Showing posts with label சுந்தர ராமசாமி. Show all posts
Showing posts with label சுந்தர ராமசாமி. Show all posts

Thursday, October 17, 2013

செம்மீன் - தகழி சிவசங்கரப் பிள்ளை (நாவல்)

ஒரு கடலோரக் கிராமத்தில் நடக்கும் கதை 'செம்மீன்'. தினமும் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்று அந்த வருவாயை வைத்துப் பிழைப்பவர்கள் மீனவர்கள். சேமிப்பு என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. மீன் கிடைக்காத காலத்தில், இருப்பதை உண்டு காலம் தள்ள வேண்டியது தான். மரக்கான் சொத்து சேர்த்து வைக்கக் கூடாது, அவனுக்குத் தான் இந்த பரந்த விரிந்த கடல் இருக்கிறதே !. எப்பொழுதும்  கடல் அன்னை நம்மைக் கை விட்டுவிட மாட்டாள் என்பது அவர்களது நம்பிக்கை.

தினம் தினம் கிடைக்கும் வருவாயை செலவழித்து வரும் மீனவர்களுக்கு மத்தியில், செம்பன்குஞ்சு கொஞ்சம் வித்தியாசமானவன். சொந்தமாகத் தோணி வாங்க வேண்டும், பெரிய வீடு கட்ட வேண்டும், விதவிதமாக உண்ண வேண்டும் என ஆசைப்படுகிறான். அவன் மனைவி சக்கி-யும் பாடுபடுகிறாள். இருவரும் சேர்ந்து சேமிக்கத் தொடங்குகின்றனர். இரண்டு பெண் குழந்தைகள் இவர்களுக்கு. மூத்தவள் கறுத்தம்மா. இளையவள், பஞ்சமி. தோணி வாங்கி, நன்றாகச் சம்பாதித்த பின்னர்தான், தன் பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து வைப்பதென முடிவோடு இருக்கிறான் செம்பன்குஞ்சு.


சின்ன வயதிலேயே அந்தக் கடலோரத் துறைக்கு வியாபாரம் செய்ய வந்தவன் பரீக்குட்டி. துலுக்க சமூகத்தைச் சேர்ந்தவன். இவனிடம் கறுத்தம்மா சின்ன வயதிலிருந்தே பழகிக் கொண்டு இருக்கிறாள். வளர்ந்த பின்னர் அது காதலாக மாறுகிறது.

செம்பன்குஞ்சு தோணி வாங்க முடிவு செய்கிறான்.கொஞ்சம் பணம் பற்றாமல் இருக்கவே, யாரிடம் கடன் வாங்கலாம் என யோசிக்கிறார்கள். பரீக்குட்டியிடம் வாங்கலாம் என முடிவு செய்கிறார்கள். இவர்கள் கேட்பதற்கு முன்னரே, கறுத்தம்மா பரீக்குட்டியிடம் 'கடன் தருவாயா' எனக் கேட்டதற்கு, அவனும் மகிழ்ந்து 'நான் தருகிறேன்' என்கிறான். சொன்னவாறே, பணம் தருகிறான்.

கறுத்தம்மாவின் மேல் உள்ள காதலால்தான் அவன் பணம் தந்தான் என்பதை அறிந்த, அவளின் தாய் சக்கி, 'பரீக்குட்டி வேறு சமூகம். இது நமக்கு ஒத்து வராது. கடல் தாயின் குழந்தைகள் நாம் தப்பு செய்யக் கூடாது. நமது துறையில் பிறந்த நீ, தோணி பிடிக்கும் ஒரு மரக்கான் வீட்டுக்குத் தான் போக வேண்டும். பரீக்குட்டியும் உன்னை கல்யாணம் செய்ய முடியாது' என்றெல்லாம் அறிவுரை கூறுகிறாள். கறுத்தம்மா, தன் தாயிடம் 'ஒரு நாளும் நான் தவறு செய்ய மாட்டேன், ஆனால் பரீக்குட்டியிடம் வாங்கிய கடனைக் குடுக்க வேண்டும்' என்று கூறுகிறாள்.

