Sunday, October 31, 2010

சின்னஞ்சிறு துளிகள் (31/10/2010)

விசுவின் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் ஒருவர் பள்ளிகளில் கழிப்பறை இல்லாததைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். தனியார் பள்ளியோ, அரசுப் பள்ளியோ முறையாக எந்தப் பள்ளிகளிலும் கழிவறை வசதிகள் இல்லை. அரசுப் பள்ளிகளில் இன்னும் கொடுமை. அதை அனுபவித்தவர்களுக்குத் தெரியும் அந்த நரகத்தைப் பற்றி. பசங்கள் கூட பரவாயில்லை, கொஞ்சம் பெரிய பெண்கள் எல்லாம் என்ன செய்வார்கள்?. எவ்வளவோ இலவசங்களை அள்ளி வழங்கும் அரசுகள் கொஞ்சம் கவனித்தால் நமது செல்வங்கள், பள்ளியில் ஒரு பிரச்சனையிலிருந்து தப்பி விடுவார்கள்.

********************************

தன்னை பாதித்த சம்பவமாக ஆவணப் பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் ஆனந்த விகடனில்;

"ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வைத்தியனாதபுரம் என்ற கிராமத்தில் குழந்தைத் தொழிலாளர்களுக்கான சிறப்புப் பள்ளி ஒன்று இயங்குகிறது. வெறும் பத்துக்குப் பத்து அறையில் ஒன்று முதல் ஆறு வகுப்பு வரையிலும் 25 மாணவர்கள் படிக்கின்றனர். எல்லோரும் ஒரே அறையில்தான் அமர்ந்திருக்க வேண்டும். ஒரு மேசை, நாற்காலி கூடக் கிடையாது. மிக மிகக் குறைந்த சம்பளத்தில் அந்தப் பள்ளியில் ஒரு பெண் ஆசிரியை வேலைக்கு அமர்த்தப்பட்டு இருக்கிறார். 'ஒரே அறையில் ஆறு வகுப்பு மாணவர்களையும் எப்படிச் சமாளிப்பீர்கள்?' என்று அவரிடம் கேட்டேன். 'ஒன்று, இரண்டாம் வகுப்பினருக்கு போர்டில் எழுதிப்போட்டு படிக்கச் சொல்வேன். மூன்று, நான்காம் வகுப்பினரை எதிர் திசையில் திரும்பி அமர்ந்து படிக்கச் சொல்வேன். ஐந்து ஆறாம் வகுப்பு மாணவர்களை மற்ற திசையில் திரும்பி அமரச் சொல்லி நான் பாடம் நடத்துவேன்' என்றார். கல்விச் சேவையில் தமிழ்நாடு உச்சிக்குப் போய்விட்டது என்று பீற்றிக்கொள்வது எத்தனை அயோக்கியத்தனம்? "

********************************

கோவையில் இரண்டு குழந்தைகளை கடத்திக் கொண்டு போய் வாய்க்காலில் தள்ளி விட்டு வந்துள்ளான் ஒருவன். பள்ளிக்கு கூட்டிச் செல்லும் கால் டாக்ஸி மூலம் அவன் அவர்களைக் கடத்திக் கொண்டு போயுள்ளான். பள்ளி ஆசிரியர்களும், பெற்றோர்களும் இக்கட்டான சூழலில் தப்பிக்க வழி முறைகளைச் சொல்லிக் கொடுக்கலாம். முன் பின் தெரியாத ஒருவன் வெளியே எங்கேனும் கூப்பிட்டால் செல்லக் கூடாது என்று அறிவுறுத்தலாம். பாவம் அந்தக் குழந்தைகள். ஒரு குழந்தையின் உடல் கிடைத்து விட, இன்னொரு குழந்தையின் உடலை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

செல் போனால் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் அந்தக் குழந்தைகளை கடத்தியவனை காட்டிக் கொடுத்தது செல் போன் தான். அவனைப் பிடிப்பதற்குள் வாய்க்காலில் தள்ளி விட்டான். கொஞ்ச நாட்களுக்கு முன்னர் சென்னையில் இருந்து பெங்களூருக்கு கடத்தப்பட்ட சிறுவனை வழியில் காட்டிக் கொடுத்ததும் செல் போன் தான்.

