Showing posts with label லியோ டால்ஸ்டாய். Show all posts
Showing posts with label லியோ டால்ஸ்டாய். Show all posts

Monday, May 5, 2025

போரும் அமைதியும் (War And Peace) - லியோ டால்ஸ்டாய்

'போரும் அமைதியும்' நாவல் மிகப்பெரிய மூன்று பாகங்களைக் கொண்டது. அனைத்து நிகழ்வுகளையும் நாவல் விரிவாகவே கொண்டு செல்கிறது. நெப்போலியன் ரஷ்யா மீது போர் தொடுத்து, நிறைய இழப்புக்கு பின்னர் போரில் பின்வாங்கிய 1800-ன் ஆண்டுகளை அடிப்படையாக கொண்டு நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றுடன் புனைவையும் கலந்து படைக்கப்பட்ட இந்நாவல் வரலாற்று நாவல் அல்ல என்று டால்ஸ்டாய் அவர்களே குறிப்பிட்டுள்ளார். இந்நாவலை எழுதுவதற்கு உண்டான வரலாற்று  தகவல்களை சேகரிக்க நீண்ட நாட்கள் ஆகியிருக்கிறது அவருக்கு. 


ஒரு வருடம் முன்பாகவே இந்நாவலை படிக்க ஆரம்பித்து 100 பக்கங்கள் மேல் போன பின்னரும் குழப்பங்கள் காரணமாக பிடி கிடைக்காமல் அப்படியே வைத்துவிட்டேன். இம்முறை எப்படியேனும் படிக்க எண்ணி வலைத் தளங்களில் தேட, எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் ஒரு பதிவில், 'ரஷ்யப் பெயர்கள் குழப்பமாக இருக்கும். ஒருவருக்கே மூன்று பெயர்கள் இருக்கும். எனவே பெயர்களை கவனித்து வந்தால் கதாபாத்திரங்கள் புரியும்.' என எழுதி இருந்தார். ஒவ்வொரு முறையும் பெயர்கள் வரும்போது தனியாக குறிப்பெடுக்க ஆரம்பித்தேன். நாவலின் கதைப்போக்கும், கதா பாத்திரங்களும் புரிய ஆரம்பித்த பின்னர் அந்தக் குறிப்பும் தேவையில்லாமல் போனது. உலகின் மிகச் சிறந்த நாவல் எனப் பலரும் போற்றிய இந்த ஆக்கத்தை நானும் படித்து முடித்தேன். இதை தமிழில் மொழிபெயர்த்த டி.எஸ். சொக்கலிங்கம் அவர்கள் மிக கடினமான இப்பணியை முடித்து நம் கையில் தவழ வைத்துள்ளார். 

எண்ணற்ற கதை மாந்தர்களும், நீண்ட விவரிப்புகளும் கொண்ட இந்நாவல் விளக்கும் போர் பற்றிய சித்தரிப்புகள் நாம் நினைத்து பார்த்திராதவை. போர் வீரர்கள் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களுக்கு கூட தீர்வுகள் கிடைப்பதில்லை. மேலே இருப்பவர்கள் கொடுத்தாலும் கீழே வந்து சேரும்போது அது ஒன்றுமில்லாமல் போகிறது. சில தளபதிகள் தீர்வுகள் ஏற்பட முனைந்தாலும் அவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். காயம் பட்ட போர் வீரர்களுக்கான மருத்துவமனையில், நிறைய வீரர்கள் கை, கால்களை இழந்து, ரத்தத்துடன் மருத்துவம் பார்க்க காத்திருக்க, காயம்பட்ட ஒரு பிரபு வந்ததும் அவரைத்தான் முதலில் கவனிக்கிறார்கள். சிலர் போரை பயன்படுத்தி புது செல்வந்தர் ஆகவும், புதிய பதவிகளைப் பிடித்து மன்னரிடம் செல்வாக்கு பெறவும் முயற்சி செய்கிறார்கள்.



ரஷ்யாவில் உயர் குடி மக்கள் கூடும் விருந்துகளின் வழியாக கதை மாந்தர்கள் நமக்கு அறிமுகமாகிறார்கள். அந்த விருந்துகளே ஒருவரின் செல்வத்தை வெளிப்படுத்துவதாகவும், பெரிய குடும்பங்களின் கதைகளை பேசுவதாகவும், திருமண வயது வந்தோரின் திருமணத்தை முடிவு செய்யும் இடமாகவும் இருக்கிறது. அரசில் அங்கம் வகிப்பவர்கள் கலந்து கொள்வதால் நடப்பு நிகழ்வுகளையும் தெரிந்துகொள்ள முடிகிறது. 

