Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Monday, August 26, 2024

நிர்மால்யம் - எம்.டி.வாசுதேவன் நாயர்

மலையாளத்தில் வெளிவந்த படம் நிர்மால்யம் (1973).  இந்த படத்தை எழுதி, இயக்கியவர் எம்.டி.வாசுதேவன் நாயர். அவர் முதன்முதலாக இயக்கிய படமும் கூட. அப்படத்தின் திரைக்கதையை தமிழில் மீரா கதிரவன் மொழி பெயர்த்துள்ளார். 

அந்தக் காலத்தில் ஒரு வெளிச்சப்பாட்டின் வறுமையை, இயலாமையை நம்மை உணர வைக்கும் கதை நிர்மால்யம். ஒரு கையில் சிலம்பும், மறுகையில் பள்ளிவாளும், இடுப்பில் சலங்கைகளும் கட்டி ஆடும் வெளிச்சப்பாட்டை    தமிழில் அருள் வாக்கு சொல்பவர் என்று கூறலாம். நெற்றியில் பள்ளி வாளால் வெட்டிக் கொண்டு ஆவேசம் கொண்டு ஆடுவார்கள். 



தனது தந்தையான பெரிய வெளிச்சப்பாடு ஆடிய காலங்களில் குடும்பத்துக்கு வருமானம் குறைவில்லாமல் இருந்திருக்கிறது. கோவிலில் தொடர்ந்து பூஜைகளும் நடக்கும். எனவே கொஞ்சம் வசதியாகவே இருந்திருக்கிறார்கள். கோவில் நிர்வாகிகளுக்கு கோவிலைப் பராமரிக்க மனதில்லாமல், பூஜை குறைய வருமானம் குறைந்து வறுமை வாட்டுகிறது. வெளிச்சப்பாடுக்கு அப்பு என்ற மகனும், அம்மிணி என்ற மகளும், இரண்டு சிறிய பெண் குழந்தைகள் என நான்கு பிள்ளைகள். மனைவி பெயர் நாராயணி.  பெரிய வெளிச்சப்பாடு இப்போது முதுமையில், வாய் பேச முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கிறார்.

கோவிலில் ஒருநாள் பக்தரின் வேண்டுதல் பூஜை நடக்கிறது. பூஜை நடந்தால் செண்டை மேளம், வெளிச்சப்பாடு, வாரியர் என எல்லாரும் வரவேண்டும். பூஜை முடிந்து பூஜைக்கு உண்டான பணம் மட்டுமே கொடுக்கிறார் வேண்டிய பக்தர். அதைப் பிரித்துக் கொடுக்கும்பொழுது மேளம் அடித்தவர் இந்த பணத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் எனக் கோபப்பட்டு போகிறார். கோவில் நம்பூதிரி எனக்கு இந்த வேலையே வேண்டாம், வேறு ஆளை பூசைக்கு வைத்துக்கொள்ளட்டும் என அவரும் ஊரை விட்டுப் போகிறார். வெளிச்சப்பாடுக்கும் குறைந்த தொகையே வருகிறது. இவ்வளவு குறைந்த தொகைக்கு, எதுக்காக ஆவேசப்பட்டு வேகமாக ஆடி, மண்டையில் ரத்தம் வருமாறு அடித்துக்கொள்ள வேண்டும், இந்த அளவுக்கு எல்லாம் போக வேண்டாம் என அவரிடம் சொல்கிறார்கள். அதற்கு வெளிச்சப்பாடு "இந்த நடைக்கு வந்து, பள்ளி வாளை எடுத்து அந்த முகத்தை (தெய்வத்தை) பார்த்தால் .. எல்லாமே மறந்து போய்விடும்" என்கிறார். 

வெளிச்சப்பாடின் மகன் அப்பு வேலைக்கு முயன்று கொண்டிருக்கிறான். இரண்டு ரூபாய் கேட்டால் கூட தர இயலாத தந்தை மேல் அவனுக்கு கோபம் வருகிறது. ஒருநாள் பள்ளிவாள், சலங்கை, சிலம்பம் என எல்லாவற்றையும் பழைய பாத்திரக்காரனுக்கு போடுகிறான். தெய்வத்தின் பொருளை நான் வாங்க மாட்டேன் என பாத்திரக்காரன் சென்று விடுகிறான். அந்நேரத்தில் அங்கே வந்த வெளிச்சப்பாடு, அவனை வீட்டை விட்டுப் போகச் சொல்கிறார். அவனும் போய்விடுகிறான். பிறகு அவனை எங்கே தேடியும் கண்டுபிடிக்க முடிவதில்லை. 


புதிதாக வந்த கோவில் நம்பூதிரி இள வயதுள்ள உண்ணி நம்பூதிரி. வெளிச்சப்பாடின் மகள் அம்மிணிக்கும், உண்ணிக்கும் காதல் பூக்கிறது. அரசாங்க வேலைக்கு முயன்று கொண்டிருக்கும் உண்ணி நம்பூதிரியை நம்புகிறாள் அம்மிணி. ஆனால் அவனின் தந்தை வேறு ஒரு வரனை நம்பூதிரிக்கு நிச்சயம் செய்துவிட, அந்த காதல் கைகூடாமல் போகிறது. 

அந்தக் காலத்தில் அம்மை, தொற்று வியாதிகள் என பல நோய்கள் வந்ததால் அம்மனுக்கு வேண்டுதல் நிறைய இருக்கும். வெளிச்சப்பாடுக்கு வேலையும், வருமானமும் குறைவில்லாமல் இருக்கும். "ஏதாவது நோய் வந்தால், உங்களுக்கு வருமானம் வரும்" என்று ஒருவர் கூற, அப்படியெல்லாம் எதுவும் நடக்க கூடாது என்றே சொல்கிறார் வெளிச்சப்பாடு. ஆனால் கொஞ்ச நாட்களிலேயே ஊரில் ஒரு சிலருக்கு அம்மை வார்க்கிறது. அம்மனுக்கு நீண்ட காலமாக குருதி பூசை நடக்காததால் தான் அம்மை வந்திருக்கிறது, பூசையை நடத்த வேண்டும் என முடிவு செய்கிறார்கள் ஊர் மக்கள். 

நீண்ட காலம் கழித்து வெளிச்சப்பாடு சுறுசுறுப்பாகிறார். பூசை நடத்த எல்லோருடனும் சேர்ந்து பணம் வசூல் செய்கிறார். அதிலிருந்து ஒரு பைசா கூட அவர் செலவு செய்வதில்லை. தெய்வம் என்ற ஒன்று இருக்கிறது என்பதை ஊர் மக்கள் உணர்ந்தால் போதும் என்ற சந்தோசம் அவருக்கு. 

பூசை நடக்க இருக்கும் அன்று அவருக்கு ஒரு துயரமான விஷயம் தெரியவருகிறது. மைமுண்ணி என்பவன் வெளிச்சப்பாடுக்கு கடன் கொடுத்து இருக்கிறான். அவரை எங்கே பார்த்தாலும் கடனைத் திருப்பிக் கொடு என்கிறான். அவ்வப்பொழுது வெளிச்சப்பாட்டின் வீட்டுக்கு வந்து செல்கிறான். வெளிச்சப்பாடின் மனைவி நாராயணியுடன் மைமுண்ணி தொடர்பில் இருப்பதை அறிந்து கையில் பள்ளிவாளுடன் "எனக்கு நாலு பிள்ளைகளை பெற்ற நாராயணி நீயா இப்படி" எனக் கேட்கிறார். அதற்கு நாராயணி, உலகத்தையே வெல்லக்கூடிய பள்ளி வாளின் முன் பயமில்லாமல் "ஆம் நான்தான். நீங்கள் தெய்வம் தெய்வம் என்று சுற்றிக் கொண்டிருந்த பொழுது என் பிள்ளைகள் எப்படி சாப்பிட்டார்கள். உங்கள் தெய்வம் வந்து கொடுக்கவில்லை. வேறு ஒரு ஆணின் முகம் தெரியாமல் வளர்ந்த என்னை, நாற்பது வயதில் இந்த நிலைக்கு தள்ளியது நீங்கள்" என வெடித்து அழுகிறாள். வெளிச்சப்பாடு பிரமித்து நிற்கிறார். 




வறுமை தன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்ததை எண்ணி கலங்கும் வெளிச்சப்பாடு, கோவிலில் எந்நாளும் இல்லாத ஆவேசம் கொண்டு ஆடுகிறார். வாளால் அவர் நெற்றியில் வெட்டுவதை தடுக்க வரும் வாரியரை உதறி விட்டு கோபம் கொண்டு ஆடுகிறார். ரத்தம் முகத்தில் வழிந்தாலும் அதை உதறிவிட்டு ஓங்கி நெற்றியில் வெட்டி உயிரற்று சாய்கிறார் வெளிச்சப்பாடு. 

வறுமையின் முன்னால் தெய்வம் கூட பதிலற்று நிற்கிறது. 

==

எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய இப்படம் நிறைய விருதுகள் பெற்ற படம். தமிழில் மீரா கதிரவன் அழகாக மொழி பெயர்த்துள்ளார். சில மலையாளச் சொற்களுக்கு அந்தந்த பக்கங்களிலேயே தமிழில் குறிப்புகள் கொடுத்துள்ளார். 

நிர்மால்யம்
எம்.டி.வாசுதேவன் நாயர் 
தமிழில் மீரா கதிரவன் 


Friday, January 31, 2014

தி ஷாசாங் ரெடெம்ப்சன் (The Shawshank Redemption)

சிறைச்சாலைகளில் ஒவ்வொரு நாளும் கைதிகளின் பரேடு நடப்பது வழக்கம். வழக்கம் போல ஒருநாள், அந்த சிறையின் ஒரு வார்டில் கைதிகளின் பரேடு நடக்கிறது. எல்லா அறைகளிலும் இருந்து, கைதிகள் வெளியே வந்து நிற்க.. ஓர் அறை மற்றும் திறக்கவே இல்லை. காவலர்கள் கத்திக் கூப்பிடுகிறார்கள். அப்பொழுதும் எந்த பதிலுமில்லை.

காவலர்கள், அந்த அறைக்குச் சென்று பார்க்கிறார்கள். அங்கே கைதியைக் காணவில்லை. இரவு அந்த அறைக்குச் சென்ற கைதி, எப்படித் தப்பியிருப்பான் என்பது புரியாமல் திகைக்கிறார்கள். பக்கத்து அறை நண்பனைக் கேட்கிறார்கள். அவனுக்கும் தெரியாமல், திகைத்து நிற்கிறான்.


******

ஆண்டி ஒரு வங்கி அதிகாரி. அவனின் மனைவி கொலை வழக்கில், எதிர்பாராவிதமாக ஆயுள் தண்டனை பெறுகிறான் ஆண்டி. சிறைக்கு வரும் அவன், ரெட் என்ற நண்பனின் உதவியால், ஒரு சுத்தியையும், ஒரு நடிகையின் பெரிய புகைப்படத்தையும் வாங்கி தன்னுடன், அறையில் வைத்துக் கொள்கிறான். அவ்வப்பொழுது அந்த சுத்தியைக் கொண்டு, கற்களில் சின்ன சின்னப் பொருட்களைச்  செய்கிறான்.


 அந்த சிறையின் வார்டன் பைபிள் மேல் ஆழ்ந்த பற்று கொண்டவர். ஆண்டியைச் சந்திக்கும் வார்டன், அவனுக்கு ஒரு பைபிளைத் தருகிறார். ஆண்டி, சிறையின் சுவற்றில் ஒட்டி இருக்கும் நடிகையின் புகைப்படத்தை பார்க்கிறார் வார்டன்.

 
ஒருமுறை, சிறையில் இருக்கும் ஒரு அதிகாரிக்கு, வரி மற்றும் வங்கி பற்றிய சந்தேங்களை தீர்க்கிறான் ஆண்டி. இதனால் அங்கே அவனுக்கு ஒரு நல்ல மதிப்பு ஏற்படுகிறது. சிறையில், சில முன்னேற்றங்களைச் செய்கிறான் ஆண்டி. வெளியே இருந்து சில வேலைகளை நாம் செய்தால், நல்ல லாபம் உண்டு என்று வார்டனிடம் கூற, வார்டனும் ஒத்துக்கொள்கிறார். நூலகம் மற்றும் சிலருக்கு விட்டுப்போன கல்வியைக் கற்றுத் தருகிறான் ஆண்டி.

