Posts

Showing posts from June, 2012

பல்லி வீடு

சுற்றிக் கொண்டே இருக்கின்றன பல்லிகள் வீட்டுக்குள் சிலர் பயப்பட சிலரோ கண்டும் காணாமலும் இருக்கிறார்கள் பேசும் பொழுதோ குளிக்கும் பொழுதோ உற்றுப் பார்த்துக் கொண்டே இருக்கின்றன எங்காவது ஓரிடத்தில் இருந்து.. ஒரு போதும் நம் ரகசியங்களை அது சொல்லிவிடப் போவதில்லை.. இரையை முழுதாக விழுங்குவது போல் ரகசியங்களை விழுங்கியிருக்க கூடும் அல்லது தகுந்த நேரம் பார்த்து காத்திருக்கவும் கூடும் !

விசாரிப்பு

இன்றைக்குத்தான் அந்த அலுவலர் வந்தார் கேள்விகள் கேட்டார் அடிப்படைக் கேள்விகள் முடிந்து 'பிரிட்ஜ் இருக்குங்களா?' - இருக்கிறது என்றேன் 'வாஷிங் மெசின்' - இருக்கிறது என்றேன்  'லேண்ட் லைன்' - அதுவும் இருக்கிறது என்றேன் பாரதி பாப்பாவுக்கு தானே சொன்னார்.. 'சாதிகள் இல்லையடி' என்று மற்றவர்கள் கேட்கலாம், தப்பில்லை... 'என்ன சாதி' - அதையும் சொன்னேன் 'சொந்த வீடா' - அதற்கும் பதில் சொன்னேன் 'அவ்வளவுதான்' என விடைபெற்றார் அவர் ஆமாம், இவ்வளவு கேள்விகள் அரசாங்கம் கேட்கிறது... விலைவாசி உயர்வு, விவசாயி தற்கொலை ஊழல், அரசியல்வாதிகளின் சொத்துக்கள் கல்வி, அடிப்படைத் தேவைகள் இன்னும் பலவும் என எங்களிடம் ஆயிரமாயிரம் கேள்விகள்... பதில் தருவீர்களா? 

காட்டை வளர்த்தவர்

Image
அஸ்ஸாம் மாநிலத்தில், ஆற்றின் ஓரத்தில் ஒரு காட்டையே உருவாக்கி உள்ளார் ஜாதவ் பயங்(jadav payeng) என்பவர். இவரின் சிறுவயதில், ஆற்றின் மணல் கலந்த திட்டுகளில், மரம் வளர்க்கும் திட்டம் உருவாக்கப்பட்டது. அவரும் அதில் ஒருவராக இருந்திருக்கிறார். நாளடைவில் அந்தத் திட்டத்தில் கலந்து கொண்ட எல்லோரும் அங்கிருந்து அகன்று விட, இவர் மட்டும் தன் குடும்பத்துடன் அந்தக் காட்டுக்குள்ளேயே தங்கி, மரங்களை வளர்த்துள்ளார். முதலில் மூங்கில் மரம் மட்டும் வளர்ந்த அந்த மண்ணில், எறும்புகளை கொண்டு போய் அங்கே விட்டு, மண்ணை வளமாக்கி அனைத்து மரங்களையும் நட்டு இன்று அதை ஒரு பெரிய வனமாக மாற்றி இருக்கிறார் ஜாதவ் பயங். காட்டின் பரப்பு முன்னூறு ஹெக்டேர். இவர் எடுத்த இந்த முயற்சியால் இன்று அந்தக் காட்டில் பல பறவைகளும், விலங்குகளும் வாழ்ந்து வருகின்றன. இதற்கு முன்னர் மரங்களின் தந்தை - திரு.அய்யாசாமி என்கிற தலைப்பில் அய்யாசாமி அய்யாவைப் பற்றி எழுதி இருந்தேன். அவரும் இயன்ற அளவு மரங்களை வளர்த்தவர். மரங்களை வெட்டித் தள்ளி, பணம் சம்பாதிக்கும் மனிதர்களுக்கு மத்தியில் இவர்களைப் போன்றவர்களே நமக்கு முன்னோடிகளாக இரு...

