Monday, May 30, 2011

ஜோசியம்


"எட்டாமிடத்தில் சனி இருக்க துன்பம் போகுமப்பா
நாலாமிடத்தில் செவ்வாய் இருக்க"
எனப் பாடிக் கொண்டே சென்றார் ஜோசியர். அவருடைய பேர் என்னவென்றே எனக்கு தெரியாது. ஆனால் ஜோசியர் என்றால் ஊருக்கே தெரியும்.

சுற்றி உட்கார்ந்து இருந்த அனைவரும் அவரையே உற்று பார்த்து கொண்டிருந்தோம். கணீரென்ற குரல், வயதாகி விட்டதால் சற்று பிசிறடித்தது. கிருபானந்த வாரியாருக்கு அண்ணன் போலிருப்பார். நான் பார்த்த முதல் சுருட்டு பிடித்தவர் இவர்தான். பக்கத்தில் போனாலே சுருட்டு வாசம் வீசும். மனைவி மகன் இல்லாததால் தனியாகத்தான் இருந்தார். அவராகவே சமைத்து கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தார். பக்கத்துக்கு ஊரில் இருந்தெல்லாம் சிலர் வந்து ஜோசியம் கேட்டு விட்டு போவார்கள். ஒரு சிலர், பைக்கில் உட்கார வைத்து வீட்டுக்கே கூட்டிபோய் ஜோசியம் பார்த்துவிட்டு திரும்ப கொண்டு வந்து விடுவார்கள்.

எங்கள் வீட்டுக்கு மாமா அத்தை மற்றும் சில சொந்த காரர்கள் வந்தால் ஜோசியம் பார்க்க வேண்டும் என்பார்கள். உடனே என்னை அவருடைய வீட்டுக்கு அனுப்பி, அவரை வர சொல்லுவார்கள். நானும் போவேன்.

"அப்பா, ஜோசியம் பார்க்கனும்னாங்க... உங்கள ஊட்டுக்கு வரசொன்னாங்க... "

"சரி.. சரி.. வர்றேன் போ.. கொஞ்ச நேரத்துல வர்றேன்னு சொல்லு... " என்பார்.

கொஞ்ச நேரத்தில், கையில் ஒரு காக்கி பையுடன் வந்து சேர்வார். கெட்டியான பை, உள்ளே காகிதங்கள், பென்சில், பேனா, பஞ்சாங்கம் என்று திணித்து வைத்திருப்பார். அவர் வந்தவுடன் பாய் போடப்பட்டு, அவரும் உக்கார, அவரை சுற்றி எல்லாரும் உட்காருவோம். பார்க்க வேண்டிய ஜாதகத்தை கொடுத்தவுடன் தனியே ஒரு பேப்பரில், கட்டம் போட்டு, கூட்டல் கழித்தல் என சில நிமிடங்கள் கரையும்.அதற்குள் காப்பி கொண்டுவந்து வைத்தால், குடித்து கொண்டே மெல்ல கனைப்பார். அப்படியே பாட ஆரம்பிப்பார். சில சமயங்களில் அவருடைய பாடல்கள் புரியும், சிலது புரியாது. ஆனால் பாட்டை முடித்து விட்டு, விளக்கமாக ஜோசியம் சொல்லுவார்.

தொழில் எப்படி நடக்கும், கல்யாணம் நடக்குமா, பொண்ணு எந்த திசையில் இருந்து வரும் என்று அவரிடம் வீசப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லுவார். கேள்விகள் தீர்ந்த பின், ஒரு கனத்த அமைதி நிலவும். பஞ்சாங்கம், பேனா என எல்லாவற்றையும் எடுத்து அவருடைய பையில் போட்டுகொள்வார். ஒரு தட்டில் வெத்தலை பாக்குடன் பணம் வைத்தால், வெத்தலையோடு சேர்ந்து பணத்தை எடுத்து மடியில் கட்டிக் கொள்வார்.

