Friday, August 30, 2013

சினிமா: தி பாய் இன் தி ஸ்ட்ரிப் பைஜாமா(The Boy in the Striped Pyjamas)

யூத மக்களுக்கு, ஹிட்லர் அரசு செய்த கொடுமைகளை வைத்து பல படங்கள் வந்துள்ளன. ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட் (Schindler's List), லைப் இஸ் பியுட்டிபுல் (Life Is Beautiful)   போன்ற படங்கள் அவற்றில் சில. இந்த இரண்டு படங்களையும் போலவே, 'தி பாய் இன் தி ஸ்ட்ரிப் பைஜாமா' படமும் யூத மக்களின் துயரங்களையும், அவர்கள் சந்தித்த இன்னல்களையும் நம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறது.

எட்டு வயதுச் சிறுவன் புருனோ. அவனை விட நான்கு வயது மூத்த அக்கா அவனுக்கு உண்டு. அவன் தந்தை ஹிட்லரின் படையில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். அவன் தந்தை, பதவி உயர்வினால் வேறு ஊருக்கு மாற்றப்படுகிறார். புருனோவுக்கு இந்த ஊரையும், அவன் நண்பர்களையும் விட்டுப் பிரிய மனமில்லை. அவனது அம்மா எல்சா, அவனை சமாதானம் செய்கிறாள்.


நீண்ட தூரம் பயணித்து, புதிய இடத்துக்கு வந்து சேர்கிறார்கள். ஒரு காடு போல இருக்கும் பாதையில் அவர்களின் புதிய வீடு அமைந்து இருக்கிறது. பழைய ஊரில், தன் நண்பர்களோடு சுற்றித் திரிந்த புருனோவுக்கு தன்னந் தனியாக அமைந்து இருக்கும் இந்த வீடு பிடிப்பதில்லை. இவனுக்கோ வெளியே சுற்ற வேண்டும் என்பது ஆசை. அவனின் அக்காவோ, தனது பொம்மைகளுடன் நேரத்தை போக்குகிறாள். அவளுடன், புருனோ விளையாட விரும்புவதில்லை.

எந்நேரமும் காவல் உண்டு. பக்கத்தில் வீடுகள் இல்லை. வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது. தன் அறையில் இருந்த, ஜன்னல் மூலம், தூரத்தில் இருக்கும் சில  வீடுகள் போன்ற கட்டிடங்களைப் பார்க்கிறான். 'அங்கே பண்ணை வீடுகளில், விவசாயிகள் இருப்பார்கள்.. அங்கே எனக்கு நண்பர்களும் கிடைப்பார்கள்' என்று வீட்டில் உள்ளோரிடம் விசாரிக்கிறான். அதற்கு  அடுத்த நாளே அந்த ஜன்னல் அடைக்கப் படுகிறது.

வீட்டில் வயதான ஒரு யூத கைதி(பாவெல்) வேலை செய்கிறார். யாரும் இல்லாத பொழுது, புருனோ கீழே விழுந்து அடி பட, அவன் காயத்துக்கு அவர் மருந்து போடுகிறார். 'பயப்பட வேண்டாம்.. நாளைக்கு சரியாப் போகும்' என்கிறார் அவர். 'அது எப்படி உங்களுக்குத் தெரியும்?.. நீங்கள் டாக்டரா?' எனக் கேட்கிறான். 'ஆம், நான் டாக்டர்தான்' என்கிறார் அவர். 'நான் நம்ப மாட்டேன்.. பிறகு ஏன், நீங்கள் உருளை கிழங்கின் தோல்களை உரித்துக் கொண்டிருக்க வேண்டும்' என்று கேட்க, ஒரு நிமிடம் நிமிர்ந்து பார்க்கும் அவர்.. பேச்சை வேறு திசைக்கு மாற்றி விடுகிறார்.