********************************

ஒரு நாள் காலையில் தொலைக்காட்சியில் ஜெயலலிதா அம்மா ஒரு பாட்டுக்கு ஆடிக் கொண்டிருந்தார். சிக்கென்ற உடையில் பினனால் சிறகுகள் போன்ற அலங்காரத்துடன் ஆடிக் கொண்டிருந்த அந்த பாடலை வீட்டில் எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்த போது 'இப்போ இந்த பாட்டை அம்மா பார்த்துட்டு இருந்தாங்கன்னா என்ன நெனப்பாங்க' என்றேன். அப்போ தங்கமணி 'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்னு நெனப்பாங்க' என்று ஒரே போடா போட்டாங்க பாருங்க, ஒரே சிரிப்பு மழைதான்.

********************************

என்னைப் பாதித்த சின்ன விடயங்கள் பற்றி இனி எழுதலாம் என்று நினைக்கிறேன். இதே தலைப்பை வேறு யாராவது வைத்திருந்தால், எனக்குத் தெரியப்படுத்தவும். நான் மாற்றிக் கொள்கிறேன். நன்றி.

Thursday, October 28, 2010

தலைவர்கள் வருகிறார்கள்..தேர்தலுக்கும்
இடைத் தேர்தலுக்கும்
வெள்ளம் வந்தாலும்
தீ வைத்துக் கொண்டாலும்
கட்சியினர் இல்லத் திருமணத்திற்கும்
உதவிகள் வழங்கவும்
கடைகள் திறப்பிற்கும்
எங்கள் தலைவர்கள்
அன்று ஒரு நாள் மட்டும் பார்க்க வருகிறார்கள்
நோயுற்றிருக்கும் நோயாளியை
பார்க்க வருவது போன்றும்
மீதியுள்ள நாட்களை மறந்தும்.... !


{ இது ஒரு மீள் பதிந்த பதிவு :) }

நன்றி: புகைப்படம் கொடுத்த கூகிள் ஆண்டவருக்கு.

--------------------------------------------------

Wednesday, October 27, 2010

நாடும், மக்களும் என்ன செய்வர்..

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாட்டைப் பற்றி சில எண்ணங்கள். இவர்கள் இப்படித்தான், அவர்கள் அப்படித்தான் என நாமாகவே ஒரு முடிவுக்கு வருகிறோம். அண்டை வீட்டுக்காரர்கள் முதல் அடுத்த நாட்டுக்காரன் வரை நமக்குள்ளாகவே ஒரு கற்பிதம்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் தன்னந் தனியாக ஒரு வெளிநாட்டில் போய் நான் இறங்கியபொழுது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. இரண்டு பேருடன் நான் ஒரு வீட்டைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். கூட இருந்த ஒரு பிரெஞ்ச் நண்பனும், ஜெர்மன் தோழியும் சகலமும் சொல்லிக் கொடுத்தார்கள். அடுப்பு பற்ற வைப்பது முதல் வீட்டைப் பூட்டுவது வரை ஒவ்வொன்றையும் சொல்லிக் கொடுத்தார்கள். சரியாக சொல்லப் போனால் மொழியோ, நாடோ அங்கே பிரச்சனையாக இல்லை. சக மனிதர்கள் மேல் உள்ள அக்கறை தான், எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இருக்கிறது.

ஒவ்வொரு நாட்டுக்கும் வித்தியாசமான பண்பாடுகள். இங்கே இருப்பதை அங்கேயும், அங்கே இருப்பதை இங்கேயும் தேடினால் எப்படிக் கிடைக்கும்?. நாடுகளின் அரசியல் தலைவர்கள் வேண்டுமானால் ஒரு சில நோக்கங்களோடு இருக்கலாம், ஆனால் நாட்டில் உள்ள மனிதர்கள் அனைவரும் கெட்டவர்கள் அல்ல.

கணியன் பூங்குன்றனாரின் பின்வரும் வரிகள் சொல்ல வருவதும் இதைத்தானோ?

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோடு அன்ன
சாதலும் புதுவதன்றே
வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்று இலமே
மின்னொடு வானந் தண்துளி தலையியானது
கல்பொருதிரங்கு மல்லற் பேர் யாற்று
நீர்வழிப் படூம் புணை போல் ஆருயிர்
முறைவழிப் படூம் என்பது
திறவோர் காட்சியிற் திறந்தனம் ஆகலின்
மாட்சியிற் பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

(பாடலில் பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்)


ஒரு போட்டி நடக்கும்போது தன் நாடு வெற்றி பெற வேண்டும் என நினைப்பது இயற்கை. ஆனால், எதிர் அணி வெற்றி பெறவே கூடாது எனக் கோபம் கொள்ளுவது எதற்கு?.

சில பேர் செய்யும் தவறுகளுக்கு அந்த நாடும், மக்களும் என்ன செய்வர் ?.