எங்கப்பாவுக்கு ஜோசியம் தெரியும் என்பதால், ஜோசியம் சொல்லிவிட்டு "என்ன.. நான் சொல்லுறது சரிதானே.. " என்று அப்பாவை பார்ப்பார். அப்பாவும், சிரித்துகொண்டே "நீங்க சொன்னா.. சரிதான்" என்பார். அப்பாவுக்கு ஜோசியம் தெரியும் என்றாலும் அவர் அதை தொழிலாக செய்யவில்லை. அதை ஒரு பொழுதுபோக்காக கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு நல்ல நேரம் பார்த்துக் கொடுப்பது, நல்ல நாள் குறித்து கொடுப்பார். ஒருசிலர், ஜாதகத்தை கொண்டு வந்து அப்பாவிடம் பொருத்தம் பார்க்க சொல்லுவார்கள். மணி கணக்கில் அவர்களுடன் உட்கார்ந்து, ஒவ்வொரு கட்டத்தையும் அவர்களுக்கு விளக்கி சொல்லி விட்டு கடைசியில், "எதுக்கும்.. இன்னொரு ஜோசியரை பார்த்து கேட்டுக்கங்க.." என்பார். வந்தவர்களும் சரி என்பார்கள்.

எனவே, எங்கள் வீட்டில் எப்பொழுதும் பஞ்சாங்கம் இருக்கும். அதுவும் இருபது, முப்பது வருடத்திய பழைய பஞ்சங்கங்கள் ஒரு கயிற்றில் கட்டப்பட்டு அட்டாரியில் இருக்கும்.

சில சமயங்களில் ஜோசியரை கூட்டி செல்பவர்கள் வீட்டில் பஞ்சாங்கம் இருக்காது. இல்லை, அவருக்கு வேண்டியது பழைய பஞ்சாங்கமாக இருக்கும். உடனே, ஒரு காகிதத்தில் வருடத்தின் பெயரை குறிப்பிட்டு எங்கள் வீட்டுக்கு ஆளை அனுப்புவார். எங்கள் வீட்டு அட்டாரியில் இருந்து அந்த வருடத்தியதை தேடி எடுத்து குடுப்போம்.

ஒரு நாள் வீட்டுக்கு வெளியில் உட்கார்ந்து பேசி கொண்டிருந்தோம். அப்போது, ஜோசியரை வண்டியில் உட்கார வைத்து கூட்டிச் சென்றார்கள்.

"ம்ம்.. இன்னைக்கு ஜோசியர் காட்டுல மழைதான்"

"ஆமா.. வாங்குற பணத்தை என்ன பண்ணுவாரு .. அவரே ஒன்டிகட்டைதான்.." என்றது பக்கத்து வீடு.

"வாரமான கறி, தெனமும் சுருட்டுன்னு மனுஷன் இஷ்டத்துக்கு செலவு செய்யுறார்... மீதி பணத்தையெல்லாம் பொட்டில போட்டு வெச்சுகுவரோ என்னமோ... "

தள்ளாத வயதிலும், தனியாகவே சமைத்து கொண்டு வாழ்ந்து வந்தவர், உடம்பு முடியாமல் படுத்து அடுத்த இரண்டு வாரத்திலேயே போய் சேர்ந்து விட்டார். ஊருக்கெல்லாம் நல்ல நாள் பார்த்து சொன்னவர் எந்த நேரத்தில் இறந்திருப்பார் என்று தெரியவில்லை. மனிதன் பிறப்பதும், இறப்பதும் நல்ல நேரம் பார்த்து நடப்பது இல்லை. இதற்கு இடைப்பட்ட காலத்தில்தான் எல்லாவற்றுக்கும் நல்ல நேரம் தேவைபடுகிறது.

" தகர பொட்டில.. அரிசி பானையில.. எங்கே பார்த்தாலும் பணம் இருந்துச்சாமா.. " என்று ஊரே பேசி கொண்டது. எப்போதும் அவருடைய வீட்டை விட்டு தள்ளி உள்ள ஒரு திறந்தவெளி திண்ணையில் தான் அவர் ஜோசியம் சொல்லுவார். இப்பொழுது அந்த திண்ணை யாருமில்லாமல் வெறுமையாக இருந்தது. இன்னொரு ஜோசியர் அந்த திண்ணைக்கு வந்து ஜோசியம் பார்க்க சாத்தியமேயில்லை .

