Showing posts with label பியோதர் தஸ்தாயேவ்ஸ்கி. Show all posts
Showing posts with label பியோதர் தஸ்தாயேவ்ஸ்கி. Show all posts

Tuesday, September 19, 2017

பின்தொடரும் நிழலின் குரல்

அன்புள்ள ஜெயமோகன்,

புத்தக கண்காட்சிகளில் பின்தொடரும் நிழலின் குரல் நாவலை வாங்க விரும்பியதுண்டு. ஆனால், பல வருடங்களாக வாங்கவேயில்லை. சென்ற கோவை புத்தக கண்காட்சியில், முதல் புத்தகமாக வாங்கி உங்களிடம் கையெழுத்தும் பெற்றுக்கொண்டேன். ஒரு நாவலை வாங்குவதற்கும், படிப்பதற்கும் தக்க தருணம் அமையவேண்டும் போலிருக்கிறது.


வாங்கின நாளிலிருந்தே படிக்கத்தொடங்கி, இப்பொழுதுதான் முடித்தேன். இத்தனை நாட்களில் கம்யூனிசம், ரஷ்யப்புரட்சி போன்றவை பற்றி அங்கங்கு கேள்விப்பட்டதுதான். பெரிதாக ஒன்றும் தெரியாமல் தான் இந்நாவலைப் படிக்கத் தொடங்கினேன்.
அருணாச்சலம், கே.கே.எம்.. எனத் தொடங்கிய நாவலில், வீரபத்ர பிள்ளை எழுதியதாக வரும் பகுதிகளைப் படிக்கும்பொழுது உண்மையிலேயே மனதில் குழப்பங்கள் தோன்றி குழம்பிப்போனேன். நாவலில் கடைசிப் பகுதியான ‘உயிர்த்தெழுதல்’ படித்த பின்னர்தான் அமைதி ஏற்பட்டது.
விவாதங்களும், சித்தாந்தங்களும் என எவ்வளவோ இருந்தாலும் அவை அறத்தைச் சார்ந்தே இருக்கவேண்டும். போர் என்றாலும் அது அறத்தின் பொருட்டே நிகழ வேண்டும். ‘அல்லற் பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே செல்வத்தை தேய்க்கும் படை’ – அறமில்லையெனில் அது நிலைக்காது எனச் சொல்லும் இக்குறள் நாவலின் முதல் பக்கத்தில் இருந்ததற்கு, இறுதியில் விடை கிடைத்தது.
பால் சக்கரியாவின், ‘அன்னம்மா டீச்சர் பற்றிய நினைவுக் குறிப்புகள்’ என்ற கதையில், அன்னம்மா டீச்சர் இயேசுவை தம்பி என்றே அழைக்கிறார். திருமணமாகாமல் முதிய வயதில் இறக்கும் அன்னம்மா, ஒரு இளைஞனை சந்திக்கிறார். அந்த இளைஞன் இப்படிச் சொல்வதுடன் கதை முடிகிறது. “நன்றாக ஓய்வெடுத்துக்கொள் அக்கா. எனக்கு இன்றும் சக்தியொன்றும் இல்லை. நீ தளர்வுற்று விழும்பொழுது தாங்குவதற்காக மட்டுமே நான் வந்திருக்கிறேன்”. அந்த இளைஞன்தான் இயேசு என கதை முடியும்போது புரியும்.
அதுபோலவே இந்நாவலின் உயிர்த்தெழுதல் பகுதியில், இயேசு எளிமையாக வருகிறார். பகட்டான ஆடைகளோடு, கையில் செங்கோல் ஏந்திக்கொண்டு, புரவிகள் பூட்டிய தேரில் வருவார் என எல்லோரும் எதிர்பார்க்க, அதே கிழிசல் ஆடைகளோடு, காயங்களோடு தோன்றுகிறார். போரால் இறந்த குழந்தைகளை காட்டி, இதுதான் உன் கருணையா என அவர்கள் கேட்கும்பொழுது, அவர் சொல்கிறார்: “தண்டம் என்பது என் நீதியென்றால், இக்குழந்தையின் பொருட்டு இந்த உலகத்தை மும்முறை அழிப்பேன்”. இயேசு அப்படித்தானே இருக்க முடியும். தல்ஸ்தோய், பியோதர் தஸ்தயேவ்ஸ்கி, காந்தி, புகாரின் போன்றவர்களும் அப்படித்தானே. அவர்களால் அன்பையும், அறத்தையும் சார்ந்திருக்கவே முடியும்.
தோழர் கே.கே.எம்., வீரபத்ர பிள்ளை, அருணாச்சலம், பாஸ்கரன் என நாவலில் வரும் ஆண்கள் சித்தாந்தங்களுடனும், விவாதங்களுடனும் போராடிக் கொண்டிருக்க, நாகம்மை, எஸிலி போன்ற பெண்கள் எளிமையாக அறத்தை பேசுகிறார்கள். ஓரிடத்தில், ‘ஒரு முரடன் ஒரு குழந்தையை அடித்தே கொல்லப் போகிறான். அவனிடம் வாள் இருக்கிறது. நீ தடுத்தால் உன்னையும் கொல்வான். நீ பார்த்துக் கொண்டு இருப்பாயா? ‘ என அருணாச்சலம் கேட்க, நாகம்மை ‘நான் அவனைக் கடிச்சுத் துப்பிர மாட்டேன். நான் போனாலும் பரவாயில்லை.’ என்கிறாள். ‘உன் குழந்தை அநாதை ஆகிடுமே..’ என அருணாச்சலம் திரும்பவும் கேட்க, ‘என் குழந்தைக்கு தெய்வம் துணை’ என்கிறாள்.
மனிதர்களும் புனிதர்களும் பகுதியில், துறவியாகவும், சூதாடியாகவும் வரும் தல்ஸ்தோயுக்கும்
தஸ்தயேவ்ஸ்கிக்கும் இடையேயான உரையாடல் மிகச்சிறப்பு.

