Wednesday, September 29, 2010

ரோஸ்

"ஏய்... ரோஸ்.. ரோஸ்.. ச்ச்ச்ச்சு.... " என்றால் எங்கிருந்தாலும் ஓடி வரும். வளர்த்தது பக்கத்து வீட்டு ஆயாதான் என்றாலும் எங்கள் வீட்டுக்கு வெளியில் போட்டிருக்கும் சாக்கில்தான் எப்போதும் படுத்திருக்கும்.

"யார் ஊட்டுச் சோத்த தின்னுட்டு.. யார் ஊட்ல படுத்திருக்க..... ? " எனக் கேட்டவாறே அந்த ஆயா எங்கள் வீட்டுக்கு வரும் போதெல்லாம், கிழவியை திரும்பி பார்த்துவிட்டு திரும்பவும் தலையை சாக்கில் சாய்த்துக் கொள்ளும்.

வெள்ளை கலரில், அங்கங்கே பழுப்பு நிறத்தில் ஒல்லியாக இருக்கும். குரைப்பதை தவிர, யாரையும் கடித்ததில்லை. யாராவது வீட்டுக்கு வந்தால் வாசலிலேயே நின்று விடுவார்கள். "ஏங்க, இந்த நாயி கடிக்குமா? " எனக் கேட்பார்கள். " ஒன்னும் பண்ணாது.. வாங்க.. " என்று சொன்னாலும் பயந்து கொண்டேதான் வருவார்கள். ஒரு காவல் ஆள் போலவே இருந்தது ரோஸ்.

ஆண் நாய்க்கு எதற்கு, "ரோஸ்" அப்படின்னு பேரு வெச்சிங்க என்று அந்த ஆயாவிடம் கேட்டால் "அதெங்க.. நானா வெச்சேன்... பேரனுக வெச்சாங்க.... அப்படியே கூப்பிட ஆரம்பிச்சுட்டேன்.. " என்றது. ரொம்ப சாதுவாக இருக்கும். எந்நேரமும் எங்கள் வீட்டு முன்னாலயே இருப்பதால், எங்கள் வீட்டு நாய் என்றுதான் சொல்லுவார்கள் ஊரில்.

அம்மா எங்கே தனியாக போனாலும் கூடவே போகும். வீட்டில் இருந்து பஸ்ஸை பிடிக்க சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும். ரோஸ் எங்க கூடவே கெளம்பி பஸ் ஸ்டாப் வரை பின்னாலயே ஓடி வரும். திரும்பி ஒரு மிரட்டு மிரட்டி, வீட்டுக்கு போ என சொன்னால் திரும்பி நடக்க ஆரம்பிக்கும். ஒரு சில நாட்கள், ரோசை அம்மா திரும்பி போக சொல்லி விட்டு நடந்தால், அதுவும் திரும்பி போவது போல் பாவனை செய்து விட்டு, தொடர்ந்து பின்னாலயே வரும். வழியில் மற்ற நாயை கண்டால், உறுமி கொண்டே அல்லது குரைத்துக் கொண்டே வரும். பஸ் ஏறும் வரை இருந்து விட்டு, அப்புறமாய் வீட்டுக்கு ஓடி விடும்.

கிராமத்தில் ஒட்டு வீடு என்பதால் எலித் தொல்லை இருந்தது. தக்காளி, உடைத்த தேங்காய் என எதையும் பத்திரமாக வைக்க முடியாது. எனவே எலியை பிடிக்க எலி பொறி உண்டு வீட்டில். அதற்குள் தேங்காய், கருவாடு, தக்காளி, நில கடலை என எலி விரும்பும் எதையாவது உள்ளே, நூலில் மாட்டி கட்டி வைத்துவிடுவார் அப்பா. பெரும்பாலும் எலிகள் இரவில்தான் வரும் என்பதால் படுக்க போகும் நேரத்தில் மேல் சுவற்றில் வைத்து விடுவார். தீனியை இழுத்த எலிகள் வலையில் மாட்டி கொள்ளும்.

ஒரு சில எலிகள், உள்ளே வைத்திருப்பதை கொறித்து விட்டு ஓடிவிடும். எதாவது, எலி உள்ளே மாட்டி இருந்தால் அப்பா அதை கூண்டோடு வெளியில் கொண்டு வருவார். பெருத்தவை, சிறுசு என எல்லா வகை எலிகளும் பொறியில் மாட்டி கொள்ளும். அன்று எந்த எலி மாட்டி கொள்ளுமோ அந்த எலிக்கு மரணம் நிச்சயம். கூண்டை வெளியில் கொண்டு வந்தவுடன், ரோஸ் தயாராக இருக்கும். போருக்கு போகும் தயாராகும் ஒரு வீரனை போல், பொறியின் வாயை பார்த்து கொண்டேஇருக்கும். அப்பா, மேலே கதவை அழுத்தியவுடன், உள்ளிருந்த எலி துள்ளி குதித்து வெளியில் ஓடிவரும். ரோஸ் ஓடிப் பொய் தப்பாமல் பிடித்துவிடும். வீட்டை சுற்றி எலி ஓட ஆரம்பித்தால், இதுவும் பின்னால் ஓடி, செடி கொடிகளுக்குள் தேடி கண்டுபிடித்து வாயில் கவ்வி கொண்டு காட்டுக்குள் சென்று விடும். ஒரு சில நாள், ரோஸ் எலியை தவற விட, அப்பா இது சரிப்பட்டு வராதென, சாக்குப் பைக்குள் எலியை விட்டு அடிக்க ஆரம்பித்தார்.