காலம் அங்கே தனது ஜாதகத்தை காற்றில் எழுதி கொண்டிருந்தது கூட்டல், கழித்தல்களுடன்.

இந்தப் பதிவு ஒரு மீள்பதிவு.

படங்கள்: இணையத்தில் இருந்து. நன்றி

Tuesday, May 24, 2011

காதல் செய்வீர் உலகத்தீரே ! - 4


அனைவரின்
காலடித் தடங்களையும்
உள் வாங்கிக் கொண்டு
அமைதியாக கிடக்கும்
கடற்கரை ஈர மணல் போல்
நீ பேசிய சொற்களை
அசைபோட்டுக் கொண்டே
ஆழ்ந்து கிடக்கிறேன் !


படம்: இணையத்தில் இருந்து. நன்றி


Thursday, May 19, 2011

எனது டைரியிலிருந்து - 2

குறையொன்றுமில்லை
சு.வெங்குட்டுவன் (ஆனந்த விகடன்)

வழக்கம்போல் இம்முறையும்
வானம் பொய்த்திருக்கும்

இருக்கும் தண்ணிக்கு
வெச்சுள்ள கத்தரியில்
இலைச்சுருட்டை விழுந்திருக்கும்

நிலவள வங்கியின்
நகை ஏல அறிவிப்பு
தபால்கார்டில் வந்து சேரும்

காதுகுத்தும் பிள்ளைக்கு
தோடு போடவேண்டுமென
இளைய தங்கை சொல்லிப்போவாள்

முகங்கண்ட மறுகணமே
அம்மாவென குரலெழுப்பும்
காளைகளை விற்றுவிட்டு
ஊர் திரும்புவாய்

நீ விரும்பிய பெண்
தான் விரும்பும் புருசனுடன்
பஸ் ஸ்டாண்டில் எதிர்ப்படுவாள்

திரும்பி நிற்கும்
உன்னிடத்தே
வலிய வந்து உரையாடி
சௌக்கியமா எனக் கேட்பாள்

நல்ல சௌக்கியம் என்று சொல்.

**********************************************************************

பாலபாரதி
ஆனந்த விகடன்

ஜிலீர்

ஆசிரியராகும் கனவு
உடைந்து நொறுங்கியது
அரசு மது பாட்டில்களை
அடுக்கி வைக்கும்
வேலையில்...

**********************************************************************

மறதி

கற்புக்கரசி
கண்ணகி, சீதை
நளாயினி
பெயரெல்லாம்
நினைவில் நிற்கிறது

கற்றுக்கொடுத்த
தமிழ் ஆசிரியை
பெயர்தான்
மறந்துவிட்டது

**********************************************************************

நன்றி

பேருந்து நெரிசலில்
சிக்கித் தவித்த அந்த
தாயிடமிருந்து
குழந்தையை வாங்கினேன்

இறங்கிச் செல்கையில்
நன்றியோடு பார்த்தாள்
கைப்பிள்ளையின்
கால் கொலுசைத்
தடவியபடி!

**********************************************************************

அடிதடி விநாயகர்

வங்கியின் முன்னால்
செல்வ விநாயகர்

நீதிமன்ற வளாகத்தில்
நீதி தரும் விநாயகர்

மருத்துவமனையில்
வினை தீர்க்கும் விநாயகர்

வழியோரங்களில்
வழி விடும் பிள்ளையார்

குளத்தங்கரையில்
அரச மரத்துப் பிள்ளையார்

அவரவர் இடத்தில்
அகலாமல் இருந்தனர்

நேற்று
ஆயுதப் படை சூழ
ஊர்வலமாக வந்து
கடலிலே கரைந்தார்
அரசியல் பிள்ளையார்!

**********************************************************************

மாற்று

கிராமத்து
வீடுகளில் கூட
ஹார்லிக்ஸ்
காம்ப்ளான்
பாட்டில்கள்....

