Monday, August 30, 2010

இன்று(30/08/2010) காணாமல் போனோர் தினம்...


புதிய தலைமுறை இதழுக்கு நன்றி, இப்படிப்பட்ட ஒரு தினத்தை அறிமுகம் செய்ததற்காக. காதலர் தினம், அன்னையர் தினம் போல் இதுவும் ஒரு தினமாக கண்டிப்பாக இருக்காது. ஏனெனில், அந்த தினங்கள் நம்மோடு வாழ்பவர்களுக்காக. ஆனால் இந்த தினமோ, உயிரோடு இருக்கிறார்களா இல்லையா எனத் தெரியாமல் அனுசரிக்கப்படுகிறது.

ஐ.நா. அமைப்பும் செஞ்சிலுவைச் சங்கமும் இணைந்து இந்த தினத்தைக் கடை பிடிக்கிறது. அதுவும் இலங்கை போன்ற நாடுகளில் காணாமல் போன மக்கள் மிக அதிகம். அடக்கு முறைகளால் கைது செய்யப் பட்டு, குடும்பத்தினருக்கு தெரிவிக்காமல், என்ன செய்தார்கள் என்ற நிலைமை தெரியாமல் "காணாமல் போனோர்" பட்டியலில் அடைத்து விடுகிறார்கள்.

பள்ளிச் சிறுவர்கள், பெண்கள், வயது முதிர்ந்தவர்கள், மனநலம் குன்றியவர்கள் எனத் தினமும் காணாமல் போவோர் ஏராளம். ஏதோ ஒன்றுக்கு பயந்து அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார்கள். சக குடும்பத்தினர் மீது நம்பிக்கை இல்லாமலோ, குடும்பத்தினரின் தொந்தரவுகளினாலோ அவர்கள் காணாமல் போகிறார்கள். காணாமல் போனதன் பின்னர் விளம்பரம் கொடுத்து நோட்டீஸ் ஒட்டுகிறார்கள். காணாமல் போனவர்கள் கிடைத்தார்களா, இல்லை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்களா எனத் தெரியவில்லை.

காணாமல் போனவர்கள் எங்காவது ஒரு அடைக்கல இல்லத்தில் தங்கியோ, பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டோ, தள்ளு வண்டிக் கடை, ஹோட்டல் போன்றவற்றில் வேலை செய்து கொண்டோ, ரயில்களில் பெருக்கி கொண்டோ, ஏன் நாட்டை விட்டுக் கூடப் போயிருக்கலாம். அவர்கள் அனைவரையும் நினைத்துப் பார்க்கும் நாளாக இது இருக்கட்டும்.

Saturday, August 28, 2010

கழிவறைச் சித்திரங்கள்

ரயில்

பேருந்து நிலையம்
பள்ளி, கல்லூரியெனப்
பொதுக் கழிவறைகளில்
பெருகியோடும் காமம்
வெறும்
கோட்டுச் சித்திரங்களாய்
கிறுக்கப்பட்டு
சுவர்களில்
உறைந்து கிடக்கிறது.

Friday, August 27, 2010

சினிமா - மாடர்ன் டைம்ஸ் (Modern Times)சென்னை, திருப்பூர் போன்ற நகரங்களில் காலை நேரங்களில் (உங்களுக்கு நேரமிருந்தால் !) சாலைகளை உற்றுப் பாருங்கள். வேகமாக மக்கள் ஓடிக் கொண்டிருப்பார்கள். கொஞ்சம் தாமதித்தால் முதலாளிகள் அல்லது மேலாளர்களிடம் திட்டு கிடைக்கும். எனவே அந்த தாமதம் தவிர்க்க பேருந்திலும், இரு சக்கர வாகனங்களிலும், சென்னை போன்ற ஊர்களில் மின்சார ரயில்களிலும் மக்கள் பறந்து கொண்டே இருக்கிறார்கள்.

அதுவும் காலையும், மாலையும் சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் மக்கள் அடித்துக் கொண்டு ஓடும் பொழுது நமக்கு வாழ்க்கை பற்றிய பயம் தானாகவே வரும். ஒரு நாளில் இது முடிந்து விடப் போவதில்லை, தினமும் உணவு வேண்டும். அப்படி அரக்கப் பறக்க ஓடும் மனிதனின் குடும்பத்தில் யாரேனும் ஒருவர் பட்டினியில் கிடக்க கூடும். நோய் தீர மருத்துவ மனைக்கு கூட்டிச் செல்ல வேண்டி இருக்கலாம். குடும்பத்தில் இவன் (இவள்) மட்டும் சம்பாதித்துக் கொண்டிருக்கலாம். கூடுதலான வீட்டு வாடகை கொடுக்க சிரமப் பட்டுக் கொண்டிருக்கலாம். ஆசையாக குழந்தை கேட்ட தின்பண்டமோ அல்லது துணியோ வாங்க ஓடிக் கொண்டிருக்கலாம். ஆக, இத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு வேலை மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானம். ஒரு நாள் கூலி இல்லையெனில், பிரச்சினைகள் அப்படியே இருக்கும்.1936 ல் வெளிவந்த படம் மாடர்ன் டைம்ஸ். வேலைக்குப் போகும் ஒருவனைப் பற்றிய படம். முதல் காட்சியில் கூட்டமாக ஓடும் வெண் பன்றிக் கூட்டத்தைக் காண்பித்து, அப்படியே சப்வே-ல் திமிறிக் கொண்டு வரும் மக்கள் கூட்டம் திரையில் வருகிறது. வயிற்றுக்கு இரை வேண்டுமெனில் பன்றியாக இருந்தாலும், மனிதனாக இருந்தாலும் ஓடித்தானே தீர வேண்டும்.

பெரிய பெரிய இயந்திரங்கள் நிறைந்த ஒரு தொழிற்சாலையில் சாப்ளின் வேலை செய்து கொண்டிருக்கிறார். இரண்டு கையிலும் இரண்டு ஸ்பேனர்களைப் பிடித்துக் கொண்டு, கை ஓயாமல் ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்வதால், வேலை முடிந்த பிறகும் அவரது கைகள் அதே நிலையில் ஆடிக் கொண்டிருக்கின்றன. வெளியே வரும் சாப்ளின், சாலையில் போகும் பெண்ணின் சட்டைப் பட்டனைத் திருக்க முற்பட அவள் அங்கே வரும் காவலனிடம் புகார் செய்கிறாள். திரும்பவும் தொழிற்சாலைக்குள் வந்து சாப்ளின் ரகளை செய்ய அவரை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

