அன்றும் அப்படிதான் அந்த ஆள் படிக்கட்டு அருகில் நின்று கொண்டு, வீதியை நோட்டமிட்டுக் கொண்டிருந்தான். அவன் என்று சொல்வது தப்பு, ஏனெனில் அந்த ஆளுக்கு ஐம்பது வயசுக்கு மேலிருக்கும். இந்த மேன்சனுக்கு வந்த இந்த ஒரு வருட காலத்தில், இது போன்ற வயதானவர்கள் தங்கி நான் பார்த்ததில்லை.
கல்லூரி செல்பவர்களும், வேலைக்குச் செல்பவர்களும் என வெளியூரிலிருந்து வந்து தங்கி இருப்பவர்களின் வயதைப் பார்த்தால் முப்பதுக்குள்தான் இருக்கும். இருவர் தங்கிக் கொள்ளும் அறையில் நாங்கள் தங்கி இருந்தோம். முப்பது ரூம்கள் இருக்கும் இந்த மேன்சனில், நாங்கள் இருந்தது இரண்டாவது தளத்தில் வலப்புறம். காலையில் போய்விட்டு இரவு வரும்பொழுது யாரையும் கவனிக்க முடியாது என்றாலும், இந்த புது ஆள் தினமும் காலையில் குறைந்தது இரண்டு மணி நேரம் பால்கனியில் நின்றும், நடந்தும் வீதியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
முதலில் மேன்சனில் தங்கி இருப்போரின், சொந்தமாகவோ, அப்பா அல்லது மாமாவாகவோ இருந்து, ஏதோ வேலையாக கொஞ்ச நாள் தங்கியிருந்துவிட்டுப் போய்விடுவார்கள் என்றுதான் நினைத்தோம். ஆனால், ரொம்ப நாள் கண்ணில் தட்டுப் பட்டுக்கொண்டே இருந்தார். ஒருநாள், எதேச்சையாக பேசிக் கொண்டிருக்கும் பொழுது "நாமதான், வேற வழியில்லாம இங்க வந்து தங்கி இருக்கோம், பக்கத்துல ஒரு பெருசு வந்து தங்கியிருக்குது" என்றான் ரவி.
"யாருடா அது, அதான் எப்பவும் காலையில பராக்குப் பார்த்திட்டு இருப்பாரே அவரா?" என்று கேட்க, "ஆமா அந்த ஆளுதான்" என்றான் அவன்.
"ஏண்டா அந்த ஆளு இங்க வந்து தங்கி இருக்காரு, வேலைக்கு போற மாதிரியும் தெரில" என்று அவனிடம் கேட்க, "எனக்கு மட்டும் என்ன தெரியும், அந்த ஆள்கிட்டேயே கேட்டுப் பாரு" என்று முடித்துக் கொண்டான் ரவி.
ஒரு விடுமுறை தினத்தன்று, கீழே டீ குடித்துவிட்டு மேலே ஏறிவந்த என்னைப் பார்த்து சிநேகமாக சிரித்தார். நானும் சிரிக்க, "எங்க வேலை பார்க்குறீங்க, தம்பி" என்று கேட்டு பரஸ்பரம் பேர் மற்றும் ஊர் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டு, இவரிடம் இதுக்கு மேல் பேசக் கூடாது என்று நழுவி விட்டேன்.
அடுத்து வந்த நாட்களில், "குட் மார்னிங்", "குட் நைட்" சொல்லிக் கொண்டோம். சில வேளைகளில் நாங்கள் சாப்பிடும் கடைகளிலும் தென்படுவார். "பழக் கடைக்குப் போனீங்கனா ரெண்டு பழம் வாங்கிட்டு வாங்க, கொஞ்ச தூரமா, அதனாலதான்" என்றார். "பரவாயில்லீங்க, நாங்க எப்படியும் போகப் போறோம், உங்களுக்கும் சேர்த்து வாங்கிட்டு வர்றோம்" என்றோம். பழத்தைக் குடுத்தவுடன் "ரொம்ப நன்றி தம்பி" என்றார்.
