Showing posts with label ஆவணப் படம். Show all posts
Showing posts with label ஆவணப் படம். Show all posts

Tuesday, February 14, 2012

சாம்பலும் பனியும் (Ashes and Snow)


எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தனது வலையில் சாம்பலும் பனியும் (Ashes and Snow)  என்ற இந்த ஆவணப்படத்தைப் பற்றி எழுதியிருந்தார். அதன் பிறகுதான் இந்தப் படத்தைப் பார்த்தேன். யாரும் தவற விடக் கூடாத ஆவணப்படம்.

ஒரு காலத்தில் மனிதனும், விலங்குகளும் ஒன்றாக காட்டில் தான் வாழ்ந்திருப்பார்கள்.  காலங்கள் மாற அவர்களுக்கு இடையிலான தூரங்கள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. ஆனாலும் அவர்களுக்கு இடையிலான அந்த அன்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பதை நமக்கு காட்சிப்படுத்துகிறது இந்த ஆவணப் படம்.

சிறுத்தைப் புலியின் அருகில் அமர்ந்திருக்கும் தாத்தா மற்றும் சிறுவன், யானைகளோடு விளையாடும் பெண்கள், பறவைகளுடன் நடனமாடும் பெண்.. என ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

மொழிகள் இல்லாமல்,  அங்கே சக உயிர் மீதான அன்பு மட்டுமே முன் நிற்கிறது. சிறுத்தை கடிக்கும் என்ற பயமில்லாமல் அமர்ந்திருக்கும் அந்தச் சிறுவனைப் போன்றவர்களே இன்னும் இந்த இயற்கையை அழியாமல் காப்பாற்றி வருகிறார்கள். அந்தச் சிறுவனுக்கு காதில் ஏதோ சொல்லிக் கொடுக்கும் அந்தத் தாத்தாவின் வயது காலங்களை தாண்டி நிற்பது போல முகத்தில் எத்தனை சுருக்கங்கள்.


இந்தப் படத்தின் அனைத்துக் காட்சிகளும் ஒரு ஓவியம் போன்றவை. ஒவ்வொரு காட்சியும் அப்படியே ஓவியம் எழுந்து வந்தது போல இருக்கும். இதை அப்படியே உலகம் முழுவது ஓவியக் காட்சியாகவும் நடத்தியிருக்கிறார்கள். கண்டிப்பாக நமது குழந்தைகள், பெரியோர்கள் என அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

படத்தின் இயக்குனர் கிரிகோரி கோல்பெர்ட்(Gregory Colbert) பதினாறு ஆண்டுகள் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். அவரின் உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரியும். 






படங்கள்: இணையத்திலிருந்து - நன்றி.