ஒரு பெண் கப்பலில் இருந்து வாழை பழங்களை வெட்டி எடுத்துக் கொண்டு தன் வீடு நோக்கி விரைகிறாள். அங்கே தனது இரு சிறிய சகோதரிகளுடன் அதை சாப்பிடுகிறாள். வேலை இல்லாமல் வரும் அவள் அப்பாவும் சாப்பிட ஏதுமின்றி வெறும் தண்ணீரைக் குடித்து பழத்தைச் சாப்பிடுகிறார். கொஞ்ச நாள் கழித்து, அவள் அப்பாவும் இறந்து விட மூவரையும் காப்பகத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். தனது சகோதரிகளை அங்கே விட்டு விட்டு அப்பெண் மட்டும் தப்பித்து விடுகிறாள்.மருத்துவமனையில் இருந்து திரும்பும் சாப்ளின், வேலை தேட முயல்கிறார். போராட்டம் காரணமாக தொழிற்சாலைகள் மூடிக் கிடக்கின்றன. ஒரு சாலைத் திருப்பத்தில், லாரி ஒன்று திரும்ப அதன் பினனால் பாதுகாப்புக்காக கட்டியிருந்த சிவப்புக் கொடி கீழே விழுகிறது. அதைப் பார்க்கும் சாப்ளின் அதை எடுத்துக் கொண்டு ஓட்டுனரிடம் கொடுக்க லாரியின் பினனால் ஓடுகிறார். ஆனால் அவர்க்குப் பின்னால் போராட்டக் கூட்டம் ஒன்று நடந்து வருகிறது. அதை அறியாமல் இவர் முன்னால் நடக்க, இவரைத் தலைவன் என்றெண்ணி போலீஸ் கைது செய்ய, சிறை செல்ல நேர்கிறது.

சிறையில் கைதிகள் தப்பிக்க முயற்சி செய்வதை சாப்ளின் முறியடிக்கிறார். எனவே அவரை சீக்கிரமாக விடுதலை செய்கிறார்கள். கையில் ஒரு கடிதத்தைக் கொடுத்து 'இதன் மூலம் நீ எளிதாக வேலையில் சேர்ந்து கொள்ளலாம்' என்கிறார் சிறை அதிகாரி. வெளியே வந்தால் வேலை இல்லை. சிறையில் இருந்தாலாவது உணவு கிடைக்கும். என்ன செய்வதெனத் தெரியாமல் சிறையிலிருந்து வெளியே வருகிறார்.

சிறை அதிகாரி கொடுத்த கடிதத்தைக் காண்பித்து ஒரு கப்பல் கட்டும் இடத்தில் ஒரு வேலைக்குச் சேர்கிறார். சேர்ந்த முதல் நாளே, ஒருவன் ஒரு கட்டை வேண்டும் என்று கேட்க, கட்டையைத் தேடும் நம்ம ஆள் கட்டிக் கொண்டிருந்த ஒரு கப்பலின் அடியில் முட்டுக் கொடுத்திருந்த கட்டையைப் பிடுங்க, கப்பல் கடலில் பாய்கிறது. பிறகென்ன, அங்கே இருந்தும் வெளியேறுகிறார்.காப்பகத்திலிருந்து தப்பிய பெண் ஒரு பேக்கரியில், பசியால் ஒரு பிரட் பாக்கெட்டைத் திருடிக் கொண்டு ஓடுகிறாள். எதிரே வரும் சாப்ளின் மீது மோதி விழுகிறாள். அப்பெண் திருடுவதைப் பார்த்த இன்னொரு பெண்மணி, அதைக் கடைக்காரனிடம் சொல்ல போலீஸ் அங்கே வருகிறது. போலீசிடம் நான்தான் திருடினேன் என்று சாப்ளின் கூற அவரை அழைத்துச் செல்கிறது. அங்கே வந்த பெண்மணி 'இவன் இல்லை.. திருடியது ஒரு பெண்' எனச் சொல்ல, அவரை விட்டு விட்டு திரும்ப அப்பெண்ணைத் துரத்துகிறார்கள்.

இன்னொரு கடையில் காசில்லாமல் உணவு அருந்தும் சாப்ளினை போலீஸ் பிடிக்கிறது. போலீஸ் வண்டியில் வரும்பொழுது, அப்பெண்ணும் பிடிபட்டு வண்டியில் ஏற்றப் படுகிறாள். போகும் வழியில் இருவரும் தப்பித்து விடுகின்றனர்.ஒரு கடையில் இரவு வாட்ச்மேன் வேலை காலியாக இருப்பதை அறிந்து அங்கே சேர்கிறார் சாப்ளின். அன்று இரவு அப்பெண்ணும் அங்கே தங்குகிறாள். இரவு அந்தக் கடைக்கு திருடர்கள் வருகின்றனர். பார்த்தால் அவர்கள் சாப்ளினின் பழைய பாக்டரியில் வேலை செய்தவர்கள். இப்பொழுது பசியால் இங்கே வந்தோம் எனப் பேசிக்கொண்டு, மது வகைகளை குடித்து போதையில் தூங்கி விடுகிறார் சாப்ளின்.

மறுநாள் காலை துணிகளுக்கு அடியில் தூங்கிக் கொண்டிருந்த சாப்ளினை போலீஸ் அள்ளிக் கொண்டு செல்கிறது. அப்பெண் தப்பி விடுகிறாள். மீண்டும் பத்து நாட்கள் சிறையில் இருந்து விட்டு வெளியே வர, அங்கே அப்பெண் அவரை ஒரு சிறிய வீட்டுக்கு கூட்டிச் செல்கிறாள். பழைய மர வகைகளை கொண்டு கட்டிய சின்ன குடிசை அது.

அடுத்த நாள் காலையில் பேகடரி திறப்பதை அறிந்து காலையில் வேலைக்கு சேருகிறார். மதியம் உணவு முடிந்து திரும்பவும் ஸ்டிரைக் ஆரம்பிக்க தொழிலாளர்கள் வெளியேறுகின்றனர். வெளியே வரும் சாப்ளின் ஒரு கல்லைத் தெரியாமல் மிதித்து விட அங்கே நின்று கொண்டிருந்த போலிசின் மீது பட, திரும்பவும் ஒருவாரம் சிறை வாசம்.சிறை வாசம் முடிந்ததும் வெளியே வரும் சாப்ளினை வரவேற்று தான் புதிதாக வேலையில் சேர்ந்துள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் செல்கிறாள். அங்கே அவளுக்கு நடனம் ஆடும் வேலை. சாப்ளினுக்கு பாடத் தெரியும் என்று சேர்த்து விடுகிறாள். அன்று சாப்ளின் பாடி முடித்து, அப்பெண் ஆட வரும்பொழுது காப்பக அதிகாரிகள் அவளைப் பிடித்துக் கொள்கிறார்கள். இருவரும் அவர்களிடம் இருந்து தப்பிக்கிறார்கள்.