ஒன்றில் உப்பும்
இன்னொன்றில்
ஊறுகாயுமாக !

**********************************************************************


Monday, May 9, 2011

ஓர் இளம் விஞ்ஞானி

போன வாரத்தில் ஒரு நாள் பாலாஜி என்னும் சிறுவன் சில அறிவியல் கருவிகளைக் கண்டுபிடித்து, அதற்கு பரிசுகள் பெற்றுள்ளதாகவும், அந்த சிறுவனுக்கு சில உதவிகள் தேவைப் படுவதாகவும், நேரம் இருக்கும்போது நேரில் அவனைச் சந்திக்க வாருங்கள் என்றார்கள் நண்பர் ஒருவர். அன்று மாலையே நானும், கமலக்கண்ணனும் அப்பையனின் வீட்டுக்குப் புறப்பட்டோம்.

கோவை அருகிலுள்ள, அன்னூரில் இருந்து தென்னம்பாளையம் செல்லும் வழியில் வாகரயாம்பாளையம் என்னும் சிறு ஊரில் இருக்கிறது பாலாஜியின் வீடு. அப்பாவுக்கு நெசவுத் தொழில். பாலாஜி ஒன்பதாம் வகுப்பும், அவனின் தம்பி ஹரிஹரன் எட்டாம் வகுப்பும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அவர்கள் வீட்டுக்குப் போனதும், அவன் வாங்கிய சான்றிதழ்கள், கேடயங்களைக் கொண்டு வந்து காண்பித்தான் பாலாஜி.

நாங்கள் வருகிறோம் என்று தகவல் சொல்லியிருந்ததால் ஓரத்தில் ஒரு ஸ்டூலின் மீது, ஒரு கருவி மாதிரி வைத்திருந்தான். அதைப் பற்றி பேச ஆரம்பித்தான்.


(தம்பி ஹரிஹரனுடன், பாலாஜி - கருவியைப் பற்றி விளக்குகிறான்)

"இதுக்கு பெயர் கார்பநேட்டர். அதாவது தமிழில் புகைநீக்கி, இதைப் பயன்படுத்தி நாம் காற்றில் கலந்துள்ள மாசுவைக் குறைக்கலாம். புவி வெப்ப மயமாதலைக் குறைக்க முடியும். கார்பநேட்டர் என்பது கார்பன்-டை-ஆக்சிடை(CO2) சோடியம் ஹைற்றாக்சைடின் (NaOH) உதவியுடன் சோடியம்-பை-கார்பனேட் (NaCO3)ஆக மாற்றும் கருவியாகும்.

இதன் அமைப்பு ஆங்கில எழுத்தாகிய T -ஐ தலைகீழாக கவிழ்த்த வடிவமாகும். இதன் மேல் உள்ள புனல் மூலம் NaoH-ஐ ஊற்றும்போது, CO2-வை கரைத்து NaCO3 ஆக மாறுகிறது. இதனை நாம் குளிர்வித்து வெளிக்காற்றின் மூலம் CO2 ஐ தனியாக பிரித்து -72 C ல் குளிர்ரூட்டும் போது நமக்கு உலர் பனிக்கட்டி கிடைக்கிறது. இதனை நாம் கடலுக்கு அடியில் செலுத்த வேண்டும். இது கடல் நீரில் கரையாது.

இதன் மூலம் காற்று மாசுபடுதல் குறைகிறது. புவி வெப்ப மயமாதல் குறைகிறது." என்று கூறி முடித்தான். இந்த மாடலுக்கு, ஒரு கல்லூரியில் நடந்த அறிவியல் விழாவில் "பெஸ்ட் மாடல்" விருது கிடைத்திருப்பதாக கூறினான்.எங்களுக்கு மிகவும் ஆச்சரியம், இவ்வளவு சிறு வயதில் எப்படியெல்லாம் அறிவியலைப் புரிந்து கொண்டிருக்கிறான் என்று. தம்பி ஹரிஹரனும் அவ்வபொழுது அவனுக்கு உதவி செய்கிறான் என்றும் கூறினான். இருவரும் அதே ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.