புருனோவுக்கு, இன்னும் நேரம் போவதில்லை. வீட்டுக்கே வந்து சொல்லித் தரும் வாத்தியாரும், இன வரலாறு, யூத மக்களின் மீதான வெறுப்பு என்றே சொல்லித் தருகிறார். ஒரு பெரிய புத்தகத்தைக் கொடுத்து அவனைப் படிக்கச் சொல்கிறார். ஆனால், வெளியே சுற்ற வேண்டும், நிறையப் பேருடன் பழக வேண்டும் என்றே ஆவலுடன் இருக்கிறான்.

ஒருநாள் வீட்டில் யாரும் கவனிக்காத நேரம், வீட்டின் பின்னால் பழைய பொருட்கள் போட்டு வைக்கும் அறையின் ஜன்னல் வழியாக அந்தப் பக்கம் போகிறான். சிறு ஓடைகள், செடிகள் என்று அவன் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறான். அந்த இடத்தில், ஒரு முள் வேலியிட்ட சில கட்டிடங்கள் தெரிகிறது. முன்னர் அவன் ஜன்னல் வழியாக பார்த்த இடங்கள் தான். பக்கத்தில் செல்லும் போதுதான் கவனிக்கிறான், முள் வேலிக்கு அந்தப் பக்கம் ஒரு சிறுவன் அமர்ந்து இருக்கிறான். புருனோ ஹலோ என்கிறான். அவனும் பதில் சொல்கிறான்.
'என் பெயர் புருனோ'
'நான் இந்தப் பெயரைக் கேள்விப்பட்டதில்லை..என் பெயர் சாமுவேல்'
'இதற்கு முன்னர், நானும் சாமுவேல் என்கிற பேரைக் கேள்விப்பட்டதில்லை.. '
'சாப்பிட எதாவது வைத்து இருக்கிறாயா?'  என்கிறான் சாமுவேல்.
' இல்லை.. உனக்கு மிகவும் பசிக்கிறதா?.. சரி.. நீ யாருடன் விளையாடுவாய்?' எனக் கேட்கிறான் புருனோ
'விளையாட்டா ? நாங்கள் இங்கே புதிய குடிலைக் கட்டிக் கொண்டு இருக்கிறோம்' எனச் சொல்லும் சாமுவேல், வேலை செய்து கொண்டிருக்கும் எல்லாப் பெரியவர்களும் கிளம்புவதால், இவனும் தன் மண் வண்டியைத் தள்ளிக் கொண்டு ஓடுகிறான்.



அடுத்த தடவை புருனோ போகும் பொழுது, சாக்லேட் மற்றும் சில தின்பண்டங்களையும் கொண்டு செல்கிறான்.
'ஏன், நீங்கள் எல்லோரும் ஒரே மாதிரியான ஆடையை அணிந்து இருக்கிறீர்கள்.. எங்கள் வீட்டிலும் பாவெல் இந்த மாதிரிதான் உடை அணிகிறார்'
'நாங்கள் யூத இனம்' என்கிறான் சாமுவேல். அப்படி என்றால், என்னவெனத் தெரியாமல் அவனைப் பார்க்கிறான் புருனோ.

புருனோவின் அம்மா எல்சா, ஒரு நாள் கடைக்குப் போய்விட்டு வந்து, வீட்டின் முன் காரை விட்டு இறங்குகிறாள். காரை ஓட்டி வந்த காவலரிடம், தூரத்தில் சிம்னி வழியாகப் போகும் புகையைக் குறிப்பிட்டு 'தாங்க முடியவில்லை.. இது என்ன எப்படி நாறுகிறது' என்கிறாள். அதற்கு அவன் 'அவர்களை எரிக்கும் போது அப்படிதான் நாறும்' என்கிறான். அதைக் கேட்டதும் பிரமை பிடித்தவளாக, கணவனுடன் சென்று சண்டை போடுகிறாள். அவனோ, இது அரசாங்க கட்டளை, அதை நிறைவேற்றுவது என் கடமை எனச் சொல்கிறான்.



