Showing posts with label குளச்சல் மு.யூசுப். Show all posts
Showing posts with label குளச்சல் மு.யூசுப். Show all posts

Monday, September 11, 2023

திருடன் மணியன்பிள்ளை - ஒரு திருடனின் சுயசரிதை

களவும் கற்று மற என்பது பழமொழி. ஒருமுறை நீங்கள் களவு செய்து மாட்டிக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் நீங்கள் திருடன்தான் என்கிறார் மணியன்பிள்ளை. "களவென்பது கற்று மறக்கும் விசயமல்ல. முதல் வீழ்ச்சியே மிகப் பெரிய பாதாளத்தில்தான் முடியும். கரையேற முயற்சிக்கும் போதெல்லாம் போலீசும் சமூகமும் மேலும் உதைக்கும். வழி தவறிப்போக இருக்கும் இளைஞர்கள் என்னுடைய இந்தத் தோல்விகளின் குமுறல்களைப் புரிந்து கொள்ள வேண்டும்." என்கிறார் பிள்ளை

சிறுவயதில் தந்தையை இழக்கிறார் பிள்ளை. உறவினர்கள் மணியன் பிள்ளை குடும்பத்துக்கு தர வேண்டிய சொத்தில் ஏமாற்றுகிறார்கள்.  ஒரு சிறு வீட்டை மட்டுமே ஒதுக்கித் தருகிறார்கள். அம்மா மற்றும் சகோதரிகளுடன் அந்த வீட்டில் வறுமையும் வாழ்கிறது. தந்தை இருக்கும் வரையில் பசி என்றால் என்னவென்று தெரியாமல் வளர்ந்த பிள்ளை, பசியால் வாடுகிறார். அதுவும் பதின் வயதில் இருக்கும் அவருக்கு, வீட்டில் உணவு என்பது கால் வயிறு நிறையும் அளவுக்கே கிடைக்கிறது. 

முதன் முதலில் தான் திருட்டுக்கு எப்படி வந்தேன் எனச் சொல்கிறார் பிள்ளை. சொந்தத்தில் ஒரு அத்தை முறையுள்ள பெண், பக்கத்து வீட்டு குழந்தையின் தங்கச் சங்கிலியை திருடி வரச் சொல்கிறார். மணியன் பிள்ளை அந்தக் குழந்தையிடம் இருந்து சங்கிலியை கொண்டு வந்து தர, அத்தை பயந்து அதை வாங்க மறுக்கிறாள். பின்னர் சிறு சிறு திருட்டுகள், கொஞ்ச நாட்கள் சிறை வாசம் எனப் போகிறது. 





ஒவ்வொரு முறை சிறைக்குச் செல்லும்போதும் அவரை ஜாமீனில் விடுவிக்க அவரின் அம்மா வருகிறார். ஆனால் மணியன்பிள்ளை தரும் எந்த பணத்தையும் அவரின் அம்மா வாங்குவதில்லை. அவரின் சகோதரிகளும் அவ்வாறே அதைத் தொடுவதில்லை. சில சமயங்களில் வழக்கறிஞர் இல்லாமல் அவரே வாதாடுகிறார். நீதிபதி ஒரு முறை ஏன் வக்கீல் இல்லை என்று கேட்க, "நீதிபதி அவர்களே, நான் பணம் கொடுத்து அமர்த்தும் ஒரு வக்கீலைக் காட்டிலும், நான் தவறு செய்யவில்லை என்று நிரூபிக்கும் பொறுப்பு எனக்குத்தானே அதிகம் " என்கிறார். பெரும்பாலான வழக்குகளில் மணியன் பிள்ளையே வாதாடி இருக்கிறார். 

திருடிய பின்னர் வரும் நகைகளை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் வாங்க மாட்டார்கள். அதற்கெனவே இருக்கும் ஆட்களிடம் சென்றால் அவர்கள் தரும் சொற்ப பணத்தை வாங்கி குடிப்பது, சிலருக்கு உதவுவது எனச் செலவழிக்கிறார். நண்பர்கள் யாரேனும் உதவி கேட்டால் மறுக்காமல் செய்திருக்கிறார். சில காவல் அதிகாரிகளும், உறவினர்களும் பிள்ளையிடம் வீண் வம்புக்கு வர, அவர்களை காத்திருந்து பழி வாங்குகிறார் பிள்ளை. சட்டத்துக்கும், போலீசுக்கும் பணிந்தே போகிறார் பிள்ளை. அவரை நீதிமன்றம் கூட்டிப் போகும்பொழுது கைவிலங்கு போடாமலே அழைத்துச் செல்கிறார்கள். பிள்ளை தப்பி போக மாட்டான் என்ற நம்பிக்கை. அந்த நம்பிக்கையே பின்னாளில் அவர் காவல் நிலையத்தில் பணி புரியவும் வைக்கிறது. 

திருடன் என்று தெரிவிக்காமல் ஒரு பெண்ணை கட்டி வைக்கிறார்கள். பின்னர் தெரிந்து அந்த பந்தம் முறிந்து போகிறது. இன்னொரு பெண்ணுடனான காதலும் அவளின் அம்மாவால் அழிந்து போகிறது. பின்னர் மெகருன்னிஸாவை மணக்கிறார். அவளையும் விட்டுவிட்டு வரும் அவர், சில மாதங்கள் கழித்து ஒருமுறை அவள் மாசமாக இருப்பதை பார்த்து பின்னர் அவளுடனே இருக்கிறார். மகன் பிறக்கிறான்.  இந்த திருட்டு வாழ்க்கை வேண்டாம் என்று மெகருன்னிஸா சொல்லிக்கொண்டே இருக்கிறாள். பிள்ளை கேட்பதாய்  இல்லை. 