இப்பொழுது, தோணி சொந்தமாக இருப்பதில், நன்றாகச் சம்பாதிக்கிறான் செம்பன்குஞ்சு. கறுத்தம்மா ஏதாவது செய்து விடுவாளோ என்று சக்கி பயந்து கொண்டே இருக்கிறாள். விரைவில் அவளுக்கு கல்யாணம் செய்ய வேண்டும் என செம்பன்குஞ்சுவிடம் சொன்னால், அவன் அதைக் காதிலேயே போட்டுக் கொள்வதில்லை. அவன் இரண்டாவதாக இன்னொரு தோணியையும் வாங்கி இருந்தான்.

செம்பன்குஞ்சு, பரீக்குட்டிக்குத் தர வேண்டிய பணத்தையும் அவனுக்குத் தருவதில்லை. திருப்பித் தருவார்கள் என்று அவன் கடன் கொடுக்கவில்லை. எந்த எதிர்பார்ப்பும் இன்றித்தான் அவன் பணம் கொடுத்திருந்தான். கையில் பணம் இல்லாமல் அவன் பாடு மிகத் திண்டாட்டமாகி விட்டது. தொழில் முன்னர் போல இல்லை அவனுக்கு.

இதற்கிடையில், செம்பன்குஞ்சு ஒரு மரக்கானைச் சந்திக்கிறான். அவன் பெயர் பழனி. தாய் தந்தை, ஏன் உறவினர்கள் கூட இல்லை. வீரம் மிக்க அவனைப் பார்த்ததும், கறுத்தம்மாவுக்கு இவனையே கல்யாணம் செய்வதென முடிவு செய்கிறான். அவனுக்குத் தாய் தந்தை இல்லாததால் அவன் நம்முடனே இருப்பான் எனக் கணக்குப் போடுகிறான் செம்பன்குஞ்சு. திருமணத்துக்கு பழனியும் சம்மதிக்கிறான்.  வேறு வழியின்றி கறுத்தம்மாவும் ஒத்துக் கொள்கிறாள்.

கல்யாணத்தன்று நடக்கும் சிறு பூசலில் 'கறுத்தம்மா கெட்டுப் போனவள். அதனால் தான் யாரும் இல்லாத பழனிக்கு மணம் முடிக்கப் பார்க்கிறார்கள்' என்ற பேச்சு எழுகிறது. இதைக் கேட்டதும் சக்கி மயங்கி விழுகிறாள். செம்பன்குஞ்சு அவர்களைச் சமாதானம் செய்து கல்யாணம் முடித்து வைக்கிறான். சக்கியோ இன்னும் மயங்கி மயங்கி விழுகிறாள். இந்த நிலையில், 'கறுத்தம்மாவை அழைத்துச் செல்ல வேண்டாம், சக்கி சரியானதும் கிளம்பலாம்' என்கிறான் செம்பன்குஞ்சு. பழனி மறுத்து விடுகிறான். கறுத்தம்மா தாயின் முகம் பார்க்க, 'இங்கயே இருந்து அந்த பரீக்குட்டியை பார்த்துக் கொண்டே இருக்கலாம் என நினைக்கிறாயா?' என்கிறாள். உடனே அவளும் நான் பழனியுடன் புறப்படுகிறேன் என்கிறாள். எவ்வளவோ சொல்லியும் கிளம்பும் தன் மகளை, 'இனி நீ என் மகளே இல்லை' என்கிறான் செம்பன்குஞ்சு.