ஒரு சாலையின் ஓரத்தில் இருவரும் ஒரு சிறிய மூட்டை முடிச்சோடு அமர்ந்து கொண்டு தங்களை ஆசுவாசப்படுத்தி கொள்கிறார்கள். அப்பெண் "முயற்சி செய்வதால் என்ன பலனை கண்டோம்?" என அழ ஆரம்பிக்க, "செத்துப் போவோம் என்று ஒரு நாளும் எண்ணாதே. நாம் இன்னும் நிறைய தூரம் செல்வோம்" என்று தேற்றுகிறார். இருவரும் சந்தோசத்துடன் ஒரு நீண்ட பாதையில் நடக்க ஆரம்பிக்க, படம் முடிகிறது.
நெகிழ வைத்தவை:

ஒரு வேலையைச் செய்து கொண்டே இருக்கும் பொழுது ஏற்படும் நோய்கள் அதிகம். படத்தின் முதலில் சாப்ளின் கை நிற்க முடியாமல் ஆடிக் கொண்டே இருக்கும். அங்காடித் தெருப் படத்தில் கூட ஒரு நோயாளி நின்று கொண்டே வேலை செய்ததால் ஏற்படும் நோயைப் பற்றி சொல்லுவார்கள்.

அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை முதலாளிகள் ஒன்று போலதான் இருக்கிறார்கள். சாப்பிடும் நேரத்தைக் குறைக்க வலியுறுத்தும் நிறுவனங்கள் ஏராளம். இப்படத்தில் கூட, சீக்கிரம் சாப்பிட்டு விடலாம் என்பதால் ஒரு இயந்திரத்தைக் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். நல்ல வேளை, அது படத்திலேயே வெற்றி அடையவில்லை.

பசியால், கப்பலில் வைத்திருக்கும் பழங்களை அப்பெண் திருடும் பொழுது, அவள் திருடுவதற்கு இந்தச் சமூகம் கூட ஒரு காரணமாக இருக்கலாம் என்ற எண்ணம் தோன்றும்.

பலசரக்கு கடையில் தன் நண்பனைப் பார்த்தவர்கள் "நாங்கள் திருடர்கள் இல்லை.. எங்களுக்கு பசியாக இருக்கிறது".. என்பார்கள். பசி மட்டும் தானே மனிதனுக்கு கொடிய நோயாக இருக்கிறது.

சாப்ளினும் அப்பெண்ணும் தங்களின் கனவு இல்லம் பற்றி கனவு காண்பார்கள். அதில் அழகான வீட்டுக்கு உள்ளேயே ஆப்பிளும், திராட்சைப் பழங்களும் சன்னலில் காய்த்திருக்க, கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் பசு பாலை கறந்து கொடுத்து விட்டுச் செல்கிறது.

இறுதியாக, இந்த மாடர்ன் யுகத்தில் நிறைய பேக்டரிகள், நிறைய உணவுகள், நிறைய பொருள்கள் இருக்கின்றன. ஆனால் எல்லாருக்கும் வேலை கிடைப்பதும், பசி ஆறுவதும் எவ்வளவு கடினமாக உள்ளது. ஒரு வேளை காட்டுக்கு உள்ளேயே ஆதி வாசிகளாக இருந்திருந்தால் கூட காயோ, கனியோ கிடைத்திருக்கும். காட்டை அழித்து நாட்டை உருவாக்கி, நவீன உலகம் என்கிறோம். மாடர்ன் உலகத்தில் இன்னும் அனைவருக்கும் உணவுதான் கிடைக்கவில்லை.Wednesday, August 25, 2010

உனக்கும்.. எனக்கும்..

ஒவ்வொரு முறையும்
சண்டை முடிந்து
சமாதானம் ஆகிறோம்..

காக்கையின் முன் வைத்த
படையல் இலையில்
ஏதோவொன்றை
கவ்விக் கொண்டு பறப்பது போல் ...

ஏதோவொரு காரணம்
கிட்டி விடுகிறது
அடுத்த நாள்
சண்டையைத் தொடங்க...

Monday, August 23, 2010

புத்தகம் - எனக்குப் பிடிக்கும்


இலக்கியத்தை படிப்பவர்கள் பொழுது போகாமல் இருப்பவர்கள்தான் என்ற ஒரு கருத்து நிலவி வருகிறது.

சின்ன வயதில் காமிக்ஸ், சிறுவர் மலர், அம்புலி மாமா என படித்து வளர்ந்த நான் கொஞ்ச நாட்கள் கழித்து, ராணி, தேவி, ராஜேஷ் குமார் க்ரைம் நாவல் என்று தொடர்ந்தது. இன்னும் கொஞ்சம் வளர்ந்து, பாலகுமாரன், ஆனந்த விகடனில் வரும் சிறுகதைகள் என்றாகி, இன்றும் இலக்கியங்களைத் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன்.

இதற்கு காரணம் என் அப்பாதான். பள்ளிக்கு செல்லாமலே படித்து, பக்திப் பாடல்கள், ஜோசியம் என எல்லாவற்றிலும் தேர்ந்தவராக இருந்தார். சொல்லப் போனால் என் ப்ரோக்ரேஸ் கார்டு-ல் ஆங்கிலத்தில் கையெழுத்து போடுவார். என் நண்பர்கள், உங்க அப்பா என்ன படித்து இருக்கிறார் என்று கேட்பார்கள் கையெழுத்தைப் பார்த்து. பள்ளிக் கூடமே போனதில்லை என்று சொன்னால், ஆச்சரியமாகப் பார்ப்பார்கள். எங்கள் அம்மாவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. புத்தகங்களைப் படிக்க கற்றுக் கொடுத்ததே அப்பாதான். வீடு பூராவும் ராணி, தேவி, குமுதம் என வார மலர்கள் நிறைந்து கிடக்கும். சாப்பிடும் பொழுது புத்தகம் படித்தால் கூட திட்டாத ஒரே வீடு எங்கள் வீடாகத்தான் இருக்கும். எங்கள் ஊர் கிராமம் என்பதால், பக்கத்துக்கு ஊரான புளியம்பட்டி போகும்பொழுது அம்மாவும் அப்பாவும் புத்தகங்களை வாங்கி வருவார்கள். அதுவும் பழைய புத்தகம் என்றால், ஐம்பது காசு, ஒரு ரூபாயாக இருக்கும்.

இப்படியாக வளர்ந்த என் வாசிப்பு இப்போதும் தொடர்கிறது. என் நண்பர்கள் வட்டத்தில் நான் படிக்கும் புத்தகங்களைப் படிப்பவர் யாருமே இல்லை. ஒன்றுமே வேண்டாம், விகடனில் வரும் ஒரு வித்தியாசமான சிறுகதையைக் கூட படிக்க மாட்டார்கள். குற்றமும் தண்டனையும், புயலிலே ஒரு தோணி, மோக முள் என என்னைத் தவிர யாருமே திருப்பிப் பார்க்கவில்லை. சரி, அது கூட என் ரசனை என்று எடுத்துக் கொள்ளலாம்.

