Wednesday, December 25, 2013

விஷ்ணுபுரம் விருது விழா - 2013

நீரைத் தவிர வேறொன்றும் தெரியாது மீன்களுக்கு. நீர்தான் உலகம். அந்த நீர் சூழ்ந்த உலகம் இல்லை என்றால் மீன்களும் இல்லை. நீர் குறைந்த காலத்தில் கூட, சின்ன இடம் என்றாலும், ஒன்றன் மேல் ஒன்று நீந்திக் கொண்டு, முட்டிக் கொண்டு ஒரே இடத்தில வாழ்ந்து விடும். அவைகளுக்கு வேறு போக்கிடமும் இல்லை. சில சமயங்களில் தன்னை விட பெரிய மீன்கள் விழுங்கவும் வரும். அந்தப் பெரிய மீன்களிடம் போராட வேண்டும். தன் இனம் தான் என பெரிய மீன்கள் நினைப்பதில்லை. 'எவ்வளவு சிறிய மீனாக இருந்தாலும் தன்னிலும் சிறியதை விழுங்கத்தானே செய்கிறது!'

மீன்கள் மட்டுமல்ல, இதோ நாங்களும் அப்படித்தான் இருக்கிறோம் என்று சொன்ன கதை, தெளிவத்தை ஜோசப் அவர்களின் 'மீன்கள்'  சிறுகதை. இந்த வருட விஷ்ணுபுர விருது தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டவுடன், அவரின் சிறுகதைகள் ஜெயமோகன் அவர்களின் தளத்தில் வெளியாகின. முன்னரே அவரைத் தெரியாதிருந்த போதிலும், சில கதைகளைப் படித்தவுடனே மனதுக்கு மிக நெருக்கமாகி விட்டார்.


***********
விழாவில் தெளிவத்தை அவர்கள், 'ஒப்பாரிக் கோச்சி' என்று ஓரிடத்தில் குறிப்பிட்டார். இந்தப் பெயரை எங்கேயோ கேட்டிருக்கிறோம் என்று நினைத்து, பழைய பதிவுகளைப் பார்த்ததில் இந்த தலைப்பில் ஒரு சிறுகதை படித்தது பற்றி ஒரு பதிவாக எழுதி இருந்தேன். அந்தக் கதை மு.சிவலிங்கம் அவர்கள் எழுதி, தீராநதி இதழில் வெளியாகி இருந்தது. அந்தப் பதிவில் நான் இப்படி எழுதி இருந்தேன்;
"'ஒப்பாரி கோச்சி' கதையில் இலங்கைத் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் சுப்பிரமணி இந்தியாவுக்கு வருவதைப் பற்றிய கதை. செல்லம்மாக்கா என்னும் ஒருவர் கதையில் 'ஈந்தியா நம்ம ஊருதானே சாமி?' என கேட்கும்பொழுது, அவர்களை அகதிகள் என அடைத்து வைத்திருக்கும் நமது முகாம்கள் நினைவுக்கு வந்தன. சுப்பிரமணிக்கு இந்தியாவில் இருந்து கடிதம் எழுதும் நபர்கள் கூட 'இங்க மோசம் சுப்பிரமணி.. செத்தாலும் நீ அங்கேயே இரு' எனக் கடிதம் போடுகிறார்கள். ஆனாலும் சுப்பிரமணி குடும்பத்துடன் இந்தியா புறப்பட நேர்கிறது. அவர்கள் ஏறிய 'இந்திய கோச்' தான் ஓயாத அழுகையால் 'ஒப்பாரி கோச்சி' ஆகிவிட்டது. இரண்டு நாடுகளுக்கு இடையில் எச்சங்களாக இருக்கும் ஒரு சுப்பிரமணியின் கதை இது. இன்னும் தெரியாத சுப்பிரமணிகளின் கதைகள் எவ்வளவோ?."

பின்பொருமுறை தீராநதி இதழில், ஈழத்து எழுத்தாளர் திரு. இரவி அவர்களின் பேட்டி இடம் பெற்று இருந்தது. அதைப் பற்றியும் அதனடியில் இப்போ புத்தர் சிலையும் இருக்கலாம்.. என்று பதிவாக இட்டிருந்தேன். அதிலிருந்து சில வரிகள்;
"தமிழைப் பேசுவதன்றி வேறு தவறென்ன செய்தோம் என்று கேட்கிற அளவுக்குச் சம்பவங்கள் நடந்தன. இக்கதைகளைத்தான் 'காலம் ஆகி வந்த கதை' எண்டு எழுதினன். கதை முடிவிலும் 'ஊரும் நாடும் ஐயோ என்று குமுறுகின்ற நாட்கள் அன்றிலிருந்து தொடங்கின' எண்டும், 'இப்போது அப்பாவும் இல்லை. அம்மாளும் இல்லை. அரசமரம் இருக்குமா? இருக்கலாம். சில வேளை அதனடியில் இப்போ புத்தர் சிலையும் இருக்கலாம்.' எண்டும், 'அன்றிலிருந்து அண்ணாக்கள் சில பேரைப் போர்க்களத்தில் கண்டேன்' எண்டும், 'எங்கள் சிரிப்புகளைப் பறித்தவர் யார்' எண்டும், 'அப்போது தஞ்சம் கோர யாழ்ப்பாணமாவது இருந்தது' எண்டும், 'நாடு காண் காலம் வரைக்கும் காடுகள் சுடுகின்ற காலம் ஆகி விட்டது' எண்டும், 'தமிழுக்காக அழுதால் அதிலை என்ன பிழையிருக்கு?' எண்டும் வார்த்தைகளைப் போட்டனம்."

இப்படி, அங்கொன்றும் இங்கொன்றுமாக ஈழத்து எழுத்துக்கள் படிக்க கிடைத்தன. கிடைத்தது கொஞ்சம் என்றாலும், அவை ஏற்படுத்திய வடுக்கள் அதிகம். உண்மை எப்போதும் சுடும் என்பது கூட காரணமாக இருக்கலாம். இனிமேல் ஈழத்து எழுத்தாளர்களின் புத்தகங்கள் இங்கே கிடைக்கலாம். அதற்கு முன்னோட்டமாக, தெளிவத்தை அவர்களின் சிறுகதைகள் 'மீன்கள்' என்ற புத்தகமும், அவரின் 'குடைநிழல்' என்ற குறுநாவலும் விழாவில் வெளியிடப்பட்டது. அரங்கத்தில் விற்பனைக்கும் வைத்திருந்தார்கள்.

இதுவரை விஷ்ணுபுரம் விருது, ஆ. மாதவன், பூமணி, தேவதேவன் மற்றும் இப்பொழுது தெளிவத்தை ஜோசப் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதில் பூமணி அவர்களைத் தவிர, மற்ற மூவரையும் முன்னர் நான் அறிந்ததில்லை. அந்த வகையில், மூத்த படைப்பாளிகளை அறிமுகம் செய்யும் ஜெயமோகன் அவர்களுக்கும், விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களுக்கும் என் நன்றிகள்.

***********
அரங்கசாமி அவர்கள் வரவேற்புரை வழங்க விழா தொடங்கியது.

விழாவில் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் ஆற்றிய தலைமையுரையில் 'வழக்கமான விழாக்களைப் போலில்லாமல், ஏதோ விருது கொடுத்தோம் என்று இருந்து விடாமல் அந்தப் படைப்பாளியோடு இரண்டு நாட்கள் கலந்துரையாடி, அவரின் படைப்புக்களுக்கு பெருமை சேர்ப்பதே இந்த விழாவின் சிறப்பு' எனக் குறிப்பிட்டார்.

 
பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அவர்கள் விழாவில் கலந்து கொள்ளவில்லை. அவரின் கவிதையை, ஆவணப் பட இயக்குநர் ரவி சுப்ரமணியம் அவர்கள் பாடினார். அரங்கத்தைக் கட்டிப் போட்ட கணீர் குரல். இறந்து போன தன் தந்தை பலிச்சோறு கேட்பதாக இருக்கும் கவிதை. ஓரிடத்தில், கவிதை வரிகள் காதில் விழாமல், அந்தக் குரலின் பின்னாலே போய்க் கொண்டிருந்தேன். கடல் அலை நம் காலைத் தழுவிக்கொண்டு திரும்பும்போது, நம்மையும் உள்ளே இழுப்பது போல அந்தக் குரலின் பின்னாலே போக நேர்ந்தது.

இயக்குநர் பாலா அவர்கள் பேசும்பொழுது, நந்தா படம் தவிர தனது மற்றைய படங்கள், எழுத்தாளர்களின் ஆக்கங்களில் இருந்தே பிறந்தது என்று பேசினார். 'சினிமா ஒன்றும் தீண்டத்தகாத துறை அல்ல. எழுத்தாளர்கள் சினிமாவுக்கு வர வேண்டும்' என்ற தன் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.

சுரேஷ்குமார இந்திரஜித் அவர்கள், தெளிவத்தை அவர்களின் கதைகள் பற்றி உரையாற்றினார். ஈழத்தில் இருக்கும் அரசியல் பற்றியும், அங்கே இருக்கும் சூழல் பற்றியும் எடுத்துரைத்து, அங்கேயும் தமிழ் மக்களிடம் 'இவன் தோட்டக் காட்டைச் சேர்ந்தவன்' என்ற பிரிவினை இருப்பதாகவும், நாம் எங்கே போனாலும் இப்படித்தான் இருப்போமா என்றும் பேசினார்.

சுரேஷ் அவர்கள், தெளிவத்தை அவர்களின் கதைகள் பற்றிப் பேசினார். அதன் பின்னர், போன முறை இந்தியா வந்திருந்த வெஸ்ட் இண்டீஸ் கிரிகெட் அணியில் இருக்கும் வீராசாமி பெருமாள் என்பவரைப் பற்றி அறிய நேர்ந்ததாகவும், நமது தமிழ் ஊடகங்கள் அவரைப் பற்றி பேட்டி கண்டு வெளியிடும் என்று தான் நினைத்திருக்க, சச்சின் இறுதி ஆட்டப் புயலில் இது எல்லாம் முக்கியம் இல்லாதவையாக மாறிவிட்டன என்று குறிப்பிட்டார். 'நமது ஊரிலேயே, கடந்த பத்து இருபது வருடங்களில் யாருக்கும் வீராசாமி பெருமாள் என்ற பெயர் இல்லாதிருக்க, எங்கோ இருக்கும் ஒரு நாட்டில் இந்தப் பெயர் கொண்டவர் இருக்க, அவரைப் பற்றி, அவரின் மூதாதையர் பற்றி நாம் அறிந்து கொள்ள ஏன் முயற்சிக்கவில்லை' என்று குறிப்பிட்டார்.

ஜெயமோகன் அவர்கள் பேசும்பொழுது, 'கொலைச் சோறு என்ற கதையில் ஒருவன், தன் தந்தையைக் கொன்ற ஒரு யானையை பழிவாங்க இருந்ததாகவும், ஆனால் பத்து நாள் அந்த யானையுடன் பழகியதில் அந்த எண்ணம் மறந்து, அந்த யானைக்கே பாகனாக மாறிவிட்டான். அதுபோல எழுத்துலகில் இயங்கிக் கொண்டிருக்கும் மூத்த படைப்பாளிகளைக்  கண்டடைவதே விருதின் நோக்கம்.' என்று குறிப்பிட்டவர், 'எங்கேயோ இருக்கும், ஒரு சிறு குழுவினர் கூட தனக்கான வரலாற்றைக் கண்டு எழுதுகின்றனர். அவர்களின் பரம்பரைகள் எங்கிருந்தன, தன் மூதாதையர்கள் பற்றிய தகவல்களை அவர்கள் சேகரிக்கின்றனர். ஆனால், நாம் நமது வரலாற்றைத் தேடித் போகவே இல்லை.' என்று கூறினார். மேலும்  'இலட்சக் கணக்கில் கடலுக்குள் செல்லும் ஆமைக் குஞ்சுகள், மேலே பறக்கும் பறவைகளிடம் தப்பி, உள்ளே கடலுக்குள் தன்னை விழுங்கக் காத்திருக்கும் மீன்களிடமும் தப்பி, இறுதியில் சில குஞ்சுகளே தப்பிப் பிழைக்கும். அதுபோல எங்கு எங்கோ சிதறி, நிறைய இன்னல்களுக்கு ஆட்பட்டு, உலகம் முழுதும் நம் மக்கள் வசித்துக் கொண்டிருக்கின்றனர்.'  என்று பேசினார்.

தெளிவத்தை ஜோசப் அவர்கள் பேசும்பொழுது, 'எங்கேயோ இருக்கும் என்னைக் கண்டடைந்து விருது கொடுத்ததற்கு நன்றி. தோட்டக் காட்டான், கள்ளத் தோணி என்றெல்லாம் எங்களைப் பேசிய மக்களிடம் 'மலையக மக்கள்' என்ற சொல்லை நாங்கள் பெற இத்தனை காலம் ஆகி இருக்கிறது. இன்னும் போராட வேண்டும்.' என்று குறிப்பிட்டவர், பாலாவின் நான் கடவுள் படம் பற்றியும், இந்திரா பார்த்தசாரதி அவர்களைப் படிக்க ஆரம்பித்தது பற்றியும் சொன்னார். 'இலங்கையில் இருக்கும் நான், இங்கே இருக்கும் எல்லா எழுத்தாளர்களைப் பற்றியும் அறிந்திருக்க, இங்கேயோ எங்களைப் பற்றி ஒன்றும் தெரியாமல் இருக்கின்றனர். இதற்கு எங்களின் புத்தகம் இங்கே கிடைக்க விடாமல் செய்யும் அரசியல் பற்றி என்ன சொல்ல?. இனிமேல் நீங்கள் எங்களைப் படிக்க வேண்டும்.' என்றும் கூறினார்.

செல்வேந்திரன் அவர்கள் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுற்றது.

***********
விழாவில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் எம்.ஏ.சுசீலா அம்மா அவர்களைச் சந்தித்துப் பேச முடிந்தது.


