Showing posts with label மாடித் தோட்டம். Show all posts
Showing posts with label மாடித் தோட்டம். Show all posts

Tuesday, December 26, 2023

மாடித் தோட்டம் : செர்ரி தக்காளி (Cherry Tomato)

கோவை விவசாய கண்காட்சியில் செர்ரி தக்காளி விதைகளை வாங்கி இருந்தேன். நாற்றுக்கு விதைகளை விதைத்து கொஞ்சம் பெரிதான பின்னர் பெரிய பைகளுக்கு மாற்றினேன். 


மழையே இல்லாமல் வெயில் வாட்டிய போன மாதங்களில் சில பைகளில் இருந்த செடிகள் வாடி, இதற்கு மேல் என்னால் முடியாது என்பது போல அப்படியே உயிரை விட்டு விட்டது. 


மற்ற பைகளில் இருந்த செடிகளும் அவ்வாறே இருக்க, கொஞ்சம் ஆட்டு உரம் போட்டு மண்ணை கிளறி விட்டேன். மழைக்காலம் ஆரம்பித்ததும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இப்போது காய் பிடிக்க ஆரம்பித்து விட்டது. குட்டி குட்டியாக பார்ப்பதற்கே அழகாக உள்ளது இந்த செர்ரி  தக்காளி. 



சாதாரண தக்காளிச்  செடி போல இல்லாமல் நன்கு உயரமாக வளர்கிறது. நான் வெறும் குச்சியை ஊன்றி கட்டி வைத்துள்ளேன் இப்பொழுது. பந்தல் மாதிரி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். 






Monday, April 20, 2020

மாடித் தோட்டம்

இடமும் சொந்த வீடும் உள்ளவர்கள் இயன்ற அளவு கீரை, காய்கறிகள் போன்ற செடிகளை வளர்க்க வேண்டும். மாடி இருப்பவர்கள் மாடித்தோட்டம் போட முயற்சிக்கலாம்.

எல்லா வகையான காய்கறிகளையும் நாம் மாடியில் பயிரிட முடியும். கீரைகள் குறைந்த நாட்களில் விளைந்து பயன் தருபவை. முதன் முதலாக தோட்டம் போட முயல்பவர்கள் கீரையிலிருந்து ஆரம்பிக்கலாம்.

பெரும்பாலும் நாம் கடைகளில் தான் கீரை, காய்கறிகள் வாங்குகிறோம். தோட்டம் போட்டாலும் நாம் கடைக்குப் போகத்தான் வேண்டும். ஆனால், இரண்டு கொத்து கருவேப்பிலை வாங்க ஒரு கட்டு கீரை வாங்க என அடிக்கடி போக வேண்டியதில்லை.

இரண்டு கத்தரி காய்த்தாலும் அது நாம் விளைவித்தவை. எந்த மருந்தும் அடிக்காமல் வளர்ந்தது. ஆர்கானிக் என்று அங்கே இங்கே ஓடிக் கொண்டிருக்காமல் நம் வீட்டிலேயே இயற்கை உணவுகளை பெறமுடியும். முயன்று பாருங்கள்.

















Friday, February 26, 2016

சமையலறைக் கழிவுகளில் உரம்

மண் தொட்டி ஒன்றை எடுத்துக் கொள்ளவும். 

தினமும் சமையலறையில் மீதமாகும் காய்கறிக் கழிவுகளை அதில் போட்டு வரவும். காலிபிளவர் தண்டு போல பெரிய கழிவுகளாக இருந்தால் பொடியாக நறுக்கி போடவும். 

தொட்டி முக்கால் பாகம் நிறைந்ததும், மாட்டுச் சாணத்தில் கொஞ்சம் நீர் ஊற்றி கரைத்து, தொட்டியில் அந்தக் கழிவுகளின் மேலே ஊற்றி விடவும். வளமான மண் கிடைத்தால் கொஞ்சம் தூவி விடலாம். 

சாணத்தில் இருந்து புழுக்கள் உருவாகி கழிவுகள் மக்க ஆரம்பிக்கும். 

தொட்டியில் நீர் வெளியேற கீழே துளைகள் இருப்பது அவசியம். தொட்டியை அப்படியே வைத்திருக்கவும். வாரம் ஒருமுறை கொஞ்சம் நீர் தெளித்து கிளறி விடவும். 

ஒரு மாதம் போனால் கருப்பு நிறத்தில் மக்கிப் போன உரம் கிடைக்கும்.  ரசாயனம் இல்லாத உரம் தயார். இதன் மேல் கொஞ்சம் மண்ணைப் போட்டு இனி செடிகளை வளர்க்க வேண்டியது தான். 

இங்கே படத்தில் உள்ளது புதினா. மக்கிப் போன உரத்தில் விளைந்தது. 



