Thursday, April 28, 2011

உறங்காத தெரு















அங்கங்கு குப்பை கிடக்கும் இந்தத் தெருவின்
காலைப் பொழுதுகளில்
அழகிய கோலங்கள், பால் வண்டிகளின் ஓசைகள்
நடை செல்வோரின் செருப்போசைகள்
வேப்ப மரக் காக்கையின் சத்தம்
வீடு திரும்பும் கூர்க்கா
என விடியும்..

அலுவலகம், பள்ளி
என சரசரக்கும் மக்கள் கிளம்பிப் போன பின்னர்
காய்கறி வண்டி, தபால் எனவும்
மாலைப் பொழுதுகளில் குழந்தைகளின் சத்தம் எனவும்
நீள்கிறது பகல்...

மெல்லிய வெளிச்சம் மட்டும் பரவிக் கிடக்கும் இரவுகளில்
நைட் ஷிப்ட் போய் வரும் ஓரிருவர்
திரும்ப வரும் கூர்க்கா
சுற்றி வரும் நாய்கள் எனவும்..

தெரு எப்போதும் உறங்குவதேயில்லை.

*************


புகைப்படம் http://www.flickr.com/photos/seeveeaar/3837563809/ இங்கிருந்து.. நன்றி.

Monday, April 25, 2011

சாப்பாடு

இந்தப் பெருநகரத்தில் உணவுக்கு அலைவதென்பது தினசரி வாடிக்கையாகி விட்டது. என்ன செய்தாலும் ஒரு நல்ல உணவகத்தை கண்டு பிடிக்க முடிவதில்லை. அப்படியே இருந்தாலும் மாதத்தில் பெரும் பணம் அதுக்கே கொடுக்க வேண்டிய அளவு விலைப்பட்டியல் இருக்கிறது. அப்படியே நமது பணம் காலியானாலும், அடுத்த நாள் நமது வயிறு ஓர் ஆட்டம் ஆடி நிற்பதை நாம் ஒன்றும் செய்ய முடியாது. இன்னும் மீறிப் போனால் மருத்துவமனைக்குச் சென்று காட்டக் கூடிய அளவு நிலைமை மோசம் ஆகலாம்.

சைவ, அசைவ உணவகம் என்று இல்லை. எல்லா இடத்திலுமே நாம் வாயைப் பிளக்கும் அளவுக்கு விலைகள். இதில் அசைவ உணவகம் பக்கம் சென்றால் இப்பொழுது இருக்கும் பெரிய ரூபாய் நோட்டு மதிப்பு இல்லாமல் ஒருவர் பசியாறுவது சிரமம். உணவக முதலாளிகளைச் சொல்லியும் குறையில்லை, குளிரூட்டப் பட்ட அறைகள், வாசலிலேயே சலாம் போடும் பணியாளன்(அந்தக் காலத்து ராஜா உடை முரண்), மேசைக்கு ஒரு ஆள், துடைக்க ஒரு ஆள், குழந்தைகள் விளையாட தனியாக ஒரு இடம், சிறு சிறு தொட்டி அழகுச் செடிகள், கிளம்பும் போது இலவசமாக வைக்கப் படும் வாழைபழம் (ரொம்ப சிறுசாக இருக்கும்), பீடா, இனிப்பு சோம்பு என அவ்வளவையும் அவர்கள் செலவில் செய்ய வேண்டியுள்ளது. இதற்கெல்லாம் சேர்த்து நம்மிடம் அவர்கள் விலைப்பட்டியல் நீட்டத் தானே செய்வார்கள்.



எனவே நண்பர்கள் பேசி, இனிமேல் வெளியில் சாப்பிடக் கூடாதென்றும், வீட்டிலியே நாமே சமைத்துக் கொள்ளலாம் என்றும் முடிவானது. சமைப்பது, பாத்திரம் கழுவுவது, கடைக்குப் போவது, காய்கறி நறுக்குவது என யார் யார் எந்த வேலை செய்வதென்றும் பிரித்துக் கொண்டோம். அறையுள் உள்ள நால்வரில், எல்லோருமே வேலைக்குப் போவதால் முறை வைத்து சமைப்பது என முடிவானது. ஒரு வாரம் சுமூகமாகப் போனது. உப்போ, காரமோ எதுவும் தெரியாமல் விழுங்கி வைத்தோம். ஆனால் என்ன, இப்போதெல்லாம் வயிறு கடமுடா இல்லை. நாமே சுத்தமாக செய்தது என்று நல்ல விசயங்களும் நடந்தன. இதையெல்லாம் விட, பணம் மிச்சமானது.