இளவரசர் ஆண்ட்ருவின் மனைவி ஒரு மகனைப் பெற்றெடுத்த பின்னர் இறந்து விடுகிறாள். அவரின் தங்கை மேரி அந்த குழந்தையை பார்த்துக்கொள்கிறாள்.  இருவரின் தந்தையும்  வயதானவருமான பால்கோன்ஸ்கி தற்கால நிகழ்வுகளை விரும்புவதில்லை. அவரின் மனம் போன போக்கில் கோபப்படுகிறார். கொஞ்சம் அழகு குறைந்திருக்கும் தன் மகளை எப்போதும் திட்டிக்கொண்டே இருக்கிறார். ஆண்ட்ரு தன்னால் முடிந்த அளவு அப்போதிருந்த அடிமைக் கூலி மக்களை சீர்திருத்த, அவர்களை முன்னேற்ற  சில முயற்சிகளை எடுக்கிறார்.

ஆண்ட்ருவின் நண்பர் பீயர் செல்வம் மிக்கவர். மேம்போக்காக ஆண்ட்ருவைப் போன்றே கூலி மக்களின் முன்னேற்றத்தை அவர் விரும்பி பணம் செலவிடுகிறார். ஆனால் அது ஒரு கனவு போலவும் அமைந்து விடுகிறது. இடையில் இருப்பவர்கள் அவரை ஏமாற்ற பார்க்கிறார்கள். மிக அழகானவளான ஹெலன் குராகின் என்பவள் பீயரின் செல்வத்துக்காக அவரைக் கல்யாணம் செய்து கொள்கிறாள். பின்னர் அவரை மதிப்பது கூட இல்லை. காதலும் இல்லை. பீயர் பிரீமேசன் என்னும் அமைப்பில் ஆர்வம் கொள்கிறார். அவர்களின் கொள்கைகளால் ஈர்க்கப்படுகிறார். 

ராஸ்டோவ் குடும்பம் நாவலில் முக்கிய பங்கு வகிக்கிறது. வேரா, நிக்கோலஸ், நட்டாஷா, பெட்டியா என நான்கு பிள்ளைகள் கொண்ட குடும்பம்.  செல்வந்தர்களான இக்குடும்பம் மற்றவர்களுக்கும், விருந்துகளுக்கும்  தாரளமாக செலவு செய்கிறது, திருமதி ராஸ்டோவுக்கு செலவு பண்ண மட்டுமே தெரிகிறது, கணக்கு வழக்கு பற்றி ஒன்றுமே தெரியாது. இவர்களின் ஆதரவில் வளர்ந்து பின்னர் பெரிய பதவிக்கு வந்த போரிஸ் என்பவன் இவர்களுக்கு எந்த உதவியும் செய்வதில்லை. 

மருமகள் முறை கொண்ட சோனியா என்னும் பெண்ணும் இவர்களுடன் வசித்து வருகிறாள். சோனியா நிக்கோலஸ் மீது காதல் கொள்கிறாள். எந்த நிலையிலும் அவள் நிக்கோலஸ் மீது தன் காதலை திணிப்பதில்லை. முதலில் சோனியா மீது ஈர்ப்பு கொண்ட நிக்கோலஸ், பின்னர் தன் குடும்ப சூழலை நினைத்து பெரிய இடத்துப் பெண்ணை மணந்தால் தமது குடும்பத்தின் நிலை உயரும் என நினைத்து, மேரி பால்கோன்ஸ்கியை மணந்து கொள்கிறான். 




சோனியாவுக்கு நேர் எதிராக நட்டாஷா இருக்கிறாள். அவளின் சிறுவயதும், கள்ளமில்லாத பண்பும் அனைவரையும் ஈர்க்கிறது. சிலரைக் காதலிக்கவும், அதிலிருந்து விலகவும் அவளால் முடிகிறது.  அவளை பொறுத்தவரை அதையெல்லாம் ஒரு பொருட்டாக மதிக்காமல் தனது இளமை காரணமாக ஒரு வண்ணத்து பூச்சி போல பறக்கிறாள். ஆண்ட்ருவை நிச்சயம் செய்த பின்னர், இன்னொருவனுடன் ஏற்பட்ட தற்காலிக ஈர்ப்பால் அவளின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பம் ஏற்படுகிறது. திருமணமும் நின்று போகிறது. பின்னர் போரில் காயம்பட்ட ஆண்ட்ருவை அவள் சந்திக்கும்போது பழைய காதல் இருவருக்கும் பூக்கிறது. ஆனால் ஆண்ட்ருவின் உடல் நிலை மோசமாகி கொண்டே வர, அவர் இறக்கும் வரை ஆண்ட்ருவை தன்னுடனே வைத்து பார்த்துக்கொள்கிறாள் நட்டாஷா. 