Thursday, December 12, 2013

விஷ்ணுபுரம் விருது 2013 - அழைப்பிதழ்

2013 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது மூத்த தமிழ்ப் படைப்பாளியான தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

நாள்: 22. 12. 2013
இடம்: நாணி கலையரங்கம், மணி ஸ்கூல், பாப்பநாயக்கன் பாளையம் கோவை
நேரம்: மாலை 6 மணி

நிகழ்ச்சிகள்

விருது வழங்குபவர்: இந்திரா பார்த்தசாரதி

தெளிவத்தை ஜோசப்பின் மீன்கள் சிறுகதைத்தொகுதி வெளியீடு
வெளியிடுபவர் பாலசந்திரன் சுள்ளிக்காடு

தெளிவத்தை ஜோசப்பின் குடைநிழல் நாவல் வெளியீடு
வெளியிடுபவர் இயக்குநர் பாலா

தெளிவத்தை ஜோசப்புக்கு பொன்னாடைபோர்த்தி கௌரவிப்பவர் சுரேஷ்குமார் இந்திரஜித்

தெளிவத்தை ஜோசப்பின் மனைவியை கௌரவிப்பவர் சுதா ஸ்ரீனிவாசன்

வரவேற்புரை கே.வி.அரங்கசாமி [அமைப்பாளர் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்]

சிறப்புரை இந்திரா பார்த்தசாரதி

வாழ்த்துரை இயக்குநர் பாலா

கவிதைபாடுதல் பாலசந்திரன் சுள்ளிக்காடு

பாலசந்திரன் சுள்ளிக்காடு கவிதை தமிழில் ரவி சுப்ரமணியன்

வாழ்த்துரை பாலசந்திரன் சுள்ளிக்காடு

வாழ்த்துரை சுரேஷ்குமார் இந்திரஜித்

வாழ்த்துரை வி சுரேஷ்

வாழ்த்துரை ஜெயமோகன்

ஏற்புரை தெளிவத்தை ஜோசப்

நன்றியுரை செல்வேந்திரன் [விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்காக]


****************


ஜெயமோகன் தளத்தில் உள்ள, தெளிவத்தை ஜோசப் அவர்களின் சிறுகதைகள்:
பயணம்

Tuesday, December 10, 2013

அரவிந்த் கெஜ்ரிவால்

"சிறு ரத்தம் குடிக்கும் கொசுவை கொன்று விட முடிகிறது, பெரு ரத்தம் குடிப்பவர்களை ஒன்றும் செய்ய முடிவதில்லை." - என்று ஒருமுறை ட்விட்டரில் எழுதினேன். ஊழல் அற்ற ஆட்சியும், நேர்மையும் கிலோ என்ன விலை என்று கேட்ட கட்சிகளையே பார்த்திருந்த நமக்கு, இப்படி இரத்தத்தை உறிஞ்சி, உறிஞ்சி கொல்கிறார்களே என்ற கோபம்  இருந்தது.

இவ்வளவு ஆண்டுகளாய் அரசியலில் இருக்கும் காங்கிரஸ் மற்றும் பிஜேபி போன்ற கட்சிகளுடன் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே, இவ்வளவு இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது 'ஆம் ஆத்மி' கட்சி.

சரி, இவ்வளவு வெற்றி பெற்ற இவர்கள், வருங்காலத்தில் நல்ல ஆட்சியைக் கொடுப்பார்களா என்று நாம் நினைக்கலாம். அதைப் பின்னர் பார்க்கலாம்.

ஆனால், இந்தத் தேர்தல், இந்திய திருநாட்டில் ஜனநாயகம் இன்னும் இருக்கிறது, மகுடிகளுக்கு மக்கள் எப்பொழுதும் மயங்க மாட்டார்கள் என இன்னுமொரு முறை உரக்க பறை சாற்றியிருக்கிறது.

அரசியல்வாதிகளே, அரசியல் சாக்கடையைத் தூர்வார நீங்கள் தயாராக இருந்தால், எங்கள் வாக்குகள் என்றும் உங்களுக்கே.

Wednesday, December 4, 2013

வீட்டுத் தோட்டத்தில்: தேன் வாழை (கற்பூரவள்ளி)

ஊரிலிருந்து தேன்வாழை மற்றும் செவ்வாழை என இரண்டு வகையான வாழைக் கன்றுகளைக் கொண்டு வந்தார் அப்பா. வைத்த கொஞ்ச நாட்களிலேயே தேன் வாழை துளிர் விட, செவ்வாழை மிகவும் தாமதமாக துளிர் விட்டது. தார் விடுவதிலும் தேன் வாழையே முந்திக் கொண்டது. இந்த வாழையை கற்பூர வள்ளி என்றும் சொல்கிறார்கள்.


தார் விட்டதும், கம்புகளை வைத்து முட்டுக் கொடுக்க எந்தச் சிரமும் இல்லாமல் வளர்ந்தது. தார் சாய்ந்து போன சாயலைப் பார்த்தால், சின்ன காற்றுக்கே விழுந்துவிடுமோ என பயந்து கொண்டிருந்தோம். அப்படி எல்லாம் நடக்காமல் கம்பு தாங்கிக் கொண்டது. சீப்புக்குச்  சராசரியாக 14 காய்கள் என, பத்து சீப்பு பிடித்திருந்தது.அவ்வப்பொழுது பக்க கன்றுகளை அறுத்து விட்டோம். இரண்டு தடவை வேப்பம் புண்ணாக்கு போட்டு,  மாதம் ஒருமுறை மீன் தொட்டி கழுவிய தண்ணீரை ஊற்றி விட்டோம்.ஒரு சீப்பில். காய் சிறிதாக மஞ்சள் நிறத்துக்கு மாறியது. இரண்டொரு நாள் கழித்து, நன்றாகப் பழுத்த பின்னர் தாரை வெட்டிக் கொள்ளலாம் என இருந்தோம். அடுத்த நாள் காலை, அந்தச் சீப்பில் ஒரு பழம் மட்டும் யாரோ சாப்பிட்டது போல, வெறும் தோல் மட்டும் இருந்தது. அணில் சாப்பிட்டு போயிருக்கும் என நினைத்துச் சுற்றிலும் பார்த்தால், மேலே வாழை இலையில் ஒரு வௌவால் தலை கீழாக தொங்கிக் கொண்டிருந்தது. எங்கே இருந்துதான் வாசம் பிடித்ததோ, இரவில் முழுப் பழத்தையும் தின்றுவிட்டு ஓய்வு எடுப்பது போல தொங்கிக் கொண்டிருந்தது.தாரை வெட்டிய பின்னரும் வௌவால் நகரவில்லை. சரி பகலில் ஏன் அதை தொந்தரவு செய்ய வேண்டும் என நினைத்து, மாலையில் இரவான பின்னர் ஒரு கம்பை வைத்துத் தட்ட பறந்து விட்டது வௌவால். அடுத்த நாள் வாழை மரத்தை வெட்டி தண்டுகளைச்  சமைக்க எடுத்துக் கொண்டோம்.

வௌவால் கடித்த சீப்பு சீக்கிரம் பழுக்க, அடுத்து வந்த நாட்களில் ஒவ்வொரு சீப்பாக பழுத்து விட்டது. சொந்தம், அக்கம் பக்கம் என ஒரே தேன் வாழை வாசம்தான். ரசாயன் உரங்கள் இல்லாமல், வீட்டுத்  தோட்டத்தில் விளைந்த பொருளின் சுவை பற்றி சொல்ல வேண்டியதில்லை.

இரண்டு, பக்கக் கன்றுகள் நன்றாக வளர ஆரம்பித்து விட்டன. இன்னும் சில மாதங்களில் அவைகளும் குலை தள்ளத் தொடங்கும்.

குலை தள்ளியுள்ள செவ்வாழை:

Monday, December 2, 2013

உயர் ரகம்

புசுபுசுவென்ற முடிக் கற்றைகள்..
இல்லையெனில்
முடியே இல்லாமல்..

பிறந்து ஒரு வாரம் என்றாலும்
பத்து, இருபது ஆயிரங்களில் விலை

உயரம், எடை, உணவு என்று
நாட்டு இனங்களை விட
வித்தியாசங்கள் நிறைந்தவை...

எனினும்
கூண்டில் அடைபட்ட உயர் ரகங்கள்
நெடுஞ்சாலை வாகனங்களில்
தவறியும் அடிபடுவதில்லை

நாட்டு நாய்களைப் போல்..

Monday, October 28, 2013

ஒன்பது மற்றும் பதினொன்றாம்(+1) வகுப்புகள் தேவையா?

பத்து மற்றும் +2 வகுப்புகள் மாணவர்களுக்கு முக்கியமானவை. அடுத்து என்ன படிக்கலாம் என இந்தத் தேர்வுகளில் வரும் மதிப்பெண்களை வைத்தே முடிவு செய்ய முடியும். பொதுத் தேர்வுகளாக இருக்கும் இந்த இரண்டு வகுப்புகளையும், மாணவர்கள் முறையே ஒன்பது மற்றும் +1 முடிந்து ஒரு வருடம் மட்டுமே(!) படித்து தேர்வு எழுத வேண்டும் என்று இருக்கிறது.

உண்மையில் ஒரு வருடம் மட்டுமா மாணவர்கள் படிக்கிறார்கள்?

தனியார் பள்ளிகளில், பத்தாம் வகுப்புப் பாடத்தை ஒன்பதாம் வகுப்பிலும், +2 பாடத்தை +1 வகுப்பிலும் எடுக்கிறார்கள். அப்படி என்றால், இந்த மாணவர்கள் இரண்டு வருடம் படிக்கிறார்கள். முக்கியமான நாட்கள் தவிர, வருடத்தின் அனைத்து நாட்களும் பள்ளி உண்டு. காலை 8 மணிக்கு முன்னரே ஆரம்பிக்கும் வகுப்புகள், மாலை வேளைகளில் தான் முடிகின்றன. சில மாணவர்கள், வீடு திரும்பிப் பின்னர் தனிப்பயிற்சி வகுப்புகளுக்கும் செல்கிறார்கள். காலாண்டு, அரையாண்டு விடுமுறைகள் கிடையாது. விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம். அதிகாலை துவங்கி, இரவு பத்து மணி வரைக்கும் படிக்கிறார்கள். திரும்ப, திரும்ப படிப்பதால்.. புத்தகத்தின் எந்தப் பக்கத்தில் என்ன இருக்கும் என்று மனப்பாடமாகத் தெரிகிறது. படிக்காத மாணவர்களுக்கு என்று பள்ளியிலேயே தனியாக வகுப்புகள் வேறு  உண்டு.

ஆக, இவர்கள் இரண்டு வருடம் முட்டி மோதிப் படிக்க, அரசுப் பள்ளி மாணவர்கள் ஒரு வருடம் மட்டுமே படித்து இவர்களுடன் போட்டி போடுகிறார்கள். ஆசிரியர்கள் இல்லாமல், அதுவும் தகுந்த ஆசிரியர்கள் இல்லாமல், நிறைய விடுமுறை நாட்களோடு, தகுந்த வழிகாட்டுதல்கள் இன்றிப் படிக்கிறார்கள். இதில் எங்கேயோ இருக்கும் தமிழகத்தின் கடைக்கோடி கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களும் உண்டு.

படிப்பது ஒன்றும் தப்பில்லை தான், ஆனால் போட்டி (அ) தேர்வு  என்று வரும்போது, பயிற்சிக் காலம் என்பது சரிசமமாக இருக்க வேண்டும் அல்லவா?.

ஒன்பது மற்றும் பதினொன்றாம் வகுப்புகள் ஒன்றும் தேவையற்றதாக இல்லை. ஆனால், அதைப் படித்தால் பொதுத் தேர்வுகளில் மதிப்பெண் பெறுவது எப்படி?. நமது நோக்கமே, நிறைய மதிப்பெண்கள் தான், அதைப் பெற 10 மற்றும் +2 வகுப்புகள் தான் தேவையே தவிர, மற்ற வகுப்புகள் தேவை இல்லை என நினைக்கின்றனர்.

பிறகு எதற்காக 9 மற்றும் +1 வகுப்புகள்?.

- அனைத்துப் பள்ளிகளிலுமே, நேரடியாக 10 மற்றும் 12ஆம் வகுப்புகளை எடுக்க ஆரம்பிக்கலாமே.

- ஒரு வருடமாக இருக்கும் பாடத் திட்டத்தை இரண்டு வருடம் படிப்பது போலச் செய்யலாமே. [ஒருவேளை எட்டாம் வகுப்பிலேயே அதையும் சொல்லிக் கொடுத்தாலும் சொல்லிக் கொடுப்பார்கள் :( ]

- 9 மற்றும் +1 வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்தினால், அதையும் கண்டிப்பாக படித்துத் தான் தீர வேண்டும்.

இவை எல்லாம் கல்வி அதிகாரிகளுக்குத் தெரியாமல் இருக்குமா, இருந்தும் ஏன் விட்டு வைத்திருக்கிறார்கள். இல்லை, அவர்கள் அப்படி இருப்பதுதான் நமது சாபமா?.

Thursday, October 17, 2013

செம்மீன் - தகழி சிவசங்கரப் பிள்ளை (நாவல்)

ஒரு கடலோரக் கிராமத்தில் நடக்கும் கதை 'செம்மீன்'. தினமும் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்று அந்த வருவாயை வைத்துப் பிழைப்பவர்கள் மீனவர்கள். சேமிப்பு என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. மீன் கிடைக்காத காலத்தில், இருப்பதை உண்டு காலம் தள்ள வேண்டியது தான். மரக்கான் சொத்து சேர்த்து வைக்கக் கூடாது, அவனுக்குத் தான் இந்த பரந்த விரிந்த கடல் இருக்கிறதே !. எப்பொழுதும்  கடல் அன்னை நம்மைக் கை விட்டுவிட மாட்டாள் என்பது அவர்களது நம்பிக்கை.

தினம் தினம் கிடைக்கும் வருவாயை செலவழித்து வரும் மீனவர்களுக்கு மத்தியில், செம்பன்குஞ்சு கொஞ்சம் வித்தியாசமானவன். சொந்தமாகத் தோணி வாங்க வேண்டும், பெரிய வீடு கட்ட வேண்டும், விதவிதமாக உண்ண வேண்டும் என ஆசைப்படுகிறான். அவன் மனைவி சக்கி-யும் பாடுபடுகிறாள். இருவரும் சேர்ந்து சேமிக்கத் தொடங்குகின்றனர். இரண்டு பெண் குழந்தைகள் இவர்களுக்கு. மூத்தவள் கறுத்தம்மா. இளையவள், பஞ்சமி. தோணி வாங்கி, நன்றாகச் சம்பாதித்த பின்னர்தான், தன் பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து வைப்பதென முடிவோடு இருக்கிறான் செம்பன்குஞ்சு.


சின்ன வயதிலேயே அந்தக் கடலோரத் துறைக்கு வியாபாரம் செய்ய வந்தவன் பரீக்குட்டி. துலுக்க சமூகத்தைச் சேர்ந்தவன். இவனிடம் கறுத்தம்மா சின்ன வயதிலிருந்தே பழகிக் கொண்டு இருக்கிறாள். வளர்ந்த பின்னர் அது காதலாக மாறுகிறது.

