அஞ்சலை - கண்மணி குணசேகரன்
'இப்படியும் ஒரு பெண்ணுக்குத் தொடர்ந்து துயரம் நேருமா?' என்று அஞ்சலை நாவலைப் படிக்கும்போது நமக்குத் தோன்றலாம். ஆனால், ஒரு கிராமத்தில், பொருளாதாரப் பின்புலம் இல்லாத குடும்பங்களில் நடக்க கூடியதுதான் என்றும் தோன்றுகிறது. இப்பொழுது அஞ்சலை போன்ற பெண்கள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அஞ்சலையைப் போன்றவர்கள் விழுந்து எழுந்து கண்ணீர்விட்டு ஈரமேறிய மண்ணைக் கொண்டது நம் கிராமங்கள். கார்குடல் கிராமத்தில், இரண்டு அக்காக்கள் மற்றும் ஒரு தம்பியுடன் பிறந்தவள் அஞ்சலை. மூத்தவர்கள் இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிவிட்டது. அடுத்தது அஞ்சலை தான். காடு தோட்டத்துக்கு வேலைக்குப் போய்க்கொண்டிருக்கும் அஞ்சலைக்கு, கல்யாணம் முடித்துவிட்டால் நிம்மதியாக இருக்கலாம் என நினைக்கிறாள் அம்மா பாக்கியம். மூத்த அக்காள் கல்யாணி தன் கொழுந்தனாருக்கு அஞ்சலையைக் கேட்கிறாள். அம்மா மறுத்துவிடுகிறாள். இரண்டாவது அக்காவின் கணவன் மணக்கொல்லை என்னும் ஊரிலிருந்து ஒரு மாப்பிள்ளையைக் கொண்டுவருகிறான். அஞ்சலையை இரண்டாம் தாரமாக கேட்டும் கொடுக்காத காரணத்தால் கோபத்திலிருக்கும் அக்கா கணவன், மாப்பிள்ளையை மாற்றிக் காட்டிவிடுக...