வார்டனோ, சிறைக் கைதிகள் செய்யும் வேலைக்கு கிடைக்கும் பணத்தை, ஆண்டியின் அறிவுரைப்படி இன்னொரு பினாமி பெயரில் போட்டு வருகிறார். அந்தக் கணக்குகள் அனைத்தையும் ஆண்டியே கையாள்கிறான். தினமும் இரவு வார்டனின் மேற்பார்வையில்,   கணக்கு வழக்குகளை முடித்து ஒரு அலமாரியில் வைத்து பூட்டி வைக்க வேண்டியது ஆண்டியின் வேலை.



 இப்படியே வருடங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. சிறைக்கு டாம் என்ற கைதி வருகிறான். ஆண்டி மற்றும் ரெட்டிடம் அவன் நன்றாகப் பழகுகிறான். எதேச்சையாக ஒரு நாள், ஆண்டியின் மனைவி கொலை வழக்கு பற்றிச் சொல்கிறான். அதைச் செய்தது இன்னொருவன் என்றும், ஆனால் சிறையில் இருப்பதோ இன்னொருவன் என்றும் சொல்கிறான்.

இதைக் கேட்ட ஆண்டி, வார்டனிடம் போய், தன்னை சிறையில் இருந்து வெளியேற உதவி செய்யக் கோருகிறான். வார்டன் மறுக்கிறார். 'உங்களைப் பற்றி, நீங்கள் செய்யும் தில்லு முல்லுகளைப் பற்றி எல்லோரிடமும் நான் சொல்வேன்'  என்று கத்துகிறான் ஆண்டி. கோபம் கொண்ட வார்டன், ஆண்டியை தனிமைச் சிறையில் அடைக்க உத்தரவிடுகிறார். அதே இரவு, ஒரே சாட்சியான டாம் கொல்லப்படுகிறான். தப்பிச் செல்லும்பொழுது, சுட நேர்ந்ததாக அவன் கதையை முடிக்கிறார்கள்.


தனிமைச் சிறையில் இருந்து வெளியே வந்த ஆண்டி, தன் நண்பன் ரெட்டிடம், நான் இன்று வெளியே செல்லப் போகிறேன், நீ வெளியே வந்தால், (ஒரு முகவரியை சொல்லி).. அங்கே உனக்காக ஒன்று காத்திருக்கும்.. என்று சொல்கிறான். ரெட் திருதிருவென முழிக்கிறார். வழக்கம் போல, வார்டனின் கணக்கு வழக்குகளை முடித்து விட்டு, அறைக்கு வந்த ஆண்டி.. அடுத்த நாள் காலை அந்த அறையில் இல்லை.

செய்தி கேட்டு, அந்த அறைக்கு வரும் வார்டன், கோபத்துடன் கீழே கிடந்த ஒரு கல்லை எடுத்து, போஸ்டரில் சிரிதுக் கொண்டிருக்கும் நடிகையின் மீது வீச, கல் திரும்பி வராமல் போஸ்டரைக் கிழித்துக்கொண்டு உள்ளே செல்கிறது.அந்த போஸ்டரைக் கிழித்து வீசினால், அங்கே ஒரு சுரங்கப்பாதை இருக்கிறது. இத்தனை நாட்களாக, அந்த சிறு சுத்தியைக் கொண்டுதான் அந்த சுரங்கத்தை அவன் தோண்டி, இப்பொழுது தப்பியும் விட்டான்.

 
வெளியே வந்த ஆண்டி, பினாமி பெயரில் போட்டிருந்த எல்லாப் பணத்தையும் எடுத்துக்கொண்டு, மறக்காமல் தன்னிடமிருந்த வார்டன் பற்றிய அனைத்துக் குறிப்புகளையும் ஒரு நாளிதழுக்கு அனுப்பி விடுகிறான். அங்கே சிறையில், அலமாரியைத் திறந்து பார்க்கும் வார்டன் அங்கே பைபிளும், அதற்குள் கச்சிதமாக வெட்டப்பட்ட இடத்தில் அந்த சுத்தியும் இருக்கிறது. விஷயம் வெளியே கசிந்ததும் வார்டன், தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறக்கிறார்.

ஆண்டியின் நண்பன் ரெட், சிறையிலிருந்து வெளியே வந்ததும்.. ஆண்டி சொன்ன இடத்துக்கு சென்று பார்க்கிறார். அங்கே ஒரு மரத்தினடியில், ஆண்டியின் முகவரியும், கொஞ்சம் பணமும் இருக்கிறது. அதை எடுத்துக்கொண்டு புறப்படுகிறார் ரெட். ஒரு கடற்கரை ஓரத்தில், ஆண்டியை ரெட் சந்திப்பதுடன் படம் முடிகிறது.

வல்லவனுக்கு ஒரு சிறு சுத்தி கூட ஆயுதம் தான்.



******

ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் ஒரு பாடலை, ஒலிபெருக்கியில் அனைவரும் கேட்குமாறு மெய்மறந்து ஓட விட்டுக் கேட்கிறான் ஆண்டி. அந்த இசை சிறை முழுவதும் வலம் வருகிறது. காவலர்கள் அந்த அறையை உடைத்து வந்த பின்னரே அந்த இசையை நிறுத்த முடிகிறது. அதற்காக தண்டனையும் பெறுகிறான் ஆண்டி.

வாழ்நாள் முழுவதும் சிறையில் கழித்தவர்கள், வெளியே வந்ததும் தடுமாறிப் போகிறார்கள். சிறையிலாவது சிலர் இருந்தார்கள். அதுவும் வயதின் தனிமையில் அவர்கள் அடையும் துன்பம் சொல்லில் அடக்கி விட முடியாதது. சிறை வாழ்வை முடித்துவிட்டு, வெளியே வேலை செய்யும் இடத்தில, 'நான் சிறுநீர் கழிக்கப் போகலாமா?' எனக் கேட்க, அவர்களோ ஒரு புன்னகையுடன் 'நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் செல்லலாம்' எனச் சொல்கின்றனர். சிறுநீர் கழிப்பதற்கு கூட, அனுமதியை வேண்டி காத்திருக்கச் சொல்கிறது அவரின் சிறை வாழ்க்கை.

சிறையில் இருந்து வெளியே வந்ததும், முன்பொரு நாள் ஒரு பெரியவர் தூக்கிட்டு இறந்த அதே அறையில் ரெட் தங்க நேர்கிறது. அந்தப் பெரியவரின் முடிவையே எடுக்க நினைக்கும் ரெட், அதை மறந்து தன் நண்பன் ஆண்டியைத் தேடிச் செல்கிறார்.


பார்க்க வேண்டிய படம்.

படங்கள்: இணையத்தில் இருந்து...

******

Friday, January 24, 2014

பாலுமகேந்திரா - சந்தியா ராகம்

கிராமத்தில் வாழ்ந்த முந்தைய தலைமுறைக்கும், சின்ன வாடகை வீட்டில் நகரத்துக்கே உரிய பிரச்சினைகளுடன் வாழும் இன்றைய தலைமுறைக்கும் இடையே உள்ள இடைவெளியே சந்தியா ராகம்.

இந்தப் படத்தில் வரும் கிராமத்தை, இப்பொழுது தேடினால் கூட கிடைக்காது.
சொக்கலிங்க பாகவதர், அவரின் மனைவி, மகன், மருமகள், பேத்தி, குடியிருப்பில் வசிக்கும் மக்கள் என எல்லாரும் நாம் சந்தித்த மக்கள் தான்.

பகுதி-1



பகுதி-2



பகுதி-3



பகுதி - 4




Part 1 - http://www.youtube.com/watch?v=RlSsmZKvADo
part 2 - http://www.youtube.com/watch?v=PQnrU7vwnB0
part 3 - http://www.youtube.com/watch?v=sVKlo0pECHA
part 4 - http://www.youtube.com/watch?v=oJXSjXq6DL8


Wednesday, October 9, 2013

சினிமா - சிட்டி லைட்ஸ்(City Lights - Charlie Chaplin)



சார்லி சாப்ளினின் படைப்புகளில் மிக முக்கியமான படைப்பு சிட்டி லைட்ஸ். அடுத்தவனைப் பற்றி கவலை படாத மனிதர்களுக்கு மத்தியில், சக உயிர்களின் மீது அன்பு செலுத்துவதைப் பற்றி தம் படங்களில் போதித்தார். நகைச்சுவை என்பது சிரிக்க மட்டும் இல்லாமல் சிந்திக்கவும் செய்த மாபெரும் மனிதன். உலகை தனது நடிப்பின் மூலம் திரும்பி பார்க்க வைத்தவர்.

சிட்டி லைட்ஸ்:

ஓரிடத்தில் ஒரு கண் தெரியாத பெண்ணை சாப்ளின் பார்க்க நேரிடுகிறது. அவளை பற்றி மிகவும் கவலை கொள்கிறார் சாப்ளின். அந்த பெண் பூ விற்று தனது பாட்டியுடன் வாழ்க்கையை நடத்தி வருகிறாள் என்பதை அறிந்து கொள்கிறார்.

ஒரு நதியின் ஓரத்தில் அமர்ந்திருக்கும் பொழுது ஒரு பணக்காரன் தற்கொலைக்கு முயல, அதை தடுக்கிறார் சாப்ளின். அவரை காப்பாற்றப் போய் சாப்ளின் தண்ணிக்குள் விழுவது, பிறகு இருவரும் சேர்ந்து விழுவது, எப்படியோ இருவரும் மேலே ஏறி வருகிறார்கள். பின்னர் அந்த பணக்காரன் தனது வீட்டுக்கு சாப்ளினை அழைக்க, அவரும் செல்கிறார். போதையில் இருக்கும்பொழுது எல்லாவற்றையும் அள்ளிக் கொடுக்கும் பணக்காரன், போதை தெளிந்ததும் சாப்ளினை யார் என்றே தெரியாது என்று சொல்லிவிடுகின்றான்.

அந்தப் பணக்காரன் வீட்டில் சாப்ளின் தங்கியிருக்கும் ஒரு நாள் காலையில், அந்த வீதி வழியாக அந்த பெண் பூ விற்று கொண்டிருக்கிறாள். அவளை பார்த்ததும் அவருக்கு எல்லா பூக்களையும் வாங்க வேண்டுமென்று ஆசை. செல்வந்தனிடம் சொல்ல, அவனும் பணத்தை எடுத்து நீட்டுகிறான், அத்தனை பூக்களையும் அவரே வாங்கிக்கொள்ள, அப்பெண் மிக்க சந்தோசபடுகிறாள். உடனே சாப்ளின் உன்னை என் காரில் வீட்டில் விட்டு விடுகிறேன் என்று கூற, அவளும் சரி என்று கூறுகிறாள். அப்பெண்ணை வீட்டில் விட்டு விட்டு திரும்பி விடுகிறார் சார்லி. தவறுதலாக அப்பெண், சார்லியை மிகப் பெரிய பணக்காரன் என்று நினைத்து, மிக்க மகிழ்ச்சியுடன் தனது பாட்டியுடன் அவனைப் பற்றி கூறுகிறாள்.

பணக்காரன் வீட்டுக்கு திரும்பி வந்தால் அவனுக்குப் போதை தெளிந்து, சார்லியை விரட்டி விடுகிறார்கள். வேலை தேடி அலையும் சார்லியை, மீண்டும் பணக்காரன் சந்திக்கிறான். இப்பொழுது திரும்பவும் வீட்டுக்கு அழைக்க, இவர் மறுக்க, அவன் வற்புறுத்த, திரும்ப அவன் வீட்டுக்கு செல்கிறார். அடுத்த நாள் போதை தெளிந்ததும், வழக்கம் போல அந்தப் பணக்காரன் வீட்டில் இருந்து விரட்டப்படுகிறார்.


இரவில் பணக்காரன் வீட்டுக்கு செல்வதும், காலையில் அடித்து விரட்டுவதுமாக போகின்றன நாட்கள். ஒருநாள் அப்பெண் குடியிருக்கும் வீட்டுக்கு வாடகை கட்டாததால் வீட்டை காலி செய்ய நோட்டீஸ் குடுத்து விட்டு போய்விட்டார்கள். பாட்டி அதை அப்பெண்ணிடம் சொல்லாமல் மறைத்து விடுகிறார். அப்பொழுது அங்கே வரும் சார்லி, அதை பார்த்து விட்டு எல்லாவற்றையும் நான் பார்த்து கொள்கிறேன் என்கிறார். கூடவே, ஒரு கண் டாக்டர் ஊருக்கு வந்திருப்பதாகவும், அவரிடம் கூட்டி சென்று பரிசோதித்து கண் குறைபாட்டை போக்க தான் உதவுகிறேன் என்றும் சொல்கிறார் சார்லி. அவர்தான் பெரிய பணக்காரர் ஆயிற்றே என்று அப்பெண்ணும் மகிழ்ச்சி அடைகிறாள்.

