Showing posts with label ஷஹிதா. Show all posts
Showing posts with label ஷஹிதா. Show all posts

Wednesday, March 20, 2024

மானக்கேடு - ஜெ.எம்.கூட்ஸி : தமிழில் - ஷஹிதா

உறவினர் ஒருவருக்கு இன்னொருவருடன் நிலப் பிரச்சினை வந்தது. அவர் அதை விற்றுவிடலாம் அல்லது அவருடன் சமாதானமாகி போய்விடலாம். அப்படி சமாதானம் செய்துகொண்டால் உறவினர் சில அடிகளை இழக்க நேரிடும். உறவினர் கடைசி வரை அதற்கு ஒத்துக்கொள்ளவே இல்லை. 'என்ன ஆனாலும் சரி, நான் தோற்க மாட்டேன். ஓரடி கூட நான் இழக்க தயாராயில்லை' என்றார். 

உண்மையில் இது என் நிலம், எனக்கானது என்பது சுயநலம் போன்று தோன்றினாலும் நம் வாழ்வுக்கு பிடிப்பாக அந்த சுயநலமே அமைகிறது. ஒரு அடியில் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. ஆனால் அது அவரவர் நிலம். நாவலில் லூசி இதையே சொல்கிறாள். என்ன நடந்தாலும் சரி நான் இங்கேயே இருப்பேன், இது என் துண்டு நிலம் என்கிறாள். 

இரண்டு திருமணம் ஆகி, இருவரையும் விவகாரத்து செய்துள்ள டேவிட்க்கு வயது ஐம்பதுக்கு மேல் ஆகிறது. தனிமையில் வாழும் அவர், தமது இச்சைகளை பாலியல் தொழிலாளிகளுடன் போக்கி கொள்கிறார். அதுவும் ஒரே பெண் தொடர்ந்து அவருக்கு வருகிறாள். அவளை அளவுக்கு அதிகமாக அவர் விரும்புகிறார். அப்பெண் ஒரு நீண்ட விடுமுறையில் செல்கிறார். அவளின் நிறுவனம் அவள் பற்றிய தகவல்களை இவரிடம் சொல்வதில். அவளை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று தேடுகிறார். ஆனால் ஒருகட்டத்தில் அவளை தொடர்பு கொள்ள முடிவதில்லை. 


தென்னாப்பிரிக்காவின் ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் டேவிட் லூரிக்கு  தனது மாணவி மெலனியுடன் தொடர்பு ஏற்படுகிறது. மெலனியின் சம்மதத்துடனேயே அது நிகழ்கிறது. அவர் இதை பற்றி நினைக்கும்போது, இது தற்காலிக உறவுதான், நீண்ட காலம் இதைக் கொண்டுபோக போவதில்லை என்றே நினைக்கிறார். ஆனால் மெலனி ஒரு பிரச்சினையில் இவருடன் சிலநாட்கள் வந்து தங்கிக்கொள்கிறாள். பல்கலையில் ரொமான்டிக் பிரிவு துறையில் இருக்கும் அவருக்கு, அவரின் மகள் வயதுள்ள மெலனி அழகியாகத்  தெரிகிறாள். அவள் அழகியும் கூட. அப்படியென்றால் அவளுக்கு யாராவது காதலன் நிச்சயம் இருப்பான் என நினைக்கிறார். அவர் நினைத்தது போலவே அவளுக்கு ஒரு காதலன் இருக்கிறான்.

டேவிட்டின் வீட்டில் இருந்து கிளம்பும் அவள்  தன் காதலன் துணையுடன் பல்கலையின் குழுவில் அவரைப் பற்றி முறையிடுகிறாள். குழு அவரை விசாரிக்கிறது. அவர்கள் இவரை மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதித்  தரச் சொல்கிறார்கள். இவரோ 'நான் அப்படி எதுவும் நான் கேட்க மாட்டேன், மெலனியுடன் உறவு இருந்தது உண்மை. உங்கள் கடமையைச் செய்யுங்கள்' என்கிறார். இறுதியில் அவர் பல்கலையை விட்டு வெளியேற்றப்படுகிறார்.  