குறிப்பு: பூமி புகைப்படம் இணையத்தில் இருந்து. நன்றி.

Friday, October 22, 2010

ஒரு நாளிதழின் முன்பக்கம்
பெரும் விளம்பரங்கள்
அரசியலாளர்களின் அறிக்கைகள்
நடிகர்களின் விவாகரத்துச் செய்திகள்
காதற் கொலைகள்
போலிகளின் தரிசனங்கள் என
முன்பக்கம் நிரம்பிய ஒரு நாளிதழில்
ஒரு விவசாயியின் தற்கொலைச் செய்தி
அவனின் மரணக் குழி போலவும்
அவனின் வறுமை போலவும்
எங்கோ ஒரு மூலையில்
சிறு கட்டத்துக்குள்..


Wednesday, October 20, 2010

கவிதை எழுதாத நாள்


துரோகத்தைச் சந்திக்காத
நட்பை உணராத
புன்னகை உதிர்க்காத
புதியவை கற்காத
காதலிக்கத் தோன்றாத
குழந்தை முகம் பார்க்காத
பூக்களின் வாசம் முகராத
வெயிலின் தீண்டல் அறியாத
காற்றின் உயிர் காணாத

நாட்களெல்லாம்
கவிதை எழுதாத நாளாகவே முடிகிறது !
படம் : இணையத்திலிருந்து - நன்றி.

================================

Friday, October 15, 2010

எல்லாம் யோசிக்கும் வேளையில்...


புயலிலே ஒரு தோணி நாவலைப் பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. எல்லாக் கதைகளையும் படமாக எடுத்து விட்டார்கள், ஒரு கதையும் கிடைப்பதில்லை எனப் பலர் சொல்லி நீங்கள் கேட்டிருக்கலாம். 1984 வருடத்தில் ந.முருகேசபாண்டியன் என்பவர் ப.சிங்காரம் அவர்களை நேர்கொண்டு பேசியுள்ளார். புயலிலே ஒரு தோணி புத்தகத்தில் இவர்களின் பேச்சு இடம் பெற்றுள்ளது.

அந்தப் பேட்டியில் அவர் பேசியுள்ள சிலவற்றை இங்கே தருகிறேன்;

"புயலிலே ஒரு தோணி நாவலைப் போட்டால் இன்னிக்கி யாரு காசு கொடுத்து வாங்கி படிப்பாங்க.. இங்க சீரியசாப் படிக்கிற வழக்கமே இல்லாம போச்சு. சீரியசா எழுதத்தான் எவ்வளவோ விசயமிருக்கு. இன்னக்கி நம்ம ஆளுக இல்லாத இடம் உலகத்தில் எங்க இருக்கு? ஆனால் போன இடத்துல என்ன இருக்குன்னு கூர்மையாப் பார்க்க மாட்டாங்க.. அப்படிப் பார்த்திருந்தாங்கன்னா இன்னக்கித் தமிழில ஏகப்பட்ட புத்தகம் வந்திருக்கும்... பாருங்க புயலிலே ஒரு தோணி நாவல்ல தோணில போறதப்பத்தி ஒரு இடம் வருது. அது நாங்க யுத்த நேரத்ல இந்தோனேஷியாவாலிருந்து மலேயாவுக்கு சரக்குகளோட போனதுதான். நாவல் எழுதறப்போ தோணுன சில சந்தேகங்களைக் கூட வந்தவங்க கிட்ட கேட்டேன். ஆமா போனோம் வந்தோம். கூட யாரு வந்தா, என்ன நடந்ததுன்கிறதெல்லாம் ஞாபகம் இல்லேன்னுட்டாங்க. அது எதுக்கு... வெள்ளைக்காரன் மூணு வருஷம் நம்ம நாட்ல வந்து தங்கினாப் போதும். நம்ம வாழ்க்கையை வச்சு நாவல் எழுதிப் போடுவான். மதுரை டவுன்ஹால் ரோட்ல சாயங்காலம் நடக்கிறதப் பார்த்திங்களா? மூணு சீட்டு போடுறவன், திரி குத்துறவன், முடிச்சவிழ்க்கிறவன், கூவி ஏலம் போடுறவன், பிராத்தலுக, மாமாகாரனுக... நிறைய எழுதலாம். அதுமாதிரி கீழ மாசி வீதிப் பலசரக்கு கடைகள்.. அது ஒரு தனி உலகம். அங்க நடக்கிறத வச்சு எவ்வளவு எழுதலாம் தெரியுமா? உண்மையச் சொன்னா நம்ம வாழ்க்கையிலதான் எழுத எவ்வளவு விசயமிருக்கு? ஆனால் கூர்மையாகப் பார்த்து எழுதுற வழக்கம் நம்ம ஆளுகளுக்குக் கிடையாது. "

