பாத்துமாவின் ஆடு - பஷீர்
இந்நாவலை கேரளாவில் ஒரு சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்கு சேர்ந்த பொழுது எழுதியதாக பஷீர் முன்னுரையில் சொல்கிறார். அங்கே மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் சிகிச்சை தரப்படுகிறது. அங்கே இருந்த பைத்தியங்களிடம் பேசுகிறார். அதில் ஒரு பைத்தியத்துக்கு முழு யானையை திங்க வேண்டும் என ஆசை. இவர் "எங்க உப்பப்பாவுக்கொரு ஆன இருந்தது" என்கிறார். "அத தின்னுட்டீங்களா" "இல்லை, அது அங்கங்கே சுற்றி அலைகிறது" "பிடிக்க முடியுமா" பஷீர் சொல்கிறார்: "தெரியவில்லை". இன்னொரு பைத்தியம் "பட்டாளத்தில் இருந்த நான் நான்கு வருடம் முன் செத்துப் போய்விட்டேன். திரும்பவும் இந்த பூமிக்கு வந்துள்ளேன்" என்கிறது. 'இந்நாவல் ஒரு தமாஷ் கதை. ஆனால் எழுதும்பொழுது மனதுக்குள் வெந்து சாம்பலாகி கொண்டிருந்தேன். வேதனையை மறக்க வேண்டும். எழுத வேண்டும், மனதை.' என்கிறார் பஷீர். நாவல் எழுதி முடித்து முன்னுரை எழுதுவதைத் தள்ளிப்போட்டு ஐந்து வருடங்கள் கழித்து நாவல் வெளியாகிறது. பத்து பக்கங்களுக்கும் மேல் நீண்ட முன்னுரை. ****** நாவலில் பாத்திமாவின் ஆடு கதையைச் சொல்பவர் எழுத்தாளர்...