இவர் எதுக்காக இங்க வந்து தங்கி இருக்கார் என்பது எங்களுக்கு ஒரு புரியாத புதிராக இருந்தது. ஒரு நாள் இரவு பத்து மணி இருக்கும். நான் ரூமுக்கு வெளியே நின்றுகொண்டு செல்லில் பேசிக் கொண்டிருந்தேன். அவரும் அந்தப் பக்கம் நின்றுகொண்டிருந்தார். நான் பேசி முடித்தவுடன், "வீட்டுக்கா தம்பி போன் பேசுனீங்க" எனக் கேட்டார். "ஆமாங்க, அம்மாகிட்ட பேசுனேன்" என்றேன். "அப்படியா தம்பி, நான் கூட வீட்ல பேசி ரொம்ப நாளாச்சு" என்றார்.
நான், "அப்போ இங்க ஏதும் வேலையா வந்து இருக்கீங்களா?" என்று கேட்டேன்.
"இல்ல தம்பி. சொல்ல சங்கடமா இருக்கு. ஆனா உண்மையா மறைக்க முடியுமா, சொல்லுங்க தம்பி" என்று என்னைப் பார்த்துக்கொண்டே, "ஏதோ, உங்ககிட்ட சொல்லலாம்னு எனக்கு தோணுது. எனக்கு ரெண்டு பொண்ணுக இருக்காங்க. ரெண்டும் பள்ளிக்கொடம் போகுதுங்க. செஞ்ச தொழிலு நஷ்டமாகிப் போயிருச்சு. பெரிய கடன் வேற. இருந்த வீடு கூட கடன்ல போயிருச்சு. கடைய அப்படியே ஒருத்தன் பேருக்கு மாத்தி கொடுத்துதான் மீதி கடன அடைச்சேன். மாமனார் ஊர் பக்கத்துல இருக்கு, பொண்டாட்டி புள்ளைக எல்லாம் அங்க இருக்காங்க. என்னையும் அங்க கூப்பிட்டாங்க. இத்தன வயசாகியும் மாமனார் வீட்டுக்கு போறது நல்லா இல்லீன்னுதான் இங்க இருக்கேன் தம்பி" என்றார். கண் கலங்கவில்லை என்றாலும், கண்ணில் கொஞ்சம் சிவப்பு எட்டிப் பார்த்து வார்த்தைகள் பிசிறடித்தது.
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை, "பரவாய் இல்லீங்க, சீக்கிரம் சரியாப் போயிரும்" என்று சொல்ல, "அத விடுங்க தம்பி, உங்க கிட்ட போய் இதெல்லாம் சொல்லிட்டு இருக்கேன். நேரமாச்சு, போய்ப் படுங்க. குட் நைட்" என்று சொல்லியவாறே தளர்வாக அறையை நோக்கி நடந்தார்.
தீபாவளி நெருங்கிக் கொண்டிருந்தது. தொடர்ந்து காலை வேளைகளில் தெருவில் போவோர் வருவோரை பார்த்துக் கொண்டே பால்கனியில் நின்று கொண்டிருந்தார். தீபாவளி விடுமுறை முடிந்து, அறைக்கு வந்து சேர்ந்த இந்த ஒரு வார காலத்தில் அவர் கண்ணிலேயே தட்டுப்படவில்லை. மேன்சன் மானேஜரிடம் கேட்க, அறையை காலி பண்ணிவிட்டு சென்றுவிட்டார் என்பது பதிலாக வந்தது. அவர் குடும்பத்தோடுதான் வசிக்க, அறையை காலி செய்து சென்றிருப்பார் என நினைத்துக் கொண்டேன்.
சில காலை நேரங்களில், அந்தப் படிக்கட்டை கடக்கும்பொழுது, இன்னும் அவர் அங்கே நின்று தெருவைப் பார்த்துக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.
படங்கள்: இணையத்திலிருந்து - நன்றி.
அழகான எழுத்துநடை நண்பா
ReplyDeleteகதை என்றாலும், நிஜத்தை பிரதிபலிக்கும் உணர்வு.
ReplyDeleteஅழகா , மனசத்தொடுறாப்பல எழுதி இருக்கீங்க இளங்கோ ..இப்டி காஷுவலா எழுதறது தான் உங்க ஸ்டைல் ..நல்லா இருக்கு !
ReplyDelete@ "என் ராஜபாட்டை"- ராஜா
ReplyDelete@ Chitra
@ ஷஹி
நன்றி நண்பர்களே..