கொற்றவை - கொடுங்கோளூர் கண்ணகி
கணவனின் படுகொலைக்கு மதுரையை அழிக்கும் கண்ணகி பற்றிய கதை சிலப்பதிகாரம். நீதி மறுக்கப்பட்ட கோவலனுக்காக ஒரு சிலம்பை கையிலேந்தி நீதி கேட்கிறாள் கண்ணகி. 'வண்ணச் சீரடி மண்மகள் அறியா' குணத்தவளான கண்ணகி எப்படி அவ்வாறு கோபம் கொண்டாள் என்று விளக்குகிறது கொற்றவை காவியம். திருமணத்துக்கு முன்னர் எங்கேயும் வெளியே செல்லாதவளான கண்ணகி, கோவலனை நம்பி மதுரை நோக்கிச் செல்கிறாள். தமிழ் கூறும் ஐவகை நிலங்களூடாக அவர்களின் பயணம் நடக்கிறது. கூடவே துறவியான கவுந்தியடிகளும் அவர் களுடன் துணைக்குச் செல்கிறார். கண்ணகியுடன் கூடவே செல்லும் நீலி என்னும் அணங்கு அவளுக்கு போகும் பாதைகளை விளக்குகிறது. அவள் கனவுகளுக்குள் புகுந்து வேறு உலகை காட்டுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அவளை தாய் தெய்வமாக, கொற்றவையாக மாற்றுகிறது. சிறுமை கண்டு பொங்குபவளாக மாறுகிறாள் கண்ணகி. மதுரை நகரை அடையும் முன்னரே, அங்கே நடக்கும் ஆட்சி பற்றி தெளிவாக தெரிகிறது. மன்னன் அமைச்சர் சொல் கேட்பதில்லை. வாளேந்திய காவல் படை மக்களைத் துன்புறுத்துகிறது. எந்த நியாயமும் இல்லாமல், குடிமூத்தோர் சொல் கேட்காமல் வாளே...