செம்பன்குஞ்சு தோணி வாங்க முடிவு செய்கிறான்.கொஞ்சம் பணம் பற்றாமல் இருக்கவே, யாரிடம் கடன் வாங்கலாம் என யோசிக்கிறார்கள். பரீக்குட்டியிடம் வாங்கலாம் என முடிவு செய்கிறார்கள். இவர்கள் கேட்பதற்கு முன்னரே, கறுத்தம்மா பரீக்குட்டியிடம் 'கடன் தருவாயா' எனக் கேட்டதற்கு, அவனும் மகிழ்ந்து 'நான் தருகிறேன்' என்கிறான். சொன்னவாறே, பணம் தருகிறான்.

கறுத்தம்மாவின் மேல் உள்ள காதலால்தான் அவன் பணம் தந்தான் என்பதை அறிந்த, அவளின் தாய் சக்கி, 'பரீக்குட்டி வேறு சமூகம். இது நமக்கு ஒத்து வராது. கடல் தாயின் குழந்தைகள் நாம் தப்பு செய்யக் கூடாது. நமது துறையில் பிறந்த நீ, தோணி பிடிக்கும் ஒரு மரக்கான் வீட்டுக்குத் தான் போக வேண்டும். பரீக்குட்டியும் உன்னை கல்யாணம் செய்ய முடியாது' என்றெல்லாம் அறிவுரை கூறுகிறாள். கறுத்தம்மா, தன் தாயிடம் 'ஒரு நாளும் நான் தவறு செய்ய மாட்டேன், ஆனால் பரீக்குட்டியிடம் வாங்கிய கடனைக் குடுக்க வேண்டும்' என்று கூறுகிறாள்.

இப்பொழுது, தோணி சொந்தமாக இருப்பதில், நன்றாகச் சம்பாதிக்கிறான் செம்பன்குஞ்சு. கறுத்தம்மா ஏதாவது செய்து விடுவாளோ என்று சக்கி பயந்து கொண்டே இருக்கிறாள். விரைவில் அவளுக்கு கல்யாணம் செய்ய வேண்டும் என செம்பன்குஞ்சுவிடம் சொன்னால், அவன் அதைக் காதிலேயே போட்டுக் கொள்வதில்லை. அவன் இரண்டாவதாக இன்னொரு தோணியையும் வாங்கி இருந்தான்.

செம்பன்குஞ்சு, பரீக்குட்டிக்குத் தர வேண்டிய பணத்தையும் அவனுக்குத் தருவதில்லை. திருப்பித் தருவார்கள் என்று அவன் கடன் கொடுக்கவில்லை. எந்த எதிர்பார்ப்பும் இன்றித்தான் அவன் பணம் கொடுத்திருந்தான். கையில் பணம் இல்லாமல் அவன் பாடு மிகத் திண்டாட்டமாகி விட்டது. தொழில் முன்னர் போல இல்லை அவனுக்கு.

இதற்கிடையில், செம்பன்குஞ்சு ஒரு மரக்கானைச் சந்திக்கிறான். அவன் பெயர் பழனி. தாய் தந்தை, ஏன் உறவினர்கள் கூட இல்லை. வீரம் மிக்க அவனைப் பார்த்ததும், கறுத்தம்மாவுக்கு இவனையே கல்யாணம் செய்வதென முடிவு செய்கிறான். அவனுக்குத் தாய் தந்தை இல்லாததால் அவன் நம்முடனே இருப்பான் எனக் கணக்குப் போடுகிறான் செம்பன்குஞ்சு. திருமணத்துக்கு பழனியும் சம்மதிக்கிறான்.  வேறு வழியின்றி கறுத்தம்மாவும் ஒத்துக் கொள்கிறாள்.

கல்யாணத்தன்று நடக்கும் சிறு பூசலில் 'கறுத்தம்மா கெட்டுப் போனவள். அதனால் தான் யாரும் இல்லாத பழனிக்கு மணம் முடிக்கப் பார்க்கிறார்கள்' என்ற பேச்சு எழுகிறது. இதைக் கேட்டதும் சக்கி மயங்கி விழுகிறாள். செம்பன்குஞ்சு அவர்களைச் சமாதானம் செய்து கல்யாணம் முடித்து வைக்கிறான். சக்கியோ இன்னும் மயங்கி மயங்கி விழுகிறாள். இந்த நிலையில், 'கறுத்தம்மாவை அழைத்துச் செல்ல வேண்டாம், சக்கி சரியானதும் கிளம்பலாம்' என்கிறான் செம்பன்குஞ்சு. பழனி மறுத்து விடுகிறான். கறுத்தம்மா தாயின் முகம் பார்க்க, 'இங்கயே இருந்து அந்த பரீக்குட்டியை பார்த்துக் கொண்டே இருக்கலாம் என நினைக்கிறாயா?' என்கிறாள். உடனே அவளும் நான் பழனியுடன் புறப்படுகிறேன் என்கிறாள். எவ்வளவோ சொல்லியும் கிளம்பும் தன் மகளை, 'இனி நீ என் மகளே இல்லை' என்கிறான் செம்பன்குஞ்சு.

****************

சொந்தத் துறையில் அவள் கெட்டுப் போனதால்தான், அவளைக் கல்யாணம் செய்து வைத்து பழனியுடன் அனுப்பி விட்டான் செம்பன் குஞ்சு என பழனியின் ஊரில் பேசிக் கொள்கிறார்கள். சக்கியோ கொஞ்ச நாளில் 'நீ இன்னொரு பெண்ணைக் கட்டிக்கோ' என செம்பன்குஞ்சுவிடம் சொல்லிவிட்டு உயிரை விடுகிறாள். அவன் மறு கல்யாணம் செய்தானா? கறுத்தம்மா தன் தாயின் இறப்புக்கு வந்தாளா? சிறு பெண் பஞ்சமி என்ன ஆனாள்?

"தோணி ஓட்டிச் செல்லும் மரக்கானின் உயிர், கரையில் உள்ள அவனின் மனைவியின் கையில் தான் இருக்கிறது. அவள் நெறி தவறிப் போனால், கடல் அன்னை பொறுக்க மாட்டாள். அவனை விழுங்கி விடுவாள்" என்பது அந்த மக்களின் நம்பிக்கை. உயிருக்குப் பயந்து, அவனை இப்பொழுது யாரும் தோணியில் சேர்த்துக் கொள்வதில்லை. அவனுடன் சேர்ந்து நாமும் பலியாக வேண்டுமே எனப் பயப்படுகிறார்கள். தனியனான அவன் என்ன செய்தான்?

கரையில் பாடிக் கொண்டிருக்கும் பரீக்குட்டி, கறுத்தம்மாவை மறந்து விட்டானா? நட்டம் இல்லாமல் தொழிலை அவன் நடத்திக் கொண்டிருக்கிறானா? பரீக்குட்டியிடம், செம்பன்குஞ்சு வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்தானா?

மனதில் ஒருவனை நினைத்துக் கொண்டிருந்த கறுத்தம்மா, தனது குலத்தின் நீதிகளுக்கு இணங்க பழனியைக் கல்யாணம் செய்து கொண்டாள். பரீக்குட்டி இன்னும் அவள் நினைவில் இருக்கிறானா? எத்தனை நாள் மூடி வைத்தாலும் ஒருநாள் வெளியே வரத்தான் போகிறதே எனப் பயந்தாளா? . பழனியிடம், பரீக்குட்டி பற்றிச் சொன்னாளா?.

ஊரார் தன் மனைவியைப் பற்றித் தவறாகப் பேசும்பொழுது பழனி என்ன செய்தான்?. கடலுக்குள் மீன் பிடிக்க போக அவன் என்ன செய்தான்?. மாமனார் செம்பன்குஞ்சுவை அவன் போய்ப் பார்த்தானா?. வேறு பையனிடம் கறுத்தம்மா பழகி இருக்கிறாள் என்பதை அறிந்த அவன் அவளிடம் அவனைப் பற்றி கேட்டானா?

நாவலைப் படித்துப் பாருங்களேன்.


செம்மீன் - தகழி சிவசங்கரப் பிள்ளை
தமிழில் - சுந்தர ராமசாமி

Wednesday, October 9, 2013

சினிமா - சிட்டி லைட்ஸ்(City Lights - Charlie Chaplin)சார்லி சாப்ளினின் படைப்புகளில் மிக முக்கியமான படைப்பு சிட்டி லைட்ஸ். அடுத்தவனைப் பற்றி கவலை படாத மனிதர்களுக்கு மத்தியில், சக உயிர்களின் மீது அன்பு செலுத்துவதைப் பற்றி தம் படங்களில் போதித்தார். நகைச்சுவை என்பது சிரிக்க மட்டும் இல்லாமல் சிந்திக்கவும் செய்த மாபெரும் மனிதன். உலகை தனது நடிப்பின் மூலம் திரும்பி பார்க்க வைத்தவர்.

சிட்டி லைட்ஸ்:

ஓரிடத்தில் ஒரு கண் தெரியாத பெண்ணை சாப்ளின் பார்க்க நேரிடுகிறது. அவளை பற்றி மிகவும் கவலை கொள்கிறார் சாப்ளின். அந்த பெண் பூ விற்று தனது பாட்டியுடன் வாழ்க்கையை நடத்தி வருகிறாள் என்பதை அறிந்து கொள்கிறார்.

ஒரு நதியின் ஓரத்தில் அமர்ந்திருக்கும் பொழுது ஒரு பணக்காரன் தற்கொலைக்கு முயல, அதை தடுக்கிறார் சாப்ளின். அவரை காப்பாற்றப் போய் சாப்ளின் தண்ணிக்குள் விழுவது, பிறகு இருவரும் சேர்ந்து விழுவது, எப்படியோ இருவரும் மேலே ஏறி வருகிறார்கள். பின்னர் அந்த பணக்காரன் தனது வீட்டுக்கு சாப்ளினை அழைக்க, அவரும் செல்கிறார். போதையில் இருக்கும்பொழுது எல்லாவற்றையும் அள்ளிக் கொடுக்கும் பணக்காரன், போதை தெளிந்ததும் சாப்ளினை யார் என்றே தெரியாது என்று சொல்லிவிடுகின்றான்.

அந்தப் பணக்காரன் வீட்டில் சாப்ளின் தங்கியிருக்கும் ஒரு நாள் காலையில், அந்த வீதி வழியாக அந்த பெண் பூ விற்று கொண்டிருக்கிறாள். அவளை பார்த்ததும் அவருக்கு எல்லா பூக்களையும் வாங்க வேண்டுமென்று ஆசை. செல்வந்தனிடம் சொல்ல, அவனும் பணத்தை எடுத்து நீட்டுகிறான், அத்தனை பூக்களையும் அவரே வாங்கிக்கொள்ள, அப்பெண் மிக்க சந்தோசபடுகிறாள். உடனே சாப்ளின் உன்னை என் காரில் வீட்டில் விட்டு விடுகிறேன் என்று கூற, அவளும் சரி என்று கூறுகிறாள். அப்பெண்ணை வீட்டில் விட்டு விட்டு திரும்பி விடுகிறார் சார்லி. தவறுதலாக அப்பெண், சார்லியை மிகப் பெரிய பணக்காரன் என்று நினைத்து, மிக்க மகிழ்ச்சியுடன் தனது பாட்டியுடன் அவனைப் பற்றி கூறுகிறாள்.

பணக்காரன் வீட்டுக்கு திரும்பி வந்தால் அவனுக்குப் போதை தெளிந்து, சார்லியை விரட்டி விடுகிறார்கள். வேலை தேடி அலையும் சார்லியை, மீண்டும் பணக்காரன் சந்திக்கிறான். இப்பொழுது திரும்பவும் வீட்டுக்கு அழைக்க, இவர் மறுக்க, அவன் வற்புறுத்த, திரும்ப அவன் வீட்டுக்கு செல்கிறார். அடுத்த நாள் போதை தெளிந்ததும், வழக்கம் போல அந்தப் பணக்காரன் வீட்டில் இருந்து விரட்டப்படுகிறார்.


இரவில் பணக்காரன் வீட்டுக்கு செல்வதும், காலையில் அடித்து விரட்டுவதுமாக போகின்றன நாட்கள். ஒருநாள் அப்பெண் குடியிருக்கும் வீட்டுக்கு வாடகை கட்டாததால் வீட்டை காலி செய்ய நோட்டீஸ் குடுத்து விட்டு போய்விட்டார்கள். பாட்டி அதை அப்பெண்ணிடம் சொல்லாமல் மறைத்து விடுகிறார். அப்பொழுது அங்கே வரும் சார்லி, அதை பார்த்து விட்டு எல்லாவற்றையும் நான் பார்த்து கொள்கிறேன் என்கிறார். கூடவே, ஒரு கண் டாக்டர் ஊருக்கு வந்திருப்பதாகவும், அவரிடம் கூட்டி சென்று பரிசோதித்து கண் குறைபாட்டை போக்க தான் உதவுகிறேன் என்றும் சொல்கிறார் சார்லி. அவர்தான் பெரிய பணக்காரர் ஆயிற்றே என்று அப்பெண்ணும் மகிழ்ச்சி அடைகிறாள்.

சாப்ளின் ஒரு வேலைக்குச் செல்ல, அங்கே இருக்கும் ஆள் துரத்தி விடுகிறான். சரியென்று ஒருவன் பாக்சிங் விளையாட்டுக்கு கூப்பிட, ஒல்லி உடம்பை வைத்து கொண்டு பணத்துக்காகச் சரி என்கிறார். கடைசி வரை முட்டி மோதியும் அதிலும் தோல்வி. பாக்சிங் காட்சிகளில் நீங்கள் நிச்சயமாக சிரிப்பீர்கள்.


பணம் தேவைப்படுவதைப் பணக்காரனிடம், சொல்ல அவனும் பணம் தருகிறான். ஆனால் அங்கு நடந்த குழப்பத்தில், இவர் பணத்தை திருடி விட்டுப் போவதாக போலீஸ் சந்தேகப்படுகிறது. குடிகாரப் பணக்காரன் போதையில் உறங்கி விட்டான். வேறு வழி இல்லாமல், பணத்துடன் தப்பி விடுகிறார் சார்லி. அப்பெண்ணின் வீட்டுக்கு வந்து அப் பணத்தை கொடுத்துவிட்டு, இதை ஆபரேஷன் மற்றும் வீட்டு செலவுக்கு வைத்துகொள், நான் சீக்கிரமாக திரும்ப வருவேன் என்று கூறிவிட்டு சிறை செல்கிறார் சாப்ளின்.