கேரளாவில் தேடப்படும் குற்றவாளியாக இருக்கும் நேரத்தில், ஒரு வீட்டில் புகுந்து கிடைத்த நகைகளுடன் மைசூர் வருகிறார்கள். அங்கே அவர் சலீமாக மாறுகிறார். சிறு டீக்கடை வியாபாரத்தில் துவங்கும் பிள்ளைக்கு அங்கே நன்கு படித்த யூசுபின் துணை கிடைக்கிறது. அவன் துணையுடன் புகையிலை தோட்டங்களில் முதலீடு செய்கிறார். முதலீட்டுக்கு நகைகள் உண்டு. தோட்டத்தில் வேலை செய்யும் பணியாட்களிடம் பணிவுடன் நடந்து கொள்வதால், இவரை அங்கே கொண்டாடுகிறார்கள். வருவாய் பெருகுகிறது. கூடவே பெரிய ஆட்களின் தொடர்பும். சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு வர, அங்கேயே பிறந்து வளர்ந்தவர் என சான்றிதழும் பெறுகிறார். 

இடையில் ஒருநாள் மைசூர் வந்து சென்ற மச்சினன் மூலம் கேரளா போலீஸ் அவரைக் கண்டடைகிறார்கள். ஒரே நாளில் கட்டிய கோட்டை சரிகிறது. அவர் அங்கே சம்பாதித்த சொத்துக்கள், நகைகள் என அத்தனையும் அரசுக்கு செல்கிறது. நீதிமன்ற தீர்ப்பில் மைசூரில் சம்பாதித்த சொத்துக்களில் அவரின் உழைப்பும் உண்டு என்பதால் அவருக்கும் கணிசமான தொகையை பெற உரிமை உண்டு என்கிறது. ஆனால் இரண்டு மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் அவருக்கு கடைசி வர அந்தப் பணம் கிடைப்பதில்லை. 

இவர் சிறைக்குச் சென்றுவிட மனைவி வீட்டு வேலைக்கு வெளிநாடு செல்கிறார். இடையில் ஒரு முறை வந்த மெகருன்னிசா பிள்ளையை சந்திக்கிறார். திரும்பவும் வெளிநாட்டு வேலைக்கு சென்ற இடத்தில் இயற்கை எய்துகிறார். மனைவி இறந்ததில் மணியன் பிள்ளை கலங்கிப் போகிறார். 

ஒருமுறை காவல் துறையிடம் அகப்பட்டால் பழைய வழக்குகள் தோண்டி எடுக்கப்படுகின்றன. அவரின் கைரேகை பதித்திருந்த குற்றங்கள் மீண்டும் உயிர் பெறுகின்றன. வழக்குகளில் தண்டனை முடிந்து  வெளியே வந்தாலும் எங்கேயோ நடந்து போய்க் கொண்டிருந்தால் கூட 'திருட முயற்சி' என்று காவலர்கள் சந்தேகப்படுகிறார்கள். 

வழக்குகளில் இருந்து வெளியே வந்த பின்னர் மகன் அவரைப் பார்த்துக்கொள்கிறான். அவனுக்கு திருமணம் ஆகி குழந்தையும் உண்டு. ஏதாவது தொழில் செய்யலாம் என்று அவர் முனைய ஒரு வங்கியில் கொஞ்சம் பணம் கொடுக்கிறார்கள். அந்தப் பணத்தை வாங்கிய இரவில் குடித்து விட்டு எங்கேயோ கிடக்கிறார். அடுத்த நாள் காலையில் போதை தெளிந்து பார்த்தால் கால் சட்டையில் வைத்திருந்த பணம் திருடு போய்விட்டது. ஒரு திருடனிடம் இருந்தே பணம் திருடப்பட்டதை நினைத்து பிள்ளை வருந்துகிறார்.  

மகனிடம் இருந்து பணம் திருடு போன நாளில் பிள்ளை உண்மையிலேயே விதியை நினைத்து அழுகிறார். தொழிலுக்கென மகன் சென்னைக்கு கொண்டு போன 50,000 ரூபாய் திருடு போகிறது. மருமகளின் நகைகள் உட்பட எல்லாத்தையும் விற்று அந்தத் தொகையை அடைத்தாலும், அதற்கு பின்னர் முன்னேறவே முடியாமல் மகன் திணறுகிறான். நான் செய்த பாவங்களுக்கு கடவுள் எனக்கு தண்டனை வேண்டும் என்றாலும் தரட்டும், மகனை ஏன் கடவுள் தண்டிக்க வேண்டும் என்று புலம்புகிறார். தனக்கு மட்டும் வலி என்றால் கண்டுகொள்ள மாட்டார், ஆனால் உயிருக்கு மேலான மகனுக்கு நேர்ந்தால் தான் பிள்ளை வருந்துவான் என கடவுள் நினைத்திருக்க கூடும். 

இன்னும் சில வழக்குகள் நடந்து கொண்டிருப்பதாக கூறும் பிள்ளை, களவு வாழ்க்கை பெரும் கேடாய் முடியக் கூடியது என்கிறார். பிள்ளை சொல்கிறார், "களவென்பது கற்று மறக்கும் விசயமல்ல. முதல் வீழ்ச்சியே மிகப் பெரிய பாதாளத்தில்தான் முடியும். கரையேற முயற்சிக்கும் போதெல்லாம் போலீசும் சமூகமும் மேலும் உதைக்கும்." .

