Saturday, May 22, 2010

எப்படி சொல்வது...



எல்லாவற்றையும்
சொல்லி விட முடிகின்றது..

சொந்தங்கள்
ஆசையாக கட்டிய வீடு
பிறந்த மண்
வெளியில் வைத்திருந்த ரோஜா செடி
கருப்பு பூனை குட்டி
சேகரித்த புத்தகங்கள்
குமிழ் போட்ட கதவு

என
எல்லாமே வந்து போகும்
நடுநிசியில்
அயல் நாட்டுக்கு வந்து
அகதியாய்
தவிப்பதை எப்படி சொல்வது ?
"ஏப்பா.. இங்கே வந்தோம்"
என கேட்கும் மகளிடம்.......

(புகைப்படம் என் கிராமத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னால் எடுத்தது)

Saturday, May 8, 2010

அய்யோ.. ஆப்பிள்... !!

ஆப்பிள் என்றவுடன் நமது நினைவுக்கு வருவது நிறைய சத்துக்கள் நிறைந்த பழம்.

எல்லா பழ கடைகளிலும் அடுக்கி அடுக்கி வைத்திருக்கிறார்கள். பார்த்தாலே மின்னுகிறது. விலையை கேட்டால் நூறு ரூபாய்க்கு மேலே சொல்லுகிறார்கள். சரி, அப்போ நமக்கு எங்கே தெரியுது, 'மின்னுவது எல்லாம் பொன்னல்ல' என்று. வாங்கி கொண்டு வந்து கழுவி அப்படியே சாப்பிடுகிறோம், நல்ல பெரிய கடையில் வாங்கியது வேறு !. நானும் இத்தனை நாளாக இப்படித்தான் அப்படியே தோலோடு சாப்பிட்டு கொண்டிருந்தேன். தோலில்தான் சத்து அதிகம் அல்லவா !!

உமர் பாருக் என்பவர் எழுதிய "உடலின் மொழி" என்கிற புத்தகத்தில், ஆப்பிள் கெடாமல் இருக்க சில ராசயனங்களில் முக்கி எடுத்தும், மின்னுவதற்கு மெழுகும் பூசுகிறார்கள் என்று சொல்லி இருந்தார்.

வீட்டில் இருந்த ஒரு ஆப்பிள் மின்னுகிறதே என நினைத்து கொண்டு, கத்தி எடுத்து சுரண்டினேன், வந்தது தோல் அல்ல.. மெழுகு !! அது மெழுகா அல்லது வேறு எதாவது பொருளா எனத் தெரியவில்லை.. ஆனால் அழுக்கு போல வந்து கொண்டே இருந்தது.. வெள்ளையாக... அப்பொழுது போட்டோவும் எடுத்தேன்... நீங்களும் பாருங்கள்..



































































உடல் நலத்துக்காக சாப்பிடும் பழங்களிலும் இவ்வளவு கெடுதல்கள். இதை சாப்பிட்டு உடலுக்கு கேடு வந்து மருந்து வாங்கி தின்றால், அதிலும் கலப்படம். இத்தனை பிரச்சினைகளையும் தாங்கி கொண்டு நமக்காக உழைக்கும் உடலுக்கு ஒரு நன்றி சொல்லுங்கள். கூடவே எதையும் பார்த்து சாப்பிடுங்கள், அது பழமாக இருந்தாலும் கூட...