சிறை வாசம் முடிந்ததும், அப்பெண் பூ விற்று கொண்டிருந்த பழைய இடத்துக்கு வருகிறார் சாப்ளின். அங்கே அப்பெண் இல்லாததைக் கண்டு வீதியில் நடக்க ஆரம்பிக்கிறார். அழுக்கான உடை, பார்த்தால் பைத்தியம் போலிருக்கும் அவரை சீண்டுகிறார்கள் தெருப் பையன்கள். அப்பொழுது கீழே கிடந்த ஒரு ரோஜா பூவை எடுக்கிறார் சார்லி.

இதை பக்கத்துக்கு கடையில் இருந்து ஒரு பெண் பார்த்து சிரித்து கொண்டிருக்கிறாள். அவள்தான் அக்கடையின் முதலாளி. கடைக்கு வரும் பணக்காரர்கள் ஒவ்வொருவர் முகத்திலும் சார்லியை தேடிக் கொண்டிருக்கிறாள் அப்பெண். அவள் வேறு யாருமல்ல, சாப்ளின் உதவிய அதே பெண்தான். அப்பெண்ணுக்கு இப்பொழுது பார்வை திரும்பி விட்டது.

அவள் சாப்ளினைக் கூப்பிட, சார்லி திரும்பி அவளை பார்த்ததும் புரிந்து கொள்கிறார். அப்பெண் சாப்ளினை அழைத்து காசு கொடுக்க வேண்டாமென்று கூறிவிட்டு கடைக்கு ஓரத்தில் கூச்சமாக நிற்கிறார். அப்பெண் காசுடன் ஒரு ரோஜா பூவையும் எடுத்து கொண்டு வா என்று கூப்பிட, சார்லி தயங்கி தயங்கி நகர்கிறார். அப்பெண் சார்லியின் கையை இழுத்து, கையில் ரோஜாவையும் காசையும் வைக்கும் பொழுது ஏதோ தட்டுப்பட, அதிர்கிறாள் அப்பெண்; தொடுதல் மூலம் இது சார்லிதான் என்று புரிந்துகொள்கிறாள்

"You ? " - அப்பெண்
"You can see now.." - சார்லி
"Yes..i can see now.. " - அப்பெண்இருவர் கண்களிலும் ஒரு ஒளி வந்தது போல இருக்கும் அக்காட்சியில். நமக்கு கண்ணில் நீர் வழிந்து கொண்டிருக்கும் போது படமும் முடிந்து விடுகின்றது.

காதலையும், காமெடியும் கலந்து நமக்கு ஒரு காவியத்தை படைத்து தந்த சாப்ளினுக்கு என்றும் தலை வணங்குவோம்.

சாப்ளின் படங்களைப்  பற்றி நான் எழுதிய பதிவுகளின் சுட்டிகள்:
சினிமா - மாடர்ன் டைம்ஸ் (Modern Times)
தி சர்க்கஸ் (The Circus)
தி கோல்ட் ரஷ் (The Gold Rush - Charlie Chaplin)


Friday, September 13, 2013

ஜே.ஜே: சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி (நாவல்)

புத்தகம் வாங்கி பல வருடங்கள் ஆனாலும்,  முதலில் முழுவதும் படிக்க முடியாமல் திணறினேன். அல்லது இப்புத்தகம் கோரும் உழைப்பை நான் கொடுக்கவில்லை. நாவல், வழக்கமான கதை சொல்லல் முறையில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது  காரணமாக இருக்கலாம். இடையில் மூன்று நான்கு தடவை திரும்ப திரும்பப் படித்தேன். படிக்கும் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு பகுதி, ஒரு வாசகம் என்னைக் கவர்ந்தது. இன்று இரவு இந்த புத்தகத்தை, மீண்டும் படித்தால் கூட எனக்கு அது புதிய வாசிப்பாகவே இருக்கும்.

பாலு என்கிற வாசகன் மூலம், ஜே ஜே எனும் மலையாள எழுத்தாளரைப் பற்றிச் சொல்லிச் செல்லும் நாவல் தான் ஜே ஜே: சில குறிப்புகள். ஜே ஜே வின் பிறப்பு முதல் அவன் இறப்பு வரை, அவன் பழகியவர்கள், நண்பர்கள், காதலி, அவன்  எழுதியவை என சொல்லிச் செல்கிறது நாவல். பாலுவின் பார்வையில் நாவல்  சொல்லப் பட்டாலும், ஜே ஜே வின் வாழ்க்கைச் சித்திரமாக இருக்கிறது நாவல். 


வழக்கமான கதைப்போக்கு, வருணனைகள், கற்பனை சித்திரங்கள் என்று ஏதுமில்லை.நாவல் எழுதிப் பல ஆண்டுகள் ஆனாலும், இன்றைய சூழலுக்கு மிகப் பொருந்திப் போகிறது. ஓரிடத்தில் இப்படி வருகிறது 'என் கவிதையை ரசிக்க கூடிய ஒரு வாசகன் கிடைத்து விட்டான்  என்ற சந்தோசத்தில் இருந்தேன். அடுத்த நிமிடமே சட்டைப் பையில் இருந்து அவன் ஒரு கவிதையை எடுத்து நீட்டினான்'.

இன்னொரு இடத்தில 'சிவகாமி அம்மாளின் சபதம் நிறைவேறி விட்டதா?' என்று ஜே ஜே கேட்பது போல வருகிறது. தான் வரைந்த ஓவியத்தில் சூரியன் இல்லை என்று ஒருவர் சொல்ல, 'சூரியன் வானத்திலிருக்கும் என நம்புகிறேன்' என்று சொல்கிறான் ஜே ஜே. முற்றிலும் தமிழ் வார்த்தைகளை மட்டும் கொண்ட,  'பொங்குமாக்கடல்'  பத்திரிகையின் ஆசிரியரான தாமரைக்கனி ஜே ஜே என்ற வார்த்தைகளைக் கூட 'சே சே' என்றுதான் போடுவேன் என்கிறார்.

நாவலில் இருந்து சில வரிகள்;

*******************

எல்லாவற்றையும் நன்றாகப் பார்க்க, அது அதற்கான இடைவெளி தேவைப்படுகிறது. சில சமயம் காலத்தின் இடைவெளி. சில சமயம் தூரத்தின் இடைவெளி.

*******************

பாதைகள் என்று எதுவுமில்லை. உன் காலடிச் சுவடுகளே உனக்கான பாதையை உருவாக்குகிறது.

*******************

என்னதான் வேதனை என்றாலும், என்னதான் துன்பம் என்றாலும் எப்போதும் சில பறவைகள் சூரியனை நோக்கியே பறந்து செல்வதை என்னவென்று சொல்ல. இராப் பகல், ஓய்வு ஒழிவு இல்லாமல் பறக்கின்றன அவை. முன்செல்லும் பறவைகள் கருகி விழுவதைக் கண்ணால் கண்டும், அதிக வேகம் கொண்டு பறக்கின்றன. பறத்தலே கருகலுக்கு இட்டுச் செல்கிறது என்ற பேரானந்தத்தில் சிறகடிக்கின்றன. கருகிய உடல்கள் மண்ணில் வந்து விழும்போது, கூரைக் கோழிகள் சிரிக்கக் கூடும். காகங்கள் சிரிக்கக் கூடும். சற்றுக் குரூரமான, கொடுமையான சிரிப்புதான்.

அப்போதும் சூரியனை நோக்கிப் பறக்கப் புறப்படும் பறவைகளின் சிறகடிப்பே அச்சிரிப்புக்குப் பதில்.


*******************

மனிதக் குரல் ஏற்படுத்தும் பரவசத்திற்கு மாற்றாகப் புத்தகங்கள் இருக்க முடியாது. ஏசு எழுப்பிய குரல் அவர் முன் நின்றிருந்த ஜனங்கள் மனதில் எவ்வளவு பரவசத்தை ஏற்படுத்தியிருக்கும்! அதனால்தான் மனிதன் எவ்வளவோ படித்த பின்பும், எவ்வளவோ தெரிந்த பின்பும் மற்றொரு பெரிய குரலைத் தேடிப் போகிறான். குரல் தன்னுடன் பேசுவது போல அச்சு பேசாது என்பது வாசிப்பின் ஒரு நிலையில் அவனுக்குத் தெரிகிறது.

*******************படங்கள்: இணையத்தில் இருந்து. நன்றி 


Wednesday, September 11, 2013

பேருந்து நிலையமும் ஒரு சிறுமியும்

நூறு நிமிடத்தில் கோவையை வந்தடையும் ஈரோ-100 பேருந்து ஈரோடு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. பயணச் சீட்டை வாங்கிக் கொண்டு உள்ளே சென்று அமர்ந்தேன்.

கொஞ்ச நேரத்தில் ஒரு சிறுமி, கையில் சிறிய ஜெராக்ஸ் தாள்களுடன் ஏறினாள். எண்ணெய் காணாத தலையும், அழுக்கு உடையுமாக இருந்தவள், எல்லோரிடமும் அந்தத் தாள்களை நீட்டிக் கொண்டிருந்தாள். ஒரு சிலர் வாங்கிக் கொண்டார்கள். சிலர் முகத்தை திருப்பிக் கொண்டார்கள். எனக்குப் பக்கத்து இருக்கையில் இரண்டு இளைஞர்கள் இருந்தார்கள்.  அவர்களிடம் தாளைக் கொடுத்தவள், அப்படியே பின்னால் சென்றாள்.

திரும்பி வரும்பொழுது, இந்த இரண்டு இளைஞர்களும் ஒரு பத்து ரூபாய்த் தாளை அவளுக்கு கொடுத்தார்கள். இந்தப் பக்கம் திரும்பியவள், என்னிடமும் அந்த தாளைக் காட்டினாள். நான் இல்லை என்று மறுக்க, உடனே அவள் எழுதி இருந்ததைக் காட்டினாள். வழக்கம் போல, வாய் பேச முடியாத சிறுமி இவள், இவளுக்கு உதவி செய்யுங்கள் என்ற வாசகத்தோடு, நன்கொடை ரூ.10, ரூ.20, ரூ.50 என்று இருந்தது.

என்னிடம் இல்லை என்றேன். திரும்பவும் வயிற்றைத் தொட்டுக் காட்டி கேட்டாள். நான் தலையாட்டிக் கொண்டே இருக்க, அவள் என் தாடையைப் பிடித்து கொஞ்சினாள். நானும் அவளின் கன்னத்தில் ஒரு தட்டு தட்டிவிட்டு திரும்ப இல்லை என்றேன். கை ஜாடையிலேயே தனக்குப் பேசத் தெரியாது என்றாள். 

எனக்குத் தெரியும், எவனோ ஒருத்தன்(அ)ஒருத்திக்கு இவள் சம்பாதித்துக் கொடுக்கிறாள். அவன் எங்கேயோ ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு, இவள் பிச்சை எடுத்து வரும் காசை செலவழிக்கக் கூடும். இவளுக்கு  சோறாவது வாங்கிக் கொடுப்பார்களா என்பது சந்தேகம் தான். இந்தச் சிறுமிக்கு நாம் காசு கொடுக்கும் பொழுது, மீண்டும் மீண்டும் இவளை நாம் இந்த நரகத்துக்கே தள்ளிக் கொண்டிருக்கிறோம் எனத் தோன்றவும் செய்தது.

தொடர்ந்து மீண்டும் காலைத் தொட்டாள். நிமிர்ந்து என்னைப் பார்க்கும்பொழுது, இப்பவாவது இவன் குடுப்பானா என்று நினைத்திருப்பாள் போலும். அந்த இரண்டு இளைஞர்களும், 'நீங்க குடுக்காதீங்க' என்றார்கள். நான் தலையை ஆட்டிக்கொண்டே, 'ஸ்கூல்ல கொண்டு போய் விடுறேன், என் கூட வந்துறியா' என்றேன். அந்த சிறிய முகத்தில் ஒரு மூர்க்கம் வந்தது. என்ன நினைத்தாளோ, என் கன்னத்தில் ஓங்கித் தட்டிவிட்டு அடுத்த சீட்டுக்கு ஓடிப் போனாள். 

இந்தச் சிறுமிக்கு நான் ஒரு பத்து ரூபாய் கொடுத்து இருக்கலாம். ஆனால் அது அவளுக்குப் போய்ச் சேரப் போவதில்லை. முன்னரே சொன்னது போல, இவளுக்குப் பிச்சை போடுவதன் மூலம் மீண்டும் மீண்டும் அவளை இந்த நரகத்துக்கே நாம் அனுப்பி வைக்கிறோம். இந்தச் சமூகத்தில் ஒருவனாய், ஆட்சி செய்யும் அரசுகளுக்கு ஓட்டுப் போட்ட ஒருவனாய் நான் தலை குனிந்து தூங்கத் தொடங்கினேன்.Friday, September 6, 2013

ஈராறுகால்கொண்டெழும் புரவி

எழுத்தாளர் ஜெயமோகனின் ஐந்து கதைகளும், ஒரு குறுநாவலும் கொண்ட தொகுப்பு 'ஈராறு கால் கொண்டெழும் புரவி'.


ஈராறு கால் கொண்டெழும் புரவி(குறுநாவல்):

சாஸ்தான்குட்டிப்பிள்ளை தமிழ் ஆசிரியர். பேறுகாலத்தில் மனைவி இறந்து விட, தனி மரமாகிறார். சித்தர் ஞானம், சித்தர்கள் பாடல் என்று தணியாத ஆர்வம். இரண்டு வேம்பு குசிச்களை மட்டும் வைத்துக்கொண்டு, நிலத்துக்கடியில் ஊற்றை எப்படி கண்டறிகிறார்கள் என்று யோசிக்கிறார். தள்ளாத வயதில், ஒரு மலை மேல் சென்று குடில் அமைத்து 'சாமியார்' என அறியப்படுகிறார். அங்கே அவர் நட்டு வைத்த மாமரம், வளர்ந்து ஒரு காய் கூட பிடிக்காமல் இருக்கிறது. கொஞ்ச வருடங்கள் கழித்து, ஊருக்கு வருகிறார். அங்கே தான் அறிந்த, ஞானமுத்தனின் மருகளிடம் நீர் அருந்தி உயிர் துறக்கிறார். அவரின் சாம்பலை அந்த மாமரத்தின் அடியில் போட்டவுடன், அந்த வருடம் முதல் மாமரம் காய்த்து தொங்குகிறது.