வேலையிழந்து மானக்கேட்டுக்கு உள்ளான டேவிட் தன் மகள் லூஸி தங்கியிருக்கும் பண்ணை நிலத்துக்குச் செல்கிறார். அங்கே சென்றதும் அவளின் வாழ்க்கையில் இவர் குறுக்கிடுவதாக சில சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஒருநாள் இரண்டு இளைஞர்கள் மற்றும் ஒரு சிறுவன் லூஸியின் பண்ணை வீட்டை கொள்ளையடித்து, டேவிட்டின் காரையும் ஓட்டிச் செல்கிறார்கள். லூஸியை வல்லுறவு செய்து, டேவிட்டை அடித்து அவரின் தலையில் தீ வைத்தும் செல்கிறார்கள். லூஸி காவல் துறையிடம், திருடுபோன பொருட்களை பற்றி மற்றும் சொல்கிறாள். அவள் வன்புணர்வுக்கு ஆட்பட்டதை தெரிவிப்பதில்லை. 

முதலில் அவளுக்கு வேலையாளாக வந்த பெட்ரூஸ் என்பவன், இப்பொழுது பக்கத்து நிலத்தை வாங்கி உரிமையாளன் ஆகிவிட்டான். லூஸி, கொஞ்சம் தள்ளி உள்ள நிலத்துக்கு சொந்தக்காரரான எட்டிங்கர் போன்றவர் மட்டுமே வெள்ளையர்கள். பெட்ரூஸ் தன்னுடைய பாதுகாப்பின் கீழ் லூஸியை கொண்டுவரத் திட்டம் போடுகிறான். அவனுக்கு அவளின் நிலம் வேண்டும். சுற்றிலும் அவனுடைய ஊர்க்காரர்கள். லூஸியை வன்புணர்வுக்கு உள்ளாக்கியதும் அவனுக்குத் தெரிந்தவர்களே. அவளை பயமுறுத்தவே அவன் திட்டமிடுகிறான்.

டேவிட் தன் மகளை நீ இங்கே இருக்க வேண்டாம், வேறு நாட்டுக்குச் செல். அதற்கான எல்லா செலவுகளையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்கிறார். லூஸியோ மறுத்துவிடுகிறாள், நான் இங்கேயே இருப்பேன், இது என்னுடைய நிலம் என்கிறாள். டேவிட் எவ்வளவோ சொல்லியும் அவள் கேட்பதாயில்லை. அன்றைய சம்பவத்தால் அவள் கர்ப்பமாக இருக்கிறாள். முன்னரே டேவிட் தக்க பாதுகாப்பு எடுக்கச் சொல்லியும் அவள் அதைக் கேட்காமல் இப்போது கர்ப்பமாக இருக்கிறாள். 

லூசியைப் பொறுத்தவரை, வெள்ளையர்களான நாம் இங்கே இருப்பதற்கு இந்த மாதிரியான செயல்களைச் சகித்துக் கொள்ள வேண்டும் என தன் தந்தையிடம் சொல்கிறாள். பெட்ரூஸையே அவள் திருமணம் செய்யவும் முடிவு செய்கிறாள். அவனுக்கு இந்த நிலம் வேண்டும், எனக்கு பாதுகாப்பு வேண்டும் என்கிறாள் லூசி. 



டேவிட் அங்கே விலங்கு நல மருத்துவமனையில் பணிபுரியும் பெவ் ஷா என்னும் பெண்மணிக்கு உதவுகிறார். நோய்ப்பட்ட, முடமான, யாருக்கும் தேவையில்லாத நாய் மற்றும் பூனைகளை வலியில்லாமல் முடித்து வைக்கிறாள். பெவ் ஊசி போடும்பொழுது உதவுவதும், இறந்து போன விலங்குகளின் உடல்களை எரி மையத்துக்கு கொண்டு செல்வதும் டேவிட்டின் வேலை.  அங்கேதான் டேவிட் தன்னுடைய வாழ்க்கைக்கான அர்த்தத்தைக் காண்கிறார். இது ஒரு தண்டனையாக கூட இருக்கலாம் என்றாலும் அவர் அதை விரும்பியே செய்கிறார். 