==

அன்புள்ள இளங்கோ
அவ்வப்போது வரும் வாசகர்கடிதங்கள் பின் தொடரும் நிழலின் குரலை எனக்கு மீளமீள நினைவுறுத்துகின்றன. நான் எதைக் கண்டடைந்தேன் என. நாவல்களினூடகக் கண்டடைந்தவற்றையே கட்டுரைகளின் வழியாகச் சொல்லமுயல்கிறேன். ஆனால் நாவல்களை வாசித்தவர்கள் கட்டுரைகளில் நான் அவற்றை ஒருபோதும் முழுமையாகவோ நிறைவாகவோ சொல்லவில்லை என்றே சொல்கிறார்கள். நன்றி
ஜெ

Tuesday, February 7, 2012

அசடன் (இடியட்)

'குற்றமும் தண்டனையும்' நாவலுக்குப் பிறகு எம்.ஏ. சுசீலா அம்மா அவர்கள், பியோதர் தஸ்தாயேவ்ஸ்கியின் 'இடியட்' நாவலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். இவ்வளவு பெரிய நாவலை மொழியாக்கம் செய்த சுசீலா அம்மா அவர்களின் உழைப்புக்கு என் வணக்கங்களும் நன்றிகளும். இப்படி ஒரு நாவலைத் தமிழில் மொழியாக்கம் செய்து அதை வெளியிட்ட மதுரை பாரதி புத்தகாலயம் பதிப்பகத்துக்கும் என் நன்றிகள்.

(முதலில் இருப்பவர் எம்.ஏ. சுசிலா)

சாலையில் செல்லும்போது முன்பின் தெரியாத ஒரு குழந்தை நமக்கு ஒரு முத்தமோ அல்லது ஒரு புன்னகையையோ  வீசிச் சென்றால், அந்த கணத்தை பதிவு செய்வதென்பது கொஞ்சம் கடினம். அது போலவே, மிகப் பெரிய படைப்பான இந்த 'அசடன்' நாவலில் நான் உணர்ந்ததை சொல்வது கொஞ்சம் கடினம். எவ்வளவு எழுதினாலும் இன்னும் போதவில்லையோ என்றுதான் தோன்றுகிறது. இருந்தாலும் நான் புரிந்து கொண்ட வரையில், இங்கே சொல்ல முயல்கிறேன்.

*********************************

என் பார்வையில்:

'உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்' என்று வள்ளலார் இறைவனை வேண்டுகிறார். உள்ளே ஒன்றை நினைத்து வெளியே ஒன்றைச் சொல்லும் மனிதர்கள், அறிவு நிறைந்தவர்கள் என்று போற்றப்படுகிறார்கள். 'பேச வேண்டியத சரியா அவன் பேசிட்டான்' என்று சொல்லும்போதே, அவனை இந்த உலகம் அறிவாளி என்று போற்றுகிறது. எல்லோரிடமும் எல்லாவற்றையும் மறைக்கத் தெரியாமல் பேசுபவனை முட்டாள் அல்லது அசடன் என்கிறோம் நாம். 'எல்லோரிடமும் எல்லாவற்றையும் உளறுகிறான்' என்று சொல்லும்போதே அவன் முட்டாளாகி விடுகிறான். அது சரி, மறைக்கத் தெரிந்தவன்தானே அறிவாளியாக இருக்க முடியும்?. 

