Sunday, December 21, 2008

தீட்டு

நான் இல்லாத பொழுதில்
வீட்டுக்கு வந்த நண்பன்
புத்தகம் கேட்க
"உள்ள வந்து எடுத்துட்டு போ"
என சொல்ல
அவன் புத்தகத்தை தேடும் சமயம்
"ஏம்பா.. நீ நம்ம சாதி தானே"
"இல்லைங்க"
"அப்புறம்... ? "
"நான் வந்து.. நான் வந்து"
"மூஞ்சிய பாத்தப்பவே நெனச்சேன்... வெளிய போ"
அப்புறமாய்
வீட்டுக்குள் தெளிக்கப்பட்ட
மாட்டு சாணியின்
வாசம் இன்னும் போகவில்லை !

அழைப்பு வராத இரு எண்கள்


"ஹலோ பிரகாஷ்

மச்சி , எப்படிடா இருக்க ?”

நான் நல்லா இருக்கேன் , அப்புறம் நான் நாளைக்கு சென்னை கெளம்பனும் .. மண்டே நியூ கம்பெனில ஜாஇன் பண்ணனும். உன்கிட்ட சொல்லனும்னுதான் கூப்பிட்டேன் டா

ஓகே டா மச்சான் , ஆல் பெஸ்ட் , போன் பண்ணு .. ஊருக்கு வந்தா கூப்பிடு என்ன

சரிடா ..” என்று போனை வைத்தேன். இந்த உரையாடல்தான் அவனிடம் நான் பேசிய கடைசி பேச்சாக இருக்குமென்று, இன்னும் என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

ஒரு வருடத்துக்கும் முன்னால், பிரகாஷ், நான் மற்றும் சில நண்பர்கள் ஒரே கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தோம். எனக்கப்புறம் வந்து சேர்ந்தவன் என்பதால், முதலில் வாங்க, போங்க என்று கூப்பிட்டு பின்னர் வா, போ என சுருங்கி , கடைசியில் டாய் மச்சி வரை வந்து விட்டது எங்களின் நட்பு.

இதில் கூத்து என்னவென்றால், என் நண்பர்களை வாங்க, போங்க எனக் கூப்பிடுவான். அவனிடம் கேட்டதற்கு, "டாய் மச்சான் நீ நம்ம ஆளு.. அவங்கள அப்படி கூப்பிட முடியல.. நீ அப்படி இல்லடா.." என்றான்.

எனக்கு பக்கத்து சீட் என்பதால், மற்றவர்களை விட, என்னிடம் அதிகம் பேசுவான். பிரகாஷின் அம்மா ஓர் இதய நோயாளி என்பதால், சில நாட்கள் இவனே காலையில் அம்மாவுக்கும் சேர்ந்து சமைத்து விட்டு, மதியம் எங்களுடன் கடையில் சாப்பிடுவான். ஒரு சில நாட்கள், டிபனில் சாப்பாடு எடுத்து வருவான். நாங்கள் தங்கியிருந்ததோ மான்சனில். மூன்று வேளையும், ஹோட்டல், கையேந்தி பவன் கடைகள்தான். அவன் வீட்டில் இருந்து டிபன் கொண்டு வரும் போதெல்லாம், “டாய் மச்சி, சாப்பிட்டு போடாஎன்பான். கொள்ளு பருப்பு, தண்டு பொரியல் என அவன் கொண்டு வந்ததில், சில கவளங்கள் எங்களால் உண்ணப்படும். “போதும்டா. .எனக்கு கொஞ்சம் மிச்சம் வைங்கஎனக் கத்துவான். சிரித்துகொண்டே நகர்ந்த நாட்கள் அவைகள்.

ஒரு நாள், அவன் செல் போனுக்கு கூப்பிட, அது எடுக்கப்படவேயில்லை. அடுத்த நாள் கேட்டதுக்கு, “சாரி டா மச்சி, என்கிட்டே இன்னொரு செல் இருக்கு.. அந்த போன் எடுக்கலன்னா, இந்த நம்பருக்கு ட்ரை பண்ணுஎன இன்னொரு நம்பரை கொடுத்தான். நான் அந்த நம்பரை, பிரகாஷ்II என்று செல்போனில் சேமித்து கொண்டேன். டீகடைக்குச் சென்று ஒரு பஜ்ஜியை நாலு பேர் சாப்பிட்டு, அரட்டையும் சிரிப்புமாக நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.