ஆட்டுக் கறியோ, கோழி கறியோ வீட்டில் சமைத்தால், படியில் நின்று கொண்டு கதவை பார்த்தபடி நிற்கும். அம்மா, "எலும்ப கீழே போடாத.. தட்டத்துல வையி.. ரோஸ் திங்கும்" என சொல்லும். வெளியே எலும்பை கொண்டு வந்து வைத்தால் மற்ற எந்த நாயையும் பக்கத்தில் விடாமல் அத்தனையையும் தின்று விடும். ஒரு சில நாட்கள், பக்கத்து வீட்டு நாயையும் அனுமதிக்கும். பழைய சோறு, தயிர் என எதையாவது அம்மா வைத்து விடும். "எலும்பை போட்டே.. என்ற ரோசை மடக்கி.. உங்க ஊட்லயே வெச்சுக்குங்க.." என அந்த ஆயா சிரித்துகொண்டே சொல்லும். அந்த ஆயா எதாவது சாப்பிட கொடுத்தாலும், தின்று விட்டு எங்கள் வீட்டு வாசப்படிக்கு வந்துவிடும்.

நான் வெளிக்கு காட்டுக்கு போனால் பின்னாலயே வரும். "பேட்டேரிய எடுத்துட்டு போடா" என்பர் அப்பா. வெளியில் வந்து செருப்பை போட்டவுடன், ரோசும் எதோ தன் கடமை போல் கெளம்பி என் கூடவே வரும். வழியில் மற்ற நாய்கள் குரைத்தால், இதுவும் பதிலுக்கு குரைத்து விடும் என்பதால் பயமில்லாமல் போவேன். ரீங், ரீங் என்ற சத்தமும், நிர்மலமான இரவும், சுத்தமான காற்றும் வீசிய அந்த இரவுகளில் எனக்கு துணையாக இருந்தது ரோஸ்.

எங்கே போனாலும் கூடவே ஓடி வந்து, ஒரு நண்பனை போலவே இருந்தது எங்கள் வீட்டில். காலங்கள் கடந்தது. முன்பு போல் ரோஸ் சாப்பிடுவதில்லை, பக்கத்து வீட்டு நாயை திங்க விட்டு விடுகின்றது. மெதுவாக முடிகள் கொட்ட ஆரம்பித்தன. எலும்பும், தோலும் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது. யாரோ கல்லால் அடித்ததில் முன்னங் காலில் ஏற்பட்ட காயம் ஆறாமல் இருந்தது. இழுத்து இழுத்து மூச்சு விட ஆரம்பித்தது. ஒரு நாள், வீட்டின் முன்னால் போட்டிருந்த சாக்கு ரோஸ் இல்லாமல் வெறுமையாக இருந்தது.

பக்கத்து காட்டுக்கு மாடு மேய்க்க போன சரசக்கா "ஏங்க.. ரோஸ் அங்க காட்டுல படுத்து கெடக்குது.. செத்து போச்சுன்னு நெனைக்கிறேன்.... மூச்சு வாங்கிட்டு கெடக்குது" எனக் கூற, அம்மாவும் "பாவம்.. வயசு ஆயுடிசுள்ள அதான்... அதெப்படி அவ்ளோ தூரம் காட்டுக்குள்ளே போச்சு.... " என்றது. அன்னைக்கோ அல்லது அடுத்த நாளோ ரோஸ் செத்து போயிருக்கும். "ரோஸ்.. ரோஸ்... ச்ச்ச்சுசுச்சு... " எனக் கூப்பிட இப்பொழுது ரோஸ் இல்லை.

வெறுமையாக இருந்த சாக்கில், இன்னொரு பக்கத்து வீட்டு நாய் மெல்ல மெல்ல படுக்க ஆரம்பித்தது. அதனுடைய பெயர் மணி. ரோஸ் போனதுக்கு அப்புறம், நான் எங்கே போனாலும் கூடவே வந்தது, ரோஸ் சொல்லி விட்டு போயிருக்குமோ ?.

குறிப்பு: இது ஒரு மீள்பதிவு.

Monday, September 27, 2010

வீடும் பள்ளியும்..

'சாதிகள் இல்லை பாப்பா'
'உதவி செய்'
'பகுத்துண்டு வாழ்'
என்று பள்ளியில்..

'அந்த ப்ரெண்டு என்ன சாதி'
'ரப்பர் பென்சில யாருக்கும் குடுக்காத'
'டிபன் பாக்ஸ்ல இருக்குறத நீ மட்டும் சாப்பிடு'
என்று வீட்டில்..

பாடம்
சொல்லிக் கொடுக்க வேண்டியது
குழந்தைகளுக்கா
இல்லை பெரியவர்களுக்கா?.

Friday, September 24, 2010

பாஸ்வேர்டாகிய பழைய காதலி !















குடும்பப் பெயர்களை
எண்களோடும் சிறப்பு எழுத்துக்களோடும்
சேர்த்து வளைத்து எழுதியதில்
ஒவ்வொரு முறையும்
கடவுச் சொல் பஞ்சம் அடைந்தது.

கடவுச் சொல்லை
மாற்றச் சொன்ன
இணையத் தளத்தில்
புதியதொரு சொல்லை இட்டேன்.

அது என்
பழைய காதலியின் பெயரென
சொல்லிவிட்டுப் போகிறான்
நண்பனொருவன்.

அது வெறும்
கடவுச் சொல் என
எப்படி அவனுக்குப் புரியவைப்பது ?.

படம் : இணையத்திலிருந்து.

Wednesday, September 22, 2010

பாதி உடல் தங்கமாக அலையும் நரி.. !

எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் உப பாண்டவம் நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார். அந்தக் கதை நாம் ஏற்கனவே கேட்ட கதைதான். அந்தக் கதை இதோ மீண்டும்.