"அப்புறம் எந்த நாவலாக இருந்தாலும், எழுத்தாளன் சொல்லக் கூடிய உலகம் ரொம்பப் புதிதாக இருந்தாலும், அவன் சரியாக ஒழுங்குடன் சொல்லியிருந்தால் அந்த உலகம் வாசிக்கிற யாருக்கும் தெளிவாப் புரியும். அப்படித்தான் நான் சொல்லியுள்ளவை. போர், வெளிநாட்டுச் சூழல் சம்பந்தப்பட்ட விசயங்கள் - தமிழ் ஆளுகளுக்குப் புதிசு என்றாலும் - நிச்சயம் விளங்கும். ஆனா அந்த நாவல் கவனிக்கப்படவில்லை"
Justify Full
நாவலிலிருந்து;

"எல்லாம் யோசிக்கும் வேளையில் உண்பதும் உறங்குவதுமாக முடிகிறது".

******

"நாம் எதை நம்புவது"
"இருள் விலகி ஒளி பிறக்கும் என்பதை"
"ஒளி பிறக்காவிடின், இருளையே ஒளியென நம்புவது"

******

"சந்திப்பதும் பிரிவதும் மனிதனின் தலைவிதி"
"சந்திப்பின் விளைவே பிரிவு..."

******

எஸ். சம்பத்தின் 'இடைவெளி', ப. சிங்காரத்தின் 'புயலிலே ஒரு தோணி', ஜி. நாகராஜனின் 'நாளை மாற்றுமொரு நாளே' ஆகிய மூன்று நாவல்களும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படுவது உலக இலக்கியத்திற்கு நம்முடைய பெறுமதியான கொடையாக இருக்கும்...

- இந்த மாத குமுதம் தீராநதியில் - சி. மோகன் அவர்கள்.

Wednesday, October 13, 2010

பதேர் பாஞ்சாலிசின்ன வயதில் ஞாயிற்றுக் கிழமைகள் மாலையில் மட்டும் தமிழ் படம் போடுவார்கள். ஒரு சில வீடுகளில் மட்டும்தான் தொலைக்காட்சிப் பெட்டி வைத்திருந்தார்கள். அதுவும் ரொம்ப தூரம் தள்ளி உள்ள வீட்டுக்குச் சென்றுதான் பார்க்க முடியும். சில ஞாயிற்றுக் கிழமை மதியங்களில் வேற்று மொழிப் படங்களைப் போடுவார்கள். அதில் தமிழ்ப் படங்களும் ஒவ்வொரு நாள் வரும். தமிழ் படம் போடுவார்கள் என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்த ஒரு மதிய நேரத்தில்தான் 'பதேர் பாஞ்சாலியைத்' திரையிட்டார்கள். அந்தச் சின்ன வயதில் கருப்பு வெள்ளையில், மொழி புரியாத படமாக இருந்த இப்படத்தில் ஒரு சில காட்சிகள் கடந்த பின்னர் பிடிக்காமல் வீட்டுக்கு ஓடி வந்து விட்டேன்.

ஒரு கிராமத்தில் நடக்கும் கதைதான் பதேர் பாஞ்சாலி.

மேல் மாடத்தில் இருந்து துளசியை வணங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெண்மணி, அவளின் தோட்டத்திலிருந்து ஒரு சிறுமி கொய்யாவைப் பறித்துக் கொண்டு போவதைப் பார்த்துக் கத்துகிறாள். அந்தச் சிறுமிதான் துர்கா. எதிரே ஒரு பெண்(ஜெயா) வருவதைக் கண்ட துர்கா ஒளிந்து கொண்டு, அவள் போனதும் வீட்டுக்குப் போகிறாள்.வீட்டுக்கு வந்த துர்கா கொய்யாவை ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கிறாள். பானைக்குள் இருந்து பூனைக் குட்டிகளை வெளியே எடுத்து விடுகிறாள். அவர்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு பாட்டி வசித்து வருகிறாள். அந்தப் பாட்டிக்கு வேண்டியே தினமும் கொய்யாவைக் கொண்டு வருகிறாள் துர்கா. கொய்யாவைப் பார்த்ததும் சிரிக்கும் பாட்டி, அவளுக்கு வாழைப் பழத்தைக் கொடுக்கிறாள்.துர்காவின் அம்மா(ஜெயா) கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருக்கும் போது, மேல் மாடியில் இருந்து அப்பெண் 'உன் மகள் தினமும் தோட்டத்தில் இருந்து பழங்களைத் திருடிக் கொண்டு போகிறாள்' என்று திட்டுகிறாள். வேதனையான முகத்துடன் வீட்டுக்கு திரும்புகிறாள் ஜெயா. ஜெயாவின் கணவன் பெயர் ஹரி. வறுமை சூழ்ந்த குடும்பம்.வீடு மேல் கொடிகள் படர்ந்த ஒரு பழைய வீட்டில் வசித்து வருகிறார்கள். உடைந்த கதவுகள், பூசப் படாத தரை, ஜன்னல் இல்லாத சட்டங்கள் என ஒரு சாமான்ய இந்தியனின் வீடு தான் ஹரி குடும்பத்தின் வீடு.