சாப்ளின் ஒரு வேலைக்குச் செல்ல, அங்கே இருக்கும் ஆள் துரத்தி விடுகிறான். சரியென்று ஒருவன் பாக்சிங் விளையாட்டுக்கு கூப்பிட, ஒல்லி உடம்பை வைத்து கொண்டு பணத்துக்காகச் சரி என்கிறார். கடைசி வரை முட்டி மோதியும் அதிலும் தோல்வி. பாக்சிங் காட்சிகளில் நீங்கள் நிச்சயமாக சிரிப்பீர்கள்.


பணம் தேவைப்படுவதைப் பணக்காரனிடம், சொல்ல அவனும் பணம் தருகிறான். ஆனால் அங்கு நடந்த குழப்பத்தில், இவர் பணத்தை திருடி விட்டுப் போவதாக போலீஸ் சந்தேகப்படுகிறது. குடிகாரப் பணக்காரன் போதையில் உறங்கி விட்டான். வேறு வழி இல்லாமல், பணத்துடன் தப்பி விடுகிறார் சார்லி. அப்பெண்ணின் வீட்டுக்கு வந்து அப் பணத்தை கொடுத்துவிட்டு, இதை ஆபரேஷன் மற்றும் வீட்டு செலவுக்கு வைத்துகொள், நான் சீக்கிரமாக திரும்ப வருவேன் என்று கூறிவிட்டு சிறை செல்கிறார் சாப்ளின்.

சிறை வாசம் முடிந்ததும், அப்பெண் பூ விற்று கொண்டிருந்த பழைய இடத்துக்கு வருகிறார் சாப்ளின். அங்கே அப்பெண் இல்லாததைக் கண்டு வீதியில் நடக்க ஆரம்பிக்கிறார். அழுக்கான உடை, பார்த்தால் பைத்தியம் போலிருக்கும் அவரை சீண்டுகிறார்கள் தெருப் பையன்கள். அப்பொழுது கீழே கிடந்த ஒரு ரோஜா பூவை எடுக்கிறார் சார்லி.

இதை பக்கத்துக்கு கடையில் இருந்து ஒரு பெண் பார்த்து சிரித்து கொண்டிருக்கிறாள். அவள்தான் அக்கடையின் முதலாளி. கடைக்கு வரும் பணக்காரர்கள் ஒவ்வொருவர் முகத்திலும் சார்லியை தேடிக் கொண்டிருக்கிறாள் அப்பெண். அவள் வேறு யாருமல்ல, சாப்ளின் உதவிய அதே பெண்தான். அப்பெண்ணுக்கு இப்பொழுது பார்வை திரும்பி விட்டது.

அவள் சாப்ளினைக் கூப்பிட, சார்லி திரும்பி அவளை பார்த்ததும் புரிந்து கொள்கிறார். அப்பெண் சாப்ளினை அழைத்து காசு கொடுக்க வேண்டாமென்று கூறிவிட்டு கடைக்கு ஓரத்தில் கூச்சமாக நிற்கிறார். அப்பெண் காசுடன் ஒரு ரோஜா பூவையும் எடுத்து கொண்டு வா என்று கூப்பிட, சார்லி தயங்கி தயங்கி நகர்கிறார். அப்பெண் சார்லியின் கையை இழுத்து, கையில் ரோஜாவையும் காசையும் வைக்கும் பொழுது ஏதோ தட்டுப்பட, அதிர்கிறாள் அப்பெண்; தொடுதல் மூலம் இது சார்லிதான் என்று புரிந்துகொள்கிறாள்

"You ? " - அப்பெண்
"You can see now.." - சார்லி
"Yes..i can see now.. " - அப்பெண்



இருவர் கண்களிலும் ஒரு ஒளி வந்தது போல இருக்கும் அக்காட்சியில். நமக்கு கண்ணில் நீர் வழிந்து கொண்டிருக்கும் போது படமும் முடிந்து விடுகின்றது.

காதலையும், காமெடியும் கலந்து நமக்கு ஒரு காவியத்தை படைத்து தந்த சாப்ளினுக்கு என்றும் தலை வணங்குவோம்.





சாப்ளின் படங்களைப்  பற்றி நான் எழுதிய பதிவுகளின் சுட்டிகள்:
சினிமா - மாடர்ன் டைம்ஸ் (Modern Times)
தி சர்க்கஸ் (The Circus)
தி கோல்ட் ரஷ் (The Gold Rush - Charlie Chaplin)


Friday, August 30, 2013

சினிமா: தி பாய் இன் தி ஸ்ட்ரிப் பைஜாமா(The Boy in the Striped Pyjamas)

யூத மக்களுக்கு, ஹிட்லர் அரசு செய்த கொடுமைகளை வைத்து பல படங்கள் வந்துள்ளன. ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட் (Schindler's List), லைப் இஸ் பியுட்டிபுல் (Life Is Beautiful)   போன்ற படங்கள் அவற்றில் சில. இந்த இரண்டு படங்களையும் போலவே, 'தி பாய் இன் தி ஸ்ட்ரிப் பைஜாமா' படமும் யூத மக்களின் துயரங்களையும், அவர்கள் சந்தித்த இன்னல்களையும் நம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறது.

எட்டு வயதுச் சிறுவன் புருனோ. அவனை விட நான்கு வயது மூத்த அக்கா அவனுக்கு உண்டு. அவன் தந்தை ஹிட்லரின் படையில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். அவன் தந்தை, பதவி உயர்வினால் வேறு ஊருக்கு மாற்றப்படுகிறார். புருனோவுக்கு இந்த ஊரையும், அவன் நண்பர்களையும் விட்டுப் பிரிய மனமில்லை. அவனது அம்மா எல்சா, அவனை சமாதானம் செய்கிறாள்.


நீண்ட தூரம் பயணித்து, புதிய இடத்துக்கு வந்து சேர்கிறார்கள். ஒரு காடு போல இருக்கும் பாதையில் அவர்களின் புதிய வீடு அமைந்து இருக்கிறது. பழைய ஊரில், தன் நண்பர்களோடு சுற்றித் திரிந்த புருனோவுக்கு தன்னந் தனியாக அமைந்து இருக்கும் இந்த வீடு பிடிப்பதில்லை. இவனுக்கோ வெளியே சுற்ற வேண்டும் என்பது ஆசை. அவனின் அக்காவோ, தனது பொம்மைகளுடன் நேரத்தை போக்குகிறாள். அவளுடன், புருனோ விளையாட விரும்புவதில்லை.

எந்நேரமும் காவல் உண்டு. பக்கத்தில் வீடுகள் இல்லை. வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது. தன் அறையில் இருந்த, ஜன்னல் மூலம், தூரத்தில் இருக்கும் சில  வீடுகள் போன்ற கட்டிடங்களைப் பார்க்கிறான். 'அங்கே பண்ணை வீடுகளில், விவசாயிகள் இருப்பார்கள்.. அங்கே எனக்கு நண்பர்களும் கிடைப்பார்கள்' என்று வீட்டில் உள்ளோரிடம் விசாரிக்கிறான். அதற்கு  அடுத்த நாளே அந்த ஜன்னல் அடைக்கப் படுகிறது.

வீட்டில் வயதான ஒரு யூத கைதி(பாவெல்) வேலை செய்கிறார். யாரும் இல்லாத பொழுது, புருனோ கீழே விழுந்து அடி பட, அவன் காயத்துக்கு அவர் மருந்து போடுகிறார். 'பயப்பட வேண்டாம்.. நாளைக்கு சரியாப் போகும்' என்கிறார் அவர். 'அது எப்படி உங்களுக்குத் தெரியும்?.. நீங்கள் டாக்டரா?' எனக் கேட்கிறான். 'ஆம், நான் டாக்டர்தான்' என்கிறார் அவர். 'நான் நம்ப மாட்டேன்.. பிறகு ஏன், நீங்கள் உருளை கிழங்கின் தோல்களை உரித்துக் கொண்டிருக்க வேண்டும்' என்று கேட்க, ஒரு நிமிடம் நிமிர்ந்து பார்க்கும் அவர்.. பேச்சை வேறு திசைக்கு மாற்றி விடுகிறார்.


புருனோவுக்கு, இன்னும் நேரம் போவதில்லை. வீட்டுக்கே வந்து சொல்லித் தரும் வாத்தியாரும், இன வரலாறு, யூத மக்களின் மீதான வெறுப்பு என்றே சொல்லித் தருகிறார். ஒரு பெரிய புத்தகத்தைக் கொடுத்து அவனைப் படிக்கச் சொல்கிறார். ஆனால், வெளியே சுற்ற வேண்டும், நிறையப் பேருடன் பழக வேண்டும் என்றே ஆவலுடன் இருக்கிறான்.

ஒருநாள் வீட்டில் யாரும் கவனிக்காத நேரம், வீட்டின் பின்னால் பழைய பொருட்கள் போட்டு வைக்கும் அறையின் ஜன்னல் வழியாக அந்தப் பக்கம் போகிறான். சிறு ஓடைகள், செடிகள் என்று அவன் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறான். அந்த இடத்தில், ஒரு முள் வேலியிட்ட சில கட்டிடங்கள் தெரிகிறது. முன்னர் அவன் ஜன்னல் வழியாக பார்த்த இடங்கள் தான். பக்கத்தில் செல்லும் போதுதான் கவனிக்கிறான், முள் வேலிக்கு அந்தப் பக்கம் ஒரு சிறுவன் அமர்ந்து இருக்கிறான். புருனோ ஹலோ என்கிறான். அவனும் பதில் சொல்கிறான்.
'என் பெயர் புருனோ'
'நான் இந்தப் பெயரைக் கேள்விப்பட்டதில்லை..என் பெயர் சாமுவேல்'
'இதற்கு முன்னர், நானும் சாமுவேல் என்கிற பேரைக் கேள்விப்பட்டதில்லை.. '
'சாப்பிட எதாவது வைத்து இருக்கிறாயா?'  என்கிறான் சாமுவேல்.
' இல்லை.. உனக்கு மிகவும் பசிக்கிறதா?.. சரி.. நீ யாருடன் விளையாடுவாய்?' எனக் கேட்கிறான் புருனோ
'விளையாட்டா ? நாங்கள் இங்கே புதிய குடிலைக் கட்டிக் கொண்டு இருக்கிறோம்' எனச் சொல்லும் சாமுவேல், வேலை செய்து கொண்டிருக்கும் எல்லாப் பெரியவர்களும் கிளம்புவதால், இவனும் தன் மண் வண்டியைத் தள்ளிக் கொண்டு ஓடுகிறான்.



அடுத்த தடவை புருனோ போகும் பொழுது, சாக்லேட் மற்றும் சில தின்பண்டங்களையும் கொண்டு செல்கிறான்.
'ஏன், நீங்கள் எல்லோரும் ஒரே மாதிரியான ஆடையை அணிந்து இருக்கிறீர்கள்.. எங்கள் வீட்டிலும் பாவெல் இந்த மாதிரிதான் உடை அணிகிறார்'
'நாங்கள் யூத இனம்' என்கிறான் சாமுவேல். அப்படி என்றால், என்னவெனத் தெரியாமல் அவனைப் பார்க்கிறான் புருனோ.

புருனோவின் அம்மா எல்சா, ஒரு நாள் கடைக்குப் போய்விட்டு வந்து, வீட்டின் முன் காரை விட்டு இறங்குகிறாள். காரை ஓட்டி வந்த காவலரிடம், தூரத்தில் சிம்னி வழியாகப் போகும் புகையைக் குறிப்பிட்டு 'தாங்க முடியவில்லை.. இது என்ன எப்படி நாறுகிறது' என்கிறாள். அதற்கு அவன் 'அவர்களை எரிக்கும் போது அப்படிதான் நாறும்' என்கிறான். அதைக் கேட்டதும் பிரமை பிடித்தவளாக, கணவனுடன் சென்று சண்டை போடுகிறாள். அவனோ, இது அரசாங்க கட்டளை, அதை நிறைவேற்றுவது என் கடமை எனச் சொல்கிறான்.



