Monday, January 31, 2011

சிறு துளிகள் (31/01/2011)

விழுதுகள் மையத்தில்...

இந்த வாரம் ஒரு மாலை வேளையில், எங்கள் விழுதுகள் அமைப்பினால் நடக்கும் ஒரு மையத்துக்குச் சென்றிருந்தேன். வாரமொரு முறை நடக்கும் பிரார்த்தனையில், தெரிந்தவர்கள் யாருக்கேனும் உடல் நிலை சரியில்லை என்றால் அவர்களுக்காக வேண்டுவது வழக்கம். இந்த வாரம், ஒவ்வொரு மாணாவராகத் தங்கள் பாட்டி, தாத்தா, அம்மா என உடல் நிலை சரியில்லாதவர்கள் பெயர்களைச் சொன்னார்கள்.

அதில் ஒரு மாணவன், "சார்.. என்னோட அக்காவுக்கு கையில காயம் சார்.." என்றான்.
"ஏன்.. என்னாச்சு".. என்றோம்.
"கையில் அரிவாள் பட்டிருசுங்க சார்.." என்றான்.
"அருவாளா? கையில எப்படி பட்டுச்சு"
கொஞ்சம் தயங்கி "சார்.. வீட்ல அம்மாவுக்கும். அப்பாவுக்கும் சண்டை சார். அப்பா, அருவாளா எடுத்துட்டு அம்மாவா அடிக்க வர, அக்கா நடுவுல பூந்து கையில காயம் ஆயிருச்சு சார்.." என்று எங்கள் கண்களையே பார்த்தான்.
வேறு ஒன்றும் பேச இயலாதவராய், "சரிப்பா.. உங்க அக்கா பேரச் சொல்லு" என்றோம்.

பெரிய குடும்பமோ (உதாரணதுக்கு நடிகர் விஜயகுமார் பேரன்), அல்லது இந்த மாதிரி ஒரு கிராமத்துக் குடும்பமோ பெற்றோர்களின் சண்டையில் மாட்டிக் கொண்டு துன்புறுவது குழந்தைகளே. பெற்றோர்கள் சண்டையால் வளரும் குழந்தைகள், என்ன விதமான மனத் துன்பங்களுக்கு ஆளாவார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இன்னும் ஒரு மாணவன், "பாப்பா" பாட்டில் பாரதி சொன்னது போல, உயிர்கள் அனைத்தையும் நேசிக்க வேண்டும் என்று சொன்னது போல சொன்னான்.
"சார்.. எங்க வீட்டு நாய் செத்துப் போச்சு சார்.. பேரு ஜிம்மி.. எழுதிக்குங்க சார்" என்றான்.


தமிழக மீனவர்கள்

ஏதோ தமிழக மீனவர்கள் பற்றி இப்பொழுதுதான் கரிசனம் வந்தது போல எல்லாத் தலைவர்களும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வேறு ஒன்றும் காரணமில்லை, வரும் தேர்தல் தான் மூல காரணம். கூட்டணி பிரித்துக் கொண்டு திரும்பவும் ஓட்டுக் கேட்டு வர வேண்டுமல்லவா, அது வரைக்கும் தாக்குதலை நிறுத்தி வைக்க சொல்லி இருந்தாலும் இருப்பார்கள். தன்னைக் கட்டு மரம் என்று கூறிக் கொள்ளும் தலைவர் டெல்லியில் கூட்டணி பற்றி பேசிக் கொண்டு இருக்கிறார். கொஞ்சம் கண் வைத்தால், கட்டு மரமே வாழ்க்கையாக கொண்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப் பட மாட்டார்கள்.

விலைவாசி

கொஞ்சம் அதிகம் சம்பளம் வாங்குபவர்கள் சிறிதளவாவது தப்பித்துக் கொள்ளலாம். ஒரு துணிக்கடை அல்லது பலசரக்குக் கடை ஊழியரோ வாங்கும் சம்பளம் ஐந்தாயிரத்துக்கும் குறைவே. இதில் வீட்டு வாடகை, காய்கறிகள், மருத்துவச் செலவு என செலவுகளை எப்படித்தான் சமாளிக்கிறார்களோ?.
என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்.. என்றுதான் பாடத் தோன்றுகிறது.