==

திருடன் மணியன்பிள்ளை - ஜி.ஆர். இந்துகோபன்

தமிழில் மொழிபெயர்ப்பு : குளச்சல் யூசுஃ ப் 

2018-ஆம் ஆண்டின் மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருதைப் பெற்ற நூல். 

Thursday, September 30, 2021

பாத்துமாவின் ஆடு - பஷீர்

இந்நாவலை கேரளாவில் ஒரு சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்கு சேர்ந்த பொழுது எழுதியதாக பஷீர் முன்னுரையில் சொல்கிறார். அங்கே மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் சிகிச்சை தரப்படுகிறது. அங்கே இருந்த பைத்தியங்களிடம் பேசுகிறார். அதில் ஒரு பைத்தியத்துக்கு முழு யானையை திங்க வேண்டும் என ஆசை. 

இவர் "எங்க உப்பப்பாவுக்கொரு ஆன இருந்தது" என்கிறார்.

"அத தின்னுட்டீங்களா"

"இல்லை, அது அங்கங்கே சுற்றி அலைகிறது"

"பிடிக்க முடியுமா"

பஷீர் சொல்கிறார்: "தெரியவில்லை".

இன்னொரு பைத்தியம் "பட்டாளத்தில் இருந்த நான் நான்கு வருடம் முன் செத்துப் போய்விட்டேன். திரும்பவும் இந்த பூமிக்கு வந்துள்ளேன்" என்கிறது.

'இந்நாவல் ஒரு தமாஷ் கதை. ஆனால் எழுதும்பொழுது மனதுக்குள் வெந்து சாம்பலாகி கொண்டிருந்தேன். வேதனையை மறக்க வேண்டும். எழுத வேண்டும், மனதை.' என்கிறார் பஷீர். 

நாவல் எழுதி முடித்து முன்னுரை எழுதுவதைத் தள்ளிப்போட்டு ஐந்து வருடங்கள் கழித்து நாவல் வெளியாகிறது. பத்து பக்கங்களுக்கும் மேல் நீண்ட முன்னுரை. 


******

pathumavin aadu basheer

நாவலில் பாத்திமாவின் ஆடு கதையைச் சொல்பவர் எழுத்தாளர். திருமணம் ஆகாதவர். குடும்பத்தின் மூத்தவர். எழுத்தாளராக இருப்பதால் அங்கங்கே சுற்றிக்கொண்டு தன் சொந்த ஊரில் இருந்து கொள்ளலாம் என திரும்பி வருகிறார். முன்பு அவருடைய சொந்த ஊரில் குடும்பத்தினர் தங்கியுள்ள வீட்டுக்கு எதிரே உள்ள சின்ன வீட்டில் இருந்தார். குடும்பத்தின் சண்டை சச்சரவுகள் இன்றி தனியாக அங்கே இருந்தார். எழுத்தாளரான இவர், ஊரில் இல்லாததால் அவரின் தம்பி அவ்வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டான். எனவே வேறு வழியின்றி அவர் குடும்பத்துடன் தங்க நேர்கிறது. 

அப்துல், ஹனீபா, அபூ என மூன்று இளைய சகோதரர்களும், பாத்துமா, ஆனும்மா என இரண்டு சகோதரிகளும் உள்ள பெரிய குடும்பம். இதில் பாத்துமா மட்டும் கொஞ்சம் தள்ளி வசிக்க, மற்ற எல்லோரும் ஒரே வீட்டில் தங்கி இருக்கிறார்கள். அபூ தவிர அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டதால் அவர்களின் குழந்தைகள் வீடு முழுவதும் சுற்றித் திரிகிறார்கள். குறும்புகள் செய்கிறார்கள். எல்லோருக்கும் பெரியவர் என்பதால் கூடப் பிறந்தவர்களுக்கு 'பெரிய காக்கா', அதாவது பெரிய அண்ணா. குழந்தைகளுக்கு 'மூத்தாப்பா'.

பாத்துமா ஒரு ஆட்டை வளர்த்து வருகிறாள். தினமும் காலையில் பாத்துமா தன் அம்மா வீட்டுக்கு வருவாள். அவளோடு சேர்ந்து பாத்துமாவின் ஆடும் வருகிறது. வீட்டுக்குள் எல்லா இடங்களிலும் சுதந்திரமாக வலம் வருகிறது. எழுத்தாளரான பெரிய காக்காவின் புத்தகங்களைத் தின்கிறது. அவர் மேசையில் வைத்திருக்கும் வாழைப்பழத்தை தின்கிறது. இத்தனை நாட்களாக ஊரில் இல்லாததால் அவருக்கு இந்த ஆட்டைப் பற்றி தெரியவில்லை. அவர் தன் சகோதரியிடம்  ஆட்டை கட்டிப்போடச் சொல்கிறார். அதற்கு பாத்துமா சொல்கிறாள்; 'கட்டிப்போட்டா அதுக்கு பிடிக்காது பெரிய காக்கா'.

பெரிய காக்காவிடம் எல்லோரும் தனக்கு தேவையான பணத்தை வாங்கி கொண்டே இருக்கிறார்கள். அவரின் உம்மா கூட அவ்வப்பொழுது பணம் கேட்கிறார். நேற்று குடுத்தேனே என்று கேட்டால் இன்னொரு மகனிடம் கொடுத்து விட்டதாக சொல்கிறார் அம்மா. 'உனக்கு என்ன ஒண்டிக்கட்டை. முக்கால் ஜாண் வயிறு.. உனக்கு எதற்கு பணம்' என்கிறாள் உம்மா. 