கொடும் பஞ்சம் சூழ்ந்த முன்னொரு காலத்தில், ஒருவன் தன் மனைவி மகன் மருமகளோடு ஒரு ஊரில் வசித்து வந்தான். பஞ்சத்தால் எதுவும் கிடைக்காத ஒரு நாளன்று வெளியே சென்ற அவன் கொஞ்சம் சோள தானியத்தோடு தன் வீட்டுக்கு வருகிறான். அவன் மனைவி அதை அரைத்து மாவாக்கி கஞ்சி சமைக்கிறாள். சமைத்த பின்னர் அதை அருந்தும்பொழுது ஒரு துறவி பசியால் அவன் வீட்டுக்கு வருகிறார். துறவியின் பசியை அறிந்த அவன் தனக்கான உணவின் பங்கை அவருக்கு கொடுக்க, அதைத் துறவி அருந்துகிறார். மீண்டும் அவர் பசியடங்காமல் இருக்க, மனைவி மகன் மற்றும் மருமகள் ஆகியோரும் தங்கள் பங்கை அந்த துறவிக்கு அளிக்க பசியடங்கிய அவர் அந்த இடத்தை விட்டுப் போகிறார்.

இவர்களின் செயலால் மனம் மகிழ்ந்த தேவதை ஒன்று இனி அவர்கள் எப்போதும் செல்வத்தில் திளைப்பார்கள் என வரம் தந்து விட்டுச் செல்கிறது. அப்பொழுது அங்கே வந்த நரி ஒன்று, சோளம் அரைத்த இடத்தில் படுத்துப் புரள அதன் உடல் பாதி தங்கமாக மாறிவிடுகிறது. எந்தப் பிரதிபலனும் இல்லாமல் தானம் தரும் யாக சாலைக்குச் சென்றால் தன் மீதிப் பாதி உடல் தங்கமாகும் என்ற நம்பிக்கையில், இன்னும் அந்த நரியானது பாதித் தங்கமான தன் உடலுடன் அலைந்து கொண்டிருக்கிறது.

'அலைந்து கொண்டே இருக்கிறது நரி' என கதையை முடித்திருப்பார் எஸ்.ராமகிருஷ்ணன்.

கொஞ்சம் நினைத்துப் பார்த்தால் அந்த நரி எங்காவது நம்மைச் சுற்றிக் கொண்டு கூட இருக்கலாம் !!. பெரிய தான தர்மங்கள் வேண்டாம். அதற்காக நேரம் ஒதுக்க வேண்டாம். நாம் போகும் வழியில் சின்ன சின்ன உதவிகள் செய்யக் கூட மறந்து போனது எதனால்?.

சாலையைக் கடக்க ஒரு மூதாட்டி நின்று கொண்டிருக்கும்பொழுது இன்னும் சேர்த்து ஆக்சிலாட்டரை முறுக்க விளைவது எதனால் ?. படிக்கத் தெரியாதவர்கள் பேருந்து வழித்தடம் கேட்டால் கோபம் வருவது எதனால்?. பேருந்தில் குழந்தையோடு ஒருவன்/ஒருத்தி நின்று கொண்டிருக்கும் போது முகத்தை வேறெங்கோ செலுத்துவது எதனால்?. ஒரு கல்லோ முள்ளோ கிடந்தால் அதைக் கடந்து போவது எதனால்?. அலுவலகத்தில் யாரேனும் சந்தேகம் கேட்டால் தெரிந்திருந்தாலும் நேரமில்லை எனச் சொல்வது எதனால்?.

இந்த சின்ன உதவிகள் அவர்களுக்கு அந்த நேரத்தில் மிகப் பெரிதாக இருக்கும். இதனால் என்ன பயன்? .

போன வாரம் பேருந்தில் வரும்பொழுது, பேருந்து கிளம்பி இரண்டு நிறுத்தங்கள் தாண்டி ஒரு முதியவர் ஏற அவருக்கு நான் இடத்தைக் கொடுத்தேன். இன்னும் இரண்டு நிறுத்தங்கள் தாண்டி குழந்தையோடு ஒருவர் ஏற அந்தக் குழந்தையை முதியவர் வாங்கி வைத்துக் கொண்டார். என்னைப் பார்த்து ஒரு புன்னகை சிந்தினார்.

நீங்கள் ஒரு உதவி செய்தீர்கள் என்றால் கண்டிப்பாக இன்னொருவருக்கு அது திரும்பச் செய்யப்படும். அது ஒரு சங்கிலி மாதிரி. ஏன் பினனால் நீங்கள் கூட அந்த சங்கிலியால் பயன் அடைபவராக இருக்கலாம்.

செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது !.

Saturday, September 18, 2010

ஒரு வனதேவதையின் உக்கிரம்
















ஆதியில்
தண் பசுமையும் குளிர் காற்றும்
பட்சிகளின் வாழ்வும்
பகலவனின் ஒளி புகாத
கானகத்தினுள்
ஒரு வேம்பினடியில்
மடித்து வைத்த பாதங்களோடு
அமர்ந்து சாந்தம் கொண்டிருந்தேன்.

கொடும் கரம் கொண்டு பசுமையழித்து
கரும் நிறம் கொண்ட சாலைகள் போட்டு
என்னை ஒரு நாற் சுவருக்குள்
அடைத்தது ஒரு கூட்டம்.

தூக்கிய காலும் வெறித்த பார்வையுமாய்
மாறிப்போன எனக்கு
தினந்தோறும் பூசைகள்
பலிகல்லில் வடிக்கப்பட்ட குருதி
தெளிக்கப்பட்ட பன்னீர், வாடிய மாலைகள்
என எதுவும் பிரியமில்லை.

அறிந்துகொள்ளுங்கள் மக்களே
நான் இன்னும் சாந்தம் கொள்ளவில்லை
எனக்கு ஒரு கானகம் வேண்டும்.













படங்கள் : இணையத்திலிருந்து.

