Thursday, May 24, 2012

பாலாஜியின் இன்னுமொரு முயற்சி

மாணவன் பாலாஜியின் அறிவியல் ஆர்வத்தையும், அவனின் முயற்சியால் கண்டுபிடித்த சில கருவிகளைப் பற்றியும் 'ஓர் இளம் விஞ்ஞானி' என்கிற தலைப்பில் எழுதி இருந்தேன். ஆனந்த விகடனின் என் விகடனில் வெளியான வலையோசையில் பாலாஜியைப் பற்றிய இந்தப் பதிவும் இடம் பிடித்திருந்தது.

ஆனந்த விகடனில் வெளியான செய்தியை பாலாஜியுடன் பகிர்ந்து கொண்ட பொழுது, இந்த வாரத்தில் சோலார் உதவியுடன் இயங்கும் கார் ஒன்றை இப்பொழுது செய்திருப்பதாகவும், அவசியம் அதைப் பார்க்க வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தான். எனவே, நாங்கள் போன ஞாயிறு அன்று பாலாஜியின் வீட்டுக்குச் சென்றோம்.


சின்ன கார் பொம்மையில் ஏற்கனவே இருந்த பேட்டரியைக் கழட்டிவிட்டு, சோலார் பேனல் பொருத்தி, சூரிய ஒளியுடன் இயங்குமாறு மாற்றியுள்ளான் பாலாஜி. அவன் கையில் இருந்த ரிமோட்டில் கார் அங்குமிங்கும் அழகாகத் திரும்பியது. சின்ன குழந்தைகள் உட்காரும் கார் என்பதால் குழந்தைகள் போட்டி போட்டுக் கொண்டு காரை ஒட்டினர்.

மின்சாரத் தட்டுப்பாடு நிலவி வரும் இப்பொழுது, மாற்று சக்திகளை பயன்படுத்தும் பாலாஜியின் திறமை வியக்க வைக்கிறது. பாலாஜியின் அனைத்து முயற்சிகளுக்கும் தோள் கொடுக்கும் பெற்றோர், சகோதரன் என அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.



வருங்காலத்தில் பாலாஜி போன்ற மாணவர்களே இந்த உலகை மாற்றப் போகிறவர்கள். 

பாலாஜிக்கு எங்களின் நல்வாழ்த்துக்கள்.

Saturday, May 19, 2012

அவசியம் தேவை - டெர்ம் இன்சூரன்ஸ்(Term Insurance)

பெரும்பாலும் நாம் எடுக்கும் பாலிசிகள் மற்றவர்கள் சொல்லி எடுத்ததாகவே இருக்கும். அதிலும், நமது நண்பர்களோ, உறவினர்களோ இன்சூரன்ஸ் முகவர்களாக இருந்தால் சொல்லவே வேண்டாம். அவர்கள் சொன்னதுக்காகவே பாலிசி எடுத்து விடுவோம். பாலிசியில் நிறைய வகைகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி இங்கே நாம் பார்க்கப் போவதில்லை. டெர்ம் இன்சூரன்ஸ் பற்றி மட்டும் பார்ப்போம்.

இன்சூரன்ஸ் என்பது முதலீடு அல்ல என்பதை முதலில் நினைவு கொள்ளுங்கள்.


நம் ஆட்கள் முதலில் கேட்கும் கேள்வி, "இத்தனை ரூபாய் நான் பிரீமியம் கட்டினால் எனக்கு இத்தனை வருடங்கள் கழித்து எவ்வளவு கிடைக்கும்" என்பது. நானும் முதலில் இப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். அதாவது பணம் திரும்ப வரும் நோக்கில், இரண்டு மூன்று பாலிசிகளும் எடுத்திருக்கிறேன்.

இந்த வகையான பாலிசிகளில் பணம் கடைசியில் திரும்ப வரும். ஆனால் இழப்பீடு(Coverage) மிகவும் குறைவாக இருக்கும். எடுத்துக்காட்டாக, ஐம்பது ஆயிரம் பிரீமியம் என்றால் ஐந்து லட்சத்துக்குள் தான் இழப்பீடு இருக்கும். பாலிசி காலத்தில் உங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் இந்த இழப்பீடு(ஐந்து லட்சம்) கிடைக்கும். இல்லையென்றால் பாலிசி முதிர்வு காலத்தில் பாலிசிப் பணம் வரும்.