இந்த நாவலில் வரும் இளவரசன் மிஷ்கின் கூட அப்படிப்பட்ட ஒரு வெகுளிதான். அனைவரிடமும் அன்பு செலுத்தும் அவன், கூட இருப்பவர்கள் சொல்வதைக் கேட்காமல், கெட்டவர்கள் என்று மற்றவர்கள் நினைக்கும் மனிதருக்கும் நல்லது செய்யவே எண்ணுகின்றான்.  தன்னலம் சார்ந்து முடிவெடுக்கும் மனிதர்களுக்கு மத்தியில், அவன் வித்தியாசம் நிறைந்தவனாக இருப்பதால், அதுவே அவனை 'அசடன்' என்று பெயர் பெற வைக்கிறது. 


எல்லா மனிதர்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் தனித்தனி எண்ணங்கள், ரசனைகள், ஆசைகள்,  விருப்பங்கள், வெறுப்புகள்... என் ஒவ்வொருவரும் ஒரு விதம்.  நமது விரல்களில் உள்ள வித்தியாசம் போலவேதான் மனிதர்களும். இவ்வளவு வேறுபாடுகள் நிறைந்த அனைவரையும் ஒரே புள்ளியில் கொண்டுவந்து இணைப்பது 'அன்பு' மட்டும்தான். அந்த அன்பே இருப்பின் ஆதாரப்புள்ளியாக இருக்கிறது. அந்த அன்பை மட்டுமே பற்றிக்கொண்டு இருக்கிறான் இந்நாவலின் கதாநாயகன் மிஷ்கின்.


தன்னை ஏமாற்றி பணம் பறிக்க நினைப்பவர்களையும் அவன் மன்னிக்கிறான். தன்னையோ அல்லது அவன் விரும்பும் ஒரு பெண்ணையோ, ரோகோசின் கொல்லப் போகிறான் என்பது தெரிந்திருந்தும், அவனைத் தன் சகோதரனாகவே நினைத்து சிலுவையை மாற்றிக்கொள்கிறான். தன்னை இகழ்ந்து பேசுபவர்களை அவன் கண்டுகொள்வேதேயில்லை. அவனின் தேடல் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு இருக்கிறது. ஊரினால் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு பெண்ணை அவன் நட்பாக்கி கொள்கிறான். குழந்தைகளிடம் கள்ளமற்ற அன்பைக் கண்டு, அவர்களிடம் நிறைய நேரம் செலவழிக்கிறான். மற்றவர்களைப் பொறுத்தவரையில் அவன் அசடனாக கருதப்பட்டாலும், அவனின் அன்பு தூய்மையான ஒளியுடன் நாவல் முழுவதும் பிரகாசித்துக் கொண்டே இருக்கிறது. 


மிஷ்கினின் மனப் போக்குகளை நாம் ஏதோ அவன் பக்கத்தில் இருந்து கவனிப்பது போல நாவல் கொண்டு செல்கிறது. மனிதர்களின் மனம் ஊசலாடிக் கொண்டே இருப்பதை வெகு விரிவாக கொண்டு போகிறது.  தன் மேல் மிகுந்த கழிவிரக்கம் கொண்ட நஸ்டாஸியாவைப் போன்ற மனிதர்கள் எத்தனை பேர்? எந்த முடிவுக்கும் வர முடியாமல், பிரச்சினைகளின் முடிச்சு எங்கே என்று தெரியாமல், மீண்டும் மீண்டும் புதிய முடிச்சுக்களைப் போட்டுக் கொண்டவர்கள் எத்தனை பேர்?. அத்தனை மனிதர்களையும் நாவல் விவரித்துக் கொண்டே செல்கிறது.

*********************************

கதைச் சுருக்கம்: 

இளவரசன் மிஷ்கின் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து மனநோய்க்கு ஆளாகி, சுவிட்சர்லாந்தில் தங்கி சிகிச்சை பெற்று வருபவன். தற்சமயம் அவனின் மனநலம் கொஞ்சம் தேறி இருப்பதாலும், இத்தனை நாட்களாக அவன் செலவுக்கு பணம் அனுப்பிக் கொண்டிருந்தவர் கொஞ்ச நாட்களாக டாக்டருக்குப் பணம் அனுப்பாததால், டாக்டர் அவனை அங்கிருந்து கிளம்பச் சொல்லிவிட, அவன் அங்கிருந்து ரஷ்யாவுக்குத் திரும்புகிறான். ரஷ்யாவில் அவனுக்கு தெரிந்த ஒரே நபர், இபான்சின் சீமாட்டி(லிசாவெதா) என்பவர். அதுவும் கடிதம் மூலம்தான் பழக்கம். முன்பின் பழக்கம் இல்லை. ஏதோ ஒன்றை நம்பி அவன் ரஷ்யா வருகிறான். 

