விஷ்ணுபுரம் 2012 விருது விழாவில்..
விஷ்ணுபுரம் விருது 2010 ல் எழுத்தாளர் ஆ.மாதவன் அவர்களுக்கும், 2011 ல் எழுத்தாளர் பூமணி அவர்களுக்கும் வழங்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டுக்கான விருது கவிஞர் தேவதேவன் அவர்களுக்கு, கடந்த சனிக்கிழமை(22/12/2012) அன்று கோவையில் வழங்கப்பட்டது. விழாவில் இசை ஞானி இளையராஜா கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார். அவரின் திரை இசையில் தோன்றிய பாடலான, 'மாசறு பொன்னே வருக..' பாடலுடன் விழா துவங்கியது. எங்கு இந்தப் பாட்டைக் கேட்டாலும், கொஞ்ச நாட்களுக்கு இந்தப் பாட்டை வாய் பாடிக் கொண்டே இருக்கும். அழகான இந்தப் பாட்டை, அழகாகப் பாடிய இரண்டு சிறுமிகளுக்கும் எனது வாழ்த்துக்கள். திரு. அரங்கசாமி அவர்கள் வரவேற்புரை வழங்க, எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் விழாவிற்குத் தலைமை தாங்கினார். இசை ஞானியை தான் முதன் முதலாக சந்தித்ததைப் பற்றியும், அதற்குப் பின்னர் அவரைப் பற்றியும் குறிப்பிட்டார் நாஞ்சில் நாடன். அவரின் உரையில், தேவதேவன் அவர்களின் இரண்டு கவிதைகளைப் பற்றிக் குறிப்பிட்டார். அதில் ஒன்று, கீழ்வரும் கவிதை; ஒரு கர்ப்பிணிப் பெண்ணை அவளின் தாயிடம் ஒப்படைப்பது போல உன்னை...