ஒரு சகோதரி கம்மல் கேட்க, இன்னோர் சகோதரி வீட்டுப் பாத்திரங்கள் கேட்கிறார். யாரிடமும் இதை சொல்ல வேண்டாம் என அவர்களே சொல்லிச் செல்கிறார்கள். ஆனாலும் ஒருத்தர் பொருள் கேட்டது மற்றவருக்கும் தெரிய வருகிறது. எழுத்தாளருக்கு மணியார்டர் வரும் முன்னரே, அந்தப் பணத்துக்கு வீட்டில் உள்ளோர் திட்டம் போடுகிறார்கள்.

பெரிய காக்கா தன் இன்னொரு சகோதரனிடம் குடும்பச் செலவுக்கு பணம் கேட்டால், எப்பொழுதும் ' நான் பட்டாளத்துக்கே போறேன்.' என்று சொல்கிறான். சின்ன வயதில் அவர்கள் செய்த சேட்டைகளையும், பொய்களையும் நினைவு கூர்கிறார். 

வீட்டில் குழந்தைகள் கூட அவரிடமே காசு கேட்கிறார்கள். ஒருநாள் கால் சட்டை பையில் ஆப்பத்தை போட்டு வைத்து தின்கிறான் சிறுவன். பாத்துமாவின் ஆடு அதை இழுத்து பாக்கெட்டோடு தின்று விடுகிறது. அதில் அடுத்த நாள் பென்சில் வாங்க வைத்திருந்த காசும் உண்டு. ஆடு அதையும் முழுங்கி விடுகிறது.  பின்னர் பெரிய காக்காவே அவனுக்கு காசு தருகிறார்.

வீட்டில் இரண்டு ஆடுகள் இருப்பதை கொஞ்ச நாட்கள் கழித்தே பெரிய காக்கா உணர்கிறார். ஒன்று பாத்துமாவின் சினையாக இருக்கும் ஆடு, இனொன்று வீட்டில் ஆனும்மா வளர்க்கும் ஆடு. பாத்துமா தான் அந்த ஆட்டை தன் சகோதரியான ஆனும்மாவுக்கு தந்தாள். ஒரு வாக்குவாதத்தில், 'இந்த உலகத்தில் தங்கச்சிக்கு யாரு ஆடு குடுத்திருக்கா. நான் குடுத்தேனே, நீ இப்படி பேசலாமா?' என பாத்துமா கேட்க, 'அவங்கவங்க யானையே தரங்களாம். இது சின்ன ஆடுதானே' என்கிறாள் ஆனும்மா.

வீட்டில் இருக்கும் பெண்கள் மதிய உணவு வேளையில் ஆண்களுக்கும் குழந்தைகளுக்கும் அரிசி சோற்றை தந்துவிட்டு மரவள்ளிக் கிழங்கு மாவால் செய்த புட்டை உண்கிறார்கள். இதைக் கண்ட பெரிய காக்கா, ஒருநாள் இந்த வறுமையை போக்க வேண்டும் என நினைக்கிறார். 

பாத்துமா பெரிய காக்காவை சாப்பிட வீட்டுக்கு அழைக்கிறாள். மற்ற சகோதரர்களை விட்டுவிடுகிறாள். அவர்களை எல்லாம் அழைத்து விருந்து வைக்க அவளுக்கு மனம் உண்டு. ஆனால் வசதி இல்லை. இதை மற்றவர்கள் கேட்க, ஒருநாள் உங்களுக்கும் விருந்து வைப்பேன் என்று அவர்களிடம் சொல்கிறாள். இப்பொழுது சினையாக இருக்கும் ஆடு குட்டி போட்டு பால் கறந்தால், பாலை விற்று வரும் பணத்தில், நிறைய செலவுகளை சேர்த்துக்கொண்டே செல்கிறாள் பாத்துமா. 

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசைகள். ஆனால் இழுபறி வாழ்க்கை. 

******

'குடும்பம் ஒரு பாற்கடல்' என்று லா.ச.ரா கதையில் வருவது போல இந்தக் கதையிலும் பெரிய குடும்பம். அள்ள அள்ள அமுது வரும், போலவே விசமும் வரும். 

பாத்துமாவின் ஆடு குட்டி போட்ட பின்னர், அதன் பாலை அவளின் உம்மாவும், தங்கையும் திருட்டுத்தனமாக கறந்து உபயோகிக்கிறார்கள். அதை பார்த்த பெரிய காக்கா, பாத்துமாவிடம் சொல்லித்தருகிறார். பாத்துமா, நீங்க கறக்க வேண்டாம், நானே கறந்து தருகிறேன் எனச் சொல்கிறாள். சொன்னவாறே பாலையும் கொடுக்கிறாள். ஆனால், அவளுக்குத் தெரியாமல் பால் கறப்பதும் தொடர்கிறது. 

பஷீர் சொன்னது போலவே இந்நாவல் ஒரு நகைச்சுவை கதை. 'பாத்துமாவின் ஆடு' வறுமையிலும் வாழ்க்கையை கொண்டாடச் சொல்லும் கதை. 


Wednesday, June 9, 2021

எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது - பஷீர்

செல்வத்துடன் இருந்த ஒரு குடும்பம், பின் அதை இழந்து ஒரு சிறிய வீட்டில் வசிக்க நேர்கிறது. அந்தக் குடும்பத்தின் தலைவியான குஞ்ஞுதாச்சும்மா பெரிய குடும்பத்தில் இருந்து இந்த வீட்டுக்கு வாக்கப்பட்டவர். அவரின் அப்பாவுக்கு ஒரு யானை இருந்தது. அதனால் குஞ்ஞுதாச்சும்மா யானைக்காரரின் மகள். எப்பொழுதும் 'நான் ஆனைக்காரரோட பொன்னு மவளாக்கும்' என்கிறார். 