(பியோதர் தஸ்தாயேவ்ஸ்கி)


அவன் நம்பியது வீண்போகாமல்,  வந்த இடத்தில் தளபதி இபான்சின், இபான்சின் மனைவி லிசாவெதா மற்றும் அவர்களின் மகள்கள் அலெக்ஸ்சான்ட்ரா, அடிலேய்டா, அக்லேயா ஆகியோரை அவன் சந்திக்கிறான். தளபதி இபான்சின் அலுவலகத்தில் பணிபுரியும் கன்யா என்பவனை தளபதி இளவரசனுக்கு அறிமுகம் செய்து அவன் வீட்டில் வாடகைக்கு இடம் இருப்பதால் அங்கே தங்கச் சொல்கிறார். மிஷ்கின் கன்யாவுடன் செல்கிறான். 

அவன் ரஷ்யாவுக்கு ரயிலில் பயணிக்கும்போதே, நஸ்டாஸியா என்னும் பெண்ணைப் பற்றி ரோகோசின் என்பவன் மிஷ்கினிடம் சொல்கிறான். ரோகோசின், சில வருடங்களுக்கு முன் தன் தந்தைக்குத் தெரியாமல், அவரின் பணத்தில்,  அந்தப் பெண்ணின் அழகில் மயங்கி அவளுக்கு விலை அதிகமுள்ள ஒரு காதணியை பரிசாக கொடுக்கிறான். இதைத் தெரிந்து கொண்ட ரோகோசினின் தந்தை,  நஸ்டாஸியாவிடம் சென்று அந்தக் காதணிகளை திரும்ப வாங்கி வந்துவிடுகிறார். இதனால் அவமானப்பட்டுப் போன ரோகோசின், இத்தனை வருடங்களாக அத்தை வீட்டில் தங்கி இருந்ததாகவும், சமீபத்தில் தந்தை இறந்து விட்டதால் இப்பொழுது திரும்புவதாகவும், அவன் மிஷ்கினிடம் சொல்கிறான். 

தளபதி இபான்சின் வீட்டுக்கு மிஷ்கின் சந்திக்க வரும்போதே, அங்கே நஸ்டாஸியாவைப் பற்றி கன்யாவும், தளபதியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அன்று நடக்கும் ஒரு விருந்தில், அவளை பார்க்கப் போவதாகவும், கன்யாவை நஸ்டாஸியா மணக்க சம்மதிப்பாள் என்றும் கன்யா கூறுகிறான். மதிப்பு மிக்கவரும், மூன்று பெண்களின் தந்தையுமான தளபதி கூட அவளின் பார்வைக்காக மதிப்பான ஒரு முத்து மாலையை பிறந்த நாள் பரிசாக வாங்கி வைத்திருக்கிறார். 

நஸ்டாஸியா சிறு வயதிலேயே, பெற்றோரை இழந்து, டாட்ஸ்கி என்பவரின் பாதுகாப்பில் இருக்கிறாள். ஊரில், அவள் டாட்ஸ்கியின் வைப்பாட்டி என்றே பேசிக்கொள்கிறார்கள் . பெரும் அழகும், அறிவும் நிரம்பிய அவளை மணக்க நிறையப் பேர் ஆசைப்பட்டாலும், அவள் யாரையும் மதிப்பதில்லை. அவளை எல்லோரும் வேறு கண்ணோட்டத்தில் பார்ப்பதாலும், இத்தனை நாள் டாட்ஸ்கியின் வீட்டில் இருந்ததாலும், மற்றவர்கள் ஆசைப்படுவது அவளின் அழகுக்கு மட்டும்தான் என்று எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள். ஆக மொத்தத்தில், அவள் ஒரு ஒழுக்கம் கெட்ட பெண்ணாகவே சித்தரிக்கப்படுகிறாள். 


நஸ்டாஸியாவின் பிறந்த நாளன்று நடந்த சந்திப்பில், இளவரசன் மிஷ்கினும் கலந்து கொள்கிறான். மெலிந்த உடலும், தோதான உடையும் இல்லாத அவனை எல்லோரும் ஒரு மாதிரி பார்த்தாலும், அவனின் கள்ளமற்ற பேச்சால் அனைவரையும் ஈர்க்கிறான். அவளின் திருமணத்தைப் பற்றி அவள் அறிவிக்கும்போது, இளவரசனிடம் கருத்துக் கேட்கிறாள். 'ஏன் நான் உங்களையே திருமணம் செய்து கொள்ளக்கூடாது?' என்று மிஷ்கினிடம் கேட்கிறாள். பின்னர் அவளே "இப்படி ஒரு கள்ளமற்ற நபரான உங்களை அடைய எனக்குத் தகுதி இல்லை" என்று மிஷ்கினிடம் கூறிவிட்டு,  கன்யாவையும்  ஒதுக்கி விடுகிறாள். தளபதி கொடுத்த முத்து மாலையை திருப்பிக் கொடுக்கிறாள். அங்கே வந்து ரகளை செய்த ரோகோசினை தான் விரும்பதாகவும், அவனையே திருமணம் செய்து கொள்வேன் என்று கூறிவிட்டு ரோகோசினுடன் கிளம்பிச் சென்றுவிடுகிறாள். 