****************

சொந்தத் துறையில் அவள் கெட்டுப் போனதால்தான், அவளைக் கல்யாணம் செய்து வைத்து பழனியுடன் அனுப்பி விட்டான் செம்பன் குஞ்சு என பழனியின் ஊரில் பேசிக் கொள்கிறார்கள். சக்கியோ கொஞ்ச நாளில் 'நீ இன்னொரு பெண்ணைக் கட்டிக்கோ' என செம்பன்குஞ்சுவிடம் சொல்லிவிட்டு உயிரை விடுகிறாள். அவன் மறு கல்யாணம் செய்தானா? கறுத்தம்மா தன் தாயின் இறப்புக்கு வந்தாளா? சிறு பெண் பஞ்சமி என்ன ஆனாள்?

"தோணி ஓட்டிச் செல்லும் மரக்கானின் உயிர், கரையில் உள்ள அவனின் மனைவியின் கையில் தான் இருக்கிறது. அவள் நெறி தவறிப் போனால், கடல் அன்னை பொறுக்க மாட்டாள். அவனை விழுங்கி விடுவாள்" என்பது அந்த மக்களின் நம்பிக்கை. உயிருக்குப் பயந்து, அவனை இப்பொழுது யாரும் தோணியில் சேர்த்துக் கொள்வதில்லை. அவனுடன் சேர்ந்து நாமும் பலியாக வேண்டுமே எனப் பயப்படுகிறார்கள். தனியனான அவன் என்ன செய்தான்?

கரையில் பாடிக் கொண்டிருக்கும் பரீக்குட்டி, கறுத்தம்மாவை மறந்து விட்டானா? நட்டம் இல்லாமல் தொழிலை அவன் நடத்திக் கொண்டிருக்கிறானா? பரீக்குட்டியிடம், செம்பன்குஞ்சு வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்தானா?

மனதில் ஒருவனை நினைத்துக் கொண்டிருந்த கறுத்தம்மா, தனது குலத்தின் நீதிகளுக்கு இணங்க பழனியைக் கல்யாணம் செய்து கொண்டாள். பரீக்குட்டி இன்னும் அவள் நினைவில் இருக்கிறானா? எத்தனை நாள் மூடி வைத்தாலும் ஒருநாள் வெளியே வரத்தான் போகிறதே எனப் பயந்தாளா? . பழனியிடம், பரீக்குட்டி பற்றிச் சொன்னாளா?.

ஊரார் தன் மனைவியைப் பற்றித் தவறாகப் பேசும்பொழுது பழனி என்ன செய்தான்?. கடலுக்குள் மீன் பிடிக்க போக அவன் என்ன செய்தான்?. மாமனார் செம்பன்குஞ்சுவை அவன் போய்ப் பார்த்தானா?. வேறு பையனிடம் கறுத்தம்மா பழகி இருக்கிறாள் என்பதை அறிந்த அவன் அவளிடம் அவனைப் பற்றி கேட்டானா?

நாவலைப் படித்துப் பாருங்களேன்.


செம்மீன் - தகழி சிவசங்கரப் பிள்ளை
தமிழில் - சுந்தர ராமசாமி

Friday, September 13, 2013

ஜே.ஜே: சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி (நாவல்)

புத்தகம் வாங்கி பல வருடங்கள் ஆனாலும்,  முதலில் முழுவதும் படிக்க முடியாமல் திணறினேன். அல்லது இப்புத்தகம் கோரும் உழைப்பை நான் கொடுக்கவில்லை. நாவல், வழக்கமான கதை சொல்லல் முறையில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது  காரணமாக இருக்கலாம். இடையில் மூன்று நான்கு தடவை திரும்ப திரும்பப் படித்தேன். படிக்கும் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு பகுதி, ஒரு வாசகம் என்னைக் கவர்ந்தது. இன்று இரவு இந்த புத்தகத்தை, மீண்டும் படித்தால் கூட எனக்கு அது புதிய வாசிப்பாகவே இருக்கும்.