சில நாட்கள் கழித்து, சாமுவேல் ப்ருநோவின் வீட்டுக்கு வேலைக்கு அனுப்பப் படுகிறான். நண்பனைப் பார்த்த மகிழ்ச்சியில், அவனுக்கு சாப்பிடத் தருகிறான் புருனோ. இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது அங்கே வரும் காவலன் 'யார் இதைக் கொடுத்தது.. திருடித் தின்கிறாயா?' என்று திட்ட, 'இவன் என் நண்பன், இவன்தான் கொடுத்தான்' என்கிறான் சாமுவேல். 'என்ன.. இவன் உன் நண்பனா?' என்ற காவலன், புருநோவிடம் 'இவனை உங்களுக்கு முன்னரே தெரியுமா?' எனக் கேட்கிறான். 'இல்லை.. இதற்கு முன்னர் நான் இவனைப் பார்த்ததில்லை' என்கிறான் புருனோ. 'திருடுவது தவறு.. அதற்கு உரிய தண்டனையை அடைய வேண்டும்.. நீங்கள் வாருங்கள், போகலாம்' என்றவாறு, புருனோவை அவன் அழைத்துச் செல்கிறான். தன் அறைக்குச் சென்று அழும் புருனோ, திரும்ப சாமுவேலைப் பார்க்க ஓடி வர,அங்கே அவன் இல்லை.

இரண்டு மூன்று முறை அந்த கம்பி வேலி அருகில் போய்ப் பார்க்கிறான் புருனோ. இரண்டு நாட்கள் கழித்து சாமுவேல், அங்கே கண்ணில் காயத்தோடு அமர்ந்து இருக்கிறான். அவனிடம் மன்னிப்பு கேட்கும் புருனோ, நாம் மீண்டும் நண்பர்களாக இருப்போம் என்கிறான். சாமுவேலும் சரி என்கிறான்.



இதற்கு இடையில் புருனோவின் அம்மா எல்சா, எப்பொழுதும் கணவனை எரித்து விடுவது போலப் பார்க்கிறாள். இந்தக் கொடுமைகளை நினைத்து அவள் நிம்மதியாய் இருப்பதில்லை. ஒரு நாள், ஒரு டாகுமெண்டரி படம் பார்க்க சில உயர் அதிகாரிகள் வருகிறார்கள். ஒரு பெரிய அறைக்குள் சென்று, அவர்கள் அமர்ந்தவுடன் கதவுகள் மூடப் படுகிறது. படம் திரையிடப் படுகிறது. முகாம்களில் எல்லா வசதிகளும் செய்யப் பட்டுள்ளது எனவும், எந்தக் குறையும் இல்லை போலவும் படத்தில் காட்டுகிறார்கள். குழந்தைகள் விளையாடுகிறார்கள். செடி வளர்க்கிறார்கள். விரும்பியதை உண்கிறார்கள். மொத்தத்தில் சந்தோசமாக இருக்கிறார்கள், என விளக்குகிறது படம். ஒரு சேரின் மேலே ஏறி இந்தப் படத்தை பார்த்து விடுகிறான் புருனோ. சாமுவேல் இருக்கும் இடத்திலும் இந்த மாதிரிதான் இருக்கும் என அவன் மனது நினைக்கத் தொடங்குகிறது.

புருனோவின் பாட்டி இறந்து விட, இறுதிச் சடங்குக்குச் சென்று வருகிறார்கள். புருனோ, சாமுவேலிடம் 'நீ ஏதாவது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டிருக்கிறாயா?'.. ' இல்லை, இங்கே வந்ததும் என் தாத்தாவும் பாட்டியும் இறந்து விட்டார்கள்.. பின்னர், அவர்களைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது' என்கிறான் சாமுவேல்.

 
வீட்டிலோ, எல்சா கணவனுடன் சண்டை போடுகிறாள். என்னால் இங்கே இருக்க முடியாது, நாங்கள் கிளம்புகிறோம் என்கிறாள். அடுத்த நாள் காலை, சிறுவர்கள் இருவரையு  அழைத்துப் பேசும் புருனோவின் அப்பா, 'அம்மா இங்கே இருக்க மறுக்கிறாள். எனக்கு இங்கே கொஞ்சம் வேலை இருக்கிறது, முடித்துவிட்டு வருகிறேன். நீங்கள் அத்தை வீட்டில் சென்று கொஞ்ச காலம் இருங்கள்' என்கிறார். புருநோவுக்கு, திரும்பவும் ஒரு நண்பனை இழக்க வேண்டுமே எனக் கவலை ஏற்படுகிறது.

சாமுவேலிடம், நான் ஊரை விட்டுப் போகப் போகிறேன் எனச் சொல்கிறான். அவனோ, என் அப்பாவை காணவில்லை, எங்கே தேடுவது எனத் தெரியவில்லை என்கிறான். 'சரி நான் உனக்கு உதவுகிறேன்.. உன்னைப் போல எனக்கு ஒரு பைஜாமா கொண்டு வந்து கொடு.. இருவரும் சேர்ந்து உன் அப்பாவைத் தேடுவோம்' என்கிறான் புருனோ.


 அடுத்த நாள், கொஞ்ச நேரம் விளையாடி விட்டு வருகிறேன்.. என எல்சாவிட்ம் சொல்லி விட்டு அந்த முள் வேலிக்கு போகிறான். அங்கே, ஒரு பைஜாமா மேல் இன்னொரு பைஜாமா போட்டுக் கொண்டு, அவனுக்காக காத்திருக்கிறான் சாமுவேல். அவனைப் பார்த்ததும் ஒரு பைஜாமாவைக் கழட்டி, புருனோவுக்குத் தருகிறான். அவனும் அதை அணிந்து கொண்டு, கம்பிக்கு கீழே மண்ணைத் தோண்டி அந்தப் பக்கம் போகிறான் புருனோ. உள்ளே சென்றதும், சாமுவேலின் அப்பாவைத் தேடத் தொடங்கி ஒரு அறைக்குள் செல்கிறார்கள். உடனே, அங்கே வரும் ஒரு காவலர் எல்லாரையும் இன்னொரு அறைக்கு கூட்டிச் செல்கிறார். அந்தக் கூட்டத்துக்குள் மாட்டிக் கொள்ளும் இருவரும், கும்பல் செல்லும் வழியிலே நகர்கிறார்கள். இன்னொரு அறைக்கு வந்ததும், உடையை கழட்டச் சொல்லவும், எல்லோரும் அந்த பைஜாமாவைக் கழட்டி விட்டு.. இரும்புக் கதவு போடப் பட்ட ஒரு இடத்துக்குப் போகச் சொல்கிறார்கள். அங்கே அனைவரும் சென்றதும், அந்தக் கதவு தாழிடப் படுகிறது. மேலிருந்து, விஷ வாயு செலுத்தப்படுகிறது.

புருனோவைக் காணாமல் தேடிக் கொண்டிருக்கும், அவன் அப்பா அந்த அறையையே பார்த்துக் கொண்டிருக்கிறார். முள் வேலிக்கு அந்தப் பக்கம், அவன் போட்டுவிட்டுச் சென்ற துணிகளைப் பார்த்து  அழுது கொண்டிருக்கிறார்கள் அம்மாவும், அக்காவும்.

Wednesday, July 10, 2013

சினிமா: தி சைக்ளிஸ்ட் (The Cyclist)

ஏழையாய் இருப்பது கொடுமை. அதிலும், இன்னொரு நாட்டில் அகதியாய், ஏதும் செய்ய  இயலாமல் இருப்பது அதை விட கொடுமை.  ஈரான் நாட்டில், ஆப்கன் அகதியாய்த் தங்கி இருக்கும் ஒரு குடும்பத்தைப் பற்றிய கதை இது. இந்தப் படத்தின் இயக்குநர்  மோசென் மக்மல்பப்.



கணவன், மனைவி மற்றும் ஒரு பையன் என சிறு குடும்பம் தான். மனைவி, மிகுந்த உடல் பிரச்சினை காரணமாக, மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருக்கிறார். தினமும் இவ்வளவு செலவாகும் என்று மருத்துவமனையில் சொல்கிறார்கள். கையில் கொஞ்சம் கூட பணம் இல்லை. இருக்கும் கொஞ்சம் பணமும் ஆப்கன் நோட்டுகளாக இருக்கிறது. வேலை தேடிப்  போனாலும் அவ்வளவு பணம் கிடைப்பது கஷ்டம்.  ஆப்கன் அகதிகளுக்கு மிக குறைந்த சம்பளமே குடுப்பார்கள்.

அப்பாவும், பையனும் சேர்ந்து கிணறு வெட்டுவார்கள். ஆனால் அந்த வேலைக்கும் அடிதடி. தங்கள் நண்பரான, சர்கஸில் மோட்டார் பைக் ஓட்டும் நண்பரைத் தேடிச் செல்கிறார்கள். முதல் நாள் மருத்துவமனையில் சேர்க்க உதவி செய்யும் அவர், வேலை வாங்கித் தர முயற்சிக்கிறார்.

அந்த நண்பர், ஒரு சர்கஸ் ஏஜென்டிடம் அழைத்து செல்கிறார். "இவர் ஆப்கன் நாட்டில் சைக்கிள் சாம்பியன். விடாமல் மூன்று நாள் சைக்கிள் ஓட்டிச் சாதனை புரிந்தவர், இப்பொழுது பணத்துக்கு மிகவும் கஷ்டப் படுகிறார். நீங்கள் உதவ வேண்டும்" என அவரிடம் சொல்ல, அந்த ஏஜென்ட் "ஏழு நாட்கள் இரவு , பகல் தொடர்ந்து சைக்கிள் ஓட்ட முடியுமா?" எனக் கேட்கிறார்; அதற்கு அவர் ஒப்புக் கொள்கிறார்.

ஏஜென்ட், சூதாட்ட நபர்களிடம் சென்று சைக்கிள் சாம்பியன் பற்றிச் சொல்லவும், அவர்களும் சரி என்கிறார்கள். ஏஜென்ட், தனது சர்கஸ் கூடாரத்தில் இருந்து பழைய சைக்கிள் ஒன்றை எடுத்துத் தருகிறார்.  சூதாட்ட நபர்கள்  பெட்டிங் பணம் கட்டுகிறார்கள்.


முதல் நாள் சைக்கிள் விடுகிறார் சாம்பியன். ஏஜென்ட், சர்கஸ் பார்க்க வருபவர்களிடம் டிக்கெட் கொடுத்து பணம் வசூல் செய்கிறான். அந்த மைதானத்தைச் சுற்றி கடைகள் முளைக்கின்றன. இரண்டு அணியினரின், ஆம்புலன்ஸ் வண்டிகளும் நிறுத்தப் படுகின்றன. நடுவர் ஒருவர் அமர்த்தப் படுகிறார். அப்பொழுதுதான், அவரின் பெயர் நசீம் என்று சொல்கிறான் ஏஜென்ட்.

மூன்றாவது நாள் இரவு, சைக்கிள் ஓட்ட முடியாமல் தடுமாறுகிறார் நசீம். எல்லோரும் தூங்கச் சென்று விடுகிறார்கள். நடுவரும், அமர்ந்தவாறே, தூங்கிக் கொண்டிருக்கிறார்.  எவ்வளவோ முயற்சி செய்தும், கண் இமைகள் கண்களை மூடிக் கொண்டு விடுகின்றன. சைக்கிளில் இருந்து கீழே விழுந்து விடுகிறார் நசீம். அப்பொழுது அங்கே ஒரு வாத்தியம் இசைத்துக் கொண்டிருக்கும் ஒரு பார்வையற்ற கலைஞன் அதைப் பார்த்து விடுகிறான்.

கீழே விழுந்ததும், நசீமின் மோட்டார் சைக்கிள் விடும் நண்பன் அங்கேயே படுத்து இருந்ததால், ஓடி வருகிறார். அங்கே வரும் ஏஜென்ட், நண்பனை சைக்கிள் விடச் சொல்கிறார். முகம் தெரியாமல் இருக்க, சால்வையை முகத்தில் போடச் சொல்கிறான் ஏஜென்ட். நண்பனும் அவ்வாறே சைக்கிள் விடுகிறார். தூக்க கலக்கத்தில் முழித்து பார்க்கும் நடுவர், அப்படியே மீண்டும் தூங்கி விடுகிறார்.