டெர்ம் இன்சூரன்ஸ் என்பது, பாலிசி முதிர்வுக் காலத்தில் பணம் திரும்பி வராது, ஆனால் இழப்பீடு அதிகமாக இருக்கும். ஐம்பது லட்சம் ரூபாய்க்கு பிரீமியம் இருபது ஆயிரத்துக்குள் தான் இருக்கும். இன்சூரன்ஸ் கம்பெனி, உங்கள் வயசு மற்றும் வருமானத்தைப் பொறுத்து இது கொஞ்சம் மாறும். 

அதிகப் பணம் செலுத்தி குறைவான இழப்பீடு பெறுவதை விட, குறைவான பணம் செலுத்தி அதிக இழப்பீடு பெறலாமே.

உங்களின் ஆண்டு வருமானத்தைப் போல பத்து மடங்குக்கு மேல் டெர்ம் இன்சூரன்ஸ் எடுத்துக்கொள்வது அவசியம். உங்களைச் சார்ந்திருப்பவர்களுக்கு, உங்களின் இழப்பு பெரிதுதான் என்றாலும், அவர்களை கொஞ்ச காலத்திற்கு கவலை கொள்ளாமல் இருக்க இந்தப் பத்து மடங்கு பணம் உதவும். நீங்கள் வீட்டுக் கடன் மற்றும் வேறு வகையில் லோன் வாங்கி இருந்தால், அதற்கும் சேர்த்து டெர்ம் பாலிசி எடுத்துக்கொள்வது அவசியம்.

எனக்குப் பணம் திரும்ப வர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு; உங்களால் வருடம் ஐம்பது ஆயிரம் பிரீமியம் கட்ட முடியும் என்றால், இருபது ஆயிரத்துக்கு டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து விட்டு, மீதி இருக்கும் முப்பது ஆயிரத்தை நீங்கள் வேறு எதிலாவது முதலீடு செய்ய முடியுமே.

ஒரு டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துவிட்டு, இன்னொரு  இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது அவசியம் - முக்கியமாக மெடிகிளைம் பாலிசி எடுக்க வேண்டும். எனவே, வாழ்நாளுக்கும் உங்களுக்கு ஒரு டெர்ம் பாலிசி மற்றும் ஒரு மெடிகிளைம் பாலிசி போதும்.

இந்த இரண்டு பாலிசிகளையும் எடுத்த பின்னர், வேண்டுமெனில் மற்ற பாலிசிகளில் முதலீடு செய்யலாம்.

குறிப்பு:
நான் இன்சூரன்ஸ் முகவர் இல்லை. இன்சூரன்ஸ் பற்றி எதுவும் தெரியாமல் இருக்கும் நண்பர்களுக்காக, எனக்குத் தோன்றியதை இங்கே பகிர்ந்துள்ளேன். நாணயம் விகடனைத் தொடர்ந்து படிப்பதால், இன்சூரன்ஸ் பற்றிய சந்தேகங்கள் இப்பொழுது இல்லை. நன்றி - நாணயம் விகடன்.

படங்கள்: இணையத்திலிருந்து - நன்றி. 


Thursday, May 17, 2012

ஆனந்த விகடன் - வலையோசையில் எனது வலைப்பதிவு..

ஆனந்த விகடனின் (23/05/2012)  'என் விகடன்' கோவை இணைப்பில் எனது வலைப்பதிவு இடம்பெற்றுள்ளது. விகடனில் என் எழுத்து வருவது இதுவே முதல் முறை. விகடனுக்கு என் நன்றிகள்.

நண்பர்களுக்கு எனதன்பு நன்றிகள்.



