Friday, September 10, 2010

விழுதுகள் - நனவாகியதொரு கனவு



இரண்டு குழந்தைகள் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. ஆனால் வேறு வேறு வீடுகள். வேறு வேறு சூழ்நிலைகள். ஒரு குழந்தைக்கு அரசுப் பள்ளி. இன்னொரு குழந்தைக்கு தனியார் பள்ளி. தனியார் பள்ளிகளில் படிக்கும் எல்லாக் குழந்தைகளும் பிரகாசிப்பதில்லை. ஆனாலும் அரசுப் பள்ளிகளுடன் ஒப்பிடும் போது நிறைய வேறுபாடுகள். கல்வியின் தரம், ஆசிரியர்களின் கடமை என நிறைய.

அதையெல்லாம் தாண்டி அரசுப் பள்ளிகளில் படித்தாலும் ஒரு சில மாணவர்கள் நன்றாகவே படிக்கிறார்கள். மாநில அளவில் மதிப்பெண்களை அள்ளுகிறார்கள். ஆனால் பல மாணவர்களின் நிலைமை கேள்விக்குறி தான். தொடக்கக் கல்வியிலேயே சரியான வழிகாட்டுதல்கள் இல்லை.

நான் மற்றும் எனது நண்பர்கள் எல்லாரும் அரசுப் பள்ளியில்தான் படித்தோம். எப்படியோ முட்டி மோதி மேலே வந்து விட்டோம். ஆனால் படிப்பை பாதியிலேயே விட்ட என் சக தோழர்கள் இப்பொழுது அதை நினைத்து வருந்திக் கொண்டிருக்கிறார்கள். பெயில் ஆனால், பள்ளி பிடிக்கவில்லை, வேலைக்கு போகச் சொல்கிறார்கள் எனப் பலர் பாதியில் படிப்பை நிறுத்தி விட்டார்கள்.இதற்கு காரணத்தை நாம் உற்று நோக்கினால் அவர்களுக்கு பெரும்பாலும் படிப்பை பிடிப்பதில்லை.

எனது நண்பன் கமலகண்ணன், நான் சென்னையில் தங்கியிருந்தோம். அப்பொழுது கமல் சமூக சேவையில் டிப்ளமோ படித்துக் கொண்டிருந்தான். ரொம்ப நாள் பேசி ஒரு அமைப்பை உருவாக்கினால் என்ன என நினைத்து, இன்னொரு நண்பனான சாரதியைச் சேர்த்து மூவருமாக 'விழுதுகள்' என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தோம்.

அப்படித்தான் நண்பர்கள் இணைந்து விழுதுகள்(http://www.vizhudugal.org) என்ற அமைப்பை எங்களின் ஊரான ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டியில் ஆரம்பித்து இரண்டு வருடங்கள் நிறைந்து விட்டன. எங்கள் விழுதுகள் அமைப்பின் சார்பாக, கிராம புற பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு தினமும் பாடம் எடுத்து வருகின்றோம். பள்ளி பாடங்கள் தவிர, Value based education எனப்படும் தனி திறமைகளை வளர்த்தல், நல்ல பழக்க வழக்கங்களை சொல்லித் தருதல், சேவை மனப்பான்மையை வளர்த்தல், வாரந்தோறும் போட்டிகள் நடத்தி பரிசுகள் அளித்தல் என பணியாற்றி வருகிறோம். ஒவ்வொரு கிராமப் பகுதிகளிலும் ஒரு ஆசிரியரை நியமித்து, ஊரின் பொதுவான இடத்திலோ அல்லது அரசுப் பள்ளியிலோ இந்த மையங்களை நடத்தி வருகின்றோம். இது தவிரவும் கண் சிகிச்சை முகாம் நடத்துதல், மரக் கன்றுகள் நட்டு வைத்தல், கணிப்பொறி பயிற்சி அளித்தல் என பிற துறைகளிலும் பங்காற்றி வருகின்றோம்.

இப்பொழுது நாங்கள் ஏழு மையங்களில் வகுப்புகளை நடத்தி வருகிறோம். ஏழு மையங்களுக்கும் உண்டான செலவுகளை எங்களின் ஒவ்வொரு நண்பரும் ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் இல்லாவிட்டால் நாங்கள் விழுதுகளை வெற்றிகரமாக நடத்த முடியாது. ஒவ்வொருவர் பெயரையும் சொன்னால் நீண்டு விடும். அவர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றி.

