க ரெண்டு பேரும் கெளம்பிட்டாங்க. எங்க போனாங்க, என்ன ஆனாங்கன்னு ஆருக்கும் தெரில. ஊருல உள்ளவங்க, சொந்த பந்தம்னு எல்லாரும் வந்துட்டுப் போயிட்டு இருக்காங்க ரெண்டு ஊட்லயும். கலியாணம் கண்ட இடமா இல்ல எழவு கண்ட கண்ட இடமான்னு எல்லாருக்கும் சந்தேகம். யாரு யாரைத் திட்டறாங்கன்னு புரிபடாத மாதிரி ஒரே சத்தம். திடு திப்னு பொம்பளைகளோட ஒப்பாரிச் சத்தம் வேற. கெழவி போட்ட ஒப்பாரிதான் ரொம்ப சத்தம்.

"ஊரெல்லாம் சொத்து வாங்கி
பாரெல்லாம் பார்த்து நிக்க
பாவி மக போனாளே
சொல்லாம கொள்ளாம.. "

"பெத்த மனசு கதிகலங்க
வளர்த்தெடுத்த உசுரு உருக
காணமப் போனாளே
எங்க மகராணி.. "

வந்தவங்கள ஒக்காரச் சொல்லி, காப்பித்தண்ணியக் கொடுத்து, எப்படிக் காணமப் போனாங்கன்னு சொல்லி சொல்லியே சடைஞ்சு போயிட்டாங்க ரெண்டு ஊட்டு ஆளுகளும். வந்தவங்க துக்கத்த கேட்டுட்டு சும்மா போகாம "எனக்கு அப்பவே தெரியும். ஆனாலும் வெளிய சொல்லல" அப்படின்னு குசுகுசுன்னு பேசிக்கறாங்க. கண்ணுல தண்ணி ஒழுக, எல்லாத்தையும் அமைதியாப் பார்த்துட்டு இருந்தான் கருப்பன். வெளியூர்ல கட்டிக் கொடுத்த மூத்த பொண்ணுங்க ரெண்டும் வந்து ஆத்தாளையும், அப்பதாளையும் கட்டிட்டு அழுகுறாங்க.

"எங்க போயி தேட, பேசாம வகுராம்பாளயத்துப் பூசாரிகிட்ட போயி மை வாங்கிட்டு வந்து தடவிப் பார்த்துர வேண்டியதுதான்" அப்படின்னு குரலேடுத்தது ஒரு பெருசு. மை போட்டுப் பார்த்தா திருட்டுப் போன பொருளோ இல்ல காணமப் போனா பொருளோ எங்கிருந்தாலும் கண்டு பிடிச்சுர்லாம்னு ஊர்ல பேசிக்குவாங்க.

"ரெண்டு நாள் பார்த்துட்டு போலீசுல சொல்லிரலாம்" இது காளியாத்தாளின் தம்பி.

"திக்குக்கு நாலு பேரு போயி தேடிக் கண்டுபிடிச்சு, அவங்க ரெண்டு பேரையும் வெட்டி பொலி போட்டுறனும்" அப்படின்னு சொன்னவன் ஈசுவரியின் மொறை மாமன்.

ஊருப் பொம்பளைக அத்தன பேரும், வெத்தலயப் போட்டு மென்னுக்கிட்டே குசுகுசுன்னு காதுக்கு உள்ளையே பேசிக்கறாங்க. என்னதான் பேசுராங்கலோன்னுட்டு ஒண்ணு ரெண்டு சிறுசுக 'ஆ' னு பார்த்துட்டு இருக்குதுக. மேச்சலுக்குப் போகாத ஆடு மாடுகளுக்கு காஞ்ச சோளத் தட்டையும், கழு தண்ணியையும் வெச்சிட்டு இருந்தா கடைசி மக. அந்த அஞ்சறிவு சீவனுக கூட மூச்சு உடாம, அசை போட்டுட்டு இருக்குது தட்டப்பயிர. அப்பப்போ, தலயத் தூக்கி புதுசு புதுசா வர்ற மனுசங்களப் பார்த்து அதுகளோட கண்ணுல கூட ஒரு பயம்.