தண்ணீர் குடத்துடன் வீடு திரும்பிய ஜெயா, 'உன்னால்தான் துர்கா கெட்டுப் போகிறாள், சமையல் அறையில் இருந்து பொருள்களை எடுத்துக் கொள்கிறாய்' என பாட்டியைத் திட்ட, வீட்டை விட்டு கிளம்பி விடுகிறாள் பாட்டி. ஹரி வேலை தேடிக் கொண்டிருப்பதாக ஜெயாவிடம் சொல்கிறான். அந்த வேலை கிடைத்தால் நாம் நன்றாக வாழலாம் என்கிறான் ஹரி. உள்ளூரிலேயே ஹரிக்கு வேலை கிடைக்கிறது. வரும் வருமானம் போதுமானதாக இல்லை.

கொஞ்ச நாட்கள் கழித்து துர்காவுக்கு தம்பி பிறக்கிறான். துர்கா போய் பாட்டியை அழைத்து வர, குழந்தையைப் பார்க்க வரும் பாட்டி அங்கேயே தங்கி கொள்கிறாள். தன் போர்வை கிழிந்து விட்டதால் ஹரியிடம் புதியதொன்று வாங்கித் தருமாறு கேட்கிறாள் பாட்டி. வறுமை அப்படியேதான் இருக்கிறது. குழந்தைக்கு அபு என்று பெயரிட்டு, இப்பொழுது அவன் பள்ளிக்கு சென்று கொண்டிருக்கிறான். துர்காவும் பெரிய பெண்ணாகி விட்டாள். அவளுக்கு தகுந்த துணையைத் தேட வேண்டும் என்று ஹரியிடம் கூறுகிறாள் ஜெயா.

ஒரு நாள் பாட்டி புது போர்வையுடன் வர, அதைப் பார்த்து கோபமடைந்த ஜெயா 'அதை யார் வாங்கிக் கொடுத்தார்களோ அங்கேயே போய் விடுங்கள். மற்றவர்களிடம் பிச்சை கேட்பவர்களுக்கு இங்கே இடமில்லை' எனக் கூறிவிட, பாட்டி திரும்பவும் வீட்டை விட்டுப் போய்விடுகிறாள்.ஹரியின் வருமானம் குடும்பத்துக்கு போதுமானதாக இல்லை. இரண்டு வேளை உணவும், நல்ல துணிகளும் கனவாகவே கழிந்து கொண்டிருக்கின்றன. தத்தி தத்தி ஒருநாள் திரும்ப வரும் பாட்டி 'எனக்கு முடியவில்லை. எனது கடைசி காலம் இங்கேதான் கழிய வேண்டும்' என ஜெயாவிடம் கூறுகிறாள். பாட்டியை மதிக்காத ஜெயா அவளை ஏறெடுத்துக் கூடப் பார்ப்பதில்லை. திரும்பவும் தன் பாய் தலையணையைக் கட்டிக் கொண்டு கிளம்புகிறாள் பாட்டி.அபுவும் துர்காவும் விளையாடிக் கொண்டே, கன்றுக் குட்டியைத் தேடுகிறார்கள். ரொம்ப தூரம் போய்ப் பார்த்தால் ரயில் வரும் ஓசையைக் கேட்டு, முதன் முதலாக ரயிலைப் பார்க்கிறார்கள். கன்றுக் குட்டியுடன் திரும்பும் அவர்கள் வழியில் பாட்டி உட்கார்ந்திருப்பதைப் பார்த்து உலுக்க, உயிர் இழந்த பாட்டி சரிகிறாள்.வேலை இல்லாமல் இருக்கும் ஹரி பக்கத்தில் உள்ள நகரமான பனராஸ் சென்றால் வேலை கிடைக்கும் என்றும், ஒரு வாரத்தில் பதில் போடுவதாகவும் சொல்லிவிட்டு கிளம்புகிறான். ஒரு வாரம் கழித்து வரும் கடிதத்தில் அந்த வேலை கிடைக்கவில்லை என்றும், இன்னும் கொஞ்ச நாள் இருந்து பார்த்து விட்டு வருவதாக கூறியிருக்கிறான் ஹரி. கையில் காசு இல்லாமல் வீட்டில் உள்ள சாமான்களை விற்று அரிசி பருப்புகளை வாங்கி வருகிறாள் ஜெயா.ஒரு நாள் அங்கே வரும் ஜெயாவின் தோழி, காலி அரிசிப் பானைகளை பார்த்து அவளைத் திட்டுகிறாள். 'போய் நான்கு மாதங்களாகி விட்டது. முதலில் வந்த ஒரு கடிதம் தவிர எந்த தொடர்பும் இல்லை. கையில் பணம் இல்லாமல், எத்தனை தடவைதான் உன்னிடம் பணம் கேட்க முடியும்?' என்கிறாள் ஜெயா. கொஞ்சம் காசை கொடுத்துவிட்டுச் செல்கிறாள் தோழி.

