Wednesday, February 27, 2013

நமது மாணவர்கள்

விஜய் தொலைக்காட்சியின் 'நீயா, நானா' - மாணவர்கள் - களப் பணியாளர்கள் என்ற நிகழ்ச்சி பற்றி எழுத்தாளர் ஜெயமோகனின் இணைய தளத்தில் (அசடுகளும் மகாஅசடுகளும்) எழுதியிருந்தார். நானும் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன். மாணவர்களைப் பார்த்து அவர்களின் சிரிப்பும், அந்தப் பார்வையும்..  இவர்களுக்கு எதுவுமே தெரியவில்லை என்ற பேச்சும்... . கொடுமை.

மாணவர்களுக்கு இந்தச் சமூகம் பற்றிய பிரக்ஞை இல்லை என்றால் அது யார் குற்றம்?

மாணவர்களுக்கு, இந்த உலகம் பற்றி எதுவும் தெரியவில்லை என்றால், நாம் அதற்காக என்ன முயற்சி செய்தோம்?.

அரசியலும், கல்வியும் பணத்தின் பிடியில் இருக்கும் போது, அதற்காக நாம் என்ன செய்தோம்?

நாம் என்ன கற்றுக் கொடுத்தோமோ, அது தானே இங்கே இருக்கிறது. அவர்களின் தடுமாற்றத்தைப் பார்த்து நாமே சிரிப்பது, அவர்கள் நமது அடுத்த தலைமுறை, நம் குழந்தைகள் என்பது நமக்குத் தெரியாமல் போனதேன்.

Thursday, February 21, 2013

தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன்

தலைகீழ் விகிதங்கள் - நாவல் 'சொல்ல மறந்த கதை' யாக திரையில் பார்த்ததை விட, புத்தகத்தில் படிக்கும் பொழுது ஒவ்வொரு வரிகளாக அசை போட முடிந்தது. படம் நன்றாகவே எடுக்கப் பட்டிருந்தாலும், புத்தகத்தில் தான் அதன் உயிரோட்டத்தை அறிந்து கொள்ள முடிந்தது. ஒரே பத்தியை இரண்டு மூன்று முறை கூட திரும்ப திரும்பப்  படிக்கலாம்.

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களின் முதல் நாவலாக வெளிவந்தது இந்த தலைகீழ் விகிதங்கள்.

முன்பின் எந்த பழக்கமும் இல்லாத இருவர் மண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் பொழுது, அங்கே விட்டுக் கொடுத்தல்கள் இல்லை என்றாலோ, சரியான புரிதல் இல்லை என்றாலோ.. அவர்கள் இருவரின் வாழ்க்கையும் முள்ளில் பட்ட துணி போல மாட்டிக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கும். மருமகன் பெண் வீட்டாருக்கு புதியவன் என்றால், மருமகளோ மாப்பிள்ளை வீட்டாருக்கு புதியவளாக இருக்கிறாள்.

மாமியார் கொடுமை, நாத்தானார் கொடுமை என்றெல்லாம் மருமகள் பற்றி ஆயிரக் கணக்கில் கதைகள் எழுதப் பட்டாலும், ஒரு மருமகனின் கதையைச் சொல்லிச் செல்வது இந்த நாவல்.

*******************

மூன்று பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையுமாக இருக்கும் குடும்பத்தில் மூத்த பிள்ளையாக சிவதாணு. படித்து முடித்து வேலை தேடிக் கொண்டிருப்பவன். பெண் பிள்ளை வீட்டில் இருக்க, மற்ற இரண்டு தம்பிகளும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்பா சிதம்பரம் பிள்ளை சிறிய நிலத்தில் விவசாயம் செய்து, வரும் வருமானம் போதுமானதாக இருப்பதில்லை. தாய் செண்பகம். இவ்வளவு பேரும் கால் வயிற்றுக் கஞ்சியாவது குடிப்பது அந்த சின்ன வயல் காட்டிலிருந்து வருமானமே. எனவே, சிவதாணு வேலைக்குப் போனால் கொஞ்சம் குடும்ப பாரம் குறையும். ஆனால், அவனுக்கு இன்னும் வேலை இன்னும் கிடைக்கவில்லை.


