Showing posts with label பாரம்பரிய உணவுகள். Show all posts
Showing posts with label பாரம்பரிய உணவுகள். Show all posts

Friday, April 10, 2015

கருப்பு கொள்ளு

இளைத்தவனுக்கு எள்ளும், கொழுத்தவனுக்கு கொள்ளும் - என்று சொல்லுவார்கள். கால்சியம், இரும்புச் சத்துக்கள் அதிகமாகவும், கொழுப்புச் சத்துக்கள் குறைவாகவும் இருப்பதால் நம் முன்னோர்கள் இப்படிச் சொல்லி வைத்திருக்கிறார்கள். சாதரணமாக நாம் காணக்கூடிய சிவப்பு நிறக் கொள்ளைக் காட்டிலும், அதிக சத்துக்கள் நிறைந்தது கருப்பு நிறக் கொள்ளு.

கொள்ளு ரசம், பருப்பு, துவையல் என சிவப்பு நிறக் கொள்ளைப் போலவே இதிலும் செய்யலாம். சளி, இருமல் போன்ற தொந்திரவுகள் இருக்கும்போது, கிராமப்புறங்களில் இப்பொழுதும் கொள்ளுச் சாறு எனப்படும் கொள்ளு ரசம் அருந்தும் பழக்கம் இருக்கிறது.

இதன் அருமைகள் பற்றித் தெரியாமல், கொள்ளு என்றாலே தள்ளிச் செல்பவர்கள் நிறையப் பேர். இது போன்ற பாரம்பரிய உணவுகளை மறந்து விட்டு, நம் முன்னோர்கள் கேள்விப்பட்டிராத சர்க்கரை நோய், இரத்த அழுத்த நோய் போன்றவற்றுக்கு ஆட்படுகிறோம். பாரம்பரிய உணவுகளை நாம் உட்கொள்ளத் தொடங்குவோம், நோயற்ற வாழ்வை வாழ்வோம்.



கருப்பு கொள்ளு சுண்டல் 
---------------------------------------

தேவையானவை:
கருப்பு கொள்ளு - 100 கிராம் 
தாளிக்க - நல்லெண்ணெய், கடுகு, கடலை பருப்பு, வெங்காயம், மிளகாய், தேங்காய் துருவல், கருவேப்பிலை, உப்பு

செய்முறை:
------------------
கருப்பு கொள்ளை நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் குக்கரில் தண்ணீர் ஊற்றி, ஊறிய கொள்ளைப் போட்டு 7 அல்லது 8 விசில் வரும் வரை வேக விடவும். விசில் அடங்கிய பின்னர், ஒரு சட்டியில், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போடவும். கடுகு பொரிந்ததும், கருவேப்பிலை, கடலை பருப்பு போட்டு வதங்கியதும், வெங்காயம், மிளகாயைப் போட்டு வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பின்னர், வடித்து வைத்த கொள்ளைக் கொட்டி, கிளறி விடவும். தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கவும். சுவையான, சத்தான கருப்பு கொள்ளு சுண்டல் தயார்.



கொள்ளு வேகவைத்த தண்ணீர், நிறைய இருந்தால் கீழே கொட்டாமல், கொஞ்சம் எண்ணெயில் கருவேப்பிலை தாளித்து அந்த தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு உப்பு, மிளகுத் தூள் தூவி சூப்பாக குடிக்கலாம்.