குஞ்ஞுதாச்சும்மாவின் கணவர் வட்டனடிமை ஊரில் பெரிய மனிதர். பள்ளிவாசலின் காரியக்காரர். ஊரில் பெரிய பணக்காரர். பள்ளிவாசலைச் சேர்ந்த மற்றவர்களுக்கு, வட்டனடிமை தலைவராக இருப்பது பிடிக்காமல் வழக்கு தொடுக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் அவரின் சகோதரிகளும் சொத்தில் பங்கு கேட்டு வழக்கு தொடுக்கிறார்கள். ஆக இரண்டு வழக்குகள். இரண்டையும் நடத்த செலவு செய்கிறார். கையில் இருந்த பணம் மற்றும் நகைகளை இழக்கிறார். இரண்டு வழக்குகளிலும் அவருக்கு எதிராகத் தீர்ப்பு வருகிறது. பின்னர் இப்பொழுது இருக்கும் வீட்டையும் இழந்து, சிறு தோட்டத்துடன் கூடிய சின்ன வீட்டுக்கு குடிவருகிறார்கள். 



வட்டனடிமை சிறு வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்துகிறார். முன்னர் எப்பொழுதும் அவர்கள் வீட்டுக்கு யாராவது வந்து போய்க்கொண்டு இருப்பார்கள். ஊரில் பாதிப்பேர் சொந்தம் எனச்சொல்லி வருவார்கள். இப்பொழுது யாரும் வருவதில்லை. பணமில்லாதவர்களை யாருக்கும் தேவையில்லை அல்லவா. 

ஒரே பிள்ளை இவர்களுக்கு. குஞ்ஞுபாத்துமா. உம்மா அடிக்கடி அவளிடம் 'பெண்ணே நீ, ஆனைக்காரரோட பொன்னு மவளோட பொன்னு மவளாக்கும். அது பெரீய கொம்பானே' என்று சொல்கிறாள். வசதியாக இருந்தபோது இந்த வார்த்தைகள் நன்றாக இருந்தது. ஆனால் எல்லாவற்றையும் இழந்தும் குஞ்ஞுதாச்சும்மாவுக்கு பழைய பெருமை போவதில்லை. பாத்துமாவுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் செய்து வைக்க வேண்டும். இவர்களின் இப்போதைய நிலை பார்த்து யாராவது திருமணம் செய்ய முன் வரவேண்டும் என்கிறாள் உம்மா. 

அம்மாவுக்கும் மகளுக்கும் சமையல் தெரியாது. வியாபாரம் செய்து கொண்டு வருவதை வாப்பா தான் சமைக்க வேண்டும். அவர் சிலசமயம் தன் மனைவியிடம் 'பொண்ணா பொறந்தவளுக்கு அடுப்பு பத்த வைக்கவாவது தெரிஞ்சு இருக்கணும்' எனச் சொல்ல, உம்மாவோ 'நான் ஆனை மக்காரோட மவளாக்கும்' என்று சண்டைக்கு நிற்கிறாள். வறுமை இருக்கும் குடும்பங்களில் இருக்கும் பிரச்சினைகளுடன் கணவன் மனைவி சண்டை வேறு. குஞ்ஞுபாத்துமா அவர்களை பார்த்து கலங்கி நிற்கிறாள். உம்மாவுக்கு அவளின் குடும்பம், யானை பெருமை என சொல்லிக்காட்ட, வாப்பா விட்டுக்கொடுத்துப் போகிறார்.

குஞ்ஞுதாச்சும்மாவுக்கு இஸ்லாம் முறைகள் மீதான பற்று அதிகம். பெண்கள் பூ வைத்தல், அலங்காரம் செய்தல் தவறு என்கிறாள். தன் மகளையும் அவ்வாறே சொல்லி வளர்த்திருக்கிறார். ஆனால், தன் வறுமையான சூழலில் ஒவ்வொரு நாள் தொழுகையை கைவிடுகிறார். 'அதெல்லாம் ஒரு பாடு தொழுதாச்சு' என்று சலித்து கொள்கிறாள். 

அவர்கள் வீட்டை விட்டு கொஞ்சம் தள்ளி இருக்கும் வீட்டுக்கு, நகரத்தில் இருந்து ஒரு குடும்பம் குடிவருகிறது. முஸ்லீமாக இருந்தாலும் முற்போக்காக இருக்கிறார்கள். நிஸார் அகமது, ஆயிஷா என இரு பிள்ளைகள். ஆயிஷாவும், குஞ்ஞுபாத்துமாவும் தோழிகளாக பழகுகிறார்கள். பூ வைத்தல், புடவை கட்டுதல், தலை முடி அலங்காரம் செய்தல் போன்ற செயல்களை பார்த்த குஞ்ஞுதாச்சும்மா, அவர்கள் முஸ்லிம்களே இல்லை காபிர்கள் என்கிறார். 

நிஸார் அகமதுக்கு பாத்துமாவை பிடித்துப்போக காதலிக்கிறான். பாத்துமாவுக்கும் அவனைப் பிடித்திருக்கிறது. அகமது கழிப்பறை கட்டுதல், வீட்டைச் சுற்றி மரங்கள் வைத்தல், பூச்செடிகள் நடுதல் என ஏதாவது வேலை செய்துகொண்டே இருக்கிறான். சுத்தத்தை விரும்புவனாக இருக்கிறான். இரண்டு வீட்டினரும் பேசி திருமணம் முடிவு செய்கிறார்கள். அதிக நபர்களை அழைக்காமல் குறைவாகவே திருமணத்துக்கு அழைக்க வேண்டும் எனச் சொல்கிறான் அகமது. மீறிப்போனால் ஒரு பத்திருபது பேர். அவர்களுக்குத் தேவையான உணவை வீட்டிலேயே சமைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்கிறார்கள். 