மழை காலம் துவங்க போகிறது. வீடோ மராமத்து செய்யாமல் கிடக்கிறது. வெளியே போகும் துர்காவும், அபுவும் மழையில் மாட்டி கொள்கிறார்கள். மழையில் நன்றாக விளையாடுகிறாள் துர்கா. வீட்டுக்குத் திரும்பி வந்ததும் அவளுக்கு உடல் சரியில்லாமல் போகிறது. அடுத்த நாளும் உடல் நிலை மோசமாக, மழையும் வலுத்துக் கொட்டுகிறது. அன்று இரவு பெய்த மழையில் ஜன்னல் கதவு இல்லாத வீட்டில் சாரல் அடித்து வீட்டினுள் விழுகிறது.அடுத்த நாள் காலை ஜெயாவின் தோழியை அழைக்க அபு அவளின் வீட்டுக்குப் போகிறான். சுவர்களும் கூரைகளும் மழையில் இடிந்து விழுந்து கிடக்கின்றன. அங்கே வரும் ஜெயாவின் தோழி, இடியாமல் துர்கா இருக்கும் அறைக்குச் செல்கிறாள். ஜெயாவின் மடியில் தலை வைத்துப் படித்திருக்கும் துர்காவின் முகத்தைப் பார்த்தவுடன் புரிந்து கொள்ளுகிறாள் அவள். ஆம், துர்கா மீள முடியாத தூக்கத்தில் ஆழ்ந்து விட்டாள்.இன்னும் ஹரி திரும்பிய பாடில்லை.கொஞ்ச நாட்கள் கழித்து பணம், உடைகளுடன் திரும்பி வரும் ஹரி, துர்கா இறந்ததைக் கேள்விப் பட்டு நொறுங்கிப் போகிறான். இந்த ஊர் வேண்டாம் என முடிவெடுத்து மூட்டை முடிச்சுகளுடன் வீட்டைக் காலி செய்து விட்டுப் போகிறார்கள். கிராம வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு எளிதானதில்லை. ஒரு காட்டுக்குள் இருப்பதாகவே சொல்லுகிறாள் ஜெயா. ஊரை விட்டுப் போகவேண்டாம், இது உங்கள் பாட்டன் முப்பாட்டன் இருந்த பூமி எனச் சொல்லும் பெரியவர்களின் அறிவுரையை ஹரி கேட்பதில்லை. 'உங்களுக்கு வேண்டுமானால் இங்கே வேலையும் பணமும் கிடைக்கலாம். எனக்கு? துர்காவை இழந்தது மட்டும் போதும்' என்று மறுத்து ஹரி குடும்பம் இதோ கிளம்பி விட்டது. மாட்டு வண்டியில் கீழே அரிக்கேன் விளக்கு தொங்க கிளம்பி விட்டார்கள், துர்காவை இழந்த துயரத்துடன்.சில துளிகள்:

- அபுவுக்கு வாத்தியாராக வரும் அந்த ஆள். பல சரக்குக் கடையையும் கவனித்துக் கொண்டு, பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் இடம்.

- அந்தப் பாட்டியின் முகம். சாதரணமாக எல்லாக் கிராமங்களிலும் இந்த மாதிரி நிறையப் பாட்டிகளைப் பார்க்கலாம்.