ஏஜென்ட், அந்தப் பார்வையற்ற கலைஞனிடம் சென்று, "இதை வெளியே சொன்னால், நான் உன் கழுத்தை அறுத்து விடுவேன். அதோடு இல்லாமல், உனக்கு கண் தெரியும்  என்பதையும் சொல்லி விடுவேன்" என மிரட்ட,  அதற்கு, அவன் "நானும் அவன் மேல், அவன் ஜெயிப்பான் என்று பெட் கட்டி இருக்கிறேன்." எனக் கூறுகிறான்.

அந்த மைதானத்தில் கைரேகை பார்க்கும் ஒரு பெண் இருக்கிறாள். அவளுக்கு ஒரு பெண் குழந்தையும் உண்டு. ஏஜென்ட், அவளிடம் நெருங்கிப் பழகுகிறான். இந்த சர்கஸில் பணம் கிடைத்தால், நான் உன்னை கல்யாணம் செய்து கொள்வேன் என்கிறான். அவளும் சரி என்கிறாள்.

மோட்டார் சைக்கிள் ஓட்டும் நசீமின் நண்பன், தான் மோட்டார்  சைக்கிள் விடும் மரத்தாலான அந்த வட்டக் கிணற்றுக்குள் படுத்து இருக்கிறான். இரவில், நசீமுக்காக சைக்கிள் விடுவதால், தூங்கிக் கொண்டிருக்கிறான். அப்பொழுது, அங்கே வரும் அவன் முதலாளி, "நான் டிக்கெட் விற்று இருக்கிறேன். நீயோ தூங்கிக் கொண்டிருக்கிறாய். எழுந்து பைக் ஓட்டு " எனச் சொல்கிறான். முதலில் நன்றாகவே பைக் ஓடிக் கொண்டிருக்க , ஒரு கட்டத்தில் விபத்து ஏற்பட்டு அடி படுகிறார். இப்பொழுது நசீமை வந்து பர்ர்க்க, அந்த நண்பனும் இல்லை.



ஒரு பக்கம், இந்த சைக்கிள் ஓட்டத்தை நிறுத்த ஒரு கும்பல் போராடுகிறது. இன்னொரு பக்கம், நசீமை சைக்கிளில் இருந்து இறங்க விடாமல் ஒரு கூட்டம். இரண்டும் எதிர், எதிர் அணியில் சூதுப் பணம் கட்டியவர்கள்.

ஐந்தாம் நாள் இரவு, நசீமுக்கு ரொம்ப முடியாமல் ஆகிறது. தீக்குச்சி போன்ற சிறிய குச்சிகளை, இமைகளுக்கு முட்டு கொடுத்து கொஞ்ச நேரம் சமாளிக்கிறார். ஆனாலும் முடியவில்லை. வாளித் தண்ணீரை வீசி அடிக்கிறார்கள். சிறுவன் ஜோமியோ, நசீமை அறைந்து கொண்டே இருக்கிறான் தூங்காமல் இருக்க. எப்படியோ அந்த இரவும் கழிகிறது.

ஆறாவது நாளும் கழிகிறது. குளுகோஸ் பாட்டிலை சைக்கிளில் மாட்டி விடுகிறார்கள்.  ஏஜென்ட், சுற்றிலும் கடை போட்டு இருப்பவர்களிடம் வாடகை வசூல் செய்கிறான். ஒரு முதியவள், நசீமுக்காக கொண்டு வந்து  கொடுக்கும் நகையை வாங்கி வைத்துக் கொள்கிறான் ஏஜென்ட்.

ஏழாவது நாள் காலையில் ஏஜென்ட், ரேகை பார்க்கும் பெண் மற்றும் அவள் குழந்தையுடன், "எதையாவது மறந்து விட்டாயா?" என்று கேட்டவாறு , சாமான்கள் ஏற்றிய ஒரு வண்டியில் ஏறி அமர்கிறான். ஆம், அவன் இங்கே சம்பாதித்த பணத்தைக் கொண்டு புது வாழ்க்கை வாழ கிளம்பி விட்டான். சிறுவன் ஜோமியோ, தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஆப்பிளை, அந்தச் சிறு பெண் குழந்தைக்கு ஓடிச் சென்று குடுக்கிறான். குழந்தைகள் இருவரும், கையசைத்து விடை பெறுகிறார்கள்.


சைக்கிள் பந்தயம் முடியும் நேரம் நெருங்குகிறது. எல்லோரும், "பந்தயம் முடிந்தது நசீம்" என்று கத்துகிறார்கள். ஆனால், நசீமோ அது காதில் விழாதவாறு தொடர்ந்து சைக்கிள் விட்டுக் கொண்டிருக்கிறார். சிறுவன், "அத்தா.. பந்தயம் முடிஞ்சுருச்சு.." என்று சைக்கிள் முன்னால் கத்திக் கொண்டு ஓடுகிறான். யாருடைய  குரலும் அவருக்கு எட்டவில்லை.

மருத்துவமனையில் இருக்கும் தன் மனைவியின் நினைவு வருகிறது. தொடர்ந்து பெடலை அழுத்திக் கொண்டே இருக்கிறார். மைதானம் முழுவதும் நிரம்பி இருக்கும் மக்கள் "பந்தயம் முடிந்தது" என்று கத்துகிறார்கள். நசீமின் சைக்கிள் இன்னும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது.


************************
* ஒரு பெரியவர் பேருந்துக்கு அடியில் படுத்துக்கொள்கிறார். பேருந்து கிளம்பும்போது, பெரியவரைக் கவனிக்கும் அவர்கள், அவரை வெளியே இழுத்து, அடிக்கிறார்கள். கூட்டத்தில் ஒருவன், அந்த பெரியவருக்கு கொஞ்சம் பணம் கொடுக்கிறான். அதைக் கவனிக்கும் நசீமும், பையனும் அது போலவே முயற்சி செய்ய, வெறும் அடி மட்டும் கொடுத்து துரத்தி விடுகிறார்கள்.

* சைக்கிள் சாம்பியனை வாழ்த்த, பள்ளிச் சிறுவர்களைக் கூட்டி வருகிறார் ஒருவர். சிறுவர்கள், சாம்பியனை வாழ்த்த ரோஜாப் பூக்களை வீசுகிறார்கள். கீழே கிடக்கும், அந்தப் பூக்களின் மேல் படாமல், சைக்கிள் விடுவார் நசீம்.

* இரவு நேரத்தில் சைக்கிள் ஒட்டிக் கொண்டிருக்கும்பொழுது, பையன் அந்த மைதானத்தில் உள்ள பெஞ்சில் தூங்கிக் கொண்டிருப்பான். பாசமுள்ள தந்தையாக, தனது மேல் கோட்டைக் கழட்டி, பையன் மேல் போட்டுவிட்டு சைக்கிள் ஓட்டுவார் நசீம்.

* கொஞ்சம் பணம் கிடைத்ததும் மருத்துவமனையில் இருக்கும் தனது அம்மாவுக்கு பணம் கட்டச் செல்வான் சிறுவன். அங்கே, இன்னும் பணம் கட்டாததால், செயற்கை சுவாசத்தை நீக்கி இருப்பார்கள். பையன் பணம் கட்டியதும், உடனே பொருத்துவார்கள். உடனே உணவும் கொடுப்பார்கள். எந்த நாடானால் என்ன, மருத்துவமனை எல்லாம் ஒன்று போலதான் இருக்கிறது.

* இன்னொரு நாள், சிறுவனும், கைரேகை பார்க்கும் பெண்ணின் பெண் பிள்ளையும் மருத்துவமனைக்கு செல்வார்கள். அந்த பெண் குழந்தையைப் பார்க்கும் நசீமின் நோயாளி மனைவி, தன் தலையிலிருக்கும் முடி கிளிப்பை, அந்தச் சிறுமியின் தலையில் குத்தி விடுவாள்.

* நம்மில் பெரும்பான்மையோருக்கு, வறுமையும், இந்த உலகத்தை எதிர்கொள்ள முடியாமையும், வாழ்க்கையில் பெரும் பாரமாக இருக்கிறது. மனைவியை காப்பாற்ற சைக்கிள் பந்தயத்துக்கு ஒத்துக் கொள்ளும் நசீம், ஏழு நாள் முடிந்தும் அந்த சைக்கிளை விட்டு வெளியே வர முடியவில்லை. அவரை வைத்து சம்பாதித்தவர்கள் எல்லாம், விட்டு விலகிப் போய் விடுகிறார்கள். நசீமைப் போல, நம்மில் எத்தனை பேர் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் இந்த வாழ்க்கை போராட்டம் நிரம்பியதாகவே இருக்கிறது.




Friday, April 12, 2013

சினிமா - மாடர்ன் டைம்ஸ் (Modern Times)



சென்னை, திருப்பூர் போன்ற நகரங்களில் காலை நேரங்களில் (உங்களுக்கு நேரமிருந்தால் !) சாலைகளை உற்றுப் பாருங்கள். வேகமாக மக்கள் ஓடிக் கொண்டிருப்பார்கள். கொஞ்சம் தாமதித்தால் முதலாளிகள் அல்லது மேலாளர்களிடம் திட்டு கிடைக்கும். எனவே அந்த தாமதம் தவிர்க்க பேருந்திலும், இரு சக்கர வாகனங்களிலும், சென்னை போன்ற ஊர்களில் மின்சார ரயில்களிலும் மக்கள் பறந்து கொண்டே இருக்கிறார்கள்.

அதுவும் காலையும், மாலையும் சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் மக்கள் அடித்துக் கொண்டு ஓடும் பொழுது நமக்கு வாழ்க்கை பற்றிய பயம் தானாகவே வரும். ஒரு நாளில் இது முடிந்து விடப் போவதில்லை, தினமும் உணவு வேண்டும். அப்படி அரக்கப் பறக்க ஓடும் மனிதனின் குடும்பத்தில் யாரேனும் ஒருவர் பட்டினியில் கிடக்க கூடும். நோய் தீர மருத்துவ மனைக்கு கூட்டிச் செல்ல வேண்டி இருக்கலாம். குடும்பத்தில் இவன் (இவள்) மட்டும் சம்பாதித்துக் கொண்டிருக்கலாம். கூடுதலான வீட்டு வாடகை கொடுக்க சிரமப் பட்டுக் கொண்டிருக்கலாம். ஆசையாக குழந்தை கேட்ட தின்பண்டமோ அல்லது துணியோ வாங்க ஓடிக் கொண்டிருக்கலாம். ஆக, இத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு வேலை மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானம். ஒரு நாள் கூலி இல்லையெனில், பிரச்சினைகள் அப்படியே இருக்கும்.



1936 ல் வெளிவந்த படம் மாடர்ன் டைம்ஸ். வேலைக்குப் போகும் ஒருவனைப் பற்றிய படம். முதல் காட்சியில் கூட்டமாக ஓடும் வெண் பன்றிக் கூட்டத்தைக் காண்பித்து, அப்படியே சப்வே-ல் திமிறிக் கொண்டு வரும் மக்கள் கூட்டம் திரையில் வருகிறது. வயிற்றுக்கு இரை வேண்டுமெனில் பன்றியாக இருந்தாலும், மனிதனாக இருந்தாலும் ஓடித்தானே தீர வேண்டும்.

பெரிய பெரிய இயந்திரங்கள் நிறைந்த ஒரு தொழிற்சாலையில் சாப்ளின் வேலை செய்து கொண்டிருக்கிறார். இரண்டு கையிலும் இரண்டு ஸ்பேனர்களைப் பிடித்துக் கொண்டு, கை ஓயாமல் ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்வதால், வேலை முடிந்த பிறகும் அவரது கைகள் அதே நிலையில் ஆடிக் கொண்டிருக்கின்றன. வெளியே வரும் சாப்ளின், சாலையில் போகும் பெண்ணின் சட்டைப் பட்டனைத் திருக்க முற்பட அவள் அங்கே வரும் காவலனிடம் புகார் செய்கிறாள். திரும்பவும் தொழிற்சாலைக்குள் வந்து சாப்ளின் ரகளை செய்ய அவரை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

ஒரு பெண் கப்பலில் இருந்து வாழை பழங்களை வெட்டி எடுத்துக் கொண்டு தன் வீடு நோக்கி விரைகிறாள். அங்கே தனது இரு சிறிய சகோதரிகளுடன் அதை சாப்பிடுகிறாள். வேலை இல்லாமல் வரும் அவள் அப்பாவும் சாப்பிட ஏதுமின்றி வெறும் தண்ணீரைக் குடித்து பழத்தைச் சாப்பிடுகிறார். கொஞ்ச நாள் கழித்து, அவள் அப்பாவும் இறந்து விட மூவரையும் காப்பகத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். தனது சகோதரிகளை அங்கே விட்டு விட்டு அப்பெண் மட்டும் தப்பித்து விடுகிறாள்.