சொக்கலிங்கம் பிள்ளை வசதியானவர். நகரத்தில் காப்பிக் கடை வருமானம். நீலாப்பிள்ளை அவரின் மனைவி. இரண்டே பெண் பிள்ளைகள். செல்வச் செழிப்பில் வளர்ந்தவர்கள். மூத்தவள் பார்வதிக்கு வரன் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இளையவள் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறாள். சொக்கலிங்கம், சிவதாணுவின்  ஊரைச் சேர்ந்த சண்முகம் பிள்ளை என்பவரிடம் தன் மகளுக்கு, படித்த நல்ல பையனாக இருந்தால் சொல்லுமாறு கூற, அவர் சிவதாணுவைப் பற்றிச் சொல்கிறார்.

வசதி இல்லாத குடும்பம் என்று தெரிந்ததும், நல்ல பையன், படித்தவன்.. நாளைக்கு சொக்கலிங்கத்தின் செல்வத்தில் பாதி அவனுக்கு தான்.. என்ற நினைப்பில் சொக்கலிங்கம் சரி என்கிறார்.மாப்பிள்ளையை தங்கள் வீட்டிலியே வைத்துக் கொள்ளலாம் எனச் சொல்லும்  நீலாப்பிள்ளை, வறுமையான குடும்பம் என்பதால்.. 'எம் பொண்ணுக்கு உருப்படியில் ஒரு பொடி தொடப்பிடாது' எனச் சொல்கிறார்.

சிவதாணுவின் வீட்டில், அப்பா அம்மாவுக்கு சந்தோசம். வேலை இல்லாமல், வீடு இருக்கும் நிலைமையில் இப்பொழுது கல்யாணம் செய்து என்ன செய்வது என முதலில் மறுக்கும் சிவதாணுவை 'அவங்கதான் உனக்கு வேலை வாங்கித் தர்றேன்னு சொல்றாங்க..நீயாவது நல்லா இருந்தால் போதும்' என்று சம்மதிக்க வைக்கிறார்கள். பெண் வீட்டில் கொஞ்சம் பணம் வாங்கியே கல்யாணம் நடத்த வேண்டிய வீட்டின் வறுமையை நினைத்துப் பார்க்கும் அவனும் அரை மனதோடு ஒத்துக் கொள்கிறான்.

ஊருக்குள் பலரும் பலவாறு பேசுகிறார்கள். செல்வச் செழிப்பான குடும்பம், வறுமையான சிவதாணு வீட்டில் வந்து ஏன் சம்பந்தம் வைக்க வேண்டும் என்று வினவிக் கொண்டே இருக்கிறார்கள். கல்யாணமாகி அவன் மாமனார் வீட்டிலேயே தங்கிக் கொள்வான், படித்த பையன் காப்பிக் கடைய பார்த்துக்குவான், அங்க தான் ஆண் வாரிசு இல்லையே.. என்று பலவாறு பேசுவது சிவதாணு காதில் விழுகிறது.தன் நிலைமையை நினைத்து நொந்து கொள்கிறான். கல்யாணம் முடிந்து விடுகிறது.