நிற்க. நண்பனின் திருமணத்துக்கு நேற்று ஈரோடு செல்ல வேண்டி இருந்தது. மற்ற நண்பர்கள் வந்து சேரத் தாமதம் ஆனதால், பேருந்து நிலையத்தில் இருந்த விஜயா பதிப்பகத்தின் கடைக்குச் சென்றேன். உப பாண்டவம், ஒரு புளியமரத்தின் கதை, தலைகீழ் விகிதங்கள் என ஆறு புத்தகங்களைத் தேர்ந்தெடுத்தேன். புத்தகங்களை வாங்கி வரவும், நண்பர்கள் வரவும் சரியாக இருந்தது.

புத்தங்களைப் பார்த்ததும், ஒரு நண்பன் "என்னடா.. உனக்கு ரொம்ப நேரம் ப்ரீயா இருக்குதா.. இவ்ளோ புக்ஸ் வாங்கிருக்கே" என்றான்.

"அது இல்லடா.. ரொம்ப நாளா வாங்கனும்னு நெனச்சேன்.. இன்னக்கி டைம் கெடச்சுது.. வாங்கியாச்சு" என்றேன் நான்.

"இந்தப் புக்ஸ் எல்லாம் படிக்கிறதுனால என்ன ஆயிடப் போகுது. எல்லாமே கதையா இருக்கும். உண்மையாவா இருக்கப் போகுது. உனக்கு என்ன யூஸ் ? " என்றான்.

"எனக்குப் பிடித்திருக்கிறது.. அவ்ளோதான்" என்றேன் நான். ஒரு புத்தகத்தைப் படித்து முடித்ததும் ஏற்படும் எண்ணங்களை அவனுக்கு எப்படி என்னால் புரிய வைக்க முடியும். பேச்சு திசை மாறி நீண்டது.

அவனிடம் சொன்ன பதிலான "எனக்குப் பிடித்திருக்கிறது" என்பதைத் தவிர, புத்தகங்களை விரும்ப எனக்கு வேறு பதில் ஏதுமில்லை அல்லது நினைவுக்கு வரவில்லை. உங்களிடம் வேறு பதில்கள் இருக்கிறதா?.

Wednesday, August 18, 2010

முரண்கள்

அரசு மதுபானக் கடையிலிருந்து கொஞ்சம் தள்ளி, அரசின் 'குடித்து விட்டு வண்டி ஓட்டாதீர்' வாசகம்.
********

லஞ்சம் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது என்றுதான் இருந்தேன். முட்டிக் கொண்டு வரும்போது, சிறுநீர் கழிக்க ரூ.1 க்கு பதில் ரூ.3 வாங்கும் அவனிடம் சட்டம் பேச நேரமில்லை.

********

இப்போதெல்லாம் மசாலாப்(கம்மர்சியல் ?) படங்களைப் பார்த்தால் எரிச்சலாக இருக்கிறது. ஒரு காலத்தில் இதையும் கை தட்டி ரசித்தோம் என்பதை மறந்து விடுகிறேன்.
********

சின்ன வயதில் அப்பா என்ன வாங்கி வந்தாலும் ருசித்தது. இப்போதோ, எதாவது வாங்கி வந்தால் 'நல்ல கடை கெடைக்கலியா?' என்பதே வார்த்தைகளாக வருகிறது.
********

ஆம்பளைப் பையன் பூவை ரசித்தால், ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள். இதுவே கையில் ஒரு ரோஜாவோடு இருந்தால் புன்னகைக்கிறார்கள். (சமயத்தில் அடியும் கிடைக்கக் கூடும்)
********

குளிர் காற்று நிறைந்த அங்காடிகளில் பில் போட்ட விலையைத் தருகிறோம். நடை பாதைக் கடைகளில் ரூ.10 உள்ள பொருளுக்கு பேரம் பேசிக் கொண்டிருக்கிறோம்.
********

சேவை செய்ய பாராளுமன்ற உறுப்பினர் ஆனோம் என்கிறார்கள். இருந்தாலும் சம்பளம் போதவில்லை என்று கதறுகிறார்கள்.

Friday, August 13, 2010

ஞாயிற்றுகிழமைச் சுதந்திரம்

ரயில் முன்பதிவு
குடும்பத்துடன் சுற்றுலா
என எதுவுமில்லாமல்
வருகிறது சுதந்திர நாள்
ஞாயிற்றுக் கிழமையால்...

போலி மருந்துகள்
போலிச் சாமியார்கள்
போலிச் சான்றிதழ்கள்
எனச் சுற்றிலும் போலிகள்
சுதந்திரமாய்...

கந்துவட்டி, லஞ்சம்
கல்விக் கட்டணம்
சிறுவர் கொடுமைகள்
விலைவாசி
எனவும்
நமக்கான முடிவுகளை
யாரோதான் எடுக்கிறார்கள்...

இதற்கெல்லாம் கவலை
வேண்டாம் நண்பரே..
அடுத்த வருடம்
சுதந்திர நாள்
திங்கட்கிழமையில் வருகிறது..

மூன்று நாட்கள்
மூழ்கித் திளைப்போம் அடுத்த
சுதந்திர நாளன்று...

Tuesday, August 10, 2010

குறும்படம் - மற்றவள்

ஒரு பக்கம் பள பளக்கும் துணியுடன், முதுகில் புத்தக மூட்டையுடன் பள்ளிகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள் குழந்தைகள். இன்னொரு பக்கம் எதற்கும் வழியின்றி தெருவோரங்களில் பல குழந்தைகள். காலை நேரங்களில், தெருவின் ஓரங்களில் நடத்தப் படும் பூக் கடை, இட்லிக் கடை, தள்ளு வண்டிக் கடை, சிறு காய்கறி கடைகள் என சிறுவர்களைப் பார்க்கலாம்.

கொஞ்சம் வசதி இருப்பவர்கள் அரசுப் பள்ளிகளுக்காவது தங்கள் குழந்தைகளை அனுப்பி விடுகிறார்கள். அந்த வசதி கூட இல்லாமல் இருக்கும்பொழுது, மூன்று வேலை உணவா இல்லை கல்வியா என்று வரும்போது அங்கே கல்வி பின்னுக்கு தள்ளப்படுகிறது. பெரும்பாலும், குழந்தை தொழிலாளர்கள் சம்பாதிப்பது கொஞ்சம் தான் என்றாலும் அதுவே அவர்களின் குடும்பத்துக்கு பெரிய உதவியாய் இருக்க கூடும். பெற்றோரை இழந்தவர்கள், மறுமணம் செய்து விட்டு குழந்தைகளைத் தனியாக விட்டு விட்டு செல்பவர்கள் என ஆதரவில்லாமல் இருப்பவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள் சிறு சிறு வேலைகளுக்கு அனுப்பி விடுகிறார்கள். இதில் தாத்தா, பாட்டி போன்றவர்களும், உறவினர்களும் அடக்கம். இதில் தந்தை குடும்பத்தை விட்டு ஓடி விட்டான் என்றால், தாயால் உடம்புக்கு முடியவில்லை என்றால், குடும்ப பாரம் அந்தப் பிஞ்சுகளின் கையில்.