மருத்துவமனையில் இருந்து திரும்பும் சாப்ளின், வேலை தேட முயல்கிறார். போராட்டம் காரணமாக தொழிற்சாலைகள் மூடிக் கிடக்கின்றன. ஒரு சாலைத் திருப்பத்தில், லாரி ஒன்று திரும்ப அதன் பினனால் பாதுகாப்புக்காக கட்டியிருந்த சிவப்புக் கொடி கீழே விழுகிறது. அதைப் பார்க்கும் சாப்ளின் அதை எடுத்துக் கொண்டு ஓட்டுனரிடம் கொடுக்க லாரியின் பினனால் ஓடுகிறார். ஆனால் அவர்க்குப் பின்னால் போராட்டக் கூட்டம் ஒன்று நடந்து வருகிறது. அதை அறியாமல் இவர் முன்னால் நடக்க, இவரைத் தலைவன் என்றெண்ணி போலீஸ் கைது செய்ய, சிறை செல்ல நேர்கிறது.

சிறையில் கைதிகள் தப்பிக்க முயற்சி செய்வதை சாப்ளின் முறியடிக்கிறார். எனவே அவரை சீக்கிரமாக விடுதலை செய்கிறார்கள். கையில் ஒரு கடிதத்தைக் கொடுத்து 'இதன் மூலம் நீ எளிதாக வேலையில் சேர்ந்து கொள்ளலாம்' என்கிறார் சிறை அதிகாரி. வெளியே வந்தால் வேலை இல்லை. சிறையில் இருந்தாலாவது உணவு கிடைக்கும். என்ன செய்வதெனத் தெரியாமல் சிறையிலிருந்து வெளியே வருகிறார்.

சிறை அதிகாரி கொடுத்த கடிதத்தைக் காண்பித்து ஒரு கப்பல் கட்டும் இடத்தில் ஒரு வேலைக்குச் சேர்கிறார். சேர்ந்த முதல் நாளே, ஒருவன் ஒரு கட்டை வேண்டும் என்று கேட்க, கட்டையைத் தேடும் நம்ம ஆள் கட்டிக் கொண்டிருந்த ஒரு கப்பலின் அடியில் முட்டுக் கொடுத்திருந்த கட்டையைப் பிடுங்க, கப்பல் கடலில் பாய்கிறது. பிறகென்ன, அங்கே இருந்தும் வெளியேறுகிறார்.



காப்பகத்திலிருந்து தப்பிய பெண் ஒரு பேக்கரியில், பசியால் ஒரு பிரட் பாக்கெட்டைத் திருடிக் கொண்டு ஓடுகிறாள். எதிரே வரும் சாப்ளின் மீது மோதி விழுகிறாள். அப்பெண் திருடுவதைப் பார்த்த இன்னொரு பெண்மணி, அதைக் கடைக்காரனிடம் சொல்ல போலீஸ் அங்கே வருகிறது. போலீசிடம் நான்தான் திருடினேன் என்று சாப்ளின் கூற அவரை அழைத்துச் செல்கிறது. அங்கே வந்த பெண்மணி 'இவன் இல்லை.. திருடியது ஒரு பெண்' எனச் சொல்ல, அவரை விட்டு விட்டு திரும்ப அப்பெண்ணைத் துரத்துகிறார்கள்.

இன்னொரு கடையில் காசில்லாமல் உணவு அருந்தும் சாப்ளினை போலீஸ் பிடிக்கிறது. போலீஸ் வண்டியில் வரும்பொழுது, அப்பெண்ணும் பிடிபட்டு வண்டியில் ஏற்றப் படுகிறாள். போகும் வழியில் இருவரும் தப்பித்து விடுகின்றனர்.



ஒரு கடையில் இரவு வாட்ச்மேன் வேலை காலியாக இருப்பதை அறிந்து அங்கே சேர்கிறார் சாப்ளின். அன்று இரவு அப்பெண்ணும் அங்கே தங்குகிறாள். இரவு அந்தக் கடைக்கு திருடர்கள் வருகின்றனர். பார்த்தால் அவர்கள் சாப்ளினின் பழைய பாக்டரியில் வேலை செய்தவர்கள். இப்பொழுது பசியால் இங்கே வந்தோம் எனப் பேசிக்கொண்டு, மது வகைகளை குடித்து போதையில் தூங்கி விடுகிறார் சாப்ளின்.

மறுநாள் காலை துணிகளுக்கு அடியில் தூங்கிக் கொண்டிருந்த சாப்ளினை போலீஸ் அள்ளிக் கொண்டு செல்கிறது. அப்பெண் தப்பி விடுகிறாள். மீண்டும் பத்து நாட்கள் சிறையில் இருந்து விட்டு வெளியே வர, அங்கே அப்பெண் அவரை ஒரு சிறிய வீட்டுக்கு கூட்டிச் செல்கிறாள். பழைய மர வகைகளை கொண்டு கட்டிய சின்ன குடிசை அது.

அடுத்த நாள் காலையில் பேகடரி திறப்பதை அறிந்து காலையில் வேலைக்கு சேருகிறார். மதியம் உணவு முடிந்து திரும்பவும் ஸ்டிரைக் ஆரம்பிக்க தொழிலாளர்கள் வெளியேறுகின்றனர். வெளியே வரும் சாப்ளின் ஒரு கல்லைத் தெரியாமல் மிதித்து விட அங்கே நின்று கொண்டிருந்த போலிசின் மீது பட, திரும்பவும் ஒருவாரம் சிறை வாசம்.



சிறை வாசம் முடிந்ததும் வெளியே வரும் சாப்ளினை வரவேற்று தான் புதிதாக வேலையில் சேர்ந்துள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் செல்கிறாள். அங்கே அவளுக்கு நடனம் ஆடும் வேலை. சாப்ளினுக்கு பாடத் தெரியும் என்று சேர்த்து விடுகிறாள். அன்று சாப்ளின் பாடி முடித்து, அப்பெண் ஆட வரும்பொழுது காப்பக அதிகாரிகள் அவளைப் பிடித்துக் கொள்கிறார்கள். இருவரும் அவர்களிடம் இருந்து தப்பிக்கிறார்கள்.

ஒரு சாலையின் ஓரத்தில் இருவரும் ஒரு சிறிய மூட்டை முடிச்சோடு அமர்ந்து கொண்டு தங்களை ஆசுவாசப்படுத்தி கொள்கிறார்கள். அப்பெண் "முயற்சி செய்வதால் என்ன பலனை கண்டோம்?" என அழ ஆரம்பிக்க, "செத்துப் போவோம் என்று ஒரு நாளும் எண்ணாதே. நாம் இன்னும் நிறைய தூரம் செல்வோம்" என்று தேற்றுகிறார். இருவரும் சந்தோசத்துடன் ஒரு நீண்ட பாதையில் நடக்க ஆரம்பிக்க, படம் முடிகிறது.




நெகிழ வைத்தவை:

ஒரு வேலையைச் செய்து கொண்டே இருக்கும் பொழுது ஏற்படும் நோய்கள் அதிகம். படத்தின் முதலில் சாப்ளின் கை நிற்க முடியாமல் ஆடிக் கொண்டே இருக்கும். அங்காடித் தெருப் படத்தில் கூட ஒரு நோயாளி நின்று கொண்டே வேலை செய்ததால் ஏற்படும் நோயைப் பற்றி சொல்லுவார்கள்.

அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை முதலாளிகள் ஒன்று போலதான் இருக்கிறார்கள். சாப்பிடும் நேரத்தைக் குறைக்க வலியுறுத்தும் நிறுவனங்கள் ஏராளம். இப்படத்தில் கூட, சீக்கிரம் சாப்பிட்டு விடலாம் என்பதால் ஒரு இயந்திரத்தைக் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். நல்ல வேளை, அது படத்திலேயே வெற்றி அடையவில்லை.

பசியால், கப்பலில் வைத்திருக்கும் பழங்களை அப்பெண் திருடும் பொழுது, அவள் திருடுவதற்கு இந்தச் சமூகம் கூட ஒரு காரணமாக இருக்கலாம் என்ற எண்ணம் தோன்றும்.

பலசரக்கு கடையில் தன் நண்பனைப் பார்த்தவர்கள் "நாங்கள் திருடர்கள் இல்லை.. எங்களுக்கு பசியாக இருக்கிறது".. என்பார்கள். பசி மட்டும் தானே மனிதனுக்கு கொடிய நோயாக இருக்கிறது.

சாப்ளினும் அப்பெண்ணும் தங்களின் கனவு இல்லம் பற்றி கனவு காண்பார்கள். அதில் அழகான வீட்டுக்கு உள்ளேயே ஆப்பிளும், திராட்சைப் பழங்களும் சன்னலில் காய்த்திருக்க, கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் பசு பாலை கறந்து கொடுத்து விட்டுச் செல்கிறது.

இறுதியாக, இந்த மாடர்ன் யுகத்தில் நிறைய பேக்டரிகள், நிறைய உணவுகள், நிறைய பொருள்கள் இருக்கின்றன. ஆனால் எல்லாருக்கும் வேலை கிடைப்பதும், பசி ஆறுவதும் எவ்வளவு கடினமாக உள்ளது. ஒரு வேளை காட்டுக்கு உள்ளேயே ஆதி வாசிகளாக இருந்திருந்தால் கூட காயோ, கனியோ கிடைத்திருக்கும். காட்டை அழித்து நாட்டை உருவாக்கி, நவீன உலகம் என்கிறோம். மாடர்ன் உலகத்தில் இன்னும் அனைவருக்கும் உணவுதான் கிடைக்கவில்லை.







Monday, February 11, 2013

தி கோல்ட் ரஷ் (The Gold Rush - Charlie Chaplin)


தங்கத்தைத் தேடி, கடுங் குளிர் என்று பாராமல், பனிப்புயல் அடிக்கும் அந்த மலை மீது மக்கள் ஏறிக் கொண்டே இருக்கிறார்கள். தப்பி பிழைத்து கொஞ்சம் தங்கத்தோடு வந்தால் ராஜ வாழ்வுதான். புயலில் மாட்டி அங்கேயே இறந்து போய்விடக் கூடிய சூழலும் உண்டு. அந்தக் கூட்டத்தில் ஒருவராக நம் சாப்ளின்.



பனி மலை மீது ஒரு கூடாரத்தில் சாப்ளின், பசியைப் பொறுக்காத பயில்வான் மாதிரி இருக்கும் ஜிம் என்பவனுடன் தங்கி இருக்கிறார்.

உண்பதற்கு உணவில்லாமல் காலில் அணிந்திருக்கும் ஷூவை வேகவைத்து அதன் தோலை சாப்பிடும் காட்சியை வாழ்நாளில் ஒரு முறையேனும் பார்க்க வேண்டும். ஒரு பெரிய விருந்தைச் சமைப்பது போல அந்த ஷூவைக் கையாள்வதும், அது வெந்த பின்னர் அதை எடுத்து போட இருக்கும் தட்டில் உள்ள சிறு தூசுகளை நன்றாகத் துடைப்பது ஆகட்டும், அதன் பின்னர் அதைச் சாப்பிடும் முறை ஆகட்டும்.. சாப்ளின் என்னும் மகா கலைஞனின் நடிப்பு நிற்கிறது. அதிலும், ஷூவில் இருக்கும் ஆணிகளை, ஏதோ எலும்பில் ஒட்டி இருக்கும் இறைச்சித் துணுக்குகளை சாப்பிடுவது போல, ஆணியில் ஒட்டி இருப்பவற்றை சாப்ளின் உண்ணும் பொழுது, அங்கே சாப்ளினை விட பசித்த ஒருவனே நம் முன்னால் தோன்றுவான். அவர் சாப்பிடுவதை பார்த்துக் கொண்டிருக்கும் ஜிம்மும், ஷூவை சாப்பிடத் தொடங்குகிறார்.