சில நாட்கள் கழித்து, சாமுவேல் ப்ருநோவின் வீட்டுக்கு வேலைக்கு அனுப்பப் படுகிறான். நண்பனைப் பார்த்த மகிழ்ச்சியில், அவனுக்கு சாப்பிடத் தருகிறான் புருனோ. இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது அங்கே வரும் காவலன் 'யார் இதைக் கொடுத்தது.. திருடித் தின்கிறாயா?' என்று திட்ட, 'இவன் என் நண்பன், இவன்தான் கொடுத்தான்' என்கிறான் சாமுவேல். 'என்ன.. இவன் உன் நண்பனா?' என்ற காவலன், புருநோவிடம் 'இவனை உங்களுக்கு முன்னரே தெரியுமா?' எனக் கேட்கிறான். 'இல்லை.. இதற்கு முன்னர் நான் இவனைப் பார்த்ததில்லை' என்கிறான் புருனோ. 'திருடுவது தவறு.. அதற்கு உரிய தண்டனையை அடைய வேண்டும்.. நீங்கள் வாருங்கள், போகலாம்' என்றவாறு, புருனோவை அவன் அழைத்துச் செல்கிறான். தன் அறைக்குச் சென்று அழும் புருனோ, திரும்ப சாமுவேலைப் பார்க்க ஓடி வர,அங்கே அவன் இல்லை.

இரண்டு மூன்று முறை அந்த கம்பி வேலி அருகில் போய்ப் பார்க்கிறான் புருனோ. இரண்டு நாட்கள் கழித்து சாமுவேல், அங்கே கண்ணில் காயத்தோடு அமர்ந்து இருக்கிறான். அவனிடம் மன்னிப்பு கேட்கும் புருனோ, நாம் மீண்டும் நண்பர்களாக இருப்போம் என்கிறான். சாமுவேலும் சரி என்கிறான்.



இதற்கு இடையில் புருனோவின் அம்மா எல்சா, எப்பொழுதும் கணவனை எரித்து விடுவது போலப் பார்க்கிறாள். இந்தக் கொடுமைகளை நினைத்து அவள் நிம்மதியாய் இருப்பதில்லை. ஒரு நாள், ஒரு டாகுமெண்டரி படம் பார்க்க சில உயர் அதிகாரிகள் வருகிறார்கள். ஒரு பெரிய அறைக்குள் சென்று, அவர்கள் அமர்ந்தவுடன் கதவுகள் மூடப் படுகிறது. படம் திரையிடப் படுகிறது. முகாம்களில் எல்லா வசதிகளும் செய்யப் பட்டுள்ளது எனவும், எந்தக் குறையும் இல்லை போலவும் படத்தில் காட்டுகிறார்கள். குழந்தைகள் விளையாடுகிறார்கள். செடி வளர்க்கிறார்கள். விரும்பியதை உண்கிறார்கள். மொத்தத்தில் சந்தோசமாக இருக்கிறார்கள், என விளக்குகிறது படம். ஒரு சேரின் மேலே ஏறி இந்தப் படத்தை பார்த்து விடுகிறான் புருனோ. சாமுவேல் இருக்கும் இடத்திலும் இந்த மாதிரிதான் இருக்கும் என அவன் மனது நினைக்கத் தொடங்குகிறது.

புருனோவின் பாட்டி இறந்து விட, இறுதிச் சடங்குக்குச் சென்று வருகிறார்கள். புருனோ, சாமுவேலிடம் 'நீ ஏதாவது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டிருக்கிறாயா?'.. ' இல்லை, இங்கே வந்ததும் என் தாத்தாவும் பாட்டியும் இறந்து விட்டார்கள்.. பின்னர், அவர்களைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது' என்கிறான் சாமுவேல்.

 
வீட்டிலோ, எல்சா கணவனுடன் சண்டை போடுகிறாள். என்னால் இங்கே இருக்க முடியாது, நாங்கள் கிளம்புகிறோம் என்கிறாள். அடுத்த நாள் காலை, சிறுவர்கள் இருவரையு  அழைத்துப் பேசும் புருனோவின் அப்பா, 'அம்மா இங்கே இருக்க மறுக்கிறாள். எனக்கு இங்கே கொஞ்சம் வேலை இருக்கிறது, முடித்துவிட்டு வருகிறேன். நீங்கள் அத்தை வீட்டில் சென்று கொஞ்ச காலம் இருங்கள்' என்கிறார். புருநோவுக்கு, திரும்பவும் ஒரு நண்பனை இழக்க வேண்டுமே எனக் கவலை ஏற்படுகிறது.