Thursday, September 16, 2010

கஞ்சி குடிப்பதற்கு இலார் - வீணாகும் உணவு தானியங்கள்

இரவு மீதமான இரண்டு இட்லிகளை, காலையில் வந்து பசிக்கு கேட்கும் பிச்சைக்காரனுக்குப் போடாமல், சாக்கடையிலோ அல்லது குப்பையிலோ கொண்டுபோய்க் கொட்டும் செயலுக்கு நிகரானது வீணாகும் உணவு தானியங்களை வறுமையால் வாடுவோருக்கு அளிக்காமல் வீணாக்குவது.

சரி அந்த தானியங்களை என்ன அவர்கள் காசிலா வாங்கினார்கள். ஒரு லிட்டர் பெட்ரோல் அடித்தால் வரி, தலை வலிக்கு மாத்திரை வாங்கினால் வரி, சோப்பு வாங்கினால் வரி என எல்லாவற்றிலும் வரியை வாங்குகிறார்கள். அப்புறம் அதுவும் பத்தவில்லை என்று, எங்கள் மக்களைக் காண்பித்து 'எங்களுக்கு கடன் கொடுங்கள்' என்று உலக வங்கிகளிடமும் வாங்கி விடுகிறார்கள். ஆக இந்த பணத்தை வைத்து அவர்கள் எங்கள் விவாசாயிகளிடம் தானியங்களை பெரிய கொள்முதல் பண்ணி வாங்கி விடுகிறார்கள். (இதில் எத்தனை பேர் ஊழல் செய்கிறார்களோ).



வாங்கிய தானியங்களை வைத்து பாதுகாக்க போதுமான கிடங்குகள் இல்லை என்று சொல்லுகிறார்கள். ஒரு அமைச்சர் வருகிறார் என்றால் ஒரு வாரத்தில் இடம் பிடித்து, பெரும் மேடை அமைத்து, புதிய சாலை போட்டு, தோரணம் கட்டி அவரை வரவேற்க முடிகிற இவர்களால் ஒரு கிடங்கை அமைக்க முடியவில்லை என்பது எப்படி இருக்கிறது?.

சரி அப்படிதான் கிடங்கு கட்ட இடமில்லை !. பணம் இல்லை !. நாங்கள் ஒத்துக்கொள்கிறோம். ஆனால் அவற்றை வீணாகாமல் ஏழை மக்களுக்கு அளிப்பதில் என்ன கஷ்டம். தேர்தல் வரும் நேரங்களில் மட்டும் ஏழை மக்களைக் காப்பாற்றுவேன் என்று தொண்டை வரள நீங்கள் கத்துவது வெறும் வாய்ப் பேச்சு மட்டும்தானே?. அடுத்த தேர்தல் வந்தால் திரும்பவும் பேசுவீர்கள், நாங்களும் எந்தக் கொள்ளியில் எது நல்ல கொள்ளி எனத் தெரியாமல் வாக்களிப்போம்.

சாப்பிடும் போது இரண்டு பருக்கை கீழே சிந்தினால் அடிக்க வரும் எங்கள் தாய், தந்தையர் இத்தனை தானியங்கள் வீணாவது தெரியாமல்தான் இருக்கின்றனர் அமைச்சர்களே. அதுதானே உங்களுக்கும் நல்லது, அடுத்த தேர்தலைச் சந்திக்க.

'கஞ்சி குடிப்பதற்கு இலார்.. அதன் காரணங்கள் என்ன என அறியும் அறிவும் இலார்.. ' என வருந்திப் பாடிவிட்டு போய்விட்டார் எங்களுக்காக வருத்தப்பட்ட கவிகளில் ஒருவர். எங்களுக்கு உங்கள் அறிக்கைகள் புரியாது. விவாதங்கள் புரியாது. ஏனெனில் நாங்கள் படிக்காதவர்கள், இன்னும் ஏழையாகவே கிராமத்திலும், நகரத்திலும் வசித்துக் கொண்டிருக்கிறோம். உங்கள் தொலை நோக்கு (!!) பார்வைகளுக்கு பசித்திருக்கும் எங்களின் வாடிய வயிறுகள் தெரியப் போவதில்லை.

Tuesday, September 14, 2010

வால்காவிலிருந்து கங்கை வரை


ராகுல சாங்கிருத்தியாயன் அவர்கள் எழுதி, அதைத் தமிழில் கண. முத்தையா அவர்கள் மொழிபெயர்த்த 'வால்காவிலிருந்து கங்கை வரை' புத்தகத்தின் நான் படித்த பதிப்பு இருபத்தி எட்டாம் பதிப்பு. மனித வரலாற்றை சிறு சிறு கதைகள் மூலம் அற்புதமாக விவரிக்கும் நூல்.

கி.மு. வில் ஆரம்பித்து இந்திய சுதந்திரப் போராட்ட காலம் வரை நம்மைக் கைபிடித்து அழைத்துச் செல்கிறது இந்தப் புத்தகம்.

அதிலும் எனக்கு ஒரு மிகப் பெரிய ஆச்சரியம், ஆதி காலத்தில் மனிதக் குழுவுக்கு தலைவியாக பெண்தான் இருந்திருக்கிறாள் என்பது. தாயின் வழிகாட்டலில்தான் ஒரு குழுவே பினனால் நடந்து போயிருக்கிறது. அப்படிப்பட்ட பெண்களின் நிலைமை ஒடுக்கப்பட்டு, கணவன் இறந்தால் உடன்கட்டை ஏறும் பிற்காலப் பழக்கமும் வந்து போகிறது நாவலில்.

கல்லால் செய்யப்பட்ட ஆயுதங்கள் மறைந்து, இரும்பாலும் செம்பாலும் செய்யப்பட்ட கருவிகள், புதிய வகைத் துணிகள் எனப் பல பொருட்கள் தோன்றிய கால கட்டங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறது புத்தகம்.

எந்தச் சமரசமும் செய்து கொள்ளாமல் எல்லாவற்றையும் அலசிப் பார்த்துள்ளார் ராகுல்ஜி. நமது வேதங்கள், உணவுப் பழக்க வழக்கம் (முக்கியமாக மாட்டு இறைச்சி), ஆதி காலத்தில் தலைவியான தாயைப் பற்றிய கருத்துக்கள், காந்தி அம்பேத்கார் ஆகியோரைப் பற்றி என நிறைய.