கல்யாணம் முடிந்து, கொஞ்ச நாள் கிராமத்தில் தங்கி இருக்கும் பார்வதி, 'இங்க தான் உங்களுக்கு வேலை இல்லையே.. அங்க அப்பா கடைய பார்த்துக்கிட்டு மாசம் கொஞ்சம் பணம் குடுப்பார்.. அங்கேயே போகலாம்' எனச் சொல்கிறாள். முதலில் மறுக்கும் அவன், இப்பொழுது மாமனார் வீட்டில் அவரின் கடையைப் பார்த்துக்கொண்டு கொஞ்சம் பணம் பெற்றுக்கொள்கிறான். சொக்கலிங்கம், சிவதாணுவின் வேலைக்கு துரும்பையும் தூக்கி போடாமல் இருக்கிறார். சிவதாணு, ஓரிடத்தில் வேலைக்கு எழுதிப் போட அந்த வேலை கிடைத்து விடுகிறது. அதே சமயம், பார்வதியும் பிள்ளை உண்டாக, சிவதாணு மட்டும் கிளம்பிச் செல்கிறான். மூன்று மாதத்தில் வருவாள் என்று அவன் நினைத்திருக்க, அவளோ 'அம்மா இங்கயோ இருக்கச் சொல்லுறாங்க' என வர மறுத்து விடுகிறாள். அவன் அவ்வப் பொழுது நேரில் சென்று அவளைப் பார்த்து வருகிறான்.பெண் குழந்தை பிறக்கிறது. மூன்று மாதம் கழித்து, 'இப்பவாவது அங்கே வந்து இரு' என்று கூப்பிட, அவள் மறுக்க.. வார்த்தைகள் தடித்து பார்வதியை சிவதாணு அடித்து விடுகிறான். மாமனார் சொக்கலிங்கம், 'இப்படி அடிக்கவா நான் பிள்ளைய பெத்திருக்கேன்.. வீட்டை விட்டு வெளியே போ..' என அவனைச் சொல்கிறார்.  வீட்டை விட்டும் வெளியேறும் அவன், அதன் பிறகு அந்த வீட்டு படியையே மிதிக்கப் போவதில்லை என நினைத்துக் கொள்கிறான்.

குழந்தையோடு பார்வதி அவள் அப்பா வீட்டில் இருக்க, சிவதாணு தனியாக வேலை செய்யும் இடத்தில இருக்கிறான். பெரியவர் சண்முகம் பிள்ளை செய்யும் சமாதானப் பேச்சுக்கள் அவனிடம் எடுபடுவதில்லை. அங்கே, சொக்கலிங்கமோ 'இவ்வளவு நடந்தப்புறம் எப்படி நான் அவங்க முகத்தில் முழிக்கிறது... எப்படியோ போகட்டும், நான் மட்டும் அங்கே போக மாட்டேன்' என கௌரவம் காட்டுகிறார்.

பார்வதியின் தங்கை பவானி, சிவதானுவுக்கு கடிதம் எழுதுகிறாள். அவனோ அவளுக்கு திருப்பி எழுதுவதில்லை. ஒரு கல்யாணத்திற்கு, பார்வதியின் சொந்த ஊருக்குச் செல்லும் சிவதாணு, காரில் ஏறுவதற்கு போகும் பொழுது 'நில்லுங்கோ' என்ற சத்தம் கேட்க, அங்கே குழந்தையுடன் பார்வதி வந்து கொண்டிருக்கிறாள். காருக்குள் அவளாகவே உள்ளே ஏற, அவனும் உள்ளே ஏறிக் கொள்கிறான். தூரத்தில் பவானி கை அசைத்து, விடை கொடுக்கிறாள்.


*******************

நாஞ்சில் நாட்டு பேச்சு வழக்கிலேயே கதை செல்கிறது. இரண்டு மூன்று நாட்களுக்கு என் வாயில் கூட, 'என்ன செய்யறது'  என்பதற்கு பதிலாக  'என்ன செய்யி' என்றே வருகிறது.