Thursday, May 10, 2012

புதுமைப்பித்தன்


பல வருடங்களுக்கு முன் புதுமைப்பித்தன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு ஒன்றை வாங்கினேன். புத்தக அலமாரியில் எதையோ தேடிக் கொண்டிருந்தபோது இந்தப் புத்தகம் அகப்பட்டது. நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்ட அந்தத் தொகுப்பில் பதினாறு கதைகள் மட்டும் இடம்பெற்றுள்ளது. இதுவரைக்கும் நான் படித்திராத ஒரு சொல்லாட்சியுடன், நகைச்சுவை உணர்வுடன், சிந்திக்க வைக்கும் போக்குடன் கதைகளை எழுதியிருந்தார் புதுமைப்பித்தன். அன்றுமுதல் புதுமைப்பித்தன் என்னும் பெயரைக் கேட்டாலே அவரின் கதைகள் மனதில் வந்து போயின. நாற்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவாகவே வாழ்ந்த அவரின் கதைகள் ஜீவன் உள்ளவை.

'என் கதைகளில் உள்ள கவர்ச்சிக்கு ஓரளவு காரணம் நான் புனைந்து கொண்ட புனைபெயராகும். அது அமெரிக்க விளம்பரத் தன்மை வாய்ந்திருக்கிறது.. பிறகு நான் எடுத்தாளும் விசயங்கள்; பலர் வெறுப்பது, விரும்புவது..' என்று ஒருமுறை எழுதியிருக்கிறார். அவரின் இயற்பெயர் விருத்தாசலம்.

புதிய வகையில் சிந்திக்க கூடிய கதைகளாக எழுதியிருக்கும் புதுமைப்பித்தன் அவர்களின் சில கதைகளைப் பற்றிச் சில வரிகள்.

                                             ***************************

சாப விமோசனம்

'சாப விமோசனம்' கதை, ராமாயணத்தில் வரும் அகலிகை பற்றிய கதை. கணவன் கோதமன் கொடுத்த சாபம் காரணமாக கற்சிலையாகப் போகும் அகலிகை, அந்த வழியாக வந்த ராமனின் காலடி பட்டு சாப விமோசனம் பெறுகிறாள். அப்பொழுது ராமன் குழந்தை. காலம் ஓடுகிறது. கோதமனும், அகலிகையும் தீர்த்த யாத்திரை முடிந்து அயோத்திக்குத் திரும்புகிறார்கள். ராமனும் சீதையும் பதினான்கு ஆண்டு கால வனவாசம் முடித்து இன்னும் கொஞ்ச நாளில் திரும்புவார்கள் என்ற சேதியைத் தெரிந்துகொள்கிறாள் அகலிகை.

சீதையும் ராமனும் அவர்களைச் சந்திக்க வருகிறார்கள். அகலிகையும், சீதையும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பேச்சு அக்னிப் பிரவேசம் பற்றித் திரும்புகிறது. ராமன் பிரவேசம் செய்யச் சொல்லிக் கேட்டதை அறிந்த அகலிகை மீண்டும் கல்லாகப் போகிறாள்.

அவர்களிருவரின் வார்த்தைகளை கொஞ்சம் கவனியுங்கள். புதுமைப்பித்தனின் எழுத்தாற்றல் வியக்க வைக்கும்.

"அவர் கேட்டாரா? நீ ஏன் செய்தாய்?" என்று கேட்கிறாள் அகலிகை.
"அவர் கேட்டார்; நான் செய்தேன்" என்றாள் சீதை, அமைதியாக.
"அவன் கேட்டானா?" என்று கேட்டாள் அகலிகை; அவள் மனசில் கண்ணகி வெறி தாண்டவமாடியது.

அகலிகைக்கு ஒரு நீதி, அவனுக்கு ஒரு நீதியா? ஏமாற்றா? கோதமன் சாபம் குடலோடு பிறந்த நியாயமா?

இருவரும் வெகுநேரம் மௌனமாக இருந்தனர்.

"உலகத்துக்கு நிரூபிக்க வேண்டாமா? " என்று கூறி, மெதுவாகச் சிரித்தாள் சீதை.

"உள்ளத்துக்குத் தெரிந்தால் போதாதா? உண்மையை உலகுக்கு நிரூபிக்க முடியுமா?" என்றாள் அகலிகை. வார்த்தை வறண்டது.

"நிரூபித்து விட்டால் மட்டும் அது உண்மையாகிவிடப் போகிறதா; உள்ளத்தைத் தொடவில்லையானால்? நிற்கட்டும்; உலகம் எது?" என்றாள் அகலிகை.