அடுத்த வாரத்திலிருந்து, ஒரு நாள் அவன் பாத்திரம் கழுவவில்லை என்பதால், இன்னொருவன் சமைக்கவில்லை என்றும்,.. இன்னொரு நாள் சமைக்க வேண்டியவன் இரவு தாமதமாக வந்ததால் அன்று... என மீண்டும் உணவகங்களை நோக்கி படையெடுத்தோம். ஒரு நாள் சாப்பிடப் போகும்போது, யானையை விட்டு நெற்போர் அடித்த நம் முன்னோரின் வாரிசுகள் நாம் எனச் சொல்ல, நண்பன் என்னை அடிக்க வந்தான். எப்படியோ நமக்கு நாமே திட்டம் கைவிடப்பட்டு, வழமை போல உணவகங்களில் தொடர ஆரம்பித்தோம்.

ஒருநாள், பக்கத்துக்கு அறை நண்பன் அடுத்த வீதியில் ஒரு அய்யர் வீட்டில் சாப்பாடு சுவையாக இருப்பதாகவும், போய் சாப்பிட்டு வாருங்கள் எனச் சொன்னதும் கிளம்பிப் போனோம். அன்று சனிக்கிழமை, அந்த அய்யர் வீட்டில் மதியம் மட்டும் சாப்பாடு கிடைக்கும் எனச் சொல்லியிருந்தான் நண்பன். நாங்கள் அங்கே போனதும் "கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க" என்றார் ஒருவர். பார்த்தவுடனே அவர்தான் நண்பன் சொன்னவர் என்று தெரிந்தது. உள்ளே இரண்டு சின்ன உணவக மேசையில் எட்டு பேர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் நாங்கள் உள்ளே சென்று அமர்ந்தோம்.




உள்ளே சென்று அமர்ந்ததும் தான் அந்தப் பெரியவரைப் பார்த்தேன். தனது பருத்த உடம்போடு அங்கேயும் இங்கேயும் என மெதுவாக நடந்து கொண்டிருந்தார். முன்னே சாப்பிட்டவர்களிடம் அய்யர் பணம் வாங்கிக் கொண்டிருந்தார், இந்தப் பெரியவர் வாழை இலையை எங்களுக்காக எடுத்து வந்தார். தலை வாழை இலையைப் பிரிக்க அவர் கஷ்டப்பட, நாங்களே அதை வாங்கி பிரித்து மேசையில் விரித்தோம். பக்கத்தில் தண்ணீர் குடுவையிலிருந்து தண்ணீர் தொளித்துக் காத்திருக்க, பெரியவர் பொரியல் எடுத்துக் கொண்டு வந்து பரிமாற ஆரம்பித்தார் மெதுவாக.

பணத்தை வாங்கி முடித்த அய்யர், திரும்பி வந்து இலையை நோட்டமிட்டார்.

"மாமா.. இங்க பாருங்கோ.. பொரியலை இந்த ஓரம்தான் வைக்கணும்.. அந்தப் பக்கம் வைக்கதிங்கன்னு எத்தன தடவ சொல்லுறது"

பெரியவரிடமிருந்து பதிலில்லை. மற்ற இலைகளுக்கும் பரிமாறி விட்டு அப்பளம் எடுக்கப் போனார். அதற்குள் அய்யரும் பரிமாற வந்து விட்டார். சாப்பாடு பிரமாதமாக இருந்தது. இரண்டு பொரியல், அப்பளம், சாம்பார் என வீட்டு சமையல்.

அதற்குள் நண்பன் புளிக்குழம்பு வேணுமென பெரியவரிடம் கேட்கப் போக, பெரியவர் ரச வாளியோடு வந்தார். அய்யர் அதைப் பார்த்து "மாமா.. அவர் கேட்டது புளிக் கொழம்பு.. ரசமில்ல" என்று ரச வாளியை வாங்கிக் கொண்டு, புளிக்குழம்பை எடுத்து வரும்போது முணுமுணுத்துக் கொண்டே வந்தார். பெரியவரைத் தான் பேசிக்கொண்டு வந்தார் என்பது நன்றாகவே தெரிந்தது. எதுவும் சொல்லாமல் பெரியவர் தள்ளாடிக் கொண்டே வெளியே வாசப்படி அருகில் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தார்.

