Wednesday, January 21, 2015

கர்ண மகாராஜன் சண்டை

விஜய் டிவியில், மீண்டும் மகாபாரதம் தொடர் வெளியாகப் போகிறது என்று ஓடிக் கொண்டிருந்தது. அக்கா மகனும், நானும் வெண்முரசு பற்றி பேசத் தொடங்கினோம். அப்பா எங்களை ஆழ்ந்து கவனித்தார். 

"அது என்ன கதை புக்கா?" எனக் கேட்டார். நான் பதில் சொல்வதற்குள், "இருங்க அப்புச்சி.. புக்க எடுத்துட்டு வர்றேன்". என்று அறைக்குச் சென்று, நான் வாங்கி இருந்த முதற்கனல், மழைப்பாடல் புத்தகங்களை தூக்கிக் கொண்டு வந்தான் மருமகன். 

புத்தகங்களைப் பார்த்ததுமே, "என்ன இவ்வளவு பெரிசா இருக்கு" என்றவாறே, புரட்ட ஆரம்பித்தார். என்ன விலை என்றவரிடம், விலையைச் சொன்னதும், இவ்வளவு விலையா என ஆச்சரியப்பட்டார்.  "இல்லப்பா.. ஓவியம் எல்லாம் நல்ல பேப்பர்.. நல்ல அட்டை.. அதுனாலதான்." என்று சமாளித்தேன். 

அப்பொழுதே  புத்தகத்தைப் புரட்ட ஆரம்பித்தார். கொஞ்ச நேரத்தில், "புளியம்பட்டி புத்தக கடைல கர்ண மகராஜன் சண்டை-னு ஒரு புக் கேட்டேன். இல்லேன்னு சொல்லிட்டான். அது கெடைக்குமான்னு பாரு" என்றார்.

"அது என்ன புக். எப்போ படிச்சீங்க"

"நான் சின்ன வயசுல படிச்சது".அப்பாவுக்கு வயது கிட்டத்தட்ட 75 ஆகிறது :)


"கடைக்காரன் கிட்ட கேட்டதுக்கு, அது எந்த கம்பெனி போட்ட புத்தகம்-னு சொல்லுங்க. தபால் அனுப்பி வாங்கி தர்றேன் அப்படிங்குறான். கம்பெனி பேர் எல்லாம் யார் கண்டா?. நீ கேட்டுப் பாரு"

"ரொம்ப பெரிய புக்கா அப்புச்சி" பேரன்.

"இல்ல சின்ன புக் தான். பாட்டு மாதிரி இருக்கும். ராகம் போட்டு படிச்சா நல்லா இருக்கும். அப்போ எல்லாம் அந்த மாதரிதான் புக் வரும்" 

சரி, நெட்ல நாளைக்கு தேடிப் பார்க்கலாம் என்றேன். அது எப்படி தேட முடியும் என்று கேட்டார். "ரொம்ப பழைய புக் எல்லாம் கடைக்கு வராது. எங்காவது நெட்ல தேடி பார்த்தா கிடைக்கும்" என்றதற்கு சந்தேகமாகப் பார்த்தார்.

அடுத்த நாள், "என்ன தேடித் பார்த்தியா" என்றார் அப்பா. "என்ன" என்றவாறு நான் பார்க்க, "அதான்.. கர்ண மகராசன் சண்டை" என்றார். "பாக்குறேன்" என்றவாறு தேடத் தொடங்க, தமிழ் மரபு அறக்கட்டளை இணையத் தளத்தில் கிடைத்தது. அந்தப் புத்தகத்தைப் பார்த்ததும், இதே தான் என்று ரொம்ப சந்தோசப்பட்டார். 

இந்த பக்கத்தில் http://www.tamilheritage.org/old/text/ebook/karnama/index.html கர்ண மகராசன் சண்டை புத்தகம் கிடைக்கிறது. புகழேந்திப் புலவர் என்பவரால் பாட்டு நடையில் எழுதப் பட்டுள்ளது. விலை ரூ. 1-75.