                                             ***************************



அன்றிரவு

இந்தக் கதை பிட்டுக்கு மண் சுமந்த சிவனின் திருவிளையாடல் பற்றிய கதை. 'அழியாச் சுடர்கள்' தளத்தில் இந்தக் கதை வெளியாகியுள்ளது.  கதையின் இறுதியில் இருக்கும் ஒரு பத்தியை மட்டும் இங்கே தருகிறேன்.

ஈசன் முகத்தில் விழுந்தது பொற்பிரம்பின் அடி. அவனது மார்பில் விழுந்தது. நெஞ்சில் விழுந்தது. அப்புறத்து அண்டத்தின் முகடுகளில் விழுந்தது. சுழலும் கிரகங்களின் மீது விழுந்தது. சூலுற்ற ஜீவராசிகளின் மீது விழுந்தது. கருவூரில் அடைப்பட்ட உயிர்கள் மீது, மண்ணின்மீது, வனத்தின் மீது, மூன்று கவடாக முளைத்தெழுந்த தன்மீது, முன்றிலில் விளையாடிய சிசுவின் மீது, முறுவலித்த காதலியின் மீது, காதலின் மீது, கருத்தின் மீது, பொய்மையின் மீது, சத்தியத்தின் மீது, தருமத்தின் மீது அந்த அடி விழுந்தது.
காலத்தின் மீது விழுந்தது. தர்மதேவனுடைய வாள் மீது விழுந்தது. சாவின் மீது, பிறப்பின் மீது, மாயையின் மீது, தோற்றத்தைக் கடந்தவன் மீது, வாதவூரன் மீது, வாதவூரன் வேதனையின் மீது, அவன் வழிபட்ட ஆசையின் மீது, அவனது பக்தியின் மீது அந்த அடி விழுந்தது. 


                                             ***************************

ஒருநாள் கழிந்தது

இந்தக் கதை, தினமும் குடும்பத்தை நடத்த படாத படும் மனிதர்களில் ஒருவர் பற்றிய கதை. மாதம் முப்பது ரூபாய் சம்பளத்துக்கு கதை எழுதி, குடும்பம் நடத்தி வரும் முருகதாசர் பற்றிய கதை. கடைக்காரன் பாக்கி, அது இதுவென்று நிறையச் செலவாகி விடுகிறது அவருக்கு. யாரிடமாவது கேட்டுப் பார்க்கலாம் என்று முயல்கிறார். ஒருவர் எட்டணாவைக் கொடுக்கிறார்.

கதையில், அவரின் மனைவி கமலத்துடன் முருகதாசர் பேசும் வரிதான் கதையின் தலைப்பு. மனைவி காப்பிப் பொடி வாங்கிவரச் சொல்கிறார்.

"அந்தக் கடைக்காரனுக்காக அல்லவா வாங்கினேன் ! அதைக் கொடுத்துவிட்டால்?"
"திங்கட்கிழமை கொடுப்பதாகத்தானே சொன்னீர்களாம்"
"அதற்கென்ன இப்பொழுது?"
"போய்ச் சீக்கிரம் வாங்கிவாருங்கள்"
"திங்கட்கிழமைக்கு?"
"திங்கட்கிழமை பார்த்துக்கொள்ளுகிறது"

                                             ***************************

கடவுளும், கந்தசாமிப் பிள்ளையும்


விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் கதை. கடவுள் கொஞ்ச நாள் மனிதனாக மாறி, இந்தப் பூவுலகுக்கு வந்து வசித்தால் என்ன நடக்கும் என்று சொல்லும் கதை. கந்தசாமிப் பிள்ளையின் இல்லத்துக்கு வந்து தங்குகிறார் கடவுள். கடவுள் அவரின் வீட்டுக்கு வரும்பொழுது, கந்தசாமியின் குழந்தை;

"எனக்கு என்ன கொண்டாந்தே?" என்று கேட்கிறது.
"என்னைத்தான் கொண்டாந்தேன்" என்கிறார் பிள்ளை.
"என்னப்பா, தினந் தினம் உன்னியேத்தானே கொண்டாரே; பொரி கடலையாவது கொண்டாரப்படாது?" என்கிறது குழந்தை.
"இதுதானா உம்முடைய குழந்தை" என்று கேட்கும் கடவுளிடம், கந்தசாமி பிள்ளை பேசத் தயங்க
"சும்மா சொல்லும்; இப்போவெல்லாம் நான் சுத்த சைவன்; மண்பானைச் சமையல்தான் பிடிக்கும், பால் தயிர் கூடச் சேர்த்துக் கொள்ளுவதில்லை" என்கிறார் கடவுள்.