நாங்கள் சாப்பிட்டு முடித்து ஏதோ ஒரு நினைவில் சாப்பிட்ட இலையை எடுக்க மறந்து, கைகழுவப் போக அய்யர் "சார்.. இலையை எடுத்துருங்க". என்றார். நாங்கள் இலையை எடுத்து வெளியே இருந்த கூடையில் போட்டுவிட்டு, கை கழுவி விட்டு வரும்போது பெரியவர் உள்ளே சென்று அடுத்த பந்திக்கான இலையை எடுக்க ஆரம்பித்தார்.

அய்யர் சாப்பிட்டு முடித்த எங்களிடம் பணம் வாங்கிக் கொண்டே பெரியவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் எனப் பார்த்துக் கொண்டே இருந்தார். பெரியவர் இன்னும் தள்ளாடி தள்ளாடிக் கொண்டே ஒவ்வொரு வேலையாகச் செய்து கொண்டிருந்தார். நாங்கள் பணம் கொடுத்துவிட்டு வெளியே கொஞ்ச தூரம் நடந்து கொண்டிருக்கும் போது திரும்பவும் கேட்டது அய்யரின் பேச்சு; "மாமா.. பொரியலை அந்தப் பக்கம் வைங்க.. இந்தப் பக்கம் வைக்காதீங்கன்னு எத்தன தடவ சொல்லுறது".

பெரியவர் நிச்சயமாக இதற்கும் பதில் சொல்லியிருக்க மாட்டார்.

படங்கள்: இணையத்திலிருந்து, நன்றி.

Friday, April 22, 2011

பெண்ணும் எழுத்தும்

'தீராத விளையாட்டுப் பிள்ளை' ஆர்.வி.எஸ் அவர்கள் இந்தத் தொடருக்கு என்னை அழைத்திருந்தார். முதல் முறை என்னை அழைத்து எழுதச் சொல்லியவர், இரண்டாவது முறையாகவும் என்னை அழைத்திருக்கிறார். அழைப்புக்கு நன்றி சொல்லி இதோ எழுதத் தொடங்குகிறேன்.

ஆதி காலத்தில் மனிதக் குழுக்களுக்கு தலைவியாக பெண்தான் இருந்திருக்கிறாள். 'வால்காவிலிருந்து கங்கை வரை' புத்தகத்தில் இதைப் பற்றி விரிவாகக் காணலாம். தலைவியின் வழிப்படியே அந்த குழுக்கள், அவளின் பினனால் நடந்து போயிருக்கின்றன. ஆனால், பின்னால் இந்த சமூகம் அப்படியே மாறிப் போயிருக்கிறது. மாறிப் போனதன் விளைவாகவே 'தையல் சொல் கேளேல்' என்றும், 'பெண் புத்தி பின் புத்தி' என்றும் எழுதி வைத்திருக்கிறார்கள். ஈன்று புறம் தருதலோடு தன் கடன் முடிந்ததாகவும் பதிவு செய்திருக்கிறார்கள்.

போன வாரம் கூட கண்ணகி பிறந்த நாள் என்று கொண்டாடினார்கள். ஏன் மாதவி முன்னிறுத்தப் படுவதில்லை இங்கே? . ஏனென்றால் பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், அதாவது கண்ணகி போல் இருக்க வேண்டும் என்று அடிக்கடி நினைவு படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மாதவியை கெட்டவள் போல் என்னும் சமூகம், ஒரு போதும் கோவலனை கெட்டுப் போனவனாக எண்ணுவதில்லை. அது எப்படி முடியும், கண்ணகியை பண்பாட்டுச் சின்னமாக என்னும் தலைவர்கள் வீட்டில் எத்தனை பெண்டாட்டிகள். பெண்களை நாம் கண்ணகியாகவோ, மாதவியாகவோ எண்ணாமல், ஒரு பெண் ஆக எப்போது பார்க்கப் போகிறோம்?.

எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் வலைத் தளத்தில் 'சொந்தக்குரல்' என்கிற கதை வெளியாகி இருக்கிறது. இந்தக் கதையில், அம்மா தன் மகனிடம் கதை சொல்வதாக இருக்கும். தனது கணவன் செய்த கொடுமைகளையும் தாண்டி ஒரு கதை எழுத அவள் கஷ்டப் பட்டதையும், இன்னும் ஒரு கதை எழுதப் படாமல் இருப்பதாகவும், அதை சொல்லப் போவதாகும் சொல்லிக் கொண்டே உறங்கிப் போகிறாள். இந்த அம்மாவைப் போலவே, ஊரில் உள்ள அத்தனை பெண்களிடமும் ஒரு நீள் கதை உறங்கிக் கொண்டிருக்கும் அல்லவா? .

பெண் எழுத்தாளர்கள் வரிசையில் அனுராதா ரமணன், சிவசங்கரி மற்றும் வாஸந்தி ஆகியோரின் எழுத்துக்களைப் படித்திருக்கிறேன். அதிலும் மெல்லிய நகைச்சுவையோடு எழுதும் அனுராதா ரமணன் அவர்களின் எழுத்து ரொம்பப் பிடிக்கும். இப்பொழுது வாஸந்தி அவர்கள் எழுதி வரும் 'பெற்றதும் இழந்ததும்' தொடர் குமுதம் தீராநதியில் வெளிவருகிறது. ஒரு திறந்த கோணத்தில் எழுதப் படும் தொடராகவே இது எனக்கு பிடித்திருக்கிறது. ஆண்களில் எல்லோருமே பெண்களைப் பற்றி எழுதாமல் கடந்து போக முடிவதில்லை. நான் படித்த அனைத்து எழுத்தாளர்களுமே பெண்களை உயர்வாகத்தான் பேசியிருக்கிறார்கள்.

எழுத்து என்று வரும்போதும் நினைத்ததை எல்லாம் எழுத முடிவதில்லை. ஒரு ஆண் காமம் பற்றியோ அல்லது பாலியல் பற்றியோ விவரமாக எழுத முடியும். இவை எல்லாவற்றையும் தாண்டி எழுதும் அனைத்துப் பெண் எழுத்தாளர்களுக்கும் எனது வணக்கங்கள்.

இறுதியாக, மலையாளக் கவிஞர் கமலாதாஸ் அவர்களின் கவிதை ஒன்றை, எழுத்தாளர் வாஸந்தி அவர்கள் இந்த மாத குமுதம் தீராநதியில் தனது 'பெற்றதும் இழந்ததும்' பகுதியில் எழுதியிருக்கிறார்.

தூக்கணாங்குருவியை உன் உள்ளங்கைக்குள்
பொத்தி வைக்கத் திட்டமிட்டாய்
உனக்குத் தெரியும்,
உனது அன்புப்பிடியில் இறுக்கிக் கொண்டால்
அவளது இயல்பு மாறுமென்று
பருவங்களும் சொந்த வீடும் மட்டும் மறக்கவில்லை,
போயின மறதியில்..
பறக்கும் ஆர்வமும் முடிவற்ற வானத்தின் எல்லைகளும்..




இந்தப் பதிவை தொடர விருப்பமுள்ள அனைத்து நண்பர்களும் எழுதவும்.


Wednesday, April 20, 2011

எனது டைரியிலிருந்து..

ஒரு காலத்தில் எனக்குப் பிடித்த சில கவிதைகளை டைரியில் எழுதி வைத்திருந்தேன். அதிலும் ஆனந்த விகடனில் வரும் கவிதைகள் தான் அதிகம் இருக்கும். அவற்றில் சிலவற்றை இங்கே பகிர்கின்றேன்;


இருந்தவை.. தொலைந்தவை..
- கல்யாண்ஜி (ஆனந்த விகடன்)

கார்த்திகை ராத்திரி
ஏற்றின கடைசி விளக்கை
வைத்துத் திரும்புமுன்
அணைந்து விடுகிறது
முதல் விளக்குகளுள் ஒன்று.
எரிகிறபோது பார்க்காமல்
எப்போதுமே
அணைந்த பிறகுதான்
அதைச் சற்று
அதிகம் பார்க்கிறோம்.
எரிந்த பொழுதில்
இருந்த வெளிச்சத்தைவிட
அணைந்த பொழுதில்
தொலைந்த வெளிச்சம்
பரவுகிறது
மனதில் பிரகாசமாக.