சில குறுஞ்செய்திகள்:

ஒரு காலத்தில் யாரிடமும் கடிகாரம் இல்லை, ஆனால் நேரம் இருந்தது. இப்போது, எல்லோரிடமும் கடிகாரம் இருக்கிறது, நேரம் தான் இல்லை.

**********

ஓர் ஏழை ஒரு மீனைப் பிடித்தான். ஆனால் அவனின் மனைவியால் அதைச் சமைக்க முடியவில்லை. ஏனெனில், விலை வாசியால் மின்சாரம், சமையல் வாயு, எண்ணெய் வீட்டில் இல்லை. எனவே, மீனை மீண்டும் ஏழை மீண்டும் நீரில் விட, திடீரென மீன் கத்தியது. "உயிர் காக்கும் திட்டங்கள் தந்த முதல்வருக்கு நன்றி." :)


**********

நம்பிக்கையின் உச்சம்:
ஒரு ஏரோனாடிக் கல்லூரியில் பணிபுரியும் அனைத்து பேராசிரியர்களையும் ஒரு விமானத்தில் உட்கார வைத்தார்கள். விமானம் கிளம்பப் போகும் சமயம், "இந்த விமானம் நமது கல்லூரி மாணவர்கள் தயாரித்தது" எனச் சொல்ல அனைவரும் தலை தெறிக்க வெளியே ஓடினார்கள். ஒருவர் மட்டும் உள்ளேயே உட்கார்ந்திருக்க, அவரிடம் கேட்டார்கள். அதற்கு அவர், "எங்கள் மாணவர்கள் தயாரித்தது என்றால், இது ஓடாது" என்றாரே பார்க்கலாம். :)


**********


Wednesday, January 26, 2011

உயர் ரகம்

புசுபுசுவென்ற முடிக் கற்றைகள்
இல்லையெனில் முடி இல்லாமல்
பிறந்து ஒரு வாரம் என்றாலும்
பத்து, இருபது ஆயிரங்களில் விலை
உயரம், எடை, உணவு என்று
நாட்டு இனங்களை விட
வித்தியாசங்கள் நிறைந்தவை...

எனினும்
நெடுஞ்சாலை கனரக வாகனங்களில்
தவறியும் அடிபடுவதில்லை
கூண்டில் அடைபட்ட உயர் ரகங்கள்.
நாட்டு நாய்களைப் போல்..



Sunday, January 23, 2011

கடைத்தெருவின் கலைஞன்

திரு.ஜெயமோகன் அவர்களின், ஆ.மாதவன் புனைவுலகு பற்றிய 'கடைத்தெருவின் கலைஞன்' படித்துக் கொண்டிருக்கிறேன். அந்தப் புத்தகத்தில் இருக்கும் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.



திரு.ஆ.மாதவனிடம் ஜெயமோகன் பேசிக் கொண்டிருக்கும்போது, மாதவன் அவர்கள் சொல்லுவதாக;

'நாம கண்ணுக்குப் பட்டதை அப்டியே எழுத நினைக்கிற ஆளு. நாம நினைகப்பட்டதுக்கு யதார்த்தத்திலே எடமில்லை. வாழ்க்கை கண்ணு முன்னாலே ஓடிட்டு இருக்கு' என்றார். 'அதோ பார்த்தீங்களா?' என்று ஒருவரைக் காட்டினார். ஒரு ஆசாமி சபரிமலை பக்தர் கோலத்தில் சென்று கொண்டிருந்தார். 'அய்யப்பனாக்கும். விஷூவுக்கு மலைக்குப் போக மாலை போட்டிருக்கான். இந்த சாலைத் தெருவிலே பேரு கேட்ட கேடி. மூணு சீட்டும் முடிச்சவுப்பும் ஜோலி. குடி கூத்தி எல்லாம் உண்டு. மாசத்திலே எட்டு நாள் லாக்கப்பிலே உறக்கம். எடைக்கிடைக்கு ஜெயிலுக்கும் போவான். நாலஞ்சாளை குத்தியிருக்கான். ஆனா இப்பம் பார்த்தேளா... இந்தக் கோலம் சத்யமாக்கும். உண்மையிலேயே மன்சலிஞ்சுதான் மலைக்குப் போறான். பெரிய பக்திமான். இதை நாம் எப்படி புரிஞ்சுக்கிட முடியும்?. நாம இதைப் பதிவு பண்ணி வைக்கலாம். வாசகர்கள் அவங்க வாழ்க்கைய வெச்சு புரிஞ்சுகிட்டா போரும். அல்லாம நாமறிஞ்ச அரசியலை எல்லாம் அவன் மேலே கேற்றி வச்சா அது அசிங்கமா இருக்கும்.'