இந்நாவலைப் பற்றி ஜெயமோகன்:
"என் படைப்புகளிலேயே மிக முக்கியமான சிலவற்றில் ஒன்று என நான் நினைப்பது ஈராறு கால் கொண்டெழும் புரவி. சித்தர் ஞானம் என்பதன் மீதான ஒரு விளையாடல் அது. அர்த்தமற்ற விளையாட்டல்ல. பல்வேறு மூல நூல்களின் வரிகள் அதில் பகடியாக திருப்பப்பட்டுள்ளன. திரிக்கப்பட்டுள்ளன.  அந்த விளையாட்டு வெறும் கேலி அல்ல. என்னைப் பொறுத்தவரை அது ஒருவகை பொருள் கொள்ளலே. எல்லா வாசகர்களுக்கும் நூல்களும் மொழியும் மாறி மாறி கவ்வி ஆடும் அந்த விளையாட்டு பிடி கிடைக்காது போகலாம்."
சில வரிகள் நாவலில் இருந்து;
"ஓடுவது மண்ணிலன்னா என்ன, மண்ணுக்கு அடியிலண்ணா என்ன"

"மொத்தம் ரெண்டு பூலோகம் இருக்குதுன்னு ஒரு மண்புழு நெனச்சுட்டு. ஒண்ணு அது திங்கப்போற மண்ணு. இன்னொண்ணு அது தின்னு வெளிக்கெரங்கின மண்ணு"

"ருசிச்சது உம்ம பசி அய்யா. பசிக்கப்பால் உள்ள ருசியென்ன?"அலை அறிந்தது:

வீடு வீடாகச் சென்று அத்தர் விற்கும் 'அத்தர் பாய்' பற்றிய கதை. அலை என்பது மேலேயும் போகும், கீழேயும் போகும். மேலே போன அலை கீழே இறங்க  வேண்டும் என்பது விதி. ஒரு காலத்தில், அத்தர் பாயின் தாத்தா மிகுந்த செல்வத்துடன் இருந்திருக்கிறார். ரம்ஜான் அன்று, சக்காத்து பணத்தை ஏழை மக்களுக்கு வாரி வீசிய குடும்பமாக இருந்திருக்கிறார்கள். அவ்வளவு செல்வாக்குடன் இருந்து, இப்பொழுது வீடு வீடாகச் சென்று அத்தர் விற்கும் பாய் சொல்கிறார்; 'அலை மேலேறினா கீழிறங்கணும்னு அல்லாவோட ஆணை.. கீழ எறங்குத நேரத்துல நாம வந்து பொறந்தாச்சு ... சக்காத்த வாரி எறிஞ்சு குடுத்த பாவத்துக்கு இன்னும் எத்தன தல மொற கஷ்டப்படணுமோ'.

களம்:

பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் அன்று அரங்கேற்ற நாள். தாங்கள் கற்ற கலைகளை அவர்கள் மன்றத்தின் முன்னால்  அரங்கேற்றிக் கொண்டிருந்தார்கள். நகுலன், பீமன் என முடிய.. துரோணர் அர்ச்சுனனை அழைக்கிறார். வில் விஜயனான அவன், பறந்து செல்லும் ஒரு குருவியின் தலையை வெட்டி வீழ்த்துகிறான் தனதம்பால். மகிழ்ந்த துரோணர் 'இவனைப் போல வில்லாளி யாருமே இந்தப் புவியில் இல்லை' எனக் கூற, அரங்கத்தினுள் கர்ணன் வருகிறான். பறந்து செல்லும் ஒரு குருவியின் ஒற்றைச் சிறகை அது அறியாமல் தன்  அம்பால் அறுத்து, கைக்கு கொண்டு வந்து தலைக்கு சூடிக் கொள்கிறான். அர்ச்சுனன் துடிக்கிறான். இருவரும் போர் புரிய முடிவு செய்கிறார்கள். கர்ணனின், குலம் என்ன என்று கேட்க, கோபம் கொண்ட துரியோதனன் 'இவன் என் நண்பன். எனக்குச் சொந்தமான அங்கத நாட்டுக்கு இவனை மன்னன் ஆக்குகிறேன்' என்கிறான்.


 அங்கே வரும் தேரோட்டி, தன் மகன் களத்தில் இருப்பதைப் பார்க்கிறான். கர்ணனிடம் மன்றாடி, போர் வேண்டாம் எனச் சொல்ல அவனும் சம்மதிக்கிறான். சூரியன் மறைந்ததால், சபை மரபுப் படி அரங்கம் கலைகிறது. அர்ச்சுனன், தர்மனிடம் "இவனைக் கண்டு நீங்கள் பயப் பட வேண்டாம். இவனை நாம் வெல்வோம்." எனக் கூற, தர்மனோ " தன் அறத்தால் இந்த சூதன் மகன் நம்மை நிரந்தரமாக வென்று செல்வான் தம்பி. இன்று அந்த சூதன் சம்மட்டியுடன் களத்துக்கு வந்த போது என் மனம் உவகை கொண்டது. நீயும் பீமனும் எல்லாம் உவகை கொண்டோம். ஆனால் அவன் ஒருகணம் கூட அவரை நிராகரிக்கவில்லை. அக்கணத்தில் விண்ணில் தேவர்கள் அவன் மேல் மலர் சொரிந்து விட்டார்கள்” என்கிறான்.

பழைய முகம்:

சினிமா உலகம் எப்பொழுதுமே மிகை அலங்காரத்தால் ஆனது. அந்த அலங்காரத்தை நீக்கி விட்டால், அவர்களுக்கும் காதல் உண்டு, பிள்ளைகள் உண்டு, பிரச்சினைகளும் உண்டு. தான் சிறு வயதில் பார்த்து வியந்த ஒரு நடிகையை சந்திக்க நேர்கிறது அதுவும் பாலியல் தொழில் புரிபவளாக. முதலில் அது தான் இல்லை என்று மறுக்கும் அவள்,  பின்னர் ஒத்துக் கொள்கிறாள். கூடப் பிறந்த சகோதரர்கள் தன்னை ஏமாற்றியது, கூட்டி வந்தவன் தன்னை ஏமாற்றிய கதை என எல்லாவற்றையும் சொல்கிறாள். கர்ப்பத்தை கலைக்கச் சொல்லி வாங்கிய அடிகள், பத்துக்கு மேற்பட்ட முறை கருக்கலைப்பு, கடைசியில் பிறந்த குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைபாடு என போய்க் கொண்டிருக்கிறது அவள் வாழ்க்கை. இரவு முழுவதும் அவள் நடித்த பாடல்களைச் சளைக்காமல் கேட்டுக் கொண்டே இருக்கிறாள் அந்த நடிகை.

மன்மதன்:

சிற்பங்களைப் பார்க்க ஒரு கோவிலுக்குச் செல்கிறான் கிருஷ்ணன். அங்கே ஒரே ஒரு பெண் மட்டும் பூக் கட்டிக் கொண்டிருக்க, அவளின் பேரழகை வியந்து நோக்குகிறான். அவளிடம், 'சிற்பங்களைப் பர்ர்க்க வேண்டும்' எனச் சொல்ல ஓடிப் போகும் அவள் ஒரு ஆளைக் கூட்டி வருகிறாள். அந்தப் பெண்ணின் கணவன்தான் அவன். கண் பார்வை அற்ற ராஜூ. ராஜூ சிற்பங்களைப் பற்றி விளக்குகிறான். ஒவ்வொரு சிலையையும் கைகளால் தொட்டே, அதன் அற்புதங்களைப் பற்றிச் சொல்கிறான். கொஞ்ச நேரத்தில், அந்தப் பெண் தான் சந்தைக்குப் போவதாகச் சொல்லிக் கொண்டு போகிறாள். அவளிடம் சரி என்று சொல்லி விட்டு, மீண்டும் தொடர ஆரம்பிக்கிறான் மன்மதன் சிலையைக் காட்டி, "மன்மதன் கிட்ட எந்த ஆயுதமும் கெடையாது சார்..அந்தக் கரும்பு வில்லும்.. மலரம்பும் மட்டும்தான்".அதர்வம்:

தனக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்க வழி தெரியாமல் தவிக்கிறான் பாஞ்சால நாட்டு மன்னன் துருபதன். அதர்வ வேதம் அறிந்த யாஜரை அணுகுகிறார்கள். தனக்கு ஏற்பட்ட அவமானத்தை அழிக்கும் வல்லமையோடு ஒரு மகள் வேண்டும் என்கிறான் மன்னன். முதலில் மறுக்கும் அவர்கள், அவனிடம் "குரோதம் உப்புபோல மன்னரே, அது தானிருக்கும் பாண்டத்தையே முதலில் அழிக்கும்" என்று சொல்லிப் பார்க்கிறார்கள். மன்னன் மனம் மாறுவதில்லை. இதுதான் நடக்கும் என்பதை அறிந்த அவர்கள், யாகத்துக்குச் சம்மதிக்கிறார்கள். யாகம் முடியும் தருவாயில், தேவதையின் அனுக்கிரகம்  இருப்பதாகவும், அவளே குழந்தையாக பிறப்பாள் எனச் சொல்கிறார் யாசர். நீரில் அவள் முகத்தை காட்டுகிறார். பேரழகும், கருணையும், விவேகமும் உடையவளாக அந்த பெண் குழந்தை தோன்றுகிறது. துருபதன் 'இவள் பெயர் திரௌபதி, இனி இவள்தான் பாஞ்சாலி…' என்று நடுங்கிக் கொண்டே நீரைத் தொட, பிம்பம் கலைகிறது. யாக குண்டத்தில் இருந்து அக்னி மேலெழுந்து கொண்டிருக்கிறது.


படங்கள்: இணையத்தில் இருந்து - நன்றி.

Friday, August 30, 2013

சினிமா: தி பாய் இன் தி ஸ்ட்ரிப் பைஜாமா(The Boy in the Striped Pyjamas)

யூத மக்களுக்கு, ஹிட்லர் அரசு செய்த கொடுமைகளை வைத்து பல படங்கள் வந்துள்ளன. ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட் (Schindler's List), லைப் இஸ் பியுட்டிபுல் (Life Is Beautiful)   போன்ற படங்கள் அவற்றில் சில. இந்த இரண்டு படங்களையும் போலவே, 'தி பாய் இன் தி ஸ்ட்ரிப் பைஜாமா' படமும் யூத மக்களின் துயரங்களையும், அவர்கள் சந்தித்த இன்னல்களையும் நம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறது.

எட்டு வயதுச் சிறுவன் புருனோ. அவனை விட நான்கு வயது மூத்த அக்கா அவனுக்கு உண்டு. அவன் தந்தை ஹிட்லரின் படையில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். அவன் தந்தை, பதவி உயர்வினால் வேறு ஊருக்கு மாற்றப்படுகிறார். புருனோவுக்கு இந்த ஊரையும், அவன் நண்பர்களையும் விட்டுப் பிரிய மனமில்லை. அவனது அம்மா எல்சா, அவனை சமாதானம் செய்கிறாள்.


நீண்ட தூரம் பயணித்து, புதிய இடத்துக்கு வந்து சேர்கிறார்கள். ஒரு காடு போல இருக்கும் பாதையில் அவர்களின் புதிய வீடு அமைந்து இருக்கிறது. பழைய ஊரில், தன் நண்பர்களோடு சுற்றித் திரிந்த புருனோவுக்கு தன்னந் தனியாக அமைந்து இருக்கும் இந்த வீடு பிடிப்பதில்லை. இவனுக்கோ வெளியே சுற்ற வேண்டும் என்பது ஆசை. அவனின் அக்காவோ, தனது பொம்மைகளுடன் நேரத்தை போக்குகிறாள். அவளுடன், புருனோ விளையாட விரும்புவதில்லை.

எந்நேரமும் காவல் உண்டு. பக்கத்தில் வீடுகள் இல்லை. வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது. தன் அறையில் இருந்த, ஜன்னல் மூலம், தூரத்தில் இருக்கும் சில  வீடுகள் போன்ற கட்டிடங்களைப் பார்க்கிறான். 'அங்கே பண்ணை வீடுகளில், விவசாயிகள் இருப்பார்கள்.. அங்கே எனக்கு நண்பர்களும் கிடைப்பார்கள்' என்று வீட்டில் உள்ளோரிடம் விசாரிக்கிறான். அதற்கு  அடுத்த நாளே அந்த ஜன்னல் அடைக்கப் படுகிறது.

வீட்டில் வயதான ஒரு யூத கைதி(பாவெல்) வேலை செய்கிறார். யாரும் இல்லாத பொழுது, புருனோ கீழே விழுந்து அடி பட, அவன் காயத்துக்கு அவர் மருந்து போடுகிறார். 'பயப்பட வேண்டாம்.. நாளைக்கு சரியாப் போகும்' என்கிறார் அவர். 'அது எப்படி உங்களுக்குத் தெரியும்?.. நீங்கள் டாக்டரா?' எனக் கேட்கிறான். 'ஆம், நான் டாக்டர்தான்' என்கிறார் அவர். 'நான் நம்ப மாட்டேன்.. பிறகு ஏன், நீங்கள் உருளை கிழங்கின் தோல்களை உரித்துக் கொண்டிருக்க வேண்டும்' என்று கேட்க, ஒரு நிமிடம் நிமிர்ந்து பார்க்கும் அவர்.. பேச்சை வேறு திசைக்கு மாற்றி விடுகிறார்.


புருனோவுக்கு, இன்னும் நேரம் போவதில்லை. வீட்டுக்கே வந்து சொல்லித் தரும் வாத்தியாரும், இன வரலாறு, யூத மக்களின் மீதான வெறுப்பு என்றே சொல்லித் தருகிறார். ஒரு பெரிய புத்தகத்தைக் கொடுத்து அவனைப் படிக்கச் சொல்கிறார். ஆனால், வெளியே சுற்ற வேண்டும், நிறையப் பேருடன் பழக வேண்டும் என்றே ஆவலுடன் இருக்கிறான்.