பாலு என்கிற வாசகன் மூலம், ஜே ஜே எனும் மலையாள எழுத்தாளரைப் பற்றிச் சொல்லிச் செல்லும் நாவல் தான் ஜே ஜே: சில குறிப்புகள். ஜே ஜே வின் பிறப்பு முதல் அவன் இறப்பு வரை, அவன் பழகியவர்கள், நண்பர்கள், காதலி, அவன்  எழுதியவை என சொல்லிச் செல்கிறது நாவல். பாலுவின் பார்வையில் நாவல்  சொல்லப் பட்டாலும், ஜே ஜே வின் வாழ்க்கைச் சித்திரமாக இருக்கிறது நாவல். 


வழக்கமான கதைப்போக்கு, வருணனைகள், கற்பனை சித்திரங்கள் என்று ஏதுமில்லை.நாவல் எழுதிப் பல ஆண்டுகள் ஆனாலும், இன்றைய சூழலுக்கு மிகப் பொருந்திப் போகிறது. ஓரிடத்தில் இப்படி வருகிறது 'என் கவிதையை ரசிக்க கூடிய ஒரு வாசகன் கிடைத்து விட்டான்  என்ற சந்தோசத்தில் இருந்தேன். அடுத்த நிமிடமே சட்டைப் பையில் இருந்து அவன் ஒரு கவிதையை எடுத்து நீட்டினான்'.

இன்னொரு இடத்தில 'சிவகாமி அம்மாளின் சபதம் நிறைவேறி விட்டதா?' என்று ஜே ஜே கேட்பது போல வருகிறது. தான் வரைந்த ஓவியத்தில் சூரியன் இல்லை என்று ஒருவர் சொல்ல, 'சூரியன் வானத்திலிருக்கும் என நம்புகிறேன்' என்று சொல்கிறான் ஜே ஜே. முற்றிலும் தமிழ் வார்த்தைகளை மட்டும் கொண்ட,  'பொங்குமாக்கடல்'  பத்திரிகையின் ஆசிரியரான தாமரைக்கனி ஜே ஜே என்ற வார்த்தைகளைக் கூட 'சே சே' என்றுதான் போடுவேன் என்கிறார்.

நாவலில் இருந்து சில வரிகள்;

*******************

எல்லாவற்றையும் நன்றாகப் பார்க்க, அது அதற்கான இடைவெளி தேவைப்படுகிறது. சில சமயம் காலத்தின் இடைவெளி. சில சமயம் தூரத்தின் இடைவெளி.

*******************

பாதைகள் என்று எதுவுமில்லை. உன் காலடிச் சுவடுகளே உனக்கான பாதையை உருவாக்குகிறது.

*******************

என்னதான் வேதனை என்றாலும், என்னதான் துன்பம் என்றாலும் எப்போதும் சில பறவைகள் சூரியனை நோக்கியே பறந்து செல்வதை என்னவென்று சொல்ல. இராப் பகல், ஓய்வு ஒழிவு இல்லாமல் பறக்கின்றன அவை. முன்செல்லும் பறவைகள் கருகி விழுவதைக் கண்ணால் கண்டும், அதிக வேகம் கொண்டு பறக்கின்றன. பறத்தலே கருகலுக்கு இட்டுச் செல்கிறது என்ற பேரானந்தத்தில் சிறகடிக்கின்றன. கருகிய உடல்கள் மண்ணில் வந்து விழும்போது, கூரைக் கோழிகள் சிரிக்கக் கூடும். காகங்கள் சிரிக்கக் கூடும். சற்றுக் குரூரமான, கொடுமையான சிரிப்புதான்.

அப்போதும் சூரியனை நோக்கிப் பறக்கப் புறப்படும் பறவைகளின் சிறகடிப்பே அச்சிரிப்புக்குப் பதில்.