பாலாஜியின் அப்பாவும், அம்மாவும் கூறும்பொழுது "எங்களுக்கு இவர்கள் சொல்வது, செய்வது ஒன்றும் புரிவதில்லை. அதைப் புரிந்து கொள்ளுமளவு கல்வியும் எங்களுக்கு இல்லை. நிறைய பரிசும், சான்றிதழ்களும் வாங்கியிருக்கிறான். இந்த நெசவுத் தொழிலை வைத்துக்கொண்டு இவனுக்கு தேவைப்படும் கருவிகளையோ, அல்லது மற்ற புத்தகங்களையோ எங்கு கிடைக்கும் என்பது கூட எங்களுக்குத் தெரியாது. சில சமயங்களில், ப்ரொவ்சிங் சென்டருக்குப் போய் இவனே நெட்டில் தேடி விசயங்களைப் புரிந்து கொள்வான். இப்ப கூடப் பாருங்க, சோலார் கார் மாடல் செய்ய வேண்டும் என்கிறான். அந்தப் பொருட்களை எல்லாம் எங்கு வாங்குவது, அதற்குத் தேவையான பணம் என நிறைய பிரச்சினைகள்" என்றார்கள்.

"என்ன பாலாஜி, சோலார் மாடல் செய்ய போறாயா?" என்றோம்.

"ஆமாங்க சார்" என்றான்.

"சரி. .அதுக்கு என்ன என்ன வேணும்னு தெரியுமா.. ?" என்று கேட்டதும், பாலாஜியின் அம்மா "அதெல்லாம் எழுதி வெச்சிருக்காங்க. பாலாஜி அத எடுத்துட்டு வா" என்றதும்.. ஒரு தாளை எங்கள் முன் நீட்டினான்.12v சோலார் பேனல்
2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வீல்
12v பாட்டரி
காரின் தளம்
Driller
ஸ்பீடோ மீட்டர்
வோல்டேஜ் மீட்டர்
ஸ்டீரிங் செட்
Headlights, Indicators, Wire, Switches.

இவற்றில் எதுவும் புதிதாக கூட வேண்டாம். ஏற்கனவே உபயோகப் படுத்தியது, Second Hand என்றாலும் எனக்கு அது போதுமென்கிறான் பாலாஜி. மேற்கண்ட உபகரணங்கள் கிடைத்தால் பள்ளி விடுமுறையில் செய்து முடித்துவிடுவேன் என்றும் சொன்னான்.

"சரிப்பா.. நாங்கள், எங்களின் நண்பர்களிடம் கேட்டுப் பார்க்கிறோம்.. விரைவில் திரும்ப வருகிறோம்" என்று விடைகூறிப் புறப்பட்டோம். கிளம்பும்போது.. "பசங்க என்ன என்னமோ செய்யுறாங்க.. எல்லோரும் பாராட்டுறாங்க.. ஆனா, அவங்க வேணும்னு சொல்லுறத வாங்கிக் கொடுக்க கூட எங்களால முடியறதில்ல" என்று வருத்தப்பட்டார்கள் பாலாஜியின் அம்மாவும், அப்பாவும். "கவலைப்படாமல் இருங்கள்.." என்று சொல்லிவிட்டு நாங்கள் விடை பெற்றோம்.

சினிமா, விளையாட்டு, டிவி என பொழுதுபோக்கும் மாணவர்களுக்கு மத்தியில், அறிவியல் மீது ஆர்வம் கொண்ட சில மாணவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் ஆர்வத்துக்கு தீனி போட, சரியான வழிகாட்டுதல்கள் இல்லை.

அன்பு நண்பர்களே,
உங்களால் இந்த மாணவனுக்கு உதவ முடிந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்,
மேற்கண்ட உபகரணங்கள் உங்களிடம் உபயோகப் படுத்தாமல் இருந்தால் உதவுங்கள்,
அறிவியல் துறையில் நீங்கள் இயங்கிக் கொண்டிருந்தால், உங்களின் எண்ணங்களை இம்மாணவனுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி.