சில வரிகள்:
'கோழிய கொல்லப் பிடித்தாலும் வாளு வாளுங்கும்.. வளர்க்கப் பிடித்தாலும் வாளு வாளுங்கும்',
'கப்பல்லே பொண்ணு வருகுதுன்னா.. எனக்கு ஒன்னு.. எங்க அப்பனுக்கு ஒன்னுன்கிற கதையால்ல இருக்கு' 

'விலக்கும் போது விலகி, கையை எடுத்ததும் கூடிவிடும் குழி தாமரைப் பாசிகளைப் போல நினைவுகள் மீண்டும் மீண்டும் மனக் குளத்தைப் போர்த்துகின்றன'

*******************

முதற் பதிப்பின் முன்னுரையில் 'இது என் முதல் நாவல். இது காகமா குயிலா என்ற மயக்கம் உங்களுக்கு வேண்டாம். வசந்த காலம் வரும்போது அது தீர்மானமாகட்டும்' எனச் சொல்கிறார் நாஞ்சில் நாடன். படித்து விட்டு கண்டிப்பாக நீங்கள், இந்நாவல் குயில் என்றே தீர்மானம் செய்வீர்கள். நன்றி.

படங்கள்: இணையத்தில் இருந்து - நன்றி.


Thursday, February 14, 2013

ஆதலினால் காதல்..

உலகம் என்ன சொல்லும்
என்கிறாய்
உன்னையும் என்னையும் தவிர
உலகத்தில்
யாருமில்லை கண்ணே !

*********************************

உனது கைப்பேசிக்கு
அழைத்தால்
முதலில் ஏதோ ஒரு இசை கேட்கிறது..
நீ பேச ஆரம்பித்த பின்னர்தான்
மெல்லிசை கேட்கிறது..


*******************************

நீ
வெட்டி விலகிச்
செல்லும் போதெல்லாம்
வெட்ட வெட்ட
மீண்டும் தழைக்கும் தாவரமென
வளர்கிறது
உன்மேலான என் பிரியம் !

*********************************

தென்றலாய் நடந்தாய்
மணியாய் சிரித்தாய்
தண் நிலவாய்ப் பார்த்தாய்
ஒரு நாள்
கவிதையாய்ப் பேசியபோதுதான்
நான் கவிதை கிறுக்க ஆரம்பித்தேன் !

*********************************

சுருட்டிப் போட்ட
பழைய போர்வையாய்
நடந்து கிடக்கிறேன் சாலைகளில்
ஒரு நாளேனும்
திரும்பி புன்னகை
பூத்து விட்டுப் போ.
அன்று முதல் நான்
பறக்க ஆரம்பிப்பேன்..

*********************************

அனைவரின்
காலடித் தடங்களையும்
உள் வாங்கிக் கொண்டு
அமைதியாக கிடக்கும்
கடற்கரை ஈர மணல் போல்
நீ பேசிய சொற்களை
அசைபோட்டுக் கொண்டே
ஆழ்ந்து கிடக்கிறேன் !


(இந்தத் தளத்தில் நான் எழுதிய பழைய கவிதைகள் ! )

Monday, February 11, 2013

தி கோல்ட் ரஷ் (The Gold Rush - Charlie Chaplin)


தங்கத்தைத் தேடி, கடுங் குளிர் என்று பாராமல், பனிப்புயல் அடிக்கும் அந்த மலை மீது மக்கள் ஏறிக் கொண்டே இருக்கிறார்கள். தப்பி பிழைத்து கொஞ்சம் தங்கத்தோடு வந்தால் ராஜ வாழ்வுதான். புயலில் மாட்டி அங்கேயே இறந்து போய்விடக் கூடிய சூழலும் உண்டு. அந்தக் கூட்டத்தில் ஒருவராக நம் சாப்ளின்.பனி மலை மீது ஒரு கூடாரத்தில் சாப்ளின், பசியைப் பொறுக்காத பயில்வான் மாதிரி இருக்கும் ஜிம் என்பவனுடன் தங்கி இருக்கிறார்.

