Monday, April 9, 2018

தென்னாப்பிரிக்காவில் காந்தி (ராமச்சந்திர குஹா) - Gandhi Before India

துளியும் வன்முறையை நாடாமல், சமரசம் மூலமாக எவ்வாறு வெற்றியைப் பெறுவது என்பது காந்தி கண்ட வழிமுறை.  காந்தியம் என்பது வெறும் வார்த்தையல்ல. வாழ்க்கை முறை.

நன்கு படித்த, அதுவும் நூறாண்டுகளுக்கு முன்னர் லண்டனில் சட்டக்கல்வி பயின்ற காந்தி போன்ற ஒருவர், தன்னுடைய துறையிலேயே மேலே வர முயல்வார். அவரின் காலத்தில் அவர் பெற்ற கல்வி மதிப்புமிக்கது. ஆனால், அவர் அதை உதறித் தள்ளிவிட்டு சத்தியாகிரகத்தை கைக்கொண்டார். அவர் அப்படி மாறுவதற்கு என்னென்னெ காரணங்கள், அவர் சந்தித்த ஆளுமைகள் என இந்தப் புத்தகம் விளக்குகிறது.



'வன்முறையை நான் ஒருபொழுதும் ஆதரிக்க மாட்டேன்.  எதிர்த்தரப்பை கொல்வதன் மூலம் ஒருவன் ஆட்சிக்கு வரலாம். ஆனால், அந்த ஆட்சி கொலைகாரர்களால் ஆனது. மக்களை அவர்கள் எப்படி காப்பார்கள்.'  என்கிறார் காந்தி. வெள்ளையர்கள் என்றாலும் அவர்களும் மனிதர்களே, அவர்களை நம்மை மதிக்கச் செய்ய முடியும் என்று நம்புகிறார். அவ்வாறே, பல வெள்ளையின நண்பர்களைப் பெறுகிறார்.

இருபது வருடங்கள் அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்திருக்கிறார். இந்த காலகட்டத்திலேயே, சத்தியாகிரகம் மற்றும் அதனால் விளையும் நன்மைகளைக் கண்டறிகிறார். காலன்பாக், போலாக், சென்ஷி ஷிலேசின் போன்றோரைச் சந்தித்து நண்பர்களானதும் இங்கேதான். காலன்பாக் மூலமாக தல்ஸ்தோய் மேல் ஈடுபாடு ஏற்படுகிறது. தல்ஸ்தோயின் அன்பும், அறமும், நீதி உணர்வும் காந்தியை ஈர்க்கிறது. அவருக்குச் சில கடிதங்களை எழுதுகிறார் காந்தி. பதில் கடிதம் போடுகிறார் தல்ஸ்தோய்.

தல்ஸ்தோய் மேல் ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக, நண்பர்கள் சேர்ந்து தல்ஸ்தோய் பண்ணையை ஆரம்பிக்கிறார்கள். அப்பண்ணையில் தற்சார்பு முறையில் வாழ்கிறார்கள். குழந்தைகளுக்கு கல்வியுடன் சேர்த்து, சின்ன சின்ன வேலைகளைக் கொடுக்கிறார்கள். காந்தி அதற்கு முன்னரே, பீனிக்ஸ் என்ற பண்ணையை நடத்தி வருகிறார். அங்கிருந்து, தல்ஸ்தோய் பண்ணைக்கு குடி பெயர்கிறார்கள்.

தென்னாப்பிரிக்காவில், புலம் பெயர்ந்த மக்களுக்குண்டான சில சிக்கல்களுக்காக போராட ஆரம்பிக்கிறார் சட்டம் படித்த காந்தி. தலைக்கு 3 பவுண்டு வரி சட்டம், திருமண சட்டம் போன்றவை அங்கிருக்கும் மக்களுக்கு ஏற்படுத்தும் துன்பங்களைப் புரிந்து கொண்டு சத்தியாகிரகம் மூலம் போராடுகிறார். பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் தொடர்ந்த பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். சில சமயங்களில் தோல்வி ஏற்பட்டாலும் தொடர்ந்து முயல்கிறார். ஆனால், எக்காரணம் கொண்டும் வன்முறையை நாடுவதில்லை.

