2013 ஆம் ஆண்டின் சாகித்ய அகாதெமி விருது பெற்றது கொற்கை நாவல். கடலையும், கடல் சார்ந்து இருப்போரின் வாழ்க்கையையும் பின்னிக்கொண்டு நெய்தது கொற்கை நாவல். 1900 ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கும் நாவல் 2010 ஆம் ஆண்டில் முடிகிறது. மற்ற நாவல்கள் போல, கொற்கையில் குறிப்பிட்டுச் சொல்ல முக்கியமான கதாபாத்திரங்கள் இல்லை. ஆனால் நிறைய மாந்தர்கள் உண்டு.
"காலம். இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். பிரிட்டிஷ் இந்திய ஆட்சி, கிறிஸ்தவ சமயத்தின் பிரவேசம், சுதந்திர போராட்டம், சுதந்திர இந்தியாவில் நிகழ்ந்த மாற்றங்கள், நவீனத்துவத்தின் வருகை ஆகியவை பரதவர் சமுதாயத்தில் ஏற்படுத்திய மாற்றங்களைத் துல்லியமாகவும் கலை அமைதியுடனும் சொல்கிறார் ஜோ டி குருஸ்" என்று புத்தகத்தின் முன்னுரையில் குறிப்பிடுகிறார் அரவிந்தன்.
மேலும் " கிறிஸ்தவ சமயத்தின் வரவு, உள்ளூர்ச் சாதிகள் கிறிஸ்தவத்தை எதிர்கொண்ட விதம், சுதந்திரப் போராட்டத்தின் தாக்கம், நவீன வாழ்வும் அரசியலும் உள்ளூர்ச் சமூகங்களைப் பாதிக்கும் விதம் என்று நாவலின் எல்லையைக் குறுக்கும் நெடுக்கு மாக விஸ்தரித்துக் கொண்டு போகிறார் ஜோ டி குருஸ். பரதவர்கள், நாடார்கள் போன்ற சில பிரிவினரின் வாழ்வு, அவர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, அரசியல், மொழி ஆகியவற்றைப் பதிவு செய்யும் இந்நாவல் சமூக, மொழியியல் ஆய்வுக்கும் பயன்படக்கூடிய ஆவணமாகவும் விளங்குகிறது. குறிப்பாக பேச்சு மொழியைப் பதிவு செய்திருக்கும் துல்லியமும், பேச்சினூடே வெளிப்படும் பண்பாட்டுக் கூறுகளின் அடையாளங் களும் மிக முக்கியமானவை." எனச் சொல்கிறார் அரவிந்தன்.
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நம்மை கூட்டிச் செல்லும் இந்நாவல், முக்கியமான கதாபாத்திரம் என்று ஒருவரும் இல்லை. தண்டல் பிலிப்பும் அவரின் வாழ்க்கையும் மட்டுமே நாவலில் அங்கங்கே தொடர்ந்து வருகிறது. பல தலைமுறைகளின் வாழ்க்கை சொல்லப்படுவதால் நாவல் தாவித் தாவி செல்வது போல தோற்றம் கொள்கிறது. ஏதோ ஒரு அத்தியாயத்தை தனியாக படித்தாலும் ஒரு சிறுகதை போலவே அது தனியாகவே இருக்கும். அத்தனை வருடங்களையும், மக்களையும், நிகழ்வுகளையும் கோர்த்துக் கொடுத்த ஒரு பெரிய மாலை இது.
சில இடங்களில் வலுக்கட்டாயமாக அந்த வருடங்களில் நடந்த முக்கிய நிகழ்வை சொல்ல ஒருவர் சொல்வது போலவே அல்லது நினைப்பது போலவோ வந்து போகிறது. சில நிகழ்வுகள் நாவலின் போக்கிலேயே சொல்லப்படுகிறது. இலங்கைக்கு செல்லும் தோணிகள், இங்கே இருந்து அங்கே சென்று தொழில் நடத்தும் மக்கள், தோட்ட வேலைக்கு செல்லும் மக்கள், அங்கே நடக்கும் சண்டைகள் என நிறைய தகவல்கள்.
கடலில் பயணம் செய்யும் தோணி தான் கொற்கை நாவலின் இன்னொரு முக்கிய கதாபாத்திரம். புயல் அடிக்கும் சமயம் தண்ணீர் உள்ளே வந்து பண்டல்கள் நனைந்து போவது, பாய்களை மாற்றிக்காட்டுவது, சில விபத்துகளில் உயிரிழப்பு, தொழில் பழக சிறு வயதிலேயே தோணிக்கு வேலைக்கு வரும் சிறுவர்களை பாலியல் இச்சைக்கு பயன்படுத்தும் தண்டல்கள் என எதையும் விடாமல் சொல்லிச் செல்கிறார் ஜோ டி குருஸ். போலவே கிறிஸ்தவ மதத்தில் இப்போது இருந்தாலும், சந்தன மாரியம்மனையும், திருச்செந்தூர் முருகனையும் வழிபடும் மக்களையும் குறிப்பிட அவர் தவறுவதில்லை.
புத்தகத்தின் இறுதியில் நாவலில் சொல்லப்பட்ட மக்களின் தலை முறைகளின் வரைபடம், தோணிகள் பற்றிய வார்த்தைகள் என கொடுக்கப்பட்டுள்ளது.