இன்னொரு இடத்தில்;

கடவுள் என்ன வேலை செய்யலாம் என்று நினைத்து, பரதம் ஆடி சம்பாதிக்கலாம் என்று முடிவு செய்து தேவியையும் பூமிக்கு கூட்டி வருகிறார். அவர்களின் ஆட்டத்தைப் பார்த்த கலாமண்டலியின் தலைவர் இப்படிச் சொல்கிறார்;

"ஒய் ! கலைன்னா என்னன்னு தெரியுமாங்காணும்? புலித் தோலைத்தான் கட்டிக் கொண்டீரே. பாம்புன்னா பாம்பையா புடிச்சுக்கொண்டு வருவா? பாம்பு மாதிரி ஆபரணம் போட்டுக் கொள்ள வேணும். புலித் தோல் மாதிரி பட்டு கட்டிக் கொள்ள வேணும். கலைக்கு முதல் அம்சம் கண்ணுக்கு அழகுங் காணும்"

இறுதியில் கடவுள், "உங்களிடம் எல்லாம் எட்டி நின்று வரம் கொடுக்கலாம்; உடன் இருந்து வாழ முடியாது" என்று கூறிவிட்டு, பூமியிலிருந்து கிளம்பிப் போய் விடுகிறார்.

                                             ***************************
இன்னொரு பதிவில் அவரின் மற்ற கதைகள் பற்றி எழுதுகிறேன்.

                                             ***************************

குறிப்பு:

இப்பதிவு  என்னுடைய 200 -  வது பதிவு. அதுவும் புதுமைப்பித்தன் அவர்களைப் பற்றி எழுதியது தற்செயலே. இந்தப் பதிவுலகத்துக்கு வந்து இவ்வளவு எழுதியிருக்கிறேன் என்பதே எனக்கு அதிசயமாய் இருக்கிறது. 
தொடர்ந்து எனது பதிவுகளைப் படித்தும், பாராட்டியும் வரும் அனைத்து வாசக நண்பர்களுக்கும் எனதன்பு  நன்றிகள்.


படங்கள் - இணையத்தில் இருந்து.

Friday, May 4, 2012

சினிமா: தி பர்சுட் ஆப் ஹேப்பிநெஸ் (The Pursuit of Happyness)

யாருக்குமே மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்து விடுவதில்லை. வேலை முதற்கொண்டு முட்டி மோதி தான் மேலே வர வேண்டியிருக்கிறது. சில சமயங்களில் நாம் தேடியதை விட, வேண்டுவதை விட அதிகமாக கிடைத்து விடலாம். அது அதிர்ஷ்டம் தான். பெரும்பாலும் நாம் தேடுவது கிடைப்பதில்லை. ஆனால் அதை அடையும் வரை நாம் விடுவதில்லை. தோல்வி என்பது தள்ளிப் போடப்பட்டிருக்கும் வெற்றி என்று சொல்வார்கள். மேலே முளைத்து வரத் துடிக்கும் விதைகளைப் போலவே தானே மனிதர்களும்.

இந்தப் படத்தில்தான் வில் ஸ்மித் என்னும் மாபெரும் கலைஞனின் நடிப்பைப் பார்த்தேன். அழும் இடத்தில் நம்மையும் அழ வைக்கும் நடிகன். தனது தோல்விகளை முகத்தில் தேக்கி வைத்துக்கொண்டு, வெற்றிக்காக தவமிருக்கும் மனிதர்களை திரையில் கொண்டுவந்திருப்பார் ஸ்மித். ஸ்மித்தின் மகன் 'ஜேடன் ஸ்மித்' தான் படத்திலும் வில் ஸ்மித்தின் மகன். இதே பையன்தான் 'The Karate kid' படத்திலும் கலக்கியிருப்பான்