விழுதுகள்
29 , மறைமலை அடிகள் வீதி,
புன்செய் புளியம்பட்டி,
ஈரோடு மாவட்டம்.

கமலக் கண்ணன் - 75021 97899
இளங்கோ - 98431 70925


Thursday, May 5, 2011

கதையெனும் நதியில் - 2

. மாதவன்
பாச்சி

ஒரு கடைத்தெருவில் வாழ்ந்து வரும் ஒருவனைப் பற்றியும், அவன் வளர்த்த பாச்சி என்ற நாயைப் பற்றியும் கதை சொல்கிறது. எந்த சொந்தமும் இல்லாத தெருவோரத்தில் வாழ்ந்து வரும் நாணுவுக்கு, பாச்சி வந்த பிறகுதான் ஒரு வேலையும் தங்க இடமும் கிடைக்கிறது. கதையின் முதல் வரியே 'பாச்சி செத்துப் போய்விட்டாள்' என்றுதான் ஆரம்பிக்கிறது.

சக மனிதனை மதிக்கத் தெரியாத உலகத்தில், கதியற்று இருப்பவர்களுக்கு செல்லப் பிராணிகள் தானே ஆறுதலைத் தர முடியும். பொய் சொல்லத் தெரியாத, எதையும் எதிர்பார்க்கத் தெரியாத 'பாச்சி' போன்ற விலங்குகள் தான் உலகில் மொழியும், சொற்களும் இல்லாத அன்பை, வாலாட்டிக் கொண்டு தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.

பெருமாள் முருகன்
குமரேசனின் அதிர்ஷ்டங்கள் நான்கு

ஒரு சிலரை நீங்கள் கவனித்திருக்கலாம், ஒரு பொருள் எங்கே இருந்ததோ அங்கேயே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். எதிலும் ஒரு ஒழுங்கை கடைபிடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். கொஞ்சம் மாறி இருந்தால் கூட, கோபத்தில் யாரை வேண்டுமென்றாலும் திட்டுவார்கள். அவர்களுக்குத் தெரிந்தது அது அது அங்கங்கே இருக்க வேண்டும். இந்த ஒழுங்கு சில வேளைகளில் நன்றாக இருக்கும். ஆனால், எதற்கு எடுத்தாலும் ஒழுங்கு வேண்டும் என எதிர்பார்த்தால்?.

இந்தக் கதையில் வரும் குமரேசன் ஒரு ஆசிரியன், இவனின் ஒழுங்கைப் பற்றிச் சொல்ல வேண்டுமெனில், பள்ளிக்கூடத்தில் கழிவறைக்கு ஒருவன் பின் ஒருவராக மாணவரைப் போகச் சொல்கிறான். அதையும் கண்காணிக்கும்போது, ஒரு மாணவன் அவசரம் எனச் சொல்ல, அதெல்லாம் முடியாது, வரிசையில் தான் வர வேண்டும். முன்னால் எல்லாம் விட முடியாது எனக் கூறுகிறான். மற்ற ஆசிரியர்கள், 'பாவம் அவனை விட்டு விடுங்கள்.. முன்னால் போகட்டும்' என்கிறார்கள். 'இவனைப் போலவே எல்லாரும் அவசரம் என்று சொன்னால் என்ன செய்ய முடியும்?' எனக் கேட்கிறான், அந்த ஆசிரியர்களிடம் பதிலில்லை, ஏன் நம்மிடம் கூடப் பதிலில்லை.

வீடு, மனைவி, வேலை செய்யும் இடம் என எல்லா இடத்திலும் ஒழுங்கை எதிர்பார்க்கும் குமரேசன் எப்படி திருந்தினான்.. கதையைப் படித்துப் பாருங்கள்.