எழுத்தின் வல்லமையும் ஒரு குறும்படமும்

Image
அ.முத்துலிங்கம் அவர்களின் கதைகள், கதைகள் என்று சொல்வதை விட, நம்மைச் சுற்றியிருக்கும் மக்களின் வாழ்க்கை குறிப்புகள் போன்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அவரின் தளத்தில் வெளியாகியிருக்கும், உடனே திரும்பவேண்டும் என்ற கதையில், நம்மூரில் பேருந்தில் இருக்கை பிடிக்க சண்டை போடுவதைப் போல, விமானத்தில் இருக்கை பிடிக்க அவர் பட்ட துன்பங்களைச் சொல்லுகிறார். கதை படிக்கும்போது சிரிப்பு வந்தாலும், சொல்ல முடியாத ஒரு வேதனை இல்லை மனத் துயரம் என்னை ஆட்கொண்டது. அந்த இடத்தில் அவருக்கு உதவும் முன்பின் தெரியாத மனிதர்களால் தான் இந்த உலகம் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது. ******* முன்னரே, சித்ரா என்ற குறும்படத்தைப் பார்த்து மனது ஒரு மாதிரியாக இருந்தது. இப்பொழுது, அந்தப் படத்துக்கு 'தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்' விருதை அறிவித்திருப்பதை தனது தளத்தில்   பகிர்ந்திருந்தார் அ.முத்துலிங்கம் . இந்தக் குறும்படத்தை இதற்கு முன்னர் நீங்கள் பார்க்கவில்லை என்றால் கண்டிப்பாக பாருங்கள். குறுகிய நேரத்தில், ஒரு தகப்பனின் வலியையும், மனைவியின் கண்ணீரையும் இந்தப் படத்தில் சொல்லியிருக்கு...

சினிமா : செவென் சாமுராய் (Seven Samurai)

Image
ஜப்பானிய இயக்குனர் அகிரா குரசேவாவின் படம் செவென் சாமுராய். நானூறு ஆண்டுகளுக்கு முந்தைய கதை. ஒரு மலையோர விவசாய கிராமத்தில், மக்கள் விவசாயம் செய்து வருகிறார்கள்.  கிட்டத்தட்ட ஐம்பது குடும்பங்கள் மட்டுமே இருக்கும் அந்தக் கிராமத்தில் பண்டிட்கள் என்னும் திருடர்கள் கூட்டமாக வந்து பொருட்களைத் திருடியும், பெண்களை இழுத்துக் கொண்டும் சென்றுவிடுகிறார்கள். மிகுந்த பலசாலிகளாகவும், துப்பாக்கி போன்ற புதிய ஆயுதங்கள் வைத்திருப்பதாலும் ஒவ்வொரு முறையும் கிராமத்தினர் அவர்களிடம் நிறைய இழக்கிறார்கள். உழைப்பு ஒன்றே தங்களுக்கு தெரிந்தது என்றிருக்கும் அந்த கிராம மக்கள், திருடர்களிடமிருந்து எப்படித் தப்பித்தார்கள் என்பதே இப்படத்தின் கதை. ஒவ்வொரு முறையும் திருடர்களிடம் படும் துன்பம் தாங்காமல், அக்கிராம மக்கள் ஊரிலுள்ள முதியவரிடம் ஆலோசனை கேட்கிறார்கள். அம்முதியவர், 'ஒரு காலத்தில் எல்லாக் கிராமங்களிலும் இந்தப் பிரச்சினை இருந்தது. ஒவ்வொரு கிராமத்தினரும் பண்டிட்களிடம் நிறைய இழந்தார்கள். ஆனால் ஒரேயொரு கிராமம் மட்டும் அவர்களிடமிருந்து தபபித்தது ஏனெனில், அந்தக் கிராமத்தினர் சாமுராய்களை க...