****************************************

ஒரு பக்கத்தில் திரு.ஜெயமோகன் எழுதியுள்ளது கீழே;

சமீபத்தில் கேரளத்தில் கவி என்ற ஊருக்கு மலைப்பயணம் சென்றிருந்தேன். பஷீர் என்ற நண்பர் காட்டு அட்டைகளை பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். மழைக் காலத்தில் கோடிக் கணக்கான முட்டைகளில் இருந்து கோடிக் கணக்கான அட்டைப் பூசிகள் பிறந்து வருகின்றன. புல் நுனிகளில் பற்றி ஏறக் காத்திருக்கின்றன. அவற்றில் பல்லாயிரத்தில் ஒன்றுக்குக் கூட உணவு உண்ணும் வாய்ப்பு அமைவதில்லை. உடலே நாசியாக குருதி மணத்துக்குக் காத்திருந்து காத்திருந்து நெளிந்து நெளிந்து நாட்கள் செல்ல அந்த மழைக் காலம் முடிந்ததும் அவை வெயிலில் காய்ந்து சக்கையாகிப் புழுதியாகின்றன.

ஏதோ ஒன்று ஓர் உடல் மேல் தொற்றி ஏறுகிறது. அதன் பல்லாயிரம் சகாக்களுக்கும் அதற்கும் அளிக்கப்பட்டுள்ள அத்தனை உடல் நுட்பங்களும் அந்த ஒரு செயலுக்காகவே உருவானவை. அது குருதியை நீர்க்கச்செய்து வலியில்லாமல் உறிஞ்சுகிறது. பின்பு உதிர்ந்து விடுகிறது. உணவு உண்ண நேர்ந்தமையாலையே அதன் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. அந்தக் குருதியில் அது முட்டைகளை நிரப்பிக் கொள்கிறது. ஆழ்ந்த மரணத்துயில். முட்டைகள் அதைப் பிளந்து வெளிவந்து மண்ணில் பரவி அடுத்த மழைக் காலத்துக்காக காத்திருக்கின்றன.

'இந்த அட்டைகளைப் பார்க்கையில் கடவுள் காட்டும் ஒரு வேடிக்கை போலத் தோன்றுகிறது' என்றேன். பஷீர் சிரித்துக் கொண்டு 'மனித வாழ்க்கை மட்டும் என்னவாம்?' என்றார். ஓர் அதிர்ச்சியுடன் எண்ணிக்கொண்டேன். ஆம், மனிதன் மட்டும் என்ன? அவன் படைத்த இந்த நாகரீகம், இந்த இலக்கியம், இந்தச் சிந்தனைகள், கலைகளுடன் அவன் மட்டும் என்ன பெரிய சாதனையை நிகழ்த்தி விட்டான்? எந்த அர்த்தத்தை அடைந்து விட்டான்? உடனே சாளைப் பட்டாணி என் நினைவுக்கு வந்தான்.

(குறிப்பு: ஆ.மாதவன் அவர்களின் 'எட்டாவது நாள்' குறு நாவலில் வரும் பாத்திரம் சாளைப் பட்டாணி.)

*********************************

கடைத்தெருவின் கலைஞன் - ஆ.மாதவனின் புனைவுலகு ஜெயமோகன் தமிழினி


மேலே உள்ள படம் உடுமலை.காம் தளத்தில் இருந்து. நன்றி
http://udumalai.com/?prd=%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D&page=products&id=8723

Tuesday, January 18, 2011

காதல் செய்வீர் உலகத்தீரே ! - 3




















அல்லும் பகலும் காதொற்றி பேசுபவர்
செல்போன் காதலர் ஆவர்.

======================

அள்ளித் தீராத சமுத்திரம் போல்
சொல்லித் தீராதது காதல்.

======================

கவிதையில் காதலைப் பகிர்ந்த தருணத்தில்
புவியில் யாவும் அழகாகும்.

======================

படம்: இணையத்தில் இருந்து (http://thesituationist.wordpress.com/2008/02/10/crazy-little-thing-called-love-2/) - நன்றி.