மகிழ்ச்சி என்பது எல்லோருக்கும் ஏன் கிடைப்பதில்லை?.  'Happiness'  என்பதுதான் சரியான ஸ்பெல்லிங். ஆனால், 'Happyness' என்று ஒரு சுவற்றில் எழுதியிருக்க கதையின் நாயகன் கிரிஷ் (வில் ஸ்மித்), 'Y' இல்லை  'i' என்று சொல்லும்போது படம் ஆரம்பிக்கிறது. நாயகன் கிரிஷ், நாயகி லிண்டா, அவர்களின் குழந்தை கிறிஸ்டோபர்.

கிரிஷ், டாக்டர்களுக்கு பயன்படும் ஒரு சின்ன ஸ்கேன் மெசினை விற்றுக்கொண்டிருக்கிறான். கொஞ்ச நாட்களாக எந்த மெசினும் விற்பதில்லை. அவன் அலைந்து கொண்டே இருக்கிறான். ஆனால் எதுவும் விற்பதில்லை. லிண்டா தான் வேலைக்கு சென்று சம்பாதிக்கிறாள். அவள் இரண்டு  ஷிப்ட் வேலை செய்தும், பணம் போதுமானதாக இல்லை. இருவருக்கும் இடையில் பிரச்சினைகள் வருகிறது. லிண்டா நியூ யார்க் செல்வதாகவும், பையனை அங்கே கூட்டிச் செல்வதாகவும் கூறுகிறாள். கிரிஷ் பையனை பிரிய மறுக்கிறான். அப்பாவுக்கும், பையனுக்கும் இருக்கும் பாசத்தை லிண்டா புரிந்து கொண்டு, அவள் மட்டும் பிரிந்து சென்று விடுகிறாள்.


கிரிஷ் ஒரு ஸ்டாக் புரோக்கர் கம்பெனியில் இண்டர்ன்சிப் வேலைக்கு தேர்ந்தெடுக்கப் படுகிறான். சம்பளம் இல்லாமல் இரண்டு மாதங்கள் பணி செய்ய வேண்டும். அதற்குப் பிறகு, தேர்வில் தேறினால் வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள். இதற்கிடையில் கம்பெனி வேலைக்கும் சென்று விட்டு, மீதி நேரம் ஸ்கேன் மெசினை விற்கவும் செல்கிறான்.

வாடகை கொடுக்காததால் வீட்டை விட்டு வெளியேறி விடுதியில் தங்குகிறார்கள். விடுதிப் பணமும் கட்டாததால் அங்கிருந்தும் வெளியேற்றப் படுகிறார்கள். கையில் பையனை வைத்துக்கொண்டு என்ன செய்வதென தெரியாமல் திகைத்து நிற்கிறான் கிரிஷ். ஒருநாள் ரயில் நிலைய கழிப்பறையில் தங்குகிறார்கள். அதற்குப் பின்னர் வீடில்லாதவர்களுக்கு என இயங்கும் ஓரிடத்தில் போய்த் தங்குகிறார்கள். தினமும் தெருவாசிகள், பிச்சைக்காரகள் என அங்கே இடம் பிடிக்க நெருக்கியடிக்கிறது கூட்டம். முன்னால் வருவபர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் உள்ளே விட்டுவிடுவார்கள். இடம் இல்லை என்று சொல்லிவிட்டால் என்ன செய்வதென்ற பதை பதைப்புடன் வரிசையில் நின்று கொண்டிருப்பான் கிரிஷ் குழந்தையோடு.



இண்டர்ன்சிப் முடியும் நாள் வருகிறது. தேர்வை எழுதுகிறான். அடுத்த நாள் கண்களில் ஒரு தாகத்துடன் இருக்கிறான் கிரிஷ். அவனுடைய முறை வரும்போது, உயர் அதிகாரிகள் இருக்கும் அறைக்கு அவனை கூப்பிடுகிறார்கள். அவனுக்கு வேலை கிடைத்துவிட்டது என்று சொல்கிறார்கள். அப்பொழுது ஸ்மித்தின் கண்களில் இருந்து வரும் கண்ணீர், இத்தனை நாட்களாக அவன் பட்ட துன்பங்களை கழுவிக் கொண்டு ஓடுகிறது. வெளியே வரும் அவன், கூட்டமாக போய்க் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியாக நடக்கிறான்.