அடுத்த சில மாதங்களில், நான் இன்னொரு கம்பெனிக்கு போய்விட்டேன். இருந்தாலும், அவ்வபொழுது மெசேஜ் அனுப்புவான், இல்லை என்றால் போன் பண்ணுவான். மேன்சனுக்கும், பழைய கம்பெனிக்கும் பக்கம் என்பதால், சில தடவை அவன் மேன்சனுக்கு வந்தான்.

அடுத்த சில மாதங்களில், அவனும் வேறு கம்பெனிக்குப் போய்விட்டான். அவனை கடைசியாக நேரில் பார்த்தது என் அம்மா இறந்த அன்றுதான். மருத்துவமனையில், அம்மாவை நினைத்து அழுது கொண்டிருந்தேன். அப்போது வந்த பிரகாஷ், “ சாரி டா .. அழாதடா..” என என்னை தேற்றினான். நாங்கள் மருத்துவமனையை விட்டு கிளம்பும் வரை அங்கயே இருந்தான். அவனை பார்த்து தலையாட்ட, அவனும் தலையாட்ட, அம்புலன்சில் ஏறியவுடன் கதவுகள் அடைக்கப்பட்டன.

அதற்கடுத்து வந்த நாட்களில், நானும் அடுத்த கம்பெனிக்கு மாற முயற்சி செய்து கொண்டிருந்தேன். சென்னையில் ஒரு கம்பெனியில் வேலை கிடைத்து, அடுத்த மாதம் நான் அங்கு சேர வேண்டும். அது ஒரு டிசம்பர் மாதம் என்பதால், நான் ஜனவரியில் சென்னை போக வேண்டும்.

டிசம்பர் மாதம் முடிந்து, ஜனவரி ஆரம்பித்த அந்த இரவு 12 மணிக்கு அவனுக்கு கூப்பிட்டு வாழ்த்து சொன்னேன். “ஓகே டா மச்சான்.. பசங்க சொன்னாங்க.. நீ சென்னை போறேனுட்டு.. டாய்.. எங்களை எல்லாம் மறந்திடாத.. “ என்றான்.

ஓகே டா. நான் சென்னை கெளம்பறதுக்கு முன்னாடி கால் பண்ணறேன்.. என்னஎன்றேன் நான்.

நான் சென்னைக்கு போவதற்கு முன்பு அவனுக்கு போன் பண்ணி பேசியதுதான் அவனிடம் கடைசியாக பேசியது. அடுத்த இரு வாரத்திலேயே, பொங்கல் லீவில் ஊருக்கு வந்தபொழுது மெசேஜ் அனுப்பி இருந்தான். நான் திருப்பி மெசேஜ் பண்ண மறந்துவிட்டேன்.

திரும்ப சென்னை வந்து, நானகைந்து நாட்கள் ஓடியிருக்கும். அந்த நாளும் வழக்கம் போல், எலெக்ட்ரிக் ரயிலை பிடித்து, கூட்டத்தில் கசங்கி, திரும்பி ஒரு பஸ் மாறி கம்பெனிக்கு வந்து சேர்ந்தேன். அடுத்த அரை மணி நேரத்தில், நல்லகுமாரிடம் இருந்து போன். அவனும் சென்னையில்தான் இருந்தான். என்ன இவன் அதிசயமாக கூப்பிட்டு இருக்கானே என ஆச்சரியத்துடன்,

ஹலோ.. சொல்லுடாஎன்றேன்.

எங்கடா.. ஆபீஸ்லய இருக்க..”. காலையில் இது என்ன கேள்வி என்று என நினைத்துக்கொண்டு,

ஆமாண்டாஎன்றேன்... அவன் மெதுவாக ஆரம்பித்தான்.

டாய்.. பிரகாஷ் இருக்கான்ல, இன்னைக்கு காலையில.. அவனுக்கு ஆக்சிடென்ட் டா..” என்றான்.

எனக்கு பக்கென்றது. இதயம் சற்று படபடத்தது,

அவனுக்கு ஒன்னும் பிரப்ளேம் இல்லைல்ல.. என்னாச்சு

இல்லடா.. அவன் ஹாஸ்பிடலுக்கு கொண்டு போற வழியிலே இறந்துட்டாண்டாஇதயத்தில் ரத்தம் வேகமாகவே பாய்ந்தது.