குழந்தைத் தொழிலாளர்களைப் பற்றி எவ்வளவோ எச்சரிக்கைகள் இருந்தாலும், திரை மறைவில் அவர்களைப் பயன் படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

எழுத்தாளர் திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் கதையை திரு.லோகேஷ் அவர்கள் குறும்படமாக எடுத்திருக்கிறார். திரைக் கதையையும், வசனத்தையும் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களே எழுதியுள்ளார். 'மற்றவள்' ஒரு சிறுமியின் கதையைச் சொல்லும் குறும்படம்.

ஒரு வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கும், ஈசல் என்கிற மகேஸ்வரி, தன் டீச்சருக்கு ஒரு கடிதம் எழுதுகிறாள். அதில், தான் இனிமேல் பள்ளிக்கு வரமாட்டேன் என்றும், பள்ளிக்கு லேட் ஆனதால் முட்டி போடச் சொன்ன நீங்க, நான் ஏன் லேட்டா வந்தேன்னு கேட்கவே இல்லை என்கிறாள். மீன் வியாபாரம் செய்யும் என்னோட அம்மா, கடைசி மீனை வித்ததுக்கு அப்புறம்தான் வீட்டுக்கு வருவாங்க, அதுக்கு அப்புறமா நான் ஸ்கூல்-க்கு வர லேட் ஆயிடுது. ரெண்டு நாள் லீவு போட்டா லீவ் லெட்டர் கேப்பிங்க, இனிமேல் நான் வரமாட்டேன் என்று எழுதிக் கொண்டே போகிறாள். தனக்கு ஒரு பணக்காரத் தோழி இருப்பதாகவும், அவளிடம் தான் நான் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளுவேன் என்று சொல்லுமவள், கடைசியில் அது தானே என்றும் கடிதத்தில் குறிப்பிடுகிறாள்.

தான் வேலை செய்யும் வீட்டின் கழிவறையில் அமர்ந்து இந்தக் கடிதத்தை எழுதிக் கொண்டிருக்கிறாள் ஈசல். அவளைத் தேடி வரும் வீட்டின் தலைவி அந்தக் கடிதத்தை வாங்கிக் கிழித்து விட்டு 'போய் உருபடர வழியைப் பாரு' என்று திட்டி விட்டுச் செல்கிறாள். கீழே கிடக்கும் அந்தக் காகிதத் துண்டுகளை அவளே சுத்தம் செய்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறுவதுடன் படம் முடிகின்றது.நாளைக் காலையும் ஈசல் அந்த வீட்டுக்கு வேலைக்கு வருவாள் என்பது மட்டும் நிச்சயம்.

இச் சிறுமியைப் போல நாம் வாழும் இடங்களில் எவ்வளவோ பேர் உண்டு. அதனால்தான் என்னவோ, தலைப்பு கூட 'மற்றவள்'. இதற்கு முன்னர் திரு. முரளி மனோகர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த 'கர்ண மோட்சம்' திரைப்படம் பெரிய விருதுகளையும், தேசிய விருதையும் வென்ற படம். அப்படத்திலும் ஒரு வேலைக்கார சிறுமி இருப்பாள். கலையை நேசிக்கும் அவளுக்கும் கல்வி என்பது எட்டாக் கனியாகவே இருக்கிறது.

'கர்ண மோட்சம்' குறும்படம் போல, 'மற்றவள்' படமும் பல விருதுகளை வெல்ல அப்படத்தின் திரைப் படக் குழுவினருக்கு என் வாழ்த்துக்கள்.

எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் பதிவு : மற்றவள்

மற்றவள்:Monday, August 9, 2010

காம்பஸ் ஊசியும்.. தோஷ நிவர்த்தியும்...

குழந்தையை கிழக்கு முகமாக உட்கார வைத்து, சாம்பிராணி தூபம் காட்டி, பின்வரும் மந்திரத்தை 108 முறை ஜெபித்து, பூசைக்கு வைத்த பொருட்கள் அனைத்தையும் கிணற்றில் போட வேண்டும். 'ஓம் ஐயும் கிலியும் சவ்வும், சகல தோஷம் நிவர்த்தி...'

இது, சகல தோஷ நிவர்த்தி என்ற புத்தகத்தில் காணப்படும் வரிகள். எங்கள் கிராமத்தில் இதை ஏட்டுப் புத்தகம் என்பார்கள். அந்தப் புத்தகத்தின் விலை இரண்டு ரூபாயாக இருந்தது. மீறிப் போனால் ஒரு இருபது பக்கமிருக்கும். குழந்தை பிறந்த 1-நாள் 1-மாதம் 1-வருடம், 2-நாள் 2-மாதம் 2-வருடம் என பன்னிரண்டு வருடங்களுக்கு, அந்த வருடங்களுக்குரிய தேவதைகளுடன், சக்கரங்களும் மூல மந்திரங்களும் இருக்கும்.

எங்கள் வீட்டில் குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லை என்றால் தலையணைக்கு அடியில் வைத்து விடுவார்கள். கைக் குழந்தையாக இருந்தால் தொட்டிலில் கட்டி விடுவார்கள். இந்த மந்திரங்களை ஒரு பனையோலையில் எழுதி, நூல் போட்டு இறுக்கி கட்டி, மஞ்சள் பூசி கையிலும் கட்டிருவாங்க. ஊரில் ரெண்டு, மூன்று பேர் இந்த ஏடுகளை எழுதிக் கொடுப்பார்கள் மற்றவர்களுக்கு. அதற்கு காணிக்கையும் வாங்கிக் கொள்வார்கள்.

எங்கப்பாவும் ஏடு எழுதிக் கொடுப்பார். ஆனால் காசு வாங்க மாட்டார். எனக்கு நன்றாக எழுத வந்தபொழுது, நான் வீட்டிலிருந்தால் என்னை எழுதச் சொல்லுவார். அப்பா கோனூசியில் எழுதுவார். எனக்கு அதில் எழுதினால், எழுத்தே வராது. முனை மழுங்கிப்போய் அதைப் பார்த்தாலே எரிச்சலாக வரும். அப்பா "உன்னோட காம்பஸ் ஊசியில் எழுது" என்பார். கணக்கு பரிட்சையில் மார்க் வருதோ, இல்லியோ இந்த காமப்ஸ் ஊசி ஏடு எழுதவும் பயன்பட்டது. கோனூசியை விட இதில் என்னால் நன்றாக எழுத முடிந்தது.