யார் கண்டது, அந்தக் கூட்டத்தில் இன்னும் கிரிஷ் போன்ற எத்தனை மனிதர்கள் இருப்பார்களோ?.


                                                            **********************

ஒரு வருடமாக, இந்தப் படத்தைப் பார்த்த நாள் முதற்கொண்டு எழுதலாம் என்றுதான் நினைப்பேன். ஆனால் முடியவில்லை. இவ்வளவு உணர்வுள்ள படமாக ஸ்மித் நடித்ததை சின்ன வரிகளில் எப்படி அடக்குவது என்று தெரியவில்லை. எப்படியோ இன்று எழுதிவிட்டேன். நான் இங்கே சொன்னதை விட, சொல்லாமல் விட்டது அதிகம். ஒவ்வொரு காட்சிகளும் அப்படி இருக்கும். வாழ்க்கையே போராட்டம் என்று சொன்னாலும், நமக்கான வெற்றி கண்டிப்பாக கிடைக்காமல் போகாது.

ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.







Wednesday, May 2, 2012

ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி

எங்கள் கிராமத்தில் ஒரு பெரிய அரசமரம் இருந்தது. அரசமரத்துக்கு கொஞ்சம் பக்கத்தில் பிள்ளையாரும் அம்மனும் குடியிருந்தார்கள். ஊருக்குள் வருவோரை வரவேற்கும் விதமாக ஊரின் தொடக்கத்திலேயே இருந்தது. காக்கைகள் குருவிகள் என எப்போதும் நிறைந்து இருக்கும். சிறு சிறு பழங்களாக உதிர்ந்து கீழே கிடக்கும். இவ்வளவு பெரிய ஆலமரத்தின் விதை இவ்வளவு சிறிதா என நினைத்து வியந்த காலங்கள் அவை. ஒருநாள், ஊரைக் கூட்டி மரத்தை வெட்டுவதென்று தீர்மானித்தார்கள். சில நாட்களிலேயே மரம் வெட்டப்பட்டு விட்டது. மரம் வெட்டியதற்கு அவர்கள் சொன்ன காரணம், மரத்தின் வேர் பக்கத்திலுள்ள வீடுகளின் சுவர்களை தாக்குகின்றனவாம். இது நடந்து பதினைத்து வருடங்களுக்கு மேலிருக்கும். இப்பொழுது அதே இடத்தில், ஒரு அரசமரக் கன்றையும் ஒரு வேப்ப மரக் கன்றையும் நட்டி தண்ணீர் ஊற்றி வருகிறார்கள். ஒருவேளை அவ்வளவு பெரிய மரத்தை வெட்டியதற்கு, இப்பொழுது வளர்க்கிறார்களோ என்னமோ.

ஒவ்வொரு முறை நெடுஞ்சாலை அகலம் செய்யும்போதெல்லாம் எத்தனை மரங்கள் வெட்டப்படுகின்றன. கோவை மேட்டுப்பாளையம் சாலையில் இருந்த அத்தனை புளிய மரங்களும் இன்று வெட்டப்பட்டு விட்டன. தினமும் அதன் நிழலில் நடந்த காலம் மலையேறிவிட்டது. தினமும் ஒவ்வொரு இடத்திலும் மரங்கள் அடியோடு சாய்ந்து கொண்டிருக்கின்றன.

'ஒரு புளியமரத்தின் கதை' நாவலிலும் ஒரு புளியமரமே சுத்தி சுத்தி வருகிறது. ஊரின் முன்னால் இருப்பதால் அந்தப் புளியமரம் எல்லோரையும் பார்த்துக் கொண்டிருக்கிறது. அந்தப் புளியமரம் உள்ள இடம் ஒரு காலத்தில் குளமாக இருந்திருக்கிறது. அந்தக் குளம் நாறுவதைக் கண்ட மன்னர், அந்தக் குளத்தை மூடச் சொன்னதாக 'ஆசான்' என்பவர் கதை சொல்கிறார் நாவலில். ஒரு முறை அந்த மரம் வெட்டுப்படுவதைத் தான் தடுத்ததாகவும் சொல்கிறார். அந்த மரத்தைச் சுற்றி கடைகள் நிரம்பி, இப்பொழுது அது கடைவீதி போல் ஆகிவிட்டது.