டேவிட் தன்னால் உறவுக்கு உள்ளாக்கப்பட்ட மாணவி மெலனியின் வீட்டுக்குச் செல்கிறார். அங்கே அவர் அவளின் பெற்றோர் மற்றும் தங்கையைச் சந்திக்கிறார். மெலனியின் அப்பா அவரை இரவுணவுக்கு கூட அழைக்கிறார். விருந்து முடிந்ததும் எங்களிடம் நீங்கள் எதையாவது எதிர்பார்த்து எங்கே வந்தீர்களா என்று அவர் கேட்க, டேவிட் மெலனியின் அம்மா மற்றும் தங்கை அமர்ந்திருக்கும் இடத்துக்குச் சென்று மன்னிப்பு கேட்பது போல கீழே முழங்காலிட்டு தலை வணங்குகிறார். நீங்கள் இப்போது இருக்கும் பாதை கடவுளை நோக்கிய பாதை என அவர்கள் டேவிட்டை வழியனுப்பி வைக்கிறார்கள். 

===

கவிதைத் துறையில் பேராசிரியராக இருக்கும் டேவிட்டுக்கு பைரனின் வாழ்க்கையை எழுத வேண்டும் என்ற ஆவல். நாவலில் பைரனுக்கும் தெரேசாவுக்கும் இடையே உள்ள காதல் பற்றிய அத்தியாயங்கள் மீண்டும் வாசிக்க வேண்டியவை. 

எத்தனையோ வருடங்களாக வஞ்சிக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட இனம் மேலே வரும்பொழுது அவர்கள் அதையே திரும்பி மற்றவர்களுக்கும் செய்கிறார்கள். பெட்ருஸ் அவர்களில் ஒருவன். லூஸி மீது அவனுக்கு விருப்பம் அல்ல, அவளின் நிலமே வேண்டும். வரலாறு எப்போதும் சுற்றிக்கொண்டே இருக்கிறது. 

லூஸி தன்பால் மோகியாக இருந்தாலும் தனக்கு நடந்த கொடூரத்தை அவள் பெரிதுபடுத்துவதில்லை. இங்கே இருப்பதற்கு  இந்த நிகழ்வெல்லாம் ஒரு வாடகையாக ஏன் இருக்க கூடாது என்கிறாள். தனக்கு பிறக்கப்போகும் குழந்தையை நன்றாக வளர்ப்பேன் என்கிறாள். 

பெவ் டேவிட்டிடம், உங்களுக்கும் லூஸிக்கும் என்ன பிரச்சினை எனக் கேட்க, 'எனக்கும் அவளுக்கும் இடையில் பிரச்சினைகளே இல்லை. சுற்றி இருப்பவர்களிடம் தான் பிரச்சினை. அதை அவள் அணுகுவது வேறு மாதிரி. நான் பார்ப்பது வேறு மாதிரி' என்கிறார் டேவிட். தன் வயதை விட குறைந்த, அழகான பெண்களையே விரும்பிய டேவிட் இப்போது மாறிவிட்டார். பெவ் கூட உறவை ஏற்படுத்திக் கொள்கிறார். 

நம் வாழ்க்கையில் ஒருநாள் ஒவ்வொன்றாக கைவிட வேண்டிய காலகட்டம் வரும். உறவுகள், சொந்த விருப்பு வெறுப்புகள், படிப்பு என ஒவ்வொன்றாக. நாம் விரும்பி நேசிக்கும் நாயைக் கூட ஒருநாள் பிரியத்தான் வேண்டும். நாவலில் டேவிட் ஒரு முடமான நாயிடம் பாசம் வைத்திருக்கிறார். இன்னும் ஒரு வாரம் கூட அதனால் உயிர் வாழ முடியும். ஆனால் அதன் வாழ்வை முடிக்க விரும்புகிறார் டேவிட். பெவ் அது பற்றி கேட்க, 'நான் இப்பொழுதே கைவிடுகிறேன்' என்கிறார் டேவிட். 

==

இந்நாவலை தமிழில் மொழிபெயர்த்த எழுத்தாளர்.ஷஹிதா அவர்களுக்கு என் நன்றிகள். நான் திரும்ப திரும்ப படிக்க வேண்டிய வரிசையில் இந்நாவல் கண்டிப்பாக இருக்கும். மூன்றாவது வாசிப்பிலேயே இப்பதிவை எழுதியுள்ளேன்.