சிலர் வரும்போதே எங்காவது பனை மரத்தில் இருந்து குருத்தை வெட்டிக் கொண்டுவருவார்கள். ஒரு ஓலை போதும் ஏடு எழுத, ஆனால் ஒரு சிலர் ஊருக்கே ஏடு எழுதுமளவுக்கு வெட்டிக் கொண்டுவருவார்கள். இன்னும் ஒரு சிலரோ, சும்மாவே வந்து "ஏடு எழுதிக் குடுங்க" என்பார்கள். எங்கள் வீட்டின் பினால் ஒரு சின்ன பனைமரம் இருந்தது. சுற்றிலும் வெட்டபடாத பழைய ஓலைகள் காய்ந்து தொங்கிக் கொண்டிருக்கும். ஏடு எழுதவதற்கு எப்பவுமே, குருத்தோலை தான் தேவை. முற்றியவை என்றால் எழுதும்போது உடைந்து விடும். எட்டிப் பிடித்து குருத்தோலை அறுக்க வேண்டும், கொஞ்சம் தவறினால் காய்ந்த ஓலைகளின் கருக்குகள் பதம் பார்த்து விடும்.

ஓலையை சரியாக கத்தரித்து, நடு நரம்பை நீக்கி விட்டு புத்தகத்தை பார்த்து எழுத ஆரம்பிப்பேன். "எழுதறப்போ மனசுக்குள்ளயே சொல்லிட்டு எழுதுடா" என்பார் அப்பா. ஒரு சிலர் மத்தியானமே வந்து ஏடு எழுதிக் குடுங்க என்பார்கள். சாயந்திரமா வந்து வாங்கிக்குங்க என்று அனுப்பிவிடுவார் அப்பா. சாயந்திரம் திரும்ப வருபவர்கள் "ஏடு கேட்டு மத்தியானம் வந்ததுக்கபுறம் புள்ளைக்கு கொஞ்சம் காய்ச்சல் கொறைஞ்ச மாதிரி தெரியுது" என்பார்கள். இது ஏட்டுக் குணம் என்பார்கள் எங்கள் ஊரில். என்ன நம்பிக்கையோ என நினைத்துக் கொள்வேன்.

நான் பள்ளியிலிருந்து வருவதற்கு நேரமானால், நான் வரும்வரை காத்திருப்பார்கள் ஏடு எழுத வந்தவர்கள். அப்பாவும், 'அவன் வரட்டும்' என்று சொல்லிவிடுவார். நான் எழுதிக் கொடுத்த பிறகு அவர் நூலில் கட்டிக் கொடுத்துவிடுவார். நான் ஒரு தடவை, ஏட்டைக் கட்ட முயன்று கடைசியில் நூலை இறுக்கினால், நூல் தனியாகவும், ஏடு தனியாகவும் கையில் வந்து விட்டது. ஓலையை நன்றாக இறுக்கிக் கட்ட வேண்டும், கடைசிவரை எனக்கு வரவே இல்லை.

முதன்முறையாக ஏடு எழுத வருபவர்கள், எப்படிக் கட்டுவது எனக் கேட்பார்கள். "கொழந்தையை கிழக்கு முகமா உக்கார வச்சு, இந்த ஏட்டை மஞ்சத் தூளில் பூசி, சாம்பிராணி காட்டி.. "

"சாம்பிராணி இல்லிங்களே.. "

"சாம்பிராணி இல்லைன்னா, ரெண்டு ஊது வத்தி காட்டி, கழுத்திலோ கையிலோ கட்டிரு"

"சரிங்க.. காணிக்கை"

"அதெல்லாம் இங்க வாங்கிறதில்ல"

"காணிக்க வாங்கினத்தான் பலிக்கும்னு சொன்னாங்க"

"இங்க வாங்குறது இல்ல. எங்க வாங்குறாங்களோ அங்க போய் வாங்கிக்குங்க" என்பார் அப்பா.

"சரிங்க. நான் போயிட்டு வர்றேன்"

"ஏடு வாங்கிட்டு போகும்போது சொல்லிட்டு போக கூடாது. திரும்பி பார்க்காம போயிட்டே இருக்கணும்"

தலையாட்டி விட்டுத் திரும்பி பார்க்காமல் போய் விடுவார்கள். அடுத்த நாள் அல்லது இரண்டு நாட்கள் கழித்து அவர்கள் வந்து, இன்னும் உடம்பு சரியாகவில்லை என்றால் 'டாக்டர் கிட்ட கூட்டிட்டு போங்க' என்று சொல்லிடுவார் அப்பா. ஏடு எழுதிக் குடுத்ததுக்கு பிரதிபலனாய், தங்கள் காடு தோட்டங்களில் ஏதேனும் விளைந்தால் கொண்டு வந்து குடுத்து விட்டுப் போவார்கள்.

தற்போது எல்லாம் தொலைகாட்சிகளில் வரும் விளம்பரங்களைப் பார்த்து பயம் கொள்ள வேண்டியிருக்கிறது. ராசிக்கல் மோதிரம், தாயத்து, வாஸ்து பிள்ளையார், வாஸ்து மீன் தொட்டி, எண் சோதிடம், காந்த படுக்கை.. எனப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். நம்மை ஏமாற்றும் இந்த போலிகளிடம் இருந்து எப்பொழுது தப்பிக்கப் போகிறோம்.

முக்கிய குறிப்பு:

* ஆகவே, இதனால் தெரிவிப்பது யாதெனில், நானும் காம்பஸ் ஊசியைக் கொண்டு புதிய தாயத்து முறையைக் கண்டு பிடிக்க போகின்றேன். (முதலில் காப்பி ரைட்ஸ் வாங்க வேண்டும் !!!!).

* முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை. (முதல் ஆடு எதுன்னு தெரில !!!)

* பனை ஓலையில் எழுத பட மாட்டாது. தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற பொருட்களில் மட்டும் எழுதப்படும். (அப்பதான் பெரிய ஆளுக எல்லாம் வருவாங்க !!!)

* முதலில் பதிவு செய்பவர்களுக்கு, திரைக்கு வந்து ஓடாமல் திரும்பிய, வெற்றிப் படத்தின்(!!!) திருட்டு DVD கொடுக்கப்படும்.

* இதைக் கட்டி விட்டால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும். (இந்த நல்ல காதல், கள்ளக் காதல் எல்லாம் என்னாகும்னு கேட்க கூடாது !!!)