கொஞ்ச நேரம் கழித்து திரும்பவும் பசி வாட்டுகிறது. இன்னொரு ஷூவை வேக வைத்து தரட்டுமா எனக் கேட்கிறார். ஜிம் மறுத்து விடுகிறார். பசி மயக்கத்தில் ஜிம்முக்கு, சாப்ளின் ஒரு கோழி போல் தோற்றம் அளிக்கிறார். சாப்ளின் நடந்தால், ஒரு கோழி நடப்பது போலவே இருக்கிறது ஜிம்முக்கு. சாப்ளினை கொல்ல முயல்கிறார் ஜிம். நல்ல வேளையாக, ஒரு கரடி அங்கே வந்து அவர்களுக்கு உணவாகிறது.


ஜிம் மற்றும் சாப்ளின் இருவரும் தங்கத்தைத் தேடி தனித் தனியே பிரிந்து நடக்கிறார்கள். ஜிம்மை இன்னொருவர் அடித்து விடுவதால் , ஞாபக மறதி ஏற்பட்டு, தங்கச் சுரங்கத்திற்கு செல்லும் சரியான பாதை மறந்து விடுகிறது. எங்கெங்கோ சுற்றிக் கொண்டிருக்கிறார் ஜிம்.

ஒரு நகரத்துக்கு வரும் சாப்ளின், அங்கு ஒருவரின் கூடாரத்தில் தங்குகிறார். பிறகு அங்கே ஒரு பெண்ணை எதேச்சையாகச் சந்திப்பவர் அவளைக் காதலிக்கத் தொடங்குகிறார்.  முதலில் அவரை வேடிக்கையாக, விளையாட்டாக நடத்தும் காதலி பின்னர் அவரின் அன்பை புரிந்து கொள்கிறாள்.



அதே நேரத்தில், அந்நகரத்துக்கு வந்து சேரும் ஜிம், சாப்ளினை பார்த்து விடுகிறார். சாப்ளினை இழுத்துக்கொண்டு திரும்பவும் தங்கத்தைத் தேடி பனி மலைக்குள் பயணிக்கிறார்கள். அதே கூடாரத்தில் இருவரும் தங்குகிறார்கள். ஒரு நாள் புயலில் மாட்டிய அவர்களின் கூடாரம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து தப்பிக்கும் அவர்கள் தங்கத்தையும் கண்டடைகிறார்கள்.



இப்பொழுது இருவரும் பெரிய பணக்காரர்கள். கப்பலில் ஊருக்குத் திரும்புகிறார்கள். கப்பலில் அவர்களுக்கு ராஜ மரியாதை. அதே கப்பலில் பயணிக்கும் காதலியை, சாப்ளின் சந்திக்க நேர்கிறது. இன்னொரு அறையை ஒதுக்கச் சொல்லி காதலியையும் கூடவே அழைத்துக் கொண்டு செல்கிறார் சாப்ளின்.

ஒரு ஷூவை சாப்பிட்ட பின்னர், அந்தக் காலில் துணிகளைச் சேர்த்துக் கட்டி நடந்து கொண்டிருப்பார் சாப்ளின். இறுதிக் காட்சி வரைக்கும் ஒரு காலில் மட்டும் ஷூவுடன் நடித்திருப்பார். 







*********************

சாப்ளின் படங்களை பற்றி நான் எழுதிய பதிவுகள்:

சிட்டி லைட்ஸ்
சினிமா - மாடர்ன் டைம்ஸ் (Modern Times)
தி சர்க்கஸ் (The Circus)


Monday, August 13, 2012

சினிமா:A Separation (எ செபரேசன்) படத்திலிருந்து...


எ செபரேசன் படத்தின் கதையை போன பதிவில் எழுதி இருந்தேன். (A Separation) அப்படத்தை பற்றி எனது பார்வையில் தோன்றியவற்றை இப்பதிவில் எழுதி இருக்கிறேன்.  சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான, ஆஸ்கார் விருதைப் பெற்ற இப்படம் பற்றி எழுத நிறைய இருக்கிறது. .

* கணவன் - மனைவி விவாகரத்துக்களில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். ஒரு வகையில் அவர்கள் வேறு வழியில்லாமல் விவாகரத்தை நாடினாலும், பெற்றோர் இருவரிடமும் பாசம் வைத்திருக்கும் குழந்தைகள் படும் துயரத்தை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. இந்தப் படத்தில், நடேர் மற்றும் சிமினின் மகளான டெர்மி அமைதியாக வந்து போகிறாள். பதினோரு வயதான அவள் இருவரிடமும் மாட்டிக் கொண்டு தவிக்கிறாள்.

* இரான் நாட்டை விட்டு மனைவி போக விரும்ப, கணவனோ பயமில்லாமல் இங்கேயே வாழ வேண்டும் என்று சொல்கிறான்.


* தள்ளாத வயதில் அல்சீமர் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தன் தந்தையை பாசத்துடன் கவனித்துக் கொள்கிறான் நடேர். அவருக்கு சவரம் செய்து, கழிவறைக்கு அழைத்துச் சென்று, குளிப்பாட்டி என அவருக்காக அவன் செய்யும் பணிவிடைகளும், அவரை விட்டுப் பிரிய மனமில்லாமல் ஒரு பாசக்கார மகனாக நடேர்.

* வீட்டு வேலை என்று நடேரின் வீட்டில் சேர்ந்து கொள்கிறாள் ரசியாக். ஆனால், அங்கே அந்த பெரியவர் கழிவறைக்கு கூட செல்ல தெரியாமல், தன் உடையிலேயே கழித்து விட்டதைக் கண்டு.. அவரின் உடைகளை மாற்ற ரசியாக் தயங்குவது, நமக்கு கண்ணில் நீர் வரவைக்கும் காட்சிகள். அதுவும் ஒரு இஸ்லாமிய நாட்டில், ஒரு பெண் இது போல வேலைகள் செய்யத் தயங்குவது சாதாரணமே. 



*   யாரிடம் நாம் பொய் சொல்ல நேர்ந்தாலும், குழந்தைகளிடம் பொய் சொல்ல முடியாது. பணிப்பெண் ரசியாக்கை, நடேர் தள்ளிவிட்ட பின்னர், நடேர் கோர்ட் உட்பட, எல்லோரிடத்திலும் ரசியாக் கர்ப்பமாக இருந்தது தனக்கு தெரியாது என்றே சொல்கிறான். மகள் டெர்மி, நடேரிடம் கேட்கும்போது, தயங்கும் அவன், சில நொடிகள் கழித்து.. மகளின் கண்களைப் பார்த்து எனக்கு முன்னாலேயே தெரியும் என்று ஒப்புக்கொள்கிறான். அந்தக் குற்றத்தை அவன் ஒப்புக்கொண்டால், இரண்டு மூன்று வருடங்கள் தண்டனை கிடைக்கும், சிறை செல்ல நேரிடும். அப்படி சிறைக்குப் போனால், தன் தந்தையையும், மகளையும் யார் கவனித்துக் கொள்வார்கள் என்பதினாலேயே தான் சொல்லவில்லை என மகளிடம் சொல்கிறான்.

* பணக்கார குழந்தை, ஏழை வீட்டு குழந்தை என்றெல்லாம் பாகுபாடு கிடையாது. இரண்டு வீட்டு குழந்தைகளும் பாசத்துக்கும், ஆதரவுக்கும் ஏங்குகிறார்கள். நடேரின் மகள் டேர்மியும், பணிப்பெண் ரசியாகின் மகள் சொமியாவும் அப்படிதான்.

* யாராக இருந்தாலும் இறுதியில், தன் மனசாட்சிக்கு பயந்தோ அல்லது கடவுளுக்குப் பயந்தோ குற்றத்தை ஒப்புக்கொள்கிறார்கள். முதலில், நடேர் தன்னை தள்ளி விட்டதால்தான் அபார்சன் ஆனதாக சொல்லும் ரசியாக், இறுதியில் குரான் கொண்டு வரத் தயங்கி, நடேர் தள்ளிவிட்டதற்கு முதல் நாளே தான் காரில் அடிபட்டதாக ஒப்புக்கொள்கிறாள். 



* ரசியாக்கின் கணவன், வேலை இல்லாமல் கடனில் மூழ்கிக் கொண்டிருக்கிறான். பெருங் கோபம் கொண்டவனான அவன், கடைசியில் பணம் கிடைக்காது என்று தெரிந்ததும், தன்னைத் தானே அடித்துக்கொண்டு, வீதியில் நின்று கொண்டிருந்த நடேரின் கார் கண்ணாடியை உடைத்து விட்டு, வீட்டை விட்டு ஓடுகிறான். அவன் பின்னாலேயே ரசியாக்கும் ஓடுகிறாள். அதற்குப் பின்னர், அவர்களின் மீதி வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்?. அல்லது அவர்களும் விவாகரத்து மன்றத்தில் நின்று கொண்டிருப்பார்களா?.

* தான் என்ன செய்கிறேன் எனத் தெரியாமல் இருக்கும் பெரியவர், அப்பாவின் மேல் உயிரையே வைத்திருக்கும் நடேர், வயிற்றில் குழந்தையை வைத்துக்கொண்டு குடும்பச் சுமையால் வேலைக்கு வரும் ரசியாக், விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்திருக்கும் பெற்றோரை நினைத்து வருந்தும் டெர்மி, தன் மகள் தன்னுடன் வர மறுத்து விடுகிறாள் என்பதை நினைத்து வருந்தும் சிமின், வேலை இல்லாமல் இருக்கும் ரசியாக்கின் கணவன்....... என எல்லோரும் நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்கள்தான்.

* கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போனால் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் தீர்வு கிடைக்கும். ஆனால், அப்படி இல்லாமல் இருப்பதுதான் பெரிய பிரச்சினையாக இருக்கிறது.

*  இறுதிக் காட்சியில், டெர்மியிடம், 'உன்னுடைய முடிவை எடுத்து விட்டாயா.. நீ அப்பாவிடம் இருக்கப் போகிறாயா, அம்மாவிடம் போகிறாயா' என நீதிபதி திரும்பத் திரும்ப கேட்கிறார். டெர்மி கண்ணில் நீருடன், தயங்கிக் கொண்டே இருக்கிறாள். பெற்றோர்களை வெளியே போகச் சொல்கிறார் நீதிபதி. வெளியே வந்த நடேரும், சிமினும் எதிரும் புதிருமாக நின்று கொண்டிருக்கிறார்கள். ஒரு கண்ணாடி கதவு அவர்களைப் பிரித்துக் கொண்டு நிற்கிறது.



* டெர்மி என்ன பதில் சொல்லியிருப்பாள்? இதற்கான பதில் நமக்குத் தேவையில்லை தான். எல்லா விவாகரத்து ஆன பெற்றோர்களின் குழந்தைகள் என்ன பதில் சொல்லியிருப்பார்களோ, அதைதானே அவளும் சொல்லியிருக்க கூடும்.

* குழந்தைகள் உலகம் எப்பொழுதுமே சிறு சிறு சந்தோசங்களை பொதிந்து வைத்திருக்கக் கூடியது. இவ்வளவு பெரிய துயரை, குழந்தைகள் தாங்கிக் கொண்டாலும், அவர்கள் மனதில் அது ஒரு ஆழப் பதிந்து கிடக்கும்.

* ஒவ்வொரு பெற்றோரும் பார்க்க வேண்டிய படம். டெர்மி மட்டும் அங்கே நீதிபதி முன் நின்று கொண்டில்லை. நிறையக் குழந்தைகள் நீதிமன்றப் படியேறி இறங்குகிறார்கள். நம் குழந்தைகளிடம் அந்தக் கேள்வி கேட்கப்படாமல் இருந்தாலே, நாம் நல்ல பெற்றோர்தான்.

Friday, August 10, 2012

சினிமா: A Separation


விவாகரத்துப் பெற விண்ணப்பம் செய்திருக்கிறார்கள் ஒரு தம்பதியினர். அவர்கள் வாழ்வது ஈரான் நாட்டில். பதினோரு வயதில் பள்ளி செல்லும் மகள். கணவன் - நடேரின் தந்தை அல்சீமர் என்னும் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்.  சுய நினைவில்லாத அவரால் எந்த வேலையும் செய்ய முடியாது. அது போலவே எதையும் புரிந்து கொள்ளவும் முடியாது. மனைவி - சிமின், வெளிநாடு செல்ல வேண்டும் என்று கேட்க, நடேர் தன் வயதான தந்தையை விட்டு வர முடியாது என்று சொல்கிறான். எனவே, சிமின் விவாகரத்து வேண்டி மனுச் செய்கிறாள். நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.