அந்தப் புளியமரத்தின் அடியில் தாமு என்பவன் கடை வைத்திருக்கிறான். சற்று தள்ளி கடை வைத்துள்ள காதருக்கும், தாமுவுக்கும் சண்டை வந்துவிடுகிறது. தாமுவை ஒழிக்க புளியமரத்தை  வெட்டுவதுதான் தீர்வு என்ற முடிவுக்கு வருகிறான் காதர். நகரசபை தேர்தலில் தாமுவும் காதரும் போட்டியிடுகின்றனர். இருவருக்கும் பகை புகைந்து கொண்டே இருக்கிறது.

(புளிய மரங்கள் நிறைந்த கோவை மேட்டுப்பாளையம் சாலை, இப்பொழுது இல்லை)

காதருக்கு இசக்கி என்னும் பத்திரிக்கை நிருபர் துணைக்கு வருகிறான். அவன் பத்திரிக்கையில், 'இந்த மரத்தில் தூக்கு போட்டு இறந்திருக்கிறார்கள். இவ்வளவு பெரிய மரம் காற்றுக்கு தீடீரென கீழே விழுந்தால் பெரிய இழப்பும், மக்களும் அடிபடுவார்கள்' என்று எழுதுகிறான். உடனே நகரசபையில் மரத்தை வெட்ட தீர்மானம் போடுகிறார்கள். ஆனால், தாமு மற்றும் அவன் கூட்டாளிகள் அந்த மரத்துக்கு வெள்ளியில் பட்டயம் சாத்தி, பொட்டிட்டு சாமியாக்கி விடுகிறார்கள். வெட்ட வந்த ஒப்பந்தக்காரன், தான் வெட்டமுடியாது எனச் சொல்லிவிடுகிறான். மரம் தப்பிக்கிறது.

ஆனால், அன்றிரவே காதரின் ஆள் அந்த மரத்தில் சிறு குழி போல் செய்து அதில் ஆசிட்டை ஊற்றிவிட, இரண்டொரு நாளில் மரம் அப்படியே பட்டுப் போய்விடுகிறது. இப்பொழுது புளியமர ஜங்சனில் இப்பொழுது புளியமரம் இல்லை. காதர் சிறைக்குச் செல்ல, அந்த நேரம் பார்த்து தேர்தலில் போட்டியிட்ட 'கடலை' தாத்தா ஜெயித்து விடுகிறார். எந்தப் பின்புலமும் இல்லாமல், கடலை மிட்டாய் விற்றுக்கொண்டிருந்த தாத்தா நகரசபைக்கு புது உடையில் செல்கிறார். இரண்டொரு மாதம் கழிந்த பின்னர், அவர் வழக்கம் போல கடலை மிட்டாய் விற்க கிளம்புகிறார். குழந்தைகளின் சிரிப்பைப் பார்த்தவுடன் அவருக்கு முகம் மலர்கிறது.

எத்தனையோ மனிதர்களைக் கடந்து வந்த மரம் இன்று வீழ்ந்து கிடக்கிறது. எத்தனை மழைக்கு, வெயிலுக்கு தாங்கி அது இவ்வளவு பெரிய விருட்சமாக வளர்ந்திருக்கிறது. 

இந்நாவல் மரத்தை மட்டுமல்ல, அதனைச் சுற்றியிருக்கும் மக்களையும் சேர்த்தே விவரிக்கிறது. இது ஒரு புளியமரத்தின் கதை என்றாலும், ஒவ்வொரு மரத்தின் பின்னாலும் எத்தனை கதைகள் இருக்கும் என்ற ஆச்சரியம் எழுகிறது. மரம் - விருட்சம். அந்த விருட்சமே நம் வாழ்க்கைக்கு ஆதாரம், ஆனால் நாம் நம்மால் முடிந்த அளவு அதை வெட்டிக் கொண்டிருக்கிறோம்.  அந்த மரங்கள் நம்மை மன்னிக்கட்டும்.