அந்தி சாயற நேரத்துல, தேடிப்போன ஆளுக எல்லாரும் திரும்பி வந்துட்டாங்க. தேடாத எடமே இல்லியாம். தேடிப் போன ஆளுக எல்லாம் தண்ணியப் போட்டுட்டு மப்புலையே பேசினாங்க. சீமண்ண கொலாப்பு ரெண்டு திகுதிகுன்னு எறிஞ்சுட்டு இருக்குது சாலையில. காத்தாலே இருந்தே சோறு தண்ணி இல்லாததால ஆளாளுக்கு அங்கங்க சாஞ்சுட்டும் கால நீட்டியும் உக்காந்துட்டு இருந்தாங்க. அந்திப் பொழுதுக்காகவாவது எதாச்சும் பண்ணலாம்னுட்டு வெங்காயத்த தொளிச்சிட்டு இருந்தாங்க சொந்தக்காரப் பொம்பளைங்க.

"சரி, போனவ போயிட்டா. அழுதுட்டே ஒக்காந்துட்டு இருந்தா பொழப்பு நடக்குமா?. அடுத்த சோலியப் பார்க்க வேண்டியதுதானே. போனவ திரும்பி வந்தா சேர்த்துக்குங்க" ன்னு ஒரத்த கொரல்ல சொல்லுச்சு தூரத்துப் பெருசு ஒன்னு.

அதக் கேட்டவுடனே, சாஞ்சு உக்காந்துட்டு இருந்த கருப்பன் விறுவிறுன்னு எல்லாரையும் ஒரு பார்வை பார்த்தான். பார்த்துட்டு, பக்கத்துல இருந்த சொம்புத் தண்ணிய எடுத்து தல மேல ஊத்திட்டான். ஊத்துன வேகத்துலேயே அந்த சொம்ப விட்டெரிய, அது போயி நங்குன்னு ஒரு ஓரமா உக்காந்துடுச்சு. காத்திருந்த கூட்டத்துக்கு திக்குன்னு ஆகிப் போச்சு நெலம. கெழவியும், காளியாத்தாலும் இந்தக் காட்சியப் பார்த்துட்டு குய்யோ முறையோனு கத்தி அழுகை ஆரம்பிச்சுட்டாங்க. நனைஞ்ச தலையோட பித்துப்பிடிச்ச மாதிரி முழிச்சுப் பார்த்துட்டே உக்கார்ந்தான் கருப்பன். 'தலை முழுக்கிட்டேன்னு சொல்லாம சொல்லிட்டன் கருப்பன்' ன்னு ஊரே பேசிட்டு இருக்குது.

உறவும் சொந்தமும் ரெண்டொரு நாளுலேயே சொல்லிட்டு சோலியப் பாக்க கெளம்பிட்டாங்க. ரெண்டு மூணு நாளா வெளிய தல கட்ட முடியல. அப்படியே வெளிய போனாலும் பாக்கற ஊர்க்காரங்க பார்வையில கரிசனமா இல்ல பழிப்பான்னு புரிபடல. ரெண்டு வாரம் கழிச்சு எங்க இருக்குராங்கற விசயம் தெரிஞ்சு போச்சு. ஆனாலும், யாரும் போய்ப் பார்க்க ஆசப் படவே இல்ல.

கோயம்புதூருக்குப் பக்கத்துல ஒரு ஊருல குப்பனோட தூரத்துச் சொந்தக்காரன் ஒருத்தன் இருந்தான். அவனோட ஊட்டுக்குதான் அடக்கலம் போனாங்க ரெண்டு பேரும். பெத்தவங்க வந்து பாப்பங்கனுட்டு நாலு மாசமா பாத்துட்டு இருந்தாங்க. ஆனா, அவங்க யாரும் வரவே இல்ல. இந்த இடப்பட்ட காலத்துல ஏதோதோ வேலைக்கு ரெண்டு பேரும் போயி குடும்ப வண்டி ஓடிட்டு இருந்துச்சு. அடுத்த வாரம் வந்தா மார்கழி போயி தை மாசம் பொறக்குது. பொங்கலுக்கு என்ன ஆனாலுஞ் செரி ஊருக்குப் போலாம்னு முடிவு பண்ணிட்டாங்க.