கொஞ்ச நாள் கழித்து, ரோகோசினுடன் திருமணம் நடக்க இருந்த நாளன்று, இளவரசன் மிஷ்கினிடம் ஓடி வந்து விடுகிறாள். ஒரு மாதம் கழித்து திரும்பவும்,  இளவரசனிடம் இருந்து கிளம்பி ஓடி விடுகிறாள். அவளைத் தேடி வருமிடத்தில், அக்லேயா அவனை விரும்புவதாகச் சொல்கிறாள். ரோகோசினோ இன்னும் மிஷ்கினையும், நஸ்டாஸியாவையும் தொடர்ந்து கொண்டே இருக்கிறான். இளவரசன் எங்கே சென்றாலும் இரண்டு கண்கள் அவனை நோட்டமிட்டுக் கொண்டே இருக்கின்றன. மிஷ்கின் மற்றும் நஸ்டாஸியாவை, ரோகோசின் தான் தொடர்ந்து நோட்டமிட்டுக் கொண்டே இருக்கிறான்.

அக்லேயாவும்,  நஸ்டாஸியாவும் ஒருநாள் சந்தித்துப் பேசுகிறார்கள். இருவரும் மிஷ்கினை விட்டுத் தர தயாரில்லை. பேச்சின் முடிவில், அக்லேயா சண்டையிட்டுப் போய்விடுகிறாள். அக்லேயா எவ்வளவு சொல்லியும் மிஷ்கின், நஸ்டாஸியாவின் நிலைமையை நினைத்து அங்கேயே தங்கி விடுகிறான். எனவே, அக்லேயா திரும்பவும் மிஷ்கினை சந்திக்க மறுக்கிறாள்.

 மிஷ்கினுக்கும், நஸ்டாஸியாவுக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. திருமணத்தன்று காலையில், சர்ச்க்குச் செல்ல மணமகளான நஸ்டாஸியா வெளியே வரும்போது கூட்டத்தில் பதுங்கியிருந்த ரோகோசினைப் பார்த்துவிடுகிறாள். உடனே அவனைப் பார்த்து "என்னை இங்கிருந்து கூட்டிக் கொண்டு போய்விடு" என்று அவனிடம் சொல்ல, மணமகளான அவளை இழுத்துக்கொண்டு ரோகோசின் ரயில் நிலையம் விரைகிறான்.


இதை அறிந்த மிஷ்கின், ஏதோ நடக்கப் போகிறது என்பதை உணர்ந்து நஸ்டாஸியாவைத் தேடி கிளம்புகிறான். இறுதியில், ரோகோசினே மிஷ்கினைச் சந்தித்து, அவன் வீட்டுக்கு கூட்டிச் செல்கிறான். அங்கே, நஸ்டாஸியா கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறாள். செய்த கொலைக்காக ரோகோசின் சிறை செல்கிறான்.

மிஷ்கின் சொல்ல முடியாத வேதனையுடன் பிதற்றுகிறான். முன்னர் அவன் எப்படி மனநலம் சரியில்லாமல் இருந்தானோ, அதை நோக்கிச் சென்றுவிட்டான். இப்பொழுது அவனால் எதையும் கிரகித்துக்கொள்ள முடியவில்லை. திரும்பவும் அவன் அதே டாக்டரிடம் சிகிச்சைக்குச் அனுப்பி வைக்கப்படுகிறான்.

எந்த மனநோய் சரியாகி, அவன் இந்த உலகத்தை நோக்கி வந்தானோ, கடைசியில் அதே உலகம் அவனை, மீண்டும் அதே நோய்க்கு துரத்தி விடுகிறது.

*********************************

முக்கிய கதாபாத்திரங்கள்:

நாவலில் வந்து போகும் மனிதர்களை நாம் நம் வாழ்வில் கண்டிப்பாக சந்தித்து இருப்போம். கன்யாவின் தந்தையாக வரும் தளபதி இவோல்ஜின், பொய்யான கதைகளையும், தவறான தகவல்களையும் பேசிக் கொண்டே இருக்கிறார். எதிராளியை நம்பச் செய்ய வேண்டும் என அவர் கூறும் தகவல்கள் வியப்பானவை.