அப்பாவின் தாத்தாவுடைய தாத்தா யாரென்று யாருக்கேனும் தெரியுமா ?. நம் மூதாதையர்கள் எங்கேயோ பிறந்திருக்கலாம். ஏன் தேசம் விட்டு வந்தவர்களாக கூட இருக்கக் கூடும். யாருக்குத் தெரியும். இடம் மாறி, தொழில் மாறி இன்று ஒரு நான்கு அல்லது ஐந்து தலைமுறைகளின் பெயர்கள் நினைவுக்கு வரக் கூடும். நம் தலைமுறைகளின் வரலாறு நம்முடைய ஜீன்களில் இருக்கிறது.

மனிதனின் முழு வரலாறு தெரியாவிட்டாலும் நாம் கொஞ்சம் அறிந்துகொள்ள இந்த புத்தகம் பெரிதும் உதவும்.


வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல சாங்கிருத்தியாயன்
வெளியீடு: தமிழ்ப் புத்தகாலயம்
தமிழில் : கண. முத்தையா

Friday, September 10, 2010

விழுதுகள் - நனவாகியதொரு கனவு



இரண்டு குழந்தைகள் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. ஆனால் வேறு வேறு வீடுகள். வேறு வேறு சூழ்நிலைகள். ஒரு குழந்தைக்கு அரசுப் பள்ளி. இன்னொரு குழந்தைக்கு தனியார் பள்ளி. தனியார் பள்ளிகளில் படிக்கும் எல்லாக் குழந்தைகளும் பிரகாசிப்பதில்லை. ஆனாலும் அரசுப் பள்ளிகளுடன் ஒப்பிடும் போது நிறைய வேறுபாடுகள். கல்வியின் தரம், ஆசிரியர்களின் கடமை என நிறைய.

அதையெல்லாம் தாண்டி அரசுப் பள்ளிகளில் படித்தாலும் ஒரு சில மாணவர்கள் நன்றாகவே படிக்கிறார்கள். மாநில அளவில் மதிப்பெண்களை அள்ளுகிறார்கள். ஆனால் பல மாணவர்களின் நிலைமை கேள்விக்குறி தான். தொடக்கக் கல்வியிலேயே சரியான வழிகாட்டுதல்கள் இல்லை.

நான் மற்றும் எனது நண்பர்கள் எல்லாரும் அரசுப் பள்ளியில்தான் படித்தோம். எப்படியோ முட்டி மோதி மேலே வந்து விட்டோம். ஆனால் படிப்பை பாதியிலேயே விட்ட என் சக தோழர்கள் இப்பொழுது அதை நினைத்து வருந்திக் கொண்டிருக்கிறார்கள். பெயில் ஆனால், பள்ளி பிடிக்கவில்லை, வேலைக்கு போகச் சொல்கிறார்கள் எனப் பலர் பாதியில் படிப்பை நிறுத்தி விட்டார்கள்.இதற்கு காரணத்தை நாம் உற்று நோக்கினால் அவர்களுக்கு பெரும்பாலும் படிப்பை பிடிப்பதில்லை.

எனது நண்பன் கமலகண்ணன், நான் சென்னையில் தங்கியிருந்தோம். அப்பொழுது கமல் சமூக சேவையில் டிப்ளமோ படித்துக் கொண்டிருந்தான். ரொம்ப நாள் பேசி ஒரு அமைப்பை உருவாக்கினால் என்ன என நினைத்து, இன்னொரு நண்பனான சாரதியைச் சேர்த்து மூவருமாக 'விழுதுகள்' என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தோம்.

அப்படித்தான் நண்பர்கள் இணைந்து விழுதுகள்(http://www.vizhudugal.org) என்ற அமைப்பை எங்களின் ஊரான ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டியில் ஆரம்பித்து இரண்டு வருடங்கள் நிறைந்து விட்டன. எங்கள் விழுதுகள் அமைப்பின் சார்பாக, கிராம புற பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு தினமும் பாடம் எடுத்து வருகின்றோம். பள்ளி பாடங்கள் தவிர, Value based education எனப்படும் தனி திறமைகளை வளர்த்தல், நல்ல பழக்க வழக்கங்களை சொல்லித் தருதல், சேவை மனப்பான்மையை வளர்த்தல், வாரந்தோறும் போட்டிகள் நடத்தி பரிசுகள் அளித்தல் என பணியாற்றி வருகிறோம். ஒவ்வொரு கிராமப் பகுதிகளிலும் ஒரு ஆசிரியரை நியமித்து, ஊரின் பொதுவான இடத்திலோ அல்லது அரசுப் பள்ளியிலோ இந்த மையங்களை நடத்தி வருகின்றோம். இது தவிரவும் கண் சிகிச்சை முகாம் நடத்துதல், மரக் கன்றுகள் நட்டு வைத்தல், கணிப்பொறி பயிற்சி அளித்தல் என பிற துறைகளிலும் பங்காற்றி வருகின்றோம்.

இப்பொழுது நாங்கள் ஏழு மையங்களில் வகுப்புகளை நடத்தி வருகிறோம். ஏழு மையங்களுக்கும் உண்டான செலவுகளை எங்களின் ஒவ்வொரு நண்பரும் ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் இல்லாவிட்டால் நாங்கள் விழுதுகளை வெற்றிகரமாக நடத்த முடியாது. ஒவ்வொருவர் பெயரையும் சொன்னால் நீண்டு விடும். அவர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றி.