ஆறாம் நம்பர் பஸ்ஸ விட்டு எறங்கினவுடனே, ஏர்ற ஆளுக ஒரு மாதிரி பாத்துட்டே சிரிச்சாங்க. ரெண்டு பேருக்கும் என்ன சொல்றதுன்னு தெரியாம வெறும் தலைய மட்டும் மாடு மாதிரி ஆட்டிட்டு விறுவிறுன்னு நடக்க ஆரம்பிச்சுட்டாங்க. "இப்பதான் வர்றீங்களா?" கேட்டாங்க வழியில பார்த்த ஊர்க்காரங்க. ஒன்னு ரெண்டு பேரு சிரிச்சாங்க. என்ன கேட்டாலும் "ஆமா" ன்னு மட்டும் சொல்லிட்டு வந்துட்டே இருக்காங்க.

சால வாசலுக்கு வந்ததும் நின்னுட்டாங்க ரெண்டு பேரும். வெளையாடிட்டு இருந்த தம்பியும், தங்கச்சியும் இவங்களப் பார்த்துட்டு போலாமா, வேண்டாமான்னு நெனச்சிட்டே "அம்மா" னு கத்திட்டாங்க. "என்னாடா" னுட்டு வெளிய வந்த காளியாத்தா ரெண்டு பேரையும் பார்த்ததும், கைய ஓங்கிட்டு அடிக்க வந்துட்டா பெத்த மகள. சத்தம் கேட்டு பொடக்காநில இருந்த கெழவி ஒருபக்கம், காளியாத்தாள தடுத்துட்டு வெச்ச ஒப்பரில ஊரே கூடிருச்சு.

"என்னதான் இருந்தாலும், வளர்த்த பாசம் போயிடுமா? திரும்பி வந்திருக்காங்க. உள்ள கூப்பிட்டுப் போ காளியாத்தா" அப்படின்னு சொன்னாங்க ஊர்ப் பெருசுங்க. விஷயம் தெரிஞ்சு தெளுவு எறக்கப் போன கருப்பன் திரும்பி வந்து, ரெண்டு பேரையும் வெறிச்சு வெறிச்சுப் பார்த்தான்.

கறுப்பனப் பார்த்ததும் பயந்து போனாங்க ரெண்டு பேரும். எந்த அருவா எந்த தலைய வெட்டுமொன்னு பார்த்துட்டு இருந்துச்சு ஊரு. கெழவி அழுகுர சத்தத்த விட வேறெந்த சத்தமும் கேக்கல. நாய் கூட வாய்க்குள்ளேயே உருமிட்டு நிக்குது. கொஞ்ச நேரம் பார்த்துக்கிடேயிருந்த ஈசுவரி "அப்பா" னுட்டு ஓடிப்போயி கால்ல உளுந்துட்டா. பின்னாடியே போன புருசனும் கால்ல உளுலாமா, வேண்டாமான்னு யோசனை பண்ணிட்டிருந்தான். கீழ உளுந்தவ இன்னும் எந்திருக்கவே இல்ல.

"தப்புத்தாம்பா. நான் பண்ணினது தப்புதான். என்ன மன்னிச்சிருப்பா" புலம்பி அழுகுறா ஈசுவரி. பின்னாலிருந்த காளியாத்தா, ரெண்டு கையையும் தூக்கிட்டு அடிக்க வந்தவ, அவ வயித்துப் பக்கம் பார்த்துட்டா. கொஞ்சம் பூசுன மாதிரி இருந்துச்சு வயிறு. அடிக்க வந்தவ அடிக்காம அப்படியே நின்னு போயிட்டா. அப்பன் காலப் புடிச்சுட்டு இருந்தவ, அப்படியே பின்னாடி திரும்பி பெத்தவள கட்டிப் பிடிச்சிட்டு அழுகுறா. காளியாத்தாளும் கீழ உக்காந்துட்டு மகள கட்டிப் புடிச்சுட்டு அழுகுறா.

"இப்படியே மாத்தி மாத்தி அழுதுட்டேயிருந்தா எப்படி? நல்லா நாளும் அதுவுமா வந்திருக்கற புள்ளைக்கு கோழியடிச்சு கொளம்பு வெச்சு ஊத்து" அப்படிங்குது பல்லுப்போன ஒரு பெருசு.