அதேபோல, மற்றவர்களை புகழ்ந்து பேசியே காரியம் சாதிக்க நினைக்கும் லெபதேவ், கன்யாவின் தம்பி கோல்யா, தங்கை வார்யா என நினைவில் வந்து கொண்டே இருக்கிறார்கள்.

அதிலும், கோல்யாவின் நண்பனாக வரும் இப்போலிட். காசநோயால் பாதிக்கப்பட்டு, இன்னும் கொஞ்ச நாளில் அவன் இறந்து விடப்போகிறான். அதை அவன் தெரிந்தும் வைத்திருக்கிறான். எனவே, அவன் மற்றவர்களுக்கு தன் மரண சாசனம் போல் ஒரு கடிதம் எழுதி வைத்து, அதை அவனே எல்லோருக்கும் படித்துக் காட்டுகிறான். மிக நீண்ட கடிதம், வாழ்வில் அவன் புரிந்து கொண்ட எல்லாவற்றைப் பற்றியும் கோடிட்டுக் காட்டுகிறான்.

அக்லேயாவின் தாயாக வரும் லிசாவெதா, தன் கள்ளமற்ற உள்ளத்தால் நாவல் முழுவதும் வந்து போகிறாள்.

*********************************
 புத்தகத்திலிருந்து சில வரிகள்:

"உங்களுக்கு ஓநாய்களிடம் பயம் இருக்குமானால் நீங்கள் காட்டுக்குப் போகக் கூடாது" (பக்-179 )

"நம் கண் முன்னே விரிந்து கிடப்பது ஒரு நெடிய வாழ்க்கைப் பயணம். கணக்கற்ற, அளவிடற்கரிய,  விதம் விதமாகக் கிளைத்துக் கொண்டே போகும் பல உள் விசயங்கள் நம்மிடமிருந்து மறைந்தபடி அங்கே - அந்த வாழ்க்கைக்குள் பொதிந்து கிடக்கின்றன. சதுரங்க விளையாட்டில் தேர்ச்சி பெற்ற ஒருவனால், அடுத்து அவன் நகர்த்தப் போகும் சில இடங்களை, சில காய்களை வேண்டுமானால் ஊகிக்க முடியலாம். ஆனால் நம்முடைய வாழ்க்கையில்தான் எத்தனை நகர்வுகள், எத்தனை திருப்பங்கள் இருக்கின்றன!" (பக் - 451 )

"ஒரு மரத்தின் அருகாமையில் நடந்து போகும் ஒரு மனிதனால், அதைப் பார்த்து எப்படி மகிழ்ச்சியடையாமல் இருக்க முடிகிறது என்பது எனக்கு உணமையாகவே புரியவில்லை தெரியுமா?. சக மனிதனிடம் உரையாட முடிந்த ஒருவனால், அவனிடம் அன்பு காட்டி மகிழ்ச்சியாக இருக்க முடியாமல் போனது ஏன்? ஐயோ, என்னால் அதைத் தெளிவாக வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்த முடியவில்லையே.... வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் எவ்வளவு அற்புதமான விசயங்களை நாம் எதிர்ப்படுகிறோம்! உதவாக்கரையான ஒரு மனிதன் கூட அவற்றின் அழகை, அருமையை உணராமல் இருந்து விட முடியாது. ஒரு சிறு குழந்தையைப் பாருங்கள்! கடவுள் நமக்கு அருளியிருக்கும் சூரியனின் உதயத்தைப் பாருங்கள்! புல்லின் நுனியைக் கொஞ்சம் பாருங்கள். அது எப்படி வளர்கிறது பாருங்கள். உங்கள் மீதே பார்வையைப் பதித்தபடி உங்களை நேசித்துக் கொண்டிருக்கும் அந்தக் கண்களுக்குள் கொஞ்சம் பாருங்கள்.." (பக்- 595 )

 "ஜன்னலிலிருந்து யாரும் வேண்டுமென்றே தாவிக் குதிப்பதில்லை. ஆனால், வீடு தீப்பற்றிக் கொண்டுவிட்டது என்றால், அப்போதே வீட்டிலுள்ள மிக வயதான முதியவரும், பெண்மணியும் கூட ஜன்னலில் ஏறிக் குதிக்கத் தயாராகி விடுகிறார்கள். தேவை என்று வரும்போது உதவி கூட வேண்டியதில்லை." (பக் - 606 )


*********************************

எழுத்தாளர்களின் பார்வையில்:
(புத்தகத்திலும் முன்னுரைகளாக உள்ளது)