சாமுவேலிடம், நான் ஊரை விட்டுப் போகப் போகிறேன் எனச் சொல்கிறான். அவனோ, என் அப்பாவை காணவில்லை, எங்கே தேடுவது எனத் தெரியவில்லை என்கிறான். 'சரி நான் உனக்கு உதவுகிறேன்.. உன்னைப் போல எனக்கு ஒரு பைஜாமா கொண்டு வந்து கொடு.. இருவரும் சேர்ந்து உன் அப்பாவைத் தேடுவோம்' என்கிறான் புருனோ.


 அடுத்த நாள், கொஞ்ச நேரம் விளையாடி விட்டு வருகிறேன்.. என எல்சாவிட்ம் சொல்லி விட்டு அந்த முள் வேலிக்கு போகிறான். அங்கே, ஒரு பைஜாமா மேல் இன்னொரு பைஜாமா போட்டுக் கொண்டு, அவனுக்காக காத்திருக்கிறான் சாமுவேல். அவனைப் பார்த்ததும் ஒரு பைஜாமாவைக் கழட்டி, புருனோவுக்குத் தருகிறான். அவனும் அதை அணிந்து கொண்டு, கம்பிக்கு கீழே மண்ணைத் தோண்டி அந்தப் பக்கம் போகிறான் புருனோ. உள்ளே சென்றதும், சாமுவேலின் அப்பாவைத் தேடத் தொடங்கி ஒரு அறைக்குள் செல்கிறார்கள். உடனே, அங்கே வரும் ஒரு காவலர் எல்லாரையும் இன்னொரு அறைக்கு கூட்டிச் செல்கிறார். அந்தக் கூட்டத்துக்குள் மாட்டிக் கொள்ளும் இருவரும், கும்பல் செல்லும் வழியிலே நகர்கிறார்கள். இன்னொரு அறைக்கு வந்ததும், உடையை கழட்டச் சொல்லவும், எல்லோரும் அந்த பைஜாமாவைக் கழட்டி விட்டு.. இரும்புக் கதவு போடப் பட்ட ஒரு இடத்துக்குப் போகச் சொல்கிறார்கள். அங்கே அனைவரும் சென்றதும், அந்தக் கதவு தாழிடப் படுகிறது. மேலிருந்து, விஷ வாயு செலுத்தப்படுகிறது.

புருனோவைக் காணாமல் தேடிக் கொண்டிருக்கும், அவன் அப்பா அந்த அறையையே பார்த்துக் கொண்டிருக்கிறார். முள் வேலிக்கு அந்தப் பக்கம், அவன் போட்டுவிட்டுச் சென்ற துணிகளைப் பார்த்து  அழுது கொண்டிருக்கிறார்கள் அம்மாவும், அக்காவும்.

Tuesday, August 20, 2013

குறும்படம்: ஆந்தை பாலத்தில்.. (An Occurrence at Owl Creek Bridge)

(மெல்லிய இதயம் கொண்டவர்கள் இந்தப் படத்தை பார்ப்பதைத் தவிர்க்கவும்.)

இந்தக் குறும்படம் பற்றி, இரண்டு மூன்று வருடங்கள் முன்பு எங்கேயோ படித்து, பார்த்திருக்கிறேன். குறும்படம் பற்றித் தேடிக் கொண்டிருக்கும்பொழுது, இந்தப்  படம் நினைவுக்கு வந்தது. மனதை மிகவும் பாதிக்கும் படம்.

ஒரு ஆற்றின் மீது ஆந்தைப் பாலம் அமைந்து இருக்கிறது. ஒரு குற்றவாளியைத் தூக்கில் போடுவதற்காக, ஆந்தைப் பாலத்தின் மீது அவனைக் கொண்டு செல்கிறார்கள். எல்லோரும் ஆயத்தமாக இருக்கிறார்கள். தூக்கு கயிறு இறுக்கப்படுகிறது. அப்பொழுது, தூக்கு கயிறு அறுந்து, குற்றவாளி ஆற்றில் விழுந்து விடுகிறான்.

