எனது சிறு வயதில், ஊரில் திருவிழா நடக்கும் சமயங்களில் 'நல்லதங்காள்' கதையைப் படிக்க ஒரு பெரியவர் வருவார். மைக் வைத்து, ரேடியோ கட்டி, அவருக்கு பெரிய வீட்டில் இருந்து கொண்டு வந்த சேரைப் போட்டு, பூஜை போட்டு என வாரக் கணக்கில் கதை சொல்வார். உடுக்கை அடித்துக் கொண்டே அவர் பாடும் போதும், உடுக்கையை நிறுத்தி விட்டு கதை சொல்லும்போதும், அனேகமாக பெண்கள், நல்லதங்காளை தங்கள் சகோதரி போல நினைத்துக் கொண்டே அழுவார்கள். கீழே போட்டு உட்கார சாக்குப் பையும், போர்த்திக்கொள்ள போர்வையும் கொண்டு போய் விடிய விடிய கதை கேட்டு, அங்கேயே தூங்கி விடிகாலையில் எழுந்து வருவோம். கொஞ்ச வருடம் கழித்து, அந்தப் பெரியவரை அழைக்காமல், வீடியோப் படம் என்று ஒரு திருவிழாவன்று சொல்லி, ஆளுக்கு ஐந்து ரூபாய் வாங்கினார்கள். 'திருவிளையாடல்' படத்தில் தொடங்கி, கரகாட்டக்காரன், முதல் மரியாதை என்று தொடர்ந்து மூன்று படம் காட்டினார்கள். ஊரே கைகொட்டி, விடிய விடிய சொக்கிக் கிடந்தது 'டெக்' படத்தின் முன்னால். இப்போதெல்லாம் அதுவும் வெறுத்துப்போய், ஆர்கெஸ்ட்ரா, குத்து நடனம் என ரசனை மாறிக் கிடக்கிறது கிராமங்களில...