ஒருநாள் வீட்டில் யாரும் கவனிக்காத நேரம், வீட்டின் பின்னால் பழைய பொருட்கள் போட்டு வைக்கும் அறையின் ஜன்னல் வழியாக அந்தப் பக்கம் போகிறான். சிறு ஓடைகள், செடிகள் என்று அவன் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறான். அந்த இடத்தில், ஒரு முள் வேலியிட்ட சில கட்டிடங்கள் தெரிகிறது. முன்னர் அவன் ஜன்னல் வழியாக பார்த்த இடங்கள் தான். பக்கத்தில் செல்லும் போதுதான் கவனிக்கிறான், முள் வேலிக்கு அந்தப் பக்கம் ஒரு சிறுவன் அமர்ந்து இருக்கிறான். புருனோ ஹலோ என்கிறான். அவனும் பதில் சொல்கிறான்.
'என் பெயர் புருனோ'
'நான் இந்தப் பெயரைக் கேள்விப்பட்டதில்லை..என் பெயர் சாமுவேல்'
'இதற்கு முன்னர், நானும் சாமுவேல் என்கிற பேரைக் கேள்விப்பட்டதில்லை.. '
'சாப்பிட எதாவது வைத்து இருக்கிறாயா?'  என்கிறான் சாமுவேல்.
' இல்லை.. உனக்கு மிகவும் பசிக்கிறதா?.. சரி.. நீ யாருடன் விளையாடுவாய்?' எனக் கேட்கிறான் புருனோ
'விளையாட்டா ? நாங்கள் இங்கே புதிய குடிலைக் கட்டிக் கொண்டு இருக்கிறோம்' எனச் சொல்லும் சாமுவேல், வேலை செய்து கொண்டிருக்கும் எல்லாப் பெரியவர்களும் கிளம்புவதால், இவனும் தன் மண் வண்டியைத் தள்ளிக் கொண்டு ஓடுகிறான்.அடுத்த தடவை புருனோ போகும் பொழுது, சாக்லேட் மற்றும் சில தின்பண்டங்களையும் கொண்டு செல்கிறான்.
'ஏன், நீங்கள் எல்லோரும் ஒரே மாதிரியான ஆடையை அணிந்து இருக்கிறீர்கள்.. எங்கள் வீட்டிலும் பாவெல் இந்த மாதிரிதான் உடை அணிகிறார்'
'நாங்கள் யூத இனம்' என்கிறான் சாமுவேல். அப்படி என்றால், என்னவெனத் தெரியாமல் அவனைப் பார்க்கிறான் புருனோ.

புருனோவின் அம்மா எல்சா, ஒரு நாள் கடைக்குப் போய்விட்டு வந்து, வீட்டின் முன் காரை விட்டு இறங்குகிறாள். காரை ஓட்டி வந்த காவலரிடம், தூரத்தில் சிம்னி வழியாகப் போகும் புகையைக் குறிப்பிட்டு 'தாங்க முடியவில்லை.. இது என்ன எப்படி நாறுகிறது' என்கிறாள். அதற்கு அவன் 'அவர்களை எரிக்கும் போது அப்படிதான் நாறும்' என்கிறான். அதைக் கேட்டதும் பிரமை பிடித்தவளாக, கணவனுடன் சென்று சண்டை போடுகிறாள். அவனோ, இது அரசாங்க கட்டளை, அதை நிறைவேற்றுவது என் கடமை எனச் சொல்கிறான்.சில நாட்கள் கழித்து, சாமுவேல் ப்ருநோவின் வீட்டுக்கு வேலைக்கு அனுப்பப் படுகிறான். நண்பனைப் பார்த்த மகிழ்ச்சியில், அவனுக்கு சாப்பிடத் தருகிறான் புருனோ. இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது அங்கே வரும் காவலன் 'யார் இதைக் கொடுத்தது.. திருடித் தின்கிறாயா?' என்று திட்ட, 'இவன் என் நண்பன், இவன்தான் கொடுத்தான்' என்கிறான் சாமுவேல். 'என்ன.. இவன் உன் நண்பனா?' என்ற காவலன், புருநோவிடம் 'இவனை உங்களுக்கு முன்னரே தெரியுமா?' எனக் கேட்கிறான். 'இல்லை.. இதற்கு முன்னர் நான் இவனைப் பார்த்ததில்லை' என்கிறான் புருனோ. 'திருடுவது தவறு.. அதற்கு உரிய தண்டனையை அடைய வேண்டும்.. நீங்கள் வாருங்கள், போகலாம்' என்றவாறு, புருனோவை அவன் அழைத்துச் செல்கிறான். தன் அறைக்குச் சென்று அழும் புருனோ, திரும்ப சாமுவேலைப் பார்க்க ஓடி வர,அங்கே அவன் இல்லை.

இரண்டு மூன்று முறை அந்த கம்பி வேலி அருகில் போய்ப் பார்க்கிறான் புருனோ. இரண்டு நாட்கள் கழித்து சாமுவேல், அங்கே கண்ணில் காயத்தோடு அமர்ந்து இருக்கிறான். அவனிடம் மன்னிப்பு கேட்கும் புருனோ, நாம் மீண்டும் நண்பர்களாக இருப்போம் என்கிறான். சாமுவேலும் சரி என்கிறான்.இதற்கு இடையில் புருனோவின் அம்மா எல்சா, எப்பொழுதும் கணவனை எரித்து விடுவது போலப் பார்க்கிறாள். இந்தக் கொடுமைகளை நினைத்து அவள் நிம்மதியாய் இருப்பதில்லை. ஒரு நாள், ஒரு டாகுமெண்டரி படம் பார்க்க சில உயர் அதிகாரிகள் வருகிறார்கள். ஒரு பெரிய அறைக்குள் சென்று, அவர்கள் அமர்ந்தவுடன் கதவுகள் மூடப் படுகிறது. படம் திரையிடப் படுகிறது. முகாம்களில் எல்லா வசதிகளும் செய்யப் பட்டுள்ளது எனவும், எந்தக் குறையும் இல்லை போலவும் படத்தில் காட்டுகிறார்கள். குழந்தைகள் விளையாடுகிறார்கள். செடி வளர்க்கிறார்கள். விரும்பியதை உண்கிறார்கள். மொத்தத்தில் சந்தோசமாக இருக்கிறார்கள், என விளக்குகிறது படம். ஒரு சேரின் மேலே ஏறி இந்தப் படத்தை பார்த்து விடுகிறான் புருனோ. சாமுவேல் இருக்கும் இடத்திலும் இந்த மாதிரிதான் இருக்கும் என அவன் மனது நினைக்கத் தொடங்குகிறது.

புருனோவின் பாட்டி இறந்து விட, இறுதிச் சடங்குக்குச் சென்று வருகிறார்கள். புருனோ, சாமுவேலிடம் 'நீ ஏதாவது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டிருக்கிறாயா?'.. ' இல்லை, இங்கே வந்ததும் என் தாத்தாவும் பாட்டியும் இறந்து விட்டார்கள்.. பின்னர், அவர்களைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது' என்கிறான் சாமுவேல்.

 
வீட்டிலோ, எல்சா கணவனுடன் சண்டை போடுகிறாள். என்னால் இங்கே இருக்க முடியாது, நாங்கள் கிளம்புகிறோம் என்கிறாள். அடுத்த நாள் காலை, சிறுவர்கள் இருவரையு  அழைத்துப் பேசும் புருனோவின் அப்பா, 'அம்மா இங்கே இருக்க மறுக்கிறாள். எனக்கு இங்கே கொஞ்சம் வேலை இருக்கிறது, முடித்துவிட்டு வருகிறேன். நீங்கள் அத்தை வீட்டில் சென்று கொஞ்ச காலம் இருங்கள்' என்கிறார். புருநோவுக்கு, திரும்பவும் ஒரு நண்பனை இழக்க வேண்டுமே எனக் கவலை ஏற்படுகிறது.

சாமுவேலிடம், நான் ஊரை விட்டுப் போகப் போகிறேன் எனச் சொல்கிறான். அவனோ, என் அப்பாவை காணவில்லை, எங்கே தேடுவது எனத் தெரியவில்லை என்கிறான். 'சரி நான் உனக்கு உதவுகிறேன்.. உன்னைப் போல எனக்கு ஒரு பைஜாமா கொண்டு வந்து கொடு.. இருவரும் சேர்ந்து உன் அப்பாவைத் தேடுவோம்' என்கிறான் புருனோ.


 அடுத்த நாள், கொஞ்ச நேரம் விளையாடி விட்டு வருகிறேன்.. என எல்சாவிட்ம் சொல்லி விட்டு அந்த முள் வேலிக்கு போகிறான். அங்கே, ஒரு பைஜாமா மேல் இன்னொரு பைஜாமா போட்டுக் கொண்டு, அவனுக்காக காத்திருக்கிறான் சாமுவேல். அவனைப் பார்த்ததும் ஒரு பைஜாமாவைக் கழட்டி, புருனோவுக்குத் தருகிறான். அவனும் அதை அணிந்து கொண்டு, கம்பிக்கு கீழே மண்ணைத் தோண்டி அந்தப் பக்கம் போகிறான் புருனோ. உள்ளே சென்றதும், சாமுவேலின் அப்பாவைத் தேடத் தொடங்கி ஒரு அறைக்குள் செல்கிறார்கள். உடனே, அங்கே வரும் ஒரு காவலர் எல்லாரையும் இன்னொரு அறைக்கு கூட்டிச் செல்கிறார். அந்தக் கூட்டத்துக்குள் மாட்டிக் கொள்ளும் இருவரும், கும்பல் செல்லும் வழியிலே நகர்கிறார்கள். இன்னொரு அறைக்கு வந்ததும், உடையை கழட்டச் சொல்லவும், எல்லோரும் அந்த பைஜாமாவைக் கழட்டி விட்டு.. இரும்புக் கதவு போடப் பட்ட ஒரு இடத்துக்குப் போகச் சொல்கிறார்கள். அங்கே அனைவரும் சென்றதும், அந்தக் கதவு தாழிடப் படுகிறது. மேலிருந்து, விஷ வாயு செலுத்தப்படுகிறது.

புருனோவைக் காணாமல் தேடிக் கொண்டிருக்கும், அவன் அப்பா அந்த அறையையே பார்த்துக் கொண்டிருக்கிறார். முள் வேலிக்கு அந்தப் பக்கம், அவன் போட்டுவிட்டுச் சென்ற துணிகளைப் பார்த்து  அழுது கொண்டிருக்கிறார்கள் அம்மாவும், அக்காவும்.

Tuesday, August 20, 2013

குறும்படம்: ஆந்தை பாலத்தில்.. (An Occurrence at Owl Creek Bridge)

(மெல்லிய இதயம் கொண்டவர்கள் இந்தப் படத்தை பார்ப்பதைத் தவிர்க்கவும்.)

இந்தக் குறும்படம் பற்றி, இரண்டு மூன்று வருடங்கள் முன்பு எங்கேயோ படித்து, பார்த்திருக்கிறேன். குறும்படம் பற்றித் தேடிக் கொண்டிருக்கும்பொழுது, இந்தப்  படம் நினைவுக்கு வந்தது. மனதை மிகவும் பாதிக்கும் படம்.

ஒரு ஆற்றின் மீது ஆந்தைப் பாலம் அமைந்து இருக்கிறது. ஒரு குற்றவாளியைத் தூக்கில் போடுவதற்காக, ஆந்தைப் பாலத்தின் மீது அவனைக் கொண்டு செல்கிறார்கள். எல்லோரும் ஆயத்தமாக இருக்கிறார்கள். தூக்கு கயிறு இறுக்கப்படுகிறது. அப்பொழுது, தூக்கு கயிறு அறுந்து, குற்றவாளி ஆற்றில் விழுந்து விடுகிறான்.

கயிற்றில் இருந்து தப்பிய அவன், ஆற்றில் நீந்த ஆரம்பிக்கிறான். உடனே, சுற்றி இருக்கும் காவலர்கள் துப்பாக்கியால் அவனைச் சுடுகிறார்கள். கரையில் இருந்து அவனைச் சுட்டுக் கொண்டே துரத்துகிறார்கள். அவன் நீந்திக் கொண்டே இருக்கிறான்.

ஒரு சமவெளியை அடைந்து, காடு தோட்டம் என்று ஓடிக் கொண்டே இருக்கிறான்.

இறுதியில், ஒரு வீட்டில் இருந்து ஒரு பெண் வெளியே வருகிறாள். அவனின் மனைவியாகவோ அல்லது காதலியாகவோ இருக்கலாம். தூரத்தில் அவன் ஓடி வருவதைப் பார்த்து, அவளும் அவனை நோக்கி வருகிறாள். அவன், தனது இரு கைகளையும் அவளை நோக்கி அணைக்க ஓடி வருகிறான். பக்கத்தில் வந்ததும், அவளின் முகத்தை தன் இருகைகளால் ஏந்துகிறான்.

அதே சமயம், அவனை அந்தத் தூக்கு கயிறு இறுக்குகிறது. ஆம், அவன் தூக்கில் இருந்து தப்பிக்கவும் இல்லை. ஓடிப் போகவும் இல்லை.

ஒரு கண நேரத்தில் அவன் கண்ட கனவாக இருக்கலாம் அல்லது அவன் தப்பிக்க நேர்ந்து இருந்தால் இப்படிக் கூட நடந்து இருக்கலாம்.

கனவுக்கும், நிகழ்வுக்கும் இடையில் தானே நாம் வாழ்ந்து வருகிறோம். நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்று.


An Occurrence at Owl Creek Bridge


An Occurrence at Owl Creek Bridge from Jaime Puente on Vimeo


 

Wednesday, August 14, 2013

வீட்டுத் தோட்டத்தில்: அவரைக்காய்

ஊரில் இருந்து அப்பா தான் இந்த அவரை விதைகளைக் கொண்டு வந்தார். வழக்கமாக கடைகளில் கிடைக்கும் பட்டை அவரை போல பச்சை நிறத்தில் இல்லாமல் கொஞ்சம் வேறு நிறத்தில் இருக்கும். இந்த அவரையை ஊரில் "ஊர் அவரை" என்று சொல்வார்கள். அந்த அவரையைக் காட்டிலும், சுவையிலும் இதன் சுவை நன்றாக இருக்கும்.

சீசன் நேரங்களில் நன்றாக காய்க்கும். நான்கு ஐந்து மாதங்களுக்கு முந்திய செடியில் நிறைய காய்கள் பிடித்தது. மூன்று  வாரத்திற்கு, இரண்டு கிலோ பக்கம் கிடைத்தது.இப்போது இருக்கும் இந்தச் செடி, பின்னர் விதை போட்டு வளர்த்தோம். பக்கத்தில் இருக்கும் மருதாணிச் செடி மீது படர்ந்து விட்டது. ஒரு கயிற்றில் அவரைக் கொடியை, மொட்டை மாடியில் இழுத்து விட்டார் அப்பா. மாடியில் நன்றாகப் பரவியது. கிடு கிடுவென வளர்ந்து, கடந்த ஒரு மாதமாக காய்கள் பிடிக்கின்றன. வாரத்துக்கு ஒரு கிலோ அவரை கிடைக்கிறது.