எஸ். ராமகிருஷ்ணன்
புத்தனாவது சுலபம்

எல்லா அப்பாக்களுமே மகனைப் பற்றிய பயத்தில்தான் இருக்கிறார்கள். அவன் விரும்பிச் செய்தாலும், அது நல்லாதாகவே இருந்தாலும், அவர்களின் கண்ணோட்டத்தில் 'இப்படி ஆகிவிடுமோ, அப்படி ஆகிவிடுமோ' என நினைப்பார்கள்.

இந்தக் கதையும் ஒரு தகப்பனின் புலம்பல்தான். ஒருவேளை நமது அப்பா மட்டுமல்ல, உலகத்தில் உள்ள எல்லா அப்பாக்களுமே இப்படித்தான் இருப்பார்களோ என நினைக்க வைக்கும் கதை.


Monday, May 2, 2011

தண்ணீர் - அசோகமித்திரன்தண்ணீர். ஓர் அறிவுள்ள உயிரிலிருந்து எல்லா உயிர்களுக்கும் ஆதாரம் தண்ணீர் மட்டுமே. 'தண்ணீர்' நாவலின் முன்னுரையில் அசோகமித்திரன் அவர்கள்; 'வாழ்க்கையில் உன்னதமானதெல்லாம் இலவசம் என்ற பழமொழி அன்று உண்டு' என்று கூறுகிறார். இலவசமாக இருந்த தண்ணீர், வரி விதிக்கப்பட்ட பொருளாக மாறிய காலத்தில் நாம் இருக்கிறோம்.

நட்ட நடு இரவில் தண்ணீர் வரும். எழுந்து பிடித்து வைக்க வேண்டும். ஒரு வாரம் குழாயில் வரவில்லை என்றால், லாரி தண்ணி பிடிக்க வரிசையில் நிற்க வேண்டும். குடிப்பதற்கு சரி, மற்ற வேலைகளுக்கு; அதற்கு உப்புத் தண்ணீர். குடம் ஒரு ரூபாய் என வாங்க வேண்டும். பிடித்த தண்ணீரை சிக்கனமாக புழங்க வேண்டும். தண்ணீர்ப் பிரச்சினையும் இருந்து, அந்த இடத்தில் வாடகைக்கு குடியிருப்போரின் நிலைமை, அதோ கதிதான். அதிலும் கோடை காலத்தில், தண்ணிக்கு வீதி வீதியாக குடங்களை தூக்கிக் கொண்டு போவததைத் தவிர வேறு வழியே இல்லை.

தண்ணீருக்கு அலைந்த கதைகளைச் சொன்னால் அதற்கு முடிவேயில்லை. அதிலும் சென்னை போன்ற மாநகரங்களில், எப்பொழுது தண்ணீர் வருமெனத் தெரியாத குழாய்; குடம் ஒரு ரூபாய் என விற்கும் வீட்டுக்காரர்கள்; காலிக் குடங்களை வாங்கிக் கொண்டு போய் காசுக்கு பொதுக் குழாயில் நிரப்பிக் கொண்டு வரும் வண்டிக்காரர்கள்; சாக்கடையும், குழாய் மேடையும் ஒன்றாகவே இருக்கும் பொதுக் குழாய்கள்; ஒரு குடம் தண்ணிக்கு அரை மணி நேரம் வரிசையில் நிற்பது; அங்கே வரும் நீ முந்தி, நான் முந்தி சண்டைகள்; கெட்ட வார்த்தைகள்; வரிசையில் நிற்கும் வயதானவர்களின் இயலாமை என, இந்த தண்ணீரைச் சுற்றிதான் எவ்வளவு பிரச்சினைகள். கிராமம், நகரம் என்று இல்லை. எல்லா ஊரிலும் தண்ணீர் பிரச்சினை சொல்லி மாளாது.

ஆற்றில் தண்ணீர் இல்லை. ஆனால், கடைகளில் ஒரு லிட்டர், ரெண்டு லிட்டர், நாப்பது லிட்டர் என பாட்டில்களில் அடுக்கி வைத்திருக்கிறார்கள். எங்கிருந்துதான் கிடைக்குமோ?.