கருப்பன் காளியாத்தாளப் பார்த்து ஒத்தக் கையத் தூக்கி உள்ள கூட்டிட்டுப் போன்னுட்டான். இதுக்குதான் காத்திருந்த மாதிரி அவளும் மகளக் கூட்டிட்டுப் போயிட்டா. "ஹ்ம்ம்... என்னென்னவோ நடக்கும், செத்த நேரமாவது போகும்னு வந்தா பொசுக்குன்னு போயிருச்சு" ன்னு பேசிட்டே கலைஞ்சு போறாங்க ஊருசனம் மொத்தமும்.

குப்பனோட ஊட்டுக்குத் தெரிஞ்சு போயி ரெண்டு மூணு பேரு வந்து பார்த்துட்டுப் போயிட்டாங்க. "நாளைக்கு நாள் நல்லாயிருக்கறதால புள்ளையும் மருமவளும் வரட்டும்"னு ஆசப் படறாங்களாம் குப்பனோட ஊட்டுல. அதையும் சொல்லிட்டுப் போனாங்க வந்தவங்க.

வெளிய வந்த ஈசுவரி திண்ணைல ஒக்காந்துட்டு இருந்த அப்பனையே பார்க்குறா. போன நாலு மாசத்துக்கு முன்னாடி, ஓடிப்போறதுக்கு மொத நா உக்காந்து அழுதது நெனவுக்கு வருது.

எங்கியோ வெறிச்சுப் பார்த்துட்டு இருந்த கருப்பன் ஒண்ண நெனச்சு உள்ளுக்குள்ளேயே சிரிச்சிட்டு இருக்கான். நரம்பில்லாத நாக்கு நாலையும் பேசும், அதுனால பேச வேண்டியத மட்டும் பேசுன்னு பெரியவங்க சொல்லுவாங்க. ஆனா, மக ஊட்ட விட்டுப் போன அன்னிக்கும் கருப்பன் கெட்டதா பேச முடியல. அன்னிக்கு எதாவது அவன் பேசற மாதிரி இருந்து எதையாவது சொல்லியிருந்தா இன்னுக்கு மகளப் பார்க்கும்போது அது நெனவுக்கு வராமலா போயிருக்கும் ?. மத்தவங்க எல்லாம் தான் பேசுனத அப்புறமா நெனச்சுப் பார்ப்பாங்களா?. அந்த விதத்துலா, தான் கொடுத்து வெச்சவந்தான்னு நெனச்சுட்டு, தூரத்தில தெரிஞ்ச பனை மரத்தப் பார்த்து சிரிச்சிட்டு இருக்கான் கருப்பன்.

படங்கள்: இணையத்தில் இருந்து. நன்றி.

Wednesday, September 29, 2010

ரோஸ்

"ஏய்... ரோஸ்.. ரோஸ்.. ச்ச்ச்ச்சு.... " என்றால் எங்கிருந்தாலும் ஓடி வரும். வளர்த்தது பக்கத்து வீட்டு ஆயாதான் என்றாலும் எங்கள் வீட்டுக்கு வெளியில் போட்டிருக்கும் சாக்கில்தான் எப்போதும் படுத்திருக்கும்.

"யார் ஊட்டுச் சோத்த தின்னுட்டு.. யார் ஊட்ல படுத்திருக்க..... ? " எனக் கேட்டவாறே அந்த ஆயா எங்கள் வீட்டுக்கு வரும் போதெல்லாம், கிழவியை திரும்பி பார்த்துவிட்டு திரும்பவும் தலையை சாக்கில் சாய்த்துக் கொள்ளும்.

வெள்ளை கலரில், அங்கங்கே பழுப்பு நிறத்தில் ஒல்லியாக இருக்கும். குரைப்பதை தவிர, யாரையும் கடித்ததில்லை. யாராவது வீட்டுக்கு வந்தால் வாசலிலேயே நின்று விடுவார்கள். "ஏங்க, இந்த நாயி கடிக்குமா? " எனக் கேட்பார்கள். " ஒன்னும் பண்ணாது.. வாங்க.. " என்று சொன்னாலும் பயந்து கொண்டேதான் வருவார்கள். ஒரு காவல் ஆள் போலவே இருந்தது ரோஸ்.