*******************

மனிதக் குரல் ஏற்படுத்தும் பரவசத்திற்கு மாற்றாகப் புத்தகங்கள் இருக்க முடியாது. ஏசு எழுப்பிய குரல் அவர் முன் நின்றிருந்த ஜனங்கள் மனதில் எவ்வளவு பரவசத்தை ஏற்படுத்தியிருக்கும்! அதனால்தான் மனிதன் எவ்வளவோ படித்த பின்பும், எவ்வளவோ தெரிந்த பின்பும் மற்றொரு பெரிய குரலைத் தேடிப் போகிறான். குரல் தன்னுடன் பேசுவது போல அச்சு பேசாது என்பது வாசிப்பின் ஒரு நிலையில் அவனுக்குத் தெரிகிறது.

*******************



படங்கள்: இணையத்தில் இருந்து. நன்றி 


Wednesday, May 2, 2012

ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி

எங்கள் கிராமத்தில் ஒரு பெரிய அரசமரம் இருந்தது. அரசமரத்துக்கு கொஞ்சம் பக்கத்தில் பிள்ளையாரும் அம்மனும் குடியிருந்தார்கள். ஊருக்குள் வருவோரை வரவேற்கும் விதமாக ஊரின் தொடக்கத்திலேயே இருந்தது. காக்கைகள் குருவிகள் என எப்போதும் நிறைந்து இருக்கும். சிறு சிறு பழங்களாக உதிர்ந்து கீழே கிடக்கும். இவ்வளவு பெரிய ஆலமரத்தின் விதை இவ்வளவு சிறிதா என நினைத்து வியந்த காலங்கள் அவை. ஒருநாள், ஊரைக் கூட்டி மரத்தை வெட்டுவதென்று தீர்மானித்தார்கள். சில நாட்களிலேயே மரம் வெட்டப்பட்டு விட்டது. மரம் வெட்டியதற்கு அவர்கள் சொன்ன காரணம், மரத்தின் வேர் பக்கத்திலுள்ள வீடுகளின் சுவர்களை தாக்குகின்றனவாம். இது நடந்து பதினைத்து வருடங்களுக்கு மேலிருக்கும். இப்பொழுது அதே இடத்தில், ஒரு அரசமரக் கன்றையும் ஒரு வேப்ப மரக் கன்றையும் நட்டி தண்ணீர் ஊற்றி வருகிறார்கள். ஒருவேளை அவ்வளவு பெரிய மரத்தை வெட்டியதற்கு, இப்பொழுது வளர்க்கிறார்களோ என்னமோ.

ஒவ்வொரு முறை நெடுஞ்சாலை அகலம் செய்யும்போதெல்லாம் எத்தனை மரங்கள் வெட்டப்படுகின்றன. கோவை மேட்டுப்பாளையம் சாலையில் இருந்த அத்தனை புளிய மரங்களும் இன்று வெட்டப்பட்டு விட்டன. தினமும் அதன் நிழலில் நடந்த காலம் மலையேறிவிட்டது. தினமும் ஒவ்வொரு இடத்திலும் மரங்கள் அடியோடு சாய்ந்து கொண்டிருக்கின்றன.

'ஒரு புளியமரத்தின் கதை' நாவலிலும் ஒரு புளியமரமே சுத்தி சுத்தி வருகிறது. ஊரின் முன்னால் இருப்பதால் அந்தப் புளியமரம் எல்லோரையும் பார்த்துக் கொண்டிருக்கிறது. அந்தப் புளியமரம் உள்ள இடம் ஒரு காலத்தில் குளமாக இருந்திருக்கிறது. அந்தக் குளம் நாறுவதைக் கண்ட மன்னர், அந்தக் குளத்தை மூடச் சொன்னதாக 'ஆசான்' என்பவர் கதை சொல்கிறார் நாவலில். ஒரு முறை அந்த மரம் வெட்டுப்படுவதைத் தான் தடுத்ததாகவும் சொல்கிறார். அந்த மரத்தைச் சுற்றி கடைகள் நிரம்பி, இப்பொழுது அது கடைவீதி போல் ஆகிவிட்டது.