பதிவராக எனக்கு அறிமுகமாகி எங்களில் ஒருவராகி விட்ட திரு.பிரகாஷ் (சாமக்கோடங்கி ...) எல்லா விதத்திலும் எங்களுக்கு உதவியாக இருக்கிறார். பல தடவை எங்கள் மையங்களுக்கு வந்து குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை வகுப்புகளை எடுத்திருக்கிறார். அவருக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்.

ஏழு மையங்கள்: காந்தி நகர், நேரு நகர், ஜெ.ஜெ. நகர், மாரம்பளையம், மாதம்பாளையம், கள்ளிப்பாளையம், நல்லகாளிபாளையம்.

வரும் ஞாயிறு அன்று எங்கள் நண்பன் கமலுக்கு திருமணம். அடுத்த நாள் திங்கள் அன்று வரவேற்பு அன்னூர், சிவன் கோவிலில் நடக்கிறது. அனைவரையும் வந்திருந்து வாழ்த்துங்கள் என விழுதுகள் சார்பாக வரவேற்கிறோம்.

சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக;

(இந்தப் புன்னகைதான் எங்களுக்கு உரம்)


(ஜெ.ஜெ. நகர் தொடக்க விழாவில்)

(ஒரு மையத்தில்..)


(நேரு நகர் மையத்தில்)

(நேரு நகர் மையத்தில்)

(ஜெ.ஜெ. நகர் மையத்தில்)



(ஜெ.ஜெ. நகர் மையத்தில்)


(கடந்த சுதந்திர தின விழாவன்று)

Wednesday, September 8, 2010

தி பைசைக்கிள் தீப் (The Bicycle Thief)


வறுமை கொடிது என்று பாடுகிறார் அவ்வைப் பாட்டி. அதனினும் கொடிது இளமையில் வறுமை என்கிறார் மீண்டும். ஒரு நல்ல அப்பா, அம்மாவாக பல பேர் தன் பிள்ளைகளுக்கு எந்தக் கவலையும் இருக்கக் கூடாது எனத்தான் நினைப்பார்கள். தான் பட்ட துயரங்கள் தன் பிள்ளைகள் படக் கூடாது என எண்ணுவார்கள். சினிமா பாரடைசோ, பதேர் பாஞ்சாலி போன்ற படங்களில் வரும் பெற்றோர்கள் எல்லாரும் அதையே படத்தில் பிரதிபலிப்பார்கள். அந்தப் படங்களிலும் சிறு வயது வாழ்க்கையை அழகாக காட்டி இருப்பார்கள்.

'தி பைசைக்கிள் தீப்' படம் அப்படிப்பட்ட ஒரு அப்பாவுக்கும், மகனுக்கும் இடையில் நடக்கும் கொஞ்ச நாள் வாழ்க்கையை நாம் பார்க்க முடியும். வேலை இல்லாத அந்தோனியோ ரிச்சி, வேலை தேடிக் கொண்டு இருக்கிறான். அவனுக்கு இரண்டு குழந்தைகள். பல பேர் ஓரிடத்தில் வேலைக்கு காத்திருக்க, ஒரு அதிகாரி அந்தோனியோ பேரைக் கூப்பிட்டு 'போஸ்டர் ஒட்டும் வேலை இருக்கிறது. அதற்கு சைக்கிள் வேண்டும்' என்கிறார். ஆனால் அவனோ 'என்னிடம் சைக்கிள் இல்லை' என்கிறான். 'அப்படியானால் அந்த வேலை உனக்கு கிடைக்காது' என்கிறார் அதிகாரி. சுற்றி இருப்பவர்கள் 'என்னிடம் சைக்கிள் இருக்கிறது. எனக்கு அந்த வேலையைக் கொடுங்கள்' எனக் கேட்க, சுதாரித்த அந்தோனியோ 'இல்லை. என்னிடம் சைக்கிள் இருக்கிறது' என்று பொய் சொல்லி அந்த உத்தரவை வாங்கிக் கொள்கிறான். நாளைக் காலையில் அவன் சைக்கிளோடு அந்த உத்தரவில் குறிப்பிட்ட முகவரிக்குச் சென்றால் அவனை வேலையில் அமர்த்துவார்கள்.

தன்னிடம் சைக்கிள் இல்லாததையும், இருந்தால் அந்த வேலையில் சேர்ந்து விடலாம் என்று வீட்டுக்கு வந்து தன் மனைவியிடம் புலம்புகிறான் அந்தோனியோ. மனைவி யோசித்து பழைய போர்வைகளை விற்று விடலாம் எனக் கூற, அவைகளை விற்று புது சைக்கிள் ஒன்றை வாங்குகிறார்கள். சந்தோசமாக வீட்டுக்கு சைக்கிளோடு வருகிறார்கள். அந்தோனியோவின் பையன் ப்ருனோ சைக்கிளை ஆசையாக தொட்டுப் பார்க்கிறான். இன்னொரு குழந்தை கைக்குழந்தை.



காலையில் சைக்கிளோடு தான் வேலையில் சேர வேண்டிய இடத்திற்கு போகிறான். அங்கே அவனை அடுத்த நாள் காலையில் வந்து வேலையில் சேர்ந்து கொள்ளச் சொல்கிறார்கள். அடுத்த நாள் ப்ருனோவைக் கொண்டு போய் அவன் வேலை செய்யும் இடத்தில் விட்டு விட்டு அலுவலகம் செல்கிறான். அங்கே தன் சக பணியாளர்களுடன் சுவர் ஏற ஏணி, பசை மற்றும் போஸ்டரோடு கிளம்புகிறான் அந்தோனியோ.