பதிவராக எனக்கு அறிமுகமாகி எங்களில் ஒருவராகி விட்ட திரு.பிரகாஷ் (சாமக்கோடங்கி ...) எல்லா விதத்திலும் எங்களுக்கு உதவியாக இருக்கிறார். பல தடவை எங்கள் மையங்களுக்கு வந்து குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை வகுப்புகளை எடுத்திருக்கிறார். அவருக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்.

ஏழு மையங்கள்: காந்தி நகர், நேரு நகர், ஜெ.ஜெ. நகர், மாரம்பளையம், மாதம்பாளையம், கள்ளிப்பாளையம், நல்லகாளிபாளையம்.

வரும் ஞாயிறு அன்று எங்கள் நண்பன் கமலுக்கு திருமணம். அடுத்த நாள் திங்கள் அன்று வரவேற்பு அன்னூர், சிவன் கோவிலில் நடக்கிறது. அனைவரையும் வந்திருந்து வாழ்த்துங்கள் என விழுதுகள் சார்பாக வரவேற்கிறோம்.

சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக;

(இந்தப் புன்னகைதான் எங்களுக்கு உரம்)


(ஜெ.ஜெ. நகர் தொடக்க விழாவில்)

(ஒரு மையத்தில்..)


(நேரு நகர் மையத்தில்)

(நேரு நகர் மையத்தில்)

(ஜெ.ஜெ. நகர் மையத்தில்)



(ஜெ.ஜெ. நகர் மையத்தில்)


(கடந்த சுதந்திர தின விழாவன்று)

7 comments:

  1. மிக நல்ல விஷயம் இளங்கோ... உங்கள் நற்பணி தொடரட்டும்... :)

    ReplyDelete
  2. //ஜெய் said...

    மிக நல்ல விஷயம் இளங்கோ... உங்கள் நற்பணி தொடரட்டும்... :) //
    நன்றி ஜெய்.

    ReplyDelete
  3. அடடா எதுக்கு என் பெயரெல்லாம் போட்டுக்கிட்டு... உங்கள் பணி அளப்பரியது.. நான் உங்களைப் பார்த்துப் பல நேரங்களில் பொறாமைப் பட்டு இருக்கிறேன். குடும்பம் குட்டிகள் மத்தியில் ஒரு ரூபாயைப் பொதுச் சேவைக்காக ஒதுக்குவது எப்படி என்று தெரியாமல் விழிக்கும் பல கோடி மக்களுக்கு இடையில் அமைதியாகச் செய்கையில் இறங்கும் உங்களைப் போன்றோர் நிறைய பேர் நாட்டுக்குத் தேவை. நானும் கூடிய விரைவில் இறங்குவேன். மற்றபடி கமலக் கண்ணனுக்கு திருமண வாழ்த்துக்கள். அவரை நேரில் பார்க்க முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன். உங்களையும் வந்து சந்திக்கிறேன்.. நிறைய பேசலாம்...

    ReplyDelete
  4. @ பிரகாஷ்
    நன்றி பிரகாஷ்.

    //நானும் கூடிய விரைவில் இறங்குவேன்.//
    இப்பொழுதும் எங்களுடன் நீங்கள் இணைந்து பணியாற்றிக் கொண்டுதானே இருக்கிறீர்கள். இதுவே பெரிய விஷயம். விழுதுகள் என்றென்றும் உங்களை மறக்காது.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் இளங்கோ..கலக்குறீங்க!ரொம்ப ஆச்சர்யமாவும், நெகிழ்ச்சியாவும் இருக்கு..

    ReplyDelete
  6. //ஷஹி said...

    வாழ்த்துக்கள் இளங்கோ..கலக்குறீங்க!ரொம்ப ஆச்சர்யமாவும், நெகிழ்ச்சியாவும் இருக்கு..//
    வாழ்த்துக்கு நன்றி ஷஹி.

    ReplyDelete
  7. கமலக் கண்ணனுக்கு திருமண வாழ்த்துக்கள்...உங்கள் நற்பணி தொடரட்டும்...

    ReplyDelete