Thursday, January 13, 2011

சர்க்கரைப் பொங்கல்
















செவுரு
முச்சூடும் சுண்ணாம்பு பூசி
வாசத் தொரவெல்லாம் சாணி வளிச்சு
பெரிய பாத்திரங்கள வெளக்கி
ஊரே பொங்கலை எதிர் பாத்துட்டு இருக்க...
"இந்த வருசமும் மகன் வரல..
லெட்டர் போட்டிருக்கான்.. "
அப்படின்னு பக்கத்துக்கு வூட்டு லெட்சுமியிடம்
பொலம்பறாங்க கண்ணம்மா பாட்டி..
உள்ளிருந்து கண்ணம்மா தாத்தா
"இந்த வருசமும்
வெள்ளைப் பொங்கலே போதும்
சர்க்கரைப் பொங்கல் வேண்டாம்"
என்று கத்திக் கொண்டிருக்கிறார்..

********************************

அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..


Tuesday, January 11, 2011

ஒரு கூடு

அந்த காலை நேரத்தில் சென்ட்ரலில் இருந்து நுங்கம்பாக்கம் ஸ்டேசனில் இறங்கிய போது நகரம் கொஞ்சம் தான் விழித்திருந்தது. கண்ணனுக்கு செல்லில் கூப்பிட்டேன். வந்து கொண்டிருப்பதாகவும், மேல் படி ஏறி பிள்ளையார் கோவில் பக்கத்தில் நிற்கச் சொன்னான்.

சென்னை, தி நகரில் ஒரு வேலைக்கான இன்டர்வியு இருப்பதால் ஊரிலிருந்து நேற்று இரவு ரயிலேறினேன். முன்னமே சென்னை வந்தால், 'ரூமுக்கு வாடா' என்று சொல்லி இருந்தான் கண்ணன். நேற்றிரவே அவனிடம் பேசி நான் வருவதை அவனிடம் சொல்லிவிட்டேன். மற்ற நண்பர்கள் இருந்தாலும், இண்டர்வியுவுக்குப் போவதற்குப் பக்கமாக இருக்கும் என்றுதான் அவன் அறைக்கு வருவதாக சொன்னேன். அவனுக்காக நின்று கொண்டிருந்தேன். அதோ வந்து விட்டான்.

"எப்படிடா இருக்க.. ஊர்ல எல்லாரும் எப்படி இருக்காங்க.. வேலை எப்படிப் போகுது.. " என இருவரும் பரஸ்பரக் கேள்விகளை அடுக்கிப் பதிலைப் பெறலானோம். ரொம்ப தூரம் நடந்து கொண்டிருந்தோம்.

"என்னடா.. ஊரைச் சுத்திக் காட்டுறியா.. ரூம் எங்கடா.." என்றேன்.

"இதென்ன.. வந்தாச்சு" என்று பக்கத்தில் இருந்த நான்கடுக்கு மேன்சன் கட்டிடத்தைக் காட்டினான். மேன்சன் என்பதால் பக்கத்தில் முனியாண்டி சாப்பாட்டு கடை, பெட்டிக் கடை, மளிகை கடை, சலூன் என அந்த வீதி நிரம்பிக் கிடந்தது. இரண்டாவது மாடியில் அவன் ரூம் இருந்தது. ஒவ்வொரு அறைக்கு முன்னாலும் இருந்த திண்டுகளில் கயிறுகள் கட்டப்பட்டு ஆடைகள் உலர்ந்து கொண்டிருந்தன.

கண்ணனின் அறைக்குள் உள்ளே போனதும் "அப்பாடா.. நல்ல வேல, வர்றப்போ வாட்ச்மென் இல்ல.. இருந்திருந்தா 108 கேள்வி கேட்டிருப்பான்.." என்றான் கண்ணன். அவன் அறையில் இன்னொருவரும் தங்கி இருக்கிறார். அறைக்கு இரண்டு பேர். இரண்டு கட்டில்கள் இரண்டு பக்கமும், ஓரத்தில் ஒரு டேபிளும் போட்டிருந்தார்கள். டேபிளில் புத்தங்கங்கள், பேப்பர்கள், பேனாக்கள் என ஒழுங்கின்றி குவிந்து கிடந்தன. உள்ளேயும் இரு ஜன்னல்களுக்கு இடையில் கயிறு கட்டப்பட்டு, துணிகள் தொங்கியிருந்தன. நீண்ட நாட்கள் சுத்தம் பண்ணாததால் ஒரு வித வாசம் அடித்தது. ஓரமாக ஒரு விளக்கு மாறும், இரண்டு பக்கெட்டுக்கள் குவளைகளோடு கிடந்தன.