முதலில் இருந்தே பீயருக்கும், நட்டாஷாவுக்கும் இடையில் நல்ல நட்பு இருக்கிறது. போர் சமயத்தில் பீயரின் மனைவி ஹெலன் இறந்து போக, போர் முடிந்த பின்னர் பீயர் நட்டாஷாவை மணந்து கொள்கிறார். பிரெஞ்சு படையிடம் பீயர் மாட்டிக்கொண்டு பல நாட்கள் அவர்களுடனேயே பயணிக்கிறார். அப்பொழுது அவர் சந்திக்கும் மக்கள், வீரர்கள் என அவர் மனம் அலைபாய்கிறது. மேலும் போரில் அவர் களம் காணவேண்டிய அவசியம் இல்லை என்றபோதிலும், பயப்படாமல் போர் முனையில் நின்றுகொண்டு போரை கவனிக்கிறார்

மன்னர் நெப்போலியன் ஏன் ரஷ்யா மேல் போர் தொடுத்தார் என்பதை இந்நாவல் விளக்கி கொண்டே போகிறது. பின்னர் அவர் பின் வாங்க வேண்டிய அவசியம் என்ன, பல்லாயிரம் வீரர்களை இழந்து திரும்ப வேண்டிய அவசியம் என்ன என்று விரிவாகவே ஆய்வு செய்கிறது நாவல். மாஸ்கோ நகரத்தை கைப்பற்றிய பிரஞ்சு படைகள் அதன் பின்னர் வலிமை இழந்து போனது எப்படி, ஒரு நாட்டுக்குள் அவ்வளவு தூரம் தனது படையை நடத்திக் கொண்டு வந்த நெப்போலியனை எது அவ்வாறு செய்ய சொன்னது என்றெல்லாம் பல பக்கங்கள். பிரஞ்சு படையிடம் முதலில் பின்வாங்கிய ரஷ்ய படைகள், பின்னர் கொரில்லா முறையில் தாக்கத் தொடங்கியதையும் விவரிக்கிறார் தல்ஸ்தோய்.

ரஷ்ய தளபதி குட்டுசோவ் நாவலில் முக்கிய இடம் பெறுகிறார். வயதானவரான இவர் 'எதற்கும் கலங்காதவர்' எனப் பெயர் பெற்றவர். போர் முனையில் ஒவ்வொருவர் சொல்லுவதையும் காது கொடுத்து கேட்கும் குட்டுசோவ், எதையும் செயல்படுத்துவதில்லை. அது போலவே மேலிடத்திலிருந்து வரும் சில கருத்துக்களையும் அவர் ஏற்பதில்லை. இங்கே நடப்பது வேறு, அதை அவர்கள் அரண்மனையில் அமர்ந்து புரிந்து கொள்ள முடியாது என்கிறார். 



ஐநூறுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் நாவலில் வந்து போகின்றனர். சில கதாபாத்திரங்கள் உண்மையிலேயே அக்கால கட்டத்தில் வாழ்ந்து மறைந்தவர்கள். நாவல் முழுவதுமே மகிழ்ச்சி, ஆசைகள், துரோகங்கள், காதல்கள், பிரிவுகள், வீரம், வீழ்ச்சி என பரந்து கிடக்கிறது. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகில் அங்கங்கே இயல்பாகவே இருக்கிறது நாவலில். நாம் பார்த்தவை சிலவே, நாம் பார்க்காதவை பல உள்ளன என்பது போல ஒவ்வொருவரின் பக்கத்திலிருந்தும் அவர்களின் நோக்கம் என்னவென்றும் விரிவாகவே பேசுகிறது நாவல். 

காலங்கள் பல கடந்தும் மனித குலம் போரை இன்னும் கைவிடவில்லை. தல்ஸ்தோய் போர் தவறென்றோ, சரியென்றோ விளக்கவில்லை. நடந்தது என்ன என்பதையே சொல்லிச் செல்கிறார். ஏதோ ஒருவகையில் போர் என்பது எல்லாரையும் ஒரு கண்ணியில் இணைக்கிறது, எல்லோரும் அதனால் பாதிக்கப்படுகிறார்கள். அதில் சிலர் ஆதாயமும் அடைகிறார்கள்.

உலகின் மிகச் சிறந்த நாவலை நாமும் படித்துவிட்டோம் என்ற எண்ணம் தோன்றுகிறது. அதற்கு காரணம் தமிழில் படிக்க முடிந்ததே. முக்கியமான இந்நாவலை, இவ்வளவு பெரிய ஆக்கத்தை தமிழில் மொழிபெயர்த்த டி.எஸ். சொக்கலிங்கம் அவர்களுக்கு நன்றியும், வணக்கமும். 

போரும் அமைதியும் (War And Peace)  
லியோ டால்ஸ்டாய் 
தமிழில்: டி.எஸ். சொக்கலிங்கம் 
மூன்று பாகங்கள் 
சீதை பதிப்பகம், சென்னை