ஒருவன் எப்படி போஸ்டரை ஒட்டுவது எனச் சொல்லிவிட்டுக் கிளம்ப தன் சைக்கிளோடு தனியாக போஸ்டர் ஒட்டக் கிளம்புகிறான். ஒரு இடத்தில், ஏணியில் ஏறி போஸ்டரை ஒட்டிக் கொண்டிருக்கும்போது ஒரு திருடன் அவன் சைக்கிளை திருடிக் கொண்டு போகிறான். அவன் பினனால் ஓடியும் அந்தோனியோவால் அவனைப் பிடிக்க முடியாமல் திரும்பி வருகிறான். போலீசில் தன் புகாரை பதிவு செய்துவிட்டு தன் சைக்கிள் எப்போ கிடைக்கும் எனக் கேட்க 'நாங்கள் தேட முடியாது. எங்காவது உன் சைக்கிளைப் பார்த்தால் போலீசைக் கூப்பிடு. உன் புகாரின் பேரில் அதை நாங்கள் பெற்றுத் தருகிறோம்' எனச் சொல்லி அனுப்பிவிடுகிறார்கள்.

வீட்டுக்கு திரும்பும் அவன், ப்ருனோவைக் கூட்டிக் கொண்டு தன் வீட்டுக்கு செல்கிறான். போகும் வழியில் ப்ருனோ 'சைக்கிள் எங்கே?' எனக் கேட்கிறான். அவனை வீட்டில் விட்டு விட்டு தன் நண்பனைப் பார்க்கச் செல்கிறான். அவனிடம் கூற காலையில் தேடிப் பார்க்கலாம் எனக் கூறுகிறான் நண்பன். அங்கே வரும் அவன் மனைவியை நண்பன் ஆறுதல் சொல்லி அனுப்புகிறான்.



ப்ருனோ, அந்தோனியோ, அவன் நண்பர்கள் என அனைவரும், அடுத்த நாள் காலையில் எங்கு தேடியும் சைக்கிள் கிடைக்கவில்லை. அவன் நண்பர்கள் கிளம்ப ப்ருனோவும், அந்தோனியோவும் தனியாக சைக்கிளைத் தேடிக் கிளம்புகிறார்கள். அப்பொழுது அந்த சைக்கிள் திருடனை அவன் ஒரு கிழவனுடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறான். அந்த திருடன் சைக்கிளில் கிளம்ப பினனால் ஓடியும் அவனை தவற விட்டு விடுகிறான் அந்தோனியோ.

திரும்பி வந்து அந்த கிழவனைத் தேடி வந்தால் அவனும் ஒன்றும் சொல்ல மறுக்க அந்தக் கிழவனைப் பின் தொடர்கிறார்கள் இருவரும். அந்தக் கிழவன் ஒரு சர்ச்சுக்குச் செல்ல இருவரும் அங்கே போகிறார்கள். அங்கே பிரார்த்தனை முடிந்து உணவருந்த உணவுகளும், சூப் வகைகளும் தயார் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கிழவன் அந்தத் திருடன் இருக்கும் இடத்தைச் சொல்லிவிட்டு தப்பிவிடுகிறான். கிழவனைத் தேடி இருவரும் வெளியே வர, ப்ருனோ 'ஏன் நாம் சூப் சாப்பிடக் கூடாது?' எனக் கேட்க, அந்தோனியோ அவனைக் கோபத்தில் அறைந்து விடுகிறான். ப்ருனோ அழுது கொண்டே 'அம்மாவிடம் சொல்லுறேன்' எனத் தேம்பி அழுகிறான். ப்ருனோவை ஒரு ஆற்றுப் பாலத்தின் அடியில் நிற்கச் சொல்லிவிட்டு அந்தக் கிழவனைத் தேடிப் போகிறான். கொஞ்ச நேரம் கழித்து ஒரு சிறுவன் ஆற்றில் விழுந்து விட்டதாக கூக்குரல்கள் கேட்க திரும்பி வரும் அந்தோனியோ அது ப்ருனோ இல்லை என அறிந்து சந்தோசப்படுகிறான்.

ப்ருனோவை அழைத்துக் கொண்டு ஒரு உணவு விடுதிக்குச் சென்று அவன் விரும்பியதை வாங்கித் தருகிறான் அந்தோனியோ. சாப்பிட்டு விட்டு அந்த திருடன் போவதைப் பார்த்து அவன் பினனால் ஓடுகிறார்கள் இருவரும். அவன் இருக்கும் இடத்தில் பலர் கூடி 'இவன் நல்லவன், நேர்மையானவன்' எனச் சொல்லி, அந்தோனியோவை அடிக்க வருகிறார்கள். ப்ருனோ போலீசைக் கூட்டி வர, போலிசும் வேறு வழியின்றி அந்தத் திருடனை பிடிக்க சரியான காரணங்கள் கிடைக்காமல் அந்தோனியோவை திரும்ப போகச் சொல்கிறான்.



ஏமாற்றமாக திரும்பி வரும் இருவரும் மக்கள் நிறைந்த ஒரு சாலையில் நின்று கொண்டிருக்கிறார்கள். ஏதோ சிந்தனையில் இருக்கும் அந்தோனியோ பக்கத்துக்கு தெருவில், யாருமில்லாமல் தனியாக நின்று கொண்டிருக்கும் சைக்கிளை உற்று நோக்குகிறான். ஒரு முடிவுக்கு வந்தவனாக ப்ருனோவிடம் காசைக் கொடுத்து பஸ்ஸில் ஏறி ஒரு இடத்திற்கு போ, நான் அங்கு வருகிறேன் எனக் கூறி விட்டு அந்த சைக்கிளை நோக்கிச் செல்கிறான். பஸ்ஸில் ஏறப் போகும் ப்ருனோ கூட்டம் காரணமாக ஏற முடியாமல் அங்கேயே நிற்கிறான்.