கயிற்றில் இருந்து தப்பிய அவன், ஆற்றில் நீந்த ஆரம்பிக்கிறான். உடனே, சுற்றி இருக்கும் காவலர்கள் துப்பாக்கியால் அவனைச் சுடுகிறார்கள். கரையில் இருந்து அவனைச் சுட்டுக் கொண்டே துரத்துகிறார்கள். அவன் நீந்திக் கொண்டே இருக்கிறான்.

ஒரு சமவெளியை அடைந்து, காடு தோட்டம் என்று ஓடிக் கொண்டே இருக்கிறான்.

இறுதியில், ஒரு வீட்டில் இருந்து ஒரு பெண் வெளியே வருகிறாள். அவனின் மனைவியாகவோ அல்லது காதலியாகவோ இருக்கலாம். தூரத்தில் அவன் ஓடி வருவதைப் பார்த்து, அவளும் அவனை நோக்கி வருகிறாள். அவன், தனது இரு கைகளையும் அவளை நோக்கி அணைக்க ஓடி வருகிறான். பக்கத்தில் வந்ததும், அவளின் முகத்தை தன் இருகைகளால் ஏந்துகிறான்.

அதே சமயம், அவனை அந்தத் தூக்கு கயிறு இறுக்குகிறது. ஆம், அவன் தூக்கில் இருந்து தப்பிக்கவும் இல்லை. ஓடிப் போகவும் இல்லை.

ஒரு கண நேரத்தில் அவன் கண்ட கனவாக இருக்கலாம் அல்லது அவன் தப்பிக்க நேர்ந்து இருந்தால் இப்படிக் கூட நடந்து இருக்கலாம்.

கனவுக்கும், நிகழ்வுக்கும் இடையில் தானே நாம் வாழ்ந்து வருகிறோம். நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்று.


An Occurrence at Owl Creek Bridge


An Occurrence at Owl Creek Bridge from Jaime Puente on Vimeo


 

Wednesday, August 14, 2013

வீட்டுத் தோட்டத்தில்: அவரைக்காய்

ஊரில் இருந்து அப்பா தான் இந்த அவரை விதைகளைக் கொண்டு வந்தார். வழக்கமாக கடைகளில் கிடைக்கும் பட்டை அவரை போல பச்சை நிறத்தில் இல்லாமல் கொஞ்சம் வேறு நிறத்தில் இருக்கும். இந்த அவரையை ஊரில் "ஊர் அவரை" என்று சொல்வார்கள். அந்த அவரையைக் காட்டிலும், சுவையிலும் இதன் சுவை நன்றாக இருக்கும்.

சீசன் நேரங்களில் நன்றாக காய்க்கும். நான்கு ஐந்து மாதங்களுக்கு முந்திய செடியில் நிறைய காய்கள் பிடித்தது. மூன்று  வாரத்திற்கு, இரண்டு கிலோ பக்கம் கிடைத்தது.



இப்போது இருக்கும் இந்தச் செடி, பின்னர் விதை போட்டு வளர்த்தோம். பக்கத்தில் இருக்கும் மருதாணிச் செடி மீது படர்ந்து விட்டது. ஒரு கயிற்றில் அவரைக் கொடியை, மொட்டை மாடியில் இழுத்து விட்டார் அப்பா. மாடியில் நன்றாகப் பரவியது. கிடு கிடுவென வளர்ந்து, கடந்த ஒரு மாதமாக காய்கள் பிடிக்கின்றன. வாரத்துக்கு ஒரு கிலோ அவரை கிடைக்கிறது.





எந்த மருந்தும் அடிக்காமல், நன்றாகவே காய்க்கிறது. எல்லா நாளும் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்காத காய் கறிகளை உண்ண முடியாமல் போனாலும், நம் வீடுகளில் கிடைக்கும் காய்களின்  மூலம் சில நாட்களாவது சுத்தமான காய்களை நாம் பெறலாம்.