எந்த மருந்தும் அடிக்காமல், நன்றாகவே காய்க்கிறது. எல்லா நாளும் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்காத காய் கறிகளை உண்ண முடியாமல் போனாலும், நம் வீடுகளில் கிடைக்கும் காய்களின்  மூலம் சில நாட்களாவது சுத்தமான காய்களை நாம் பெறலாம்.

Tuesday, July 30, 2013

சிறுநுரை போல...

காமந் தாங்குமதி யென்பேர் தாமஃ
தறியுநர் கொல்லோ வனைமது கையர்கொல்
யாமெங் காதலர்க் காணே மாயிற்
செறிதுளி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க்
கல்பொரு சிறுநுரை போல
மெல்ல மெல்ல இல்லா குதுமே.

(குறுந்தொகை, கல்பொரு சிறுநுரையார்)

***************

பிரிவை தாங்கிக்கொள்
என்பவர்கள்
தாங்கள் அதை
அறிந்தவர்கள்தானா ?
அத்தனை வல்லமை
உடையவர்களா ?
நான் என் தலைவனை காணேன்
என்றால்
துயர் நிரம்பிய நெஞ்சத்துடன்
நீர்விரிவிலிருந்து வந்து
கல்லில் மோதி மறையும்
சிறுநுரை போல்
மெல்ல மெல்ல இல்லாமலாவேன்.

- ஜெயமோகன், சங்க சித்திரங்கள்Wednesday, July 17, 2013

குழந்தைகளுக்கு நேரமில்லை

குழந்தைகள், இப்பொழுது குழந்தைகள் இல்லை
பள்ளியில் இடம்  வேண்டி
ஆறு மாத குழந்தைக்கு
விடிய விடிய வரிசையில் நிற்கிறோம்

ஆறு மணிக்கு எழுந்து
காலைக் கடன்களை முடி
ஏழு மணிக்கு குளி 
எட்டு மணிக்கு வீதியில்
பள்ளி வண்டி நிற்கும்
அதற்குள் சாப்பிட்டு முடி

படிப்பது பாலர் வகுப்பு என்றாலும்
அரை மணி நேரம் பயணம் செய்து
பள்ளிக்கூடம் செல்
கேட்ட கேள்விக்கு பதில் சொல்
தமிழில் பேசாதிருப்பது முக்கியம்

அவனைவிட அதிக மதிப்பெண் எடு
காலையில் அடைத்து வைத்ததை
மதியம் சாப்பிடு
அவ்வபொழுது இயற்கை உபாதைகளை அடக்கி
நேரத்துக்கு செல்
வாரத்தில் ஒருநாள் மட்டும்
அரை மணி நேரம் பி.டி. நேரத்தில் விளையாடு

மாலை ஓய்ந்து வா
ஏதாவது தின்று தண்ணீர் குடி
மீண்டும் வீட்டுப் பாடங்களை எழுதிப் படி
டியூசன் போ.. அங்கும் படி
சனி, ஞாயிறும் டியூசன் இருக்கும்.
கொஞ்சம் நேரம் கிடைத்தால்
டி.வி பார்
கராத்தே, இசை, நடன வகுப்புகளில் சேர்..

அக்கம் பக்கத்தில் பேச நேரமில்லை
விளையாட்டு.. மூச்.
நேரத்துக்கு சாப்பிடு
நேரத்தில் தூங்கு
காலையில் நேரத்தில் எழ வேண்டும்.

பெரியவர்கள் போலவே
உங்களுக்கும் நேரமில்லை
குழந்தைகளே..


Friday, July 12, 2013

புல் வெளியில் ஒரு கல் - கவிஞர் தேவதேவன்

காட்டுச் செடிகாக்கை திருடி வைத்திருக்கும் வடையோ
அதைப் பறிக்க நினைத்த நரியோ
அல்ல

மர்மமான துக்க இருள் நடுவே
ஒரு காட்டுச் செடி
தூய்மையின் வண்ணத்துடன்
பூக்கிறது ஒரு சின்னஞ்சிறு தேன்மலர்
ஆக மெல்லிய அதன் மணக் கைகள்
தட்டுகின்றன எல்லோர் கதவையும்

*************************
நீர்ப்பயம்


நாய் கடிக்காது பார்த்துக்கொள்
அதிலும் வெறிநாய் கடித்தால்
பேராபத்து
அந்த வெறிநாய் போலே
ஊளையிட்டுத் திரிவாய்
தண்ணீர் அருந்த இயலாது
தொண்டை நரம்புகள் தெறிக்கும்
அப்புறம் தண்ணீரைக் கண்டாலே
அலறித் துடிப்பாய்
மரணத்தில்தான் உனக்கு விடுதலை
ஆகவே
நாய்க்கு வரும் நோய்பற்றிக்
கவலை கொள்
நாய் பற்றிக் கவலை கொள்

*************************
புல்வெளியில் ஒரு கல்புல்வெளி மீது சிறு குருவி வந்திறங்கித்
தத்திய காட்சி, அழிந்து
புல்வெளிமீது  ஒரு கல் இப்போது.
மனிதச் சிறுவன் ஒருவனால்
அந்தப் பறவை நோக்கி எறியப்பட்ட
கல்லாயிருக்கலாம் அது.

இப்போது புல்வெளி இதயம்
வெகுவாய்த் துடிக்கிறது
கூடுதல் மென்மையால்
கூடுதல் அழகால்.

*************************

கவிஞர் தேவதேவன் அவர்களின் 'புல் வெளியில் ஒரு கல்' கவிதைத் தொகுப்பிலிருந்து.

Wednesday, July 10, 2013

சினிமா: தி சைக்ளிஸ்ட் (The Cyclist)

ஏழையாய் இருப்பது கொடுமை. அதிலும், இன்னொரு நாட்டில் அகதியாய், ஏதும் செய்ய  இயலாமல் இருப்பது அதை விட கொடுமை.  ஈரான் நாட்டில், ஆப்கன் அகதியாய்த் தங்கி இருக்கும் ஒரு குடும்பத்தைப் பற்றிய கதை இது. இந்தப் படத்தின் இயக்குநர்  மோசென் மக்மல்பப்.கணவன், மனைவி மற்றும் ஒரு பையன் என சிறு குடும்பம் தான். மனைவி, மிகுந்த உடல் பிரச்சினை காரணமாக, மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருக்கிறார். தினமும் இவ்வளவு செலவாகும் என்று மருத்துவமனையில் சொல்கிறார்கள். கையில் கொஞ்சம் கூட பணம் இல்லை. இருக்கும் கொஞ்சம் பணமும் ஆப்கன் நோட்டுகளாக இருக்கிறது. வேலை தேடிப்  போனாலும் அவ்வளவு பணம் கிடைப்பது கஷ்டம்.  ஆப்கன் அகதிகளுக்கு மிக குறைந்த சம்பளமே குடுப்பார்கள்.

அப்பாவும், பையனும் சேர்ந்து கிணறு வெட்டுவார்கள். ஆனால் அந்த வேலைக்கும் அடிதடி. தங்கள் நண்பரான, சர்கஸில் மோட்டார் பைக் ஓட்டும் நண்பரைத் தேடிச் செல்கிறார்கள். முதல் நாள் மருத்துவமனையில் சேர்க்க உதவி செய்யும் அவர், வேலை வாங்கித் தர முயற்சிக்கிறார்.

அந்த நண்பர், ஒரு சர்கஸ் ஏஜென்டிடம் அழைத்து செல்கிறார். "இவர் ஆப்கன் நாட்டில் சைக்கிள் சாம்பியன். விடாமல் மூன்று நாள் சைக்கிள் ஓட்டிச் சாதனை புரிந்தவர், இப்பொழுது பணத்துக்கு மிகவும் கஷ்டப் படுகிறார். நீங்கள் உதவ வேண்டும்" என அவரிடம் சொல்ல, அந்த ஏஜென்ட் "ஏழு நாட்கள் இரவு , பகல் தொடர்ந்து சைக்கிள் ஓட்ட முடியுமா?" எனக் கேட்கிறார்; அதற்கு அவர் ஒப்புக் கொள்கிறார்.

ஏஜென்ட், சூதாட்ட நபர்களிடம் சென்று சைக்கிள் சாம்பியன் பற்றிச் சொல்லவும், அவர்களும் சரி என்கிறார்கள். ஏஜென்ட், தனது சர்கஸ் கூடாரத்தில் இருந்து பழைய சைக்கிள் ஒன்றை எடுத்துத் தருகிறார்.  சூதாட்ட நபர்கள்  பெட்டிங் பணம் கட்டுகிறார்கள்.


முதல் நாள் சைக்கிள் விடுகிறார் சாம்பியன். ஏஜென்ட், சர்கஸ் பார்க்க வருபவர்களிடம் டிக்கெட் கொடுத்து பணம் வசூல் செய்கிறான். அந்த மைதானத்தைச் சுற்றி கடைகள் முளைக்கின்றன. இரண்டு அணியினரின், ஆம்புலன்ஸ் வண்டிகளும் நிறுத்தப் படுகின்றன. நடுவர் ஒருவர் அமர்த்தப் படுகிறார். அப்பொழுதுதான், அவரின் பெயர் நசீம் என்று சொல்கிறான் ஏஜென்ட்.

மூன்றாவது நாள் இரவு, சைக்கிள் ஓட்ட முடியாமல் தடுமாறுகிறார் நசீம். எல்லோரும் தூங்கச் சென்று விடுகிறார்கள். நடுவரும், அமர்ந்தவாறே, தூங்கிக் கொண்டிருக்கிறார்.  எவ்வளவோ முயற்சி செய்தும், கண் இமைகள் கண்களை மூடிக் கொண்டு விடுகின்றன. சைக்கிளில் இருந்து கீழே விழுந்து விடுகிறார் நசீம். அப்பொழுது அங்கே ஒரு வாத்தியம் இசைத்துக் கொண்டிருக்கும் ஒரு பார்வையற்ற கலைஞன் அதைப் பார்த்து விடுகிறான்.

கீழே விழுந்ததும், நசீமின் மோட்டார் சைக்கிள் விடும் நண்பன் அங்கேயே படுத்து இருந்ததால், ஓடி வருகிறார். அங்கே வரும் ஏஜென்ட், நண்பனை சைக்கிள் விடச் சொல்கிறார். முகம் தெரியாமல் இருக்க, சால்வையை முகத்தில் போடச் சொல்கிறான் ஏஜென்ட். நண்பனும் அவ்வாறே சைக்கிள் விடுகிறார். தூக்க கலக்கத்தில் முழித்து பார்க்கும் நடுவர், அப்படியே மீண்டும் தூங்கி விடுகிறார்.ஏஜென்ட், அந்தப் பார்வையற்ற கலைஞனிடம் சென்று, "இதை வெளியே சொன்னால், நான் உன் கழுத்தை அறுத்து விடுவேன். அதோடு இல்லாமல், உனக்கு கண் தெரியும்  என்பதையும் சொல்லி விடுவேன்" என மிரட்ட,  அதற்கு, அவன் "நானும் அவன் மேல், அவன் ஜெயிப்பான் என்று பெட் கட்டி இருக்கிறேன்." எனக் கூறுகிறான்.

அந்த மைதானத்தில் கைரேகை பார்க்கும் ஒரு பெண் இருக்கிறாள். அவளுக்கு ஒரு பெண் குழந்தையும் உண்டு. ஏஜென்ட், அவளிடம் நெருங்கிப் பழகுகிறான். இந்த சர்கஸில் பணம் கிடைத்தால், நான் உன்னை கல்யாணம் செய்து கொள்வேன் என்கிறான். அவளும் சரி என்கிறாள்.

மோட்டார் சைக்கிள் ஓட்டும் நசீமின் நண்பன், தான் மோட்டார்  சைக்கிள் விடும் மரத்தாலான அந்த வட்டக் கிணற்றுக்குள் படுத்து இருக்கிறான். இரவில், நசீமுக்காக சைக்கிள் விடுவதால், தூங்கிக் கொண்டிருக்கிறான். அப்பொழுது, அங்கே வரும் அவன் முதலாளி, "நான் டிக்கெட் விற்று இருக்கிறேன். நீயோ தூங்கிக் கொண்டிருக்கிறாய். எழுந்து பைக் ஓட்டு " எனச் சொல்கிறான். முதலில் நன்றாகவே பைக் ஓடிக் கொண்டிருக்க , ஒரு கட்டத்தில் விபத்து ஏற்பட்டு அடி படுகிறார். இப்பொழுது நசீமை வந்து பர்ர்க்க, அந்த நண்பனும் இல்லை.ஒரு பக்கம், இந்த சைக்கிள் ஓட்டத்தை நிறுத்த ஒரு கும்பல் போராடுகிறது. இன்னொரு பக்கம், நசீமை சைக்கிளில் இருந்து இறங்க விடாமல் ஒரு கூட்டம். இரண்டும் எதிர், எதிர் அணியில் சூதுப் பணம் கட்டியவர்கள்.

ஐந்தாம் நாள் இரவு, நசீமுக்கு ரொம்ப முடியாமல் ஆகிறது. தீக்குச்சி போன்ற சிறிய குச்சிகளை, இமைகளுக்கு முட்டு கொடுத்து கொஞ்ச நேரம் சமாளிக்கிறார். ஆனாலும் முடியவில்லை. வாளித் தண்ணீரை வீசி அடிக்கிறார்கள். சிறுவன் ஜோமியோ, நசீமை அறைந்து கொண்டே இருக்கிறான் தூங்காமல் இருக்க. எப்படியோ அந்த இரவும் கழிகிறது.

ஆறாவது நாளும் கழிகிறது. குளுகோஸ் பாட்டிலை சைக்கிளில் மாட்டி விடுகிறார்கள்.  ஏஜென்ட், சுற்றிலும் கடை போட்டு இருப்பவர்களிடம் வாடகை வசூல் செய்கிறான். ஒரு முதியவள், நசீமுக்காக கொண்டு வந்து  கொடுக்கும் நகையை வாங்கி வைத்துக் கொள்கிறான் ஏஜென்ட்.

ஏழாவது நாள் காலையில் ஏஜென்ட், ரேகை பார்க்கும் பெண் மற்றும் அவள் குழந்தையுடன், "எதையாவது மறந்து விட்டாயா?" என்று கேட்டவாறு , சாமான்கள் ஏற்றிய ஒரு வண்டியில் ஏறி அமர்கிறான். ஆம், அவன் இங்கே சம்பாதித்த பணத்தைக் கொண்டு புது வாழ்க்கை வாழ கிளம்பி விட்டான். சிறுவன் ஜோமியோ, தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஆப்பிளை, அந்தச் சிறு பெண் குழந்தைக்கு ஓடிச் சென்று குடுக்கிறான். குழந்தைகள் இருவரும், கையசைத்து விடை பெறுகிறார்கள்.