- கொய்யாவை பறித்துக் கொண்டு வந்த துர்காவை திட்டும் அந்தப் பெண்மணியிடம் 'கொய்யாவில் என்ன பெயரா எழுதி இருக்கிறது' என ஜெயா கேட்குமிடம்.

- பாட்டி அடிக்கடி ஒரு செடிக்கு தண்ணி ஊற்றிக் கொண்டிருக்கிறாள். கடைசி நாளன்றும் கொஞ்சம் பெரிதாக வளர்ந்த அந்த செடிக்கு தண்ணி ஊற்றி விட்டே இறந்துபோகிறாள்.

- முதன் முதலாக ரயில் பார்க்கும் ஆச்சரியம்.

- துர்கா இறந்த பின்னர் வெளியே போகும் அபு மறக்காமல் குடையை எடுத்துப் போவான். துர்காவின் இறப்புக்கும் காரணமாக இருந்தது அந்த மழைதான்.

- வீட்டைக் காலி செய்யும் போது, அபுவின் கண்ணில் தட்டுப்படும் ஒரு பாசி மாலையைக் கொண்டு போய் தண்ணீரில் வீசுகிறான். அந்த மணி மாலை துர்கா, அவள் தோழியிடம் இருந்து எடுத்துக் கொண்டு வந்தது. பாசி விலகி மாலை அந்தக் குளத்துள் செல்லும் காட்சி.

- கொய்யாவைப் பறித்து வந்ததற்கு துர்காவை திட்டும் ஜெயா, வழியில் கிடக்கும் ஒரு தேங்காயை எடுத்துக் கொள்ளுமிடம்.


உலகம் முழுமைக்கும் வறுமை மட்டும்தான் சொந்தமாக உள்ளது. துர்காக்களும், அபுக்களும், அவர்களின் பெற்றோர்களைப் போலவும், நவ நாகரிக உலகில் இன்னும் நிறையப் பேர் உள்ளனர் என்பதுதான் நம் நாட்டுக்கு பிடித்த சாபக் கேடோ என்னவோ?. பாஞ்சாலிகளின் தேசம் அல்லவா இது.Tuesday, October 12, 2010

குழந்தைகளுக்கு குழந்தைகளை மட்டும் பிடிக்கிறது !

துளி கர்வமில்லை

தேக்கி வைத்த புன்னகை எப்போதும் வழியும்

அவர்களுக்கான உலகில்
அறிவாளிகளை விட கோமாளிகளே அதிகம்

சிடுமூஞ்சிகளை விட
சிரிக்கும் முகமே அதி விருப்பம்

தத்துவங்களை விட
தத்துபித்துகள் கொஞ்சும்

எனவேதான்
குழந்தைகளுக்கு குழந்தைகளை மட்டும் பிடிக்கிறது !


Monday, October 11, 2010

நான் மந்தையிலிருந்து விலகிப் பிரிந்தவன் !

கவிதை போல் அமைந்த வரிகள் . சிங்காரம் அவர்கள் எழுதியுள்ள 'புயலிலே ஒரு தோணி' நாவலில் விரவிக் கிடக்கின்றன. வரிகளை மடக்கி அதைக் கவிதை என வாசிக்கும் சூழலில், கவிதை போன்ற வரிகளை பத்தியாக எழுதியுள்ளார் .சிங்காரம்.

இதோ ஒரு சில வரிகள்; (இந்த வரிகள் நாவலில் பத்தியாகவே இருக்கிறது. புத்தகத்தின் முன் அட்டையில் இவ்வாறு அச்சிட்டுள்ளார்கள்.)


காரளகப் பெண் சிகாமணியே!
நான் மந்தையிலிருந்து விலகிப் பிரிந்த ஓடுகாலி.
பிரிந்ததால் மந்தையின் வெறுப்புக்கும்,
பிரிய நேர்ந்ததால் தன் வெறுப்புக்கும் உள்ளாகி,
இந்தப் பரந்த வையகத்தில் காலூன்ற இடமின்றி,
ஒட்டிப்பற்ற ஈரப்பசை காணாமல் தன்னந்தனியனாய்
அலைந்து திரிகிறேன்; அலைந்தலைந்தே திரிவேன்;
அலைந்தலைந்து திரிந்தே அழிவேன்.
கன்னற்சுவை மொழி மின்னிடையாய் !
உன் திரண்டுருண்ட மார்பிலே என்னைச் சயனித்து,
உன் சேலொத்த விழியிலே என்னைக் கண்ணுற்று,
உன் பாலொத்த மொழியிலே என்னைச் செவியுற்று,
உன்னை அறிவதால் என்னை மறக்கிறேன்.
ஆகவே, உன் உடலணைப்பில் இருக்குங்காறும்
சங்க நிதி பதும நிதி இரண்டும் வேண்டேன் !
கங்கை வார்சடை கரந்தான் அருளும் வேண்டேன்!
எனினும், பெண் மயிலே,
நான் தன்னந்தனியன்.
என் காதலீ !
மார்பிற் படுத்து மயலூட்டி மகிழ்வித்து மறப்பூட்டும் நாயகீ !
அன்னையற்ற எனக்குத் தாயாகி
மடியிற் கிடத்தி தாலாட்டவல்லையோ !
தமக்கையறியா என்னை இடுப்பில் வைத்துக்
கிள்ளி அழுகூட்டிப் பின் முத்தாடி ஆற்ற ஒவ்வாயோ !
தங்கையற்ற என்னைத்
தொடர்ந்தோடிப் பற்றி சிணுங்கி நச்சரியாயோ...