"மென்மையான இந்த அசடன், இந்த உலகத்தை, அதன் சிந்தனைப் போக்குகளை, உணர்வுகளை, இங்கு வாழும் மனிதர்கள் கைக்கொண்டிருக்கும் எதார்த்தத்தை, அவர்கள் காணும் உண்மையை முற்றாக நிராகரிக்கிறான். அவனது உண்மை, அவர்களின் எதார்த்ததிலிருந்து முழுமையாக வேறுபட்டிருக்கிறது. அவர்களின் எதார்த்தம் அவனது கண்களில் ஒரு நிழலைப் போல மட்டுமே தோற்றம் தருகிறது. முற்றிலும் புதிதான, ஒரு உண்மையான எதார்த்தத்தைக் காண விரும்பி, அதை அவர்களிடம் எதிர் பார்ப்பதினாலேயே அவன் அவர்களின் எதிரியாகிப் போகிறான்" - ஹெர்மன் ஹெஸ்ஸே.

"இந்நாவல் எனக்கு சிறு வயதில் அளித்த மனப்பிம்பம் என்பது இன்றும் பொருத்தமானதாகவே இருக்கிறது. ஒரு இருண்ட வீட்டுக்குள் மிஷ்கின் கையில் ஒரு விளக்குடன் செல்கிறான். செல்லும் வழியில் உள்ள அழுக்கும் குப்பையும் கொலை ஆயுதங்களும் ஒட்டடையும் எல்லாம் அந்த ஒளியில் தெரிகின்றன. ஆனால் அவற்றுக்கு தொடர்பற்றவனாக தன் ஒளியாலேயே முழுமை கொண்டவனாக அவன் இந்த இடத்தை கடந்து சென்று விடுகிறான்" - ஜெயமோகன்.

"எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு மனிதன் அனைவரோடும் அன்பு செலுத்தி வாழ்வதற்கு ஏன் அனுமதிக்கப்பட மறுக்கிறான் என்ற தஸ்தாயேவ்ஸ்கியின் கேள்வி இன்றும் பதிலற்றே இருக்கிறது. இடியட் நாவல் அன்பின் பிரகாசத்தை ஒளிரச் செய்யும் அற்புதப் படைப்பு. இதிகாசத்தைப் போல வாழ்வின் மேன்மைகளைச் சொல்லும் ஒரு உயர்ந்த நாவல்" - எஸ். ராமகிருஷ்ணன்.

*********************************

புத்தகம் வாங்க: 

Bharathi Book House,
F-59 / 3 & 4 , Corporation Shopping Complex,
(Shopping Complex Bus Stand,)
Periyar Bus Stand,
Madurai-625001

உடுமலை.காம் வழியாக: அசடன்



*********************************

படங்கள்: இணையத்திலிருந்து - நன்றி.

Friday, September 25, 2009

குற்றமும் தண்டனையும் (Crime and Punishment)

ஒரு குற்றத்தை செய்து விட்டு அதற்க்கான தண்டனையை அனுபவிக்க ஒரு மனசு வேண்டும். அல்லது தான் செய்த குற்றம் சரியே என நினைத்து கொண்டிருப்பது. தன்னுடைய நோக்கில், தான் செய்த கொலை அல்லது திருட்டு போன்றவற்றை சந்தர்ப்ப வசத்தால் நேர்ந்தது என்றும் கூட சொல்லலாம். ஊருக்கு தப்பாக தெரியும் ஒரு குற்றம், குற்றம் செய்தவனின் மனசில் நல்லதாக படலாம்.

ஒரு மாணவன், ஏதோ ஒரு நோக்கத்தில் ஒரு கொலையை செய்து விட்டு ஊரில் நடமாடி கொண்டு இருந்தால் எப்படி இருக்கும். அதுவும் அந்த கொலையை பற்றி துப்பு துலக்கும் நபர்களிடம் இவன் நட்பை வளர்த்து கொண்டு, அவர்களிடமே அந்த கொலையை பற்றி பேசி கொண்டிருந்தால் எப்படி இருக்கும் ?. அவனுடைய மனசாட்சி அவனை விடுவதில்லை. அவன் அவற்றை எதிர் கொள்ள தயார் ஆகின்றான். அப்படியும் ஒரு நப்பாசை, தப்பிக்கலாமா அல்லது கடைசி வரை மோதி பார்க்கலாமா என்று.

கடைசியில் அவன் தன் தங்கையிடம் சொல்கிறான். "குற்றமா ? எது குற்றம் ?, அந்த கிழவியினால் யாருக்கும் எந்த பலனும் இல்லை. மிகவும் கேவலமான பிறவி அவள். அவளை கொன்றது, நாற்பது பாவங்களுக்கு மன்னிப்பை தேடி கொண்டதுக்கு சமம்."