போராட்டம் மூலமாக சிறை செல்ல நேர்கிறது. அவர் மட்டும் செல்லாமல், கஸ்தூரிபா காந்தி மற்றும் மகன்கள் ஆகியோரையும் போராட்டத்தில் ஈடுபடுத்துகிறார். அவர்களும் சிறை செல்கிறார்கள். சிறையில் தனிப்பட்ட சைவ உணவு இல்லாமல், கஸ்தூரிபா அவர்களின் உடல்நிலை குன்றுகிறது. விடுதலை ஆனவுடன் தேறுகிறார்,

தென்னாப்பிரிக்காவுக்கு கூலி வேலைக்குச் சென்ற இந்தியர்களில் கணிசமானோர் தமிழர்கள். மொழி புரியாவிட்டாலும், அவர்கள் காட்டிய அன்பில் வியக்கிறார் காந்தி. குஜராத்திகளை விடவும், தக்க சமயத்தில் தமிழர்கள் உதவியிருக்கிறார்கள் என பலமுறை சொல்கிறார் காந்தி. தம்பி நாயுடு என்னும் தமிழர், காந்திக்கும், தமிழ் மக்களுக்கும் பாலமாக இருந்திருக்கிறார். தன்னுடைய மகன் மணிலாலை தமிழ் படிக்கச் சொல்கிறார். பெரும்பான்மையினர் பேசும் மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என விரும்புகிறார்.

இந்தியா திரும்பிய பின்னர் காந்தி மேற்கொண்ட போராட்டங்களுக்கு அடித்தளமாக அமைகிறது அவரின் தென்னாப்பிரிக்கா வாழ்க்கை.

புத்தகத்தின் இறுதிப் பகுதியில், ஒரு தென்னாப்பிரிக்க நண்பர் இந்த வரிகளைச் சொல்கிறார்; 'நீங்கள் எங்களுக்கு ஒரு வழக்கறிஞரைத் தந்தீர்கள். நாங்கள் உங்களுக்கு மகாத்மாவாக திருப்பிக் கொடுத்தோம்.'.

பலதரப்பட்ட மக்களுடன், சமயங்களுடனும் காந்தி தென்னாப்பிரிக்காவில் வாழ நேர்கிறது. குஜராத்திகள், தமிழர்கள், முஸ்லீம்கள் என எல்லோரும் அங்கே வாழ்ந்ததால் அவருக்கு இது வாய்ப்பாக அமைகிறது. இதுவே, இந்தியாவில் அவர் இருந்திருந்தால், பெரிய வழக்கறிஞராகவோ, ஆங்கிலேய ஆட்சியில் பெரிய பதவியையோ பெற்றிருக்க கூடும். இந்தியாவைப் பற்றி ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தை அவர் தென்னப்பிரிக்க வாழக்கையிலேயே பெறுகிறார் என்கிறார் நூலின் ஆசிரியர்  ராமச்சந்திர குஹா.

கிட்டத்தட்ட 800 பக்கங்கள் கொண்ட பெரிய புத்தகம். இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள ஆவணக் காப்பகங்களிலிருந்து பல தகவல்களைப் பெற்றே இந்நூல் எழுதப்பட்டுள்ளது. குறிப்புகளையும், வரலாற்றுத் தகவல்களையும் எங்கிருந்து ஆசிரியர் பெற்றார் என்பதும் இணைப்பாக உண்டு. மகாத்மா பற்றி அறிய வேண்டுபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.

தென்னாப்பிரிக்காவில் காந்தி -  Gandhi Before India
ராமச்சந்திர குஹா - Ramachandra Guha
தமிழில்: சிவசக்தி சரவணன்
கிழக்கு பதிப்பகம்