"ஏண்டா.. முன்னாடியே சொல்லிருந்தா.. வேற யாரோட ரூமுக்காவது போயிருப்பேன்ல." என்றேன்.

"அதனால என்ன.. அவன் கெடக்கான்.. நீயே எப்பவாவது ஒரு நாள்தான் இங்க வர்றே.. உன்னை எப்படி இங்க வர வேண்டாமுன்னு சொல்லுறது.. இந்தா போய், பல்ல வெளக்கிட்டு வா.." என்று பேஸ்டைக் கொடுத்தான்.

பல்லை விளக்கி விட்டு வந்ததும், அவன் ரூமுக்கே வர வைத்திருந்த டீயைக் குடித்து முடித்தோம். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, "சரிடா.. நான் குளிச்சிட்டு வர்றேன்.." என்றதும், "இருடா.. பாத் ரூம் ப்ரீயா இருக்கான்னு பார்த்துட்டு வர்றேன்" என்று வெளியே போய்ப் பார்த்து விட்டு வந்து, "இந்தாடா குளிச்சிட்டு வந்திரு.. யாராவது கதவ தட்டுன்னா திறந்துடாத.. அந்த வாட்ச்மென் வந்தாலும் வருவான்" என்றான்.

ஒரு பக்கெட்டை தூக்கிக் கொண்டு அந்த இருளடைந்த குளியலறைக்குச் சென்றேன். 'காதல்' படத்தில் வருவது போல நீண்ட வரிசை நிற்கும் பாத் ரூம் இல்லை. ஒராளவு சுத்தமாகத்தான்இருந்தது. உள்ளே இருக்கும் வரையிலும் வெளியே அந்த முகம் தெரியாத வாட்ச்மென், கையில் ஒரு பிரம்புத் தடியோடு நின்று கொண்டு இருந்தாலும் இருப்பான் என்று நினைத்துக் கொண்டேன். குளித்து விட்டு வெளியே வந்தால், யாரும் இல்லை. ஒன்றிரண்டு பேர் பேப்பரும் கையுமாக வெளியே நடந்து கொண்டிருந்தார்கள்.

நான் கிளம்பியதும், கண்ணனும் என் கூடவே ஸ்டேசன் வரை வருவதாக கூடவே வந்தான். கீழே இறங்கும்பொழுது முதுகு திரும்பிக்கொண்டு, தலைக்கு ஒரு துண்டைக் கட்டிக்கொண்டு, காக்கி உடையில் வயதான் ஒரு ஆள் படிக்கு அருகில் உட்கார்ந்து இருந்தான். அந்த ஆளைப் பார்த்ததும் அவன்தான் வாட்ச்மேன் என்று தெரிந்தது. கண்ணனின் முகத்தைப் பார்க்க 'நேராப் போ.. ஒன்னையும் கண்டுக்காத..' எனச் சைகை செய்தான். இருவரும் அந்த ஆளைக் கடந்ததும், அந்த வாட்ச்மென் சுதாரித்து "தம்பி.. தம்பி.. நில்லு.." என்றான். கண்ணன் திரும்பிப் பார்த்து விட்டு "இருங்க.. ஸ்டேசன் வரைக்கும் போயிட்டு வந்துடுறேன்.." என்று வேக வேகமாக என்னை இழுத்துக் கொண்டு நடந்தான்.

நான் அவனிடம், "என்னடா.. அந்த வாட்ச்மேன் ஏதாவது சொல்லுவானாடா.. " என்று கேட்டேன்.