சிமின், தனது பொருட்களுடன் தன் தாய் வீட்டுக்குச் செல்கிறாள். மகள் - டெர்மி, தன் தாயுடன் செல்ல மறுத்து தன் தந்தையுடனே தங்கி விடுகிறாள். நடேர் வேலைக்குப் போன பின்னர் தன் தந்தையைக் கவனித்துக் கொள்ள ஒரு பணிப்பெண்ணை வேலைக்கு அமர்த்துகிறான். அப்பெண்ணின் பெயர் ரசியாக். டெர்மியின் ஆசிரியைக்கு பழக்கமானவள் அப்பெண்.




முதல் நாள் வேலைக்கு வருகிறாள் ரசியாக். அவளுடன் கூடவே அவளின் சிறு மகளும். அவள் தன் தாயின் வயிற்றில் தலையை வைத்து ஏதாவது சத்தம் வருகிறதா என காத்து வைத்து கேட்கிறாள். ரசியாக் கர்ப்பமாக இருக்கிறாள். நடேரின் தந்தை, அவரின் அறையை விட்டு 'நான் பேப்பர் வாங்க கடைக்கு போகிறேன்' என்று கதவைத் திறக்க முயல, அவரைச் சமாளித்து அறைக்குப் போகச் சொல்கிறாள். அப்பொழுதுதான் அவர் தன் உடையிலேயே சிறுநீர் போயிருப்பதைப் பார்க்கிறாள். அவரிடம், அந்த உடையை மாற்றச் சொல்கிறாள். அவருக்கோ எதுவும் புரியவில்லை. அவரைக் கூட்டிக்கொண்டு போய் கழிவறையில் நிறுத்தி, அவரின் உடையை மாற்றச் சொல்கிறாள். ஆனால் அவரோ அப்படியே நிற்கிறார். தன் மகளை கொஞ்சம் வெளியே நிற்கச் சொல்லிவிட்டு, கையில் உறையை மாட்டிக்கொண்டு அவருக்கு உடை மாற்றி விடுகிறாள். அச்சிறு பெண் 'நான் அப்பாவிடம் சொல்ல மாட்டேன்' என்கிறாள்.

அவள் உள்ளே வீட்டை சுத்தம் செய்து கொண்டிருக்கும்போது, ரசியாக்கின் பெண் முதியவரை காணவில்லை எனக் கூறுகிறாள். உடனே, அவரைத் தேடி சாலையில் ஓடுகிறாள். அவர் ஒரு நியூஸ் பேப்பர் கடையில் நிற்பதைப் பார்க்கிறாள். நிறையக் கார்கள் போய்க் கொண்டிருக்கும் அந்தச் சாலையை கடக்க அவர் முற்பட, ரசியாக் திகைத்து நிற்கிறாள்.



பணி முடிந்து வந்த நடேரிடம், தன்னால் இந்த வேலைக்கு வர முடியாது என்றும், மிகக் கடினமான வேலை, ஒரு பெண் இன்னொரு முதியவருக்கு உடை மாற்றிவிடுவது மிக கடினம் என்று கூறுகிறாள். நடேருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. வேண்டுமானால் என் கணவரை நாளைக்கு உங்களைப் பார்க்க வரச் சொல்கிறேன், அவர் இப்பொழுது வேலை இல்லாமல்தான் இருக்கிறார் என்று கூற, நடேர் சரி என்கிறான்.

அடுத்த நாள், பள்ளியில் இருந்து மகளை அழைத்துக் கொண்டு வீடு திரும்புகிறான் நடேர். அழைப்பு மணியை அழுத்துகிறான். பெயர் சொல்லிக் கூப்பிடுகிறார்கள். பதிலில்லை. மேல் வீட்டில் குடியிருக்கும் பெண்ணைக் கேட்க, 'காலையில் ரசியாக் இருந்தாளே.. எங்கே என்று தெரியவில்லை' என்று சொல்கிறார். காரில் இருக்கும் இன்னொரு சாவியைக் கொண்டு, வீட்டைத் திறக்கிறார்கள். அங்கே, நடேரின் அப்பா கட்டிலில் இருந்து கீழே பேச்சு மூச்சில்லாமல் கிடக்கிறார். ஒரு கயிற்றில் அவர் கை கட்டிலுடன் சேர்த்துக் கட்டப் பட்டிருக்கிறது. கட்டை அவிழ்த்து, அவரைத் தூக்கி படுக்கையில் படுக்க வைத்து அவரை மெதுவாகக் கூப்பிட அவர் விழித்துக் கொள்கிறார்.

நடேர், ரசியாக்கின் மீது கோபம் கொள்கிறான். அப்பாவைக் கட்டிப்போட்டு எங்கோ வெளியில் கிளம்பிவிட்டாள் என்று நினைக்கிறான். கொஞ்ச நேரம் கழித்து வந்த ரசியாகிடம், 'இன்னும் கொஞ்ச நேரம் நான் வராமல் இருந்தால் அப்பா செத்திருப்பார்.. உன்னை வேலைக்கு வைத்ததே அவரைக் கவனித்துக் கொள்ளத்தான்.. ஆனால் அவரை விட்டு விட்டு வெளியே போயிருக்கிறாய்.. அதுவும் இல்லாமல் அவரை கயிற்றில் கட்டி போட்டிருக்கிறாய்.. மேசையில் இருந்த பணத்தை வேறு காணவில்லை.. ' எனச் சொல்ல, ரசியாக் 'கடவுள் சாட்சியாக பணத்தை நான் எடுக்கவில்லை' என்று கூறுகிறாள். 'முதலில் இங்கே இருந்து வெளியே போ' என்கிறான். அவள் தயங்கிக் கொண்டே நிற்க, அவளை வலுக்கட்டாயமாக வெளியேற்றுகிறான் நடேர். திரும்ப உள்ளே வரும் ரசியாக், 'இன்றைய சம்பளத்தைக் கொடுங்கள்' எனக் கேட்க, 'ஏற்கனவே பணத்தை எடுத்து விட்டு, அதுவும் அப்பாவை இந்த நிலைமைக்கு ஆளாக்கி விட்ட பின்னர். .என்னால் சம்பளம் கொடுக்க முடியாது' என்று வெளியே தள்ளி கதவைச் சாத்தி விடுகிறான்.


அடுத்த நாள், சிமினின் தாய் வீட்டுக்குச் செல்கிறான் நடேர். அங்கு சிமின், ரசியாக் இப்பொழுது ஹாஸ்பிடலில் இருக்கிறாள் எனக் கூறுகிறாள். ஏன் என அவன் கேட்க, நீங்கள் அவளைப் பிடித்து தள்ளி இருக்கிறாய் என சிமின் சொல்லுகிறாள். இருவரும் ரசியாக்கைப் பார்க்க ஹாஸ்பிடல் செல்கிறார்கள். அங்கே, ரசியாக்குக்கு அபார்சன் ஆகிவிட்டதாகச் சொல்கிறார்கள். எனவே,  ரசியாக்கின் கணவனுக்கும் நடேருக்கும் சண்டை ஏற்படுகிறது.

நீதி மன்றத்தில், நாலரை மாதக் குழந்தையின் கருக்கலைப்புக்கு அவன்தான் காரணம் என்கிறாள் ரசியாக். ரசியாகின் கணவனும் அதை ஆமோதிக்கிறான். அவளை வெளியே தள்ளி கதவைச் சாத்தும்போதுதான் தான் அடிபட நேர்ந்ததாகவும், அதுவே கருகலைப்புக்கு காரணம் என்கிறார்கள் இருவரும். அதை ஏற்க மறுக்கிறான் நடேர்.  ரசியாக் கர்ப்பமாக இருந்தது தனக்குத் தெரியாது என்கிறான் அவன். வழக்குப் போய் கொண்டிருக்கிறது. ரசியாக்கின் கணவன், நடேரின் மகள் படிக்கும் பள்ளிக்குச் சென்று ஆசிரியை மிரட்டுகிறான். பள்ளிக்கு வெளியே எப்பொழுதும் நின்றுகொண்டிருக்கிறான். தன் மகளை அவன் ஏதாவது செய்து விடுவான் என்று பயக்கும் சிமின், அவனுக்குப் பணம் கொடுத்து சமாதானம் செய்ய முயல்கிறாள். முதலில் மறுக்கும் அவன், பின்னர் சரி எனச் சொல்லிவிடுகிறான்.



பணம் தந்து அவனைச் சரிக்கட்ட மறுக்கிறான் நடேர். சிமின் எவ்வளவோ கூறிப் பார்க்கிறாள். அவன் மறுத்துவிடுகிறான். கோபப்படும் அவள், டேர்மியை அழைத்துக்கொண்டு போகிறாள். சிமினைப் பார்க்க வரும் ரசியாக், 'எனக்கு சந்தேகமாக இருக்கிறது. முந்தின நாளே எனக்கு வலி இருந்தது. நான் யாரிடமும் சொல்லவில்லை.' என்கிறாள். சிமின், 'அது எப்படி நடந்தது.. அதை ஏன் யாரிடமும் சொல்லவில்லை?' என்கிறாள். நடேரின் அப்பா, ஒருநாள் வெளியே போன பொழுது, சந்தடி மிகுந்த சாலையில் ஒரு கார் தன்னை இடித்து விட்டதைச் சொல்கிறாள். 'இது என்னுடைய தவறே. இதை நீங்கள் பணம் கொடுத்து சரி பண்ண வேண்டாம்.. நீங்கள் எங்கள் வீட்டுக்கு வரவும் வேண்டாம்' என்று சொல்லி விட்டுச் சொல்கிறாள்.


ரசியாக்கின் வீட்டுக்குச் செல்கிறார்கள், நடேரும் சிமினும். கூடவே டேர்மியும். ரசியாக்கின் பக்கத்து வீட்டு பெரியவர்கள் என நாலைந்து பேர் இருக்கிறார்கள். உள்ளூர பயந்து கொண்டிருக்கிறாள் ரசியாக். பணம் கொடுக்க தயாராக செக் புத்தகத்தில் கையெழுத்துப் போடுகிறான் நடேர். தன் மகளையும் பக்கத்தில் உட்கார வைத்துக் கொள்ளும் அவன், ரசியாக்கிடம் 'உங்கள் மேல் தவறில்லை என்றால்... போய் குர்ஆன் எடுத்துக் கொண்டு வாருங்கள்.. அதற்குப் பின்னர் நான் இந்தப் பணத்தைத் தருகிறேன்..' என்கிறான். எழுந்து போகும் ரசியாக், திரும்பி வர தாமதமாக, கணவன் அவளைத் தேடி உள்ளறைக்கு வந்து விடுகிறான். அங்கே ரசியாக் கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறாள். கணவனிடம் உண்மையைச் சொல்ல. அவன் வெறி பிடித்தவன் போல தன்னைத் தானே அறைந்து கொண்டு வீட்டை விட்டு வெளியே போகிறான். பின்னாலே ஓடி வரும் ரசியாக், சிமினிடம் 'நான் தான் உங்களை வர வேண்டாம் என்று சொன்னேனே. இப்பொழுது இப்படி ஆகிவிட்டதே' என்று பின்னாலேயே ஓடுகிறாள். நடேர் வெளியே வந்து பார்த்தால், அவன் கார் கண்ணாடி உடைந்து கிடைக்கிறது.


நீதி மன்றத்தில், இப்பொழுது விவாகரத்து வழக்கு. கூடவே டேர்மியும். அவள் யாரிடம் இருக்கப் போகிறாள் என்பதை அவள் முடிவு செய்ய வேண்டும். நடேரிடமும், சிமினிடமும் விசாரணை முடிந்து அவர்களின் மகளை உள்ளே கூப்பிடுகிறார் நீதிபதி. உள்ளே செல்லும் டெர்மி, நீதிபதி முன் அழுது கொண்டிருக்கிறாள். வெளியே பெற்றோர் இருவரும் காத்திருக்கிறார்கள். அவர்களைப் போல நிறையப் பேர் எதிரும் புதிருமாக அங்கே உட்கார்ந்திருக்கிறார்கள். படம் அத்துடன் முடிகிறது.

உள்ளே சென்ற டெர்மி என்ன முடிவை எடுத்திருப்பாள் என்பது நமக்குத் தெரியாமலேயே படம் முடிகிறது.