********************************

வலி
- ஜி.ஆர்.விஜய் (ஆனந்த விகடன்)

விழுங்கிய மீன்
தொண்டையில் குத்துகையில்
உணர்கிறேன்
தூண்டிலின் ரணம்.

********************************

வானம் மட்டும் இருக்கிறது
- பா.சத்தியமோகன்
(ஆ.வி. கற்றதும் பெற்றதும் பகுதியில் - சுஜாதா குறிப்பிட்டது)

ஆமாம் ஆமாம்
நீ பேசும் ஒவ்வொன்றும்
வரிக்கு வரி நிஜம்
முற்றுப்புள்ளி உள்ளிட்ட
அனைத்தும் ஏற்கத் தயார்
அனைத்துக்கும் ஆமாம்.
சங்கிலியால் கட்டப்பட்டது
யானையென்றாலே
தப்புதல் கடினமாச்சே
சங்கிலியால் கட்டுண்ட டம்ளர்
தப்புமோ கூறு?















மேலே உள்ள யானைப் படம் மட்டும் இணையத்திலிருந்து.. நன்றி.

Monday, April 18, 2011

டிப்ஸ்















உணவகத்தில்
உண்டு முடித்ததும்
பில்லைக் கொண்டுவந்து வைத்து
பணத்துக்கு காத்திருந்தான் சர்வர்

'பணம் நானே கொடுத்துக்கிறேன்'
என எழுந்து
திரும்பி நடந்த என் முதுகில்
வழிந்து கொண்டிருக்கிறது
முன்பின் தெரியாத
அவனின் வன்மப் பார்வையும், கோபமும்.

படம்: இணையத்திலிருந்து, நன்றி.

Saturday, April 16, 2011

அசடன் (இடியட்)

பியாதோர் தஸ்தாயெவ்ஸ்கி எழுதியுள்ள நாவலான 'இடியட்'டை பேராசிரியர் எம்.ஏ. சுசீலா அவர்கள் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இந்த மாத இறுதி அல்லது வரும் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். அறுநூறு ரூபாய் மதிப்புள்ள புத்தகத்தை, முன் வெளியீட்டுத் திட்ட விலையாக ரூபாய் முன்னூற்றி ஐம்பதுக்கு முன் பதிவு செய்து கொள்ளலாம்.



இந்நாவல் பற்றி சுசீலா அவர்கள் தம் பதிவொன்றில் இப்படி கூறியுள்ளார்:
மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் இன்னொரு மனிதனை இனம் காண நேரும்போது ஏற்படும் கரைகாணா மானுட வேதனைகளையும்,உள்ளச் சிதைவுகளையும் இந்நாவலின் மூலம் கண்டடைய முனைந்திருக்கிறார் தஸ்தாயெவ்ஸ்கி.


இப் புத்தகத்துக்கு முந்தைய மொழி பெயர்ப்பான குற்றமும் தண்டனையும் பற்றிய எனது பதிவு:
குற்றமும் தண்டனையும் (Crime and Punishment)

சுசீலா அவர்களின் பதிவு :
அசடன் மொழியாக்கம்-முன் வெளியீட்டுத் திட்டம்
இடியட்/அசடன் முன்பதிவு நாள் நீட்டிப்பு...


புத்தகம் முன்பதிவு செய்ய:

Bharathi Book House,D-28, Corporation Shopping Complex,Periyar Bus Stand, Madurai.

விலை;ரூ.600.00
முன் வெளியீட்டுத் திட்ட விலை;ரூ;350.00
கூரியர் செலவு;ரூ;75.00 ஏப்ரல் 25 வரை முன் பதிவு செய்து கொள்ளலாம்.

முன் பதிவுத் தொகையை ‘பாரதி புக் ஹவுஸ்’ என்ற பெயரில் மதுரையில் மாற்றும் வகையில் வங்கி வரைவோலை(டிராஃப்ட்) அல்லது பணவிடை( எம்.ஓ.) மூலம் அனுப்பலாம்.