"அவன் என்ன சொல்லப் போறான். போய், இன்னைக்கி அவன் நைட் தண்ணி அடிக்கறதுக்கு ஐம்பதோ நூறோ குடுக்கணும். புதுசா ஒரு ஆள் வரக் கூடாது அவனுக்கு. " என்றவன், திடீரென்று என்ன நினைத்தானோ,

"ஏண்டா.. இந்த பாரதி சொன்னாப்ல சுத்திலும் தென்னை மரம், குருவி கிளி இருக்குற மாதிரி வீடு கூட வேண்டாண்டா. சொந்தக் காரங்களோ, நம்ம பசங்களோ வந்தா ஒரு ரெண்டு நாள் தங்கிட்டு, ஊரைச் சுத்திக் காட்டுற மாதிரி ஒரு வீடு இருந்தா எப்படி இருக்கும். பெரிய ஊருனுதான் பேரு. ரெண்டு நாள் சேர்ந்து தங்க வைக்க முடியறதில்ல.. ஏண்டா, நாமா எல்லாம் இங்க ஒரு வீடு வாங்க முடியுமாடா.. ஒரு நாள் இந்த சிட்டில வீடு வாங்கணும்டா.. " என்று புலம்பிக் கொண்டு வந்தான்.

ஸ்டேசன் வந்ததும், அவனே என்னை ஒரு ஓரமாக நிற்க வைத்து விட்டு தி.நகருக்கு டிக்கெட் வாங்கி வந்தான். பிளாட்பாரமுக்கு வரவும் எலெக்ட்ரிக் வண்டி வந்து நின்றது. "இன்டெர்வியு நல்லா பண்ணுடா.. ஆல் தி பெஸ்ட்.. பை டா.. " என்று விடை பெற்றுக் கொண்டோம்.

நகரம் என்பது வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு ஒரு மாயை போலத் தோன்றுகிறது. ஆனால், அதன் அடியில் எவ்வளவோ அடிகளும், வேதனைகளும் உறைந்து கிடக்கிறது. உள்ளே அமர்ந்து யோசித்து கொண்டிருக்கும் என்னைச் சுமந்த படி, ரயில் நகர்ந்து விட்டது.

Thursday, January 6, 2011

விடுமுறை தினத்தில்














விடுமுறை தினங்களில்
முகச்சவரமோ அல்லது முடி பின்னலோ தேவையில்லை
சூடான சமையலை
உள்ளே திணிக்கும் அவசரம் இல்லை
பறக்கும் சாலைகளில்
கசங்கிச் செல்ல வேண்டியதில்லை
சுடு டப்பா உணவு
மதியத்துக்கு தேவையில்லை...

எல்லாவற்றையும் விட
அலுவலகத்தில்
உள்ளே குமைந்து கொண்டு
வெளியே செயற்கையாக
புன்னகைக்க வேண்டியதில்லை...

படம்: இணையத்தில் இருந்து.. நன்றி...

Tuesday, January 4, 2011

பாலிதீன் என்னும் பிசாசு..


பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களால் சுற்றுச் சூழல் அழிந்து கொண்டே வருகிறது. எந்தப் பொருள் வாங்கினாலும் கூடவே ஒரு பாலிதீன் பையைக் கொடுத்து விடுகிறார்கள் கடைக்காரர்கள். அப்படி அவர்கள் கொடுக்கவில்லை என்றாலும் கேட்டு வாங்குபவர்கள் நிறையப் பேர். இதில் திரும்ப பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் கொஞ்சமே, பெரும்பாலும் தரமில்லாத பிளாஸ்டிக் பொருட்களே நம்மை வந்தடைகிறது.

முன்னொரு காலத்தில் எல்லாம் வீட்டில் இருந்து பாத்திரங்களைக் கொண்டு போய் இட்லி, சட்னி, சாம்பார் என வாங்கி வருவார்கள். எண்ணெய் வாங்க வேண்டுமென்றால் வீட்டில் இருந்து பாட்டில்களை கொண்டு போய் வாங்கி வருவார்கள். இப்பொழுது எல்லாமே கவர்களில். கடைக்கு கையை வீசிக் கொண்டு போய்விட்டு, வரும்போது இரு கை நிறைய பாலிதீன் பைகளை சுமந்து கொண்டு வருகிறோம். சில வருடமாக, டீக் கடைகளில் கொதிக்க கொதிக்க டீயை பாலிதீன் கவர்களில் ஊத்தி தருகிறார்கள்.

ஒவ்வொரு வீதிகளின் குப்பை போடும் இடத்தில் பரந்து கிடக்கும் பாலிதீன் பைகள் எத்தனை. குப்பை வண்டிகள் அள்ளிக் கொண்டு போனாலும் அவர்களும் ஒரு இடத்தில் கொட்டித்தானே வைப்பார்கள். அதுவும் நாம் வாழும் பூமியின் ஒரு இடம்தானே.