உண்பதற்கு உணவில்லாமல் காலில் அணிந்திருக்கும் ஷூவை வேகவைத்து அதன் தோலை சாப்பிடும் காட்சியை வாழ்நாளில் ஒரு முறையேனும் பார்க்க வேண்டும். ஒரு பெரிய விருந்தைச் சமைப்பது போல அந்த ஷூவைக் கையாள்வதும், அது வெந்த பின்னர் அதை எடுத்து போட இருக்கும் தட்டில் உள்ள சிறு தூசுகளை நன்றாகத் துடைப்பது ஆகட்டும், அதன் பின்னர் அதைச் சாப்பிடும் முறை ஆகட்டும்.. சாப்ளின் என்னும் மகா கலைஞனின் நடிப்பு நிற்கிறது. அதிலும், ஷூவில் இருக்கும் ஆணிகளை, ஏதோ எலும்பில் ஒட்டி இருக்கும் இறைச்சித் துணுக்குகளை சாப்பிடுவது போல, ஆணியில் ஒட்டி இருப்பவற்றை சாப்ளின் உண்ணும் பொழுது, அங்கே சாப்ளினை விட பசித்த ஒருவனே நம் முன்னால் தோன்றுவான். அவர் சாப்பிடுவதை பார்த்துக் கொண்டிருக்கும் ஜிம்மும், ஷூவை சாப்பிடத் தொடங்குகிறார்.கொஞ்ச நேரம் கழித்து திரும்பவும் பசி வாட்டுகிறது. இன்னொரு ஷூவை வேக வைத்து தரட்டுமா எனக் கேட்கிறார். ஜிம் மறுத்து விடுகிறார். பசி மயக்கத்தில் ஜிம்முக்கு, சாப்ளின் ஒரு கோழி போல் தோற்றம் அளிக்கிறார். சாப்ளின் நடந்தால், ஒரு கோழி நடப்பது போலவே இருக்கிறது ஜிம்முக்கு. சாப்ளினை கொல்ல முயல்கிறார் ஜிம். நல்ல வேளையாக, ஒரு கரடி அங்கே வந்து அவர்களுக்கு உணவாகிறது.


ஜிம் மற்றும் சாப்ளின் இருவரும் தங்கத்தைத் தேடி தனித் தனியே பிரிந்து நடக்கிறார்கள். ஜிம்மை இன்னொருவர் அடித்து விடுவதால் , ஞாபக மறதி ஏற்பட்டு, தங்கச் சுரங்கத்திற்கு செல்லும் சரியான பாதை மறந்து விடுகிறது. எங்கெங்கோ சுற்றிக் கொண்டிருக்கிறார் ஜிம்.

ஒரு நகரத்துக்கு வரும் சாப்ளின், அங்கு ஒருவரின் கூடாரத்தில் தங்குகிறார். பிறகு அங்கே ஒரு பெண்ணை எதேச்சையாகச் சந்திப்பவர் அவளைக் காதலிக்கத் தொடங்குகிறார்.  முதலில் அவரை வேடிக்கையாக, விளையாட்டாக நடத்தும் காதலி பின்னர் அவரின் அன்பை புரிந்து கொள்கிறாள்.அதே நேரத்தில், அந்நகரத்துக்கு வந்து சேரும் ஜிம், சாப்ளினை பார்த்து விடுகிறார். சாப்ளினை இழுத்துக்கொண்டு திரும்பவும் தங்கத்தைத் தேடி பனி மலைக்குள் பயணிக்கிறார்கள். அதே கூடாரத்தில் இருவரும் தங்குகிறார்கள். ஒரு நாள் புயலில் மாட்டிய அவர்களின் கூடாரம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து தப்பிக்கும் அவர்கள் தங்கத்தையும் கண்டடைகிறார்கள்.இப்பொழுது இருவரும் பெரிய பணக்காரர்கள். கப்பலில் ஊருக்குத் திரும்புகிறார்கள். கப்பலில் அவர்களுக்கு ராஜ மரியாதை. அதே கப்பலில் பயணிக்கும் காதலியை, சாப்ளின் சந்திக்க நேர்கிறது. இன்னொரு அறையை ஒதுக்கச் சொல்லி காதலியையும் கூடவே அழைத்துக் கொண்டு செல்கிறார் சாப்ளின்.