ஆண் நாய்க்கு எதற்கு, "ரோஸ்" அப்படின்னு பேரு வெச்சிங்க என்று அந்த ஆயாவிடம் கேட்டால் "அதெங்க.. நானா வெச்சேன்... பேரனுக வெச்சாங்க.... அப்படியே கூப்பிட ஆரம்பிச்சுட்டேன்.. " என்றது. ரொம்ப சாதுவாக இருக்கும். எந்நேரமும் எங்கள் வீட்டு முன்னாலயே இருப்பதால், எங்கள் வீட்டு நாய் என்றுதான் சொல்லுவார்கள் ஊரில்.

அம்மா எங்கே தனியாக போனாலும் கூடவே போகும். வீட்டில் இருந்து பஸ்ஸை பிடிக்க சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும். ரோஸ் எங்க கூடவே கெளம்பி பஸ் ஸ்டாப் வரை பின்னாலயே ஓடி வரும். திரும்பி ஒரு மிரட்டு மிரட்டி, வீட்டுக்கு போ என சொன்னால் திரும்பி நடக்க ஆரம்பிக்கும். ஒரு சில நாட்கள், ரோசை அம்மா திரும்பி போக சொல்லி விட்டு நடந்தால், அதுவும் திரும்பி போவது போல் பாவனை செய்து விட்டு, தொடர்ந்து பின்னாலயே வரும். வழியில் மற்ற நாயை கண்டால், உறுமி கொண்டே அல்லது குரைத்துக் கொண்டே வரும். பஸ் ஏறும் வரை இருந்து விட்டு, அப்புறமாய் வீட்டுக்கு ஓடி விடும்.

கிராமத்தில் ஒட்டு வீடு என்பதால் எலித் தொல்லை இருந்தது. தக்காளி, உடைத்த தேங்காய் என எதையும் பத்திரமாக வைக்க முடியாது. எனவே எலியை பிடிக்க எலி பொறி உண்டு வீட்டில். அதற்குள் தேங்காய், கருவாடு, தக்காளி, நில கடலை என எலி விரும்பும் எதையாவது உள்ளே, நூலில் மாட்டி கட்டி வைத்துவிடுவார் அப்பா. பெரும்பாலும் எலிகள் இரவில்தான் வரும் என்பதால் படுக்க போகும் நேரத்தில் மேல் சுவற்றில் வைத்து விடுவார். தீனியை இழுத்த எலிகள் வலையில் மாட்டி கொள்ளும்.

ஒரு சில எலிகள், உள்ளே வைத்திருப்பதை கொறித்து விட்டு ஓடிவிடும். எதாவது, எலி உள்ளே மாட்டி இருந்தால் அப்பா அதை கூண்டோடு வெளியில் கொண்டு வருவார். பெருத்தவை, சிறுசு என எல்லா வகை எலிகளும் பொறியில் மாட்டி கொள்ளும். அன்று எந்த எலி மாட்டி கொள்ளுமோ அந்த எலிக்கு மரணம் நிச்சயம். கூண்டை வெளியில் கொண்டு வந்தவுடன், ரோஸ் தயாராக இருக்கும். போருக்கு போகும் தயாராகும் ஒரு வீரனை போல், பொறியின் வாயை பார்த்து கொண்டேஇருக்கும். அப்பா, மேலே கதவை அழுத்தியவுடன், உள்ளிருந்த எலி துள்ளி குதித்து வெளியில் ஓடிவரும். ரோஸ் ஓடிப் பொய் தப்பாமல் பிடித்துவிடும். வீட்டை சுற்றி எலி ஓட ஆரம்பித்தால், இதுவும் பின்னால் ஓடி, செடி கொடிகளுக்குள் தேடி கண்டுபிடித்து வாயில் கவ்வி கொண்டு காட்டுக்குள் சென்று விடும். ஒரு சில நாள், ரோஸ் எலியை தவற விட, அப்பா இது சரிப்பட்டு வராதென, சாக்குப் பைக்குள் எலியை விட்டு அடிக்க ஆரம்பித்தார்.