அங்கங்கு போடும் பைகள் சாக்கடைகளில் மூழ்கி, மழைக் காலங்களில் தண்ணீர் போக முடியாமல், வழியை அடைத்து விடுகிறது. இன்னும் சில பைகள் மண்ணில் புதைந்து மக்க வழி இன்றி அப்படியே கிடக்கிறது. அது மட்டுமல்லாமல் பாலிதீன் பைகள் கிடக்கும் இடங்களில் அங்கே வாழும் சிறு உயிர்களின் வாழ்வாதாரம் கெட்டுப் போகிறது. கண்ணுக்கு தெரியாத எவ்வளவோ உயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

நாளை நம் குழந்தைகள் மண்ணில்(!) விளையாடினால் கல்லும் மண்ணும் கிடைக்கிறதோ இல்லியோ, அவர்களுக்கு கொஞ்சம் நம் காலத்து பாலிதீன் கவர்கள் கிடைக்கும்.

இதெல்லாம் தவிர தண்ணீர் பாட்டில்கள் பெரும் பிரச்சினை. கடையில் மட்டும் விற்றுக் கொண்டிருந்த தண்ணீர் பாட்டில்கள், தற்போது கல்யாணம் மற்றும் இதர விசேசங்களில் இலைக்கு ஒரு பாட்டில் வைக்கிறார்கள்.

இதை விட மற்றும் ஒன்று. குப்பைகள், மீந்த சாதம், பொரியல், எலும்பு, கழிவுகள் என அப்படியே ஒரு காகிதத்தில் கட்டி ஒரு துளி காற்று கூட உள்ளே போக முடியாதவாறு கட்டி போடுவது. அந்தக் கழிவுகள் அப்படியே அந்தக் கவருக்குள்ளே கிடந்து, வேதி வினைகள் ஆற்றி நாம் கடக்கும் போது 'குப்' என்று புரட்டி வருகிறதே, அதற்கு நாமும் ஒரு காரணமல்லவா?.



முற்றிலுமாக நம்மால் தவிர்க்க முடியாதுதான். அதை பின்வரும் வழிகளில் கொஞ்சம் குறைக்கலாமே;

-பொருட்கள் வாங்க கடைகளுக்குச் சென்றால் முடிந்த அளவு வீட்டில் இருந்து பைகளை கொண்டு செல்லுங்கள்.

-கையில் கொண்டு வரக் கூடிய பொருட்களுக்கு கடைக்காரர் பாலிதீன் பையில் போட்டு கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லுங்கள். (ஒரு சோப்பு, ஒரு பாகெட் பிஸ்கட் வாங்கினாலும் கடைகளில் பாலிதீன் கவர் கொடுப்பார்கள்)

-முடிந்த அளவு REUSE பண்ணலாமே.

-குழந்தைகளுக்கு பாலிதீன் தீமைகள் பற்றி சொல்லிக் கொடுக்கலாம்.

-முக்கியமாக பயன்படுத்திய பின்னர் சரியான முறையில் குப்பையில் சேருங்கள்

- குப்பைகளை பாலிதீன் கவர்களில் கட்டிப் போடாதீர்கள்.

இந்த உலகத்தில் இருந்து எத்தனையோ பெற்றுக் கொண்ட நாம், அதற்கு திருப்பிச் செய்யும் ஒரு நன்றிக் கடனாக இருக்கட்டுமே.

SAY NO TO PLASTIC BAGS..

ஒரு வீடியோ:




SAY NO TO PLASTIC BAGS..

படம்: இணையத்தில் இருந்து.. நன்றி.


Monday, January 3, 2011

காதல் செய்வீர் உலகத்தீரே ! - 2

உனது கைப்பேசிக்கு
அழைத்தால்
முதலில் ஏதோ ஒரு இசை கேட்கிறது..
நீ பேச ஆரம்பித்த பின்னர்தான்
மெல்லிசை கேட்கிறது..

*******************************

சுருட்டிப் போட்ட
பழைய போர்வையாய்
நடந்து கிடக்கிறேன் சாலைகளில்
ஒரு நாளேனும்
திரும்பி புன்னகை
பூத்து விட்டுப் போ.
அன்று முதல் நான்
பறக்க ஆரம்பிப்பேன்..