அந்தப் புளியமரத்தின் அடியில் தாமு என்பவன் கடை வைத்திருக்கிறான். சற்று தள்ளி கடை வைத்துள்ள காதருக்கும், தாமுவுக்கும் சண்டை வந்துவிடுகிறது. தாமுவை ஒழிக்க புளியமரத்தை  வெட்டுவதுதான் தீர்வு என்ற முடிவுக்கு வருகிறான் காதர். நகரசபை தேர்தலில் தாமுவும் காதரும் போட்டியிடுகின்றனர். இருவருக்கும் பகை புகைந்து கொண்டே இருக்கிறது.

(புளிய மரங்கள் நிறைந்த கோவை மேட்டுப்பாளையம் சாலை, இப்பொழுது இல்லை)

காதருக்கு இசக்கி என்னும் பத்திரிக்கை நிருபர் துணைக்கு வருகிறான். அவன் பத்திரிக்கையில், 'இந்த மரத்தில் தூக்கு போட்டு இறந்திருக்கிறார்கள். இவ்வளவு பெரிய மரம் காற்றுக்கு தீடீரென கீழே விழுந்தால் பெரிய இழப்பும், மக்களும் அடிபடுவார்கள்' என்று எழுதுகிறான். உடனே நகரசபையில் மரத்தை வெட்ட தீர்மானம் போடுகிறார்கள். ஆனால், தாமு மற்றும் அவன் கூட்டாளிகள் அந்த மரத்துக்கு வெள்ளியில் பட்டயம் சாத்தி, பொட்டிட்டு சாமியாக்கி விடுகிறார்கள். வெட்ட வந்த ஒப்பந்தக்காரன், தான் வெட்டமுடியாது எனச் சொல்லிவிடுகிறான். மரம் தப்பிக்கிறது.

ஆனால், அன்றிரவே காதரின் ஆள் அந்த மரத்தில் சிறு குழி போல் செய்து அதில் ஆசிட்டை ஊற்றிவிட, இரண்டொரு நாளில் மரம் அப்படியே பட்டுப் போய்விடுகிறது. இப்பொழுது புளியமர ஜங்சனில் இப்பொழுது புளியமரம் இல்லை. காதர் சிறைக்குச் செல்ல, அந்த நேரம் பார்த்து தேர்தலில் போட்டியிட்ட 'கடலை' தாத்தா ஜெயித்து விடுகிறார். எந்தப் பின்புலமும் இல்லாமல், கடலை மிட்டாய் விற்றுக்கொண்டிருந்த தாத்தா நகரசபைக்கு புது உடையில் செல்கிறார். இரண்டொரு மாதம் கழிந்த பின்னர், அவர் வழக்கம் போல கடலை மிட்டாய் விற்க கிளம்புகிறார். குழந்தைகளின் சிரிப்பைப் பார்த்தவுடன் அவருக்கு முகம் மலர்கிறது.

எத்தனையோ மனிதர்களைக் கடந்து வந்த மரம் இன்று வீழ்ந்து கிடக்கிறது. எத்தனை மழைக்கு, வெயிலுக்கு தாங்கி அது இவ்வளவு பெரிய விருட்சமாக வளர்ந்திருக்கிறது. 

இந்நாவல் மரத்தை மட்டுமல்ல, அதனைச் சுற்றியிருக்கும் மக்களையும் சேர்த்தே விவரிக்கிறது. இது ஒரு புளியமரத்தின் கதை என்றாலும், ஒவ்வொரு மரத்தின் பின்னாலும் எத்தனை கதைகள் இருக்கும் என்ற ஆச்சரியம் எழுகிறது. மரம் - விருட்சம். அந்த விருட்சமே நம் வாழ்க்கைக்கு ஆதாரம், ஆனால் நாம் நம்மால் முடிந்த அளவு அதை வெட்டிக் கொண்டிருக்கிறோம்.  அந்த மரங்கள் நம்மை மன்னிக்கட்டும்.