திருமணம் அன்றிரவு நடக்கப் போகிறது. பிள்ளைகள் வெளியே சத்தம் போட்டு விளையாடிக்  கொண்டிருக்கிறார்கள். குஞ்ஞுதாச்சும்மா அவர்களிடம் 'எங்க அப்பாவுக்கொரு ஆனை இருந்தது' என்று சத்தம் போட, அதில் ஒரு பையன் 'அது குழியான'  என்கிறான். குழியானை என்பது மண்ணில் வட்டமாக சிறு குழி தோண்டி வாழும் சிறு பூச்சி. தன் பெருமை மிக்க குடும்பத்து யானையை, நான்கு பேரை கொன்ற யானையை, பெரிய கொம்புள்ள யானையை குழியானை என்றதும் உம்மாவுக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. ஆற்றாமை வருகிறது. அவர்களைத் திட்டுகிறாள். சத்தம் கேட்டு அங்க வந்த பாத்துமா என்ன என விசாரிக்க 'உங்க உப்பப்பா ஆன.. குழியானையாம் புள்ளே.. குழியானையாம்' எனச் சொல்கிறாள்.  

****


காலம் பழைய பெருமைகளை எப்போதும் நினைத்துப் பார்ப்பதில்லை. நமக்கு வேண்டுமானால் நம் வீட்டுப்  பெருமை பெரிதாக இருக்கலாம். ஒருகாலத்தில் பெரிய பெருமைகளாக இருந்த எல்லாம் ஒருநாள் மறைந்து விடும். புதிய காலத்துக்கு ஏற்றவாறு நாம் தான் மாற வேண்டும். குஞ்ஞுதாச்சும்மாவுக்கு ஆனைப் பெருமை, வட்டனடிமைக்கு ஊரில் பெரிய தலைவர் எனப் பெருமை. அதெல்லாம் இன்று இல்லை. 

நாவலில் ஓரிடத்தில் 'பணமில்லாதவர்களை யாருக்கும் தேவையில்லை' என்று வரும். இருக்கும் பணத்தை பெருமைக்காக தொலைத்து விட்டுப் பின்னர் வருந்துவதில் நியாயமில்லை. அதனால்தான் அகமது திருமணத்தைக்கூட எளிதாக நடத்தலாம் என்கிறான். திருமணத்துக்கு ஏக செலவு செய்து கடன் பட்டவர்கள் ஏராளம். 

நாவல் தமிழில் மொழிபெயர்ப்பு: குளச்சல் மு.யூசுப் 

Wednesday, June 2, 2021

நாலுகெட்டு - எம்.டி. வாசுதேவன் நாயர்

பழைய பெருமைகள் உள்ள வடக்கு வீடு, முன்பு 64 பேருக்கு மேலிருந்த பெரிய குடும்பமாக இருந்தது. பின்னர் பங்கு பிரித்ததில் காரணவர் பெரிய மாமா மற்றும் அவரின் அக்கா குடும்பம் என இப்போது வடக்குப்பாடு இல்லத்தில் இருக்கிறார்கள். எட்டு கட்டு வீடாக இருந்து இப்போது நாலு கெட்டு வீடாக சுருங்கி விட்டது. 

சகோதரன் சகோதரிகளுடன் அந்த வீட்டில் பிறந்தவள் பாருக்குட்டி. எங்கேயும் போகாமல் பொத்தி பொத்தி வளர்ந்த அவள், கோந்துன்னி நாயருடன் காதல் கொள்கிறாள். 'எனக்கு நாலுகெட்டு வீடோ, பெரிய நிலமோ இல்லை. ஆனால் உன்னை காப்பாத்துவேன். உனக்கு நம்பிக்கை இருக்கா?' எனக் கேட்க பாருக்குட்டியும் நம்புகிறேன் எனச் சொல்லி கல்யாணம் செய்துகொள்கிறாள். ஒரே ஊர் என்றாலும்  திருமணத்துக்குப் பின்னர் பிறந்த வீட்டுடன் எந்த தொடர்பும் இல்லை பாருக்குட்டிக்கு.  வடக்கு வீீட்டில் உள்ளவர்கள், பாருக்குட்டிக்கு புலை(இறந்து விட்டவளாக கருதி செய்யும் சடங்கு) செய்து விடுகிறார்கள். 

சிறு நிலமும், ஒரு வீடும் உள்ள கோந்துன்னியின் மனையில் குடும்பம் நடக்கிறது. பின்னர் பிறக்கும் ஆண் குழந்தைக்கு அப்புண்ணி என்று பெயர் வைக்கிறார்கள். அப்புண்ணி கைக்குழந்தையாக இருக்கும்போது கோந்துன்னி நாயர் இறந்துவிடுகிறார். அவரின் கூட்டாளியான செய்தாலி, நாயருக்கு விஷம் வைத்து கொன்றுவிட்டதாக ஊருக்குள் பேச்சிருக்கிறது. ஆனால் செய்தாலியை காவல்துறை எதுவும் செய்வதில்லை.