உடுமலை.காம் மூலம் பதிய; அசடன் (இடியட்)




Friday, April 15, 2011

சார்லி சாப்ளின்

இன்று Google-ன் முதல் பக்கத்தில், சாப்ளினின் பிறந்த தினத்தை நினைவு படுத்தியிருந்தார்கள்.



அவரவர் பிரச்சினைகளில் மூழ்கி விழுந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில், நமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகின்றன கலைகள். காலங்கள் தாண்டியும் கலைகள் வாழ்வதற்கு கலைஞர்கள் உறுதுணையாக இருக்கிறார்கள்.

மற்றவரைச் சிரிக்க வைத்தல் என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதற்கு அவன் கோமாளி வேசம் உட்பட என்னென்னவோ செய்ய வேண்டியிருக்கிறது. தனது காயங்களை மறைத்து அல்லது மறந்து தான் அவர்கள் கலையை வெளிப்படுத்துகிறார்கள்.

காலங்கள் பல கடந்தும் நம்மை சிரிப்பில் ஆழ்த்தும் அந்த மகா கலைஞனை இந்நாளில் நினைவு கூறுவோம்.

அவரின் படங்களை பற்றி நான் எழுதிய பதிவுகளின் சுட்டிகள்:
சிட்டி லைட்ஸ்
சினிமா - மாடர்ன் டைம்ஸ் (Modern Times)
தி சர்க்கஸ் (The Circus)

ஒரு வீடியோ:





Sunday, April 10, 2011

மக்களால் மக்களுக்கு

பாடப் புத்தகத்தில்
இப்படித்தான் இருந்தது
மக்களால் மக்களுக்கு மக்களாட்சி..

ஒரு நாள்
சாரை சாரையாக வந்தார்கள்
வெள்ளை ஆடையில் நல்லவர்கள் ஆனார்கள்
உங்கள் வீட்டுப் பிள்ளை
உங்கள் காலடியில் கிடப்பேன்
என்றெல்லாம் சொல்லி ஓட்டுக் கேட்டார்கள்

வழக்கம் போல்
ஜெயிக்கவும் தோற்கவும் ஆனார்கள்

வெற்றி பெற்றவர்கள்
அவரவர் முடிந்ததை
அவரவருக்குத் தேவையான வரை
கக்கத்தில் கட்டிக் கொண்டார்கள்..

நேரமிருக்கும்போது மக்களைச் சந்தித்து
குறை கேட்பதோடு நிறுத்திக் கொண்டார்கள்
அல்லது சந்திப்பையே தவிர்த்தார்கள்

தேர்தல் நாள் அறிவித்தவுடன்
திரும்பவும் அந்த நாள் வந்தது
இந்த தடவை குத்தகை
யார் கைக்கு போகுமென்பது
எண்ணிக்கை முடிந்த பிறகு தெரியும்...


சொல்ல மறந்து விட்டேன்
பாடப் புத்தகத்தில்
இப்படித்தான் இருக்கிறது
மக்களால் மக்களுக்கு மக்களாட்சி....


Thursday, April 7, 2011

அன்னா ஹசாரே



அரசியல்வாதிகளின் ஊழலைத் தடுக்க திரு. அன்னா ஹசாரே அவர்கள் டில்லியில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஊழல் பெருகி வரும் இந்தச் சூழலில் இவர்களைப் போன்றோரின் போராட்டங்கள் நமக்கு நிச்சயம் தேவை.

காந்தியவாதியான இவர், "அரசியல்வாதிகள் யாரும் வரவேண்டாம். எனக்கு ஆதரவு அளிப்பதாக போட்டோவுக்கு போஸ் கொடுக்க வேண்டாம்" என்று கூறியிருக்கிறார்.

அவருக்கு நமது ஆதரவைத் தெரிவிப்போம்.