சைக்கிள் பந்தயம் முடியும் நேரம் நெருங்குகிறது. எல்லோரும், "பந்தயம் முடிந்தது நசீம்" என்று கத்துகிறார்கள். ஆனால், நசீமோ அது காதில் விழாதவாறு தொடர்ந்து சைக்கிள் விட்டுக் கொண்டிருக்கிறார். சிறுவன், "அத்தா.. பந்தயம் முடிஞ்சுருச்சு.." என்று சைக்கிள் முன்னால் கத்திக் கொண்டு ஓடுகிறான். யாருடைய  குரலும் அவருக்கு எட்டவில்லை.

மருத்துவமனையில் இருக்கும் தன் மனைவியின் நினைவு வருகிறது. தொடர்ந்து பெடலை அழுத்திக் கொண்டே இருக்கிறார். மைதானம் முழுவதும் நிரம்பி இருக்கும் மக்கள் "பந்தயம் முடிந்தது" என்று கத்துகிறார்கள். நசீமின் சைக்கிள் இன்னும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது.


************************
* ஒரு பெரியவர் பேருந்துக்கு அடியில் படுத்துக்கொள்கிறார். பேருந்து கிளம்பும்போது, பெரியவரைக் கவனிக்கும் அவர்கள், அவரை வெளியே இழுத்து, அடிக்கிறார்கள். கூட்டத்தில் ஒருவன், அந்த பெரியவருக்கு கொஞ்சம் பணம் கொடுக்கிறான். அதைக் கவனிக்கும் நசீமும், பையனும் அது போலவே முயற்சி செய்ய, வெறும் அடி மட்டும் கொடுத்து துரத்தி விடுகிறார்கள்.

* சைக்கிள் சாம்பியனை வாழ்த்த, பள்ளிச் சிறுவர்களைக் கூட்டி வருகிறார் ஒருவர். சிறுவர்கள், சாம்பியனை வாழ்த்த ரோஜாப் பூக்களை வீசுகிறார்கள். கீழே கிடக்கும், அந்தப் பூக்களின் மேல் படாமல், சைக்கிள் விடுவார் நசீம்.

* இரவு நேரத்தில் சைக்கிள் ஒட்டிக் கொண்டிருக்கும்பொழுது, பையன் அந்த மைதானத்தில் உள்ள பெஞ்சில் தூங்கிக் கொண்டிருப்பான். பாசமுள்ள தந்தையாக, தனது மேல் கோட்டைக் கழட்டி, பையன் மேல் போட்டுவிட்டு சைக்கிள் ஓட்டுவார் நசீம்.

* கொஞ்சம் பணம் கிடைத்ததும் மருத்துவமனையில் இருக்கும் தனது அம்மாவுக்கு பணம் கட்டச் செல்வான் சிறுவன். அங்கே, இன்னும் பணம் கட்டாததால், செயற்கை சுவாசத்தை நீக்கி இருப்பார்கள். பையன் பணம் கட்டியதும், உடனே பொருத்துவார்கள். உடனே உணவும் கொடுப்பார்கள். எந்த நாடானால் என்ன, மருத்துவமனை எல்லாம் ஒன்று போலதான் இருக்கிறது.

* இன்னொரு நாள், சிறுவனும், கைரேகை பார்க்கும் பெண்ணின் பெண் பிள்ளையும் மருத்துவமனைக்கு செல்வார்கள். அந்த பெண் குழந்தையைப் பார்க்கும் நசீமின் நோயாளி மனைவி, தன் தலையிலிருக்கும் முடி கிளிப்பை, அந்தச் சிறுமியின் தலையில் குத்தி விடுவாள்.

* நம்மில் பெரும்பான்மையோருக்கு, வறுமையும், இந்த உலகத்தை எதிர்கொள்ள முடியாமையும், வாழ்க்கையில் பெரும் பாரமாக இருக்கிறது. மனைவியை காப்பாற்ற சைக்கிள் பந்தயத்துக்கு ஒத்துக் கொள்ளும் நசீம், ஏழு நாள் முடிந்தும் அந்த சைக்கிளை விட்டு வெளியே வர முடியவில்லை. அவரை வைத்து சம்பாதித்தவர்கள் எல்லாம், விட்டு விலகிப் போய் விடுகிறார்கள். நசீமைப் போல, நம்மில் எத்தனை பேர் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் இந்த வாழ்க்கை போராட்டம் நிரம்பியதாகவே இருக்கிறது.
Monday, July 8, 2013

பள்ளம்

காற்றே இல்லை எனச்
சொல்லும் இதே மனிதன் தான்
வேம்பு போன்ற மரங்களை வெட்டிவிட்டு
வீட்டைச் சுற்றிலும்
குரோட்டன்ஸ் வைத்தவன்..

ஆற்றில் நீர் இல்லாததை
'பச்..  தண்ணியே இல்லை'
எனக்கடந்து போகும்
இதே மனிதர்கள்தான்
மக்கவியலாத பொருளையும்,
கழிவு நீரையும் கொட்டுகிறார்கள்..

நீர் இல்லாதபோது,
நிறைய மணல் அள்ளலாம் எனச்
சிலர் சந்தோசப் படுகிறார்கள்..

ஆற்று நீரை
அப்படியே குடிக்காதீர்கள்
அதில் கழிவுகள் இருக்கிறது
என்று சொல்கிறார்கள்..

உழைத்து மூப்பேறிய
மூத்த தலைமுறை விவசாயியின்
ஒடுங்கிய வயிறு
போலான பள்ளங்களோடு
ஆறு அத்தனையையும்
கவனித்துக் கொண்டிருக்கிறது..

Thursday, July 4, 2013

மனம் எனும் தோணி

வாழ்க்கை - நாம் வாழ்வது. வாழ்வைப் பற்றிப் பேசும்பொழுது பெரும்பான்மையான கவிஞர்கள், படகோடு ஒப்பிடுவார்கள். கணியன் பூங்குன்றனார், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பாடலில், 'நீர்வழிப் படூம் புனை போல்' எனச் சொல்கிறார். 'வாழ்க்கை என்னும் ஓடம்.. வழங்குகின்ற பாடம்..' என்று கே.பி. சுந்தராம்பாள் அவர்கள் பாடிய பாடலையும் கேட்டு இருக்கிறோம்.

திருநாவுக்கரசர் பாடிய கீழ்க்கண்ட பாடல், பள்ளியில் படிக்கும்பொழுது மனப்பாடச் செய்யுளாக இருந்தது. இது ஒரு பக்திப் பாடலாக இருந்தாலும், சொல்லப்பட்ட உவமைகளும், பொருளும் என்னைக் கவர்ந்தவை.

மனமெனும் தோணி பற்றி மதியெனுங் கோலை ஊன்றிச்
சினமெனும் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது
மதனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா
உனையுனு முணர்வை நல்கா யொற்றியூர் உடைய கோவே.


பாடல் பொருள் எளிதில் விளங்கக் கூடியதே.

"மனம் என்ற தோணியில், மதி எனும் துடுப்பைக் கொண்டு, சினம் என்ற சரக்கை ஏற்றி இந்த வாழ்க்கை எனும் கடலில் ஓடும்போது, ஆசைகள்(பற்றுகள்) எனும் பாறையில் மோதி, நினைவிழக்கும் பொழுது உன்னை நினைக்கும் உணர்வைத் தருவாய்... ஒற்றியூர் பெருமானே"


மனம் எனும் தோணி - மனம் என்பது நிலை இல்லாதது. கணம் தோறும் அது ஆயிரம் ஆயிரம் நினைவுகளை நினைத்துக் கொண்டு இருப்பது. நீரில் செல்லும் தோணியும் அவ்வாறுதான், நிலை இல்லாமல் இருக்க கூடியது.


மதி எனும் கோல் - நாம் தடுக்கி விழும்பொழுது நம்மைக் காப்பாற்றுவது ஊன்று கோல். நமது அறிவும் அவ்வாறுதான், நமக்கு இடர் வரும்போதெல்லாம் நம்மைக் காப்பாற்றுகிறது.


சினம் எனும் சரக்கு - நாம் இறக்கி வைக்க முடியாமல், நமக்கு நாமே ஏற்றிக் கொண்ட சரக்கு இந்த சினம் மட்டுமே.


மதம் எனும் பாறை - எப்பொழுதும் நம்மைக் கீழ் நிலையிலேயே வைத்திருப்பவை, நமது ஆசைகள். அந்த ஆசைகள் பாறை போன்றவை. அதனுடன் மோதினால் நாம்தான் இழக்க நேரிடும். எனவேதான் அதனை பாறை என்கிறார்.


"இப்படியாகிய வாழ்க்கைக் கடலில் நான் தட்டுத் தடுமாறி, பாறையில் மோதி விழும்பொழுது உன்னை நினைக்கும் உணர்வை நல்காய்" என்று சொல்லும்பொழுது, அப்பரின் சொல் வன்மை நமக்கு விளங்குகிறது.

பொருள் நிறைந்த, வாழ்க்கைத் தத்துவம் நிரம்பிய அழகான பாடல்.

***********

இந்தப் பாடல் திருவொற்றியூரில் கோவில் கொண்டுள்ள சிவபெருமானைப்(தியாகராஜ சுவாமி) பற்றியது. சென்னையில் இருந்தபொழுது, ஒரு முறை இந்தக் கோவிலுக்குச் சென்றிருக்கிறேன். பழமையான, அழகான கோவில்.

கோவிலில்  இருந்து சற்று தூரத்தில் தான் பட்டினத்தார் சமாதி அமைந்து உள்ள ஆலயம் உள்ளது. கடற்கரைக்கு அருகில் அமைந்து இருந்தது. நாங்கள் சென்ற பொழுது கோவிலைப் பூட்டி இருந்தார்கள். உள்ளே செல்ல முடியவில்லை.

***********

Wednesday, July 3, 2013

இறங்கள் !!

போன வாரம் திருப்பூர் சென்றிருந்தோம். சிக்னலுக்கு காத்திருந்த பொழுது, டிவைடர் கற்களில் டி.எம்.எஸ். அவர்களுக்கு ஒரு கட்சியின் சார்பாக இரங்கல் சுவரொட்டி ஒட்டி இருந்தார்கள். அதில் கடைசியில் இப்படி ஒரு வாக்கியம் இருந்தது;

டி.எம்.எஸ். அவர்களுக்கு​ ---------
-------------------------------------------
------  (கட்சியின்) சார்பாக
இறங்கள்


இதில் உள்ள எழுத்து பிழை ஒரு பக்கம் என்றாலும், நம்மையும் இறக்கச் சொன்ன இந்தச் சுவரொட்டியைப் பார்த்து அழுவதா, சிரிப்பதா எனத் தெரியவில்லை. அழுத்தம் திருத்தமாகத் தமிழை உச்சரித்துப் , பாடிய டி.எம்.எஸ். அவர்களின் ஆவி நிச்சயம் மன்னிக்காது.

இரங்கல் - இறங்கள் !! (இரண்டு வார்த்தைகளும் ஒன்று என நம்பி சுவரொட்டி தயாரித்தவர் வாழ்க)

நாங்கள் பள்ளியில் படிக்கும் பொழுது, எங்கள் தமிழ் அய்யா அடிக்கடி ஒரு வாக்கியம் சொல்வார்;

"மாவட்ட கல்வி அதிகாரி சிற்றுண்டிச் சாலைக்குச் சென்றார்" - மேற்கண்ட வாக்கியத்தில், தெரியாமல் ஒரு கால் சேர்த்தால்;

"மாவாட்ட கல்வி அதிகாரி சிற்றுண்டிச் சாலைக்குச் சென்றார்" !!

தெரியாமல் எங்காவது இது மாதிரி சேர்த்தால், அர்த்தமே மாறிவிடும், எனவே விழிப்போடு எழுதுங்கள் என்பார்.


அதிலும் இந்த, 'ல, ள, ழ' ,  'ந, ண, ன' மற்றும் 'ர , ற' என எழுதும்  பொழுது நிச்சயம் குழப்பம் ஏற்படும். செந்தமிழும் நாப் பழக்கம் என்பது போல, படிக்க படிக்கவே இவைகள் எங்கு வரும் என்பது புலப்படும்.

பலம் - பழம் - பள்ளம் 
அவன் - தண்ணீர் - செந்நீர்
சுறா - சுரை

தமிழில் பிழை இல்லாமல் எழுத என்ன வழி (வலி!) என்றால், அதை நாம்தான் நம் பழக்கத்தின் மூலம் கொண்டு வர வேண்டும். 

Thursday, June 27, 2013

விழுதுகள்

விழுதுகள்(http://vizhudugal.org/) அமைப்பை, நண்பர்கள் இணைந்து 2008 ஆம் ஆண்டு ஆரம்பித்தோம். கடந்த வருடங்களில் எங்களுக்கு ஊக்கமும், உறுதியும் அளித்து வரும் எங்கள் நண்பர்களுக்கு அன்பு நன்றிகள்.

எங்கள் விழுதுகள் அமைப்பை பற்றி எனது பதிவுகள்;
 விழுதுகள் - நனவாகியதொரு கனவு
ஒரு விருது

இந்த வருடத்தில் நாங்கள் கீழ்க்கண்ட கிராமங்களில் எங்கள் மாலை நேர வகுப்பை எடுத்து வருகிறோம்.

1. மாரம்பாளையம்
2. மாதம்பாளையம்
3. கள்ளிபாளையம்
4. ஜெ. ஜெ. நகர்
5. நேரு நகர்
6. எம். கவுண்டம்பாளையம்
7. பெரிய கொமாரபாளையம்

இந்த ஏழு மையங்களும், பு. புளியம்பட்டியை ஒட்டியுள்ள கிராமப்புற பகுதிகள். இன்னும் இரண்டு மூன்று ஊர்களில் மையங்களை ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம். இறையருளும், நண்பர்களின் ஆதரவும் எங்களை வழி நடத்திச் செல்லும்.

சில புகைப்படங்கள்:


   (புத்தக விழாவில்.. )

   (மாரம்பாளையம் மாணவர்களுடன்...)

    (நீலிபாளையம் மாணவர்களுடன்.. )

   (ஒருநாள் சுற்றுலாவில்.. பவானிசாகர் அணை)

   (சென்னையில் நடைபெற்ற விழாவில் ஆளுநருடன்...)