ஆட்டுக் கறியோ, கோழி கறியோ வீட்டில் சமைத்தால், படியில் நின்று கொண்டு கதவை பார்த்தபடி நிற்கும். அம்மா, "எலும்ப கீழே போடாத.. தட்டத்துல வையி.. ரோஸ் திங்கும்" என சொல்லும். வெளியே எலும்பை கொண்டு வந்து வைத்தால் மற்ற எந்த நாயையும் பக்கத்தில் விடாமல் அத்தனையையும் தின்று விடும். ஒரு சில நாட்கள், பக்கத்து வீட்டு நாயையும் அனுமதிக்கும். பழைய சோறு, தயிர் என எதையாவது அம்மா வைத்து விடும். "எலும்பை போட்டே.. என்ற ரோசை மடக்கி.. உங்க ஊட்லயே வெச்சுக்குங்க.." என அந்த ஆயா சிரித்துகொண்டே சொல்லும். அந்த ஆயா எதாவது சாப்பிட கொடுத்தாலும், தின்று விட்டு எங்கள் வீட்டு வாசப்படிக்கு வந்துவிடும்.

நான் வெளிக்கு காட்டுக்கு போனால் பின்னாலயே வரும். "பேட்டேரிய எடுத்துட்டு போடா" என்பர் அப்பா. வெளியில் வந்து செருப்பை போட்டவுடன், ரோசும் எதோ தன் கடமை போல் கெளம்பி என் கூடவே வரும். வழியில் மற்ற நாய்கள் குரைத்தால், இதுவும் பதிலுக்கு குரைத்து விடும் என்பதால் பயமில்லாமல் போவேன். ரீங், ரீங் என்ற சத்தமும், நிர்மலமான இரவும், சுத்தமான காற்றும் வீசிய அந்த இரவுகளில் எனக்கு துணையாக இருந்தது ரோஸ்.

எங்கே போனாலும் கூடவே ஓடி வந்து, ஒரு நண்பனை போலவே இருந்தது எங்கள் வீட்டில். காலங்கள் கடந்தது. முன்பு போல் ரோஸ் சாப்பிடுவதில்லை, பக்கத்து வீட்டு நாயை திங்க விட்டு விடுகின்றது. மெதுவாக முடிகள் கொட்ட ஆரம்பித்தன. எலும்பும், தோலும் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது. யாரோ கல்லால் அடித்ததில் முன்னங் காலில் ஏற்பட்ட காயம் ஆறாமல் இருந்தது. இழுத்து இழுத்து மூச்சு விட ஆரம்பித்தது. ஒரு நாள், வீட்டின் முன்னால் போட்டிருந்த சாக்கு ரோஸ் இல்லாமல் வெறுமையாக இருந்தது.

பக்கத்து காட்டுக்கு மாடு மேய்க்க போன சரசக்கா "ஏங்க.. ரோஸ் அங்க காட்டுல படுத்து கெடக்குது.. செத்து போச்சுன்னு நெனைக்கிறேன்.... மூச்சு வாங்கிட்டு கெடக்குது" எனக் கூற, அம்மாவும் "பாவம்.. வயசு ஆயுடிசுள்ள அதான்... அதெப்படி அவ்ளோ தூரம் காட்டுக்குள்ளே போச்சு.... " என்றது. அன்னைக்கோ அல்லது அடுத்த நாளோ ரோஸ் செத்து போயிருக்கும். "ரோஸ்.. ரோஸ்... ச்ச்ச்சுசுச்சு... " எனக் கூப்பிட இப்பொழுது ரோஸ் இல்லை.

வெறுமையாக இருந்த சாக்கில், இன்னொரு பக்கத்து வீட்டு நாய் மெல்ல மெல்ல படுக்க ஆரம்பித்தது. அதனுடைய பெயர் மணி. ரோஸ் போனதுக்கு அப்புறம், நான் எங்கே போனாலும் கூடவே வந்தது, ரோஸ் சொல்லி விட்டு போயிருக்குமோ ?.

குறிப்பு: இது ஒரு மீள்பதிவு.