ஒரு ஷூவை சாப்பிட்ட பின்னர், அந்தக் காலில் துணிகளைச் சேர்த்துக் கட்டி நடந்து கொண்டிருப்பார் சாப்ளின். இறுதிக் காட்சி வரைக்கும் ஒரு காலில் மட்டும் ஷூவுடன் நடித்திருப்பார். *********************

சாப்ளின் படங்களை பற்றி நான் எழுதிய பதிவுகள்:

சிட்டி லைட்ஸ்
சினிமா - மாடர்ன் டைம்ஸ் (Modern Times)
தி சர்க்கஸ் (The Circus)


Thursday, February 7, 2013

இயற்கையோடு கொஞ்சம் வாழ்ந்து பாருங்கள்...


திரும்பிய பக்கமெல்லாம் கான்கிரீட் சுவர்களாய் இருக்கும் இந்த மாநகரங்களில் இயற்கையோடு வாழ முடியாதுதான். ஆனால் கொஞ்சம் முயன்றால் முடிந்த அளவு நம்மால் இயற்கையோடு ஒன்ற முடியும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் தவிர்த்து அனைவரும் செடி கொடிகள் வளர்க்கலாம். இடம் இல்லை என்பவர்கள் தொட்டியில் வளர்க்கலாம், மொட்டை மாடிகளில் வளர்க்கலாம். தேவை கொஞ்சம் அக்கறையும், ஈடுபாடும்.

சிறிய கிண்ணங்களில் தினமும் தண்ணீர் ஊற்றி வையுங்கள். மொட்டை மாடி கைப்பிடிச் சுவர்களில் வைப்பது நலம். நீங்கள் வைத்த முதல் நாளே பறவைகள் வந்து விடாது. கொஞ்ச நாட்கள் பழகிய பின்னரே, அவைகள் தொடர்ந்து வரும். எங்கள் வீட்டில் ஒன்பது மணி சுமாருக்கு காக்கைகளும், மற்ற பறவைகளும் குளியல் போட்டு சிறகுகளை உதறிக் கொண்டு இருக்கும். ஆனால், தொடர்ந்து நீர் மாற்றி விட வேண்டும், தினமும் கூட மாற்றினால் நல்லது. கொஞ்சம் பெரிய பாத்திரம் என்றால் இரண்டு மூன்று நாட்கள் தாங்கும். கலங்கிய நீரை அடிக்கடி மாற்றி விட வேண்டும்.

பறவைகளும், பட்டாம் பூச்சிகளும் உங்கள் வீட்டை வட்டமிட வேண்டுமெனில், செடிகளை நட்டு வையுங்கள். தோட்டம் முழுவதும் குரோட்டேன்ஸ் போன்ற வெளிநாட்டுத் தாவரங்கள் மட்டும் இல்லாமல், கொய்யா, பப்பாளி, சீத்தா என நட்டு வைத்தால் பறவைகள் தேடி வரும்.

இடம் இல்லையெனில், தொட்டிகளில் புதினா, கொத்தமல்லி, இஞ்சி, கீரை வகைகள் என வளர்க்கலாம். இப்போதெல்லாம் கடைகளில், பெரிய செடிகளை (பப்பாளி, முருங்கை) மொட்டை மாடிகளில் வளர்க்கக் கூடிய வகையில் பைகள் கிடைக்கின்றன. அவைகளை வாங்கி பயன்படுத்தலாம்.

வெந்தய விதைகளை தொட்டியில் தூவி விட்டால், இரண்டே வாரத்தில் அருமையான கீரை தயார். அதன் சுவையை அறிந்த பின்னர், நீங்கள் வெந்தயக் கீரையை வெளியே வாங்கவே மாட்டீர்கள்.