பழைய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால், அடியில் இரண்டு மூன்றுதுளைகள் போட்டுக் கொள்ளவும்.  

மூன்று, நான்கு தொட்டிகளை எடுத்துக் கொண்டு சுழற்சி முறையில் செய்யலாம். 

தொட்டிகளை வெயில் படாத இடத்தில் வைத்து மூடி வைத்தால் விரைவாக மக்கும்.






Wednesday, November 12, 2014

மாடித் தோட்டம் (Terrace Garden)

ஜூலை மாதம் ஆரம்பித்த மாடித் தோட்டம் அறுவடை முடியப் போகிறது. கீரைகள் குறை இல்லாமல் வளர்ந்தன. கொத்தவரை, வெண்டை போன்றவை பூச்சி தாக்குதலால் சரியாக வரவில்லை. இனி அடுத்த விதைப்பை ஆரம்பிக்க வேண்டும்.

முதல் முறை என்பதால், நிறைய காய்க்கவில்லை. போலவே ரசாயனங்கள் பயன்படுத்தவில்லை. சாணி உரம், ஆட்டுப் புழுக்கை உரம், கொஞ்சம் செம்மண் என்று கலந்துதான் வைத்தேன். அடுத்த முறை, மண்புழு உரம் பயன்படுத்திப் பார்க்க வேண்டும். 


தக்காளி 





கத்தரி 





மிளகாய் 




பீன்ஸ் 



பீட்ரூட் (ஒன்றே ஒன்று !)


கீரைகள் 





அறுவடை செய்த பின்னர்:





நண்பர் சிவா அவர்களின் http://thooddam.blogspot.in/ எனும் பதிவில் மாடித் தோட்டம் பற்றிய பதிவுகள் இருக்கின்றன. மாடித் தோட்டம் அமைக்க உங்களுக்கு ஆர்வமிருப்பின், இவரின் பதிவுகள் மிகுந்த பயனளிக்க கூடியவை. 

Wednesday, August 6, 2014

மாடித் தோட்டம் - கீரைகள் (Terrace Garden)

வீட்டுத் தோட்டத்தில் வாழை, தென்னை போன்ற பயிர்கள் இருந்தமையால், போதிய வெயிலும் இடமும் இன்றி கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை வளர்க்க முடியாமல் இருந்தோம். இருந்தாலும், அவரை, பீர்க்கை போன்ற கொடி வகைகளை மொட்டை மாடிக்கு இழுத்து பந்தல் போட்டதில், நன்றாகவே விளைந்தது. இந்த வருடம் அடுத்த முயற்சியாக, மொட்டை மாடித் தோட்டத்தை அமைத்துள்ளோம்.  

தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத் துறை மூலமாக, சென்னை மற்றும் கோவைப் பகுதிகளில் மானியத்துடன் கூடிய 'நீங்களே செய்து பாருங்கள் (Do It Yourself kit)' கொடுத்திருந்தார்கள். விலை ரூபாய் 1325. தேர்தல் காரணமாக, சில பொருட்கள் தாமதமாக வந்து சேர்ந்தன. ஆனாலும், மாடித் தோட்டம் போடத் தகுந்த காலமான ஜூலையில் எல்லாப் பொருட்களையும் கொடுத்து விட்டார்கள்.

தென்னை நார்க் கழிவுடன், தொழு உரம் சேர்த்து ஒரு வாரம் கழித்து விதைகளை நடத் தொடங்கலாம். அசொஸ்பைரில்லம், சூடோமோனோஸ் போன்ற உயிரி உரங்களையும், நார்க் கழிவுடன்  சேர்க்க வேண்டும்.

தக்காளி, கத்திரி மற்றும் மிளகாய் விதைகளை குழித்தட்டில் விதைத்து வளர்ந்து வருகின்றன. வெண்டை, முள்ளங்கி போன்ற விதைகளை அப்படியே விதைத்து விட்டேன். இப்பொழுது கீரைகள் அறுவடை ஆகிவிட்டது. காய்கறிகள் வளர இன்னும் சில மாதங்கள் ஆகலாம்.

மாடித் தோட்டம் மற்றும் கீரைப் படங்களின் தொகுப்பு.

 (விதைக்கத் தயாராக இருக்கிறது - மாடித் தோட்டம்)

முளைத்து வரும் கீரை விதைகள்..


 வெந்தயக் கீரை 


  வெந்தயக் கீரை - அறுவடைக்குப் பின்னர் 

சிறு கீரை

 பாலக் கீரை 

புளிச்ச கீரை - இந்த பையும், புளிச்ச கீரை விதையும் கோவை அக்ரி இண்டெக்சில் வாங்கியது 


முள்ளங்கி