எப்படிடா.. எப்படி நடந்துச்சு

காலையில ஆபிஸ் போகும்போது.. வீட்ட விட்டு கொஞ்ச தூரத்துல ஒரு டர்னிங்ல எதிர்ல வந்த வேன் மோதியிருக்குது. இத்தனைக்கும் அவன் ஹெல்மெட் போட்டுதான் போயிருக்கான். கழுத்துல நல்ல அடி, சின்ன சின்ன செரைப்பு தவிர வேறு அடி இல்லையாம்

ம்ம்.. ஏன்டா இப்படிஎன்றேன் உடைந்த குரலில்.

நம்ம பசங்க இப்பதான் ஹாஸ்பிடலுக்கு போய்க்கிட்டு இருக்காங்க.. இந்நேரம் அவங்க அங்க போயிருப்பாங்கன்னு நெனைக்கிறேன்.. எதுக்கும் அவங்களுக்கு கூப்பிட்டு பாருஎன்றான்.

சரிடாஎன்று போனை கட் பண்ணினேன். ஒரு சில நிமிடங்கள், தூரத்தில் வெறித்து பார்த்து கொண்டிருந்தேன். ஏதோதோ நினைவுகள் எழுந்து மனதிற்குள் அலைமோதியது. அவன் முகமே, எங்கு பார்த்தாலும் முன்னால் வந்து நின்றது.

ஹாஸ்பிடலில் இருந்த நண்பர்களுக்கு கூப்பிட. “இப்பதாண்டா வந்திருக்கோம்.. போஸ்ட்மார்டம் பண்ணிட்டு இருக்காங்க.. வெயிட் பண்ணிட்டு இருக்கோம்என்று வந்தது பதில்.

அடுத்த அரைமணி நேரத்தில், “பாடிய வீட்டுக்கு எடுத்துட்டு போயடிருக்காங்க.. நாங்களும் அங்கதான் போய்ட்டிருக்கோம்என்றான்.

சரிடா, அப்புறம் கூபிடுரேன்" என்றேன்.

அன்று மாலையே அடக்கம் முடிந்து விட்டிருக்கிறது. காலையில் கிளம்பிய அவன், அதற்கப்புறம் திரும்பவேயில்லை. “டாய் மச்சான்.. வாழ்க்கைய நல்லா என்ஜாய் பண்ணனும்டாஎன்று அடிக்கடி சொல்லி கொண்டிருக்கும் அவனின் ஞாபகங்கள் மனதிற்குள் வந்து போனது.

ஒன்றிரண்டு மாதங்கள் ஓடி போயிருக்கும். ஒருநாள், ஒரு போன் நம்பரை சேமிக்க, மெமரி இல்லை என்றது என் செல்போன். சரி, தொடர்பில் இல்லாத நம்பர்களை அழித்து விடலாம் என ஒவ்வொரு நம்பராக பார்த்துகொண்டே வந்தேன். சிலவற்றை அழித்தும் விட்டேன். பி வரிசையில் வரும்பொழுது, பிரகாஷ், பிரகாஷ்II ஆகிய இரு நம்பர்களை பார்த்தபோது, என் மனம் கனத்து போனது. அந்த நம்பெர்களை என்னால் அழிக்க முடியவில்லை. இன்னும் அந்த இரண்டு போன் நம்பெர்கள் என் செல்போனில் இருக்கின்றன. எப்பொழுதும் எனக்கு போன் வராத இரு நம்பெர்களை நான் அழிக்க இயலாமல் இருக்கின்றேன். வாழ்க்கை அவனை அழித்து விட்டது. ஆனால் அந்த இரண்டு நம்பர்களும் என் செல் போனில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.



Saturday, December 20, 2008

முந்தின இரவு

இரண்டு மாத கருவுடன்
தூக்கில் தொங்கியவள்
சாணி பவுடரைக் குடித்த
பத்தாம் வகுப்பு படித்தவள்
பொண்டாட்டியும் குழந்தையுமிருக்க
பால் டயரை குடித்தவன்
இவர்கள் சாவதற்கு
முந்தின இரவு
அழுதிருப்பர்களா ?

சோறு

உயர உயரப் பற
என்றார்கள்
நானும் பறந்தேன்
கடைசியில்
சோற்றை மறந்து
பிரெட்டும், பீட்சாவும்
இரையாய்
என் தொண்டைக்குள்
திணிக்கப்பட்டன !

பசி

பசியோடு போய்
படுக்கையில் விழுந்தேன்
பசி தீர்ந்தது
நாளைக்கும் பசிக்கும்
நிச்சயமாக !