பாருக்குட்டி தனியாக மகனை வளர்த்து வருகிறாள். இன்னொரு இல்லத்தில் வேலைக்காரியாக சென்று, கொண்டு வரும் சொற்ப பணத்தில் வாழக்கை நகர்கிறது. பக்கத்து வீட்டில் இருக்கும் முத்தாச்சி பாட்டி அப்புண்ணிக்கு பழைய கதை எல்லாம் சொல்லுகிறாள். 'கீழ விட்டால் எறும்பு கடிக்கும், மேலே விட்டால் பேன் கடிக்கும்னு வளர்ந்தவ பாருக்குட்டி. இப்போ அவ வேலைக்காரியாக வேலைக்கு போறா. இதுவும் ஒரு யோகம்தான். உனக்கு நெறைய சொந்தம் உண்டு'  என்று சொல்கிறாள் முத்தாச்சி பாட்டி.

ஒருநாள் வடக்கு நாலுக்கட்டு வீட்டுக்கு அவனை அழைத்துச் செல்கிறாள் பாட்டி. அன்று அங்கே நாக பூஜை நடக்கிறது. இரவு முழுவதும் பூஜை நடந்ததால் அப்புண்ணி அங்கேயே தூங்கி விடுகிறான். காலையில் அவன் அங்கே இருப்பதை அறிந்த பாருக்குட்டியின் அம்மாவான அம்மும்மா பாட்டி அவனை கொஞ்சுகிறாள். அங்கே இருப்பவர்களுக்கு, பெரிய மாமா வந்தால் திட்டுவார் என பாட்டியிடம் சொல்கிறார்கள். சொன்னவாறே அவர், அப்புண்ணியை திட்டி வீட்டை விட்டு துரத்தி விடுகிறார்.

எந்த ஆணின் முகத்தையும் ஏறிட்டுப் பார்க்காத பாருக்குட்டி தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கிறாள். அப்புண்ணி மேல் படிப்புக்காக வேறு பள்ளி மாற வேண்டிய சூழலில் வேறு வழியில்லாமல் சங்கரன் நாயரை நாடுகிறாள். சங்கரன் நாயரை அவளுக்கு முன்பே தெரியும் என்றாலும் தயங்கி தயங்கியே அவரிடம் சொல்லுகிறாள். எப்படியோ இருக்க வேண்டிய பெண்மணி தன்னிடம் உதவி கேட்டதும், அதை நான் பார்த்துக்கிறேன் எனச் சொல்கிறார். பின்னர் வீட்டுத் தோட்டத்துக்கு வேலி அமைக்கவும் உதவுகிறார். பாருக்குட்டியும், நாயரும் பேசிக்கொள்வதை ஊர் திரித்துப் பேசுகிறது . சங்கரன் நாயரும் ஒண்டிக்கட்டையாக இருப்பதே அதற்கு காரணம். அப்புண்ணிக்கு ஊரில் பேசிக்கொள்வது தெரியவர, அவனுக்கு அம்மா மேலும் சங்கரன் நாயர் மேலும் கோபம் வருகிறது. ஒருநாள் அவன் அம்மாவிடம் 'உனக்கு சங்கரன் நாயர் இருக்கிறார் ' எனச் சொல்லிவிட்டு கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறுகிறான். 

வீட்டை விட்டு வெளியேறிய அப்புண்ணி, தன் அப்பாவைக் கொன்றதாக சொல்லப்படும் செய்தாலியை சந்திக்கிறான். செய்தாலி 'நாயர் என்கூட வரணும், இல்ல நாலுகட்டு வீட்டுக்குப் போகணும்' எனச் சொல்கிறான். அங்கே யாரும் தன்னை மதிப்பதில்லை, போனால் வெளியே அடித்து அனுப்பி விடுவார்கள் எனச் சொல்கிறான் அப்புண்ணி. 'அந்த வீட்டில் உனக்கும் பங்கு உண்டு, சொத்துக்களில் நீயும் ஒரு வாரிசு, அதனால் உனக்கு உரிமை உண்டு' என்று செய்தாலி சொல்லி அவனை நாலுகெட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கிறான். அங்கே போனதும் அம்மும்மா பாட்டி மகிழ்ந்தாலும், பெரிய மாமா அவனை அடிக்க வருகிறார். பாருக்குட்டியின் சகோதரனான குட்டன் மாமா 'அவன் மேல் கை படக்கூடாது. அவனுக்கும் உரிமை உண்டு' எனச் சொல்ல, பெரிய மாமா அவனையும் திட்டிவிட்டு கோபத்துடன் வெளியே போகிறார். பெரிய அளவில் அவனுக்கு அங்கே வரவேற்பில்லை என்றாலும், அவன் ஒரு ஓரமாக அங்கே தங்கிக்கொள்ள முடியும். இருப்பதை உண்டு அப்படியே பள்ளிக்கும் சென்று வருகிறான். 

அப்புண்ணி வடக்கு வீட்டுக்குப் போனதும், பாருக்குட்டி தனியாக வசித்து வருகிறாள். ஒருநாள் கடும் மழைவெள்ளம். பக்கத்து வீட்டில் உள்ள எல்லோரும் வெளியேறுகிறார்கள். பாருக்குட்டியைக் கூப்பிட அவள் போக மறுத்துவிடுகிறாள். மழை வெள்ளம் ஏறி வருகிறது. வீட்டு வாசல் வரை வந்துவிட்டது. அப்பொழுது யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்க கதவைத் திறந்தால் அங்கே சங்கரன் நாயர் தோணியுடன் நின்றுகொண்டிருக்கிறார். 'வாங்க போயிரலாம்' எனக் கூப்பிட, தயக்கத்துடன் தோணியில் ஏறி மயங்கி விழுகிறாள் பாருக்குட்டி. கொஞ்ச நேரம் கழித்து விழித்து 'நாம எங்க போறோம்' என நாயரிடம் கேட்க 'தண்ணி ஏறாத மேட்டுக்கு' எனச் சொல்கிறார். 