============================================


எனது முந்தைய பதிவொன்று நாவலைப் பற்றி :
தமிழரின் நிலை... - புயலிலே ஒரு தோணி

============================================

நாவல் : புயலிலே ஒரு தோணி - ப.சிங்காரம்
பதிப்பு : தமிழினி
விலை : ரூ. 180

Saturday, October 9, 2010

ஓர் இலையின் பயோடேட்டா


ஓர் இலையின் பயோடேட்டா இது.

பெயர் : இலை

தாய் - தகப்பன் : மரம்

நிறம் : பச்சை

வசிப்பிடம் : எல்லா இடங்களிலும்

தொழில் : மனிதன் சுவாசிக்க பிராண வாயு உற்பத்தி

தொழில் ஓய்வு : மரத்திலிருந்து உதிரும் வரை

பிடித்தவர்கள் : மரம் வளர்ப்பவர்கள்

பிடிக்காதவர்கள் : மரம் வெட்டும் முதலாளிகள்

சிறப்பு இயல்பு 1 : நிழல் தருவது

சிறப்பு இயல்பு 2 : உதிர்ந்த பின்னும் உரமாவது

[குறிப்பு: மேலே உள்ள புகைப்படம் என் கைப்பேசியில் எடுத்தது.]

Wednesday, October 6, 2010

துக்கம் மறையும் இரவு


இரவுக்கு ஆயிரம் கண்கள் என்று ஒரு வழக்கு உண்டு. ஆயிரம் கண்கள் இருக்கிறதோ இல்லையோ, இரவு என்பது நாம் இளைப்பாற ஏற்பட்டது என்றுதான் எனக்குப் படுகிறது. காலை எழுந்தவுடன் விழித்த கண்கள் ஓய்வை நோக்கி காத்திருக்கும் நேரம் இரவு. உடல் மனம் என அனைத்தும் ஓய்வெடுத்து அடுத்த நாளுக்கு தயாராவதும் இரவில்தான்.

எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் உப பாண்டவம் நாவலில் 'எல்லாருடைய துக்கத்தையும் மறக்கச் செய்யும் இரவு' என்று சொல்லியிருப்பார். ஆம், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு வேதனைகள், பிரச்சனைகள், சங்கடங்கள் அவை எல்லாவற்றையும் மறந்து போகச் செய்யும் ஆற்றல் இரவுக்கு உண்டு.

நிசப்தமான இரவுகளில் அலைந்து கொண்டிருக்கும் நபர்கள், நெடுஞ்சாலையில் கனரக வண்டியை செலுத்திக் கொண்டிருப்பவர்கள், அயல் நாட்டு நேரத்தில் வேலை செய்யும் உள்ளூர் நண்பர்கள், உறவுகளை இழந்து வாடுபவர்கள் என எல்லோரையும் இரவு தன் வலிய கரங்களால் அணைத்துக் கொண்டிருக்கிறது.

எண்ணிப் பார்த்தால் துக்கத்துக்கும் தூக்கத்துக்கும் ஒரு 'கால்' தான் வித்தியாசம். துக்கம் - தூக்கம்.

இரவில் கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு எதாவது செய்து கொண்டிருந்தாலும் தூக்கம் நம் கண்களை இழுத்துக் கொண்டு போகிறது. இந்த வார்த்தைகளைக் கூட ஓர் இரவு நேரத்தில்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

ஆறுதல் கூறும் நண்பன் போல தினமும் இருப்பது இந்த இரவு மட்டும் தான் அல்லவா ?.

இரவை நேசிப்போம். [தூங்கிக் கொண்டு :) ]