நன்றி: தினமலர்
செய்திகள் :
ஊழலுக்கு எதிராக களம் இறங்கிய காந்தியவாதி : நாட்டுக்காக உயிர் விட தயார் என்கிறார்
ஊழலை எதிர்க்கும் காந்தியவாதி உண்ணாவிரதத்திற்கு அபார ஆதரவு


Wednesday, April 6, 2011

பசி













இரவு எட்டு மணிக்கு
மாநகரப் பேருந்துக்கு காத்துக் கொண்டிருந்த
எனை நோக்கி வந்த
ஒரு வயதான பாட்டியுடன்
கூடவே ஒரு சிறுவன்

'தம்பி' என்றார் பாட்டி
'ம்ம்' என்றேன் நான்
'தம்பி, வேல கெடைக்குமுன்னு
ஊர்ல இருந்து கெளம்பி வந்தோம்
ஒரு வாரமா வேல இல்ல
இது எம் புள்ளையோட பையன்
புள்ளைக்கு ஒடம்பு சரியில்ல
கொஞ்சம் காசு குடு சாமி'

அந்தப் பையனிடம்
'என்ன படிக்கிறே, எந்த ஊரு'
எனக் கேட்க, எல்லாவற்றுக்கும்
தலையை ஆட்டிக் கொண்டே இருந்தான்.

இருவரையும் பக்கத்தில் இருந்த
கடைக்கு கூட்டிப் போய்
என்ன வேணும் எனக் கேட்க
'ஊட்டுக்கு கட்டிட்டுப் போயிடுறோம் ' என்ற பாட்டி
சரியென்று ஆன தொகையை
கொடுத்துவிட்டு நகரும்போது
'ரொம்ப நன்றியப்பா' எனச் சொன்னார்

இரண்டு மூன்று நாள் கழித்து
இரண்டு பேருந்து நிறுத்தங்கள் தாண்டி
அதே பையனும் பாட்டியும்
இன்னொருவரிடம் கை நீட்டி
கேட்டுக் கொண்டிருந்தனர்..

இந்த பெரும் பசியை
பிச்சை எடுத்தேனும்
அடக்க வேண்டியிருக்கிறது.

படம்: இணையத்தில் இருந்து, நன்றி.



Friday, April 1, 2011

ஒரு கோப்பை தேநீர்

ஜென்னில் ஒரு கோப்பை தேநீர் அருந்துவது என்பது ஒரு தவம் போல். ஒரு கப் தேநீரை கையில் எடுத்துக் கொள்வது முதல், துளித் துளியாக ரசித்து விழுங்கி, காலி கோப்பையை கீழே வைப்பது வரை எப்படிச் செய்கிறீர்கள் என்பதை ஜென் குருக்கள் கவனிப்பார்கள். ஒரு கோப்பை தேநீரை இவ்வளவு ரசித்துக் குடிக்க முடிந்தால், இந்த வாழ்க்கையை அவர்கள் எவ்வளவு ரசிப்பார்கள்.



கிராமங்களில் இன்றும் 'காப்பி தண்ணி குடிச்சிட்டு போறது..' என்று சொல்வார்கள். நண்பன் ஒருவனுக்கு காலை எழுந்தவுடன் தேநீர் கண்டிப்பாக வேண்டும். எங்கேனும் இரு நண்பர்கள் சந்தித்துக் கொண்டால் கடைகளில் ஆர்டர் பண்ணுவது தேநீர் தான்.

இப்படி தேநீர் பல இடங்களில் நம் கூடவே இருந்தாலும், ஆனந்த விகடனில் வெளிவந்த இந்தக் கவிதை ஒரு கணம் பிரமிக்க வைத்தது.

தேநீர் வேளை

காலையில் தேநீர் அருந்துகையில்
சீனி குறைவாய் இருக்கிறதென
இனிப்பை அள்ளிப் போட்டு
கரண்டியால் கலக்கிகொள்கிறான்
மகன்.

சூடாய் இருக்க வேண்டும்
செய்தித்தாள் வேண்டும்
கொஞ்சம் வர்க்கி ரொட்டிகளும்
தொலைக்காட்சியும்
அப்பாவுக்கு.

பூ வேலைப்பாடுடன் கூடிய
தேநீர்க் குவளை
மகளுக்கு.

எப்படி இருந்தாலும்
அருந்திக்கொள்வாள் அம்மா
இந்த வாழ்க்கையை!


விஜய் மகேந்திரன் (ஆனந்த விகடன் - 23/03/11 இதழில்)


நன்றி: ஆனந்த விகடன், மேலே உள்ள படம் இணையத்தில் இருந்து.