வடக்கு வீட்டில் இப்பொழுது நிலைமை சரியில்லை. யாரிடமும் காசு இல்லை. அப்புண்ணிக்கு பள்ளியில் உதவித் தொகை கிடைக்கிறது. அதில் பள்ளியின் கல்வித் தொகை போக மீதியை பாட்டியிடம் கொடுத்து வைக்கிறான். பாட்டியோ தன் மகனான குட்டனிடம் கொடுத்து விடுகிறாள். வடக்கு வீட்டில் விளையும் எல்லாச் செல்வமும் பெரிய மாமாவின் இல்லமான பூந்தோட்டத்துக்கு போவதாக சண்டை வருகிறது. சொத்தைப் பிரிக்க வேண்டும் என குட்டன் முடிவுக்கு வருகிறார். பெரிய மாமா அதெல்லாம் முடியாது என முதலில் தெரிவித்தாலும் பின்னர் சரி என்கிறார். வக்கீல்கள் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். 

அப்புண்ணியின் படிப்பும் முடிகிறது. பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண். மேலே படிக்க வசதியில்லை என தன் ஆசிரியரிடம் தெரிவித்து விட்டு, டீ எஸ்டேட்டுக்கு வேலைக்குப் போகிறான். அந்த வேலையை அவனுக்கு வாங்கித் தருவது செய்தாலிகுட்டி. அவன் அப்பாவை கொன்றதாக சொல்லும் அதே செய்தாலி தான் அவனுக்கு உதவுகிறார். பாவ மன்னிப்பு போல அவனுக்கு உதவி செய்கிறார். அந்த வேலையில் அவனுக்கு கை நிறைய சம்பளம் கிடைக்கிறது. ஐந்தாறு வருடங்கள் ஓடி விட்டன. அவன் ஊருக்கே திரும்பிப் போகவில்லை. அதைப் பற்றி நினைப்பதுமில்லை. 

ஒருநாள் அவன் தன் சொந்த ஊருக்குப் போக முடிவு செய்கிறான். அப்பாவியான மீனாட்சி பெரியம்மா வீட்டில் தங்குகிறான். அவனிடம் பணம் இருப்பதை அறிந்துகொண்டு, உறவு கொண்டாட வருபவர்களை அவன் கண்டுகொள்வதில்லை. பாகம் பிரித்த பின்னர் நாலுகெட்டு வீடு இப்பொழுது பெரிய மாமாவுக்கு சொந்தம். அவருக்கு அந்த வீட்டின் மேல் கொஞ்சம் கடனிருக்கிறது. அப்புண்ணியிடம் அவர் பணம் கேட்க, அப்புண்ணியோ கடன் எல்லாம் தரமுடியாது வேண்டுமானால் இந்த வீட்டை நானே வாங்கிக்கொள்கிறேன் என்கிறான். முதலில் தயங்கும் அவர், பின்னர் சரி எனச் சொல்கிறார். இப்பொழுது நாலுகெட்டு வீட்டுக்கு சொந்தக்காரன் அப்புண்ணி. பாருக்குட்டியின் மகன் அப்புண்ணியின் வீடு. அப்புண்ணி, அம்மா பாருக்குட்டியையும், சங்கரன் நாயரையும் அந்த வீட்டுக்கு கூட்டி வருகிறான். எத்தனையோ வருடங்கள் அந்த வீட்டில் பாருக்குட்டியின் காலடி படாமல் இருந்த அந்த பரம்பரை வீடு இப்பொழுது அவளுக்கு சொந்தம். 

இந்நாவலில் கதை மாந்தர்கள் ஒவ்வொருவரும் முக்கியமானவர்கள். மாளு, பெரிய மாமா, பெரிய மாமாவின் பெண் அம்மிணி, முத்தாச்சி பாட்டி, செய்தாலி என பலர். அப்புண்ணிக்கு உதவும் பலர், அவனிடம் என்ன கிடைக்கும் என எதிர்பார்க்கும் சிலர் என நாவல் முழுதும் மனித மனங்களின் அழுக்குகளையும், தூய எண்ணங்களையும் பார்க்கலாம். அதிலும் ஒரு பெரியம்மா, தனக்கென சொத்திருந்தாலும் அங்கே போகாமல், நாலுகெட்டு வீட்டில் என்ன கிடைக்கும் என அங்கேயே தங்கியிருந்து, அவ்வப்பொழுது 'நானும் என் பிள்ளைகளும் என்ன செய்வோம்' என புலம்புகிறாள். 

மூன்று தலைமுறைகளை சுற்றி நாவல் சுழல்கிறது. அப்புண்ணிக்கு படிப்பு ஒன்றே வாழ்க்கையின் பிடிப்பாக இருக்கிறது. அவனை மீட்பதும், பின்பு அவனுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் வர காரணமாக இருப்பதும் படிப்புதான். அந்த வீட்டிலேயே வளர்ந்து படிப்பு வராமல் அதே ஊரில் தங்கி இருக்கும் அவனின் பெரியம்மா பிள்ளைகள் போல அல்ல அப்புண்ணி. பழம் பெருமைகளை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யமுடியாது என்று கடைசியில் தான் வாங்கிய அந்த நாலுகெட்டு வீட்டை இடித்து புதிதாக கட்டலாம் என்கிறான் அப்புண்ணி. ஆம், பழம் பெருமைகள் ஒரு வரலாறாக அப்படியே இருக்கட்டும். 

தமிழில் நாவல் மொழிபெயர்ப்பு: குளச்சல் மு.யூசுப்