"அண்ணா என்ன சொல்லி கொண்டிருக்கிறாய் நீ. எப்படியானாலும் நீ ரத்தம் சிந்த வைத்திருக்கிறாய் என்பது உண்மைதானே ? " தங்கை.

"எல்லோரும்தான் ரத்தம் சிந்தி கொண்டிருக்கிறீர்கள், இந்த பூமியில் எப்போதுமே மனித குல வரலாற்றில் நாம் கடந்து வந்திருக்கிற எல்லா காலங்களிலும் ரத்தம் பிரவாகமாக ஓடி கொண்டுதான் இருக்கிறது. 'ஷம்பைனை' உடைத்து ஊற்றியது போல ரத்தம், இங்கே பெருக்கெடுத்து ஓடியிருக்கிறது !. அப்படி ஓட வைத்த மனிதர்கள்தான் தலை நகரங்களில் மன்னர்களாக முடி சூடி கொண்டிருக்கிறார்கள் ! பிற்பாடு அவர்களைத்தான் மனித குலத்தின் காவலர்களாக இந்த உலகம் அழைக்கிறது ! சந்தர்ப்ப வசத்தால் நான் மாட்டி கொண்டேன். இல்லையெனில், நானும் முடி சூட்டி கொண்டிருப்பேன்! ஆனால் இப்போது வலையில் வீழ்ந்து விட்டேன்."

ஒரு முறை நினைத்து பாருங்கள், ஒரு கொலையை செய்தவனுக்கு தண்டனை. கூட்டம் கூட்டமாக கொலை செய்பவர்கள் நாட்டை ஆள்கிறார்கள். அவர்களுக்கு பெயர் மன்னர், அதிபர், இத்யாதிகள். அவன் கேட்கும் ஒரே கேள்விக்கு நம்மால் யாராவது பதில் சொல்ல முடியுமா? . உலகின் எல்லா மூலையிலும் நடந்து கொண்டிருக்கும் கொலைகளுக்கு யார் பொறுப்பு. அவன் கொன்றது, ஒரு நல்ல மனிதனை இல்லை. அவன் நல்லவன்தான். வட்டிக்கு பணம் விட்டு மக்களை ஏமாற்றி கொண்டிருக்கும் ஒரு கிழவியை கொல்வது குற்றமா, அவள் நல்லவளாக இருந்திருந்தால் அவன் இந்த செயலை செய்திருக்க மாட்டான்.

பக்கம் பக்கமாய் உரையாடல்கள், மனதை படிப்பது போல. குற்றம் செய்தவனின் மன நிலைக்கு பக்கத்தில் நம்மை இட்டு செல்கிறது ரஷ்ய நாவலான, குற்றமும் தண்டனையும். பியாதோர் தஸ்தெவெஸ்கி எழுதியுள்ள இந்நாவலை, எம்.ஏ.சுசீலா அம்மையார் அவர்கள் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

மூன்று வாரங்களுக்கு மேல் இரவில் படித்து முடித்தேன். நான் படித்த நாவல்களில் பெரிய நாவல் இதுதான். நாவலில் வரும் அத்தனை கதை மாந்தர்களின் பேர்தான் ரஷ்ய மொழியே தவிர, அவர்களை நாம் நம்முடைய ஊரிலும் பார்க்கலாம்.

நாவலில் வரும், ரஸ்கொல்நிகொவ் தான் கதாநயகன். கொலையை செய்தவனும் இவனே. இவனின் அம்மாவாக வரும் பல்கேரியா, தங்கையாக வரும் துனியா, நண்பனாக வரும் ரசூமிகின், காதலியாக வரும் சோனியா... அடுக்கி கொண்டே போகலாம். பாத்திர படைப்பு என்றால், இப்படி இருக்க வேண்டும். ஒவ்வொருவரை பற்றியும் நமக்கு நன்றாக தெரிந்த பக்கத்து வீட்டு நபர்களை போல கொண்டு செல்கிறது நாவல்.

இதை தமிழில் மொழி பெயர்த்து என் போன்ற நபர்களை படிக்க தூண்டிய, சுசீலா அம்மா அவர்களுக்கு என்னுடைய நன்றிகள் பல. 550 பக்கங்களுக்கு மேலாக மொழி பெயர்த்த அவர்களின் உழைப்புக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

சுசீலா அவர்களின் வலை தளம் : http://masusila.blogspot.com/

புத்தகத்தை பெற,
Bharathi Book House,D-28, Corporation Shopping Complex,Periyar Bus Stand, மதுரை