நாவலைப் பற்றிச் சொல்ல வந்து, தண்ணீர் பிரச்சினைகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நாவலில் முழுவதும் வருவதும், தண்ணீர் மற்றும் அதற்கு அலைவது தான். அதாவது நாவலின் கதைப் போக்கு வேறு என்றாலும், 'நீரின்றி அமையாது இந்த உலகு' போல தண்ணீரும் கூடவே வருகிறது.

ஜமுனாவும், சாயாவும் சகோதரிகள். ஜமுனா மூத்தவள், பாஸ்கர் என்பவனுடன், அவன் ஏற்கனவே கல்யாணம் ஆனவன் என்பது தெரியாமல் பழகி, தெரிந்த பின்னரும் அவனை ஒதுக்க முடியாமல், அவன் வரும்போதெல்லாம் வெளியே அவனுடன் செல்கிறாள். அவன் சினிமாவில் அவளுக்கு கதாநாயகி வேடம் வாங்கித் தருவதாகவே இத்தனை நாட்களாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறான்.

சாயா படித்தவள். அவளுக்கும் கல்யாணம் ஆகி, கணவன் மிலிடரியில் இருக்கிறான். அவன் இந்த வருடம் வருகிறேன் என்று சொல்லியிருப்பதாக சொல்லிக் கொண்டிருக்கிறாள் சாயா. அவளுக்கு ஒரு பையனும் உண்டு. சாயா வேலைக்குச் செல்வதால், பையனை அவளின் அம்மா வீட்டில் விட்டிருக்கிறாள். அம்மாவுக்கும் புத்தி சுவாதீனம் இல்லாமலிருப்பதால், பாட்டியும், மாமாவும் பார்த்துக் கொள்வதால், சாயாவும், ஜமுனாவும் தனியே வசித்து வருகிறார்கள்.

பாஸ்கர் அடிக்கடி ஜமுனாவைப் பார்க்க வருவது, சாயாவுக்குப் பிடிக்காமல் அவள் விடுதிக்குப் போகிறாள். தற்கொலை எண்ணத்தில் இருக்கும் ஜமுனாவை, பக்கத்துக்கு வீட்டு டீச்சரம்மா தேற்றுகிறாள்.

இவ்வளவு பிரச்சினைகளுக்கும் இடையில் தண்ணீர் பிரச்சினையும் ஓடிக் கொண்டிருக்கிறது.

இறுதியில், ஜமுனா என்ன ஆனாள் ?
சாயா அவளிடம் திரும்ப வந்து விட்டாளா ?
சாயாவின் கணவன் மிலிடரியில் இருந்து திரும்ப வந்தானா?
சாயாவின் பையன் என்ன ஆனான்?
பாஸ்கர் என்ன ஆனான்?

நாவலைப் படித்துப் பாருங்கள்.

நாவலில் ஓரிடத்தில்; "இப்போ பகவானே வந்தாக் கூட கொஞ்சம் திண்ணையில் காத்திருங்கோ, குழாயிலே தண்ணி வரதை நன்னா பார்த்துட்டு வரோம்ன்னுதான் சொல்லுவோம்".

இன்னொரு இடத்தில், ஜமுனாவைத் தேற்றும் டீச்சர், வீதியில் இரண்டு குழந்தைகள் தனது தேவைக்கும், சக்திக்கும் அதிகமான தண்ணீரை கொண்டு செல்வதைப் பற்றி பேசும் காட்சி, தன்னம்பிக்கை வர வைக்கக் கூடிய இடம்.

நடு இரவில் கொட்டும் மழையில், மழைத் தண்ணீர் பிடிக்க எழுப்பும் மனைவி, வீட்டுக்கார அம்மாள், டீச்சரின் மாமியார், கணவன், ஜமுனாவின் அம்மா, பாட்டி என ஒவ்வொரு பாத்திரமும் அதன் கதை சொல்லலும் அருமை.

தண்ணீர் போகும் போக்கிலே தான் நமது வாழ்க்கையும் செல்வது போலத் தோன்றுகிறது.

தண்ணீர்
அசோகமித்திரன்
கிழக்கு பதிப்பகம்
விலை: ரூபாய் நூறு.