* ஒரு தடவை என்ட்ரி போட்டுவிட்டு, இந்த தாயத்தைக் கட்டி விட்டால், மாதம் ஒரு முறை கண்டிப்பாக வர வேண்டும் (அப்பதான் மாச மாசம் வரும்படி வரணும் !!!)

* தொழில் முறை கற்றுக் கொடுக்கப் பட மாட்டாது (நமக்கே ஒன்னும் தெரியாது !!!)

* கண்டிப்பாக, 'முன் அனுமதி தேவை' போர்டு மாட்டப் படும் (அதாங்க அப்பாயன்ட்மென்ட் !!!)

Sunday, August 1, 2010

சினிமா - விர்டியானா (Viridiana)


நானும் என் நண்பனும் சென்னையில் இருந்த நாட்களில், ரயில் நிலையப் படிகளில், தி.நகர். கடை வீதிகளில், பேருந்து நிறுத்தங்களில் என எங்கெங்கு பார்த்தாலும் கையேந்தி நிற்கும் பிச்சைக் காரர்களைப் பற்றி விவாதித்தது உண்டு. நண்பன் சமூகவியலில் டிப்ளமோ பண்ணிக் கொண்டிருந்தான். எவ்வளவோ பெரிய ஆட்கள், பெரிய முதலாளிகள் சென்னையில் இருக்கிறார்கள், கொஞ்சம் உதவி செய்தால் இவர்களும் நிம்மதியாக வாழலாமே என்று அவனிடம் கூறினேன். அதற்கு அவன் பின்வருமாறு பதில் அளித்தான்; 'நிறைய தொண்டு நிறுவனங்கள் இருக்குது. ஆனால், பிச்சை எடுத்து வாழ்பவர்கள் சொகுசு வாழ்க்கை போல வாழ்ந்து பழகி விட்டார்கள். கையில் கொஞ்சம் ரூபாய் இருந்தால், கஞ்சா, பீடி, தண்ணி என அடிக்க கிளம்பி விடுகிறார்கள்(பெண்களும்). இவர்களைக் கொண்டு போய் தொண்டு இல்லங்களில் சேர்த்து விட்டால், மீறிப் போனால் ஒரு வாரம், ரெண்டு வாரம் இருப்பார்கள். அதற்க்கு அப்புறம் கெளம்பிடுவாங்க. ஏன்னா, அங்கே உணவு கிடைத்தாலும் காசு கிடைக்காது, சிறு வேலைகளும் செய்ய வேண்டும். இதில் கொடுமை என்னவெனில், பிள்ளைகளை ஊனமாக்கி பிச்சை எடுப்பது. அவர்களாக திருந்தினால்தான் உண்டு' என்றான்.

அவன் சொல்லுவதை நான் அப்படியே ஏற்றுக்கொண்டேன். ஏனெனில், நாங்கள் பேசிக் கொண்டிருந்த அந்த மாதத்தின் முதல் நாளில், வீதியில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த ஒரு மூதாட்டியை ஒரு தொண்டு நிறுவனத்தில் கொண்டு போய் சேர்த்திருக்கிறான். ஒரு வாரம் கழித்து யாரிடமும் சொல்லாமல் அந்த மூதாட்டி அங்கே இருந்து போய்விட்டது. அங்கே காசு கிடைக்காததே காரணம்.

விர்டியானா படம் பற்றி இரண்டு வருடங்களுக்கு முன்னால் எங்கயோ படித்திருந்தேன். இன்று காலை படத்தைப் பார்த்தும் விட்டேன். படத்தின் கதை சாதரணமானதாக இருந்தாலும், படத்தின் தாக்கம் மிகப் பெரியது.

ஒரு பள்ளியில் சிஸ்டர் ஆகப் பணிபுரியும் சிஸ்டர்.விர்டியானாவுக்கு அவள் மாமாவிடமிருந்து கடிதம் வருகின்றது, அவளை வரச் சொல்லி. இத்தனை நாட்களாக அவள் மாமாவைச் சந்தித்ததே இல்லை. எனவே போக மறுக்கிறாள். தலைமை சிஸ்டர், 'நீ கண்டிப்பாக போக வேண்டும். நீ இங்கே தங்கி இருக்கும் அனைத்துச் செலவுகளையும் அவர்தான் பார்த்துக் கொள்ளுகிறார்' எனச் சொல்ல, விர்டியானா மாமாவைப் பார்க்க கிளம்புகின்றாள்.மாமாவின் மனைவி இறந்து விட்டாள். வயது சுமார் ஐம்பது இருக்கலாம். அவரின் மகனிடம் தொடர்பு இல்லை. பணிப்பெண் ரோமனா, அவள் மகள் ரீட்டா, பணியாளர்கள் இருவர் எனத் தனிமையில் வாழ்ந்து வருகிறார். மிகப் பெரிய பண்ணை வீடும், நிலங்களும் இருக்கின்றன. மாமாவைப் பார்க்க வந்த விர்டியானா இன்னும் சில நாட்களில் திரும்பி விடுவேன் என்கிறாள். ஆனால் மாமாவுக்கோ தனிமையில் இருப்பது பிடிக்காமல் விர்டியானாவைக் கல்யாணம் செய்ய நினைக்கிறார். ஆனால் சிஸ்டர் ஆகப் பணிபுரியும் அவள் மறுக்கிறாள்.

ஓரிரவு, அதாவது விர்டியானா ஊருக்கு கிளம்பும் நாளுக்கு முன்தினம் காப்பியில் தூக்க மாத்திரை கலந்து பணிப்பெண் கொடுக்கிறாள். மயங்கி கிடக்கும் அவளை அறைக்கு எடுத்துசெல்லும் அவர், குற்ற உணர்ச்சியில் எதுவும் செய்யாமல் திரும்பி விடுகிறார். ஆனால், காலையில் தூக்கம் கலைந்து எழும் அவளிடம் 'நான் உன்னை அடைந்து விட்டேன். இனிமேல் நீ காண்வென்ட்கு திரும்ப முடியாது' என்கிறார். அவள் எதையும் கேட்காமல், கிளம்புகிறாள். கிளம்பும்பொழுது, 'நீ என்னை மன்னிப்பாயா' எனக் கேட்கிறார். அவள் அழுதுகொண்டே சென்று விடுகிறாள்.
அந்த ஊரின் பேருந்து நிலையத்தில் அவள் பேருந்து ஏறப் போகும்பொழுது, 'ஒரு தவறு நிகழ்ந்து விட்டது' எனக் கூறி அழைத்துச் செல்கிறார்கள். அங்கே சென்றால், அவள் மாமா தூக்கில் தொங்குகிறார். கொஞ்ச நாட்கள் கழித்து, தலைமை சிஸ்டர் வந்து 'திரும்பவும் நீ அங்கே வர வேண்டும்' எனச் சொல்ல, அவள் மறுத்து விடுகிறாள். இறந்து போன மாமாவின் மகனும் தன் காதலியுடன் அங்கேயே வந்து தங்கி கொள்கிறான். கொஞ்ச நாளில் அவன் காதலி பிரிந்து சென்று விடுகிறாள். அதற்க்கு அவள் சொன்ன காரணம் 'நீ விர்டியானாவை காதலிக்கிறாய்' என்பது.