எக்காரணம் கொண்டும் பூச்சி மருந்துகளை அடிக்கக் கூடாது. எறும்பு மருந்து கூட போடாமல் இருப்பதே நல்லது. வேப்பம் புண்ணாக்கு, மண்புழு உரம் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

அவரைக்காய், பீர்க்கை, சுண்டை, தண்டுக் கீரை, வாழை..... என வளர்த்து வருகிறோம். இந்த வருட பொங்கலுக்கு எங்கள் வீட்டில் வளர்ந்த மஞ்சள் கிழங்கு தான். மீண்டும் அதே மஞ்சளையே விதைத்தும் விட்டோம். பொங்கலுக்கு கடையில் வாங்கிய கரும்பில் கொஞ்சம் நட்டு வைக்க, அதுவும் குருத்து விட்டு வளர்ந்து வருகிறது. அடுத்த வருடம் கடையில் கரும்பு வாங்கப் போவதில்லை :)

முயன்றால் நம்மாலும் சிறிய அளவில் இயற்கையோடு வாழ முடியும்.

எங்கள் வீட்டில் வளர்ந்தவை:(சேனைக் கிழங்கு)(பாகற்காய் )


(புடலை கொடியில் வண்ணத்துப் பூச்சி) 


(நண்பர் யோகன் பாரிஸ் சேனைக் கிழங்கு செடியின் போட்டோவை போடச் சொல்லியிருந்தார். சின்ன கிழங்குகளை இப்பொழுதுதான் விதைத்து உள்ளோம். இன்னும் முளைத்து வரவில்லை. அதனால், இந்தப் படம் மட்டும் இணையத்தில்(tekfor.blogspot.com) இருந்து.

நன்றி நண்பரே. முன்னரே இந்தச் செடியை நீங்கள் பார்த்திருக்கக் கூடும்)

Tuesday, February 5, 2013

நாளை மற்றுமொரு நாளே - ஜி.நாகராஜன்

இது ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை

நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய
சின்னத்தனங்கள்,

நிர்பந்திக்கப்பட்டிருந்தால் காட்டியிருக்கக்கூடிய
துணிச்சல்,

விரும்பியிருந்தால் பெற்றிருக்கக்கூடிய
நோய்கள்,

பட்டுக்கொண்டிருந்தால் அடைந்திருக்கக்கூடிய
அவமானம்,

இவையே அவன் வாழ்க்கை.

அவனது அடுத்த நாளைப்பற்றி நாம்
தெரிந்துகொள்ள வேண்டாம். ஏனெனில்
அவனுக்கும் - நம்மில் பலருக்குப் போலவே -

நாளை மற்றுமொரு நாளே !புத்தகத்தின் முதல் பக்கத்தில் இருக்கும் மேற்கண்ட வரிகளே, நாவலின் போக்கைச் சொல்கிறது.ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை தான் நாவலில் வருகிறது. காலையில் எழுந்து, காலைக் கடன்களை முடித்து, கிடைக்கும் நேரத்தில் உணவருந்தி, அலுவலகம் ஓடி, திரும்ப கூட்டுக்கு ஓடி வரும் பறவை போல மாலை திரும்பும் மனிதர்கள் பற்றிய நாவல் இல்லை இது. சாதாரண மனிதர்கள்தான் நாவலில் வருகிறார்கள். வீட்டை விட்டு வெளியே வந்தால் சாக்கடை, காலி பாட்டில்களை சேகரித்து காசு தேற்றும் நிலை, பத்து ரூபாய் பணத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும் மக்கள் தான் நாவல் முழுவதும் வருகிறார்கள்.

கந்தன் என்னும் பாத்திரத்தின் வாயிலாகவே கதை சொல்லப் படுகிறது. நாள், கிழமை என்பதெல்லாம் அவனுக்கு கிடையாது. ஓரிடத்தில் நாவலில் சொல்வது போல 'நாயுடு, வாடகைக்கு வந்தால் ஆறாம் தேதி' அது மட்டும் தான் அவனுக்கு தெரியும். மற்ற எல்லா நாட்களும் அவனுக்கு ஒரே நாள்தான். இன்னோரிடத்தில், அவன் நண்பன் 'வருங்காலத்துக்கு என்ன திட்டம் போட்டு வைத்திருக்கிறாய்?' எனக் கேட்கிறான், அதற்கு கந்தன் சொல்கிறான் 'எந்தத் திட்டம் போட்டு நான் சொர்ணத்தம்மாவின் வயிற்றில் வந்து பிறந்தேன்' எனக் கேட்கிறான். சொர்ணம் கந்தனின் அம்மா.