சைக்கிள் நிற்கும் இடத்துக்கு போன அந்தோனியோ சுற்றும் முற்றும் பார்த்து விட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு வேகமாக மிதிக்கிறான். ஆனால் கூட்டம் நிறைந்த சாலையில் அவனைப் பல பேர் துரத்த பிடிபட்டு விடுகிறான் அந்தோனியோ. கூட்டத்தினர் அவனைப் போலீசில் ஒப்படைத்து விடலாம் எனக் கூறுகிறார்கள். அப்பொழுது பஸ்ஸில் ஏறாத ப்ருனோ அங்கே வர, சின்ன பையனைப் பார்த்த சைக்கிள் உரிமையாளன் 'வேண்டாம். அவனை விட்டுவிடுங்கள்' எனக் கூறுகிறான். கூட்டம் கலைய, அழுகின்ற கண்களுடன் இருவரும் எதுவும் பேசாமல் தங்கள் கைகளைப் பிணைத்துக்கொண்டு சாலையில் நடக்க ஆரம்பிக்கிறார்கள். படம் முடிவுக்கு வருகிறது.



அந்தோனியோ அடுத்து எந்த வேலைக்குப் போயிருப்பான் ?. அவர்கள் நினைத்த படி வாழ்க்கையை வாழ முடிந்ததா ?. ப்ருனோ என்ன செய்திருப்பான் ?. புதிய சைக்கிள் வாங்கி இருப்பார்களா?. நிறையக் கேள்விகள். பதில்தான் இல்லை. பதில் தெரியாத கேள்விகளில் தானே வாழ்கையின் ரகசியம் உள்ளது.

Tuesday, September 7, 2010

ஒப்பாரி கோச்சியும், குதிரைகள் பேச மறுக்கின்ற கதையும்


கடந்த ஒன்றிரண்டு மாதங்களாகத் தான் தீராநதி இதழைப் படித்து வருகிறேன். இந்த மாத இதழில் இரண்டு சிறுகதைகள் வெளியாகி உள்ளன. ஒன்று எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் - குதிரைகள் பேச மறுக்கின்றன கதையும், மற்றொன்று மு.சிவலிங்கம் அவர்களின் - ஒப்பாரி கோச்சி சிறுகதை. இரண்டு கதைகளும் மிக அற்புதமாக வாழ்கையின் போக்கை விவரிக்கின்றன.

'குதிரைகள் பேச மறுக்கின்றன' கதையில், தன் மகன் வீட்டுக்குச் செல்லும் பெரியவர், அந்த வீட்டில் வளரும் நாயை வாக்கிங் அழைத்துப் போகிறார். திரும்பி வரும்பொழுது நாய்க்குப் பதிலாக குதிரையைக் கூட்டி வருகிறார். மகன் கேட்டதற்கு 'அந்த டிங்கி இந்தக் குதிரையாக மாறி விட்டது' என்கிறார் அப்பா. அது எப்படி நாய் குதிரையாக மாறும் என்று மகனும், மருமகளும் குழம்பிப் போகின்றனர். ஒரு நாள் அப்பா ஊருக்குக் கிளம்பிப் போய்விட, குதிரை என்ன சாப்பிடும், அதுக்கு என்ன பிடிக்கும் எனத் தெரியாமல் மகன் தடுமாறுகின்றான். திரும்ப வரும் அப்பா, அடுத்த நாள் வாக்கிங் போய்விட்டு வரும்பொழுது, குதிரையானது நாயாக மாறிவிடுகிறது. 'நாயைப் போல குதிரைகள் ஏன் குரைப்பது இல்லை, எப்போதும் அமைதியாகவே இருக்கிறது' என மகன் நினைப்பதுடன் கதை முடிகிறது.

'ஒப்பாரி கோச்சி' கதையில் இலங்கைத் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் சுப்பிரமணி இந்தியாவுக்கு வருவதைப் பற்றிய கதை. செல்லம்மாக்கா என்னும் ஒருவர் கதையில் "ஈந்தியா நம்ம ஊருதானே சாமி?" என கேட்கும்பொழுது, அவர்களை அகதிகள் என அடைத்து வைத்திருக்கும் நமது முகாம்கள் நினைவுக்கு வந்தன. சுப்பிரமணிக்கு இந்தியாவில் இருந்து கடிதம் எழுதும் நபர்கள் கூட "இங்க மோசம் சுப்பிரமணி.. செத்தாலும் நீ அங்கேயே இரு" எனக் கடிதம் போடுகிறார்கள். ஆனாலும் சுப்பிரமணி குடும்பத்துடன் இந்தியா புறப்பட நேர்கிறது. அவர்கள் ஏறிய 'இந்திய கோச்' தான் ஓயாத அழுகையால் "ஒப்பாரி கோச்சி" ஆகிவிட்டது. இரண்டு நாடுகளுக்கு இடையில் எச்சங்களாக இருக்கும் ஒரு சுப்பிரமணியின் கதை இது. இன்னும் தெரியாத சுப்பிரமணிகளின் கதைகள் எவ்வளவோ?.

Monday, September 6, 2010

எஞ்சாத புன்னகை















எப்போதும் புன்னகைப்பாய்
என்னைப் பார்த்தால்..

ஓர் அதிகாலை
ஆரஞ்சு நிறப் பாதம் கொண்ட
பவழ மல்லிகளை நீ
பொறுக்கும் பொழுதுதான்
என் பிரியத்தை
உன்னிடம் சொல்ல நேர்ந்தது
கேட்டதும் உள்ளோடி மறைந்தாய்
உன் வீட்டினுள்.

அடுத்த மூன்று மாதத்தில்
உனக்கும் உன் முறை மாமனுக்கும்
கல்யாணம் சொர்க்கத்தில் நடப்பதாக
பெரியவர்கள் சொன்னபடி நடந்தது.

இப்பொழுதும் தெருவில்
பார்த்துக் கொள்கிறோம்
ஆனால் உன் புன்னகைதான் இல்லை..

உன்னிடத்தில் என் பிரியத்தைச்
சொல்லாமலிருந்தால்
அந்தப் புன்னகையாவது
எஞ்சியிருக்கக் கூடும்.

(புகைப்படம்: இணையத்தில் இருந்து.)