விர்டியானாவோ தன் சேவை நோக்கத்தில் குறியாக இருக்கிறாள். ஊரில் உள்ளே பிச்சைக் காரர்களைத் அழைத்து வந்து, ஒரு இல்லம் மாதிரி ஆரம்பிக்கிறாள் மாமாவின் வீட்டை ஒட்டி இருந்த ஓர் அறை ஒன்றில். ஒன்றாக இருக்கும் அவர்களுக்குள் அடிக்கடி சண்டைகள் நடக்கிறது. கையில் ஒரு தொற்று நோய் போல வந்த ஒருவனை அடித்து விரட்டுகிறார்கள். சிறு சிறு வேலைகளைச் செய்ய விர்டியானா அவர்களைப் பழக்கப் படுத்துகிறாள். இவர்களின் தொந்தரவு தாங்க முடியாமல், அங்கே பணி செய்து கொண்டிருக்கும் பணியாளர்களும் விலகி விடுகிறார்கள். ரோமனா மட்டும் தன் மகளுடன் அங்கேயே வசிக்கிறாள்.

ஒருநாள், வழக்கறிஞரைக் காண மாமாவின் மகன் ஜார்ஜ், விர்டியானா, ரோமனா மற்றும் ரீட்டா அனைவரும் வீட்டை பூட்டி விட்டு கிளம்பி விடுகின்றனர். அடுத்த நாள் காலையில் தான் வருவோம் எனக் கூறி விட்டு செல்கின்றனர். சந்தோசபட்ட பிச்சைக் காரர்கள், வீட்டுக்குள் சென்று எல்லாவற்றையும் எடுத்துப் பார்க்கின்றனர். இரவு விருந்தும் அங்கேயே நடக்கிறது. டேபிள் முழுவதும் உணவுகளும், மது வகைகளும் நிரம்பி இருக்க எல்லாரும் சந்தோசமாக இருக்கின்றனர். சிறு சிறு சண்டைகளும் நடக்கின்றன. இதில் கண் தெரியாத ஒருவனின் மனைவியை, இன்னொருத்தன் தள்ளிக் கொண்டு போக, இதை அவனிடம் இன்னொருவன் சொல்லிவிட, அவன் கோபத்தில் டேபிளில் இருந்த எல்லாவற்றையும் அடித்து நொறுக்குகிறான்.கொஞ்ச நேரத்தில், அடுத்த நாள் வருவோம் என்று சொன்னவர்கள் அந்த இரவே அங்கே வந்துவிடுகிறார்கள் அப்பொழுது. ஜார்ஜைக் கண்டதும் ஒவ்வொருவராக வெளியேறுகின்றனர், மது குடித்த மயக்கத்தில். இன்னொரு அறைக்கு செல்லும் ஜார்ஜை மறைந்து இருந்த இரண்டு பிச்சைகாரர்கள் தலையில் அடிக்க, அவனும் மயங்கி விழ, அங்கே வருகிறாள் விர்டியானா. விர்டியானாவைக் கண்டதும் அவர்கள் இருவரும், அவளை அடைய முயல்கிறார்கள். அவள் மயங்கி கட்டிலில் விழுகிறாள். மயக்கம் தெளிந்த ஜார்ஜ், இன்னொரு பிச்சைகாரனிடம், விர்டியானா மேல் கிடக்கும் அவனை கொன்றால் உனக்கு பணம் தருவேன் எனக் கூற, அவனும் இன்னொருவனை அடித்துக் கொல்கிறான்.

போலீசைக் கூட்டி வரச் சென்ற ரோமனாவும், ரீட்டாவும் திரும்பி வர அடுத்த காட்சிக்கு படம் நகர்கிறது. ஜார்ஜை விட்டு, விலகி விலகிப் போகும் விர்டியானா, தன் மீது தானே விதித்துக் கொண்ட கட்டுப்பாடுகளைத் துறந்து விட்டு ஜார்ஜுடன் நெருங்கிப் பழகுவதுடன் படம் முடிவுக்கு வருகிறது.சிறுமியான ரீட்டா, எப்பொழுதும் ஒரு மரத்தினடியில் கயிறு தாண்டிக் குதித்து விளையாடிக் கொண்டிருப்பாள். அந்தக் கயிற்றில்தான் மாமா தூக்கு போட்டு இறந்திருப்பார். அதே கயிற்றில் திரும்பவும் விளையாடுவாள் ரீட்டா. அதே கயிற்றை, விர்டியானா கூட்டி வரும் பிச்சைக்காரன் ஒருவன் இடுப்பில் கட்டிக்கொள்வான். விர்டியானாவை அந்தப் பிச்சைக்காரன் பலாத்காரம் செய்ய முயற்சிக்கும் பொழுது அந்தக் கயிறு விர்டியானவின் கையில் இருக்கும்.

அந்தப் பிச்சைகாரர்கள் உணவருந்தும் அந்தக் காட்சியை, இயேசுவின் இரவு விருந்தை நினைவுக்கு கொண்டுவருவது போல இருக்கும். அவரையும் சிலுவை சுமக்க வைத்தார்கள். அதற்க்கு பதிலாக, இத்தனை நாட்களாக கட்டுப்பாடுடன் இருந்த விர்டியானவை, அவள் சோறு போட்டு தங்க வைத்திருந்த ஒருவனே அடைய முயல்வான்.

படத்தின் இறுதியில், ரீட்டா பழைய பொருட்கள் எரிந்து கொண்டிருக்கும் தீயில், விர்டியானா வைத்து வணங்கிக் கொண்டிருந்த இயேசுவின் முள் கிரீடத்தை வைத்து விளையாடும்போது, அதில் இருந்த முள் குத்திவிட, தீயில் வீசி விடுவாள். இனி, ரீட்டா போன்ற சிறுமிகள் அந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள், விர்டியானாவைப் போல.ரோமனா, ஜார்ஜ் மற்றும் விர்டியானா மூவரும் சீட்டு விளையாடுவதுதான் இறுதிக் காட்சி. நமது வாழ்க்கையும் சீட்டாட்டம் போலத்தான், நாம் எடுக்கும் வரை சீட்டில் இருப்பது என்ன என நமக்குத் தெரியாவிட்டாலும் சீட்டுகள் நம்  கையில்தான் இருக்கின்றன.