புதுமைப்பித்தன்
பல வருடங்களுக்கு முன் புதுமைப்பித்தன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு ஒன்றை வாங்கினேன். புத்தக அலமாரியில் எதையோ தேடிக் கொண்டிருந்தபோது இந்தப் புத்தகம் அகப்பட்டது. நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்ட அந்தத் தொகுப்பில் பதினாறு கதைகள் மட்டும் இடம்பெற்றுள்ளது. இதுவரைக்கும் நான் படித்திராத ஒரு சொல்லாட்சியுடன், நகைச்சுவை உணர்வுடன், சிந்திக்க வைக்கும் போக்குடன் கதைகளை எழுதியிருந்தார் புதுமைப்பித்தன். அன்றுமுதல் புதுமைப்பித்தன் என்னும் பெயரைக் கேட்டாலே அவரின் கதைகள் மனதில் வந்து போயின. நாற்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவாகவே வாழ்ந்த அவரின் கதைகள் ஜீவன் உள்ளவை. 'என் கதைகளில் உள்ள கவர்ச்சிக்கு ஓரளவு காரணம் நான் புனைந்து கொண்ட புனைபெயராகும். அது அமெரிக்க விளம்பரத் தன்மை வாய்ந்திருக்கிறது.. பிறகு நான் எடுத்தாளும் விசயங்கள்; பலர் வெறுப்பது, விரும்புவது..' என்று ஒருமுறை எழுதியிருக்கிறார். அவரின் இயற்பெயர் விருத்தாசலம். புதிய வகையில் சிந்திக்க கூடிய கதைகளாக எழுதியிருக்கும் புதுமைப்பித்தன் அவர்களின் சில கதைகளைப் பற்றிச் சில வரிகள். ...