அவன் சேர்த்துக்கொண்ட மனைவியின் பெயர் மீனா. தன்னால் அவளை சந்தோசமாக வைத்துக்கொள்ள முடியவில்லை என்பதால், வேறோர் இடத்தில அவளைச் சேர்த்துவிட தரகர்களிடம் கேட்கிறான் கந்தன். அவர்களின் ஒரே பையன் சந்திரன், சண்டை போட்டு விட்டு எங்கேயோ ஓடி விட்டான். அவனை இன்னும் தேடிக் கண்டுபிடிக்கவில்லை.

கந்தன் காலையில் எழுந்து, அவன் இடையில் சந்திக்கும் மனிதர்கள் ஊடே கதை ஓடி, அன்று இரவு கதை முடிகிறது. கனவில் தொடங்கும் அவனின் அன்றைய நாள், அவன் கனவு காண்பதிலே முடிந்து விடுகிறது. இடையில், அவனின் கதை சொல்லப் படுகிறது. அவனின் கதை என்பதை விட, கந்தன் மற்றும் அவனைச் சுற்றியிருப்பவர்களின் கதை.ராக்காயி என்கிற மோகனா, செட்டியார் மற்றும் ஐரீன், சோலை, தரகர் அந்தோணி, குதிரை வண்டி ஓட்டி , ஏட்டையா பொன்னுசாமி, முத்துசாமி, அன்னக்கிளி என நாவலில் அப்படியே வந்து போகிறார்கள். நாம் நேரில் அவர்களைப் பார்த்தால் கூட, சொல்லி விட முடியும். பெரிய விளக்கங்கள் இல்லை, இரண்டொரு வார்த்தைகளில் நம் மனதுக்கு நெருக்கமாக வந்து விடுகிறார்கள்.

தரகர் அந்தோணி, சிறு வயதில் தான் ஒரு பத்து ரூபாய் பணத்துக்காக நிர்வாணமாக ஓடினேன் எனச் சொல்பவர், அன்றில் இருந்து 'இந்தப் பணமே ஒரு மானங் கெட்ட விஷயம்...' என்பதைப் புரிந்து கொண்டதாகச் சொல்கிறார்.

பக்கத்தில் ஒரு சேரி தீப்பற்றி எரிகிறது. இறந்தது பன்னிரண்டு பேர். வீணாக நகர சபைக்கு ஏன் கெட்ட பெயர் என்று மூன்று உயிர்களையே விபத்து குடிதுவிட்டதாகப் பத்திரிக்கைகள் அறிவிக்கின்றன. "அந்தப் பன்னிரண்டு பேருமே சாகவில்லை; அவங்க எல்லோருமே வாக்காளர் பட்டியல்ல இருக்காங்க; எப்படியும் அடுத்த தேர்தல்லே ஓட்டுப்போட வந்திடுவாங்க. வாழ்க முதலாளித்துவ ஜனநாயகம்" என பேசிக்கொள்கிறார்கள் நாவலில்.

**********************

இன்றைக்கு இப்படி இருக்கிறான் கந்தன். அவனுடைய 'நாளை' எப்படி இருக்கும்?. அதைப்பற்றிய கவலை நமக்கு எதற்கு, நமக்கெல்லாம் எப்படி 'நாளை' என்பது உண்டோ, அது போலவே அவனுக்கும் 'நாளை மற்றுமொரு நாளே !'

படங்கள்: இணையத்தில் இருந்து - நன்றி