Thursday, March 31, 2016

அஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை

கரும்பைப் பிழிந்து வரும் பாகைக் காய்ச்சினால், வெல்லம், சர்க்கரை போன்றவை கிடைக்கும். இதனைத்தான் நாம் பன்னெடுங்காலமாக பயன்படுத்தி வந்தோம். கூடவே, தேன், கருப்பட்டி போன்றவற்றையும் சுவைக்காகப் பயன்படுத்தினோம். 

வெள்ளை தவிர நமக்கு மற்ற நிறங்கள் பிடிக்காதே!. பழுப்பு நிறத்தில் இருக்கும் நாட்டுச் சர்க்கரையை, பல இரசாயனங்கள் கலந்து வெள்ளை ஆக்குகிறோம் என்று மாற்றினார்கள். நம்மையும் அந்த வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றினார்கள். ஒரு பொருளை, அதன் இயற்கை நிறத்திலிருந்து வேறு நிறத்திற்கு மாற்ற உபயோகித்த இரசாயனங்கள் 'உண்ணத் தகுந்த அளவில்' உள்ளது என்று கருதியிருக்கக் கூடும். ஆனால், ஒருவர் எடுத்துக் கொள்ளும் உணவைப் போல இன்னொருவர் எடுத்துக் கொள்வதில்லை. அதிகமாக எடுத்துக் கொள்ளும் நபர் அதிக இரசாயனங்களை உட்கொள்ள நேரிடுகிறது.



உதாரணமாக பானங்கள் மற்றும் உணவு வகைகளில் அளவுக்கதிகமான சர்க்கரையைப் பயன்படுத்துகிறார்கள். சிறுவர்கள் மற்றும் இளைஞர்களைக் கவர, திகட்டும் அளவுக்கு சுவைக்காகப் பயன்படுத்தும் சர்க்கரை, பல நோய்களை நம் உடலுக்கு ஏற்படுத்துகிறது. முக்கியமாக, கேன்சர் போன்ற தீவிர நோய்களை வரவழைக்கும் சில இரசாயனங்கள் வெள்ளைச் சர்க்கரையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். 

நாம் முக்கியமாக கேட்க வேண்டியது, பழுப்பு நிறத்தில் இருக்கும் சர்க்கரையை ஏன் அவர்கள் நிறம் மாற்றினார்கள்?. கையாள்வதற்கு எளிது, மின்னும் அழகு, கைகளில் ஒட்டாதது, இரசாயன நிறுவனங்களின் விற்பனை, உலக அரசியல்...என நிறையக் காரணங்களை நாம் கூறிக் கொள்ளலாம். 

ஆனால் எல்லாவற்றையும் தள்ளிவிட்டு பார்த்தோமானால்.. அந்த வெள்ளைச் சர்க்கரையை காசு கொடுத்து வாங்கியது நாம் தானே. அதன் சுவைக்கு அடிமையானதும் நாம் தானே. ஏன் அதை நாம் தொடர்ந்து வாங்குகிறோம்?. 



நாம் இனிமேல் வெள்ளைச் சர்க்கரையைப் பயன்படுத்தப் போவதில்லை என்பதில் தொடங்குகிறது நம் உடல் நலம். 

வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றான, கலப்படம் அற்ற நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி போன்றவற்றை பயன்படுத்துவோம். இவை மயக்கும் சுவைகளை அளிப்பதில்லை,மின்னும் நிறத்தில் இல்லை. ஆனால், உடல் நலம் பேணும் அவை. ஒரு நாளும் அவை நோய்க் காரணிகளை உருவாக்காது.

Friday, February 26, 2016

சமையலறைக் கழிவுகளில் உரம்

மண் தொட்டி ஒன்றை எடுத்துக் கொள்ளவும். 

தினமும் சமையலறையில் மீதமாகும் காய்கறிக் கழிவுகளை அதில் போட்டு வரவும். காலிபிளவர் தண்டு போல பெரிய கழிவுகளாக இருந்தால் பொடியாக நறுக்கி போடவும். 

தொட்டி முக்கால் பாகம் நிறைந்ததும், மாட்டுச் சாணத்தில் கொஞ்சம் நீர் ஊற்றி கரைத்து, தொட்டியில் அந்தக் கழிவுகளின் மேலே ஊற்றி விடவும். வளமான மண் கிடைத்தால் கொஞ்சம் தூவி விடலாம். 

சாணத்தில் இருந்து புழுக்கள் உருவாகி கழிவுகள் மக்க ஆரம்பிக்கும். 

தொட்டியில் நீர் வெளியேற கீழே துளைகள் இருப்பது அவசியம். தொட்டியை அப்படியே வைத்திருக்கவும். வாரம் ஒருமுறை கொஞ்சம் நீர் தெளித்து கிளறி விடவும். 

ஒரு மாதம் போனால் கருப்பு நிறத்தில் மக்கிப் போன உரம் கிடைக்கும்.  ரசாயனம் இல்லாத உரம் தயார். இதன் மேல் கொஞ்சம் மண்ணைப் போட்டு இனி செடிகளை வளர்க்க வேண்டியது தான். 

இங்கே படத்தில் உள்ளது புதினா. மக்கிப் போன உரத்தில் விளைந்தது. 



பழைய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால், அடியில் இரண்டு மூன்றுதுளைகள் போட்டுக் கொள்ளவும்.  

மூன்று, நான்கு தொட்டிகளை எடுத்துக் கொண்டு சுழற்சி முறையில் செய்யலாம். 

தொட்டிகளை வெயில் படாத இடத்தில் வைத்து மூடி வைத்தால் விரைவாக மக்கும்.